ஒப்பியன் மொழிநூல்/திராவிடம் தெற்கிற் சிறத்தல்

திராவிடம் தெற்கிற் சிறத்தல்

i. தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல்

(1) தமிழின் தொன்மை : தமிழரசரின் பழைமை.

கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட பாரதப் போரில், உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன், இரு படைகட்கும் சோறு வழங்கினதாகப் புறப்பாடல் கூறுகின்றது. [1]

சேரசோழ பாண்டிய நாடுகள் பாரதத்திலும், கிறித்துவுக்கு 2000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளன.

“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று”

என்னுங் குறளுரையில், “பழங்குடி — தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார்... தொன்றுதொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்று கூறினார் பரிமேலழகர்.

சூரவாதித்தன், சிபி, முசுகுந்தன், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன், காந்தமன் முதலிய சோழமன்னரெல்லாம் சரித்திர காலத்திற்கு மிக முற்பட்டவர். சோழருக்கு முற்பட்டவர் பாண்டியர். முதற்காலத்தில், பாண்டியன் ஒருவனே தமிழுலகம் முழுவதையும் ஆண்டானென்றும், பின்பு ஒரு பாண்டியனின் தம்பிமாரான சோழசேரர் தமையனோடு பகைமை பூண்டு, வடக்கே பிரிந்து வந்து சோழசேர அரசியங்களை நிறுவினரென்றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்குகின்றது.

பாண்டியன் சோழன் சேரன் என்னும் பெயர்கள் வட சொற்களென்றும், பாண்டியன் பஞ்சவன் என்னும் பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்தவை யென்றும் மயங்கினர் கால்டுவெல். அப் பெயர்களின் பொருள்களாவன :

பாண்டியன்:

வண்டி — பண்டி — பாண்டி — பாண்டியன்:

பாண்டி அல்லது பாண்டில் என்னும் பெயர் முதலாவது வட்டத்தையும் பின்பு வட்டமான வட்டு, கிண்ணம், தாமரைப்பூ, காளை முதலிய பொருள்களையுங் குறிக்கும். வட்டத்தின் பெயர் காளையைக் குறிப்பது உருட்சியானது என்னும் கருத்துப்பற்றி. இளவட்டம் (வாலிபன்), கனவட்டம் (பாண்டியன் குதிரை) என்னும் பெயர்களை இதனுடன் ஒப்புநோக்குக. பாண்டி என்பது காளையைக் குறித்து, பின்பு அக் காளைபோன்ற வயதனாகிய பாண்டியனைக் குறித்தது. விடலை, காளை என்னும் மாட்டுப் பெயர்கள் வயவரைக் குறித்தல் காண்க. காட்டுமாடு மறத்திற்குச் சிறந்தது; எதிரியைக் கொன்றாலொழிய வேறு வினை செய்வதில்லை. புலியும் கோளரியும் அங்ஙனமல்ல. நாட்டுமாடு காயடிப்பு, சூடுபோடல், வேலைப்பழக்கம், குறைந்தவுணவு முதலியவற்றாலேயே தன் மறத்தை யிழக்கின்றது.

'மடுத்தவா யெல்லாம் பகடன்னான்' என்று சொல்லத் தக்க குணம் அரசாட்சிக்கு இன்றியமையாததாதலுங் காண்க.

வட்டாடுதலுக்குப் பாண்டி விளையாட்டு என்னும் பெயர் பாண்டிநாட்டில் மட்டும் வழங்கி வருகின்றது. வட்டு (வட்டமான சில்) பாண்டி என்பன ஒரு பொருட்சொற்கள். பாண்டி என்னும் பெயரே இல் என்னும் குறுமையீறு(Diminutive suffix) பெற்றுப் பாண்டில் என்றாகி, கிண்ணம் தாளக்கருவி முதலிய சில பொருள்களை யுணர்த்தும். குறுமையீறு பெறாத நிலையில், ஆழி (சக்கரம்) என்னும் பெரும் பொருளை யுணர்த்தும்.

ஒ.நோ : புட்டி—புட்டில், விட்டி—விட்டில்.

பாண்டில் என்னும் பெயர் காளையைக் குறிப்பது வடிவு பற்றியேயன்றி, அளவுபற்றியன்று. இனி, பாண்டி என்னும் பெயர் காளைக் கருத்தின்றி இளவட்டம் என்னும் பெயர் போல, வட்டக் கருத்தினாலேயே வயவன் என்னும் பொருளில் பாண்டியனைக் குறித்தது எனினும் பொருந்தும்.

வண்டி (வள் + தி) என்னும் பெயர் முதலாவது வட்டமான சக்கரத்தையுணர்த்திப் பின்பு ஆகுபெயராய் இன்று சகடத்தை யுணர்த்துகின்றது. சக்கரத்தை வண்டியென்னும் வழக்கு இன்றும் தென்னாட்டிலுள்ளது. சிறுவர் களிமண்ணாற் செய்த சக்கரத்தை வண்டி யென்பர். உழவர் கபிலையேற்றத்தின் மேலுள்ள உருளை (Pulley)யைக் கமலைவண்டி யென்பர்.

பஞ்சவன் :

பாண்டியன் தன் நாட்டை ஐந்து பகுதியாக்கி, ஐந்து பதிலாளிகளால் ஆண்டு வந்தமையால், பஞ்சவன் எனப் பட்டான். இதை விசுவநாத நாயக்கர் சரித்திரத்தாலறிக.[2]

குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்து நிலங்களை யுடையவன் பஞ்சவன் என்ற காரணங் கூறுவது பொருந்தாது, அது ஏனைச் சேரசோழர்க்கும் ஏற்குமாதலின்.

கௌரியன் :

மலைமகளுக்குப் பசுமை நிறம் பற்றிக் கௌரி யென்று பெயர். கௌரி பண்டொருகால் மலையத்துவச பாண்டியனின் மகளாய்ப் பிறந்து (தடாதகைப்பிராட்டி யென்னும் பெயருடன்), பாண்டிநாட்டை யாண்டதாகக் கூறும் திருவிளையாடற் கதை பற்றிப் பாண்டியனுக்குக் கௌரியன் என்னும் எச்சமுறைப் பெயர் (Patronymic) தோன்றிற்று.

அருச்சுனன் நீராட்டுப் போக்கிற்காகத் (தீர்த்த யாத்திரை) தென்னாடு வந்தபோது பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாண்டியன், பஞ்சவன், கௌரியன் என்னும் பெயர்கள், முறையே, பாண்டவர், பஞ்சவர், கௌரவர் என்னும் பெயர்களுடன் ஒலியில் ஒத்திருப்பதாலும், பாண்டியன் என்னும் பெயர் பாண்டவன் என்னும் வடிவிலும் இலங்கைச் சரிதை நூலில் வழங்குவதாலும், பாண்டியன் முதலிய பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்த வடமொழிப் பெயர்கள் என மயங்கினர் கால்டுவெல்.

பாரதத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகட்கு முந்தின இராமாயணத்திற் கூறப்பட்ட பாண்டியன், பாரத வயவராற் பெயர் பெற்றதாகக் கூறுவது, பாட்டனின் முதற் கலியாணத்திற் பேரன் பந்தம் பிடித்த கதையேயன்றி வேறன்று.

