எனது நண்பர்கள்/டபிள்யூ. பி. ஏ. செளந்திர பாண்டியன்
பாண்டியர் வரலாறு
தமிழக வரலாறு எழுதப்படும்பொழுது அதில் பாண்டிய நாட்டு வரலாறு முதலிடம் பெறும். பல பாண்டியர்களின் வரலாறு தமிழகத்தில் மங்கி மறைந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்று சௌந்திர பாண்டியரின் வரலாறு.
மதுரை மாவட்டம் நிலக்கோட்டை சிறுவட்டம் வத்தலக்குண்டைச் சார்ந்த பட்டிவிரன்பட்டியில், 1893 இல் பிறந்தார், திரு. சௌந்திரபாண்டியர். இவரது தந்தை திரு. ஊ. பு. அய்ய நாடார்; தாய் சின்னம்மாள். அக்காலத்தில் பொதிமாடுகளில் சரக்குகளைச் சுமந்து பல சிற்றுார்களுக்குச் சென்று, நாணயமாக வணிகம் நடத்திப் பெரும் புகழ்பெற்றவர் திரு. அய்ய நாடார்.
திரு. பாண்டியருடைய சகோதரர் திரு. ஊ. பு, அ ரெங்கசாமி நாடார். இவரது சகோதரிகள் மூவர்.
தனது 20 ஆவது வயதில் திருமதி பாலம்மாள் இவரது வாழ்கைத் துணைவியரானார். இவருக்கு ஆண்மக்கள் மூவர். ஒரே மகள் விஜயாம்பிகை.
திரு. சௌந்திரபாண்டியன் கடினமான உழைப்பாளி , உயர்ந்த பயிர்த் தொழிலாளி; பெரிய தோட்டமுதலாளி; சிறந்த அறிவாளி; சிருக்கமான எழுத்தாளி’ அழுத்தமான பேச்சாளி; வாரி வழங்கும் கொடையாளி.
ஆறு அடி உயரம்: 180 பவுண்டு நிறை; கருத்த நிறம்; பளபளப்பான மேனி; எளிமையான நடை; பரந்த மார்பு; திரண்ட தோள்கள்; நீண்ட கைகள்; அடர்ந்த மயிர்; விரிந்த நெற்றி; அகன்ற கண்கள்; கூர்மையான பார்வை-இவை அத்தனையும் சேர்ந்து ஒருங்கே கண்டால், அது சௌந்தர பாண்டியர் என்பது பொருள்.
ஒரு குடும்பத்தின் தலைவனாக, உறவினர் பலரின் பாதுகாவலராக, ஏழைகள் பலருக்கு ஆதரவாளராக, பயிர்த் தொழிலாளியாக, தோட்ட முதலாளியாக, வணிகராக, அரசியல் அறிஞராக, நீதிக்கட்சி உறுப்பினராக, சுயமரியாதை இயக்கத் தலைவராக, பகுத்தறிவுவாதியாக, ஜில்லா போர்டு தலைவராக, சென்னைச் சட்டசபை உறுப்பினராக, பெருங்கொடையாளியாக மட்டுமல்ல, ஒரு உயர்ந்த பேச்சாளியாகவும் வாழ்ந்து மறைந்தவர் நமது சௌந்திர பாண்டியனார். மறைந்த ஆண்டு 1953. வாழ்ந்த ஆண்டுகள் 60.
