எக்கோவின் காதல்/சந்தேக முடிவு
சந்தேக முடிவு
மெருகு குலையாத மோட்டாரில் வந்திறங்கினார் கோடீசுவரர் கோபாலன்.
“வாங்கோ! வாங்கோ! உங்களுக்காகத் தான் வந்து காத்திண்டிருக்கேன். வரச் சொன்னேளாமே!” என்று குழைந்து எழுந்து நின்றார் பஞ்சாங்கம் பரமேசுவர அய்யர்.
“ஆமாங்க சாமி! உள்ளே வாங்க!” என்று சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார் முதலியார்.
பின் தொடர்ந்தார் அய்யர். ஒரு கட்டு நோட்டுப் புத்தகத்தை அய்யருக்கு முன் தூக்கிப் போட்டு விட்டு முதலியாரும் உட்கார்ந்தார்.
"சாமி! இந்தச் சாதகங்களை எல்லாம் கொஞ்சம் கவனாமாகப் பார்க்க வேண்டும்.”
“அடடா! என்ன அப்படிச் சொல்றேள்! உங்க விஷயத்திலே அசிரத்தையா? என் சொந்த விஷயம் போலேன்னோ கவனிச்சிண்டிருக்கேன்.”
"ஆமா! முன்னே கூட அப்படித்தான் சொன்னீர்கள்! எல்லாப் பொருத்தமும் நன்றாயிருக்கிறது என்றீர்! ஒன்றுக்கு மூன்று போச்சு. அதனாலே கொஞ்சம் கவனமாக இதைப் பாருங்கோ!"
”அஃது அவா தலைவிதி! அதுக்கு நாமென்ன பண்றது!"
"அந்தத் தலைவிதி சாதகத்திலே முன்னாடியே தெரியாதோ?” சரி சரி, சாதகத்தைப் பாருமையா!
“இது பேஷான சாதகமாச்சே”
"எதைச் சொல்கிறீர்! சீனிவாச முதலியார் வீட்டுப் சாதகத்தையா? சாதகம் நல்லாத்தான் இருக்கிறது. நல்ல அழகான நோட்டிலே அச்சுப் போல எழுதி இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு வயது பதினாறு ஆகிறதையா. கொஞ்சம் நிறமும் கூட மட்டம். அந்த ரத்தின முதலியார் வீட்டுச் சாதகத்தைப் பாரும். வயது பதின்மூன்றுதான்; பருவமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன; நல்ல சிவப்பு, அழகு; பணந்தான்..... அதைப் பற்றிப் பரவாயில்லை. அந்தச் சாதகத்தைப் பாரும் எப்படி என்று!”
"ஆஹாஹா! ஜாதகம்னா இதுன்னா ஜாதகம்! பேஷ் பேஷ்! என்ன பொருத்தம் போங்கோ முதலியார்வாள்! கட்டாயம் இதையே முடித்துக் கொள்ளுங்கள்.”
"சரி, நல்ல முகூர்த்த நாளொன்று பார்த்துக் சொல்லும்மையா!”
கோடீசுவரர் என்றாலே குந்தளபுரம் எங்கும் தெரியும். உண்மையிலேயே கோடிக் கணக்கில் பணம் உண்டு அவருக்கு. நல்ல அய்யர்களைக் கொண்டு சாதகங்கள் பார்க்கப்பட்டுச் சிறப்பான முறையில்தான் திருமணம் நடந்தது. நோயினாலும் பிள்ளைப் பேற்றாலும் இரு மனைவியர் இறந்தனர். மூன்றாம் மனைவி, பெற்றோர்கள் கட்டாயப் படுத்தியதால் அவரை மணந்து கொண்டாள். மணந்தும் சரியான முறையில் அன்போடு அவருடன் பழகவில்லை . இதனால் குடும்பத்தில் அடிக்கடி குழப்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரு நாள் தற்கொலை செய்து (கொண்டாள்.
மூன்றாம் மனைவி இறந்து மூன்று மாதங்கள் கூட நிரம்பவில்லை. நான்காம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. அவர் சும்மாயிருந்தாலும் பெண் வீட்டார் சும்மாயிருக்க விடவில்லை . சிபாரிசுக்கு மேல் சிபாரிசு! பணக்காரர் அல்லவா! எப்படியாவது பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைத்தால் போதும் என்று சாதகங்கள் வந்து குவிந்தன. அந்த நான்காவது மணத்திற்குத்தான் மேலே பஞ்சாங்க ஆராய்ச்சி நடந்தது. மணமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோடீசுவரர் வீட்டுக் கலியாணமென்றால் கூட்டத்திற்கும் குதூகலத்திற்கும் கேட்கவா வேண்டும்!
