என் பார்வையில் கலைஞர்/வைகுண்டர் தலைப்பாகை, வள்ளலார் வழிபாடு

வைகுண்டர் தலைப்பாகை
வள்ளலார் வழிபாடு
கலைஞரே முன் நிற்க...



சென்ற ஆண்டில் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பு வித்தியாசமான காரணங்களுக்கானது. அதோடு ஐந்தாம் தேதி சண்முகநாதன் அவர்களை அணுகினால் மறுநாள் ஆறாம் தேதியன்று, கலைஞரை ஏழாம் தேதி சந்திக்கலாம் என்று செய்தி வந்தது. பொதுவாக எனது வேண்டுகோட்களுக்குப் பிறகு, கலைஞரை சந்திக்க நான்கைந்து நாட்களாவது ஆகும். ஆனால், இந்தத் தடவை ஒருநாள் இடைவெளியில் எனக்கு அனுமதி கிடைத்தது. கலைஞரும் என்னைப் பார்க்க ஆவலாக இருக்கிறார் என்று அனுமானித்துக் கொண்டேன்.

மூன்று முக்கிய காரணங்களுக்காக கலைஞரை சந்தித்தேன். முதலாவது அரசியல் நிகழ்வுகள். இரண்டாவது சாகித்திய அக்காதெமி சமாச்சாரங்கள். மூன்றாவது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒரு அதிகாரியின் நடத்தையைச் சுட்டிக் காட்டி தமிழக அதிகார வர்க்கத்தை அடையாளப் படுத்த வேண்டும் என்பது.

முரசொலி மாறன் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது, தொலைக்காட்சியில் பார்த்த கலைஞரில் இருந்து நான் சந்தித்த கலைஞர் வித்தியாசமாக இருந்தார். உடனே, எடுத்த எடுப்பிலேயே ‘பரவாயில்லை சார், கும்முன்னு இருக்கீங்க, இப்படி உங்களப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்குது’ என்று சொன்னேன். இந்த ‘கும்’ என்ற வார்த்தை எனக்கு எனது சேரித் தோழர்கள் கொடுத்தது. இதை பயன்படுத்தி இருக்கக் கூடாதுதான். ஆனாலும், மொழிவாசனை யாரை விட்டது?

முரசொலி மாறன் உடல்நலக் குறைவின் போது, தொலைக்காட்சியில் கலைஞர் துடித்த துடிப்பைக் கண்டு நான் கண்கலங்கி விட்டதாக குறிப்பிட்டேன். உடனே அவர் அப்பல்லோ மருத்துமனையில் குறிப்பேட்டில் நான் எழுதியதை படித்ததாக தெரிவித்தார். இதில் மாறனின் வாழ்வும், கலைஞரின் வாழ்தலும் தமிழக நலன்களோடு பின்னிப்பிணைந்து உள்ளன என்று எழுதியிருந்தேன்.

எனக்கும், மாறன் அவர்களுக்கு வந்தது போன்ற இதய நோய் சிறிய அளவில் வந்திருப்பதை கலைஞரிடம் குறிப்பேட்டேன். உடனே அவர் துடித்துப் போனார். அதுபற்றி அவர் விசாரிக்கப் போனபோது, நான் எச்சரிக்கையானேன். அமைச்சர் ஆலடி அருணா அவர்களுக்கு இருதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும், ஆனாலும் ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட கலைஞர் அருணாவை, உடனடியாக மருத்துவமனையில் சேரும்படி செய்து விட்டாராம். இதை மனதில் வைத்து எனக்கும் அப்படி ஒரு மருத்துவமனை வாசம் உடனடியாக ஏற்படக் கூடாது என்பதற்காக இலேசுதாங்க அய்யா’ என்று சொல்லிவிட்டு பேச்சை மாற்றினேன். இந்த ‘அய்யா எனது சார் என்கிற வார்த்தையை எப்படியோ மாற்றிவிட்டது. எல்லாம் என் இனிய நண்பர், எந்த மனத்தாங்கலையும் மனதில் வைத்துக் கொள்ளாத அற்புதப் பேச்சாளர். தமிழ்க் குடிமகனின் வாசனைதான்.

முரசொலி மாறனை பற்றிய பேச்சையடுத்து, இன்றைய அரசியல் நிலவரம் பற்றி பேச்சு வந்தது. வரப்போகிற தேர்தல்கள் குறித்து கலைஞரிடம் சில சந்தேகங்கள் கேட்டேன். திமுக பிரச்சாரம் ஆக்கிரமிப்பாக இல்லை. தற்காப்பாக இருக்கிறது என்றேன். கலைஞர் ‘அப்படியில்லை பலர் திறமையாக பேசுகிறார்கள்’ என்றார்.

