ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/தமிழ்ப்பெண் நப்பின்னை
கண்ணன் வடமதுரையில் பிறந்தவன். வடபகுதிக்கு உரிய தெய்வமாகிய அவனைத் தமிழர் தமக்குரிய தெய்வமாகவே உரிமை கொண்டாடினர். கண்ணன் வரலாறுகள் பல செவிவழிச் செய்திகளாக கிழங்கி வரலாயின.
கண்ணனுக்குத் தமிழ் நாட்டோடு நீங்காத தொடர்பு ஏற்படுத்தி விட வேண்டும் என்ற ஆர்வத்தால் கற்பித்துக் கொண்டதுதான் நப்பின்னை வரலாறு.
வடநாட்டுக் காவியங்களில் கண்ணன் காதலியாக இடம் பெறுபவள் இராதை மட்டுமே! நப்பின்னை என்ற பெயரே அங்குள்ளார் அறியார்.
கண்ணனுக்கு மனைவியர் எண்ணிலர். அவருள் உருக்குமணி, சத்தியபாமை, ஜாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியை, பத்திரை, லஷ்மணை என்ற எண்மர் பட்டத்தரசிகள்.
இவருள் நப்பின்னை சேர்க்கப்படவில்லை. ஆனால் சங்க காலத்துக்கு முன்பிருந்தே, நப்பின்னை வரலாறு தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது. நப்பின்னை என்பது தனித்தமிழ்ப் பெயர். அதனை உபகேசி என்று வடமொழி கற்ற தமிழ்ப்புலவர் நல்கூர் வேள்வியார் என்பவர் குறிப்பிடுகின்றார்.
“உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான். உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப” என்பது திருவள்ளுவமாலையில் உள்ள பாடல். உபகேசி என்பது நப்பின்னைப் பிராட்டியார் என்று நேமிநாத உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
இந்த நப்பின்னைப் பிராட்டி யமுனை யாற்றங்கரையில் தன்னை வஞ்சித்த கண்ணனைத் தன் அழகில் ஈடுபடச் செய்து மயக்கினாள் என்று பழமொழி நானூறு என்ற பழைய நூல் கூறுகின்றது. அதனால் “சால்பினைச் சால்பு அறுக்குமாறு” என்ற பழமொழியே தோன்றி வழங்கியதாக அறிகின்றோம். இதே வரலாறு சிலம்பிலும் உள்ளது.
கண்ணன் - நப்பின்னை வரலாறு. தமிழ் நாட்டில் நாடகமாக நடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்குச் சிலம்பு சான்று தருகின்றது.
“குலம் நினையல் நம்பி!
நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரை நப்பின்னை
இலவலர் வாய் இன்னமிர்தம் எய்தினான் அன்றே”
என்பது சிந்தாமணிப் பகுதி.
நிலமகட்குக் கேள்வன் - அரசனாகிய கண்ணன்
நீள்நிரை நப்பின்னை பெருந்திரளான பசுக்களைக்
கொண்ட ஆயர்குலத்து நப்பின்னை.
இருவரும் மணம் செய்து கொண்டனர் என்பது. கருத்து. இந்த நப்பின்னை வரலாறு ஆழ்வார்கள் பாடல்களில் பரக்க இடம்பெறுகின்றது. பூமிதேவி சீதேவி ஆகிய இருவருடன் சேர்ந்து திருமாலுக்கு மூன்றாவது தேவியாக இடம் பெறுகின்றாள்.
தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்த நப்பின்னை வரலாற்றை நெல்லிநகர் வரதராச ஐயங்கார் தம் காவியத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார். நப்பின்னைப் படலம் என அப்பகுதிக்குப் பெயரிட்டு, யசோதையின் தமையன் கும்பகன் மகள் நப்பின்னை என்று குறிப்பிட்டுள்ளார். கண்ணன் ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை மணந்து கொண்டானாம்.
நப்பின்னை வரலாறு போலவே வள்ளி தேவியின் வரலாறும் தமிழ் நாட்டுக்கே உரியது. தெய்வயானை என்ற வடநாட்டுப் பெண் ஒருத்தியை மணந்திருந்த முருகனுக்குத் தென்னாட்டுக் குறமகனை மனம் செய்வித்துத் தமிழ்க் கடவுளாக்கிய வரலாறும் இத்தகையதே!
வடமொழிக் கந்தபுராணத்தில் வள்ளி இடம் பெறவே இல்லை.