ஒப்பியன் மொழிநூல்/உலக முதன் மொழிக் கொள்கை

IV. உலக முதன்மொழிக் கொள்கை

1: மாந்தன் தோன்றியது குமரி நாடாயிருக்கலாம் என்பது.

இதற்குச் சான்றுகளும் காரணங்களும் —

(1) குமரி நாட்டின் பழைமை.

(2) ஹெக்கேல் ஸ்கிளேற்றர் முதலியோர் இலெமுரியா மாந்தன் தோன்றிய இடமாகக் கூறியிருத்தல்.

(3) குமரி நாட்டு மொழியின் தொன்மையும் முன்மையும்.

(4) தென்னாட்டுப் பெருங்கடல்கோட் கதை உலக முழுதும் வழங்கல்.

(5) மக்கள் கிழக்கிலிருந்து வந்தார் என்று யூத சரித்திரங் கூறல்.[1]

{6) தொன்மரபினரான மாந்தர் பெரும்பாலும் தென் ஞாலத்திலிருத்தல்.

(7) குமரி நாடிருந்த இடம் ஞாலத்தின் நடு மையமாயிருத்தல்.

(8) குளிரினும் வெம்மையே மக்கட்கேற்றல்.

(9) தென்ஞாலத்தின் வளமை.

உலகத்திற் கிடைக்கும் பொன்னும், வயிரமும், பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா, தென்னிந்தியா, தென்கண்டம் (Australia) ஆகிய இடங்களிலேயே எடுக்கப்படுகின்றன.

(10) முதல் மாந்தன் வாழக்கூடிய கனிமரக்கா (ஏதேன்) தென்ஞாலக் குறிஞ்சி நாடுகளிலேயே காணக்கூடியதாயிருத்தல்.

குறிப்பு :—கிறித்தவ விடையூழியர் கானான் நாட்டை ஞாலத்தின் மையம் என்று கூறுவது தவறாகும். அந்நாடு நள்ளிகை (Equator)க்கு வடக்கே 30 ஆம் 40 ஆம் பாகைகட் கிடையிலுள்ளது. குமரிநாட்டிடமோ நள்ளிகையின் மேலேயோ உள்ளது. மேலும், பண்டை ஞாலத்தில் தென்பாகத்திலேயே நிலம் மிக்கிருந்ததென்றும், கானான் நாட்டு நிலம் நீர்க்கீழ் இருந்ததென்றும் அறிய வேண்டும்.

ஆதியாகமத்தில் மாந்தன் படைப்பை யூத சரித்திரத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறது.

யூதர் முதல் மக்கள் வகுப்பாரல்லர் என்பதற்குக் காரணங்கள் :—

(i) பழைய ஏற்பாட்டில் 4000 ஆண்டுச் சரிதையே கூறப்பட்டுள்ளமை.

இதுபோது 6000 ஆண்டுகட்கு மேற்பட்ட மரங்கள் உள்ளனவாகச் சொல்லப்படுகிறது. தமிழ்மொழி தோன்றிய காலம் எவ்வகையினும் கி. மு. 5000 ஆண்டுகட்குப் பிற்படாது.

(ii) காயீன் தன்னைப் பலர் கல்லெறிவார் என்று கூறி யிருத்தல்.

(iii) மக்கள் கிழக்கிலிருந்து வந்தாரென்று யூத சரித்திரங் கூறல்.

(iv) யூதர் தேவ புத்திரரைக் கண்டாரெனல்.

தேவ புத்திரரென்று உலகில் சொல்லத்தக்கவர் வெள்ளையரான ஆரியர். ஆரியரைத் தேவரென்று சொல்லத்தக்கவர் தென்னாட்டிலிருந்து சென்ற கருப்பரா யிருந்திருத்தல் வேண்டும்.

(V) உலக முழுதும் ஒரே மொழி வழங்கிற்றென்று ஆதியாகமத்திற் கூறியிருத்தலும், எபிரேய மொழி உலக முதன் மொழியாதற் கேற்காமையும்.

