எக்கோவின் காதல்/அவமானச் சின்னம்

9
அவமானச் சின்னம்

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி ஏற்படுத்தியது தான் அறிவு வளர்ச்சிக் கழகம்! முக்கியமாக மொழி, நாடு இவற்றின் முன்னேற்றங் கருதியே அது தொடங்கப்பட்டது. சமூகச் சீர்திருத்தங்களுக்காகவும் நன்முறையில் பாடுபட்டு வந்தது. மூடக்கொள்கைகளை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் அக்கழகத்திலே. கண்ணப்பனும் ஓர் உறுப்பினனாகச் சேர்க்கப் பட்டான் அதில். நல்ல குணமுடையவன். அமைதியான தோற்றம், அன்புப்பார்வை, அறிவுத் திறமை-இவைகள் தாண்டவமாடும் அவனிடத்திலே. யாரிடத்திலும். அதிகமாகப் பேசமாட்டான்.

கல்லூரி மாடிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான் கண்ணப்பன். மாடியில் தான் கழகம் இருந்தது. அங்கே எப்பொழுதும் நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருப்பார்கள். அரசியலைப்பற்றிப் பேச்சு நடக்கும். தலைவர்கள் சிலர் அவர்களுடைய பேச்சிலே, அகப்பட்டுக் கொண்டு திண்டாடு வார்கள், ஒரு தோழர் பாடுவார், ஒரு தோழர் ஆடுவார். சில சமயங்களில் அரட்டைக் (கச்சேரியும் நடைபெறும். கண்ணப்பன் மேலே செல்லும் பொழுது நடந்து கொண்டிருந்தது அதே கச்சேரி தான். 'கண்ணப்பன் என்ற சொல் காதில் விழுந்ததும் சட்டென்று நின்றுவிட்டான். உற்றுக் கேட்டான்.

“கண்ணப்பன் நம் கூட்டத்திலே அவமானச் சின்னம்! பெரிய அசடு.”

இச்சொற்கள் அவன் செவியில் விழுந்தன. விழுந்ததும் தலை 'கிர்' எனச் சுழல்வதுபோல இருந்தது அவனுக்கு. அவனால் அங்கு நிற்க முடியவில்லை . 'விர்' என்று கீழே இறங்கி விட்டான்.

'அவமானச் சின்னம்' 'அவமானச் சின்னம்'

இச்சொற்கள் அவன் உள்ளத்தை அழுத்திக் கொண்டன. மூளையை இறுகப் பற்றிக் கொண்டன. அடிக்கடி அச்சொற்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

"அவமானச் சின்னம் ! நானா அவமானச் சின்னம்? ஏன்? அவர்களையே போய்க் கேட்டு விடலாமா? சேச்சே! வேண்டாம். அவர்களைக் கேட்கக்கூடாது. அவர்கள் என் உண்மை நண்பர்களாயிற்றே! அப்படியிருந்தும் என்னை அவமானச் சின்னம் என்று ஏன் கூறினார்கள்? வேறு யாரையும் சொல்லியிருப்பார்களோ? இல்லை என் பெயரைச் சொன்னது நன்றாக என் காதில் விழுந்ததே” என்ற எண்ண அலைகள் அவன் நெஞ்சத்தில் விடாமல் மோதிக்கொண்டிருந்தன. பித்துப் பிடித்தவன் போல் நடந்துகொண்டிருந்தான். எதிரில் வருவார் போவாரையும் கவனியாது வீட்டையடைந்தான். “கண்ணப்பா!. கண்ணப்பா!” பேச்சில்லை. “தூங்கிவிட்டானோ! கண்ணப்பா! மணி ஒன்பது ஆகி விட்டது. இன்னும் சாப்பிடாமல் என்ன படிப்பு வேண்டி யிருக்கிறது? சாப்பிட்டு விட்டுப் படிக்க கூடாதோ?” என்று சொல்லிக் கொண்டே கண்ணப்பன் அறையை நோக்கி வந்தாள் அவன் தாய் இலட்சுமி.

நாற்காலியில் சாய்ந்த வண்ணம் சிந்தனையில் மூழ்கியிருந்தான் அவன். முகம் கறுத்திருந்தது. கவலையின் குறிகள் நன்கு புலப்பட்டன மின்சார வெளிச்சத்தால்.

“கண்ணப்பா!”