கூட்டத்திலிருந்தோர் மணத்திற்குச் செலவழிந்த தொகையைப் பற்றியும் பண்ட பாத்திரங்களைப் பற்றியும் இசை மன்னர்களின் இசையரங்குகளைப் பற்றியும், அதைக் காண வந்த மக்கள் திரளையும், நகைகளையும் இன்னும் இவை போன்றவைகளையும் பற்றித்தான் பேசிக் கொண்டார்களே ஒழிய, அந்தப் பெண் செலவழித்த கண்ணீரையும் அவள் உள்ளக் குமுறலிலிருந்து எழும்பிய சோகக் குரலையும் பற்றி யாரும் பேசவும் இல்லை . ஏன்? எண்ணவும் இல்லை . அந்த மக்கள் கூட்டம் இதைத்தானா புதிதாகப் பார்க்கிறது. பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன கண்களல்லவா அந்தக் கண்கள்! ஆனாலும் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இரண்டு இளைஞர்களின் உள்ளங்கள் மட்டும், உள்ளக் கருத்துக்
களைச் சொல்லாமற் சொல்லிக் கொண்டிருந்த அவள் கண்களைப் பார்த்துப் பரிவு கொண்டு துடித்துக் கொண்டுதான் இருந்தன.
ஒர் உள்ளம் சொல்லிற்று - "இதென்ன அநியாயம்! பெண்ணுக்கு வயது பதின்மூன்று. அவனுக்கு வயது அய்ம்பத்து மூன்று. எவ்வளவு வேற்றுமை! பணத்திமிர்தானே இப்படி யெல்லாம் செய்யச் சொல்லுகிறது?"என்று.
அதற்கு மற்றோருள்ளம்," இல்லை இல்லை; பெண்ணின் அப்பனது பண ஆசை தான் அப்படிச் செய்யச் சொல்லிற்று. இன்னும் பார்க்கப் போனால் சமுதாயத்தில் நிறைந்துள்ள முட்டாள் தனந்தான் அடிப்படைக் காரணம் என்று நான் சொல்வேன். இத்தகைய அறியாமையின் ஆணிவேர் களையப்படும் வரை, பெண்களின் வாழ்வு சிதைந்த வாழ்வு தான்; செல்லரித்து உளுத்துப் போன வாழ்வு தான்” என்று கூறிற்று.
ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தின் இரைச்சலிலே, இந்த இளம் உள்ளங்களின் துடிப்பு- அந்தத் துடிப்பிலிருந்து மேலெழும்பும் பெருமூச்சு யார் செவியில் விழப்போகிறது? விழுந்தாலும் அந்த மூச்சிலே தோய்ந்துள்ள வெப்பத்தை அறிந்து கொள்ளும் உணர்ச்சி ஏது அக் கூட்டத்திற்கு?
★★★★★★★★★★
"மங்களம்! ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? அந்த அலமாரியில் குங்குமப்பூ இருக்கிறது அதை எடுத்துப் பாலில் கொஞ்சம் போட்டு எடுத்துக் கொண்டு வா!"
மங்களம் என்பது முதலியார் மனைவியின் பெயர். அந்தப் பெண்ணும் அப்படியே எடுத்து வந்தாள். “இதோபார்! வைரச் சங்கிலி, இதைக் கழுத்தில் போட்டுக் கொள்! இந்தா சாவிக் கொத்து; இது நகைப் பெட்டகத்தின் சாவி. எந்த நகை வேண்டுமோ எவ்வளவு பணம் வேண்டுமோ உன் விருப்பப்படி எடுத்துக் கொள்! நீதான் இங்கு அரசி!”
“சாவியை என்னிடம் நம்பிக் கொடுக்கிறீர்களே! நான் யாருக்காவது எதையாவது எடுத்துக் கொடுத்துவிட்டால்......!”
அட, பைத்தியமே! இதெல்லாம் உன் சொத்து; இதைக் காப்பதும் காப்பாற்றாததும் உன் பொறுப்புத் தானே” என்று கொஞ்சுதலாகக் கூறினார்.