(vi) எபிரேய மொழியில் பல தமிழ்ச் சொற்கள் சிதைந்து கிடத்தல்.

கா : ஆப் (அப்பன்). ஆம் (அம்மை ), நூன் (மீன்), வாவ் (வளைவு), மேம் (மேகம் = நீர்), பே (வாய்). மேகம் என்பது மேலேயுள்ள நீர் என்று பொருள்படும் தமிழ்ச்சொல்லே, மே (மேல்)+கம் (நீர்)= மேகம்:

ஆதாம் (மாந்தன்) என்னும் முதல் எபிரேயப்பெயர் ஆதோம் (சிவப்பு) என்பதின் திரிவாகச் சொல்லப்படுகிறது, ஆதோம் என்பது அரத்தம் (சிவப்பு) என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாயிருக்கலாம்.

இந்நூலின் 4ஆம் மடலத்தில், எபிரேயம் எங்ஙனம் தமிழி னின்றும் திரித்ததென்பது விளக்கப்படும்.

(vii) ஆதியாகமத்திற் படைப்பைப் பற்றிக் கூறுமிடத்தே, வாரம் என்னும் எழு நாளளவைக் கூறியிருத்தல்.

பகலும் இரவும் சேர்ந்த நாள் என்னும் அளவு முதலிலிருந்துள்ளது. ஆனால், எழுகோள்களைக் கண்டுபிடித்தபின் அவற்றின் பெயரால் உண்டான வாரம் என்னும் அளவு பிற்காலத்தது.

மோசே உலக சரித்திரமறிந்தவரல்லர். அவர் அக்காலத்து மக்களின் அறிவு நிலைக்கேற்றபடி, பழைமை முறையிற் படைப்பைப் பற்றிக் கூறினார். இயேசு பெருமான் தாமே திருவாய் மலர்ந்தருளினதே, கிறித்தவர் ஐயமின்றிக் கொள்ளத்தக்கது. கடவுள் நினைத்தவளவில் எல்லாவற்றையும் படைப்பவர். அதற்கு வாய்ச்சொல்லும் ஏழு நாளும் வேண்டியதில்லை.

2. தமிழ் உலக முதற்பெருமொழியா யிருக்கலாமென்பது

இதற்குச் சான்றுகளும் காரணங்களும் :-

(1) தமிழ் நாட்டின் பழைமை.
(2) தமிழின் பழைமை.
(3) தமிழின் எளிய வொலிகள்.

(4) தமிழில் இடுகுறிச்சொல்லும் சுட்டசை (Definite. Article) யும் இல்லாமை.
(5) தமிழில் ஓட்டுச்சொற்கள் சிலவாயிருத்தல்.
(6) அம்மை அப்பன் என்னும் தமிழ் முறைப் பெயர்கள் பல வடிவில் உலகமொழிகள் பலவற்றில் வழங்கல்.
(7) தமிழ்ச்சொற்கள் சிலவோ பலவோ உலக மொழிகள் எல்லாவற்றிலுமிருத்தல்.

(8) மும்மொழிக் குலங்களின் சிறப்பியல்பும் ஒரு சிறிது தமிழிற் காணப்படல்.

வடமொழிக்குரிய நீட்டற்புணர்ச்சி (தீர்க்கசந்தி) தமிழிலுள்ளமை முன்னர்க் கூறப்பட்டது.

சித்தியக் குலத்திற்குச் சிறந்த உயிரொப்புத் திரிபு (Harmonious Sequence of Vowels) பொதியில் (பொது + இல் சிறியிலை (சிறு + இலை) முதலிய தொடர் மொழிகளில் உளது.

சீனத்தில் ஒரே சொல் இடவேற்றுமையால் வெவ்வேறு சொல் வகையாகும். தமிழிலும் இஃதுண்டு.

கா : பொன் (அழகிது)— பெயர்ச்சொல். (அது)பொன் —வினைச்சொல், பொன் (வளையல்) — பெயரெச்சம், பொன் (விளைந்த களத்தூர்)— வினையெச்சம்.