“ஏன் அம்மா!” என்று திடுக்கிட்டு எழுந்தான்.

“சாப்பிடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“பசியில்லையம்மா; சாப்பாடு வேண்டாம்'

“ஏண்டா தம்பி ஒருமாதிரியாயிருக்கிறாய்? உனக்கென்ன கவலை? அப்பா ஏதாவது சொன்னாரா? உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் என்னை கேட்கப் படாதோ?'

“இல்லையம்மா, அப்பா ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது. பசியும் இல்லை”

“இல்லையில்லை. ஏதோ வருத்தமாயிருக்கிறாய், நன்றாகத் தெரிகிறது. நீ சாப்பிடாவிட்டால் எனக்குச் சாப்பிட மனம் வருமா? வாப்பா! கொஞ்சமாவது சாப்பிடு. என்ன கவலை என்று தான் சொல்லேன். என்னிடம் சொல்ல ஏன் மறுக்கிறாய்? எனக்கு நீ ஒரே பிள்ளை. உன்னைச் செல்வமாக வளர்த்து வருகிறேன். உன் மனம் இப்படிக் கலங்குவதைக்காண என் மனம் சகிக்குமா? உண்மையைச் சொல்லப்பா! என்னிடம் ஒளிக்கலாமா?” என்று கெஞ்சிக் குழைந்து தாயன்போடு பரிந்து கேட்டாள். அவனால் இனி விடை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“வேறொன்றுமில்லையம்மா. கல்லூரியில் எனக்கும் என் நண்பர்களுக்கும் கொஞ்சம் மனத்தாங்கல் அவ்வளவுதான்”.

“மனத் தாங்கலா? ஏன் ? நண்பர்களோடு சச்சரவாயிருந்தால் இதற்காக இவ்வளவு கவலைப்படுவதா? பைத்தியக்காரப் பிள்ளையாயிருக்கிறாயே? வா! எழுந்திரு சாப்பிடலாம்!”

“இல்லையம்மா. அவர்கள் சொன்ன சொற்கள் என் மனத்தை இவ்வளவு வாட்டுகின்றன. என்னை ‘அவமானச் சின்னம்’ என்று சொன்னார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பதும் தெரியவில்லை. அதனால் எனக்குச் சொல்ல முடியாத துயரமாக இருக்கிறது. சொன்னவர்கள் வேறு யாருமில்லை. என்னுடன் உண்மையாக உள்ளத்தைவ்ட்டுப் பழகும் தோழர்கள் தாம் அவ்வாறு சொன்னது” என்று சொல்லிக் கொண்டேயிருந்த கண்ணப்பன், தாயின் கண்கள் நீரைச் சிந்திக்கொண்டிருப்பதைக் கண்டு விட்டான்.

அம்மா! என்ன இது! ஏன் அழுகின்றீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆம். நீ’ அவமானச் சின்னந்தான். ஒரு விதவையின் பிள்ளை. சாதிகெட்டவள் பிள்ளை. அப்படிப்பட்ட உன்னை அவமானச் சின்னம் என்று தானே சொல்லும் இந்த உலகம். அதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? கவலைப்பட்டால் அந்தப் பழி மறைந்துவிடுமா? எல்லாம் நம் தலை விதி!” “தலை விதியாவது மண்ணாங்கட்டியாவது! என்னம்மா! விதவையின் பிள்ளையா நான்? அப்பா மலை போலிருக்கிறாரே? சாதிகெட்டவள் பிள்ளையா நான்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! என்னம்மா இது? விவரமாகச் சொல்லுங்களேன்”

“பதறாதே கண்ணா! நான் இராகவாச்சாரி மகள். நீ இராமு ஆச்சாரியார் மகன். இதனால்தான் உன்னை அவமானச் சின்னம் என்று சொல்லியிருப்பார்கள். சாதியைச் சதமென எண்ணும் இவ்வுலகம் வேறு எந்தப் பெயரால் உன்னை அழைக்கும்?”

“அம்மா! இதிலென்ன சாதி வேற்றுமையிருக்கிறது? இரண்டும் ஆச்சாரியார் சாதி என்று தானே சொல்லுகிறீர்கள்?”

“ஆம்; சொல்லளவில் ஒன்று தான். நான் அய்யங்கார் வீட்டுப் பெண். உன் அப்பா பொன் வேலை செய்யும் ஆச்சாரியார்”.

