எக்கோவின் காதல்/கடை முழுக்கு


5
கடை முழுக்கு

'அடாடா! என்ன தெய்வகளை! அந்த முகத்திலே எவ்வளவு சாந்தம்! வைரங்கள் 'பளிச்' பளிச் சென்று 'டால்' அடிப்பதைப் பாருங்கள்! அந்த உடம்பைப் பாருங்களேன்! என்ன தேஜசு! கண்கள் அப்படியே கருணையைப் பொழிகின்றனவே ! எல்லாம் ஈசுவரானுக்கிரகம். அவர் தெய்வாம்சம் . அரகரமகாதேவ!”

“டே, கண்ணா ! இந்தப் பைத்தியத்தைப் பாருடா! தெய்வாம்சமாம்! ஈசுவரானுக்கிரகமாம்! அந்த ஆசாடபூதியின் கண்ணிலே கருணையா பொழிகிறது? காதலை அல்லவா கக்குகின்றன அந்தக் கண்கள். அதோ அவள் அழகிலே ஈடுபட்டு அப்படியே சொக்கிப் பிள்ளையார் போல் உட்கார்ந்திருக்கும் இவரைப் பார்த்து இப்படியெல்லாம் உளறுகிறானே!”

அன்று ஐப்பசி மாதக் 'கடைமுழுக்கு', காவிரியிலே பாவத்தைக் கழுவிப் புண்ணிய உருவங்களாகத் திகழ வேண்டும் நாள் அது. அன்று நானும் என் நண்பன் மாறனும் மழையில் அகப்பட்டு ஒதுங்கி நின்றபோது பண்டார சந்நதிகள் அழகிலே ஈடுபட்ட பக்தர் பகர்ந்ததையும், அதைக் கேட்ட மாணவர்கள் பேச்சையுந்தான் மேலே தந்துள்ளேன்.  நாங்கள் அங்குச் சென்றது முழுக்குக்கு அன்று; அங்கு நடந்த ஆண்டு விழாவில் பங்குபெறச் சென்றிருந்தோம். நான் தேசிய வாதி, மாறன் பெரிய சீர்திருத்தவாதி! கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் இருப்பினும் நட்பில் எதுவும் குறுக்கிடாது. “நாமிருவராகவே" இருந்து வந்தோம். 'காந்தி --- ஜின்னா சந்திப்பை' விட எங்கள் சந்திப்பை - நட்பை வெகுவாகப் பேசுவார்கள். பள்ளித் தோழமை அவ்வாறு வளர்ந்திருந்தது.

மாறா! பேச்சைக் கேட்டாயா! எல்லாம் இந்தச் “சூனாமானா"க்களால் வந்த வினையப்பா. கடவுட் கொள்கையைப் பற்றிக் கண்டபடியெல்லாம் “பிரச்சாரம்" செய்து வந்ததால் நேர்ந்த விளைவு இது” என்றேன்.

"சுந்தரம்! வீணாகப் பழிசுமத்தாதே! மக்களிடையே அறிவு வளர வளர மடமை மறைகிறது. இதற்கும் யாரும் பொறுப்பாளியல்லர். காலச் சூழலில் சிக்குண்ட கண்மூடிக் கொள்கை சிதறுண்டு போவதற்கு யார்தான் என்ன செய்ய முடியும்?” என்று சொற்பொழிவு செய்யத் தொடங்கிவிட்டான் மாறன்.

ஆனால் நான் அவன் பேச்சைக் கவனிக்கவேயில்லை. என் மனத்தையும் கண்ணையும் எதிரில் மழைக்கு ஒதுங்கியிருந்த மங்கையிடம் செலுத்திக் கொண்டிருந்தேன். அவளுடைய அழகின் வயப்பட்ட மனத்தை மாற்ற முடியவில்லை. மழையில் நனைந்த வெண்மையான ஆடை அவள் உடலின் சிவப்பை எடுத்துக்காட்டி என் உள்ளத்தை இழுத்துக் கொண்டிருந்தது. நகைகள் போட்டிருந்தால் அந்த நங்கையின் அழகு கொஞ்சம் குறைவாகத்தான் தோன்றும். அதை அறிந்து தானோ, என்னவோ அவள் நகை அணியவில்லை. அழகான அந்த முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் - கவலைக் குறி ஊடாடியது. நீராடியதால் நனைந்து தொங்கிக்  கொண்டிருக்கும் அந்தக் கூந்தலிலிருந்து மழைநீரைத் தட்டிக் கொண்டிருக்கும்பொழுது ஒவ்வொரு அசைவிலும் என்மனம் ... அதிகம் ஏன் சொல்ல வேண்டும்- என்னையே மறந்தேன்.

