என் பார்வையில் கலைஞர்/சாண்ஏறி முழம் சறுக்கிய தேர்தல்கள்

சாண் ஏறி
முழம் சறுக்கிய
தேர்தல்கள்...


நான், கலைஞரை மீண்டும் 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கலைஞரை மீண்டும் கோபாலபுரத்தில் சந்தித்தேன்.

இதே ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா அணி 30இடங்களையும், கலைஞர் அணி 10இடங்களையும் பெற்று மத்திய அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்பட்ட காலக்கட்டம். ஜெயலலிதா கலைஞர் அரசை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிரட்டிக் கொண்டிருந்த வேளை.

இந்த தேர்தல்களுக்கு முன்பு, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.கே. ரங்கராஜன் அவர்களின் அங்கீகாரத்தில் கோவை, மதுரைத் தொகுதிகளை அந்தக் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும்படி மூப்பனாரிடம் மேற்கொண்ட முயற்சிகளையும், கலைஞரோடு தொடர்பு கொள்ள முடியாமல் போன முயற்சிகளையும் எடுத்துரைத்தேன். ஒருவேளை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் சேர்க்கப்பட்டு இருந்தால், மிகச்சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக - பாஜக கூட்டணியை தோல்வியுறச் செய்திருக்கலாம். இதனால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று வெளிப்படையாகவே தெரிவித்தேன்.

கலைஞர், முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல், நான் குறிப்பிடுவதை உள்வாங்கிக் கொண்டார். ஓரளவு உற்சாகம் குறைந்துதான் காணப்பட்டார். அவரது அரசியலே சாண் ஏறி முழம் சறுக்குகிற கதை. பழையகதை திரும்பி விடக் கூடாதே என்று அவர் சிந்தித்திருந்தால் அது தவறில்லை. அவரை உற்சாகப்படுத்துவதற்காக கலைஞரிடம் நான் அறிந்த ஒரு தகவலைச் சொன்னேன். அது வெறும் தகவல் அல்ல. உண்மை. மேயராக பணியாற்றும் திரு. ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை கண்டதாக குறிப்பிட்டேன். குறைந்த பட்சம் அவருக்கு எதிராக எந்த முணுமுணுப்பும் இல்லை என்றும் அவரது கண்துஞ்சா செயல்பாடு மக்களின் கவனத்திற்குப் போய் இருக்கிறது என்றும் தெரிவித்தேன். அவர் முகத்தில் அரசியல் சோகங்களையும் மீறி ஒரு சின்னப் பெருமிதம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில், கோரைப்புற்கள் என்ற எனது சிறுகதைத் தொகுப்பை கலைஞரிடம் கொடுத்தேன். இதில் வரும் தலைப்புக் கதை 1997ஆம் ஆண்டு தினமணிக் கதிர் பொங்கல் மலரில், எழுதப் பட்டு பின்னர் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. இந்தக் கதையில் அப்போதே ஒருவேளை தமிழகத்தில் நடைபெறக் கூடிய கலைஞருக்கு எதிரான எதிர்வினைகளை சுட்டிக் காட்டியிருந்தேன். அது இப்போது பலித்து விட்டதில் மிகவும் வேதனைப் பட்டேன்.

இந்தக் கதையில், யாதவமக்களின் தலைவனான கிருஷ்ணன், அந்நியனான அர்ச்சுனனை இந்த மக்களுக்கு அறிமுகப்படுத்தி, எப்படி தனிநபர் வழிபாட்டைக் கொண்டு வந்தான் என்பதையும், இதன் தொடர்பாக யாதவகுல அழிவின் போது அத்தனை யாதவரும் ஒரு உடுக்கடி கலைஞன் வசம் மாட்டிக் கொண்டதை சிறிது சேர்த்து புராணக் கதையில் அரசியல் பொடி தூவினேன். கோரைப் புற்களால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு யாதவகுலம் மாண்டு போகிறது. இன்னும் எஞ்சியிருக்கும் கோரைப் புற்களை புதிய பூதகி , நவீன பூதங்களோடு தமிழக கடலோரம் கூட்டி வருவதாக முடித்திருப்பேன். இதில் அர்ச்சுனனாக எம்.ஜி.ஆரையும், கிருஷ்ணனாக கலைஞரையும் உருவகித்துப் படித்தால் அந்த கதைக்குள்ளே ஒரு கதை இருப்பது புரியும்.

முதல்வர் கலைஞரிடம் இந்தக் கதையை படிக்கும்படி குறிப்பிட்டேன். நான் அவரைப் பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாததை இந்த கதை மூலம் தெரிந்து கொள்ளட்டும் என்ற மனப்போக்கில் கொடுத்தேன்.

இதற்குப் பிறகும் கலைஞரிடம், எதிர் சக்திகளின் மேலாண்மை பற்றி பேசினேன். கலைஞர், நான் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, பதிலளிக்கவில்லை. நான் பேசப்பேச, எதிர்சக்திகளை முறியடிக்க அல்லது எதிர் நோக்க, மேற்கொள்ளப் படவேண்டிய வியூகம், அவர் மனதில் எழுந்ததாக நினைக்கிறேன். நானும், கலைஞரை அந்த வியூகத்திற்குள்ளேயே விட்டு விட்டு சண்முகநாதன் டெலிகாமில் இன்னொரு பார்வையாளரை நினைவு படுத்தும் முன்பே வெளியேறினேன்.

கலைஞரைச் சந்தித்துவிட்டு அந்தத் தெருவின் எதிர் பக்கம் உள்ள வீட்டிற்குச் சென்றேன். எனது இனிய நண்பர் நாகப்பிள்ளை அவர்களின் இல்லம் அது. சென்னையில் எல்.எம்.எல் இருச்சக்கர வாகனங்களின், ஒட்டுமொத்த விற்பனையாளராக அதற்காக ஒரு தொழிற்கூடமும் வைத்திருப்பவர். தஞ்சையில் இப்போது மாருதி விற்பனைக் கூடத்தையும் வைத்திருக்கிறார். மிகவும் எளிமையானவர். அவரும், அவரது குடும்பத்தினரும் எனக்கு குடும்ப நண்பர்கள். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். கலைஞரை நான் அடிக்கடிப் பார்ப்பது அவருக்குத் தெரியும். என்னிடம் கலைஞர் குடும்பத்தைப் பற்றி ஒரு சொற்பொழிவே ஆற்றிவிட்டார்.

கலைஞர் குடும்பத்தினர் குறிப்பாக பெண்கள் தனது மருமகள்களுடன் அந்தக் காலத்தில் இருந்தே இயல்பாக பழகுவார்கள் என்றும், ஒரு தலைவரின் மகள்கள் என்ற எண்ணத்தை எப்போதுமே கொடுக்கமாட்டார்கள் என்றும் வாயாரப் பாராட்டினார். அவர் தெரிவித்த பிறகுதான் எனக்கு கலைஞர் குடும்பத்தினர்கள் அனைவரைப் பற்றிய விவரங்களும் தெரியும். ஆக மொத்தத்தில் அந்த நாலாவது குறுக்குத் தெருவில் சொந்தமாய் குடி வந்த நாளிலிருந்து கலைஞரும், அவரது குடும்பத்தினரும் அனைவருக்கும், நல்லதொரு அண்டை வீட்டுக்காரர்களாகத்தான் நடந்து வருகிறார்கள் என்று அவர் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.