என் பார்வையில் கலைஞர்/மஞ்சள் துண்டு ஒரு மஞ்சள் விமர்சனம்

மஞ்சள் துண்டு
ஒரு
மஞ்சள் விமர்சனம்


1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் கலைஞரை மீண்டும் சந்தித்தேன்.

வள்ளலாருக்கு அமிர்தசரஸ் பொற்கோவில் போல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்பு கொடுத்த குறிப்பை கலைஞரிடம் நினைவுப்படுத்தினேன். பிறகு நகைச்சுவையாக ‘நீங்கள் போட்டிருக்கும் மஞ்சள் துண்டை விட, வள்ளலார் உங்களுக்கு அதிகமாக வலிமை கொடுப்பார்’ என்று சொல்லி விட்டு நாக்கைக் கடித்தேன். என்னிடம் அவர் காட்டிய தோழமையில் அவர் மகத்தான் தலைவர் என்பதையும், தமிழகத்தின் முதல்வர் என்பதையும் மறந்து போய் சிறிது அதிகமாகவே பேசிவிட்டேன்.

கலைஞர், தோளில் மஞ்சள் துண்டு அணிவதை, பகுத்தறிவு வாதிகள் என்று கூறிக் கொள்கிறவர்கள், மேடைகளில் கிண்டல் அடித்தும், பத்திரிகைகளில் எழுதியும் வந்த வேளை. உடை என்பது உடம்பு முழுவதையும் நாகரீகமாக மறைக்கும் வரை, அது ஒருவரின் சொந்த விவகாரம் என்பதை, வேண்டும் என்றே மறந்து போய், கலைஞரை இந்தப் பேர்வழிகள் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள். இதன் தாக்கத்தாலோ என்னமோ நானும் மஞ்சள் துண்டை குறிப்பிட வேண்டியது ஆயிற்று. ஆனாலும், கலைஞர் அசரவில்லை. மஞ்சள் துண்டை போட்டிருப்பதை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கப் போனார். நான் அவர் பேச்சை இடைமறித்து இப்படிக் கூறினேன்.

‘சார், நீங்க மஞ்ச துண்ட போடுறத கிண்டல் செய்றவங்க பகுத்தறிவுக்காக அப்படி வாதாடல. எப்படியாவது உங்கள் இந்த மஞ்சள் துண்ட எடுக்க வைச்சிட்டு, அப்படியாவது நீங்க தலையை போட்டுட மாட்டீர்களா என்று எதிர் பார்க்கிற நமது அரசியல் விரோதிகள் அவர்கள். மஞ்சள் துண்டு ஒரு பெரிய விவகாரம் அல்ல. போன வருஷமே உங்களுக்கு ஆயுள் முடியப்போகுதுன்னு நாள் குறித்த எதிரிகளுக்கும் இந்த மஞ்சள் துண்டு மைய பேர்வழிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. எந்த துண்டு போட வேண்டும் என்பது உங்கள் உரிமை. இதை குறை கூறுகிற எவரும் ஒரு காட்டுமிராண்டிதான்’ என்று பொரிந்து தள்ளி, அந்த விவகாரத்திற்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தேன்.

கலைஞர் என் கருத்தை ஆட்சேபிக்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. சின்ன சிரிப்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்தார்.

பல்வேறு அரசியல் - சமூக விவகாரங்கள் குறித்து கலைஞரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் வெளியே சொல்ல முடியாத சில விவகாரங்களை என்னிடம் விளக்கினார். நான் நெகிழ்ந்து போனேன். அவர் அப்போது கூறியவை எல்லாம் பின்னர் சம்பவங்களாகவும், செய்திகளாகவும் வெளிப்பட்டன. நான் என்னையே நம்ப முடியாமல் கலைஞரை நம்பிய படியே பார்த்தேன். இந்த துஷ்ட பிள்ளையிடமும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை, என்னை மலைக்க வைத்தது.