“இங்கே வா! மங்களம்; இந்த “ரேடியோ”வைத் திருப்பப் பழகிப் கொள்! நானில்லாதபோது நீ திருப்பலாமல்லவா? இதை இப்படித் திருப்பிவிட்டால் போதும் உடனே பாடும்” என்று திருப்பினார்.
வானொலி பாடத் தொடங்கியது. “மன்மதன் லீலையை வென்றாருண்டோ” என்ற இசைத் தட்டின் பாட்டுக் கேட்டது. முதலியார் வயதையும் மறந்தார். இளமையைப் பெற்றார். அந்தப் பருவம் விளையாடத் தொடங்கியது.
முதலியாருக்குத் தனக்குத் தானே ஒரு சந்தேகம்; நமக்கு வயது அய்ம்பத்து மூன்று ஆகிவிட்டதே. அவள் பதின்மூன்று வயதுப்பெண். நம்மிடம் அன்பாக இருப்பாளா? நாம் தான் அவள் அன்பிற்கேற்ப நடந்து கொள்ள முடியுமா? என்று. இதற்காகத்தான் குங்குமப்பூ முதலியவற்றின் உதவியை நாடினார். தன்னால் இன்பந்தர இயலாவிட்டாலும், வைரநகை - பணம் வானொலி இவைகளாவது இன்பந் தரட்டும் என்று எண்ணித்தான் அவ்வளவு தாராளமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார் நாள் தோறும் முகவழிப்பு, வாசனைப் பூச்சுகள் தவறுவதில்லை. தன் முகத்திலுள்ள இரண்டொரு நரையும், சுருங்கலும் அவளுக்கு அருவருப்பை தந்துவிடக் கூடாது என்று அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அந்தப் பெண்ணும் அன்பாக - ஒழுங்காக நடந்து வந்தாள். அவள் வீட்டார் செய்த 'உபதேசத்'தாலும் நடந்தது நடந்துவிட்டது. இனி மேல் என்ன செய்வது , என்ற எண்ணத்தாலும் அப்படி நடந்துவந்தாள். இடையில் மனம் பருவத்தின் இயற்கையால் மாறுபட்டு வருந்தினால் சமாதானத்திற்குத்தான் "விதி” என்ற மந்திரம் இருக்கிறதே. அதை 'உச்சரித்'துக் கொள்வாள்.
ஒரு நாள் மாடியில் நிலைக் கண்ணாடியில் இருவரும் நின்று தங்கள் அழகைப் பார்த்தார்கள். முதலியார் உள்ளம் குபீர் என்றது. இதற்கு முன்பு தன் முகத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்திருக்கிறார், அலங்காரம் செய்து கொள்ளும் பொழுது. இப்பொழுது பக்கத்தில் நிற்கும் பதுமை போன்ற அவள் முகம் அவரது முகத்திலுள்ள முதுமையை அதிகப்படுத்திக் காட்டியது. வழுவழுப்பான - கண்ணாடிக் கன்னங்கள் - சுருங்கல் அரும்பி நிற்கும் தம் கன்னங்கள் - பளிங்கு போன்ற அவள் கண்கள் - ஒளி குறைந்த தம் கண்கள், பருவத்தின் பூரிப்பைச் சுட்டிச் சுட்டிக் காட்டும் அவளுடைய உறுப்புகள் - பணப்பெருக்கத்தால் தளர்வை மறைத்துக் கொண்டிருக்கின்ற தம் உடற் கூறுகள். இவைகள் மாறிமாறிக் காட்சியளித்தன முதலியாருக்கு. சட்டென இறங்கிவிட்டார். அதிலிருந்து முதலியாருடைய உள்ளத்தே ஏதோ ஒர் எண்ணம் கவ்விக் கொண்டது.
வேரூன்றி விட்டால் கேட்கவா வேண்டும். “நான் வயது ஆனவன். இவள் இளமையின் எடுத்துக்காட்டாக இருக்கிறாள். அவனோ காளைப் பருவத்தான். பஞ்சு இருக்குமிடத்தில் நெருப்பை வைத்திருப்பது சரியில்லை” என்று எண்ணினார். எண்ணத்தின் முடிவில் வீட்டை விட்டுக் காலி செய்யப்பட்டனர் அவ்விளைஞனும் அவனைச் சேர்ந்தவர்களும்.