பிறமொழிகளில் உள்ள ஒருமை இருமை பன்மை என்னும் எண்பாகுபாட்டிற்கு, அவன் அவர் அவர்கள், அல்லது ஒரு சில பல என்னும் வழக்குகள் மூலமாயிருக்கலாம்.

(9) தமிழில் ஒலிக்குறிப்பாயுங் குறிப்பொலியாயுமுள்ளவை பிறமொழிகளில் சொல்லாய் வழங்கல்.

கா : தரதர— tear, தகதக—தஹ்(வ.), உசு—hush, சளப்பு —saliva, கெக்கக் கெக்க—L. cacbinne, V; E. cachinna— tion.

(10) அயன் மொழிச்சொற்கள் பலவற்றிற்கு வேர் தமிழிலிருத்தல்.
முக்குல மொழிகளிலுமுள்ள சுட்டு வினாச்சொற்களின் அடிகள் தமிழிலிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
(11) எழுகிழமைப் பெயர்களும் பன்னீரோரைப் பெயர்களும், ஆரிய மொழிகளில் தமிழ்ச்சொற்களின் மொழி பெயர்ப்பாயிருத்தல்.

பண்டைத்தமிழர் வானூல் வல்லோராயிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர் நாளின் (நாண்மீனின்) பெயரால் ஒரு கிழமையளவையும், எழு கோள்களின் பெயர்களால் ஒரு வார அளவையும், மதியின் பெயரால் ஒரு மாத 'வளவையும், சூரியன் பெயரால் ஓர் ஆண்டளவையும் குறித்திருத்தலே, அவரது வானூலறிவிற்குச் சிறந்த சான்றாம். இவ்வளவுகள் முதன் முதற் குமரி நாட்டிலேயே தோன்றியவை.

ஆங்கிலத்தில் உள்ள வார நாட் பெயர்களில், Sunday, Monday, Tuesday, Saturday என்னும் நான்கும் தமிழ்ப் பெயர்களின் மொழிபெயர்ப்பாயிருக்கின்றன.

Tues என்பது Zeus என்பதின் மறுவடிவமாகக் கூறப்படுகிறது. இவை முறையே செவ்வாய் சேயோன் என்னும் பெயர்களைச் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றன, Zeus கிரேக்கப் பெருந்தெய்வம். கிரேக்கர் தமிழ் நாட்டில் மிகப்பழங்காலத்திலேயே குடியிருந்தனர். அவரை யவனர் என்று தமிழ் நூல்கள் கூறும். யவனம் என்பது கிரேக்க நாட்டின் பெயர்களுள் ஒன்று. பாண்டியனுக்கும் கிரேக்க மன்னருக்கும் கயல்மீன் சின்னமாயிருந்ததும், தமிழருக்கும் கிரேக்கருக்கும் பல பழக்கவழக்கங்கள் பொதுவாயிருந்ததும் இங்குக் கவனிக்கத்தக்கன.

இலத்தீனில் வழங்கிய பன்னீர் ஓரைப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவேயிருக்கின்றன?

1. Aries (ram) ij: Taurus (bull}, iii: Gemmini (twins), iv. Cancer (crab), v. Leo (lion), vi, Vergo (virgin), vii. Libra (balance), viii. Scorpio (scorpion), ix: Sagittarius (archer) or bow), x, Capricorn (the goat-horned = shark), xi. Aquarius (water-bearer = pitcher), xii. Pisces (fish).

(12) தமிழில் முதல் வேற்றுமைக் குருபின்மை.
(13) தமிழ் வேற்றுமை யுருபுகளெல்லாம் பின்னொட்டுச்

சொற்களாயிருத்தல்.
(14) சொற்றொடரில் தமிழ்ச்சொன்முறை இயல்பாயிருத்தல்.

பன்னிரண்டு என்னும் சொன்முறை பத்தோடு இரண்டு சேர்ந்தது என்பதைக் குறிப்பதாகும். வடமொழியில் த்வாதசம் என்னும் முறை இயற்கைக்கு மாறானதாகும்.

(15) தமிழ் உலக முதன்மொழி ஆய்வுக்கு நிற்றல்.