பின்னர், கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள வைகுண்டசாமிக்கு ஒரு நல்ல கோட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தின் எளிய மக்கள் அனைவரும் வைகுண்டர் பக்கம் நிற்பார்கள் என்றேன். உடனே கலைஞர் ‘மெர்கண்டைல் வங்கி விவகாரத்தை நல்ல முடிவுக்கு கொண்டு வரப்போகிறேன் சமுத்திரம்’ என்றார். உடனே நான் ‘ஓட்டுப் போடக் கூட போகாத பணக்காரர்களுக்கு நீங்கள் செய்வது எப்படியோ.. ஆனால், வைகுண்ட சாமியை மேன்மைப் படுத்தினால் எளிய மக்கள் குறிப்பாக பனையேறி மக்கள், உங்கள் பக்கம் கட்டுக் கோப்பாக நிற்பார்கள். அதோடு வைகுண்டர் வள்ளலாருக்கும், நாராயண குருவிற்கும் முன்பே மாபெரும் புரட்சியாளராக இருந்தவர்’ என்று குறிப்பிட்டேன். கலைஞரும் தமிழக அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்க் குடிமகன் அவர்களை, சாமித் தோப்பிற்கு சென்று முதலில் பார்வையிடச் சொல்வதாகக் குறிப்பிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமித்தோப்பு என்ற இடத்தில் மாபெரும் ஆன்மீகப் போராளியாக உதித்தவர் வைகுண்டர். வள்ளலாருக்கும், நாராயணகுருவிற்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து அவர்களுக்கு இணையாக ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர். அவர் வாழ்ந்த பத்தொன்பதாவது நூற்றாண்டில் நம்பூதிரிகள், பிராமணர்கள், வெள்ளாளர்கள் ஆகியோர் தவிர அனைத்து சாதியினரும் முட்டிக்கு கீழே வேட்டி கட்டவோ, தோளில் துண்டு போடவோ, நல்ல பெயர் வைத்துக் கொள்ளவோ உரிமை உள்ளவர்களாக இல்லை. முடிசூடும் பெருமாள் என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட வைண்டருக்குக் கூட, மேல் சாதியினரின் அச்சுறுத்தல் கலந்த வற்புறுத்தலில் முத்துக்குட்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதோடு, அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்கள் இடுப்புக்கு மேலே எந்த துணியும் போடக் கூடாது என்று இந்து மதத்தாலும், அதன் எடுபிடியான அரசாலும் தடைசெய்யப் பட்டிருந்த காலம். இந்தக் காலக்கட்டத்தில் தோன்றிய வைகுண்டர் பிராடஸ்ட் கிறிஸ்துவ என்ற பாதிரிகளான தெளவே, சார்லஸ் மால்ட் போன்றவர்களால் துவக்கப்பட்ட தோள்சீலைப் போராட்டத்திற்கு அழுத்தம் கொடுத்தவர். துண்டு போட உரிமையற்ற எளியவர்களுக்கு தலைப்பாய் கட்டிவிட்டவர். ஆடு வெட்டியும், மாடு வெட்டியும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் மாய்ந்து கொண்டிருந்த எளிய மக்களை அருவ வழிபாட்டிற்கு கொண்டு வந்தவர். ‘குகையாளப் பிறந்தவனே என் குழந்தாய் எழுந்திருடா என்று கவிமுழக்கம் இட்டவர். இந்த முழக்கம்தான் திராவிட இயக்கத்தின் குறிப்பாக கலைஞரின் தமிழ் முழக்கமானது. இந்த வகையில், வைகுண்டரைப் போலவே எளிய குடியில் பிறந்த கலைஞர், அந்த சாமித்தோப்பு ஆன்மிகப் போராளியின் ஒரு நவீன, சமூக பதிப்பு என்பதே என் கருத்து. இதை கலைஞருக்கு எடுத்துரைப்பதில் எந்த அளவிற்கு வெற்றிப் பெற்றேனோ எனக்குத் தெரியாது. இதுவரையும் சாமித்தோப்பு ஆசாமித் தோப்பாகவே இருக்கிறது.