என் பார்வையில் கலைஞர்/தம்பிரான் தோழர் ஒரு பன்முகப்பார்வை

தம்பிரான் தோழர்
ஒரு
பன்முகப் பார்வை


கலைஞரை என்னளவில் தம்பிரான் தோழர் என்று அழைப்பதற்கான காரணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சைவசமயக் குரவர்களில் அப்பர் பிரானுக்கும், முழுமுதல் கடவுளான சிவபெருமானுக்கும் உள்ள உறவு நல்லதோர் ஆண்டான் அடிமைத் தன்மை வாய்ந்தது. திருஞான சம்பந்தருக்கும் அதே ஆண்டவனிடம் உருவான உறவு தந்தை மகன் போன்றது. சுந்தரருக்கு ஏற்பட்ட உறவோ தோழனுக்குத் தோழன் போல் இணையானது.

பெரிய புராணத்திலும், இதர தமிழ் புராண நூல்களிலும் வந்துள்ள இந்த மூவரிடமும் ஈசன் நடத்தியதாகக் கூறப்படும் திருவிளையாடல்கள் புராணப் பொய்களே. ஆனாலும், இவை பூஜ்யத்தைப் போல், மெய்மைக்கு வலிமை கொடுக்கும் பொய்கள்.

சுந்தரரை, அவரது திருமணத்தின் போது சிவபெருமான் தனது அடிமை என்று நிரூபித்து அழைத்துச் செல்கிறார். இதில் சுந்தரருக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், வேறு வழியில்லாமல் ஈசன் பின்னால் செல்கிறார். இதைப்போல், நானும் என்னையும் மீறி, கலைஞரின் தமிழிற்கு அடிமையானேன். சுந்தரர் செய்ததாக கூறப்படும் தவறுகளுக்காக அவருக்கு கண்கள் போகின்றன. எனக்கு, தொலைக்காட்சி வேலை போகிறது. சுந்தரருக்கு, சரியாக நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் கிடைக்கிறது. எனக்கு, வானொலி கிடைக்கிறது. சுந்தரர், அந்த ஊன்றுகோலை வைத்து சிவசொரூபமான லிங்கத்தின் மீது வீசியடிக்கிறார். நானும், வானொலியை வைத்தே கலைஞரை அடிக்கிறேன். சுந்தரர், தனது கோபத்தின் உச்சத்தில் சிவபெருமானை வாழ்ந்து போவீரே என்று அங்கத பாணியில் பதிகம் பாடினார். நானும் கலைஞரை தாக்கி, அறிக்கைகள் விடுத்தேன். இறுதியில் சுந்தரத்தோழரும், மகாத்தோழரும், ஒரு மையத்தில் ஒள்றித்தது போல் நானும் கலைஞரும் ஒன்றிக்கிறோம்.

இப்படிக் குறிப்பிடுவதால், கலைஞரை நான் ஆண்டவனாக உயர்த்தி, அந்தச் சாக்கில் என்னையும் ஒரு நவீன சுந்தரராக ஆக்கிக் கொள்வதாக பொருட்படுத்தலாகாது. என்னளவில் தம்பிரான் தோழர் என்று நான் அழைப்பதற்கு கொடுக்கப்பட்ட விளக்கமே இது. ஆகையால், வரிகளுக்குள் வரி தேடலாகாது. கலைஞர் கூட இதைப்பற்றி என்னிடம் கேட்கவில்லை. இதன் முழுத்தாக்கம் அவருக்குத் தெரியாமலும் இருக்காது.

இந்த விளக்கத்தினால் கலைஞரை விமர்சிக்கக் கூடாது என்றும் பொருளல்ல. தொடர்ந்து விமர்சிப்பேன் என்பதற்குதான் இந்த பட்டமே. ஆனால் அது, அவரையும் தமிழகத்தையும் மேன்மைப் படுத்துவதற்காக மட்டுமே.

கலைஞர், என்னைப்போல் எளிய வர்க்கத்தில் இருந்து புறப்பட்டவர். பொதுவாக இளமையில் மனக்காயங்களை உள்வாங்கிக் கொண்ட ஒருவருக்கு இரண்டு தனித்துவக் குணங்கள் இருக்கும். முதலாவதாக அந்தச் சிறுவன் இளைஞராகும் போது பரமசாதுவாக மாறலாம். வாழ்நாள் முழுவதும் இந்தச் சாதுத்தனம் நீடிக்கலாம். இரண்டாவதாக அந்த இளைஞர் தீவிரவாதியாக மாறலாம். இந்த இரண்டில் ஒன்றுதான் அவனுக்கு இருக்க முடியும். ஆனால், கலைஞருக்கோ அல்லது எனக்கோ இந்த இரண்டும், தக்க விகிதாச்சாரத்தில் இருக்கின்றன என்றே கருதுகிறேன். இந்த இரண்டையும் முறியடித்துக் கொண்டு அவர் வீறிட்டிருக்கிறார் என்பதே என் கருத்து.

