ஒப்பியன் மொழிநூல்/முடிவு

முடிவு

தமிழே உலக முதல் இலக்கியமொழி. இதன்பெருமை சென்ற 2000 ஆண்டுகளாக மறைபட்டுக் கிடந்து, இன்று மொழி நூற்கலையால் வெள்ளிடைமலையாய் விளங்குகின்றது. பண்டைத் தமிழர்க்கும், இற்றைத் தமிழர்க்கும் எல்லாத் துறைகளிலும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வேறுபாடாரும்.

தமிழை முன்னோர் செந்தமிழாகவும் தனித்தமிழாகவுமே வளர்த்தனர்; அங்ஙனமே இனிமேலும் வளர்க்க வேண்டும். வளர்ப்பு முறை தமிழுக்கும் பிறமொழிகட்கும் வேறுபட்டதாகும். பிற மொழிகளில் கொடுவழக்குகளெல்லாம் செவ்வழக்காகும் : தமிழிலோ கொடுவழக்குகள் கொள்ளப்படாது. என்றும் செந்தமிழே கொள்ளப்படும்.

கா ; ஆங்கிலத்தில் r, l சில சொற்களில் ஒலிக்கப்படாவிட்டாலும் குற்றமில்லை ; தமிழிலோ அவர்கள் என்பதை அவக என்றொலித்தால் குற்றமாம். இந்தியில் சொல்லிற்று னகர மெய் அரைமெய்யாயொலிப்பது குற்றமன்று : தமிழில் அங்கனம் ஒலிப்பது குற்றம். தெலுங்கில் பப்பு என்பது குற்றமன்று: தமிழிலோ குற்றம். இங்கனமே பிறவும் பற்பல வழக்குகள் தமிழ்நாட்டில் வழங்கினாலும், செந்தமிழையே அளவையாகக் கொண்டதினாலேயே தமிழ் இது நாள் வரைக்கும் பெரும்பாலும் திரியாது வந்திருக்கின்றது:

தமிழ் கடன் சொற்களால் தளர்ந்ததன்றி வளர்ந்ததன்று. கடன்கோடலால் ஓர் ஏழைக்கு நன்மை ; ஆனால் செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன் சொற்களால் பிறமொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி, முதலாவது, பிணிக்கு நோய் என்று தமிழ்ச்சொல்மட்டும் தமிழ் நாட்டில் வழங்கியது. பின்பு ஆரியம் வந்த பின் வியாதி என்னும் சொல் வழங்கிற்று. அதன் பின் ஆங்கிலம் வந்தபின் சீக்கு என்னும் சொல் வழங்குகிறது: இதுவே தமிழுக்குப் பிறமொழியாலுண்டாகும் வளர்ச்சி; இனி இந்திவரின் பீமாரி என்னும் சொல்லும் வழங்கும் போலும்!

தென் மொழியை வடமொழியோடு கலவாமல் தனியே வளர்க்க வேண்டும்; “தமிழ்வெறி” என்று தமிழ்ப் பகைவர் கூறுவதற்கு இது ஆரிய நாடன்று. இந்தியா முழுதும் ஒருகால் பரவியிருந்த தமிழ் இன்று தென்கோடியில் ஒடுங்கிக் கிடக்கின்றது: தன்னாடான இங்கும் தமிழுக்கிடமில்லை யென்றால் வேறெங்கது செல்லும்? தமிழ் நாடொழிந்த இந்தியா முழுதும் ஆரியத்திற் கிடமாயிருக்கும்போது, இத்தமிழ் நாட்டையாவது ஏன் தமிழுக்கு விடக்கூடாது? தமிழ் இதுபோது அடைந்துள்ள தாழ்நிலையும், இற்றைத் தமிழர் தாய்மொழியுணர்ச்சியில்லாதிருப்பதும், அவரது அடிமை நிலையைச் சிறப்பக் காட்டும். பார்ப்பனரும் அபார்ப்பனரும் இனிமேல் ஒற்றுமையாயிருந்து தமிழைச் சிறப்பாய் வளர்க்கவேண்டும்.

தமிழ் நாட்டுக் கிழார்களும் வேளிரும் மடங்களும், திருப்பனந்தாள் மடத்தைப் பின்பற்றித் தமிழை வளர்த்தால் அது சிறந்தோங்கும்.