“சுந்தரம்” என்று தோளில் தட்டினான் என் நண்பன்.

தூக்கிவாரிப் போட்டது. சுய உணர்வு பெற்றேன்.

“சுந்தரம்! நான் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். நீ வேறு கவனமாக இருக்கிறாயே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“அதோ பார் அந்தப் பாவையை. பொற்சிலை போன்ற அவள் அழகைப்பார். தெய்வலோகப் பெண்போல்....!”

“சேச்சே எங்கே போனாலும் இந்த வேலைதானா! வழியில் போகிறவர்களைப் பற்றி நமக்கென்ன? அது சரி தெய்வலோகத்தில் எத்தனை நாளப்பா இருந்தாய்?” என்று கிண்டல் செய்தான்.

"மாறா! நீயே பார்! உன் மனமுங்கூடக் கெட்டுவிடும் அவளைப் பார்த்தால் என்று சொல்லிக் கொண்டு அவனுடைய முகத்தை அவள் பக்கம் திருப்பினேன். அவளைப் பார்த்ததுதான் தாமதம் மாறன் முகம் மாறி விட்டது. என் கையைப் பிடித்துப் பரபர என்று இழுத்துக் கொண்டே சென்று விட்டான். மழையைக் கூடப் பொருட்படுத்தவில்லை. நான் அந்த இடத்தை விட்டு நீங்கினேனே ஒழிய அவள் என் மனத்தை விட்டு நீங்கவில்லை.

எங்கள் ஊருக்குச் சென்று விட்டோம்.  சில மாதங்களுக்குப் பின் சென்னை சென்று திரும்பி வந்தேன். நண்பன் மாறனைப் பார்க்கச் சென்றேன்.

என் முகத்தில் வெற்றிக்குறி விளையாடுவதைக் கண்டு “என்ன சுந்தரம்! எதிர்பார்த்தபடியே கிடைத்துவிட்டதோ” என்றான்.

"ஆம் எதிர்பார்த்தது தான். ஆனால் நான் சென்னை செல்லும்பொழுது எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் என் எண்ணம் நிறைவேறிவிட்டது” என்றேன்.

"என்ன... ஒரு... நாலாயிரமாவது கிடைத்திருக்குமா? இருந்தாலும் சுந்தரம்! நீ ஒரு தேசியவாதியாயிருந்து கொண்டு "இந்தக் கள்ள மார்க்கட் வியாபாரம் செய்யக் கூடாதப்பா!”

"மாறா! அதை நான் சொல்லவில்லை. வியாபாரத்திற்கும் தேசியத்திற்கும் என்ன சம்பந்தம்? அது கிடக்கட்டும். நான் சொல்வது வேறு. கடைமுழுக்கன்று பார்த்தோமே ஒரு பெண்ணை . அது முதல் பரிதவித்துக் கொண்டிருந்தது என் மனம். அவளை அடையமுடியுமா? அவள் எங்கிருக்கிறாளோ? யாரோ? எந்த ஊரோ? என்று ஏங்கிக் கொண்டிருந்த உள்ளத்திற்குச் சாந்தி கிடைத்தது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினான், மாறன்.

“என்ன என்ன! மழைபெய்யும்போது பார்த்த பெண்ணா! சாந்தி கிடைத்ததா அந்தப் பெண்ணை மறுபடியும் பார்த்தாயா என்ன நடந்தது? விளக்கமாகச் சொல் சுந்தரம்” என்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். "கேள்! உற்சாகமாகக் கேள்! நான் சென்னையில் பைத்தியக்காரனைப் பார்க்கச் சென்றேன்....”

"என்ன சுந்தரம்! நான் கேட்பதைவிட்டுப் பைத்தியக்காரனையும் அவனையும் இவனையும் பற்றிச் சொல்லுகிறாயே” என்று கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டான்.

“அட, என்னப்பா! சொல்வதற்குள் துடிக்கிறாயே! விவரமாகச் சொல்ல வேண்டாமா?

“விவரமாகச் சொல்லுவதற்குப் பைத்தியக்காரனைப் பார்க்கப் போனேன் என்று தான் சொல்ல வேண்டுமா?”

