உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/என்னுரை

என்னுரை

பேனா எனது போர்வாள்!
புத்தகம் எனது கேடயம்!
பாடுபட்டவன் உடம்பிலே சேறு இருக்கிறது!
பாடுபடாதவன் உடலிலே சந்தனம் இருக்கிறது!
இது நியாயமா?


என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் உழைப்பாளர்களுக்காகச் சிந்தனையைத் தூண்டும் வினா எழுப்பினார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு--எழுத்து மூச்சு--வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்றென்றும் பயன்தரத்தக்கவை.

அண்ணா அவர்களின் நாவசைவுக்கு இந்த நாடே அசைந்தது! அவருடைய பேனாமுனையினால் இந்த நாட்டின் தலையெழுத்தே மாறியது. வரலாற்றில் ஒரு திருப்பு முறையை ஏற்படுத்தியது.

உழைப்பாளி--தொழிலாளி--பாட்டாளி மக்களுக்காக அண்ணா அவர்கள் வழங்கிய கருத்துரைகளையும், கட்டுரைகளையும் இன்றைய இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் கருதி, இலட்சிய நோக்கோடு உழைப்பாளர்களுக்கு உதவும் இந்நூலைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி, வரலாறு படைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், அண்ணாவின் கொள்கைக் குன்று வைகோ அவர்களுக்கு என்றும் நன்றிக்கடப்பாடுடையேன்.

வாழ்த்துரை வழங்கிய மறுமலர்ச்சி திமுக வின் அவைத் தலைவர் அண்ணன் எல்.ஜி. அவர்களுக்கும், கொங்குநாட்டுத் தங்கம் பொருளாளர் அண்ணன் மு. கண்ணப்பன் அவர்களுக்கும், துணைப் பொதுச் செயலாளர்கள் தரைப்படைத் தளபதி அண்ணா செஞ்சியார் அவர்களுக்கும், தத்துவக் கவிஞர் அண்ணன் குடியரசு அவர்களுக்கும், செய்தித் தொடர்பாளர் சகோதரர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், தலைமைக்கழகச் செயலாளர் பேராசிரியர் அண்ணன் கே.என்.ஆர் அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

இந்நூலை வெளியிடவேண்டும் என்றதுமே பாசத்தோடு, 'குலோத்துங்கனுக்காக உடனே செய்ய வேண்டியது தானே! என்று, நிறுவன மேலாளர் குருமூர்த்தி அவர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறிய, செட்டிநாடு தந்த தமிழ்முத்து, மொழி ஞாயிறு, பதிப்பகச் செம்மல் பேராசிரியர் மெய்யப்பன் அவர்களுக்கும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் என் நன்றி என்றும் உரியது.

சென்னை,
20-07-1999.

அன்பன்,
ஆ.கோ. குலோத்துங்கன்.