ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்/தேவகியின் ஏக்கம்

35. தேவகியின் ஏக்கம்


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தவன் கண்ணன்.

பெற்றவள் தேவகி. வளர்த்தவள் யசோதை. கண்ணபிரானுடைய குழந்தை விளையாட்டையும் குறும்புத் தளத்தையும் கண்டு களிக்கும் பேறு தேவகிக்குக் கிட்டவில்லை. அந்தப் பெரும் பேறு பெற்றவள் யசோதை.

“மருவும் நின்திரு நெற்றியில் கட்டி

    அசைதர மணிவாயிடை முத்தம்

தருதலும் உன்தன் தாதையைப் போலும்

    வடிவு கண்டுகொண்டு உள்ளம்உள் குளிர

விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து

    வெகுளியாய் நின்று உரைக்கும்அவ் வுரையும்

திருவி லேன்ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்

    தெய்வ நங்கை யசோதைபெற்றாளே!


முழுவதும் வெண்ணெய் அளைந்து தொட் டுண்ணும்

    முகிழ் இளஞ்சிறு தாமரைக் கையும்

எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு எள்கு

    நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்

அழுகையும்அஞ்சி நோக்கும் அந் நோக்கும்

    அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்

தொழுகையும் இவை கண்ட யசோதை

    தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே”


என்று ஏங்கினாள் தேவகி கம்சனைக் கொன்று மகாபாரதப் போர் முடித்த பின்பு, கண்ணபெருமான் துவாரகையில் வாழ்ந்து வந்தான். உருக்குமணி, சத்தியபாமா முதலிய தேவியரும் வாசுதேவன், தேவகி ஆகிய பெற்றோரும் உடனிருந்தனர்.

ஒருநாள் தேவகியின் முகத்தில் வாட்டம் கண்ட கண்ணன், “அம்மா! உனக்கு என்ன கவலை? எதுவாயிருந்தாலும் தீர்த்து வைக்கின்றேன்” என்றான்.

“மகனே! நீ இளம் பருவத்தில் செய்த விளையாட்டுக் குறும்புகளைக் காணும் பேறு எனக்குக் கிட்டவில்லை. எல்லாம் தெய்வமங்கை யசோதை பெற்றாள். அவள் பெற்ற பேறு கிட்டாதா?” என்று ஏங்குகின்றேன். என்றாள் தேவகி.

“தாயே! உன் ஏக்கத்தை இப்போதே தீர்த்து வைக்கின்றேன்” என்று மழலைப் பருவ வேடம் கொண்டான் கண்ணன்.

தேவகி தயிர் கடையும்போது, “அம்மா எனக்கு வெண்ணெய் தா! இல்லையேல், நானே முழுவதும் எடுத்து உண்டுவிடுவேன்! என்றான் கண்ணன்.

தேவகி இழந்தசெல்வம் மீண்டும் பெற்றவள் போல் பெருமகிழ்வு கொண்டாள்.

“கொஞ்சம் பொறு! நெய்யாக்கித் தருகின்றேன்” என்றாள் தேவகி

கண்ணன் தயிர் கடையும் கயிற்றைப் பறித்துக் கொண்டு ஓடினான். தேவகி துரத்தினாள்.

கண்ணன் பயந்தவன் போல் வீடு முழுவதும் சுற்றிச் கற்றி ஓடினான். முடிவில் மத்தை எடுத்துத் தயிர்ப் பானையை உடைத்து விட்டான். தயிர் எல்லாம் சிதறியது.

கண்ணனின் குறும்பு கண்ட தேவகி தொல்லை இன்பத்து இறுதி கண்டாள். கண்ணன் மழலை வேடம் மாறி மீண்டும் முன்னைய வடிவம் பெற்றான்.

“இன்னும் சிறிதுநேரம் அந்த மழலைக் கோலத்திலேயே இருந்திருக்கலாகாதா!” என்று தேவகி ஏங்கினாள்.

கண்ணன் விசுவகர்மாவை வரவழைத்துத் தன் மழலை வடிவத்தைச் சிலையாக வடித்துத் தரும்படி ஏவினான்.

விசுவகர்மா, மத்தும் கையுமாக இருக்கும் கோலத்தில் சிலை வடித்துத் தந்தான். தேவகி அந்தச் சிலையைக் கண்டு கண்டு களிப்பின் எல்லையைக் கண்டாள்.

இறுதிக் காலத்தில், துவாரகையைக் கடல் கொண்டபோது, அச்சிலையைத் கோபியாகிய திருமண்ணில் மறைத்துக் கடலில் விட்டுவிட்டாள்.

நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு மீனவன் கடலில் படகுப் பயணம் செய்தான். அப்போது புயல் ஒன்று தோன்றிப் படகைக் கவிழ்த்தது. அந்தப் படகு கவிழாமல் மத்வாச்சாரியார் தம் தெய்விக சக்தியால் காப்பாற்றினார்.

அந்த மீனவன் தன்னைக் காத்த மத்வருக்குக் காணிக்கையாக அந்தக் கோபிக்கட்டியைக் கொடுத்தான்.

காணிக்கை பெற்ற மத்வர் அதை உடைத்துப்பார்த்தார். மத்தும் கையுமாயிருந்த கண்ணன் காட்சியளித்தான். அந்தக் கண்ணனை அவர் உடுப்பியில் நிறுவி ஓர் ஆலயம் எழுப்பினார்.

அந்த ஆலயமே உடுப்பியில் இன்று உலகமே வழிபடும் ஆலயமாக விளங்குகின்றது.