“கேளப்பா! “பைத்தியக்காரன்" சினிமாவைப் பார்க்கச் சென்றிருந்தேன்.”

“திரைப்படத்தைப் பற்றியா சொல்லுகிறாய்?”

“ஆமாமா! கொட்டகை வாசலில் ஒரே கூட்டம்! வித விதமான 'தோகை மயில்கள்' உள்ளே சென்று கொண்டிருந்தன. அந்த மயில் கூட்டத்தில் என் கோகிலத்தையும் கண்டேன். ஆம் கோகிலந்தான்! அவள் சிவப்பிற்கும் அந்தக் கருப்பு ஆடைக்கும் என்ன அழகு தெரியுமா? அரைகுறையாகப் பின்னித் தொங்க விடப்பட்டிருந்த அந்தச் சடை - அலட்சியப் பார்வை - எவரையும் கிறு கிறுக்கவைக்கும் புன் சிரிப்பு இவை என்னை அப்படியே சிலைபோல் நிற்கச் செய்துவிட்டன. அங்கிருந்த மயில்களின் பார்வை எல்லாம் இந்தக் குயிலின் பக்கந்தான். வேடர்களின் கண்களைப்பற்றிக் கூறவா வேண்டும்!

'டிக்கெட்' கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அவள் எந்த வகுப்பு 'டிக்கெட்' வாங்குகிறாள் என்பதை அவள் கை நீட்டிய அறையின் மேற்புறத்தில் எழுதியிருந்ததைப் பார்த்து அறிந்துகொண்டேன்.

நானும் அதே 'டிக்கெட்'டை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு உள் நுழைந்தேன். அவள் இருக்கைக்குப் பக்கத்திலேயே இடமும் கிடைத்தது. ஆண்டவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தேன். கடைமுழுக்கன்று கண்ட வருத்தக்குறியைக் காணவில்லை. மலர்ச்சி தான் இருந்தது. உதட்டின் சிவப்பும், கண் மையின் கருப்பும் இயற்கை அழகை அதிகப்படுத்திக் காட்டின. அவை நாகரிக நாரீமணிகள் அணியும் வண்ணப்பூச்சுகளின் ஒத்துழைப்பு.

அவளைப் பார்ப்பேன். அவள் பார்த்தால் திரையைப் பார்ப்பேன். இப்படியாக இருந்ததே ஒழிய, பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருந்தாலும் கண்கள் பேசிக் கொண்டு தான் இருந்தன. அவளோடு எப்படிப் பேசுவது - பேசினால் விடை தருவாளோ என்னவோ என்ற அய்யம் ஊசலாடிக் கொண்டிருந்தது. பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “மணி என்ன ஆகிறது” என்று தயவாகக் கேட்டேன்.

“9-25 ஆகிறது” என்று சிறு சிரிப்போடு கலந்து விடை தந்தாள்.

எனக்கு ஒரே மகிழ்ச்சி.

படம் ஆரம்பம் ஆயிற்று. படத்தையும் பாவையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே வந்தேன். இடையே அவள் பேசத் தொடங்கினாள்.

“பாருங்கோ சார்! இளம் பெண்களைக் கிழவனுக்குப் பிடித்துக் கட்டிவைத்துவிட்டு, அவள் எப்படியோ தவறு செய்துவிட்டால் அவளைக் கெட்டுவிட்டாள் - சமூகத் துரோகி என் றெல்லாம் தூற்றுகிறது இந்தச் சமூகம். இது பெரிய அநியாயம். குற்றம் எங்கிருக்கிறது என்று அறிந்து குற்றத்தை நீக்க ஒருவரையும் காணவில்லை - அதைவிட்டுப் பாவம் பெண்களைக் குறை கூறுகிறார்கள்" என்று உணர்ச்சியாகப் பேசினாள்.

“ஆம்!ஆம்!” என்றேன் நான். அவ்வளவு தான் என்னால் பேச முடிந்தது. படமும் அவள் சொன்னதைத் தான் விளக்கிக் கூறியது.

படம் முடியும் சமயம் மழை வந்துவிட்டது. “அடடா! மழை வந்துவிட்டதே! எப்படி வீட்டிற்குப் போவது” என்றேன்.

“ஏன்! உங்கள் வீடு எங்கிருக்கிறது?” என்றாள்.

