உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/வாழ்த்துரை
வாழ்த்துரை
எல். கணேசன்,பி.ஏ., பி.எல்.,
அவைத் தலைவர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
கடந்தகாலமின்றி நிகழ்காலம் இல்லை. நிகழ்காலமின்றி எதிர்காலம் இல்லை. எதிர்காலத்திற்குத் திட்டமிடுகிற யாரும், எந்தக் கட்சியும், எந்த நாடும், எந்த இனமும் நிகழ்காலத்தில் கால் ஊன்றி, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து, எதிர்காலத்தை ஊடுருவி நோக்கித் திட்டமிட வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு, தமிழ் இனத்திற்கு எதிர்கால முன்னேற்றத்திற்குத் திட்டமிடும் யாரும் இந்தவழி முறையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். தமிழ்நாட்டின் கடந்த காலத்தை ஆய்வு செய்கிற நூல்கள் திராவிட இயக்கத்தில் தமிழர்களின் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் அரும்பாடுபட்ட அறிவுலக மேதை அண்ணாவை ஆய்வு செய்வது தவிர்க்க முடியாதது.
திராவிட இயக்கத்தில் பலதுறைகளில், முனைகளில், சாதனைகள் புரிந்தவர் அண்ணா. 1937 தேர்தலில் தோற்று நிர்மூலமாகிப்போன அவ்வியக்கத்தை 30 ஆண்டுகள் இடைவிடாது போராடி 1967ல் அரியணையில் அமரச் செய்தார் அண்ணா. அறிஞர் அண்ணா பல்துறை அறிஞர் (Versatile), மேதை (Genius) என்பதை எனது ஆருயிர்ச் சகோதரர் தீர்மானக்குழுச் செயலாளர் குலோத்துங்கன் அவர்கள் நமக்கு இந்நூலில் விளக்குகிறார்.
நூலாசிரியர் குலோத்துங்கன் அவர்கள் திராவிடப் பேரியக்கத்தில் நீங்கா இடம் பெற்றவர். அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் அளப்பரிய அன்பு கொண்டவர். தொழிலாளர் இயக்கத்தில் நீங்கா ஈடுபாடு கொண்டவர். தொடர்ந்து பணியாற்றி வருபவர். எனவே அண்ணா அவர்களின் தொழிலாளர் இயக்க ஈடுபாட்டையும், தொடர்பையும் அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சில், எழுத்தில் இருந்து தொகுத்து இந்நூலில் அளித்துள்ளார். இந்த முயற்சி திராவிட இயக்கத்திற்குச் செய்யும் பெரும்பணியாகும்.
தெளிவற்று குழப்பமுற்று தடுமாறிக் கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டும் கைவிளக்கு, கலங்கரை விளக்கம்.
ஆசிரியர் குலோத்துங்கன் அவர்களுடைய முயற்சிகள் மென்மேலும் வளரவும் வெற்றி பெறவும் இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
மு. கண்ணப்பன்
பொருளாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழுச் செயலாளராகவும் 'கண்ணியம்' திங்களிதழின் ஆசிரியருமான அன்புச் சகோதரர் ஆ. கோ. குலோத்துங்கன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துக்களைத் தொகுத்து, உழைப்பாளி, தொழிலாளி, பாட்டாளி, எனும் தலைப்பில் நூல் வெளியிட்டிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இந்நூல் அண்ணாவின் கருத்துக்கள் மேலும் பரவிட வழிவகுக்கும், என்பதில் ஐயமில்லை.
எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
வாழ்த்துரை
செஞ்சி ந. இராமச்சந்திரன், பி.ஏ.,பி.எல்.
துணைப் பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக்குழுச் செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் இணைப் பொதுச் செயலாளர், தொழிற்சங்கத் தலைவர் 'கண்ணியம்' ஆசிரியர் திரு. குலோத்துங்கன் அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர், கொள்கைவாதி, நேர்மையானவர், கடின உழைப்பாளி. அவர் மிகச் சிறப்பாக, தொழிலாளர்களின் உரிமைகள் குறித்துத் திறம்பட வாதாடி, செயல்பட்டு, தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்.
