என் பார்வையில் கலைஞர்/தோழமை என்ற ஒரு சொல்லாக நம்பூதிரிபாத், கலைஞர்

தோழமை என்ற
ஒரு சொல்லாக
நம்பூதிரிபாத்-கலைஞர்


1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி நானும் தோழர் சின்னப்ப பாரதியும் கலைஞரைச் சந்திக்க அனுமதிக் கிடைத்தது.

அன்று காலை ஒன்பது மணிக்கு கலைஞரை சந்திக்க அனுமதி கிடைத்தது. காலை எட்டேமுக்கால் மணிக்கே சென்றுவிட்டோம். அன்றைக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.பா என்று அன்போடு அழைக்கப்படும் முனைவர் சி.பாலசுப்பிரமணியம் அதிகாலையில் காலமாகி விட்டார். இனிமையாக இயல்பாக பழகும் தமிழறிஞர். எனது சத்திய ஆவேசம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில், இந்த படைப்பைப் பற்றி, அவர் விலாவாரியாக பேசியது இன்றும் இனிமை நினைவுகளாக நிழலாடுகின்றன. அதே சிபா அவர்கள் எங்கள் சந்திப்பு நாளில் அதிகாலையில் மரணமாகி விட்டார். கலைஞரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பார்வையாளர்கள் நேரத்தை தவிர்க்க முடியாதபடி ரத்து செய்து விட்டார்.

நாங்கள் கலைஞர் இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்ததும் சண்முகநாதன் அவர்கள் நிலைமையை விளக்கி விட்டு, ‘எதற்கும் போய்ப் பார்க்கிறேன்’, என்ற தெரிவித்து விட்டு கலைஞரை சந்திக்க சென்றார். ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து எங்கள் இருவரை மட்டும் சந்திக்க கலைஞர் அனுமதி கொடுத்ததாக தெரிவித்தார். விரைவாக பேசிவிட்டு வந்து விடும்படியும் அறிவுரை கூறினார். கலைஞரை சந்திக்க முன் அனுமதி பெற்றிருந்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், கட்சித் தலைவர்கள், மேற்கு வங்க அரசின் உயர் அதிகாரி ஒருவர் ஆகியோர் திருப்பி அனுப்பப் பட்டார்கள். அவர்கள் அப்படி அனுப்பப் பட்டதில் எனக்கு சந்தோஷம் வரக்கூடாதுதான் ஆனாலும் வந்தது. எங்களை மட்டுமே பார்க்க கலைஞர் அனுமதித்து இருக்கிறார் என்பதில் ஒரு பெருமிதம். அதே சமயம் சி.பாவின் மரணத்தால் ஒரளவு அதிர்ச்சியுற்ற நானும் கலைஞருடன் உரையாடுவதற்காக மனதில் வரித்திருந்த உரைப் பொருள் பட்டியலை உடனடியாக நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை .

வழக்கம்போல் கலைஞர், எங்களை எழுந்து நின்று வரவேற்றார். நான் சின்னப்ப பாரதி அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். உடனே கலைஞர் தெரியுமே... இவரோட தாகத்தை படித்திருக்கேன்’ என்றார். இந்த தாகம் நாவல், மக்கள் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனை. எளிமையான நடையில் அன்றைய தஞ்சை மாவட்டத்தில் மிட்டாமிராசுகள், விவசாய தொழிலாளர்களுக்கு சவுக்கடி, சாணிப்பால் கொடுத்து கொடுங்கோன்மை செய்ததையும், இந்த கொடுமைகளை மீறி அவர்கள் போர்க்கொடி தூக்கியதையும் சித்தரிக்கும் நாவல். நிச்சயம் கலைஞருக்கு பிடித்திருக்கும்.