இற்றையுலகிலுள்ள நாகரிக நாடுகளெல்லாம், பெரும்பாலும் கிறித்தவ ஆண்டூழிக் குட்பட்டவையாதலானும், மேனாடுகள் தற்கால நாகரிகமடைந்ததெல்லாம் சென்ற மூன்று நூற்றாண்டுகட்குள்ளேயே யாதலானும், பொதுவாய் உலகம் வரவர எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து, சென்ற நூற்றாண்டில் அநாகரிகராயிருந்த பலநாட்டார் இந் நூற்றாண் டில் நாகரிகமடைந்திருக்கவும், தமிழர் இவ்விருபதாம் நூற் றாண்டிலும் மிகத் தாழ்நிலையிலிருப்பதாலும், தமிழின் அல்லது தமிழ் நாட்டின் சரித்திரம் தமிழர்க்கே தெரியாதிருப்பதாலும், மேனாட்டார்க்குத் தமிழர் நாகரிகத்தின் தொன்மை விளங்குவதில்லை. அவருள், இன்னெஸ் (Innes) என்பவரோ தமிழ்க்கழகமென்பதே இல்லையென்று கொண்டவர்.

சோழன் :

“வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து”

எனப் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் பாடியிருப்பதால், முத்தமிழ் நாட்டுள்ளும் சோழநாடு சோற்றிற்குச் சிறந்திருந்தமை அறியப்படும். இன்றும் சோழநாட்டின் சிறந்த பகுதியாயிருந்த தஞ்சை மாவட்டம், தமிழ்நாட்டு நெற்களஞ்சியமாயிருப்பது கவனிக்கத்தக்கது. சோறு என்பது முதற்கண் நெல்லரிசிச் சோற்றையே குறித்தது.

சொல் = நெல். சொல் — சொன்றி = சோறு. சொல் — சோறு. முதற்காலத்தில் நெல் சோழநாட்டில் இயற்கையாகக் கூட விளைந்திருக்கலாம்.

சொல் என்னும் சொல்லினின்றே, சோழம் என்னும் நாட்டுப்பெயர் தோன்றியுள்ளதாகத் தெரிகின்றது. லகரம் ளகரமாகவும் அதன்வாயிலாய் ழகரமாகவும் திரிதல் இயல்பே.

எ - டு : கல் - கள் - காளம் - காழகம் = கருமை. கல் + து = கஃறு. கஃறெனல் = கறுத்திருத்தல்.

“கஃறென்னும் கல்லத ரத்தம்”
(தொல். எழுத்து. 40. உரை)

சுல் — சுள் — சூள் — சூழ்.
துல் — துள் — தொள் — தொழு — தோழன்.
நுல் — நுள் — நுளை — நுழை — நூழை.
புல்—பொல்—பொள்—போழ்.
கில்—கிள்—கீள்-—ழ்.
சொல்—(சோல்)—(சோளம்)—சோழம்-சோழன்.

இடங்கள் நிலைத்திணையால் (தாவரம்) பெயர்பெறுவது மிகப் பொதுவியல்பாகும்.

கா : நாவலந்தீவு, பனைநாடு, நெல்வேலி, ஆர்க்காடு, எருக்கங்குடி, தில்லை, கடம்பவனம், குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையால் வந்தவையே.

சோழன் என்னும் பெயர் வடமொழியிலும், ஆரியத் தன்மையடைந்துள்ள தெலுங்கிலும் சோட(ன்) என்று திரியும்.

கா : தமிழ் தெலுங்கு வடமொழி
தமிழம் திரவிடம் (திராவிடம்)
கிழங்கு கெட்ட
கோழி கோடி

சேரன்:

தமிழகத்தின் பெருமலைத்தொடரான குடமலை, சேர நாட்டிலிருப்பதால், சேரனுக்கு மலையன், மலையமான், மலைநாடன், வானவரம்பன் என்னும் பெயர்கள் உண்டு.

சாரல் என்னும் பெயர் மலையடிவாரத்தையும் மலைப் பக்கத்தையும் குறிக்கும். குறிஞ்சிநிலத்திற்கும் குறிஞ்சித் தலைவனுக்கும் முறையே சாரல், சாரனாடன் என்னும் பெயர் கள் தொகைநூல்களிற் பயின்றுவருகின்றன. சார் என்னுஞ் சொல் சேர் என்றானாற் போல, சாரல் என்னுஞ் சொல்லுஞ் சேரல் என்றாகும். சேரநாடு குடமலையின் இருமருங்குமுள்ள சாரலாதலின், அதையாளும் சேரன் சேரல் எனப்பட்டான். இது இடவாகுபெயர்.

சேரல்—சேரன். சேரல்—சேரலன்—கேரளன்.
ல்—ன், போலி: கா : உடல்—உடன், வெல்—வென்.
ச—க,,,,, சீர்த்தி—கீர்த்தி, செய் (தெ)—(சை)—கை.
ல—ள, ,,,, செதில்—செதிள், மங்கலம்—மங்களம்.

தமிழ்மொழியின் பழைமை

தமிழ்மொழி அசைநிலை முதலிய ஐவகை நிலைகளை யடைந்துள்ளமையாலும், நகை, வளை முதலிய தற்காலப் பகுதிகள் முற்காலத்துத் தொழிற் பெயரா யிருந்தமையாலும்,சிவன், முருகன் முதலிய தெய்வங்களைத் தலைக் கழகவுறுப் பினராய்க் கூறியிருத்தலாலும், சிவனே தமிழை உண்டுபண் ணினார் என்னுங் கூற்றாலும் தமிழின் பழைமையை யறியலாம்.

தமிழ்நூல்களின் பழைமை

தொல்காப்பியர்

பெயர் - தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினியென்று சொல்லப்படுவதால், தொல்காப்பியர் என்னும் பெயர் சிறப்புப்பெயரே யாகும். இப்பெயருக்குப் பழைமையான காவிய மரபைச் சேர்ந்தவரென்று பொருள் கூறப்படு கின்றது. தொல்காப்பியர் கவியென்ற முனிவரின் மரபின ராயின், காவியர் அல்லது காப்பியர் என்றழைக்கப்படுதல் இயல்பே. ஆனால், பல்காப்பியர் என்று இன்னொரு புலவர் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டி லிருந்தனர். தொல்காப்பியர் என்னும் பெயருக்குப் பழைமையான காவிய மரபினர் என்னும் பொருள் பொருந்துமாயினும், பல்காப்பியர் என்னும் பெயருக்குப் பல காவிய மரபினர் என்று பொருள் கூறல் பொருந்தாது. ஆகவே, காப்பியர் என்னும் பெயருக்கு வேறொரு பொருளிருத்தல் வேண்டும்.

அகத்தியர் காலத்திற்கு முன், சிறிது காலம் தமிழ் நாட்டில் தமிழாராய்ச்சி குன்றியிருந்தமை, சில சான்றுகளால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியப் பாயிரத்தில், 'முந்து நூல் கண்டு' என்று கூறிருப்பதாலும், பிற சான்றுகளாலும், தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில பழைய தமிழ்நூல்களைக் கண்டு பிடித்தாரென்றும், அதனால் தொல் காப்பியரெனப்பட்டார் என்றும் தெரிகின்றது. தொன்மையான காப்பியங்களை யறிந்தவர் தொல்காப்பியர் என்றும், பல காப்பியங்களை யறிந்தவர் பல்காப்பியர் என்றும் கூறப்பட்டனர். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்றும், பல்காப்பியர் இயற்றிய நூல் பல்காப்பியம் என்றும் அதனதன் ஆசிரியராற் பெயர் பெற்றன.

வடநூல் வகைகளில் ஒன்றானதும் காதை நூலுமான காவியத்தின் பெயர், வடமொழியில் காவியமே தோன்றுமுன், தமிழிலக்கண நூலுக்குப் பெயரான தெங்ஙனமெனின், கூறுகின்றேன்.