போருக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்த முதலியாரின் மகன் - மூத்த மனைவியின் மகன் அன்று வந்து சேர்ந்தான். அவனுக்கு மங்களம் அறிமுகப்படுத்தப்பட்டாள். தந்தை செயல் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்த போதிலும் அவள் நடந்து கொள்ளும் முறையைக் கண்டு தன் தாயில்லாக் குறையை அவள் நிறைவேற்றுவாள் என்று மகிழ்ச்சியடைந்தான்,
அவள் அவனிடம் மிக அன்பாகப் பழகினாள். அவனுக்கு வேண்டியவற்றை ஒரு குறையும் இல்லாமல் செய்து வந்தாள். இருவரும் எவ்விதக் களங்கமுமின்றிப் பழகிவந்தனர்.
ஆனால் முதலியாருக்கு அஃது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவனோடு அவள் சிரிப்பதும் பேசுவதும் அவருடைய உள்ளத்தில் வேரூன்றியிருந்த எண்ணத்திற்குத் தண்ணீர் வார்த்தது போன்றிருந்தது. என்ன செய்வது! ஒன்றும் சொல்லவும் முடியவில்லை , அவர்களை அப்படிப் பழக விடவும் மனமில்லை. உழன்று கொண்டிருந்தார்.
"மங்களம்! அந்தச் சாவிக் கொத்தைக் கொடு! வைர நகைகளை எப்பொழுதும் போட்டிருக்காதே. 'கெட்டு விடுமல்லவா! பெட்டியில் கழற்றி வைத்துக் கொள். பட்டுப் புடவைகளை நாள்தோறும் கட்டினால் எதற்காகும்? சாதாரணச் சேலைகளைக் கட்டிக் கொண்டாலென்ன? ஏதாவது “விசேடம்" வந்தால் அப்பொழுது கட்டிக் கொள்வது சரி” என்று முதலியார் கொஞ்சம் கண்டிப்பில் இறங்கி விட்டார்.
ஒரு நாள் பக்கத்தூருக்குச் சென்றிருந்தவர் மறுநாள் தான் வந்தார். வந்தவர் தன் மகன் அறையில் ஏதோ வேலையா நுழைந்தார். படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. அதில் மலர்கள் சிதறிக் கிடந்தன. கச்சு ஒன்றும் கிடந்தது. முதலியாருக்கு வேல் கொண்டு குத்துவது போன்றிருந்தது. “கண்ணாடிமுகம்” தோன்றியது . வேரூன்றிய செடி பூத்துக் காய்க்கத் தொடங்கிவிட்டது.
“அடபாவி! இந்தக் காரியம் செய்யலாமா? உன் அப்பனுக்கும் மனைவி, உனக்கும் மனைவியா? ஒர் இரவு நானில்லை . இப்படி நடந்து விட்டதே! அடி சண்டாளி! உனக்குத்தான் இஃது அடுக்குமா? பாவ புண்ணியத்திற்குக் கொஞ்சமாவது அஞ்சினாயா? என்று துடிதுடித்தது அவருள்ளம்.
நேரே மாடிக்குச் சென்றார். நாற்காலியில் சாய்ந்தார் சிந்தனையில் ஆழ்ந்தார்.
“உனக்கு அடுக்குமா என்றா கேட்கிறீர்? சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்! என் வயதென்ன! உங்கள் வயதென்ன! என்னை மணந்து கொண்டது உமக்கு அடுக்குமா? சரி; பாவம் புண்ணியம் என்றெல்லாம் பேசுகிறீரே! அவற்றை நம்பி யிருந்தால் என்னை மணப்பது பாவம் என்று உங்களுக்கு ஏன் தெரியவில்லை ?”