“என்னம்மா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! எல்லாம் புதிராகவே இருக்கிறதே. அய்யங்கார், ஆச்சாரியார், விதவையின் பிள்ளை இவை என் மூளையைச் சிதறடிக்கச் செய்கின்றனவே. எல்லாவற்றையும் தயவுசெய்து தெளிவாகச் சொல்லுங்களேன்!”

“கண்ணா! கேள் என் கதையை. என் வாழ்க்கை ஒரு கதைதான். படிக்கிறோம் சில கதைகளை. என் வாழ்க்கையில் அச்சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்து விட்டன. என் அப்பா இராகவாச்சாரி பெரிய மிராசுதார். வேதபுரம், பிராமணர்கள் நிறைய வாழும் ஊர். அவர் சொல்லை அந்த ஊரில் யாரும் தட்டி நடக்கமாட்டார்கள். சிறிது முன் கோபக்காரர். என்னை அருமையாக வளர்த்து வந்தார், என் தாயில்லாத காரணத்தால் எனக்குத் தக்க வயது வந்ததும் திருமணப் பேச்சு நடந்தது. பணத்தாசையால் எங்காவது படுகுழியில் தள்ளி விடுவாரோ என்ற பயம் என்னைத் துன்புறுத்தி வந்தது. நல்ல வேளையாக அவராசையும் என் ஆசையும் ஒரு சேர நிறைவேறியது. நான் புகுந்த இடம் பெரும் பணக்கார வீடு. அவரும் என் மனத்திற்கேற்ற அழகும் குணமும் உடையவர். ஆகவே எனக்கும் என் அப்பாவுக்கும் திருப்தி.

“ஒராண்டு சென்றது. சென்னைக்கு ஒரு வேலையாக வந்தார் உன் அப்பா இல்லை இல்லை - என் கணவர் விழுப்புரத்திற்கு அருகே ஏற்பட்ட ‘இரயில்’ விபத்தில் இறந்துவிட்டார் அவர் என். கழுத்திலிருந்த கயிறு அறுக்கப்பட்டது. ஆயினும் கூந்தல், வண்ணச் சேலை இரவிக்கை, நகைகள் களையப்படவில்லை. அவைகளால் மட்டும் நான் மகிழ முடியுமா? வாழ்க்கைதான் இன்பமாகச் செல்லுமா? வீட்டு மூலை என் இருப்பிடம். நான் வெளியே வர அருகதை அற்றவள்; மற்றவர்கள் முகத்தில் விழிக்க மறுக்கப்பட்டவள் - விதவை என்ற ஒரு காரணத்திற்காக கழுத்திலிருந்த ஒரு கயிறு நீக்கப்பட்டதால் நான் பெண்கள் இனத்திலிருந்தே - ஏன் - மனித இனத்திலிருந்தே நீக்கப்பட்டவள் ஆனேன். என் உள்ளக் கொதிப்பு சில சமயங்களில் நீரைக் கக்கும் கண்கள் வழியாக.

“என் உள்ளக் கொதிப்பை - அந்தக் கண்ணீரின் மதிப்பை உணருவாரா என் அப்பா. அவர் மட்டுமென்ன இந்த அநியாய உலகந்தான் உணருமா? அவள் பெற்ற உன்னை ‘அவமானச் சின்னம்' என்று சொல்ல ஏன் தயங்கப் போகிறது இந்த உலகம்?”

“அம்மா! அது கிடக்கட்டும். முழுதும் சொல்லுங்கள் அழாதீர்கள். அழுது ஆவதென்ன? நடந்தது நடந்து விட்டது. சொல்லுங்கள்! சொல்லுங்களம்மா?”

“இதைப் படித்துப் பார்! பெயர் தான் கொஞ்சம் மாறி இருக்கிறது. மற்றதெல்லாம் என் கதை அப்படியே இருக் கிறது?” என்று புத்தகத்தைக் கொடுத்தாள். படித்துப் பார்த்தான்.