வடநூல்வகைகளில் ஒன்றான புராணம் என்னும் காதை வகைக்கு, படைப்பு, வழிநிலைப் படைப்பு, மரபுவழி, மனுவூழி, சரித்திரம் என்னும் ஐந்தும் கூறுவது இலக்கணமாகக் கூறப்பட்டுள்ளது. ஆயினும், வடமொழியில் புராணமே தோன்றுமுன், தமிழ்நூல்களுக்குப் புராணம் என்னும் பெயர் வழங்கினமை “இனி இடைச்சங்கமிருந்தார்.... என்ப. அவர்க்கு நூல்... மாபுராணமும் ... பூதபுராணமுமென இவையென்ப”[3]என்பதனால் அறியப்படும். இங்ஙனமே காவியம் என்னும் பெயரும் என்க. இதனால், காவியம், புராணம் என்னும் பெயர்கள், முறையே, கவியினால் (செய்யுளாலும் நூற்பாவா லும்) செய்யப்பட்டது, பழைமையானது என்னுங் கருத்தில், முதன்முதல் தமிழ்நாட்டில் தமிழ்நூல்களுக்கே ஆரியரால் வழங்கப்பட்டன என்பதும், அவை வடமொழியிற் காதை நூல்களின் பெயரானதும், காவியத்திற்கும் புராணத்திற்கும் இப்போது உள்ள இலக்கணம் வகுக்கப்பட்டது பிற்காலத்தில் என்பதும் அறியப்படும்.

குலம்: தொல்காப்பியர் தம்மை ஆரிய வேத அறிஞர் என்று காட்டிக் கொள்வதாலும், சில ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருப்பதாலும், தமிழர் களவியலை ஆரியர் காந்தரு வத்திற் கொப்பாகக் கூறியிருப்பதாலும் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் தலைமையில் தம் நூலை அரங்கேற்றியதாலும் தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக்க ளாலும் தொல்காப்பியர் ஆரியர் என்று துணியப்படும்.

தொல்காப்பிய வழுக்கள்

(1) “சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே”
(தொல். மொழி. 29)


“சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி — சவிசரடு
சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை”

என்பது நன்னூல் (எழு. 51) மயிலைநாதர் உரை மேற்கோள்.

சக்கை, சட்டம், சடுதி, சண்டை, சதை, சப்பு, சமன், சமர், சமை, சருச்சரை, சரேல், சல்லி, சலசல, சலி, சவம், சவை, சழி, சள்ளை, சளை முதலிய பல சகர முதற்சொற்கள் செந்தமிழ்ச் சொற்களாதலின், சகரம் தமிழில் மொழிமுதல் வராது என்பது வழுவே.

இனி, சகரக்கிளவிபற்றித் தொல்காப்பியர்மீது வழுவைச் சுமத்தாது, ஏட்டிலிருந்தெழுதினோர்மீது சுமத்துவர் துடிசை கிழார் அ. சிதம்பரனார். அவர் கூறுமாறு :—

“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா வுயிரொடும் செல்லுமார் முதலே”
(தொல். மொழி. 28)


“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ, ஐ, ஒள வெனும் மூன்றலங் கடையே”
(தொல். மொழி. 29)


“இவ் விரண்டு சூத்திரங்களும் ஆதியில், அதாவது, ஏட்டுச் சுவடியில் இருக்குங் காலத்து, ஒரே சூத்திரமாகத் திகழ்ந்தன.

“சுவடியில் உள்ளபடி ஈண்டுத் தருவாம்:—

“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அவை ஒளஎன்னும் ஒன்றலங் கடையே”

“க் - த் - ந் - ப் - ம் என்னும் ஐந்து மெய்யெழுத்துகளும், எல்லா உயிரெழுத்துகளோடும் கூடிப் பெருவரவிற்றாய் மொழிக்கு முதலாக வரும்.

“ச் என்ற மெய்யெழுத்தும் அவ்வைந்து மெய்யெழுத்துகளைப் போலவே, சிறுவரவிற்றாய், எல்லா உயிரெழுத்துகளோடுங் கூடி மொழிக்கு முதலாக வரும்.

“ஆனால், க் - ச் - த் - ந் - ப் - ம் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் ஒள என்னும் உயிரெழுத்தோடுங் கூடி மாத்திரம் மொழிக்கு முதலாக வரா” என்பதாம்.

"(எ - டு :) நாய் கவ்விற்று (கௌவிற்று என வராது)” [4] என்பது.

இங்ஙனமே ஏனை மெய்கட்கும் அவர் காட்டுக் காண்பித்துள்ளார். இவ் வுரையும் பொருத்தமாகவே தோன்று கின்றது.

இக்காலத்துத் தமிழ்ப் பேராசிரியர் சிலர், பண்டைத் தமிழிலக்கணங்களெல்லாம் செய்யுள் நடைமொழிக்கே ஏற்பட் டவையென்றும், பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்ததினால் அதிற் பல உலக வழக்குச் சொற்கள் இடம்பெறவில்லை யென்றும், அறியாது தொல்காப்பியரைக் கடக்கும் அல்லது தப்புவிக்கும் முகமாக, அவர் காலத்திற்கு முன் சகர முதற் சொற்களே தமிழில் இல்லையென்று தாம் மயங்குவதோடு தமிழ் மாணவரையும் மயக்கி வருகின்றனர். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலேயன்றி அகரமுதலியன்று. ஆதலால், அதில் ஒரு சொல் இல்லாவிடின் அது தமிழிலேயே இல்லையென்பது, மொழியறிவும் உலக வழக்கறிவும் இன்மை யையே காட்டும். சகர முதற்சொற்கள் இலக்கிய வழக்கில் மட்டு மன்றி உலக வழக்கிலும் ஏராளமாயுள்ளன. உலக வழக்குச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாதனவாகவும் அதன் சொல் வளத்தைக் காட்டுவனவாகவும் தொன்றுதொட்டு வழங்கி வருவனவாகவுமிருக்கின்றன. அவற்றுட் பல வருமாறு :—

சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சரகர், சரி, சருகு, சருவம், சல்லடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி-சாட்டி), சவட்டை-சாட்டை, சவட்டு - சமட்டு - சமட்டி - சம்மட்டி), சவடி, சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு - சறுக்கு, சன்னம்.

மேலும், தனித்தும் இரட்டியும் வரும் பல குறிப்புச் சொற்களும் சகர முதலவாய் உள.

எ-டு : சக்கு, சகசக, சட்டு, சடக்கு, சடசட, சடார், சதக்கு, சம், சர், சரசர, சரட்டு, சரேல், சல்சல், சலசல, சள், சள்சள், சளசள, சளப்பு, சளார், சறுக்கு.

இனி, இற்றைச் செகர முதற் சொற்கள் சில பண்டு சகர முதலவா யிருந்தன வென்றும் அறிதல் வேண்டும்.

எ-டு : சத்தான் - செத்தான், சக்கு - செக்கு.

இவற்றை யெல்லாம் நோக்காது, குருட்டுத்தனமாய்த் தொல்காப்பியரைக் காத்தற்பொருட்டுத் தொல்பெருந் தமிழின் பெருமையைக் குலைப்பது அறிஞர்க்கு அழகன்று.

சவதலி, சம்பளி, சமாளி என்பன போன்ற திராவிடச் சொற்கள் பிற்காலத்தனவாயிருக்கலாம். ஆயின், மேற் காட்டிய தூய தென்சொற்களெல்லாம் தொன்றுதொட்டவையே.