தமிழொடு பிறமொழிகள் ஒவ்வாமைக்குக் காரணங்கள்

(1) தமிழின் பல்வேறு நிலைகளில் மக்கள் பிரிந்து போனமை.

தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்தபோதும், அசை நிலையிலிருந்தபோதும், புணர்நிலையிலிருந்தபோதும், பகுசொன்னிலையிலிருந்தபோதும், தொகுநிலையிலிருந்தபோதுமாகப் பற்பல சமயங்களில், குமரிநாட்டினின்றும் மக்கள் கிழக்கும் மேற்கும் வடக்குமாகப் பிரித்துபோ யிருக்கின்றனர்.

(2) குறிப்பொலி நிலையிலும் அசைநிலையிலும் பிரிந்த மாந்தர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சொற்களை அமைத்துக்கொண்டமை.

(3) பிரிந்துபோன மக்கள் மூலச்சொற்களை மறந்துவிட்டுப் புதுச்சொற்களை ஆக்கிக்கொண்டமை.

(4) தட்பவெப்ப நிலை உணவு முதலியவற்றால் உறுப்புத் திரிந்து, அதனால் உச்சரிப்புத் திரிந்தமை.

கா : தோகை —Pers: tawns, Gr: taos, L. pavo, A: S: pawe, E; pea--peacock. சே—சேவு—(சேக்கு )—A. S. coc, E. cock; ஓ. நோ: நா—நாவு— நாக்கு.

(5) பெரும்பாற் சொற்கள் போலி மரூஉ சிதைவு முதலிய முறைகளில் திரிந்தமை;

(6) மூலமொழியி லில்லாதவொலிகள் தோன்றினமை.

(7) மூலமொழி யிலக்கணத்தினின்றும் வேறுபட்ட இலக்கணம் எழுதப்பெற்றமை.

(8) பெரியோரை மதித்தல் காரணமாகச் சொற்களை மாற்றல்.

பலநீசியத் (Polynesian) தீவுகளில் தெபி (Tepi) என்றொரு வழக்கமுள்ளது. அதன்படி, அரசன் பெயராவது அதன் பாகமாவது வருகின்ற சொற்களையெல்லாம் மாற்றிவிடுகின்றனர். இவ்வழக்கம் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளதாம்.

வட மொழி உலக முதன்மொழியாக முடியாமை

மொழிகளின் இயல்பையறியாத பலர், வடமொழி உலக முதன் மொழியாயிருக்கலாமென்று கருதுகின்றனர்.

உலகில் முதலாவது தோன்றிய திருந்திய மொழி தமிழே, குமரிநாட்டில் தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்தபோது பிரிந்த மக்கள், ஆப்பிரிக்கா, தென்கண்டம், அமெரிக்கா முதலிய இடங்கட்கும், அசை நிலையிற் பிரிந்த மக்கள் கடாரம் சீன வட ஆசியா ஐரோப்பா முதலிய இடங்கட்கும் சென்றதாகத் தெரிகின்றது. அசைநிலையிற் பிரிந்த மக்களின் மொழிகளே, துரேனியம் அல்லது சித்தியம் என்று கூறப்படும் குடும்பத்தவை.

பால்டிச் சுடற்பாங்கரில், துரேனியத்தின் திரிபாகவே ஆரியம் தோன்றியிருக்கின்றது. பால்டிக்கின் வடபாகங்களில் பின்னியம் (Finnish) என்னும் துரேனிய மொழி வழங்குவதும், சுவீடியம் (Swedish) டேனியம் (Danish) முதலிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் இருப்பதும், ஜெர்மானியத்திலுள்ள சில சொற்கள் ஆரிய இலக்கிய மொழிச்சொற்கள் சிலவற்றிற்கு மூலமாயும் தமிழுக்கு நெருக்கமாயுமிருப்பதும், ஆட்டோ சிரேதர் கூறியிருப்பதும் இக்கொள்கைக்குச் சான்றுகளாம்.

ஆரியஞ்சென்ற தமிழ்ச்சொற்கள் பின் வருமாறு மூவகைய.

