என் பார்வையில் கலைஞர்/தேரான், தெளியான் தீரா இடும்பன்

தேரான் - தெளியான்
தீரா
இடும்பன்


இதற்கிடையே, கலைஞருக்கு, என் மீது மனகசப்பை ஏற்படுத்தக் கூடிய மூன்று நிகழ்ச்சிகள் சொல்லிவைத்தது போல் அடுத்தடுத்து ஏற்பட்டன.

தமிழ்க்கல்வி, தமிழ் வழிபாடு போன்ற விவகாரங்களை முன்னிலைப் படுத்துவதற்காக, தோழர் வா.மு.சேதுராமன் அவர்கள், மயிலை கபாலீஸ்வரன் கோயிலுக்கு அருகே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில், புதிய தமிழகத்தின் தலைவர் தோழர் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டார். நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு தமிழில் குடமுழக்கு செய்தவரும், இந்த கோயில்களில் தமிழ் வேள்விகளை நடத்துபவருமான சத்தியவேல் முருகன் உள்ளிட்டப் பலசமய பெரியார்களும், சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். ஒருநாள் முழுவதும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நானும் கலந்துக் கொண்டு உரையாற்றினேன்.

கோயில் கருவறையில் அர்ச்சகர் உள்ளே நிற்பதையும், ஓதுவார் இடஒதுக்கீடாக கருவறைக்கு வெளியே நிற்பதையும் எடுத்துக் காட்டினேன். ஆகையால், வெளியே நிற்கும் ஓதுவார்களை கருவறைகளுக்குள் நிற்க வைக்க வேண்டும். இதற்காக கருவறை நிரப்புப் போராட்டம் ஒன்றை சிறை நிரப்புப் போராட்டம் போல் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்று வலியுறுத்தும் கி.வீரமணி அவர்கள் அரசு கோயில்களில் தமிழ் வேள்விகளை நடத்துவது பொதுப்பணத்தை வீணடிப்பதாகும் என்று எவரையோ திருப்தி படுத்துவதற்காக விடுத்த அறிக்கையையும் குறிப்பிட்டேன்.

இதைவிட இன்னொரு செய்தியையும் முக்கியமாக தெரிவித்தேன். தமிழக அரசின் அறநிலையத்துறையின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான மெய்கண்டதேவன், அந்த துறையில் இருந்து மாற்றப்பட்டார். இவர் தமிழ் வழிபாட்டில், அளப்பரிய நம்பிக்கை கொண்டவர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டவர். இப்படி அறநிலையத் துறையோடு முழுமையாக ஒன்றிப்போன நேர்மையாளரான மெய்கண்ட தேவன், தமிழ் வழிபாடு, தமிழ் கல்வி வற்புறுத்தப் படும் போது, கலைஞர் அரசால் மாற்றப் பட்டிருப்பது கன்டணத்துக்கு உரியது என்றேன். இதனால், நான் பிரச்சனையிலிருந்து விலகிப் போவதாக அமைப்பாளர்கள் மத்தியில் ஒரு சின்ன சலசலப்பும், என் கருத்துக்கு ஆதரவாக கூட்டத்தினர் மத்தியில் பெரிய ஆரவாரமும் ஏற்பட்டன.

இரண்டாவதாக, கவிஞர் சாலய் இளந்திரையன் அவர்கள் 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாலாம் தேதி காலமானார். கலைஞரின் வீட்டிற்கு இரண்டு வீதிகள் தள்ளி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு எதிர்ப்பக்கம் உள்ள திருவீதியான் தெருவில் வாழ்ந்து வந்தவர். டில்லி பல்கலைக்கழக வேலையில் இருந்து சுயஓய்வு பெற்று, தனது துணைவியார் சாலினியுடன் தமிழகத்தில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்ற நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் தமிழறிஞர்கள் கூட அவரை அதிகமாக கண்டுக்கவில்லை. இவரது பேச்சின் தீவிரத் தன்மையைக் கண்டு பல தமிழ் அறிஞர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். எனது வளர்ப்பு மகள் நாவலை டில்லி பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைத்தவர்.

