எனது நண்பர்கள்/நான்கு தலைவர்கள்
“சமயாச்சாரியர்கள் நால்வர்”, ‘சந்தானாச்சாரியார்கள் நால்வர்’ என்று கேள்விப்பட்ட உங்களுக்கு, தமிழ் நாட்டுத் தலைவர்கள் நால்வர் என்பது புதிதாகத் தோன்றலாம். ஆம்; தமிழ்நாட்டின் தலைவர்கள் நால்வர்கள்தாம்; ஐந்தாவது இல்லை.
அவர்கள் தேசபக்தர் வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஈ. வெ. இராமசாமி நாயக்கர், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு ஆவர். இவர்கள் நால்வருக்கும் நாயுடு, நாயக்கர், முதலியார், பிள்ளை என்றே பெயர். அக்காலத்தில் பெயரைக் குறிப்பிடாமல் பட்டத்தைக் குறிப்பிட்டு அழைப்பதே மரியாதையாகக் கருதப்பெற்று வந்தது. இக்காலத்தில் இத்தகைய பட்டங்கள் அவ்வளவுக்கவ்வளவு வெறுக்கப் பெற்று வருகின்றன.
இந்நால்வரும் சாதியால் வெவ்வேறு கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, பிறந்த ஊர்களும், வளர்ந்த வாழ்ந்த விடங்களும் வெவ்வேறு ஆகும். சொல்ல வேண்டுமானால் பிள்ளை தெற்கு, நாயக்கர் மேற்கு. நாயுடு கிழக்கு, முதலியார் வடக்கு என்று சொல்லலாம் என்றாலும் பொதுத் தொண்டு செய்வதில் இந்நால்வரும் ஒருமைப்பட்டவர்கள் ஆவர்.
இந் நால்வரும் முதன் முதலில் தங்கள் பொதுநலத் தொண்டுகளை காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தே தொடங்கினார்கள். அக் காலத்தில் இவர்கள் நால்வரும் பிராமணர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும் பத்திரிகையின் பலமும் பிராமணர்களின் கையிலேயே இருந்ததால், அவர்களும் இந்நால்வரை மட்டுமே விளம்பரம் செய்து, தங்களின் ஆதிக்கத்திற்குப் பயன்படுத்தி வந்தார்கள்.
காலம் செல்லச் செல்ல இந் நால்வரும் உண்மையை. உணர்ந்தார்கள். காலப்போக்கில் இந் நால்வரும் காங்கிரசை வெறுத்து வந்தார்கள். கடைசியாக இந் நால்வருமே காங்கிரசை விட்டு வெளியேறி விட்டார்கள். இதுதான் ஒத்த உள்ளம் என்பது!
பிள்ளை காங்கிரசை விட்டு வெளியேறித் தமிழ்த், தொண்டு செய்தார். நாயக்கர் காங்கிரசைவிட்டு வெளியேறி சமூக சீர்திருத்தத் தொண்டுகளைச் செய்தார். முதலியார் காங்கிரசைவிட்டு வெளியேறித் தொழிலாளர்களுக்குத் தொண்டு செய்தார். நாயுடு காங்கிரசை விட்டு: வெளியே இந்து மகா சபைக்குத் தொண்டு செய்தார்.
பிள்ளைக்குத் தேசபக்தர் பட்டம் கிடைத்தது. நாயக்கருக்கு வைக்கம் வீரர் பட்டம் கிடைத்தது. நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. முதலியார்க்குத் தமிழ்த் தென்றல் பட்டம் கிடைத்தது.
நாயுடு, நாயக்கர், முதலியார் மூவரும் பத்திரிகாசிரியர்களாக விளங்கினார்கள். பிள்ளை நூலாசிரியராக விளங்கினார்.