(1) ஆரியரின் முன்னோர் குமரிநாட்டினின்று பிரிந்து போனபோதே உடன் சென்றவை.

கா: தமிழ் வடஇந்தியம்  மேலையாரியம்  கீழையாரியம்
நான்  மைன்  me 
நாம்  ஹம்  wir, we vayam
நூன் தூ  du, tu tvam
நூம்  தும் ye, you yuyam
இருத்தி  eart. es asi

மாசய வாலிலாக இந்தியாவிற்கு வந்த (2) ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் இடைக்காலத்திற் சென்றவை, அல்லது நேரே மேலையாரியஞ் சென்றவை.

கா: தமிழ்  மேலையாரியம்  கீழையாரியம்
ஆன்மா  animos  atma
நாவாய்  navis  nau
வேட்டி vestis  vasthra.
இஞ்சிவேர்  zingiber, zingiberi sringa-vera.
இரும்(பு)  iren, eisen ayas.

(3) ஆரியர் இந்தியா விற்கு வந்தபின் அல்லது கீழை யாரிய வாயிலாகச் சென்றவை.

கா: தமிழ்  மேலையாரியம்  கீழையாரியம்
கப்பி  kapi  ape.
குருமம்  gharma  thermos, formus,
 warmg
அகம்(மனம்)  aham ego, Ich, Ic, I
தா (நில்)  Sta sta, esta.
படி—பதி—வதி vas wes, wis, was

குறிப்பு:—(1) அரக்கு, அரக்கம், அரத்தம், அலச்தம், அலத்தகம், இரத்தி, இலந்தை முதலிய தென் சொற்களை நோக்கின், அர் அல்லது இர் என்னும் ஒரு வேர்ச்சொல் சிவப்புப் பொருளை யுணர்த்துவது தெளிவாகும். அருக்கன், அருணம், அருணன் முதவிய (வட) சொற்களும் இவ்வேரினின்றே பிறந்தனவாகும். இங்ஙனம் பல வட தென் சொற்கள் ஒரே மூலத்தன.

(2) கப்பு = மரக்கிளை, கப்பில் வாழ்வது கப்பி. “கோடு வாழ் குரங்கு” (மரபியல், 13) என்றார் தொல்காப்பியரும்.

(3) குரு = வெப்பம், வெப்பத்தால் தோன்றும் கொப்புளம், ஒளி, ஒளிவடிவான ஆசிரியன், குரு = சிவப்பு: குருதி, குருதிக் காந்தள், குருதிவாரம் என்னும் சொற்களை நோக்குக. “குருவுங் கெழுவும் நிறனா கும்மே“ (உரி: 5) என்றார் தொல்காப்பியர், குருத்தல் தோன்றுதல், குருப்பது குருத்து. குரு—உரு: குருமம்— உருமம்.

(4) அகம் = அவ்விடம், அவ்வுலகம், வீடு, உள் உள்ளம், (நான்), ஓ, நோ, இகம் = இவ்விடம், இவ்வுலகம் இகபரம் என்னும் வழக்கை நோக்குக; வீடு = துறக்கம், இல்லம் இல் = வீடு, உள். உள் = உட்புறம், மனம். உள்+அம் = உள்ளம்—உளம். உள்ளம் என்று பொருள்படும் அகம் என்னும் தமிழ்ச்சொல்லையே, நான் என்னும் பொருளில் வழங்கினர் வடமொழியாரியர், ஆன்மா என்னுஞ் சொல்லை, ஆத்மனேபத, ஆத்மநிவேதனம் முதலிய தொடர்களில் தன்னைக் குறிக்க வழங்குதல் காண்க. அகம் X புறம்.

மேலையாரிய மொழிகளில் முதலாவது தன்மை யொருமைப் பெயராக வழங்கியது me என்பது. min, me, mec முதலிய வேற்றுமைபெற்ற பெயர்கள் me என்பதினின்று தோன்றுமே யொழிய அகம் என்பதினின்று தோன்றா.[2] go என்னும் வினையின் இறந்தகால வடிவம் வழக்கற்று, அதற்குப் பதிலாக wend என்பதின் இறந்தகால வடிவமாகிய wend என்பது வழங்குவது போன்றது அகம் என்பது.