அன்று வரை-வரலாறு காணாத அளவில், முதலாவது சுயமரியாதை மாநாடு ஒன்று செங்கற்பட்டு நகரில் நடைபெற்றது. பனகல் அரசர் முதல் பல அமைச்சர்களும் பங்கு பெற்ற மாநாடு—அது. மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் சென்ற ஆண்டு அரசாங்கத் தலைமைவழக்குரைஞர். திரு.மோகன்குமாரமங்கலத்தின் தந்தையும், இன்றைய இந்திய நாட்டுத் தலைமை தளபதி திரு. குமாரமங்கலத்தின் தந்தையும் ஆகிய சேலம் குமாரமங்கலம் ஜமீன்தார் திரு. டாக்டர் சுப்பராயன் ஆவார். நாடு முழுதுமிருந்து பங்கு பெற்ற தோழர்கள் ஏறத்தாழ இருபதினாயிரம் பேர்கள். செங்கல்பட்டுப் புகைவண்டி நிலையத்தின் முன் உள்ள கடல் போன்ற ஏரிநீர் முழுதும், மகாநாட்டின் பிரதிநிதிகள் குளித்ததனால் சேறாகி விட்டது என்பது எதிர்க்கட்சியினர் கூறிய புகார். மாநாட்டின் சிறப்பைக் கூற இது ஒன்றே போதுமானது. வரலாறு காணாத பெருஞ்சிறப்புடன் நடைபெற்ற மாநாடு அது. அந்த மாநாட்டின் தலைவர்தான் நமது சௌந்திரபாண்டியன். ஆண்டுகள் 40 ஆகியும் அவர் அம்மகாநாட்டில் ஆற்றிய தலைமை உரை இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இன்று கோடைரோடு ரயில் நிலையத்திலிருந்து, கொடைக்கானல் மலைக்கு ‘கொடைக்கானல் மோட்டார் யூனியன், பஸ் போக்குவரத்து இருந்து கொண்டிருக்கிறது. அது தொடங்கியது திரு. சௌந்திர பாண்டியர் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோதுதான். கோடைமலைக்குப் பஸ் போகாதிருக்க வந்த எதிர்ப்புகள் இமய மலை அளவு. அதை நிலை நிறுத்தியவர் சௌந்தர பாண்டியர். அந்த நிறுவனம் உள்ளவரை அவரது பெயரும் மறையாது.
திரு. பாண்டியனார் ஜில்லா போர்டு தலைவராக இருந்து போது, ஒரு உறுப்பினர் அவர்மீது நம்பிக்கையில்லாத் திர்மானம் போர்டு கூட்டத்தில் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார். அன்று கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வந்த பாண்டியர், கூட்ட நிகழ்ச்சியைத் தொடங்காமல், முதலில் தன் இராஜினமாக் கடிதத்தைப் படித்து விட்டு விலகிக்கொண்டார்.
“தீர்மானம் கூட்டத்திற்கு வருகிறதா இல்லையா என்பதும், வந்தாலும் யாராவது ஆதரிப்பாரா என்பதும் தெரியவில்லை. அதற்குள் நீங்கள் இராஜினாமா செய்வது சரியல்ல” என்று ஒருவர் சொன்னார்.
அதற்கு திரு. பாண்டியர் கூறியதாவது, “இந்தப் போர்டில் ஒரு ஆளுக்கு என்மீது நம்பிக்கை இல்லாதிருந்தாலும் நான் தலைமைப்பதவி வகிப்பது சரியல்ல’ என்று கூறினார். எல்லோரும் சேர்ந்து வற்புறுத்தியும்கூட திரு. பாண்டியர் தலைமைப்பொறுப்பேற்க மறுத்து விலகிவிட்டார். அக்காலத்து பதவிகள் இம்மாதிரித் தலைவர்களைப் பெற்றிருந்தன.