“நான் இந்த ஊரிலில்லை . என் நண்பன் வீட்டில் தங்கியுள்ளேன். "மெளண்ட்ரோடு”க்குப் பக்கத்தில் இருக்கிறது" என்றேன்.

“அப்படியானால் என்வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. அங்கு வந்து இருந்து விட்டுக் காலையில் போகலாம். இனிமேல் “ட்ராமும் இல்லை ” என்றாள்.

"ம்ம், அதற்கென்ன,” என்று அசடு வழியப் பதில் கூறினேன். உள்ளுக்குள்ளே ஆனந்தக் கூத்து. அச்சமும் ஒரு பக்கம் இருந்தது. எல்லாம் அவன் செயல் என்று நானே சொல்லிக் கொண்டேன்.

படமும் முடிந்தது. அவள் அழைப்பிற்கிணங்க அருகிலிருந்த அவள் வீட்டிற்குச் சென்றேன். "காப்பி போடலாம் என்றால் இந்த நேரத்தில் பால் எங்கே கிடைக்கப் போகிறது. இதோ 'கலர்' சாப்பிடுங்கள்” என்று தந்தாள்.

மறுக்க மனமில்லை . “இந்த அறையில் படுத்துக் கொள்ளுங்கள்" என்று பரிவுடன் ஓர் அறையைக் காட்டினாள்.

படுத்துக் கொண்டேன். உறக்கமா வரும்! உள்ளத் துடிப்பு அதிகமாயிற்று. 'என்ன இவ்வளவு அன்பாக இருக்கிறாளே. வேறு ஆடவரையும் காணவில்லை' என்று எண்ணிக் கொண்டிருந்த நான் காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.

“வெற்றிலை போடுங்களேன்” என்று சிரித்துக் கொண்டே மெத்தையில் உட்கார்ந்தாள். பாக்குப் பொட்டலம் அவள் கையாலேயே உடைக்கப்பட்டது. சுண்ணாம்பும் அவள் தான் தடவினாள். அப்புறம் எனக்குச் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்!

சிரித்தாள், நானும் சிரித்தேன்.

காற்றின் தாக்குதலோ - அலையின் மோதுதலோ இன்றிப் படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தது.

“சுந்தரம்! அவளை யாரென்று விசாரித்தாயா?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் நண்பன் மாறன்.

“ஓ, யாரென்றும் அறிந்துகொண்டேன். இனிமேல் அவள் என் மனைவி என்பதையும் உறுதி செய்துவிட்டேன்; எனது வாழ்க்கைப் பாதையை வேறு வழியில் திருப்பி விட்டேன். ஒரு வரம்பும் செய்து கொண்டேன்”. மாறா! அவள் ஒரு தாசி. பிறப்பிலேயே தாசியல்லள். சமூகம் அவளைத் தாசியாக்கிற்று. அவள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். பருவம் வந்ததும் பெற்றோர், அவளுடைய மணத்திற்கு முயற்சி செய்தனர். இடையில் அவளுக்கும் அவளுடைய மாமன் மகனுக்கும் காதல் வளர்ந்து வந்தது. அவன் தன் தாயிடம் அவளையே மணக்க வேண்டும் என்று கூறினான். ஆனால் தாய் உடன்படவில்லை . தாய் சொல்லைத் தட்டி நடக்க முடியாத நிலைமையில் அவன் இருந்தான். அவளும் தன் தாயிடம் கூறினாள், அத்தானைத் தான் மணப்பேன் என்று. அவள் உடன்பட்டாலும் 'மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொள்ளாததால் நாமே வலியப் போவது அழகில்லை' என்று சொல்லி விட்டாள்.

ஒரு நாள் அவளும் அவனும் சந்தித்தனர். “அம்மா சொல்வதை மீறி எப்படிச் செய்வது? உன் விருப்பப்படி உன் வீட்டார் விருப்பப்படி நடந்துகொள். என்மேல் வருத்தப்படாதே.” என்று சொல்லி விட்டான்.