“சில மாதங்களில் என் தங்கைக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அவளுக்கு நகைகள் செய்ய ஒருவரிடம் கொடுத்தார்கள். அவர் சிறந்த வேலைக்காரர். நல்ல குணங்களும் உடையவர்;அழகாகவும் இருப்பார்; அவர்தான் இராமு ஆச்சாரியார். அவர் அடிக்கடி நகைகள் சம்பந்தமாக எங்கள் வீட்டிற்கு வந்து போவார். என் அப்பா முன் கோபக்காரர். ஆதலால் எப்படிப்பட்டவரிடத்திலே பேசினாலும் ஒரு தடவையாவது கோபம் வந்து விடும். ஆனால் நகை செய்யும் இவரிடம் ஒரு நாள் கூடக் கோபமாகப் பேசியதே கிடையாது. அப்பாவுக்குக் கோபம் வராதபடி அவர் அப்படிப்பேசி மயக்கிவிடுவார். அன்பாகப் பேசுவார். சிரிப்பு எப்பொழுதும் அவர் முகத்தில் திகழ்ந்துகொண்டேயிருக்கும். அதனால் எவரையும் கவர்ந்து விடுவார் பேச்சிலே. அவர் வந்துவிட்டால் நான் என்ன வேலையாயிருந்தாலும் ஓடிவந்து விடுவேன். நகைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் எல்லோரும். நான் அவர் பேச்சிலே சொக்கிப் போயிருப்பேன். "ஒருநாள் மாலை, வைரத்தோடு செய்துகொண்டு என் அப்பாவிடம் காட்ட எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பா வயலுக்குப் போயிருந்தார்.

“நான்தான் அதைப் பார்த்துக் கொண்டே அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.\

“நேரம் ஆகிவிட்டது. நாளை வருகிறேன்” என்றார்.

“இல்லையில்லை; இருங்கள். இப்பொழுது அப்பா வந்துவிடுவார்; அவரிடம் காட்டிவிட்டு அப்புறம் போகலாம்”, என்றேன்.

அவருக்கும் போக மனமில்லை. அப்பாவோ நெடுநேரம் ஆகியும் வரவே இல்லை . இருட்டிவிட்டது. இருள் எங்கள் எண்ணத்திற்கு உதவி செய்தது. நாங்கள் வீட்டை மறந்து விட்டோம் - ஏன் உலகத்தையே மறந்து விட்டோம். அந்த நிலையில் அப்பா மட்டும் எங்கே நினைவிற்கு வரப்போகிறார்?

“சீதா!சீதா! என்று அழைத்துக் கொண்டே என் அப்பா வந்துவிட்டார். அப்பொழுதுதான் எங்கள் நிலைமை நினைவிற்கு வந்தது. வெடவெடத்து விட்டது எனக்கும் அவருக்கும். அப்பா கண்டுவிட்டார். அவர் தான் முன் கோபக்காராயிற்றே, விழி பிதுங்கிவிடும் போல் பார்த்தார். எனக்கு ஒரே பயம். ஆனால் வெளியே தெரிந்தால் கேவலமாகுமே என்று சத்தம் போடாமல் பார்வையளவிலேயே நின்று விட்டார்.

மறுநாள் மாலை கறுப்பண்ணன் என்பவனோடு தனியாகப் பேசிக்கொண்டிருந்தார் என் அப்பா. நான் அதைக் கவனித்து விட்டேன். “சும்மா இருங்கசாமி - இன்னும் ஒரு வாரத்திலே அந்த ஆசாரிப் பயலே தொலச்சுடுறேன் ". என்று கறுப்பண்ணன் சொன்னது என் காதில் நன்றாக விழுந்தது. செய்தி இன்னதென்று புரிந்து கொண்டேன். அந்த நிலைக்கு என் மனம் இடந்தரவில்லை . அவருக்குக் கடிதமூலம் அறிவித்தேன்.

சில நகைகளோடும் கொஞ்சம் பணத்தோடும் சென்னை வந்து சேர்ந்தோம். இருப்பதை வைத்து ஒரு நகைக்கடை வைத்தோம். செல்வம் சேர்ந்தது. உன்னையும் பெற்றெடுத்தேன். உன் முகத்தைப் பார்த்துப் பார்த்து என் கவலைகளை எல்லாம் மறந்து விட்டேன்.

நிறுத்து கண்ணா , இதுதான் என் கதை. இதுவரை இந்தச் செய்தி ஒன்றும் உனக்குத் தெரியாது. நானும் சொல்லவில்லை. அந்தப் பழைய சம்பவங்களை எல்லாம் இன்று நீ நினைப்பூட்டி விட்டாய்! இது எப்படியோ அவர்களுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது. அதனால் உன்னை 'அவமானச் சின்னம்' என்று சொல்லியிருக்கிறார்கள்”.