“அடி பாதகி! அதற்காக மகன் என்று கூடவா பார்க்கக் கூடாது? இப்படி நடந்து விட்டாயே! நான் ஒருவன் மரம் போல இருக்கிறேன் என்பதையும் மறந்துவிட்டாயா?' “இல்லை! மறந்துவிடவில்லை! உண்மையில் நீங்கள் என் வாழ்வில் மரம் என்பதை நினைத்துத்தான் இப்படிச் செய்தேன். மகன் என்கிறீர்! யாருக்கு மகன்? அவர் வயதென்ன? யாராவது ஒப்புக் கொள்வார்களா? இல்லை - உங்களையும் என்னையும் தான் கணவன் மனைவி என்றால் நம்புவார்களா? பேத்தி என்றால் ஒரு வேளை நம்பலாம். மகன் என்று நீர் சொல்லும் அவர் எனக்கேற்றவர். வறண்டு கிடந்த பாலை நிலத்தில் பாலை ஊற்றினார். பூச்செடியும் வளர்கிறது. செடியை வளர்க்க நான் வெளியில் செல்ல விரும்பவில்லை. - உலகம் தூற்றும், உண்மையை உணராது. ஆதலால் நான் வீட்டிலேயே ......”
"அய்யோ தெய்வமே ! எனக்கா இந்தக் கதி வர வேண்டும்! சொல்லப் போனால் காளி போலப் பேசுகிறாளே! எனக்கே - என் மானத்திற்கே குழி தோண்டுகிறாளே! பாம்பையல்லவா வீட்டில் வளர்க்கிறேன்.”
இவை சிந்தனையில் ஆழ்ந்திருந்த முதலியாரின் மனப் போராட்டம்.
போராட்டத்தின் முடிவில் “ஆம்; அவள் நிலைக்கும் என் நிலைக்கும் பொருத்தம் இல்லை தான். சாதகத்தில் ஏதோ பொருத்தம் சொன்னான். ஆனால் உள்ளப் பொருத்தமில்லை. எந்தப் பொருத்தமுமே இல்லை. அவள் ஓர் இளங்கொடி, பக்கத்திலே இருக்கும் கொம்பிலே தாவிப் படராதிருக்குமா? அவள் பூத்துக் குலுங்கும் செடி. வண்டு மொய்க்காதிருக்குமா? அவள் காண வேண்டிய பருவ இன்பத்தை - மனித இன்பத்தை என்னிடம் காண முடியவில்லை . அதனால் அஃது இருக்கும் இடத்தை நாடினாள். அவனும் இளைஞன், மணம் ஆகாதவன். இஃது அவர்கள் குற்றமன்று. என் குற்றந்தான். இது சரியான தண்டனைதான்” என்ற நிலைக்கு வந்தார்.
“இருந்தாலும் இப்படிச் செய்யலாமா? தாய் - மகன் என்ற முறையாவது கருத வேண்டாமா?” “முறை! என்ன முறை! அவன் எனக்குத்தானே மகன். அவளுக்கும் அவனுக்கும் என்ன உறவு வந்தது? ஒரு கயிற்றை நான் கழுத்தில் கட்டியதற்காக அவள் தாயாக முடியுமா?”
"இல்லையில்லை! இது சரி என்று ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அவள் குற்றவாளிதான் அவளை இப்பொழுதே.....”
“வேண்டாம் ! உன்னைத்தான் தூற்றும் உலகம். அவளைத் தூற்றாது . இயற்கை எண்ணம் - உணர்ச்சி இவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா? அதை அடக்க உன்னிடம் தான் ஆற்றல் இருக்கிறதா? வயதான உன்னிடமே இல்லாதபோது வாலிப உள்ளத்திலே எப்படி அதை எதிப்பார்க்க முடியும்? ஆகவே நீ எண்ணுவது போல் செய்துவிடாதே! அவளை மணந்து கொண்டதே பெருங்குற்றம். மேலும் கொலைக் குற்றத்திற்கு ஆளாகாதே!”
இப்படியாக நொந்து நொந்து அல்லற்பட்டுக் கொண்டிருந்தது அவருள்ளம்.
“வெந்நீர் காய்ந்து கொதிக்கிறதே; என்ன செய்கிறீர்கள்; குளிக்க எழுந்து வாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே மாடியில் ஏறி வந்துகொண்டிருந்தாள் மங்களம்.
ஒரு வகையில் மனத்தை - முகத்தைச் சரிப்படுத்திக் கொண்டு எழுந்தார்.
அன்று முதல் அவர் பைத்தியம் பிடித்தவர் போலவே காணப்பட்டார். அவருக்கு முகத்தில் தாடி வளர்ந்து கொண்டு வந்தது போலவே வேரூன்றி முளைத்தெழுந்த அந்த எண்ணமும் வளர்ந்து கொண்டே வந்தது. மாடிப் பக்கம் செல்வதே கிடையாது. ஒரு தனி அறையில் படுத்துக் கொள்வார். முதலியாரின் மாற்றம் மங்களத்திற்கு மனத் தடுமாற்றத்தைத் தந்தது.
