உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/2. மே தினம் பூத்தது

2. மே தினம் பூத்தது !

ளமையினருகே வறுமை, பலத்தினருகே பயம் இது ஏன்? இந்தக் கேள்வி சாதாரண மக்களையல்ல, கருத்துலகின் காவலர்களாக விளங்கியவர்க ளனைவரையும் கதிகலங்க அடித்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ என்னும் கிரேக்கத் தத்துவ ஞானியின் காலத்திலிருந்து, கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்த மார்க்ஸ் காலத்தின் முன்வரை, 'மக்களின் நல்வாழ்வுக்கான' ஆராய்ச்சிகளனைத்தும் நம்பிக்கையான முடிவை அளிக்கவில்லை. பெரும் பகுதி வெறும் சொல்லாராய்ச்சியாகவும், வேதாந்த விசாரணையாகவும், சமாதானத்தை அளிக்காத சமரச கீதமாகவும், நாட்டுக் குதவாத ஏட்டுரையாகவும் முடிந்தது.

இருட்டறையில் இன்னலுற்ற மக்கள் இன்பங் காண விழைந்த ஒவ்வொரு சமயமும் ஒடுக்கப்பட்டனர். ஆண்டை--அடிமை; உயர்ந்தவன்-தாழ்ந்தவன்; மதக்குரு--பக்தன் ; மிராசு-உழவன்; பிரபு--பணியாள்; முதலாளி--தொழிலாளி இவர்களிடையே ஏற்பட்ட வர்க்கப்போராட்டங்களே, உலக வரலாறாகும். கலையுலகிலும் கருத்துலகிலும் மற்ற நாடுகளுக்குக் கருவூலமாக விளங்கிய கிரேக்க நாடு இவ்விதமான போராட்டத்திலேயே உருக்குலைந்தது. ரோம் தனியரசு வீழ்ந்ததற்குக் காரணம், இத்தாலி நாட்டில் ஏற்பட்ட உயர்ந்தவன்--தாழ்ந்தவன் என்ற பிறப்புப் பேதம். இத்தகைய போராட்டங்கள் ஒன்றிரண்டல்ல, நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன. தோற்றவர்கள் உள்ளம் உடைந்தனர் -- பின் வாங்கினர். போராட்டத்தின் இறுதியில், புரட்சிப் புயல் வீசியது- அல்லது புகையின் வெம்மையிலே இரு வர்க்கத்திலும் பெரும் பகுதி அழிந்தது. புயல் ஓய்ந்த போதிலும், புயலினால் வீழ்த்தப்பட்ட பழமை மரங்கள் மீண்டும் மண்ணில் நிலை நிறுத்தப்படவில்லை.

இந்தப் போராட்டங்களின் வரலாற்றை நன்றாக அலசிப் பார்த்தவர் மார்க்ஸ். பிரபுக்கள் - முதலாளிகளின் கொடுங்கோன்மைகள் வெகு நாளைக்கு நிலைக்கா தென்பதையும், உழைப்பாளிகளின் முயற்சியால்தான் உழைப்பாளர் உலகு மலரும் என்பதையும் அவர் எடுத்துக்காட்டினார். அவருடைய தெளிந்த முடிவு ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை ஒன்று சேர்த்தது-நலிவுற்ற உள்ளத்தை புலியுளமாக்கியது - கசங்கிய கண்கள் கனலைக் கக்கின. மேதினி விழித்தது-மே தினம் பூத்தது ! முதல் மே தினம் 1889-ல் பாரிசில் கூடிய உலக சமதர்மக் குழுவினரால், தொழிலாளரின் நன்னாளாகத் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு மே தினத்திலும், அவ்விழாவைக் கொண்டாடக் கூடியிருக்கும் தொழிலாளர் தொகை தேய்வதாகக் காணோம். எங்கு உரிமை சூறையாடப்படுகிறதோ-உழைப்பு கொள்ளையடிக்கப்படுகிறதோ--உணர்வு சிதைக்கப்படுகிறதோ--உயர்நிலை வீழ்த்தப்படுகிறதோ அங்கெல்லாம் மே தினம் போராட்டங்களின் ஆரம்ப நாளாகவே கருதப்படுகிறது. சமூக-அரசியல்--பொருளாதாரத் துறைகளில் ஒடுக்கப்பட்டு, இலையுதிர்ந்த மரமாக நிற்கும் தேய்ந்த திராவிடத்தில் மே தினம் கொடுமைகளைக் களைய நாம் எடுக்கும் கொடுவாளாகக் காட்சியளிக்கிறது.

(1-5-54 'மன்றம்')


3. மே நாள் விழா!

"மே நாள் விழா உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற விழாவாகும் ! இந்த விழா, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, ஒரு மதத்தினருக்கோ உரியதல்ல ! உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் எந்தவிதப் பாகுபாடுமின்றிக் கொண்டாடி வருவதாகும்.

எங்கெங்கே நியாயம் நிலைத்திருக்கிறதோ அங்கெல்லாம்--எங்கெங்கே மாற்றாருக்குப் பரிந்து பேசுபவர்கள் உள்ளனரோ அங்கெல்லாம்-இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது!

உலகில், தொழிலாளர் ஆட்சி எங்கே நிலவி இருக்கிறதோ அங்கெல்லாம்--மே நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது!

அத்தகைய ஒரு புனித இலட்சியத்திற்காக தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட நாளாகும் இது

4. மே நாளின் குறிக்கோள்!

"க்திக்கேற்ற உழைப்பு - தேவைக்கேற்ற வசதி," என்ற முறையை மனித சமுதாய வாழ்க்கைக்கேற்ற நிரந்தரத் திட்டமாக எடுத்துக்கொள்ளும் முயற்சி எளிதில் முடிவதாக அமைய வேண்டும்.

அந்தக் குறிக்கோளை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஓர் ஒப்பற்ற நாளாகவே 'மே நாள்' கொண்டாடப்படுகிறது!

"புதியதோர் உலகம் செய்வோம்--கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்ற பெரு முழக்கம், உலகத் தொழிலாளர்களின் உள்ளங்களிலிருந்து இன்று வெளிக் கிளம்பட்டும்! அதனால் ஏற்படும் மகிழ்ச்சி எங்கும் மலரட்டும்! அந்த மலரினின்றும் வீசும் இன்ப மணம் எங்கும் கமழட்டும்!