1969 ஆம் ஆண்டில், முதல் தடவையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது கலைஞர், தன்னை ஒரு கட்சித் தலைவராக அனுமானித்தார். பெருந்தலைவர் காமராசரை முறியடிப்பதற்காக இந்திராவுடன் கூட்டமைத்து அவர் முதலமைச்சர் பதவியை உறுதி செய்துக் கொண்ட போது ஒரு அரசியல்வாதியாகவே தன்னை நினைத்துக் கொண்டார். 1989ல் பதவியேற்றபோது, ஒரு ஒரு தாயகத் தமிழனத் தலைவராக பொறுப்பேற்றார். இப்போது - அதாவது 1996ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற நாளிலிருந்து அவர் எல்லாமாகி, எல்லாமும் அல்லது மாகி அரசியலில் கிட்டத்தட்ட பூரணத்துவத்தை எட்டிவிட்டார் என்றே கருதுகிறேன். இல்லையானால் செல்வி ஜெயலலிதாவை அவர் எதிர்நோக்குகிற விதமே வேறு விதமாக இருக்கும்.

கலைஞரை, அவரது அரசியல் எதிரிகள் பழைய கணக்கை வைத்தே அளக்கிறார்கள். இது தவறானது. ஆரம்பத்தில் தவறாக கருதப்படுகிறவர்கள், இறுதிக் கட்டத்தில் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.

எடுத்துக் காட்டாக, குன்றக்குடியில் ஆரம்பக் கட்டத்தில் மக்களால் ஓரளவு ஒதுக்கப்பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் இறுதிக் கட்டத்தில் அந்த மக்களுக்கு உள்ளூர் கடவுளாகி விட்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, டில்லியில் வழக்கறிஞர்களை அடித்துத் துரத்திய குற்றத்தின் பேரில் தண்ணியில்லா காட்டிற்கு அனுப்பபட்ட கிரேன்பேடிதான் இன்று நாடு போற்றும் காவலராக திகழ்கிறார். கேரள கடலோர கிராமத்தில் பெரும்பாலான மக்களின் ஏச்சுக்கும், எள்ளலுக்கும் உள்ளான ஒரு மீனவப் பெண்தான், இன்று உலகம் போற்றும் மாதா அமிர்தாயியாக மாறியிருக்கிறார்.

ஒருவரை அவரது இறுதிப் பரிணாம வளர்ச்சியை வைத்துத்தான் அளக்க வேண்டும். எல்லோருக்கும் இப்படிப்பட்ட அளவுகோலை வைப்பவர்கள் கலைஞர் என்று வந்துவிட்டால் ஏனோ அந்த அளவுகோலை ஒடித்துப் போடுகிறார்கள். இது விசித்திரமாகவும் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது.

கலைஞர் மகத்தான் இலக்கியவாதி. வைரஸ் ஊடுருவ முடியாத கணிப்பொறி மூளைக்காரர். ஆனாலும், தான் சந்திக்கும் ஒருவரிடம் அவருடைய அளவிற்கு இறங்குகிறார். என்னிடம் அவர் உரையாடுவதைப் பார்த்தால், அந்தக் கணத்தில் அவர் முதல்வர் என்பது மறந்து போகும். அபிராமியைப் பற்றி அந்தப் பெயருக்குரிய பட்டர் குறிப்பிடுவாரே என் அறிவளவானது அதிசயமே என்று. அப்படி கலைஞரும் ஒருவரின் அறிவளவிற்கு அதிசயமாய் தன்னை ஆக்கிக் கொள்கிறார்.

இலக்கியவாதி என்று வரும்போது அரசியல் மேல்தளத்தில் இருந்து குதித்து நம்மோடு சமதளத்தில் நிற்கிறார். இவரது தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் - போன்ற படைப்புகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின், இலக்கியவாதிகள் மேலோங்க, மேலோங்க மேலோங்கும் என்பது எதிர்கால இலக்கிய வரலாற்று உண்மை.