என்றாலும், எனக்கும் அவருக்கும் தத்துவார்த்த ரீதியில் ஒத்துப் போனது இல்லை . எம்.ஜி.ஆர் காலத்தில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் இவரது துணைவியார் எனது கதையைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாதது எனக்கு ஆழ்ந்த வருத்தம். அதிலிருந்து நேரில் பார்த்தால் கூட ஒதுங்கிக் கொள்வோம். ஆனாலும், நிழல் முகங்கள் என்ற நாவலில் சாலையாரைப் பற்றி சிறப்பாக குறிப்பிட்டு இருந்தேன். இதனால், ஒருநாள் தொலைபேசியில் எனக்கு நன்றி சொல்லவில்லை என்றாலும் அந்த நாவலைப் பற்றி விசாரித்தார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சாலய்யார் மீது கும்பகோணம், சென்னை என்று பல்வேறு இடங்களில் வழக்குகள் போடப்பட்டிருந்தன. இதய நோயால் பீடிக்கப்பட்ட இவர் இதனால் பல்வேறு நீதிமன்றங்களுக்கு அலைகழிக்கப்பட்டார். கலைஞர் ஆட்சிக்கு வந்த விட்டதால், இது குறித்து நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தொலைபேசியில் அப்போது கேட்டுக் கொண்டார். நானும் சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா அவர்களை அணுகி சாலய்யாரைப் பற்றி எடுத்துரைத்தேன். அமைச்சர் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கலைஞர், சாலையார் மீது போடப்பட்டிருந்த அரசு வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்ற தகவலை, அரசு அறிவிக்கும் முன்பே சாலய்யாருக்கு நான்தான் தொேைபசியில் தெரிவித்தேன். மகிழ்ந்து போனார்.

சாலய்யாரின் மரணம் கேட்டு நானும் அவரது வீட்டிற்கு சென்றேன். சமூகச் சிந்தனையாளர்களான, திருவாளர்கள் ஆனைமுத்து, பழ.நெடுமாறன், இன்குலாப், தோழர் சசெந்தில்நாதன், அருகோபாலன், தமிழ்ச் சங்க சுந்தரராஜன், முகம் மாமணி போன்றவர்கள் வந்திருந்தார்கள்.

என்றாலும், அண்டை வீட்டுக்காரரான கலைஞர் சாலய்யாருக்கு இறுதி மரியாதை செலுத்த வரவில்லை. ஒரு அனுதாப தந்தி மட்டுமே அடித்திருந்தார். இதை அங்குள்ள தமிழறிஞர்கள் அனைவருமே சுட்டிக் காட்டினார்கள். அதே தெருவில் அப்போதே நடைபெற்ற அனுதாப கூட்டத்தில் நான் கலைஞர் வராததை கண்டித்துப் பேசினேன். ஒரு வெள்ளைக்கார அரசில், தவத்திரு குன்றக்குடி அடிகள் காலமான போது முதல்வர் ஜெயலலிதா அனுதாப அறிக்கை வெளியிடாததையும், தவத்திரு. கிருபானந்த வாரியார் மரணமான போது சட்டப் பேரவையில் அனுதாப தீர்மானத்தை நாவலர் கொண்டு வந்த போது இந்த அம்மையார் அலட்சியமாக பேரவையை விட்டு வெளியேறியதையும் சுட்டிக் காட்டினேன்.