சம்பு என்பது சண்பு என்னும் இலக்கியச் சொல்லின் திரிபா யிருப்பினும், சம்பங்கோரை, சம்பங்கோழி என்பன தொன்றுதொட்ட உலக வழக்கே.

(2) “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்”
(தொல். மொழி. 34)


என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோவெனின்,

“நுந்தை யுகரங் குறுகிமொழி முதற்கண்
வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் - சந்திக்

குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி
மயலணையு மென்றதனை மாற்று”

“இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க” என்பது நன்னூல் மயிலைநாதருரை (நன். எழு. 51)

(3) “வகரக் கிளவி நான்மொழி யீற்றது”

(தொல். மொழி. 48)

அவ், இவ், உவ், எவ், தெவ், என வகரமெய் யீற்றுச் சொற்கள் ஐந்தாதல் காண்க.

(4) “மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப
புகரறக் கிளந்த அஃறிணை மேன”

(தொல். மொழி. 49)

என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் ஒன்பதும் மயங்காதன வெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன்,மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க” என்பது நன்னூல் (எழு. 67) மயிலைநாதருரை.

(5)“ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்

முந்தை ஒன்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்”

(தொல். குற். 40)

ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்பு நோக்குக.

தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது, 900 என்னும் எண்ணைக் குறித்தது, தொண்டு + நூறு = தொண்ணூறு. இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும், பிற மூன்றாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக.

தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. தொண்டு ஆயிரம் = தொள்ளாயிரம் - தொளாயிரம். இதை ஆறாயிரம், ஏழாயிரம், எண்ணாயிரம் என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்பு நோக்குக.

தொண்டு என்னும் பெயர், எங்ஙனமோ, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது; ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில், தொடைத் தொகை கூறுமிடத்து,

“மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (செய். 101)”

என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். “தொண்டுபடு திவவின்”[5] என்றார் பெருங்கௌசிகனாரும்.

எண்ணுப்பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்டவேண்டியதாயிற்று.

எண் பண்டைப்பெயர் இற்றைப்பெயர்

9

|| தொண்டு || ஒன்பது (தொன்பது)

90

|| தொண்பது || தொண்ணூறு

900

|| தொண்ணூறு || தொள்ளாயிரம்

9000

|| தொள்ளாயிரம் || ஒன்பதினாயிரம் (ஒன்பது + ஆயிரம்)

ஒன்பதினாயிரம் என்னும் கலவை எண்ணுப்பெயர் பண்டை முறைப்படி (1000 x 9) 9000 என்னும் எண்ணைக் குறிப்பதாகும்.

ஒன்றுமுதல் பத்துவரையுள்ள ஏனையெண்ணுப் பெயர்களெல்லாம் தனிமொழிகளாயிருக்க ஒன்பது என்பது மட்டும் தொடர்மொழியாயும், பது (பத்து) என்னும் வருமொழியைக் கொண்டதாயுமிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயர் முதன்மெய் நீங்கி ஒன்பது என்று தமிழில் வழங்குகின்றது. தெலுங்கில் முதன்மெய் நீங்காமல் தொம்மிதி (தொனுமிதி) என்று வழங்குவதுடன், எட்டு என்னும் எண்ணுக்கும் எனுமிதி எனப் பத்தாம் இடப்பெயர் வழங்கி வருகின்றது.

ஒன்பது என்னும் பெயருக்கு, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவது, 'பொருந்தப் புகலல்' என்னும் உத்திபற்றியது. இக் கூற்றிற்கு உருதுவிலும் இந்தியிலும் உள்ள, உன்னீஸ் (19), உன்தீஸ் (29), உன்சாலிஸ் (39), உன்சாஸ் (49), உன்சட் (59), உனத்தர் (69), உன்யாசி (79) என்னும் எண்ணுப்பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும், அப் பெயர்கள் ஒழுங்கற்ற முறையில மைந்தவை யென்பதை, நவாசீ (89) நின்னா நபே (99) என்னும் பெயர்களாலறியலாம்.

தொண்டு + பத்து = தொண்பது (தொன்பது - ஒன்பது), தொண்டு + நூறு = தொண்ணூறு, தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பது எளிதாயும் இயற்கையாயு மிருப்பவும், இங்ஙனம் புணர்க்காது, ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றும், ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்றும், செயற்கையாகவும் ஒலிநூலுக்கும் தருக்கநூலுக்கும் முற்றும் மாறாகவும் தொல்காப்பியர் புணர்த்தது, அவருக்கு முன்னமே தொண்டு என்னும் எண்ணுப்பெயர் வழக்கற்றுப் போனதையும், தொல்காப்பியத்திற்கு முந்தின தமிழிலக்கண நூல்களில் மேற்கூறிய எண்ணுப்பெயர்களைத் தவறாகச் செய்கைசெய்து காட்டியதையும் குறிப்பதாகும். இதனால் தமிழின் தொன்மையும் தமிழ் இலக்கணத்தின் தொன்மையும் அறியப்படும்.

தொல்காப்பியரைப் பின்பற்றி, நன்னூலாரும் தொண்ணூறு தொள்ளாயிரம் என்னும் புணர்மொழி யுறுப்புகளைப் பிழைபடக் கூறியுள்ளார்.

கால்டுவெல் இவற்றின் ஒவ்வாமையை அறிந்தே, தமிழர் எச்சொல்லினின்றும் எச்சொல்லையும் திரித்துக்காட்டுவர் என்று கூறியுள்ளார்.

(6) ‘ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட

ஊஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்’ (தொல். குற். 58)

இதன் வழுநிலை முன்னர்க் கூறப்பட்டது. இந் நூற்பாவில், "இயற்கைத் தென்ப" என்று கூறியிருப்பதால், இக் கூற்று முன்னோரது என்பது புலனாகும்.

(7) “நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே” (தொ.பு.30)

“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
அப்பால மொழிவயின் இயற்கை யாகும்” (தொ.பு.31)

என்றார் தொல்காப்பியர். இதைப் பிரயோக விவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு,

“இனித் தொல்காப்பியரும், தமிழில் 'எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே' என்றாராயினும், வடநூலில் எழுவாய் வேற்றுமை இவ்வாறிருக்குமென்றறிதற்கு, நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிகமாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமையாக்கினாற்போல, 'அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை' என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய் வேற்றுமை யென்னும் பிரதமாவிபத்தியாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பனவற்றையும் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய் வேற்றுமை யாக்காமையாலும், 'எல்லா நீயிர் நீ' எ-ம், 'நீயிர் நீயென வரூஉங் கிளவி' எ-ம், பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிகமாகச் சூத்திரஞ் செய்தலானும், 'அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை' என்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய் வேற்றுமை இவ்வாறி ருக்குமென்று தமிழ்நூலால் அறிதற்கே செய்தாரென்க. நிலை மொழி விகாரமொழி எட்டாம் வேற்றுமையானாற்போல நும் மென்னு நிலைமொழி விகாரம் முதல் வேற்றுமையாமென்க” எனக் கூறியுள்ளார். (பிரயோக விவேகம், நூ. 7, உரை)

பார்ப்பனர் தமிழின் இயல்பை அறியாமைக்கு, அல்லது தமிழை வடமொழி வழித்தாகக் காட்டச் செய்துவரும் முயற்சிக்கு, இப் பிரயோக விவேகக் கூற்று ஒரு நல்ல காட்டாகும்.