திரு. சௌந்திர பாண்டியனின் தலைசிறந்த நண்பர் சர். பி. டி. இராஜன். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்றே எல்லோரும் கூறுவதுண்டு. சிகரெட்டுப் புகைப்பதிலிருந்து சீட்டாடுவதுவரை, அரசாங்கத்தில் நிர்வாகம் செய்வதிலிருந்து பொதுமக்களுக்கு உதவி செய்வதுவரை இருவரும் இரட்டையர்களாகவே திகழ்ந்தனர். யார், எதை எவரிடம் வினவினாலும், பாண்டியரிடமிருந்து வரும் விடையெல்லாம் ‘'ராஜனைக் கேட்க வேண்டும்; ராஜனிடமிருந்து விடையெல்லாம் ‘'பாண்டியனைக் கேட்க வேண்டும்!” என்றுமே இருக்கும். ஆம். அவர்கள் உண்மையாகவே மதுரையின் இரட்டைத் தலைவர்களாகவே விளங்கினர்.அதனாலேயே சௌந்திர பாண்டியனுடைய மூத்த பேரனுக்குப் பெயரிட அழைத்த போது, ‘பாண்டியராஜன்’ என நான் பெயர் வைத்தேன். அவர்கள் துவக்கிய ஆலை இருக்கும் இடத்திற்கும் ‘பாண்டியராஜபுரம்’ எனப் பெயரிடும்படியும் தெரிவித்தேன் -
‘கோபமுள்ள இடத்தில் குணமிருக்கும்’ என்பது தமிழகப் பழமொழி. இதற்கு இலக்கணமாக அமைந்தவர் பாண்டியர். அவரை முன்கோபி என்று பலரும், குணக்குன்று என்று பலரும் கூறுவர். இதனாலேயே எல்லாரும் அவரிடம் காட்டும் மரியாதையில் அச்சமும் கலந்திருக்கும்.ஒரு சமயம் சர். பி. டி. இராஜன் இல்லத்தில் பெரியாரும், நானும், பாண்டியனும், ராஜனும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சென்னையில் மேயராகவிருந்த இராவ் சாகிப் திரு. சிவராஜ் பற்றி பெரியார் ராஜனிடம் குறை கூறினார். அவரும் பெரியாருடன் இணைந்து கூறினார். உடனே திரு. பாண்டியர் விரைந்து எழுந்து உரக்கக் கூறியது இது; “நாம் சிவராஜின் உண்மையான நண்பர்களல்ல. நாம் உண்மையான நண்பர்களாக இருந்தால், அவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றிப் பேசியிருக்க மாட்டோம். அவரை வரவழைத்து அவரது எதிரில்தான் பேசுவோம். நீங்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.
இவ்வாறு கூறி, பாண்டியர் அவ்விடத்தை விட்டு அகன்றது கண்டு பேரதிர்ச்சியடைந்தேன். அவரது முகத்தில் ‘கோபக் கனலை’ கண்டது எனக்கு அதுவே முதல் தடவை. எவரும் எதுவும், பேசவில்லை. சில நிமிடங்கள் வரை. பின்னர் திரு. இராஜன் சமாதானம் கூறி, அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார். அவர் சமாதானமடைந்து என அருகில் அமர்ந்தாலும், அவர் விட்ட மூச்சு ஊது உலை போன்று அனல் இருந்தது. அன்றுதான் நான் நட்பின் தன்மை என்றால் என்ன என்ற முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.
மற்றொரு சமயம் தோட்டத்தில் ஒரு தொழிலாளி பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு வழக்கும், சூதாடியதாக ஒரு வழக்கும், குடித்திருந்து வேலைக்கு வராதிருந்ததாக ஒரு வழக்கும், வாழைத் தாரை திருடிவிட்டதாக ஒரு வழக்கும் பட்டிவீரன் பட்டிக்கு வந்தன. நான் அப்போது அங்கு இருந்தேன். பாண்டியனார் விசாரிக்கத் தொடங்கினார். என்ன நடக்குமோ என எல்லோரும் அச்சமும் திகிலும் அடைந்திருந்தனர். சீட்டாடியது சூது அல்ல என்று அவனை விசாரிக்காமலேயே விரட்டி விட்டார். குடிகாரனை ஏதோ களைப்பினால் குடித்திருப்பான் என்று எண்ணி, இனி குடிக்காதே எனக்கண்டித்து விட்டு விட்டார். பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் உன் உயிர் போய்விடும் ஜாக்கிரதை என்று எச்சரித்து மன்னித்து அனுப்பிவிட்டார். வாழைத்தார் திருடியவனைத்தான் விசாரித்தார். அப்போது தம்பி ரெங்கசாமி அவன் திருடிய தாரையும் கொண்டுவந்து எதிரில் வைத்தார்.