நீண்ட கால திராவிட இயக்க உணர்வோடு செயல்பட்டு வந்த காரணத்தால் அண்ணாவின் தொழிற்சங்க நடவடிக்கைகளை அவர் பேச்சில் கூர்ந்து கவனித்து, அண்ணா அவர்கள் தொழிற்சங்கத் தொழிலாளர்க்கும், பொதுமக்களுக்கும் என்னென்ன விதத்தில் தன்னுடைய சொற்பொழிவுகளின் மூலமாகக் கருத்துக்களை வழங்கினார் என்பதை ஒரு புத்தகமாக வெளியிட்டு அதைத் தொழிலார்க்கு ஒரு கருவூலமாக வழங்கி வந்திருக்கிறார்.
அண்ணா ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக, திராவிட இன எழுச்சிப் போராளியாக, மூடநம்பிக்கையை எதிர்க்கின்ற சமுதாய சீர்திருத்தவாதியாக, ஒட்டுமொத்த மக்களுக்கும் தொண்டாற்றுகின்ற மிகச் சிறந்த சமூக நலத் தொண்டராக, தொழிற்சங்கவாதியாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பகால இளம்வயதில் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு, அரசியலுக்கு வந்தவர். அண்ணா ஒரு சகாப்தம். உழைக்கும் மக்களுக்கு உரிமை வேண்டும்; உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும்; தேவைக்கேற்ப பங்கீடு வேண்டும்; ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஆண்டான் அடிமை, என்றில்லாமல் அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் சமவாய்ப்புத் தர வேண்டும் என்ற உரிமைகள் அண்ணாவின் இதயத்தில் இருந்து ஏற்பட்டவை. இவற்றைத் தம் பேச்சின் வாயிலாக உணர்த்தியிருக்கின்றார்.
பெரியார் சொன்னார், சமுதாய இழிவைப்போக்க சாதி, மதங்களற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்று. பொதுவுடமைத் தத்துவத்தைக் கண்ட காரல் மார்க்ஸ் வர்க்க பேதம் அற்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பினார். ஆனால் அண்ணா, ஏழை பணக்காரன் என்ற பேதம் நீங்கினால் போதாது, சமுதாய ஏற்றத் தாழ்வுகளும் ஒழிய வேண்டும் என்றார். ஆகவே அண்ணா சொன்ன தத்துவம் சாதியற்ற, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஆகவே அண்ணா ஒரு சமூகப் புரட்சியாளர், அவருடைய தொழிற்சங்கத் தொண்டுகளை இந்நூலின் வாயிலாக இக்கால இளைஞர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. நண்பர் குலோத்துங்கனின் முயற்சி மிகச் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இந்நூலைச் சிறப்பாக வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் பதிப்புச்செம்மல் பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்களைப் பாராட்டுகிறேன்.
வாழ்த்துரை
தத்துவக் கவிஞர் குடியரசு
துணைப் பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
ஏழைக்கு எத்தனையோ
பெயர்கள் உண்டு:
இழிஅடிமை, தொழிலாளி,
கூலிக்காரன்,
தாழ்குலத்தோன், தீண்டாதோன்,
ஒதுக்கப் பட்டோன்,
சேரிமக்கள். என்றழைக்கப்
படுவோர் ஏழை!
கோழைக்குப் பிறந்தவர்போல்
தென்பட் டார்கள்;
குப்பத்தில் குப்பையாகக்
கிடக்கும் கூட்டம்;
வாழவழி அற்றவரை
வாழ வைக்க,
வரலாற்றைப் புதுப்பித்தார்
அறிஞர் அண்ணா!
பொதுவாழ்வைத் தொழிலாளர்
வாழ்வுக் காக
புதுப்பார்வை வீசத்தான்
பழக்கி னார்கள்.
பொதுவுடைமை சித்தாந்த
வெப்பம் வீச,
புயல்வீச, அறிஞரண்ணா
தூண்டி னார்கள்.
எதுவாழ்வு என்பதற்கு -
எழுத்தைப், பேச்சை
இயக்கி னார்கள்; இளவட்டத்
திற்குள் தீயை,
மெதுவாகக் குடியேறக்
கொளுத்தி னார்கள்.
மேல்தட்டைக் கீழ்த்தட்டாய்
ஆக்கி னார்கள்.
இத்தொகுப்பு அண்ணாவின்
உரைவீச் சாகும்;
இனவெழுச்சி ஏழைவீசும்
வான்வீச் சாகும்;
கத்துகடல் முழக்க மாகும்.