தமிழகத்தில் கலைஞரைப் போல் வேறு எந்தத் தலைவரும் இழிவாகவும், கேவலமாகவும் விமர்சிக்கப்பட வில்லை . இவருக்கு அடுத்தபடியாக பெருந்தலைவர் காமரசரைச் சொல்லலாம். பெருந்தலைவருக்கு இந்த வசவுகள் காதிலேயே ஏறாது. ஆனால், கலைஞர் அப்படியல்ல. சென்சிட்டிவ் என்பார்களே அந்த மாதிரியான வகை. தொட்டால் சிணுங்கி வகைதான். அவர் இழிவு செய்யப்படும் போதெல்லாம், இந்த உணர்ச்சி இலை சுருங்கி போயிருக்கும் என்பது அவரைப் போன்ற எனக்கும் புரியும். ஆனாலும், இவர் அந்த இலைகள் சுருங்கும் போதெல்லாம், அவற்றைத் தாங்கும் செடியாகி விடுகிறார். இந்தச் செடியில் எத்தனை இலைகளைதான், எதிரிகளால் சுருங்க வைக்க முடியும்?

கலைஞர், டில்லி ஆட்சியாளர்களுக்கு பயப்படுவதாக அன்று முதல் இன்று வரை ஒரு குற்றச்சாட்டு உண்டு. அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை என்பதை அறிந்தவர்தான். இதனால், தனக்குள் இருக்கும் ஒரு போராளியை அவர் மறந்து விடுவதும் உண்டு. அதே சமயம், சந்தர்ப்பச் சூழல் அந்தப் போராளியைச் சீண்டும் போது அரசியல்வாதி மறைந்து அந்தப் போராளியே விசுவரூபம் எடுப்பார். இதற்கு நெருக்கடி காலமே சாட்சி.

பெற்ற பிள்ளை சிறையில் சித்ரவதை செய்யப்பட்ட போதும், கட்சிக்காரர்கள் படாதபாடு படுத்தப்பட்ட போதும் கலைஞருக்குள் இருந்த போராளி வெளிப்பட்டு விசுவரூபம் எடுத்தார். நெருக்கடிகால் ஆட்சிக்கு சவாலிட்டார். முன்னாள் அமைச்சர் ராஜாராம் அவர்களின் தம்பியும், சமூகச் சிந்தனையாளருமான டாக்டர் காந்தராஜ், கலைஞரிடம் தான் உடனிருந்து கண்ட இந்த போராளி அனுபவத்தை என்னிடம் சொல்லிச் சொல்லி மெய்மறப்பார். ஆனாலும், இதில் ஒரு வேடிக்கை அல்லது விபரீதம் என்னவென்றால், இயல்புநிலை திரும்பும்போதெல்லாம் கலைஞரை ஆக்கிரமித்த அந்த போராளி அடங்கி ஒரு ஒரு பொதுமைவாதியே தென்படுவார். இதுவே கலைஞரின் பலம். இதுவே கலைஞரின் பலவீனம். தமிழகத்திற்கும் சேர்த்துதான்.

அரசியலில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்படாமல் யதார்த்தமான முடிவுகளை மேற்கொள்ளும் கலைஞர் தோழமை என்று வந்துவிட்டால் அவர் தொண்டர் அடிமையாகி விடுகிறார். லட்சோப லட்சம் கூட்டத்திற்கு மத்தியிலும் அவருள் ஏதோ ஒரு தனிமை தனித்துவமாய் நிற்கிறது. இந்தத் தனித்துவத்தை மறைக்கும் அரசியல் திரை விலக்கப்பட்டால் அதுவே ஒரு ஆன்மீக வடிவமாக வெளிப்பட்டிருக்கும். இரவில் எத்தனை மணிக்கு படுத்தாலும், காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கலைஞர் எழுந்துவிடுவார் என்பார்கள். இதற்குப் பெயர்தான் கர்மயோகம். இதனால்தான் அவர் எதிரிகளின் ஆருடங்களை பொய்ப்பித்தபடி நடை போடுகிறார்.