“ஏன் இதைத் திருடினாய்?” என திருடியவனைக் கேட்டார். “எஜமான் நான் திருடியது தப்பு. பசியினாலே சாப்பிடத் திருடினேன். இனிமேல் திருடவில்லை” என்றான் அவன்.
“நீ இந்த ஒரு தார்தான் திருடினாயா? இதற்கு முன்னும் பல தார்களைத் திருடினாயா?” என பாண்டியர் கேட்டார்.
“இது ஒன்றுதான்” என்றான் அவன். “நீ எத்தனை தார் தூக்குவாய்?” என்றார். மூன்று தார் தூக்குவேன்’. என்றான். “எங்கே கிடங்கினுள் சென்று பெரிய தாராகப் பார்த்து ‘மூன்று தார்களைத் துக்கி வா, பார்க்கலாம்’ என்றார். அவனும் அவ்வாறே துக்கி வந்தான். நான்காவது தாராக திருடப்பட்ட தாரையும் தூக்கச் சொன்னார். திணறி முக்கித் தூக்கினான்.“போ, கொண்டு போய்ச் சாப்பிடு. இனித் திருடாதே” என்று பாண்டியர் கூறியது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அந்த நான்கு தார்களையும் அந்த ஆள் எடுத்துப் போகாமல் கீழே வைத்துவிட்டுக் கோவெனக் கதறி அழுது, “எஜமான், நான் ஜென்மத்துக்கும் திருடமாட்டேன்” என்று தரையில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். ‘போடா–போடா’ என்று விரட்டி விட்டார் அவனை. இவ்வாறாக விசாரணை தர்பார் முடிந்தது. அடுத்த நிமிடம் பண்ணையாள் ஒருவன் ஏதோ பேசினான். அவன் பேசியது ‘பொய்’ என்று தெரிந்ததும், பெரிதும் ஆத்திரப்பட்டு அவனை அடிக்கத் தன் வலது காலை மடக்கி ஓங்கினார். நான் தடுத்திராவிட்டால் அந்த வேலையாளின் பற்கள் உதிர்ந்திருக்கும். ஏனென்றால் பாண்டியனது வலது கால் எதிரிலுள்ளவனுடைய வலது கன்னத்தைத் தாக்கும் வலிமை படைத்தது. இக்கலையை அவரிடமின்றி நான் வேறு எவரிடமும் கண்டதில்லை.
வேறொரு சமயம் இதற்கு விளக்கம் கேட்டதற்கு ஒருவனுக்கு, குடியும், சூதாடுதலும், நெறி தவறுதலும், திருட்டும் சந்தர்ப்பத்தாலும் சூழ்நிலையாலும்நேரிடுவன. ‘பொய் பேசுவது ஒன்று மட்டும் ஒருவனுடையே அயோக்கியத்தனத்தினாலேயே நேரிடுவதும் என்றும், அதனால் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் அவர் கூறினார். அன்றிலிருந்துதான் நானும் பொய் பேசுகிறவர்களை வெறுக்கக் கற்றுக்கொண்டேன்.
இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லையென்னாது வழங்கிய வள்ளல் பாண்டியர். குடும்பச் செலவுக்கு எடுத்து வந்த பணத்தையும் கொடை கொடுத்து வந்தவர் பாண்டியர். வாட்டமடைந்த முகத்தைக் கண்டால் தோட்டத்திற்குக் கூலிக்காக அனுப்பவிருக்கும் தொகையும் கொடுத்துவிடுவார்.