எரிம லைக்குள்
கனன்றிருக்கும் எதிர்புரட்சி
விதிர்ப்பே யாகும்;
மொத்தமாகச் சொல்வதானால்
இந்நூற் றாண்டின்,
முதல்முழக்கத் தொகுப்பாகும்;
தொழிலா ளர்கள்
சொத்தையல்ல சோடையல்ல
என்று சொல்லும்,
சூடான சூரியனின்
கதிர்க ளாகும்;
தொழிற்சங்கச் செயலாளர்,
புரட்சி செம்மல்,
தோன்றல்நம் குலோத்துங்கன்.
தோழர், தொண்டன்
கழிகரும்பு தித்திப்புத்
தொகுப்பைத் தந்தார் -
கண்களுக்கும் கருத்துக்கும்
விருந்தாய் வைத்தார் -
தொழிலாளர் இருக்கின்ற
வரையில், இந்தத்
தொகுப்புக்கும் தொடர்புண்டு.
குலோத்துங் கர்க்கு
வழிவழியாய்த் தொடர்கின்ற
வணக்கம், நன்றி.
வாழ்வாங்கு அவர்வாழ
வாழ்த்து கின்றேன்!
நல்வாழ்த்துக்கள்
வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
செய்தித் தொடர்பாளர், மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர், திரைப்படத் தணிக்கைக் குழு.
'உழைப்பாளி, தொழிலாளி, பாட்டாளி' என்னும் நூலினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக்குழுச் செயலாளராக கழகப் பணியாற்றிவரும் திரு. ஆ.கோ. குலோத்துங்கன் அவர்கள் வெளியிடுவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
நீண்ட நெடுங்காலமாக திராவிட இயக்கத்தோடு தொடர்புகொண்டு தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடி வருகின்ற அவருடைய முயற்சிக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.
உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பேரறிஞர் அண்ணாவின் கருத்துக்களைத் தொகுத்து வெளிவரும் இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஒரு சிறந்த வரவாகும்.
வாழ்த்துச் செய்தி
பேராசிரியர் க.ந. இராமச்சந்திரன், எம்.ஏ,
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்
பேரன்புசால் நண்பர் திரு.ஆ.கோ. குலோத்துங்கன் உழைப்பாளி, தொழிலாளி, பாட்டாளி, என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். அவரே கடுமையாக உழைக்கும் உழைப்பாளி; பாட்டாளியின் பாதுகாவலராக விளங்கிய தொழிற்சங்கத் தலைவர்.
நேர்மைக்குப் பெருமைகூட்டும் புகழாளி! அவருக்கு எழுத்தாற்றல் என்பது என்றும் கைவந்த கலை. ஆற்றொழுக்காக நிரல்பட நிகழ்ச்சிகளைப் கோர்த்துச் சொல்லுவதில் வல்லவர். தொழிலாளர்களுக்காகத் தன்னை மெழுகுவத்தியாக அழித்துக் கொண்டவர்.
நெஞ்சுரத்தில் அவருக்கு நிகராகப் பிறிதொருவரை எடுத்துக்காட்டமுடியாத உறுதி மிக்கவர். மற்றவர்க் குழைப்பதில் மலரினும் மெல்லிய இதயம் பெற்றவர். அவரின் ஆற்றல் மிகு எழுத்தால் இன்னும் பலநூல்கள் வெளிவர விரும்பி வாழ்த்துகிறேன்.
நல்வாழ்த்துக்கள்
சு. துரைசாமி
பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர்
முன்னணி.
நண்பர் டாக்டர் குலோத்துங்கன் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வேறு நேரங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, இந்த நூலை வெளியிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், தொழிலாளர்கள் மீது கொண்டிருந்த நாட்டத்தை இவை தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பிலிருந்தாலும் செயற்கரிய பல்வேறு காரியங்களைச் செய்து, நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கின்றார்.
மூடப்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு அரசு நிதியிலிருந்து, இந்தியாவிலேயே முதன் முறையாக நிவாரணம் வழங்கிய பெருமையும் அவரைச் சாரும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தொழிலாளர்கள் மீது கொண்டிருந்த அன்புக்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுக்களாகும்.
டாக்டர் குலோத்துங்கன் அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.