படித்துக்கொண்டிருந்த கண்ணப்பன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “அம்மா!சரி. இதற்காகத்தான் சொல்லியிருக்கிறார்கள். சென்றதைப் பற்றிக் கவலைப்படுவதில் பலனில்லை . அதோ! அப்பாவும் வந்து விட்டார். சோறு போடுங்கள் . சாப்பிடலாம்" - என்று எழுந்து சென்றான்.

மறுநாள் கண்ணப்பன் தன் உயிர் நண்பன் ஞானம் வீட்டிற்குச் சென்றான். அவனைத் தனியாக அழைத்தான்.

“ஞானம்! நீ சீர்திருத்த வாதிதானே?” “ஆம், கண்ணப்பா! இதில் என்ன உனக்குத் திடீர் என்று சந்தேகம் வந்தது?”

“சரி; மறுமணத்தை ஆதரிக்கிறாய் அல்லவா?”

“ஆம், மனமார ஆதரிக்கிறேன்”.

"கலப்பு மணம்...?”

"கட்டாயம் வேண்டுமென்று வற்புறுத்திக் கூறுகிறேன். என்னைப்பற்றித் தெரியாதா என்ன? ஏன் இப்படி எல்லாம் படபட என்று கேட்கிறாய்?”

"ஒன்றுமில்லை ஞானம்! இப்படி எல்லாம் சொல்லி விட்டுச் செயலில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ளுகிறாயே என்றுதான் வருத்தப்படுகிறேன்.”

“ என்ன கண்ணப்பா! அப்படி ஒன்றும் நான் மாறி நடந்ததாகத் தெரியவில்லையே. அதற்கேற்ற சந்தர்ப்பமும் என் வாழ்வில் இன்னும் குறுக்கிடவில்லையே?”

" உன் வாழ்க்கையை நான் சொல்லவில்லை. கலப்புமணம், மறுமணம் இவற்றை ஆதரிக்கின்ற நீ என் வாழ்க்கையைக் கேவலமாகப் பேசியிருக்கவேண்டாம்”. "உன் வாழ்க்கையைக் கேவலமாகப் பேசினேனா? இது என்ன விந்தை! கண்ணப்பா! யாரிடம் இப்படியெல்லாம் பேசுகிறாய்? நானா உன்னைக் கேவலமாகப் பேசுவேன்? அதுவும் உன் வாழ்க்கையையா?

"ஆம்; நேற்றுக் கழகத்தில் என்னை அவமானச் சின்னம் என்று சொன்னது என் வாழ்க்கையையல்லாமல் வேறென்ன?” "அட பைத்தியமே! அதைச் சொல்லுகிறாயா? அது உன் வாழ்க்கையையோ வரலாற்றையோ குறித்ததன்று. நீ நம் கழகத்தில் சேர்ந்த பிறகும் மதச்சின்னங்களை விடாமல் அணிந்து கொள்ளுகிறாயே! இது நம் கழகத்திற்கும் நமக்கும் பெரிய அவமானமல்லவா? இந்தச் சின்னங்களை ஒழிக்கும் வரையில் நம்மிடையே நீ ஓர் அவமானச் சின்னத்தான் என்று சொன்னேன். அது, உன் மனத்தை இவ்வளவு வருத்தும் என்று தெரிந்தால் சொல்லியிருக்கமாட்டேன். நான் நேரில் கூடக் கேலியாகப் பேசியிருக்கிறேனே! அது குற்றமானால் என்னை மன்னித்துவிடு. நண்பன் என்ற முறையில் மன்றாடிக் கேட்கிறேன்?" என்றான்.

கண்ணப்பனுக்குத் தூக்கி வாரிப் போட்ட து. “இந்த அவமானச் சின்னங்களையா சொன்னாய்? அப்பாடா! நேற்று முழுதும் என்னைக் கொன்று விட்டதே அந்தச் சொல். ஆம்; நான் இன்னும் அப்படியிருப்பது அவமானந்தான். இதோ அந்தச் சின்னங்களை ஒழித்துவிட்டேன். இனிமேல் நான் விடுதலைச் சின்னம் புரட்சியின் சின்னம்”. என்று சொல்லிக்கொண்டே துள்ளிக்குதித்து ஓடினான் கண்ணப்பன்.