(5) sta என்னும் சொல் esta என்று மேலையாரியத்தில் வழங்குவது, பண்டைக்காலத்தில் மேனாட்டாரும் இஸ்கூல் (School) என்று சொல்லும் தமிழர் நிலையிலிருந்தனர் என்பதைக் காட்டும். தாவு = இடம், தாக்கு = நிலை. தாக்குப் பிடித்தல் என்னும் வழக்கை நோக்குக.

புரி, புரம் என்னும் நகர்ப்பெயர்கள் ஆரிய மொழிகளிலெல்லாம் வழங்குவதும், தொல்லாரியர்க்கும் தமிழர்க்கு மிருத்த தொடர்பைக் காட்டும்.

புரிதல் = வளைதல், L. spira, Gr: speira, E, spire. புரி = வளைந்த அல்லது திருகிய இழை, ஓ. நோ. thread: from thrawan (திரி), to twist. புரிதல் = மனதில் பதிதல், விளங்குதல், L. prehendo= புரிகொள். E. prehend—appre—hend, comprehend etc. புரி—புரி (வ.) — வளைந்த மதில், கோட்டை மதிலாற் சூழப்பட்ட நகர். ஒ. நோ, கோடு+ஐ= கோட்டை , கோடு+அம் கோட்டம்—koshta (sans)= மதில் - சூழ்ந்த கோயில்.

வடமொழியிற் கோஷ்ட என்பதை, கோ (பசு) என்பதினின்று பிறந்ததாகக் கூறுவது பொருந்தாது. அது தொழுவம் என்று பொருள்படினும் கோட்டம் அல்லது கொட்டம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபே. கொடு+ அம்= கொட்டம், 'கொடு+இல் = கொட்டில்.

புரி+சை=புரிசை: புரி+அம் =புரம்-E, borough, burgh, புரி-bury: கோபுரம் = அரசன்மனை, அரசநகர். முதலாவது அரசன் வெள்ளத்தினின்றும் பகைவரினின்றும் தற்காக்க எழு நிலை மாடத்தில் அல்லது உயர்ந்த கட்டடத்தில் வதித்தான். பின்பு அது மிகவுயரமாய் வடிவு மாறிக் கோவிலுறுப்பாயிற்று. ஓ. நோ; கோயில் = அரசன் மனை, தெய்வ இருப்பிடம்; புரம்—புர: புரத்தல் காத்தல் புரவலன் புரப்பதில் வல்லவன், புரந்தருபவன் புரந்தரன். ஒ. நோ: A. s. beorgan, Ger, berger, to protect, from burg.

மேலையாசியப் பாங்கரில், துரேனியமும் ஆரியமும் சேர்ந்து சேமியம் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது.

பால்டிக் பாங்கரினின்று, முதலாரியர் காக்கசஸ் மலையின் தென்பாகத்தில் வந்து குடியேறி யிருக்கின்றனர். பின்பு அங்கிருந்து மேற்கொரு பிரிவாரும் கிழக்கொரு பிரிவாரும் பிரிந்து போயிருக்கின்றனர். கிழக்கே வந்தவரே இந்திய ஆரியர். இந்தியாவிற்கு வந்த ஆரியருள் ஒரு பிரிவார் திரும்பவும் மேலையாசியாவிற்குச் சென்றிருக்கின்றனர்.[3] அவரே பெர்சிய அல்லது ஸெந்து (Zend) ஆரியர்,

இந்திய ஆரியரது மொழி இந்தியாவிற்கு வருமுன் இப்போதுள்ள நிலையிலில்லை. இலத்தீன், கிரேக்கம், ஜெர்மானியம் என்ற மூன்று மொழிகட்கும் நெருங்கிய நிலையிலேயேயிருந்தது; அப்போது ஆரியம் என்னும் பொதும் பெயரேயன்றி ஒரு விதப்புப் பெயரும் அதற்கில்லை,

இந்திய ஆரியர் இந்தியாவிற்கு வந்த பின்னரே. அவரது மொழிக்குச் சம்ஸ்கிருதம் என்னும் ஆரியப்பெயரும், வட மொழி என்னும் தென்மொழிப்பெயரும் தோன்றின.