இதே மாதிரி கருப்பு அரசாங்கத்தின் தலைவரான கலைஞரும், அதே மாதிரி நடந்துக் கொண்டது தவறானது என்று கண்டித்தேன். அதே சமயம், கலைஞர் சாலய்யார் மீது போடப்பட்ட அரசு வழக்குகளை திரும்ப பெற்றுக் கொண்டதையும் சுட்டிக் காட்டினேன். கலைஞர் வராததற்காக, அவரை தனிப்பட்ட முறையில் என்னிடம் நோகடித்து பேசிய அத்தனை பேரும் அனுதாபக் கூட்டத்தில் அவரைப் பற்றி வாயைத் திறக்கவில்லை. என்னையடுத்து பேசிய பெருஞ்சித்தனார் மகள் மட்டும் தான் கலைஞர் வராததை கண்டித்தார். கலைஞர் வந்திருந்தால் இந்தப் போராளித் தமிழர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்திருக்குமே என்று நினைத்தேன். ஆனாலும், அனுதாபக் கூட்டம் விடுதலை புலிகளின் ஆதரவு கூட்டம் போல்தான் நடைபெற்றது. இதை மனதில் வைத்துதான் கலைஞர் வரவில்லையோ என்னமோ. அதோடு, சாலையாரும் தன் மீது போட்ட வழக்குகளை விலக்கிக் கொண்ட கலைஞரை ஒரு எட்டு அவர் வீட்டிற்கு நடந்து நன்றி சொல்லியிருக்கலாம் என்றும் தோன்றியது. ஆனாலும், கலைஞர் வந்திருக்க வேண்டும் என்பதே இப்போதும் என் கருத்து.

மூன்றாவதாக முரசொலி மாறன் அவர்களுக்கும், எனக்கும் கலைஞர் இல்லத்திலேயே ஒரு மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்ட இலா பத்திரிகை சார்பில் கலைஞரிடம் ஒரு நேர்காணல் வாங்க வேண்டும் என்று அதன் ஆசிரியர் சின்னப்ப பாரதி என்னிடம் தெரிவித்தார். நான் சண்முகநாதன் அவர்களிடம் தொடர்பு கொண்டு, கலைஞரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்ட போது அவர் முதலில் கேள்விகளை நான் எழுதி கொடுத்துவிடலாம் என்றும், பிறகு கலைஞர் பதிலளித்ததும் அவரை நேரில் சந்தித்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இது நல்ல ஏற்பாடாகவே எனக்குத் தோன்றியது.

1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி, கேள்விப் பட்டியலோடு கோபாலபுரம் சென்று சண்முகநாதனிடம் அந்த பட்டியலை ஒப்படைத்து விட்டு திரும்பி நடந்த போது, வரவேற்பரையின் வலது பக்கம் முரசொலி மாறன் ஒரு நோட்டில் குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமியும், துரைமுருகனும் நின்று கொண்டிருந்தார்கள். அன்று கணினி தமிழ் தட்டெழுத்து முறைமைகளை உலகளவில் ஒருமைப்படுத்தும் கருத்தரங்கில் கலைஞர் பேசுவதால் பார்வையாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

ஆர்க்காடு வீராசாமி அவர்கள் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். எனது பாலைப்புறா நாவலை வெளியிட்டவர். பொதுவாக பேசமாட்டார். ஆனால், நண்பரை அங்கீகரிப்பது போல் ஒரு சிரிப்புச் சிரிப்பார். நான் வணக்கம் போட்ட போது லேசாய் சிரித்தார். அமைச்சர் துரைமுருகன், எனது கல்லூரிக் காலத்தில் இருந்தே எனக்கு பரிச்சயமானவர். மாணவ அரசியலில் எதிரும், புதிருமாக நின்றவர்கள் நாங்கள். எங்கே பார்த்தாலும் என்னோடு இன்முகமாக பேசுவார். எனது கதைகளில் ஒன்றை குறிப்பிடுவார். அன்று கூட சுபமங்களா சார்பில் இளையபாரதி வெளிக்கொண்டு வந்த கலைஞர் முதல் கலாப்பிரியா வரை என்ற நூலில் எனது நேர்காணல் நன்றாக வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அவருக்கு அன்போடு நன்றி தெரிவித்து விட்டு இன்னும் தலையை நிமிர்த்தாத முரசொலி மாறன் அவர்களை பார்த்து கும்பிடு போட்டேன். அவரோ என்னை லேசாய் நிமிர்ந்து பார்த்துவிட்டு அலட்சியப் படுத்துவது போல் மீண்டும் எழுதத் துவங்கினார். எனக்கு என்னவோ போல் இருந்தது.