வருமானத்திற்கு மீறிய கொடைத்தன்மை அவரிடம் இருந்ததால் பண்ணைக்குச் சிறிது கடன் வந்தது. அதைப் போக்க ஒரு புதிய தொழிலைத் தொடங்க எண்ணினார். அது திராட்சைப் பழங்களிலிருந்து இரசம் இறக்கி பலநாள் கெடாமல் வைத்திருப்பது. அதற்கு வேண்டிய அறிஞர்களையெல்லாம் வரவழைத்து, பெருஞ் செலவில் ஆராய்ச்சியெல்லாம் செய்து முடித்துவிட்டார். அதற்கு வேண்டிய வெளி நாட்டுப் பொறிகள் எல்லாம் வரவழைக்கப் பெற்று விட்டன. அவர் தயாரித்த திராட்சை ரசத்திற்கு மிக நல்ல பெயர். சுவைத்துப் பார்த்தவர்களெல்லாம் நற்சான்று வழங்கத் தொடங்கி விட்டனர். பாதிரிமார்கள் சிலர் பட்டி வீரன்பட்டி திராட்சை ரசம் தங்களின் பூசைக்கு ஏற்றது என முடிவு கட்டி அதை வாங்க முன்வந்து விட்டனர். பாண்டியரின் நண்பர்களெல்லாம் அவர் திரட்டப்போகும் பெருஞ் செல்வத்கைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருந்தனர். பகைவர்களெல்லாம் பொறாமைப் பட்டனர். அந்நிலையில் நான் பட்டிவீரன் பட்டிக்குச் சென்றிருந்தேன். சாப்பிடும்போது பெரியம்மா என்னிடம், “தமிழ், திராட்சை ரசம் இறக்கும் வேலையை விட்டுவிடும்படி அண்ணனிடம் சொல்லு என்றார்கள். சொன்னேன். அவ்வளவுதான்; விரைந்து எழுந்து தாயிடம் போய், “அம்மா இதைவிட்டால் பெரும் பொருள் நட்டம் வருமே!” என்றார். அம்மா அவர்கள் வேறு எதுவும் கூறாமல், “இது நம் குடும்பத்தில் வேண்டாம்” என்றார்கள். அவ்வளவுதான், என்ஜின்கள் எங்கு போயிற்றோ? எஞ்சினியர்கள் போய்விட்டார்கள்.
மறுநாள் காலையில் நானும் பாண்டியரும் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். மணப்பாறைக்கு அருகில் வரும்போது, பாண்டியனின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணிர் வந்தது. ஏன் என வினவியபோது, அதைத் துடைத்துக் கொண்டு அவர் கூறியவை இவை:-
“எனக்கு அறிவு வந்த நாட்களாக நான் செய்யும் எந்தச் செயலையும் அம்மா வேண்டாம்” எனச் சொன்னதே இல்லை. நேற்றுத்தான் அவர்கள் முதல் தடவையாக வேண்டாம் என்று சொன்னார்கள். முன்னதாக அவர்களது கருத்தை அறியாமல் போனேன். அதை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது.”
இதைக் கேட்ட போதுதான் ‘ஒரு வீரமகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவனது தாயின் சொல்லுக்கே உண்டு’ என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன் பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது.
திரு. ஏ. எஸ். எஸ். எஸ். சங்கரபாண்டிய நாடார் காங்கிரஸ் கட்சியின் தலைவர். திரு. ஊ. பு. அ. சௌந்திர பாண்டியனார் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர். இருவரும் மைத்துனர்கள். ஒரு சமயம் அவர் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறையில் அடைக்கப் பெற்றிருந்தபோது பாண்டியனும் நானும் அவரைப் பார்க்கப் போயிருந்தோம். சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறிச் சலுகைகளைப் பெற அவரே மறுத்து விட்டது எனக்கு வியப்பையளித்தது. அன்று அவர்கள் இருவரும் அளவளாவிப் பேசிக் கொண்டதிலிருந்து, ‘நல்லவர்கள் உள்ளத்தில் கட்சிக் கடுப்பு இருப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ந்தேன்.
திரு. ஏ. எஸ். எஸ். எஸ் சங்கரபாண்டிய நாடார் முதலில் மைத்துனர், பிறகு தீனதயாளனுக்குப் பெண் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தபோது, சம்பந்தியும் ஆனார். திருமணம் விருதுநகரில்.
