உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/5. பண்டிகை அல்ல—திருநாள்

5.பண்டிகை அல்ல — திருநாள்

றுவடைத் திருநாளாக--உழைப்பின் பயனை உணர்த்தும் திருநாளாக இருக்கும் பொங்கல் திருநாள், தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான 'தமிழ்த் திருநாள்' ஆகும்!

'திருநாள்' என்றால் என்ன? பொருள் புரியாமல் பயன்படுத்தப்படும் பல சொற்களில் ஒன்றாகத் 'திருநாள்' இருக்கிறது.

'திரு நாள்' என்பது--மகிழ்ச்சி தருவது; 'அவனுக்கென்ன நாளெல்லாம் திரு நாள்' என்று கஷ்டப்படுகிறவன் சொல்லக் கேட்கிறோம்!

இதிலிருந்து என்ன தெரிகிறது? மகிழ்ச்சிப் பயனைத் தருவதுதான் திருநாள்! மகிழ்ச்சி வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை!

திருநாளைக் காரணமாகக் காட்டி, 'என் காலில் விழு; நூறு பேருக்குச் சோறு போடு' என்றெல்லாம் கூறுவது திருநாள் ஆகாது-அது, பண்டிகை!

தீபாவளிப் பண்டிகை--கார்த்திகைப் பண்டிகை--நவராத்திரிப் பண்டிகை -- சிவராத்திரிப் பண்டிகை--அப்படிப் பல பண்டிகைகள் இருக்கின்றன!

'இப்படி நடந்தால் இது கிடைக்கும்' என்று கூறுபவை இந்தப் பண்டிகைகள்!

பழந் தமிழர்கள், அறத்தினை வியாபாரம் செய்யவில்லை! 'இங்கே கொடுத்தால்--அங்கே கிடைக்கும்' என்ற முறையில் நடந்து கொள்ளவில்லை!

"இம்மைக்குச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்"

என்பது பழந் தமிழர் போக்கைக் காட்டும் பாடலாகும். 'எங்கோ--எதுவோ கிடைக்கும்' என்பதற்காக 'இங்கே இதனைக் கொடுப்போம்' என்ற நிலை அன்றில்லை!

'இதைச் செய்தோம்-இது கிடைத்தது' என்று தெரிய வேண்டும்--இது தான் திருநாளாகும்!

பொங்கல் திருநாளையே தமிழர் திருநாளாக நாம் கொண்டாடி வருகிறோம்.

முதலில் பொங்கல் திருநாள் தமிழ் மக்களுக்குப் பொதுவான திருநாள் என்று பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் குறிப்பிட்டார்; அவர், மாநிலக் கல்லூரிப் பேராசிரியராக அப்போது இருந்தார்!

கொள்கையிலே மறுமலர்ச்சி கண்ட தி. மு. கழகத் தோழர்கள் இதனை ஒன்றுபடும் திருநாளாகக் கொண்டனர் !

இந்தப் பொங்கல் திருநாள் இப்போது தமிழர் திருநாளாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது--எல்லா மதத்தினரும் இதில் கலந்து கொள்கின்றனர் !

'இது முஸ்லிம் திருநாளல்ல' என்று கூறப்படுகிறது; அவர்கள் மதத்தால்--மார்க்கத்தால் இஸ்லாமியர் என்றாலும் மொழியால் தமிழர்கள்!

இன்னும் சொல்லப் போனால் தமிழகத்திலுள்ள திருநெல்வேலிச் சீமையில் முஸ்லிம்களும் மற்றவர்களும் 'மாமா'-- மைத்துனர்' என்று முறையிட்டு அழைத்துக் கொள்வது உண்டு; அந்த அளவுக்கு நெருங்கிய பிணைப்பு!

வட இந்தியாவில் வகுப்புக் கலவரம் ஏற்பட்டபோது கூடத் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கும்--இந்துக்களுக்குமிடையிலான நல்லுறவுக்குக் குந்தகம் ஏற்படவில்லை; காரணம் முஸ்லிம்கள் மார்க்கத்தால் இஸ்லாமியர்--மொழியால் தமிழர்--கலாச்சாரத்தால் திராவிடர்! அதுபோலவே கிறித்துவர்களும்!

உதாரணத்திற்கு ஒன்று; கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகத் தனிநாயகம் அடிகளார் இருக்கிறார்; இவர் மதத்தால் கிறித்துவர்; தனித் தமிழ்ப் பெயர் கொண்ட இவர் மொழியால் தமிழர்!

இவரிடம் நீங்கள் எந்த இனத்தவர் என்றால் தமிழர் என்பார்; எந்த ஊர் என்றால் யாழ்ப்பாணம் என்பார்; எந்த மதத்தவர் என்றால் 'கிறித்துவர்' என்பார். இப்படி மொழியால் தமிழர்களாக இருக்கின்றனர்!

ஒரு காலத்தில் நாங்கள் தமிழர் அல்லர் என்று கருதிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் கூட இப்போது நாங்கள் தமிழர்கள் அல்லவா? என்று கேட்பதைப் பார்க்கிறோம்.

வியாபாரம் செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றன--தமிழையும் வியாபாரப் பொருளாக்கி விடக் கூடாது!

பொங்கல் திருநாள் என்பது அறுவடைத் திருநாள்!

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது பழமொழி; ஏனெனில் அப்போதுதான் அறுவடை ஆன பொருளை விற்றுப் பணம் கைக்கு வந்திருக்கும்! வீட்டில் பணமும் பொருளும் இருக்கும்.

கழனி திருத்தி விதை தெளித்து--களை களைந்து நாற்று நட்டு பயிர் வளர்த்து--கதிர் முற்றியதும் அறுத்து--களம் சேர்த்து--மணிகள் குவித்து - புடைத்து--மூட்டை கட்டி விற்றுப் பணமாக்குவான் உழவன்!

அந்தப் பணத்தோடு அங்காடிக் கடைக்குச் செல்லும் அவன் மனைவிக்குச் சேலையும்--பழங்களும்--வாசனைப் பொருள்களும் வாங்கிக்கொண்டு வீடு வருகிறான். அதாவது களத்தில் அறுவடை செய்த அந்த உழைப்பாளி கடைகளில் செய்த 'அறுவடையுடன் வீடு வருகிறான்-- அதுதான் பொங்கல்!

உழைப்பின் பயனை உணர்த்துகின்ற இந்தத் திருநாள் பல நாடுகளில்--பல வகைகளில்--பல முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது!

நல்ல நிலம் பார்த்து--தக்க காலமறிந்து பதமாக--பக்குவமாக விதை தூவி, பயிர் விளைவிக்கும் முயற்சியிலே ஆணுடன் பெண்ணும் பங்கு கொள்கிறார்கள்! இருவரின் உழைப்பின் பயனும் களஞ்சியம் போய்ச் சேருகிறது! ஆகவே பெண்ணுக்குள்ள பங்கையும் புலப்படுத்துவது இந்தத் திருநாள்!

எனவே. இத் திருநாள் கிறித்துவர்கட்கோ--முஸ்லிம்களுக்கோ முரணானதல்ல! தமிழர்கள் அனைவருக்குமே உரிய திருநாளாகும்!

(1965-ல் சிங்கப்பூர் 'தேசிய அரங்கில்' துறைமுகத்
தொழிலாளர்கள் சார்பில் நடந்த பாராட்டுக்
கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதி)