எக்கோவின் காதல்/அணைந்த விளக்கு

8
அணைந்த விளக்கு

 அவள் என் குடும்ப விளக்காக விளங்குவாள் என்று எண்ணினேன். ஆனால், அவள் அணைந்த விளக்கு. இருந்தாலும் பரவாயில்லை, மீண்டும் ஒளி பெறச் செய்யலாம் என்று எண்ணினேன். அந்த ஆசையையும் அணைத்து விட்டாள்.

வழக்கம் போல் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றேன். நெடுநேரம் ஆகியும் அவள் வரவில்லை. வேறு இடங்களிலும் உட்காரமாட்டாள். ஒரு மாதமாக இதே இடந்தான். நானும் அதற்கு அருகிலேயே பதிவு செய்து கொண்டேன். ஆனால், இன்று இன்னும் வரவில்லை. அவளைப் பார்க்காவிட்டால் அந்த நாள் என் வாழ்நாளில் பாழ்நாள்! அவ்வளவு துன்பமாக இருந்தது. கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். மஞ்சட்கதிர்களை மணற்பரப்பில் செலுத்திக் கொண்டிருக்கும் காட்சி மனத்திற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருந்தது. இருந்தாலும் இருள் கவிந்து விட்டால் அவள் வரமாட்டாளே என்ற கவலை மிகுதி எனக்கு. ஆனால், கவலை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. அவள் வந்து விட்ட காரணத்தால் சிவந்த மேனியில் கருப்பு நிற உடை ஒர் தனி அழகு தந்தது, அவளுக்கு. எனக்கும் அதுதான் மிகப் பிடித்தமாயிருந்தது. ஆனால், சிற்சில சமயங்களில் பூச் சிதறிய ஆடையும் பொலிவு பெறும்; அவள் உடலில் சேர்ந்து. காது, மூக்கு, கழுத்து எதிலும் ஒரு நகை கூட இல்லை. கையில் ஒன்றோ, இரண்டோ வளையல் மட்டும் ஊசலாடும். அதுவும் கருப்புத்தான்! ஆனால், அவள் உள்ளத்தில் கருப்பில்லை என்பதை அவள் முகப்பொலிவு நன்றாக எனக்குச் சொல்லிற்று. அந்த விழியின் கருப்புத்தான் என்னை மயங்கச் செய்தது. அவள் கசங்காத மலர்! இது, என் எண்ணம். அவளிடத்துக் கொண்ட காதலால்தான் நான் நாள் தவறாது கடற்கரைக்குச் செல்வது. பலரும் அப்படித்தானே! கடலின் அழகிலே ஈடுபட்டு, காற்றின் நலத்திலே ஒன்றுபட்டுச் செல்வோர் எத்துணைப்பேர்? காதலின் விளையாட்டுப் பண்ணை தானே கடற்கரை! அந்தப் பண்ணையில் நான் மட்டும் இடம் பெறாமலிருக்க முடியுமா என்ன?

நான் தான் அவளிடம் காதல் கொண்டேன். அவள் விரும்பினாளோ என்னவோ எனக்குத் தெரியாது. நாங்கள் இன்னும் வாய்ப்பேச்சுக் கூடப் பேசியது கிடையாதே! நான் அவளைப் பார்ப்பேன். அவளும் என்னைப் பார்ப்பாள்; என்னைப் போல அல்ல. அவள் பார்வையிலே அமைதி தான் இருக்கும். அதை நானெங்கே பொருட்படுத்தப் போகிறேன். நான் காதல் நோக்குத்தான் நோக்குவேன். எப்படியும் அவளிடம் பேசி விட வேண்டுமென்பது என் எண்ணம். ஆனால், துணிவு வரவில்லை, இன்று அந்த எண்ணம் நிறைவேறியது. காரணம், என் மடிமீதிருந்த அந்தப் புத்தகந்தான்!

அவள் வந்து உட்கார்ந்ததும் கடலைப் பார்த்து விட்டு என்னையும் நோக்கினாள். பார்வை, என்மடிமீதிருந்த புத்தகத்தின் மீது விழுந்தது. நான் அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்தேன். பேசி விட்டாள் அவள். 'அது, என்ன புத்தகம் -?'

செயலற்றவனாய்க், 'காதல் நினைவுகள்' என்று கையிற் கொடுத்தேன்; சற்று அருகில் வந்து புரட்டினாள் அவள். என் உள்ளம் - ஏன் - உலகமே புரண்டது போலத் தோன்றியது எனக்கு. என் காதல் நினைவுகளை என்று நீ அறிவாயோ என்று மனத்திற் சொல்லிக் கொண்டேன் அந்த நூலின் ஆசிரியருக்கு என் மனமார வாழ்த்துக் கூறினேன்; அவளோடு பேச வாய்ப்புத் தந்த காரணத்திற்காக.

அவள் புரட்டி விட்டு, 'இதை நாளைக்குத் தருகிறேனே! என்றாள்.

தலையை ஆட்டினேன்,

இருள் வந்து எங்களைப் பிரித்து விட்டது. அன்று இரவெல்லாம் உறக்கம் ஏது? மறுநாள் அவளுக்குக் கொடுப்பதற்காக ஒரு புத்தகத்தைப் பொறுக்கி எடுத்தேன். மாலை அய்ந்து மணிக்கே கடற்கரை சென்றேன். அங்கே எனக்கு முன்பே அவள் காத்துக்கொண்டிருந்தாள். அருகில் சென்றதும் புத்தகத்தைத் தந்தாள். நன்றியறிதலுடன் நானும் சிரித்துக் கொண்டே வாங்கினேன். குறும்புத் தனமாக அவள் கையைத் தொட்டு வாங்கினேன். அவள் எண்ணத்தை அறிய வேண்டுமல்லவா? அதற்காகத்தான்! ஆனால், அவள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. எனக்கென்ன, அதைப்பற்றி! அவள் கையில் என் கைப்பட்டதே எனக்குப் பேரின்பமாயிருந்தது. இதோ! இதையும் படியுங்கள்! என்றேன்.

'அது என்ன ..?'

'அழகின் சிரிப்பா -?'

'ஆம்! உன் ஒவ்வொரு அங்கங்களிலும் ஓடி விளையாடும் அழகின் சிரிப்பிலே நான் மயங்கி விட்டேன். அதை நீ உணரவே இதைப் பொறுக்கி எடுத்துத் தந்துள்ளேன்' என்று கூறினேன். அவளிடமன்று; மனத்திற்குள்ளே.

மறுநாள் உன் சிரிப்பிலே மயங்கிய எனக்கு 'முத்தந் தரமாட்டாயா? என்ற கருத்தை உட்கொண்டு 'எதிர்பாராத முத்தம்' என்ற புத்தகம் தந்தேன். அதன் பின்னர், உன் அன்பைப் பெறாது கலக்கமடைந்த எனக்கு அமைதி தரமாட்டாயா-? அமைதி பெற நான் உயிர் வாழ ஒரு நல்ல தீர்ப்பைக் கூறமாட்டாயா? என்ற கேள்விகளைக் கேட்கவேண்டும் அவளிடம் என்று துணிந்த பின்பும், மனம் வரவில்லை சரி! நமக்குத்தான் புத்தகம் இருக்கிறதே, அதன் மூலம் கேட்டு விடலாம் என்ற நோக்கத்தான் 'அமைதி', 'நல்ல தீர்ப்பு' என்ற இரு நூலையும் அவளிடம் கொடுக்கத் தூண்டிற்று.

இப்படி எத்தனையோ புத்தகங்கள் கொடுத்தேன். ஆனாலும் முதல் நாள் பார்த்த பார்வையிலிருந்து கொஞ்சமாவது மாற்றமடையவில்லை. அதே அமைதிதான் நிறைந்திருந்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரே ஒரு புத்தகம். அவள் என் குடும்பத்தில் ஒரு மணி விளக்காக ஒளி வீசவேண்டும். ஆனால் எப்படிச் சொல்வது-?புழைய வழக்கப்படியேதான் செய்தேன். இன்று சுறுசுறுப்பாகச் சென்றேன் கடற்கரைக்கு. அவளும் 'ஆஜர்' தான்!

'இதைப் பார்த்தீர்களா-?' என்று நான் எடுத்துச் சென்ற புத்தகத்தைக் கொடுத்தேன்.

'எங்கே பார்க்கலாம்! என்ன புத்தகம்?' என்று கையை நீட்டினாள். 'குடும்ப விளக்கு' என்றேன்.

நெருப்பைத் தொட்டது போல் வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள் கையை. முகத்தைப் பார்த்தேன். மலர் முகம் வாடியது. குடும்ப ...விளக்கு... என்று முணுமுணுத்தது அவள் வாய். நீர் கண்ணில் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது. கண்ணீரைக் கண்ட என் மனம் கரைந்து விட்டது.

'ஏன்? இப்படித் திடிரென்று மாற்றம்-? ஏதாவது ...துன்பம்...' என்று பரிவுடன் கேட்டேன். அழுகை மிகுதியாயிற்று.

'என் கேள்வி உங்களுக்கு அதிக வருத்தத்தைத் தருவதானால் நான் மிகவும் வருந்துகிறேன்' என்றேன்.

'அப்படியொன்றுமில்லை. என் சகோதரர் போன்ற உங்களிடம் எனக்கென்ன வருத்தம். இந்தப் புத்தகம் என்னை இந்நிலைக்காக்கிற்று'.

'புத்தகமா-? புத்தகத்திற்கும் உங்கள் நிலைக்கும் என்ன சம்பந்தம்-? 'ஆம்! புத்தகந்தான்! கேளுங்கள், என் கதையை! வக்கீல் வரதாச்சாரி மகள் நான். கமலம் என் பெயர். பணம் நிறைய இருந்ததால் மணத்தைப்பற்றி எண்ணாமல் படிப்பிலேயே சென்று கொண்டிருந்தது, என் இளமைப்பருவம். பணம் இருந்தால் பெண்ணுக்கு எத்தனை வயதானால் என்ன? மணம் தானாக நடக்கும். அந்த எண்ணத்தில் என் தந்தை இருந்தார். நானும் படித்து வந்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் பயிற்சி பெற்றேன். எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். நாளடைவில் ஆசிரியர் என் அன்பிற்குரியவரானார். திருமணம் நடந்தது. மணப்பரிசுகள் வந்து குவிந்தன. அப்பரிசுகளில் ஒன்று தான் இந்தக் குடும்ப விளக்கு'! இது யாரோ அவருடைய நண்பர் சிதம்பரத்திலிருந்து அனுப்பினார். அவர் பெயர்கூட இராஜன் என்று எழுதியிருந்தது. அந்தப் புத்தகந்தான் எந்நேரமும் அவர் கையிலிருக்கும், 'கமலா!' என்பார். 'குடும்ப விளக்கா' என்பேன். 'ஆம்' என்பார். இருவரும் படிப்போம். அவர் படிக்க நான் கேட்பேன். நானும் படிப்பேன், சில சமயங்களில் அவர் கேட்டுக் கேட்டுக் களிப்பெய்துவார். அது, உண்மையில் எங்கள் குடும்ப விளக்காகவே விளங்கியது. ஆனால் நீடிக்கவில்லை ; அணைந்து விட்டது. இப்பொழுது வெறும் விளக்கு நான்! எண்ணெய் இல்லை" என்று கூறி முடிக்க முடியவில்லை அவளால், தொண்டை காய்ந்து விட்டது. 'கமலா! ஆம்! கமலாதான் அவள் பெயரும். நான் தான் 'குடும்ப விளக்கு' அனுப்பினேன். அவனுக்குப் பரிசாக!' என்றது என் உதட்டின் அசைவு.

'கமலா உன் கணவன் பெயர் கோபாலன் தானே!'

'ஆம்’ என்றாள்.

அங்கிருக்க முடியவில்லை என்னால். குமுறியது என் மனம். குழம்பி விட்டது என் மூளை. எழுந்து சென்றுவிட்டேன். கடற்கரையையும் மறந்து விட்டேன். ஆனால் கமலாவை மறக்கவில்லை. 'கமலா' கமலா'! என்று அடிக்கடி சொல்வ தைக் கேட்ட என் நண்பர்கள் என்னைப் பைத்தியம் என்பார்கள். அவர்களுக்கென்ன தெரியும்? இன்று அவள்மேற் காதலில்லை. சகோதரி என்ற எண்ணமா? அப்படியுமில்லை. ஏதோ ஒருவித அன்பு! அவ்வளவுதான்!

அவள் என் குடும்ப விளக்காக விளங்க வேண்டுமென்று எண்ணினேன். ஆனால், அவள் அணைந்தவிளக்கு. ஆனாலும் பரவாயில்லை, மீண்டும் ஒளி பெறச் செய்யலாம் என்று எண்ணினேன். அந்த ஆசையையும் அணைத்து விட்டாள். அவள் என் நண்பன் மனைவி என்பதைத் தெரிந்துகொண்ட பிறகும் எப்படி விரும்பும் என் மனம்? நல்ல வேளை அவளிடம் என் கருத்தைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என்ன வேதனைப்பட்டிருப்பாளோ? என் வாழ்வையும் அணைந்த விளக்காக்கி விட்டாள்.

(ஆசிரியர் முதன் முதல் எழுதிய கதை இது.

'அழகு' என்ற மாத இதழில் வெளிவந்தது.)