இலக்கணக் கொத்தின் ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகர்,

“. . . . . . . .. . . . . .விகாரப் பெயரே
பெயர்ப்பின் விகுதி பெறுதலே யாயவன்
ஆனவன் ஆவான் ஆகின் றவன்முத
லைம்பாற் சொல்லும் பெயர்ப்பி னடைதலே
யுருபென வெவ்வே றுரைத்தார் பலரே”

என்று நூற்பாவியற்றி,

“தன், தம், நம், என், எம், நின், நும் என்னுந் திரிபில் பெயர்கள் உருபுகளையும், உருபோடு வருமொழிகளையும், உருபின்றி வருமொழிகளையும் ஏற்று நிற்கும். இப் பெயர்கள் எழுவாயாங்காற் றிரிந்தே நிற்கும். இத் திரிபே யுருபென்க.

“இனி இறைவன் கடியன், காக்கும்; தையலாள் வரும்; உமையாளமர்ந்து விளங்கும்; கோன் வந்தான்; கோக்கள் வந்தார்; மரமது வளர்ந்தது; மரங்கள் வளர்ந்தன, இவ் விகுதிகளே உருபென்க. இவ் வுருபுகளைத் தொகுத்துமறிக.

“இனி ஆயவன்முதல் நாற்சொல்லும் பாவால் இருபதாம். அவையே உருபு. சாத்தனானவன் வந்தான், இதனுள் எழுவாயும் உருபும் பயனிலையுங் காண்க. பிறவு மன்ன. இவற்றைத் தொகுத்து மறிக” என்று உரையும் கூறி,

இறுதியில், “இவ்வெண்விதியோ டெழுந்த சூத்திரம் பிறர் மதங் கூறலேயாம். தன்றுணி புரைத்தலன்று” என்று அதன் புன்மையையும் குறித்தார். இங்ஙன மிருக்கவும், இன்றுஞ் சில மாணவரிலக்கண நூலாசிரியர், ஆயவன் முதலிய பெயர்கள் என்னும் பகுதியடியாய்ப் பிறந்த வினையாலணையும் பெயர்களென்பதையும்; அவை ஆயவனை, ஆயவனால் என்று வேற்றமையுருபேற்கு மென்பதையும்; கட்டுரைச் சுவைபடப் பெயர்களை நீட்டவேண்டிய விடத்து வருவனவேயன்றி, இன்றியமையாது பெயர்களைத் தொடர்வனவல்லவென்பதையும் அறியாமல், தமிழிலக்கணத்திற்கு முற்றிலும் முரணாக, அவற்றை முதலாம் வேற்றுமை யுருபுகளென்று வரைந்து வருகின்றனர்.

இனி, ஆயவன், ஆனவன் என்னும் வடிவங்கள் வெவ்வேறு சொற்களல்ல வென்பதையும்; அவற்றை வெவ்வேறாகக் கொள்ளின், ஆகிறவன் ஆபவன் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதையும்;ஆ என்னும் பகுதியினின்று பிறந்தவைபோலவே என் என்னும் பகுதியினின்று பிறந்த, என்றவன், என்கின்றவன் முதலிய சொற்களும் பெயரோடு கூடி வழங்குமென்பதையும் அவர் நோக்கிற்றிலர்.

நும் என்னும் பெயர் நூம் என்பதன் வேற்றுமைத் திரிபடியென்றும்.நீயிர் என்னும் பெயர் நீ என்பதன் பன்மை யென்றும் அறியாது, தொல்காப்பியர் அவ் விரண்டையும் ஒன்றாயிணைத்ததே வழுவாயிருக்க, அவர் நும் என்ப தையும் நீயிர் என்பதையும், முறையே பிராதிபதிக மென்றும் பிரதமா விபக்தியென்றும் கொண்டாரென்று வழுமேல் வழுப்படக் கூறினர் பிரயோக விவேகர். தொல்காப்பியர் காலத்தில் வட மொழியில் இலக்கணநூலேயில்லை யென்பது பின்னர் விளக்கப்படும்.

நீன், நீம் என்பன முறையே முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். நீன் என்னும் வடிவம் இன்றும் தென் னாட்டில் உலக வழக்கில் வழங்கினும், அதன் கடைக்குறை யாகிய நீ என்பதே இன்னோசை பயப்பதாகப் புலவராற் கொள்ளப்பட்டு நூல்வழக்கிற் குரியதாயிற்று. பிற்காலத்தில், நீ யென்பதனொடு இர் என்னும் பலர்பாலீறு சேர்க்கப்பட்டு, நீயிர், நீவிர் என்னும் முன்னிலைப் பன்மை வடிவங்கள் தோன்றின. நீம் என்னும் பன்மை வடிவம் நூம் என்று திரிந்தது. இகர ஈகாரம் உகரவூகாரமாகத் திரிதல் இயல்பு.

கா : பிறம் - புறம்
பீளை - பூளை
நூ. வ. பிட்டு - புட்டு
பீடை - பூடை
உ. வ
(கொச்சை)

நூம் என்பது வேற்றுமை யேற்கும்போது நும் என்று குறுகும். ஆகவே, நீயிர் என்பதும் நும் என்பதும் வெவ் வேறு வடிவங்களினின்றும் பிறந்தவை யென்பது பெற்றாம்.

நும் என்னும் பெயர் நீயிர் என்னும் பெயராய்த் திரிந்த தாகச் செய்கை செய்வது, ஒன்பது பத்து என்னும் எண்ணுப் பெயர்கள் சேர்ந்து, தொண்ணூறு என்னும் பெயர் தோன் றிற்று என்று கூறுவதையே ஒக்கும்.

8) ”ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே”

(தொல். மொழி. 39)

இதில், நொ என்பது பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நோ என்பதே பகுதியாகும். நொ என்பது அதன் குறுக்கமே.

ஏவல் இ. கா. நி. கா எ. கா. பெயர்
நோ நொந்தான் நோகிறான் நோவான் நோய்
காண் கண்டான் காண்கிறான் காண்பான் காட்சி

நோ என்பது ஏவல் வினையாகும்போது, குறுகியே நொம்மாடா, நொந்நாகா என்று நிற்கும். நொ என்பதே இயல்பான வடிவமாயின், அது 'து' என்னும் வினை துக்கி றான், துப்பான் என்றாவது போல, நொக்கிறான், நொப்பான் என்று நிகழ்கால எதிர்காலங்களில் ஆதல் வேண்டும். அங்ஙனமாகாமை காண்க.

இனி, “உச்ச காரம் இருமொழிக் குரித்தே” என்ற வரையறை கூட வழுவோவென்றையுறக் கிடக்கின்றது.

இங்ஙனம் தொல்காப்பியர் பல இடத்தில் தவறினதற்குக் காரணம், அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. கால்டுவெல் ஐயர் ஐம்பதாண்டுகள்போல் தமிழை யாராய்ந்தும், அவரது ஒப்பியலிலக்கணத்தில் சிலவிடத்துத் தவறினது, அவரது அயற் பிறப்பாலேயே.

இங்ஙனம் சில தொல்காப்பிய வழுக்களை எடுத்துக் கூறியதால், தொல்காப்பியத்தை இழித்துக்கூறினேன் என்று எள்ளளவும் எண்ணற்க. அங்ஙனம் கூறுபவன் கடைப்பட்ட கயவனே என்பதற்கு ஐயமில்லை. இற்றைத் தமிழ்நிலையின் உயிர்நாடி தொல்காப்பியம் ஒன்றே. சில குற்றத்தைக் குற்றமென்று கூறினேனேயொழிய வேறன்று என்க.