அரசியல் கட்சிகளின் அணிவகுப்பில், கலைஞர் இந்த அளவிற்கு மௌனம் சாதிக்கக் கூடாது என்றும், ஒருசில நிகழ்வுகளை சுட்டிக் காட்டினேன். கலைஞர் தனது மவுனத்திற்கான காரணங்களை என்னிடம் தெரிவித்தார். அந்தக் காரணங்களை கண்டு நான் அதிர்ந்து போனேன். அவரது மௌனத்திற்கான சூழல் எனக்கு புரிந்தது. இந்த அதிர்ச்சி தரும் செய்தியை, கலைஞர் என்னிடம் பகிர்ந்து கொண்டது என்னைப்பற்றி நான் பெரிதாக நினைக்க வைத்தது. ஜி.கே. எம் அவர்களிடம் பேசிப் பார்க்கலாமா என்றேன். அவர் எனக்கு இளம் வயதிலிருந்தே தெரியும் என்பதையும், நான் சொல்வதை கவனமாகக் கேட்பார் என்பதையும் குறிப்பிட்டேன். கலைஞர் சிரித்துக் கொண்டார். மறுப்புக் கூறவில்லை. வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்பதுதான் அந்தச் சிரிப்பின் பொருள்.

எங்கள் உரையாடல் சாகித்திய அக்காதெமியின் பக்கம் திரும்பியது. இந்த அக்காதெமி எப்படி எல்லாம் மேட்டுக் குடிக்கு ஏதுவாக செயல்படுகிறது என்பதை ஏற்கெனவே தெரிவித்து விட்டேன். மேட்டுக் குடி தாச எழுத்தாளர் ஒருவருக்கு, இந்த அமைப்பு ஐந்துப் பொறுப்புகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. இவர் தொகுத்து அண்மையில் வெளியான நவீன தமிழ்ச் சிறுகதைகளில் திராவிட இயக்க படைப்பாளிகளோ, குறிப்பாக சொல்லும்படியான கலைஞரின் குப்பைத் தொட்டியோ அல்லது சு.சமுத்திரம், கு.சின்னப்ப பாரதி, பொன்னீலன், டி. செல்வராஜ், மேலாண்மை பொன்னுச்சாமி என்ற முற்போக்கு வரிசை படைப்போ இடம் பெறவில்லை. இந்த லட்சணத்தில் இதே எழுத்தாளருக்கு சென்ற நூற்றாண்டின் சிறுகதைகளை தொகுக்கும் பொறுப்பையும், அக்காதெமி கொடுத்ததில் துடித்துப் போனேன்.

இந்தப் பொறுப்பை அவர் காய்தல், உவத்தல் இல்லாமல் செய்யமாட்டார் என்பது தெரியும். ஆகையால், குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இந்த இலக்கிய கொடுங்கோன்மையை கண்டித்து எழுதினேன். முதுபெரும் எழுத்தாளரான வல்லிக்கண்ணன் தலைமையில் எழுத்தாளர் கூட்டணி ஒன்றை உருவாக்கி கூட்டம் போட்டு கண்டித்தோம். இந்த விவரத்தை கலைஞரிடம் நான் தெரிவித்தபோது, குங்குமம் பத்திரிகையில் வந்த கட்டுரைகளை படித்ததாக குறிப்பிட்டார். பெரும்பாலும் எனது கருத்து அவருக்கு ஏற்புடையதாகவே இருந்தது. சாகித்திய அக்காதெமியின் இத்தகைய போக்கை கண்டித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர். தமிழ்க் குடிமகன் அவர்கள் மூலம் மத்திய அரசிற்கும் அந்த அக்காதெமிக்கும் கடிதம் எழுதும்படி, நான் கேட்டுக் கொள்ளலாமா என்று வினவியபோது கலைஞர் சரி என்று ஒப்புக் கொண்டார்.

இத்தகைய முயற்சிகளாலும், எங்கள் போராட்டத்தாலும் சம்பந்தப்பட்ட அந்த எழுத்தாளரோடு மேலும் இரண்டு பேரை நியமித்து ஒரு குழு அமைக்கப்படுவதாக தெரிகிறது. இதனால், தமிழ் இலக்கியத்தை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றிய பெருமிதம் ஏற்படுகிறது. திராவிடப் படைப்பாளிகளுக்கு முதல்முறையாக இலக்கிய நீதி வழங்கப்படுகிறது.