வேறு வழியின்றிக் கிழவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டாள். ஏழ்மையில் பிறந்த இளம் பெண்கள் இப்படிப் பலியாவதைத்தானே இந்தப் புண்ணிய பூமியிலே காண்கிறோம். அவள் மட்டுமென்ன அதற்கு விலக்கா? அவளும் வெகு விரைவில் “விதவை"ப் பட்டியலில் சேர்க்கப்பட்டாள். அந்த நிலையில்தான் தாயோடு கடைமுழுக்குக்கு ”தீர்த்தம்" ஆட வந்திருந்தாள்; பாபத்தைப் போக்கிப் பரமன் அருளைப் பெற வந்திருந்தாள். பாபம் போனாலும் போகாவிட்டாலும் 'பரமன் அருள்' கிடைத்தே விட்டது. தங்கியிருந்த வீட்டில் நள்ளிரவில் பரமன் என்ற இளைஞன் அருளுக்குப் பாத்திரமானாள். பலவகைச் சோதனைகளுக்குப் பிறகு பரமனோடு ஐக்கியமாய் விட்டாள். சில நாளில் பரமன் கங்கையைத் தேடிச் சென்று விட்டான். அவள் சில நாள் அங்கேயே இருந்தாள்.

பாவை, பணமும் கையுமாய் நிற்கையில், பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அபயமளித்தார். அவர் உதவியால் தான் சென்னைக்கு வந்திருந்தாள். சினிமாவில் கூட ஏதோ “சான்சுக்கு முயற்சி நடப்பதாகவும் கூறினாராம்.

இவ்வளவையும் அவள் வாயால் கேட்டால் கல்லும் உருகி விடும். கேட்டுக் கொண்டிருந்த நான், "ஏன் இப்படி யெல்லாம் கெட்டுப் போக வேண்டும்? நல்ல அழகு, இளமை, அறிவு இருக்கிறதே யாரையாவது மணந்துகொண்டால் என்ன?” என்று கேட்டேன்.

"மணமா! நான் விதவை! தாசி! என்னை யார் மணப்பார்கள்? அப்படியே சரி என்று யாரேனும் வந்தாலும், விரும்புவதைப் பெற்றுக்கொண்டு, உதறித் தள்ளிவிட்டு, ஓடிவிடுகிறார்கள். சீர்திருத்தம் பேசி விட்டுச் செயலுக்கு வரும்போது ஓடி ஒளியும் வீரர்களைத்தானே காண்கிறேன். ஒருவரிடம் வாழத்தான் எண்ணினேன். ஆனால் அதற்கு அற்பாயுள்தான். கழுத்தில் ஒரு கயிறு மட்டுமிருந்தால்...” முடிப்பதற்குள் நான் குறுக்கிட்டு,

“இதோ பார்! நானே உன்னை மணந்து கொள்கிறேன். இணைபிரியாது வாழ்வோம். ஆண்டவன் மீது ஆணை. உன்னைப் பிரியவே மாட்டேன். கடைமுழுக்கன்று கண்டது முதல் உன் வயமாகி விட்டேன். நீ என்ன சொல்லுகிறாய்?" என்றேன்.

"ஆண்டவனை நீங்கள் நம்புகிறீர்களா? ஆண்களே இப்படித்தான். தங்கள் காரியம் ஆகும் வரை அந்த ஆணை இந்த ஆணை என்று பெண்களை ஏமாற்றுவார்கள். பெண்களும் “சாமி” என்றவுடன் உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். கடைசியில் ஆடவர்கள், ஆண்டவன் உண்மையில் “கல்” என்பதை மெய்ப்பித்து விடுகிறார்கள். நீங்கள் மட்டுமென்ன கடவுளை...!”

“கண்ணே! என்னையும் அப்படி எண்ணிவிடாதே உண்மையில் நான் கூறுகிறேன். பகிரங்கமாகப் பதிவுத் திருமணம் செய்துகொள்கிறேன். என் வாழ்க்கைப் பயிருக்கு நீதான் மழை! மனமிரங்கிக் கெஞ்சிக் கேட்கிறேன். இனி நீ இங்கிருக்க வேண்டாம். இந்தத் தொழிலும் வேண்டாம். “சினிமா” என்ற முதலை வாயிலும் சிக்க வேண்டாம். நீ அதில் சேர்ந்தால் “சக்கை" ஆக்கப்படுவாய்!

“அந்தோ! எத்தனை பெண்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் நமது நாட்டில். மூடத்தனத்தால், பெண்ணினத்தை - தாய்வர்க்கத்தை - படுகுழியில் தள்ளிப் பாழ்படுத்துகிறார்களே! இனி அந்தக் கொடுமையை ஒழிப்பதே என் குறிக்கோள், அரசியல் அப்புறம். முதலில் சமூகம் விடுதலை பெற வேண்டும். அந்தப் பணியில் நாம் இருவரும் நின்று தொண்டு செய்வோம்” என்று கூறினேன்; அவளும் உடன்பட்டாள்.