காலம்: தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய” என்றும், தொல்காப்பியரை “ஐந்திரம் நிறைந்த” என்றும், தொல் காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் அடை கொடுத்துக் குறிப்பதனால் ஆரிய மறையை நாலாக வகுத்த வேதவியாசர் காலத்திற்கும், ஐந்திரத்திற்கும் பிற்பட்ட 'அஷ்டாத்யாயீ'யை இயற்றிய பாணினி காலத்திற்கும், தொல் காப்பியர் இடைப் பட்டவர் ஆவர். பாரதக் காலத்தினராகிய வேதவியாசர் காலம் கி.மு. 1000, பாணினி காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு.

தொல்காப்பியர் இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவர். அகத்தியற்கு மிகப் பிற்பட்டவர். அவரை அகத்தியர் மாணவர் என்பது காலவழுவாகும். அகத்தியர் பாரதத்திற்கு முந்தியவர்; தொல்காப்பியர் பிந்தியவர்; இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவரே.

தொல்காப்பியர்க்குக் கழகத் தொடர்பின்மையினாலேயே அவர் நூல் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப் பெற்றது.

கடைக்கழகக் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை என்பது, பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் பேரா. இராமச்சந்திர தீட்சிதர் முடிபு.

“விண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” (தொல். 1336)

என்று தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தை வண்ணித் திருப்பதால், எள்ளளவும் எதிர்ப்பின்றி மூவேந்தரே முடியு டையோராய் முத்தமிழ் நாட்டையும் தம் முன்னோர்போல் அறம் பிழையாது ஆட்சி செய்துவந்த நற்காலம் தொல்காப்பியரென்பது என்பது அறியப்படும்.

மூவேந்தரும் தம்முள்ளும் தம் குறுநில மன்னரொடும் அடிக்கடி நிகழ்த்திய போரால் அமைதியின்மை தமிழகத்தில் நிலவியிருந்தமையே, கடைக்கழக இலக்கியம் அளிக்கும் காட்சியாகும். ஆதலால் தொல்காப்பியர் அத்தகைய காலத் திற்கு மிக முற்பட்டவர் என்பது தெளிவு.

“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல” (தொல். 510)

என்ற இலக்கண வரம்பு திருக்குறளிலும் கடைக்கழகச் செய்யுளிலும் மீறப்படுவதால், தொல்காப்பியர் காலம் கடைக் கழகத்திற்கு மிக முற்பட்டதாதல் வேண்டும்.

இனி, மேற்குறித்த 1336ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் “நாற்பெயரெல்லையகம்” என்றொரு தொடர் மொழியால் தமிழகத்தைக் குறித்திருப்பது உற்று நோக்கத் தக்கது. நால் வேறுபெயர் கொண்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பது அத் தொடரின் பொருள்.

நால்வேறு பெயர்கொண்ட எல்லையாவன : வடக்கில் வடுகநாடும் தெற்கில் குமரியாறும் கிழக்கில் கீழைக்கடலும், மேற்கில் குடமலையும்.

முதற்காலத்தில் குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்கு நாடே திருச்சிராப்பள்ளிக் கருவூரைத் தலைநகராகக் கொண்ட சேரநாடா யிருந்தது.

“சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில்”

என்று அருணகிரிநாதர் பாடுதல் காண்க.

பிற்காலத்தில் கொங்குநாடு ஒரு நிலையான போர்க்களமாய் மாறியதாலும், தொல்காப்பியர் காலத்திற்குப்பின் மேலைக் கடற்கரை சற்று விரிவடைந்ததினாலும், சேரன் தன் அக நாட்டுத் தலைநகரையும் மேலைத் துறைநகராகிய வஞ்சிக்கு மாற்றி அதற்குக் கருவூர் என்றும் பெயரிட நேர்ந்தது.

மேலைக்கடற்கரையின் விரிவுபற்றியே, பரசுராமர் தம் தவ நிலையத்திற்கு இடம்வேண்டி, ஓர் அம்பெய்து மேலைக் கடலைப் பின்வாங்கச் செய்தார் என்ற கதையும் எழுந்தது.

'நாற்பெய ரெல்லை' என்றது நாற்றிசை எல்லைகளையேயன்றி நால்வேறு மண்டலங்களையன்று. மேலும், பிற்காலத் துருவான மண்டலங்கள் நான்கல்ல, ஐந்தாகும். அவை, பாண்டி மண்டலம், சோழமண்டலம், சேரமண்டலம் அல்லது மலை மண்டலம், தொண்டைமண்டலம், கொங்கு மண்டலம் என்பன வாகும்.

சேரநாட்டார் கிழக்கிலிருந்து சென்றவர் என்பதற்கு, அவர் நாட்டமைப்பிற்கு நேர்முரணான கிழக்கு மேற்கு என்னும் சொற்களே போதிய சான்றாம்.

இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.

இனி, “முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பியனார்க்கு முன்னர் இருந்தார் எனக் கூறுதற்கு ஒரு தடை உளது. தொல்காப் பியனார், வியங்கோள் தன்மை முன்னிலையில் வாராதெனக் கூறுகின்றனர். அவ்வாறிருக்க நீ நிலீஇயர் என்றது முடி நாகராயர் செய்யுளிற் காணப்படுகின்றது. படர்க்கையில் மாத்திரம் வழங்கப்பட்ட வியங்கோள், பிற்காலத்தே முன்னிலையிலும் தன்மையிலும் வழங்கப்படுதல் இயற்கை யாதலின், முடிநாகராயர் தொல் காப்பியனார்க்கு முற்பட்டவ ரென எவ்வாறு கூற முடியும்?” [6] என்கிறார் சாத்திரியார்.

“......முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு
மன்னா தாகும் வியங்கோட் கிளவி” (தொ.வி.29)

என்பது சாத்திரியார் குறித்த நூற்பாவாகும். இதன் பொருளையே சாத்திரியார் நன்றாயறியவில்லை. 'மன்னாதாகும்' என்னும் வினைக்குப் 'பெரும்பாலும் வராது' என்பதே நூற்பாவிற் குறித்த பொருள்.

ஒருவேளை,

“கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே”

என்னும் நூற்பாவில் (தொல். இடை. 4) மிகுதிப் பொருள் மன்னைச் சொற்குக் குறிக்கப்படவில்லையே என்று அவர் கூறலாம்.

தமிழிலக்கண முன்னூல்கள் மிகப் பழையவாதலானும், அவற்றில் பல இலக்கணச்செய்திகள் முற்றும் எழுதப்படாமையானும், தொல்காப்பியம் பல பற்றியங்(விஷயம்) களில், முன்னூல்களிற் கூறியவற்றையே கூறுதலானும், தொல்காப்பியத்தில் ஒன்றைப்பற்றிய எல்லாச் செய்திகளையுங் காணமுடியாது.

நன்னூலார் பிற்காலத்தவராதலின், தொல்காப்பியரினும் விரிவா யாராய்ந்து,

“மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபே றாகும்”

என்று மன்னை யிடைச்சொற்பொருள் ஆறாகக் கூறியுள்ளார். மிகுதி = பெரும்பான்மை. நன்னூலாரும் சில பொருள்களை விட்டுவிட்டனர்.

இனி, தொல்காப்பிய நூற்பாவிலுள்ள 'மன்னாதாகும்' என்னுஞ் சொல் வினைச்சொல்லாதலின், இடைச்சொல்லாகாதெனின், இடைச்சொல் இயற்கையினாயது, பெயரினாயது, வினையினாயது என மூவகையென்றும், அவற்றுள் மன் என்னும் சொல் வினையி னாயதென்றும் கூறிவிடுக்க.

கா : இயற்கை பெயர் வினை
ஆவா! ஐயோ! (என்றான்) என்று
சீ (பாவம்!) (போன்றான்) போல
சலசல முறையோ! (கொண்டான்) கொண்டு
(3-ம் வே.உ.)