வடமொழிக்கு வேதகால வடிவும் பிற்கால வடிவுமென இருநிலைகளுண்டு. வேத காலத்திலேயே, வட இந்தியத் திராவிட மொழிச் சொற்கள் பல வடமொழியிற் கலந்து விட்டன. வட இந்திய மொழிகளெல்லாம், உண்மையில் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் பிறந்த இரு பிறப்பி மொழிகளேயன்றி, தனி ஆரியக்கிளைகளல்ல.

மேனாட்டாரிய மொழிகட்கில்லாது, சமஸ்கிருதத்திற்கும் திராவிடத்திற்கும் பொதுவாயுள்ளவையெல்லாம், தமிழினின்றும் வடமொழி பெற்றவையே.

கா: உயிர்மெய்ப்புணர்ச்சி, ட ண முதலிய சில ஒலிகள், எழுத்து மூறை, எட்டு என்னும் வேற்றுமைத்தொகையும் அவற்றின் முறையும், சில கலை நூல்கள் முதலியன.

வடமொழியில் வழங்கும் நூற்றுக்கணக்கான சொற்கள் தென்சொற்களென்பது, மூன்றாம் மடலத்திற் காட்டப்படும்

வடநூல்களிலுள்ள பொருள்களிற் பெரும்பாலன, ஆரியர் வருமுன்னமே வட இந்தியாவில் அல்லது இந்தியாவில் வழங்கியவையென்றும், அவற்றைக் குறிக்கும் சொற்களே ஆரிய மயமென்றும் அறிதல் வேண்டும்.

உலக மொழிகள் எல்லாவற்றிலும், வளர்ச்சியிலும் திரிபிலும் முதிர்ந்தது வடமொழியாகும். இதனாலேயே ‘நன்றாகச் செய்யப்பட்டது’ என்னும் பொருள் கொண்ட ’சமஸ்கிருத்’ என்னும் பெயரை வடமொழி ஆரியரே அம்மொழிக்கிட்டுக் கொண்டனர். வடமொழியை ஆரியத்திற்குக் கூட மூலமொழியாகக் கொள்ளவில்லை மேனாட்டார்.[4]

வடமொழி முதிர்ச்சியைக்காட்ட இங்கு ஒரு சான்று கூறுகின்றேன்.

மெய்யெழுத்துக்களின் தொகை :— தென்கண்ட (ஆத்திரேலிய) மொழிகளில் 8 ; பலநீசிய (Polynesian) மொழிகளில் 10; பின்னியத்தில் 11; மங்கோலியத்தில் 18; இலத்தீனினும் கிரேக்கிலும் 17: ஆங்கிலத்தில் 20; எபிரேயத்தில் 23; காப்பிரி (Kaffir) யில் 26; அரபியில் 28; பெர்சியத்தில் 31; துருக்கியத்தில் 32; வடமொழியில் 39: அரபி, பெர்சியம், சமஸ்கிருதம் என்னும் மூன்றன் கலவையான இந்துஸ்தானியில் 48, இத் தொகைகள் மாக்ஸ் முல்லர் கூறியன. இவற்றுள் ஒன்றிரண்டு கூடினும் குறையினும் இவற்றைக் கூறியதின் பயன் மாறாதிருத்தல் காண்க.

இங்குக் கூறியவற்றால், வடமொழி உலக முதன்மொழியாவதினும், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்குமென்க.

திராவிடம் சிறிய குடும்பமேயாயினும், பல காரணம் பற்றித் தனித்துக் கூறப்படற்கேற்றதாகும்.


  1. பழைய ஏற்பாடு முதற்புத்தகம், 11:1.
  2. Historical outlines of English Accidence, P. 177.
  3. L. S. L. Vol. 1, pp. 287, 283
  4. Principles of Comparative Philology, p. vii.