இப்படி உரிமை உணர்வு மேலோங்கியதற்கு காரணமும் உண்டு. முரசொலி மாறன் அவர்கள் பல்லாண்டு காலமாக பழக்கமானவர். குங்குமம் இதழ் ஆரம்பிக்கப்பட்ட போது, அதை எப்படி பிரபலப் படுத்தலாம் என்பதற்கு என்னையும் தனியாக வரவழைத்து ஆலோசனை கேட்டவர். ஒரு தடவை ‘சமுத்திரம்! ஒரு எழுத்தாளருடைய நாவலை குங்குமத்திற்கு சரிவராது என்று நிராகரித்தோம். ஆனால், அந்த எழுத்தாளர் இது உங்களுக்காக எழுதிய நாவலாச்சே’ என்று அழாக்குறையாக சொன்னபோது அதைப் பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். உங்கள் நாவலான உயரத்தின் தாழ்வுகளை தொடர்கதையாய் பிரசுரிப்பது என்று தீர்மானித்தோம். ஆனால், நீங்கள் தொலைபேசியில் பேசிய பேச்சைக் கேட்டதும், அதை நிராகரித்தோம்’ என்று சிரித்துக் கொண்டே நயம்பட சொன்னவர். அவர் சொன்ன விதத்தில் எனக்கு கோபமோ வருத்தமோ ஏற்படவில்லை.

புதுடில்லியில், என்னை தனது குடியிருப்புக்கு வரவழைத்து சிற்றுண்டிக் கொடுத்தவர். இன்னும் நன்றாகவே நினைவு இருக்கிறது. ஒரு சில நண்பர்களுக்கு, என்னை எழுத்தாளன் என்ற முறையில் அறிமுகம் செய்தார்.

மத்திய அமைச்சரானபோது செய்திக்காக எந்த சமயத்திலும் அப்போதைய தொலைக்காட்சி ஆசிரியரான என்னை அணுகாதவர். ஜென்டில்மேன் மினிஸ்டர். அமைச்சர் என்ற முறையில் நான் பேட்டி காண போகும்போது கூட ‘எனக்கு எந்த செய்தியும் வேண்டாம் ஆள விடுங்க சமுத்திரம்’ என்று அன்போடு கூறியவர். அப்படிப்பட்ட மாறன் என்னை பாராமுகமாக பார்த்தபோது, எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அந்த வருத்தத்தை வெளிக்காட்டுவது என்று தீர்மானித்தேன். இப்படியாக எங்கள் உரையாடல் இருந்தது.

‘என்ன மாறன் சார்!... நாம நீண்டகால நண்பர்கள் ஐந்தாண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறோம். உங்களுக்கு கும்பிடு போடுறேன் ஒப்புக்குக் கூட நீங்க. பதில் வணக்கம் போடலியே?’

‘நீங்க முரசொலி படிக்கிறதே பாவமுன்னு சொல்றீங்க. உங்க கிட்ட நான் எதுக்கு பேசணும்?’

‘நான் எப்ப சார் பேசினேன்? நான் அப்படியெல்லாம் விமர்சிக்கலியே. நான் முரசொலிய படித்தால் தான்ே விமர்சிக்கிற பிரச்சனை வரும்.’

‘இல்ல. நீங்க பேசியிருக்கிங்க. என்கிட்ட பேப்பர் கட்டிங் இருக்கு.’

‘எந்த பேப்பர் சார்.’

‘எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா, பேசியிருக்கிங்க.’