பிள்ளையிடத்தில் சோக ரசமும், நாயக்கரிடத்தில் கார ரசமும், முதலியாரிடத்தில் சமரசமும், நாயுடுவிடத்தில் மின்சார ரசமும் குடிகொண்டிருந்தன. -
பொது வாழ்க்கையை, வியாபார விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டவர் நாயுடு. பொது வாழ்க்கையினால் தமது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளாமலும், அழித்துக் கொள்ளாமலும் இருப்பவர் முதலியார். பொது வாழ்க்கையில் தன் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவர் நாயக்கர். பொது வாழ்க்கையால் தன் வாழ்க்கையை அடியோடு அழித்துக் கொண்டவர் பிள்ளை.
இந்நால்வரும் காங்கிரசில் இருக்கும்போது மின்மினிப்பூச்சி ஒளியையும், வெளியேறிய பிறகு மின்சார ஒளி விளக்கு ஒளியையும் பெற்றவர்கள்.
இறந்த தமது நண்பர் பிள்ளையைப்பற்றி உயிரோடிருக்கும் நண்பர்கள் மூவரும் கவலைப்பட்டதாகவோ, அவர் குடும்பத்தைக் கவனித்ததாகவோ தெரியவில்லை. சொல்ல வேண்டுமானால், அவரை மறந்தே போனார்கள் எனவும் கூறலாம். இன்னும் கூறவேண்டுமானால் பிள்ளை அவர்களைப் பற்றிய இன்றைய தமிழ் நாட்டு விழிப்பு உணர்ச்சி அவர்களுக்கு வியப்பை அளிக்கும் என்றுகூட கூறலாம். இவர்களே முயன்றிருந்தால் கோவில்பட்டியில் ஒரு கோயிலும், குடும்பத்திற்கு சிறிது கூழும் கிடைத்திருக்கும்.
பொது வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டு செய்ததின் பொருட்டு இந்நால்வரும் பலமுறை சிறை சென்றவர்கள். சிறையில் களைத்தவர் முதலியார். சிறையில் துன்புற்றவர் பிள்ளை. சிறைக்கு மகிழ்ந்தவர் நாயக்கர். சிறையில் செல்வாக்குப் பெற்றவர் நாயுடு.
பிள்ளையின் பேச்சில் நாட்டுப் பற்றுச் சொட்டும். பெரியாரின் பேச்சில் உணர்ச்சி ஒளி தோன்றும். நாயுடுவின் பேச்சில் அரசியல் கலை மிளிரும். முதலியாரின் பேச்சில் தமிழ் மணங் கமழும்.
அறிவாளியின் வாழுங் காலத்தில் அவர்களை அறியாது வாழ்ந்து, மாண்டபிறகு மணிமண்டபங் கட்டுவது தமிழ் நாட்டின் இடைக்கால வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. மாண்டவர்களை மறந்து உயிரோடு இருப்பவர்களுக்கு விழாக் கொண்டாடுவது இன்றைய வழக்கமாக இருந்து வருகிறது. இருந்த போதும், இறந்த போதும் அறிஞர்களைப் போற்றி வாழ்வது பண்டைய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இதுவே சிறப்பளிப்பதாக இருக்கும்.
இந் நால்வருமே 60 ஆண்டுகளை கடந்தவர்கள்.40 ஆண்டுகளாக நற்றொண்டு செய்தவர்கள். இன்னும் சில ஆண்டுகளில் மறைந்த நண்பரைத் தேடிச்செல்லுங் காலத்தை, இருக்கும் மூவரும் தேடிக் கொண்டிருப்பவர்கள்.
இந்நால்வரைத் தமிழ்நாடு பெற்றது. அதனால் ஒரு பெரும்பேற்றைப் பெற்றது. நாட்டு அறிவு, அரசியல் அறிவு, இன அறிவு, மொழி அறிவு ஆகிய நான்கையும் தமிழ் நாட்டிற்கு இந்நால்வரும் தனித்தனியே தந்த, செல்வங்களாகும்.
தமிழ்நாடு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நான்கு இளைஞர்களையே பெற்றது. இன்று நாற்பது. இளைஞர்களைப் பெற்றிருக்கிறது. எதிர் காலத்தில் நானூறு இளைஞர்களையும் பின் நாலாயிரம் இளைஞர்களையும் பெறும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. வாழ்க நால்வர்.
வாழ்க தமிழ் நாடு.
—தமிழர்நாடு, 7-12-1947