“கசதப மிகும்வித வாதன மன்னே” என்று, மன்னையிடைச் சொல்லை, நன்னூலார் மிகுதிப் பொருளில் வழங்கியதுங் காண்க.

வியங்கோள் வினை வாழ்த்து, சாவிப்பு, ஏவல், வேண்டுகோள், வஞ்சினம், விருப்பம், சொல்லளிப்பு முதலிய பல பொருள்களில் வரும். இவற்றுள், வாழ்த்து முதல் வேண்டுகோள் வரையுள்ள பொருள்கள் தன்மைக்கும், வஞ்சினம் சொல்லளிப்பு என்னும் பொருள்கள் முன்னலைக்கும் படர்க் கைக்கும் ஏற்கா. வியங்கோள் வினைக்குச் சிறந்த பொருள்களான வாழ்த்து,வேண்டுகோள் என்னு மிரண்டும் அவற்றின் மறுதலைகளான,சாவிப்பு, ஏவல் என்பனவும் தன்மைக்கு ஏற்காமையின், வியங்கோள் பெரும்பாலும் தன்மையில் வராது எனக் கூறப்பட்டது. ஆனால் முன்னிலைக்கு இவ் வரையறை கூறினது தவறேயாகும். ஆகையால், முரஞ்சியூர் முடிநாகராயர் பாட்டில் 'நிலீயர்' என்னும் வியங்கோள் வினை வந்திருப்பது கொண்டு,அவரைத் தொல்காப்பியருக்குப் பிந்திய வராகக் கூறமுடியாது. மேலும், தொல்காப்பியர் காலத்திலேயே அதோடு தொல்காப்பியத்திலேயே, தொல்காப்பிய இலக்கணங்கட்கு மாறான சில சொல்வடிவங்களைக் காணலாம்.

இதுவரை, தனித்தமிழ்க் கருத்துகளையே தழுவின முழு நிறைவான தமிழ் இலக்கணமாவது, இலக்கண உரையாவது இயற்றப்படவே யில்லை. ஆதலின்,மொழிநூலைத் துணைக் கொண்ட தமிழ் முறையான நடுநிலையாராய்ச்சி யாலன்றி, உண்மையான தமிழிலக்கணத்தை யறியமுடியாத தென்பது தேற்றம். தொல்காப்பியம் ஒன்றையே தழுவுவார் தமிழியல்பை அறியமுடியா தென்பதற்கு ஒரு காட்டுக் கூறுகின்றேன்.

கள் என்னும் ஈறு பலர்பாலுக்குரியதாகத் தொல்காப் பியத்தில் விதிமுறையிற் கூறப்படவில்லை. ஆயினும், “உயர் திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்று கள் ஈறுபெற்ற மக்கள் என்னும் பலர்பாற் பெயரைத் தொல்காப்பியரே வழங்கியிருக்கிறார். இதையறியாத சிலர், தொல்காப்பியர் காலத்தில், கள் ஈறு உயர்திணைப் பன்மைக்கு வழங்கவில்லை என்று கூறுகின்றனர்.

இனி, “பிறப்பியலிலுள்ள சூத்திரங்கட்கும் தைத்திரீய சுக்லயஜு ர் வேதீயப்ராதிசாக்கிய சூத்திரங்களுக்கும் ஒற்றுமை யிருத்தலானும்....ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு வேதங்கள், ப்ராதிசாக்கியங்கள், தர்ம சாத்திரங்கள், யாஸ்க நிருத்தம், நாட்டிய சாத்திரமோ அதன் முன்னூலோ ஆகிய வடமொழி நூல்களிற் பயிற்சியுண்டு என அறியக்கிடக்கின்றது” என்று தம் தொல் காப்பிய எழுத்ததிகார முகவுரையிற் கூறி, கீழே அடிக்குறிப்பில், “அந் நூல்கள் தற்போதுள்ள ஆராய்ச்சியா ளர்களால் கி.பி. 3, 4 நூற்றாண்டுகளுக்கு முன்னருள்ளன எனக் கூறப்படுகின்ற மையான் தொல்காப்பியம் கி.பி. இரண்டாவது நூற்றாண்டதாகும்” என்று சாத்திரியார் கூறியுள்ளது, நெஸ்ப்வீல்டு (J.C. Nesfield) ஆங்கிலத்தில் எழுதிய இலக்கண நூல்களிற் சொல்லப் பட்டவற்றிற்கும், தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டவற்றிற்கும், சில பொருள்களில் ஒற்றுமையிருப்பதால், நெஸ்ப்வீல்டு இலக்கணத்தைப் படித்துத்தான் தொல்காப்பியர் தம் இலக்கண நூல் இயற்றினார் என்றும், போப் (G.U. Pope) ஆங்கிலத்தில் எழுதிய திருவாசகத்தைத்தான் மாணிக்கவாசகர் தமிழில் மொழி பெயர்த்தாரென்றும் கூறுவது போன்றதேயன்றி வேறன்று.

தொல்காப்பியத்தின் செந்தமிழ் நடையொன்றே, அந் நூலின் தொன்மையைக் காட்டற்குப் போதுமானது. தொல்காப்பியத்திற் பயின்று வரும் 'அலங்கடையே', 'இவணையான' 'சிவணும்' 'ஓரன்ன' முதலிய சொற்றொடர்களும், தொல்காப்பியத்தின் வடசொல்லருகிய தனித்தமிழ்க் கால நிலையை உணர்த்துவனவாகும்.

பல்கலைக்கழக அகராதியின் பதிப்பாளராகிய வையாபுரிப் பிள்ளை அவர்கள், தொல்காப்பியத்தில், பாயிரத்துள் வந்துள்ள 'படிமையோன்' என்னும் சொல்லும், நூலுள், உயிர்களை அறிவுத் தொகைபற்றி ஆறு வகையாகப் பகுத்த பாகுபாடும், சமண மதத்திற்குரியவாதலின், தொல்காப்பியர் சமணரென்று முடிவுசெய்ததுடன், 'படிமை' என்ற சொல் தமிழ்ச்சொல்லாகத் தோன்றவில்லை என்று தம் தமிழறியா மையையும் புலப்படுத்தி யிருக்கின்றார்கள்.

படிமை என்ற சொல் படி என்னுஞ் சொல்லடியாகப் பிறந்தது.

படு-படி-பதி. படுதல் - வீழ்தல். படு என்னுஞ் சொல்லே படி,பதி எனத் திரியும்.படிதல்-பதிதல். ஒரு பொருள் இன்னொரு பொருள் மேற்படும் போது,மேற்பொருள் கீழ்ப்பொருள் மேற்படியும்; அப்போது, முன்னதன் வடிவம் பின்னதிற் பதியும். அவ்வடிவம், அப்படிந்த பொருளின் வடிவத்தையே போன்றிருக்கும்;(அடிச்சுவடுகளையும் முத்திரை களையும் நோக்குக) இதனால், படி என்னுஞ் சொல் போல அல்லது வகையில் என்னும் பொருளில் வழங்கும்.

கா :

அப்படி, இப்படி, உப்படி, எப்படி.
அப்படி = அவ் வடிவம், அம் முறை—
                        In that form
அப்படிச் செய் = அம் முறையிற் செய், அதுபோலச்செய் - do so.

போல இருப்பது போன்மை. அங்ஙனமே, படியிருப்பது படிமை. ஒ. நோ : like-likeness.

வழிபடு வுருவமாவது,பொம்மையாவது,கடவுளைப் போல அல்லது மாந்தனைப்போலச் செய்யப் பட்டிருப்பதால் படிமை எனப்பட்டது. இஃதொரு பண்பாகுபெயர்.