பதிவுத் திருமணம்; ரிஜிஸ்டிரார் மணப்பந்தலுக்கே வந்து நடத்தி வைத்தார். சாட்சிக் கையெழுத்து யாரைப் போடச் சொல்வது? என்ற சிக்கல் வந்தது. இது பெரும் பிரச்சினையாக வந்துவிடும்போல் தோன்றியது. இறுதியில் சம்பந்தி பெண்வீட்டார் சார்பில் கே. காமராஜ் கையெழுத்திடுவார்’ எனக் கூறினார். உடனே பாண்டியர் ‘மாப்பிள்ளை வீட்டார் சார்பில் கி. ஆ. பெ. விசுவநாதம் கையெழுத்திடுவார்’’ எனக் கூறினார். இருவரும் ஒப்ப, அதன்படி கையெழுத்திட்டுத் திருமணம் இனிது முடிந்தது. இத் திருமணத்தைப் போல் விறுவிறுப்யும், ஆனால் அதே நேரத்தில் அமைதியும் கலந்த திருமணம் ஒன்றை நான் இன்னும் கண்டதில்லை.
விருதுநகரில் திரு. வி. வி. இராமசாமி ஜில்லாபோர்டு தேர்தலுக்கு நின்றார். போட்டி மிகக் கடுமையாக இருந்தது. ஒரு நாள் திரு. பாண்டியர் தலைமையில் நானும்; திரு. வி. வி. ஆரும் பேசுவதாகப் பெரிய கூட்டம் நடக்கும் என அறிவிக்கப் பெற்றிருந்தது. கூட்டத்தை நடக்கவொட்டாமல் கலகம் செய்ய எதிர்க் கட்சியினர் திட்டமிட்டிருந்தது, எங்களுக்குத் தெரிய வந்தது. பட்டிவீரன்பட்டிக்குச் செய்தி சென்றது. அங்கிருந்து ஒரு பெரும் படையே திரண்டு வந்தது. கூட்டம் துவங்கியது. பாண்டியர் தலைமையில் என்ன நேருமோ? வென்ற அச்சம் சூழ்ந்திருந்தது. பாண்டியரது தலைமை உரையில் ஏழு சொற்கள் வெளிவந்தன. அவை:—
“காலித்தனம் நடந்தால் அது காலித் தனத்தாலேயே அடக்கப்படும்” என்பதே, அந்த நெருப்புப் பொறி. அக்கூட்டத்தில் நானும் வி. வி. ஆரும் மட்டுமே மூன்று மணிநேரம் பேசினோம். பின் கூட்டம் அமைதியாக நடந்தது. மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று.
மட்டப்பாறை வெங்கட்ராமைய்யர், நிலக்கோட்டைத் தொகுதியில் பாண்டியனுக்குப் போட்டியாக தேர்தலில் நின்றார். நாங்களெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தோம். ஒரு நாள் சத்தியமூர்த்தி ஐயா மட்டப் பாறைக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வந்திருந்தார். பேசிவிட்டு அவர் ஊர் திரும்பியபோது கார் ஒரு திருப்பத்தில் திரும்பியது. அப்போது மலைக் குன்றிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து காரின்மேல் பாய்ந்தது. ஒரு நொடியில் கார் தப்பியது. திரு. சத்தியமூர்த்தியும் உயிர் தப்பினார். மறுநாள் இச்செய்தி சென்னைப்பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியாயின. சென்னை கவர்னருக்குக் கூட எட்டிவிட்டது. திரு. பாண்டியன் மீது சிலர் குறை கூறினர். சிலர் என்ன இருந்தாலும் பாண்டியன் இப்படிச் செய்யக் கட்டாது” எனக் குறை கூறினர். இது குறித்துப் பாண்டியர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை விட்டார். அது:—
“நடந்த நிகழ்ச்சி வருத்தத்தைத்தருகின்றது. வதந்திகள் அதைவிட வருத்தத்தை அளிக்கின்றன. இக் கொடுமையை நான் செய்யவோ, செய்யத் துாண்டவோ இல்லை. அதற்கு ஒரே ஒரு சாட்சிதான் உண்டு. அதாவது—நான் செய்திருந்தால் சத்தியமூர்த்தியோ, காரோ பிழைத்திருக்க முடியாது. அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்பதே நான் செய்யவில்லை யென்பதற்குப் போதுமான சாட்சி” என்பதே. இவ்வளவு துணிச்சலான மனம் படைத்தவர் வேறு எவரையும் நான் கண்டதில்லை.