கலைஞரிடம் குறை இல்லாமல் இல்லை. சமூக மாற்றத்திற்கு அவர் துடிக்கிற அளவிற்கு கலாச்சார மாற்றத்திற்கு அவர் அதிகமாக இயங்கவில்லை. இந்திய தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தமிழ் செத்துக் கொண்டு வருகிறது. தமிழ்ப்பண்பாடு நுனி நாக்கு பண்பாட்டிற்கு வழிவிடுகிறது. இதற்கு கலைஞர் அரசு ரீதியில் தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இலக்கியவாதி என்ற வகையில், தனது பேனா தமிழை மேலோங்கச் செய்தால் போதும் என்று மட்டுமே நினைக்கிறார். உலகமயமாதலில் கலாச்சார சீரழிவுகளை தவிர்க்க முடியாது என்று நினைக்கிறாரோ என்னமோ. ஆனாலும், இந்த சீரழிவுகளை அப்புறப்படுத்தாமல் தமிழை மேன்மைப்படுத்த முடியாது. கலைஞர் அமைத்த குறள்பீடம் இந்த சீரழிவுக்கு எதிரான ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று எதிர்பார்ப்போமாக.

கலைஞர் பதவியில் இல்லாதபோதும் அவரை எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருப்பேன் என்று தெரிவித்ததை குறிப்பிட்டு அவர் பேசுகையில், சோதித்துப் பார்க்க ஆசை என்றார்.

இந்த சோதனைக் கட்டத்தில்தான் இந்த நூலை கொண்டு வருகிறேன். கலைஞர் நிச்சயம் மீண்டும் முதல்வராவார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை . ஆனாலும், சாதியச் சக்திகள் அவரை வீழ்த்திவிடுமோ என்ற ஒரு அச்சமும் வருகிறது. அவர் வெற்றி பெற்ற பிறகு இந்த நூலைக் கொண்டு வந்தால் அது சமர்த்தாக கருதப்படும். அதற்காக அவர் தோற்பார் என்று தேர்தல் வரும் வரைக்கும் காத்திருக்கவும் கூடாது. எனவே, இந்தக் காலக் கட்டத்தில் இந்த நூல். முன்பெல்லாம் கலைஞர் ஆட்சியின் போது கலைஞரை பாதகமாக விமர்சிப்பார்கள். ஆனால், இப்பொதெல்லாம் கலைஞரை விட்டுவிட்டு அரசையும், அதிகாரிகளையும் தான் திட்டுகிறார்கள். பொதுமக்களுக்கு கலைஞரின் இந்த முதிர்ச்சி புரிந்திருக்கிறது. அவரது சிந்தனை முழுவதும் தமிழகத்தை மேன்படுத்த வேண்டும் என்பதில் சுழல்வதை மக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு கட்சிக்காரர்களும், அரசு கட்டமைப்பும் புரிந்துக் கொள்ளவில்லையே என்பதுதான் இன்றைய சோதனை. இதற்காக மக்கள் கலைஞரை சிலுவை சுமக்க விடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கலைஞரை சந்தித்த நாட்களை நான், தோரயமாகத்தான் போட்டிருக்கிறேன். எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை. ஒரு முதல்வரை பற்றிய சந்திப்பு தேதிகளை கூட தெரியாமல் வைத்திருப்பது தவறுதான். அவரோடு சந்தித்த போதெல்லாம் நான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதில்லை. இது கவனக் குறைவு அல்ல. கவனமாக மேற்கொண்ட ஒரு பண்பாடுதான். இந்த சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். எதிர் வரும் தேர்தல்களில், கலைஞர் தோற்பார் என்றும், அப்போது அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சிலர் தாறுமாறாக பேசிவருகிறார்கள்.

கலைஞர் வெற்றி பெற்றால் அது ஐந்தாண்டுகாலமாக நாம் அனுபவித்து வரும் சுதந்திரத்தை வலுப்படுத்துவதாக இருக்கும். ஒருவேளை அந்த வாய்ப்பு நமக்கோ கலைஞருக்கு கிடைக்காது போய் ஆதிக்கச் சக்திகள் தலைவிரித்து தாண்டவமாட முனையும். இதுவே தமிழகத்தில் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தின் துவக்கமாக இருக்கும்.

இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசியர்களும், பேரினவாதிகளும் கலந்துக் கொள்வது சந்தேகமே. கலைஞரின் உள்வட்ட இலக்கியவாதிகளும், வெளிப்படையாக எழுத்தால் போராடுவதும் ஒரு கேள்விக் குறியே. ஆனால், சுயமரியாதைத் தமிழன் என்ற முறையிலும், தமிழ் எழுத்தாளன் என்ற வகையிலும் -

நான் சொல்லாலும், செயலாலும் தொடர்ந்து போராடுவேன்.