"மாறா! பொங்கலன்று எங்கள் இருவர்க்கும் வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெற ஏற்பாடு செய்துவிட்டேன். நான் பொங்கலன்று உன் கட்சியில் சேர்ந்து விடுவது என்றும் தீர்மானித்து விட்டேன். இனிமேல் நான் ஒரு புது மனிதன். எல்லா வகையிலும்தான். நீ என்னிடம் அருவருக்கும் சில குறைகளையும் களைந்து விட்டேன். மாறா! என்ன நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ பேயறைந்தாற் போலப் பேசாமல் சாய்ந்து கொண்டிருக்கிறாயே” என்று தட்டினேன். அப்பொழுதுதான் சுய உணர்வு வந்தவன் போல எழுந்தான்.

"ம்ம்! சுந்தரம்! உன் மாற்றத்திற்கும் நீ செல்லப் போகும் புதிய மார்க்கத்திற்கும் என் ஆசி” என்றான்.

"அப்பா! மாறா! ஆசியோடு மட்டும் நின்று விடாதே! உன்னுடைய முழு ஒத்துழைப்பும் இருந்தால்தான் அன்று திருமணம் சிறப்பாக நடைபெறும். நீதான் எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லிவிட்டுப் பிரிந்து விட்டேன்.

இரண்டொரு நாளில் என் நண்பன் மாறனைக் காணவேயில்லை. இருக்கும் இடமும் தெரியவில்லை.

பொங்கலும் வந்து சேர்ந்தது. திருமணம் விமரிசையாக நடந்தது. கடை முழுக்கன்று அவளை விதவையாகக் கண்டேன். இன்று அவள் விதவை என்ற சொல்லுக்குக் கடைமுழுக்குப் போட்டுவிட்டாள். வாழ்த்துகள் - பரிசுகள் - அடேயப்பா! சொல்லி முடியாது. சீர்திருத்தத் திருமணம் அல்லவா! வெளியூரிலிருந்து ஏராளமான கடிதங்கள் வந்திருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டுபோய் மாடியில் அவளும் நானும் ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டிருந்தோம். ஒரு கடிதம் மட்டும் என் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது. அது என் நண்பன் மாறன் கடிதம். ஆவலோடு பிரித்தேன். படித்தேன்.

ஆருயிர் நண்பா! உன் மணத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமைக்கு என்னை மன்னிப்பாயா? கட்டாயம் மன்னிப்பாய். நான் சீர்திருத்தம் பேசினேன். செயலில் காட்டவில்லை. அவளை - இல்லை மன்னிக்கவும் - உன் மனைவியைத் தாசியாக்கியது சமூகம் மட்டுமன்று. நான் தான் முதற்காரணம். அவள் என் அத்தைமகள். என் தாய் சொல்லுக்காக அவளை மணக்க மறுத்தேன். அவள் அந் நிலைக்கு ஆளானாள். அந்நிலைக்கு ஆளாக்கிய நான் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன். எப்படி உன் திருமணத்தில் தொண்டாற்ற முடியும்? இப்பொழுது என்னை மன்னிப்பாயா? உங்கள் இருவரையுமே வேண்டுகிறேன் மன்னியுங்கள் என்று. இயன்றால் உங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்குச் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன். இன்று கப்பலில் புறப்படுகிறேன். வணக்கம். மன்னிப்பை வேண்டும்.

மாறன்

கண்ணீரைத்துத் துடைத்துக் கொண்டே கடிதத்தை முடித்தேன். அவளும் விம்மி விம்மி அழுதாள். அந்த விம்மலை மாற்ற வானொலியைத் திருப்பி விட்டேன். மாறன் கடைமுழுக்கன்று அவளைப் பார்த்தவுடன் மழையையும் பாராமல் என்னை இழுத்துக் கொண்டு சென்றதன் காரணம் இப்பொழுதுதான் தெரிந்தது. அவன் மணக்க வேண்டிய பெண் இப்பொழுது என் மனைவி. ம்ம்! நமது மூடத்தனங்களுக்கு என்று “கடை முழுக்கு” வருகிறதோ என்று உள்ளுக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.