அசோகா பிளாண்டேசன்’ என ஒரு கம்பெனியைத் திரு. பாண்டியன் தொடங்கினார். அப்போது அது பற்றிய பொருளாதாரத்திற்கு ஒரு பாங்கின் உதவி தேவைப்பட்டது. பாண்டியன் திருச்சி, திருநிதி பாங்க் செயலாளரோடு எனது இல்லத்தில் நெடுநேரம் பேசினார். பின் பாங்க் செயலாளர் கூறியது :—
‘ஒருவரைப் பார்க்கும் முன் அவரைப்பற்றிக்கேள்விப் :பட்டதெல்லாம் அவரை நேரில் பார்க்கும்போது பொய்யாய்ப் போய்விடுகிறது” என்றார். இதிலிருந்து பாண்டியனைப்பற்றி அவர் எவ்வளவு பயந்திருந்தார் என்பது விளங்கிற்று. உண்மையில் அவரைப் போன்ற உள்ளம் படைத்தவர்கள் நாட்டில் மிகக் குறைவு.
சென்னை மாகாண ஐஸ்டிஸ் கட்சியின் பொதுக் காரியதரிசி பதவியிலிருந்து நான் விலகி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைக் கண்டதும், பாண்டியன் ஆச்சரியப்பட்டும், ஆத்திரப்பட்டும், திருச்சிக்கு வந்து காரணம் கேட்டார். விளக்கினேன். மகிழ்ச்சியடைந்தார்.
கட்சியில் கருத்துவேற்றுமை ஏற்பட்டது. அதன் பிறகு ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடக் கழகமாக மாற்றுகிற மகாநாடு சேலத்தில் 1946இல் நடந்தது. அம்மகாநாட்டை நான் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றி விலகினேன். பாண்டியன் தன் கருத்தை விளக்கமாகப் பேசி விலக்கினார்.
அடுத்து, வி. வி. ஆர். பொன்னம்பலனார், ஜி. ஜி. நெட்டோ, சேலம் கணேச சங்கர் முதலியோரும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சியினரும் விலகினார்கள். எங்கள் அரசியல், வாழ்வு அதோடு முடிந்தது.
பாண்டியன் மறைந்தபோது அவர் பற்றிய செய்தியை திராவிட நாடு பத்திரிகைக்கு எழுதி அனுப்புமாறு நண்பர் சி. என். அண்ணாத்துரை கேட்டிருந்தார். நான் அனுப்பிய செய்தி இது:—
“தமிழகம்ஒரு அறிஞனை இழந்தது. மதுரை தன் தலைவனை இழந்தது. சர். பி. டி. ராஜன் தன் வலது கையை இழந்தார். சுயமரியாதை இயக்கம் தன் துணைத்தலைவரை இழந்தது. தோழர்கள் நண்பரை இழந்தனர். மக்கள் தந்தையை இழந்தனர். தம்பி ரங்கசாமி தன் தமையனை இழந்தார். என் அண்ணியார் தம் மாங்கல்யத்தை இழந்தார். நானோ அனைத்தையும் இழந்தேன்” என்பதே.
அவரது இருப்பிடத்தை நிரப்ப இதுவரை யாரும் தோன்றவில்லை. ஆகவே, அவரது இழப்பு தமிழகம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.