மற்றொரு நாள் இரவு மணி ஒன்று அல்லது இரண்டு இருக்கும். சிரிப்பொலி கேட்டது. அப்படியொன்றும் வெடித்த சிரிப்பன்று. சிறிய ஒலி தான். இருந்தாலும் உறங்காமலே இருந்த முதலியார் செவியில் அவ்வொலி விழுந்தது. ஒலி வந்த திசை நோக்கி நடந்தார். தன் மகன் அறையிலிருந்து தான் அந்த ஒலி வந்தது என்பதை மெய்ப்பித்து விட்டது. அங்கிருந்து வரும் பேச்சொலி பூத்துக் காய்த்திருந்த அந்த எண்ணம் பழுக்கத் தொடங்கி விட்டது.
கதவின் துவாரத்தின் வழியாகப் பார்த்தார். இருவுருவங்கள் தெரிந்தன. படுக்கையறை வெளிச்சத்தால் சரியாகத் தெரியவில்லை.
பேச்சை உற்றுக் கேட்டார். “எனக்குப் பயமாகவே இருக்கிறது. அவர் பார்த்து விட்டால் என்ன ஆகும்” இது பெண் குரல். “நானிருக்கும் பொழுது உனக்கென்ன பயம்?” அவர் பார்த்தால் தான் என்ன இனி மேல் நீ என் மனைவி. ஏதாவது தடை ஏற்பட்டால் நாம் சிங்கப்பூருக்குச் சென்று விடலாம்” இஃது ஆண் குரல்.
இதற்கு மேல் அவர் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை . பழம் பயன் தரத் தொடங்கிவிட்டது. “என்ன துணிச்சல்! இனி அவள் உன் மனைவியா?.... சிங்கப்பூருக்கா செல்கிறாய். வேண்டாம். நானே உங்களைச் சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்” என்று துடிதுடித்துக் கொண்டு சந்தடி செய்யாமல் அறைக்குச் சென்று கைத் துப்பாக்கியை எடுத்து வந்தார்.
மகன் அறையில் ஒரு சன்னல் கதவு சிறிது திறந்திருப்பதைப் பார்த்தார். அதன் வழியாக உள்ளே பார்த்தார். அவர் கண்கள் கூசின. நெஞ்சு வெடித்து விடும்போல இருந்தது.
துப்பாக்கியை நீட்டினார். கண்களை மூடிக் கொண்டார். விசையைத் தட்டினார். “படார் படார்” என்ற சத்தம். குறி தவறி அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் பட்டது.
எங்கும் ஒரே வெளிச்சம். மாடியிலிருந்து ஓடி வந்தாள் மங்களம். துப்பாக்கியை மறைத்துக் கொண்டு பித்தன் போல் நின்று கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். “என்ன இது? ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என்ன சத்தம்?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
அவளைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“அப்படியானால் உள்ளே நம்மால் சுடப்பட்டது யார்?” இது முதலியார் பெருமூச்சோடு கலந்து வந்த அய்யம்.
மகனும் கதவைத் திறந்து கொண்ட வந்து இதென்ன அப்பா என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
ஒன்றும் பேசவில்லை . மங்களம் அவர் கையைப் பிடித்துக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டாள்.
மணி நான்கு அடித்துவிட்டது.
முதலியார் மகன், கட்டிலின் கீழ் மறைந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் காதலியை மெதுவாக அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தான். வெளிக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு முதலியார் மாடிச் சன்னல் வெளியில் எட்டிப் பார்த்தார்.
தன் மகன் எதிர்த்த வீட்டுப் பெண் வசந்த கோகிலத்தை அங்கே கொண்ட போய் விட்டுத் திரும்புவதை வீதி வெளிச்சத்தால் பார்த்தார்.
அப்பாடா என்று திரும்பினார்.
அந்த மரம் - சந்தேக மரம் அடியோடு சாய்ந்தது. மனப்பாரம் குறைந்தது, பித்தமும் தெளிந்தது.
“மங்களம்! மங்களம்” என்றார். அப்பொழுது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்திருந்தது.