இறுதியாக எங்கள் பகுதி சென்னை மாநகர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் ஒரு உதவிப் பொறியாளரைப் பற்றியது. இவர் ஒரு தொழிற்ச்சங்கத் தலைவராம். இயக்கரீதியில் இல்லாத லும்பத்தனமான தலைவர் என்பதால், இவர் பொதுமக்களை வரி செலுத்துவோராக நினைக்காமல் கப்பம் கட்டுபவராகவே நினைத்தார். எங்கள் தெருவாசிகளில் எழுத்து மூலமான வேண்டுகோளைப் பற்றி ஒப்புக்குக்கூட ஒரு பதில் அளிக்கவில்லை. வாரியத்தில் கேட்டாலோ அவராக செய்தால் உண்டு. அவரை யாரும் அப்படிச் செய்யச் சொல்ல முடியாது என்று இயலாமமையில் தெரிவித்தனர். கலைஞர் அரசு நல்லதை செய்ய நினைத்தாலும் அதை எப்படி ஒரு அதிகாரியால் முறியடிக்க முடிகிறது என்பதை நேருக்கு நேராகப் பார்த்தேன். இதைக் கலைஞரிடம் தெரிவிக்க நினைத்தேன். பல நண்பர்கள் ஒரு முதல்வரிடமா இத்தகைய சின்னப் பிரச்சனையை குறிப்பிடுவது என்று வினவினார்கள். ஆனால், எனது தோழர் செந்தில்நாதன் கலைஞர் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்று குறிப்பிட்டு ஊக்கமளித்தார்

நான் ஒரு குறிப்பு எழுதிக் கொண்டேன். அதில், கிருஷ்ணா நதி நீர் திட்டத்தைப் பற்றி கவலைப்படும் முதல்வரிடம் ஒரு தெருவின் தண்ணீர் விநியோகம் பற்றி குறிப்பிடுவதற்கு வருத்தம் தெரிவித்தேன். பின்னர் அடித்தள மக்களின் உரிமைப் போராட்டமான குழாய் நீர் பகிர்வை, மேட்டுக்குடியினர் குழாய்ச் சண்டை என்று கொச்சைப் படுத்தியதைச் சுட்டிக்காட்டி, மக்கள் முதல்வரான கலைஞர், அப்படி எடுத்துக் கொள்ளமாட்டார் என்ற முன்னுரையுடன் விவரம் தெரிவித்திருந்தேன். இந்த குறிப்பைக் கொடுக்கும் போது எனக்கு கைகள் லேசாக ஆடின. ஆனால், கலைஞரோ இதை இயல்பாக எடுத்துக் கொண்டார்.

வீட்டுக்குத் திரும்பிய மூன்று மணி நேரத்தில் நேர்மையாளரான நிர்வாக இயக்குநர் சிபிசிங் என்னோடு தொடர்பு கொண்டார். நான் அவரைச் சந்தித்தேன். அவருக்கும் தன்னை மிரட்டிக் கொண்டிருந்த சபாடிர்னேட் ஒருவரிடமிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி. குருவி உட்கார பனம்பழம் என்பார்களே அப்படி ஒன்று நடந்தது. இந்த அதிகாரியைப் பற்றி அன்று வெளியான தினமலர் பத்திரிகையில் டீக்கடைப் பேச்சில் ‘சமுத்திரத்திற்கே தண்ணி காட்டியவர்’ என்று அந்த அதிகாரியைப் பற்றி கண்டிக்கும் உரையாடல் இடம் பெற்றிருந்தது. இதை முதல்வரும், அவருடன் பணிபுரியும் உயர் அதிகாரிகளும் படித்திருப்பார்கள். அன்றைக்குப் பார்த்து நான் தான் அந்தச் செய்தியை போடவைத்தது என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதற்கு நான் பொறுப்பில்லை. என்னைப் போல சம்பந்தப்பட்ட அலுவலரிடம் திக்குமுக்காடிய தினமலர் தலைமைச் செய்தியாளரும், எனது நண்பருமான நூருல்லாதான் அந்தச் செய்திக்கு முழுமுதல் காரணம். இப்படி எத்தனைக் காகங்கள் உட்கார்ந்து, எத்தனை பனம்பழங்கள் விழுந்தனவோ. இதனால் தான்ோ என்னவோ, காக்காக் காரணங்களால் சிலர் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.

கலைஞர் மூலம் வள்ளலாரையும், வைகுண்டரையும் மக்களிடையே கொண்டு எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். கலைஞரும் ஒரு ஆரம்பமாக, இந்த இரு ஆன்மீகப் போராளிகளுக்கும், குறும் படங்கள் எடுக்க கொள்கையளவில் முடிவெடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் முதல் தடவையாக இந்த இரண்டு ஆன்மீகப் போராளிகளையும், மக்களிடையே கொண்டு செல்வதற்கு கலைஞர் வாய்ப்பளித்திருக்கிறார். இந்த வாய்ப்புக்கள் ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரூன்ற கலைஞர் நமக்கு தேவைப்படுகிறார்.

சாமிப்தோப்பு வைகுண்டரே கலைஞரின் தலைப்பாகையை வலுப்படுத்தட்டும், வடலூர் வள்ளலாரே தமிழ் வழிபாட்டை செய்விக்கட்டும். இதற்கு கலைஞரே தொடரட்டும்.