பிறகு கலைஞரிடம் ‘சார், இவரு நம்பூதிரிபாத் அவர்களோடு தோழமையோடு பழகுகிறவர். முதலைமைச்சரான கலைஞர் எப்படி இருப்பாரோ என்று உங்களைச் சந்திக்க தயங்கினார். நான்தான் ‘கலைஞர் இன்னொரு நம்பூதிரிபாத்... சந்தித்துத்தான் பாருங்களேன் என்று வற்புறுத்திக் கூட்டி வந்தேன்’ என்றேன். கலைஞர் சிரித்துக் கொண்டார். பின்னர் அவரிடம், அவரது அண்ணா இரங்கற்பா பிரசுரமான இலா பத்திரிகையை காட்டினோம்.

அந்த ஆங்கில மொழியாக்கத்தை ஒரு நிமிடம் மேலோட்டமாக பார்த்த கலைஞர் அந்த கவிதையில் முக்கியமான சில பகுதிகள் விடுபட்டு போய்விட்டன என்று போகிற போக்கில் சொல்வது போல் சொன்னார். உடனே மொழிபெயர்ப்பாளர் ஆக்கிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டோம் என்றும், மீண்டும் அதை முழுமையாக வெளியிடுவோம் என்றும், குறிப்பிட்டு விட்டு, கலைஞர் போய் வாருங்கள் என்று சொல்லும் முன்பே நாங்கள் எழுந்தோம். காலத்தின் அருமை கருதும் கலைஞர் எங்களை மட்டும் பார்த்ததற்கு நன்றி சொல்லிக் கொண்டோம். கலைஞரும் எழுந்து நின்று வழியனுப்பினார்.

பொதுவுடைமை தலைவர்களோடு ‘தோழரே’ என்று இணையாக பழகும் சின்னப்ப பாரதியே அசந்து போனார். ‘என்னங்க கலைஞர் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். எவ்வளவு அன்பாக இருக்கிறார்’ என்று கோபாலபுரத்தில் இருந்து ராதாகிருஷ்ண சாலை வருவது வரைக்கும் சொல்லிக் கொண்டே இருந்தார். பிறகு என் சட்டையைப் பிடித்து இழுத்து நிற்க வைத்து ‘என்ன சமுத்திரம்! கலைஞர் கிட்ட போய் அவ்வளவு சர்வ சாதாரணமா பேசுறீங்களே. நான் அவர் பார்க்க தயங்கினேன் என்பதை கூட சொல்றீங்களே’ என்று ஆச்சரியப்பட்டார். உடனே நான், ‘ஒரு மகத்தான் தலைவரிடம் அப்படி சொல்லக் கூடாது. ஆனால், கலைஞர் மாபெரும் தலைவர் மட்டும் அல்ல... தலைசிறந்த இலக்கியவாதி. நான் பேசவில்லை; அவர்தான், தனது சொல்லாலும் செயலாலும் என்னை அப்படி பேச வைக்கிறார்’ என்று குறிப்பிட்டேன்.

பொதுவுடைமை கட்சிக்காரர்கள் அரசியல் ரீதியாக கலைஞரிடம் இணைவதும் உண்டு. பிரிவதும் உண்டு. பலமாக ஆதரிப்பதும், கடுமையாக சாடுவதும் அரசியல் மாற்றங்களை சார்ந்து உள்ளன. ஆனால், இலக்கியம் என்று வரும் போது கலைஞரிடம் அவர்களுக்கு மகத்தான் மரியாதை உண்டு.

இப்போது தீக்கதிர் பத்திரிகையில் கலைஞரின் அரசியல் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், முதல்வரின் மிகச்சிறந்த புதினங்களில் ஒன்றான தென்பாண்டிச் சிங்கம் - கேரளத்தில் உள்ள கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை வகுப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டிருக்கிற தகவலை நான் குறிப்பிட்டதும் மறுநாள் அதை மிகப்பெரியச் செய்தியாக தீக்கதிர் வெளியிட்டது. இதற்காக தீக்கதிர் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்த போது ‘என்ன தோழரே! கலைஞர் மாபெரும் இலக்கியவாதி என்பதில் நாங்கள் எப்போதுமே அணி பிரிந்தததில்லை. அற்புதமான இலக்கியவாதி ஆயிற்றே. அரசியல் வேறு இலக்கியம் வேறு என்று விளக்கினார்.