மாறன், மேற்கொண்டு, என்னிடம் பேச விரும்பாதது போல் மீண்டும் எழுதத் துவங்கினார். ஒருவேளை கலைஞருக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள உறவு மாற்றமோ அந்தரங்கமான தொலைபேசி உரையாடல்களோ அவருக்கு தெரியாமல் கலைஞரை நான் அண்டிப் பிழைக்க வந்ததாக நினைத்து இருக்கலாம். எனக்கு ஆத்திரம் வந்தது. இப்படிக் கத்தினேன்.

‘லுக் மிஸ்டர் மாறன்!, நல்லா கேளுங்க சார்.. உங்ககிட்ட எப்பவுமே நான் உதவிக்கு வந்தது இல்ல. இனிமேலும் வரமாட்டேன். ஆனால், அரைகுறை உண்மை பாதிக்கிணறு தாண்டுவது மாதிரி என்பதை மட்டும் புரிஞ்சுக்கங்க. நம்ம ஆட்கள் கிட்ட உள்ள கோளாறே தீர விசாரிக்காம ஒரு முடிவுக்கு வாரதுதான்’

ஆர்க்காட்டாரும், துரைமுருகனும் அதிர்ந்து போய் என்னையும், மாறனையும் மாறிமாறிப் பார்த்தார்கள். மாறன் நான் பேசுவதை கேட்டுவிட்டு பிறகு எழுதத் துவங்கினார். எனக்கு, பதிலாக ஒரு மென்சொல்லோ, அல்லது சுடுசொல்லோ பேசவில்லை. ஆனாலும், நான் சொன்னதை உன்னிப்பாக கவனித்தார். ஒருவேளை, காலங்காத்தாலேயே இந்த ஆள், வம்புக்கு வரானே என்று மனதிற்குள் நினைத்து இருக்கலாம்.

இந்த மூன்று சங்கதிகளும் கலைஞரின் காதுக்கு போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருவேளை எனக்கு அதிகமாக இடம் கொடுத்து விட்டோமோ என்று கூட கலைஞருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். என்னால் கலைஞர் உறவு அறுபட்டு போகும் என்று நினைப்பதற்கே ஒருமாதிரி இருந்தது.

இந்தச் சமயத்தில் தமிழ் கல்வியாளர்கள் மாநில அரசு விடுத்த தமிழ்க் கல்வி ஆணைக்கு, முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக அறிவாலயம் சென்றார்கள். இதற்கு அழைக்கப்பட்டு இருந்த, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் செந்தில்நாதன், என்னையும் அந்த குழுவில் சேரும்படி சொன்னார். எப்போதுமே அவரும், நானும் ஒன்றாக செயல்படுகிறவர்கள். ஒரேமாதிரி சிந்திக்கிறவர்கள். நானும் கலைஞரை நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்பதற்காக அறிவாயலத்திற்குச் சென்று, குழுவோடு சேர்ந்து கொண்டேன்.

அந்தக் குழுவோடு நானும், கட்சித் தலைவர் கலைஞர் அறைக்குள் சென்றேன். கலைஞர் பொதுப்படையாகப் பேசிவிட்டு குழு உறுப்பினர்களுக்கு விடை கொடுத்தார். அப்போதுதான் கலைஞர் என்னை பார்த்திருக்க வேண்டும். ‘அடடே சமுத்திரமா!’ என்று அன்புதழுவக் கேட்டார். நான் தனித்து நின்று உரையாட விரும்பாமல், குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கொண்டு வெளியேறினேன். என் மனஉளைச்சலுக்கு ஒரு விமோசனம் ஏற்பட்டது. இப்படிச் சொல்வதால் தமிழ் விவகாரத்தையும் எனது சொந்த விவகாரத்தையும் நான் இணையாக கருதுவதாக நினைக்க வேண்டாம். உண்மையை உண்மையாகச் சொல்ல வேண்டும் என்பதால் இங்கே இதைக் குறிப்பிடுகிறேன்.