படிமை என்னுஞ் சொல்லில், படி பகுதி; மை பண்புப் பெயரீறு. மையீறு தமிழ்க்கேயுரிய தென்பது பின்னர்க் காட்டப்படும். வடமொழியில் படிமை, மகிமை முதலிய சொற்களையெல்லாம் பகாச்சொற்களாகவே கொள்வர். அம்மொழியில் மையீறில்லை. தமிழிலோ அச் சொற்கள் பண்புப் பெயர்களான பகுசொற்களாகும்.

படி - மை என்னுஞ் சொல்லை, அடி - மை, குடி - மை, மடி - மை, மிடி - மை முதலிய பண்புப்பெயர்களோடு ஒப்புநோக்குக.

ஒரு மூலவோலையைப் பார்த்தெழுதினது, அல்லது அச்சிட்டது, அம் மூலத்தின்படி யிருப்பதால் படி(copy) யெனப்படும். படியோலை என்று பண்டை நூல்களில் வழங்குதல் காண்க.

படி, படிமையென்னும் தமிழ்ச்சொற்களையே ப்ரதி, ப்ரதிமா என வழங்குவர் வடநூலார்.இப்போது, மூலச்சொற்களையே படிச்சொற்களாகக் காட்டுவது, எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை எண்ணிக் காண்க. இங்ஙனமே, பல தமிழ் நூல்களும் கலைகளும், வடநூல்களும் கலைகளுமாகக் காட்டப்படுகின்றன வென்க.

தமிழ்ச்சொல்லை வடசொல்லாக மாற்றும்போது, பல முறைகளைக் கையாளுவர் வடநூலார். அவையெல்லாம் இந்நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய் விளக்கப்படும்.

ப்ரதி, ப்ரதிமா என்ற சொற்களில்,கையாளப்பட்ட முறைகள்: (1) முதலெழுத்தை மெய்யாக்கி ரகரஞ்சேர்த்தல், (2) டகரத்தைத் தகரமாக்கல், (3) ஐயீற்றை ஆவீறாக்கல் என்பன.

பவளம், பகுதி முதலிய தமிழ்ச்சொற்களையும், ப்ரவாளம், ப்ரக்ருதி என்று மாற்றுதல் காண்க.

வடமொழியிலும் தென்மொழியிலும் பொதுவாய் வழங்கும் சொற்களை, இன்னமொழிக்குரிய வென்று துணிதற்கு விதிகள் இப் புத்தகத்தின் இறுதியிற் கூறப்படும். அவற்றுள் முக்கியமானது, பகுதிப்பொருள்பற்றியது.ஆரியர் தமிழ்ச்சொற்களை வட நூல்களில் எழுதிவைத்துக்கொண்டு, அவற்றுட் சிலவற்றிற்குப் 'பொருந்தப் புளுகல்' என்னும் முறைபற்றி, ஏதேனும் ஒரு பொருள் கூறுவர்; அது இயலா விடின் இடுகுறியென முத்திரையிட்டு விடுவர். அவ்விடுகுறிச் சொற்கள், தமிழில் பகுதிப்பொருள் தாங்கி வழங்குமாயின் தமிழ்ச் சொற்களேயென்பது ஐயமறத் துணியப்படும்.

ஒரு மூலத்தின் படி (copy), அம்மூலத்தின் அளவாயேயிருத்தலால், அளவு என்னும் பொருளிலும் படி என்னுஞ் சொல் வழங்குவதாகும்.

கா : காற்படி (அரிசி), பட்டணம்படி முகத்தலளவு.
படிக்கல் நிறுத்தலளவு.
படிமுறை, படிக்கட்டு முதலிய தொகைச்சொற்களும் முறையே சிறுசிறு அளவாய் ஏறுதல், பல அளவாய்ச் செல்லுதல் என்னும் கருத்துப் பற்றியனவே. வரும்படி - வரும் பொருளளவு.

படி என்னுஞ் சொல் பதி என்று திரிவது முன்னர்க் கூறப்பட்டது. படிமானம் = பதிவு.

பண்டமாற்றிலும், ஈட்டுக்கடனிலும், ஒரு பொருளுக்கு அதன் மதிப்பளவுள்ள இன்னொரு பொருள் கொடுக்கப் படுகின்றது. ஓர் அலுவலாளர் விடுமுறையிலிருக்கும்போது, அறிவிலும் ஆற்றலிலும், அவரளவுள்ள இன்னொருவர் அவருடைய இடத்தில் அமர்த்தப்படுகிறார்.

இதனால், பதில் என்னும் சொல் ஈடு, பதிலி (substitute) என்னும் பொருள்களில் வழங்கத் தலைப்பட்டது. பதி என்னும் சொல்லே லகரமெய்யீறு பெற்றுப் பதில் என்றாகும். இங்ஙனம் ஈறுபெறுவது பொருள் வேறுபடுத்தற்கென்க. படி - (படில்) - பதில்.

பண்டமாற்றில் ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை மாறித் தருவதுபோல, உரையாட்டில் அல்லது எழுத்துப் போக்குவரவில், ஒரு சொலவுக்கு இன்னொரு சொலவை மாறித்தருவது பதில் எனப்படும். மாற்றம் என்னுஞ் சொல்லை இதனுடன் ஒப்புநோக்குக. மாறிச் சொல்வது அல்லது (இருவர்) மாறிமாறிச் சொல்வது மாற்றம்.

வழக்காளிகள் இருவருள், வழக்காடி வாதியென்றும், பதில் வழக்காடி ப்ரதிவாதியென்றும் வடசொல்லாற் கூறப்படுகின்றனர். வழக்காடியின் கூற்றுக்கு மாறிக்கூறுவதால், பதில் வழக்காடி ப்ரதிவாதியெனப்படுகின்றான். (பதில் வழக்காடி, வழக்காடியின் வழக்கிற்கு எதிராக, மற்றொரு வழக்குத் தொடுப்பது எதிர்வழக்காகும்.)

ப்ரதியுபகாரம் - மாறிச்செய்யும் நன்றி. கைம்மாறு என்னுஞ் சொல்லை நோக்குக. ப்ரதிபிம்பம் - மாறித் தோன்றும் வடிவம்.

ஓரினத்தைச் சேர்ந்த எல்லாப் பொருள்களும், ஒரேபடி (வடிவு அல்லது வகை)யாயிருத்தலான், (படி அல்லது) ப்ரதி என்னும் சொல், ஒவ்வொரு என்னும் பொருளிலும் வழங்குவதாகும்.

படி + உ = படிவு + அம் = படிவம்
படிவு — வடிவு. படிவம் — வடிவம். ப—வ போலி.

எனக்கு ஒரு படி (வகை) யாய் வருகிறது என்பதை, எனக்கொரு வடியாய் வருகிறது என்பர் தென்னாட்டார்.

பகு—வகு, பகிர்—வகிர், தபம்—தவம், என்பவற்றில் பகரத்திற்கு வகரம் போலியாய் வருதல் காண்க.

படிமை என்னும் சொல், ஒன்றன் வடிவத்தைக் குறிக்கு மென்பது, முன்னர்க் காட்டப்பட்டது. நோன்பி(விரதி)கள் விதப்பான உடையும் அணியும் பூண்டிருப்பராதலின், அவரது வடிவம் அல்லது தோற்றம் சிறப்பாய்ப் படிமை யெனப்பட்டது 'விரதியரை வினாவல்' என்னுந் துறைபற்றிய திருக்கோவைச் செய்யுளில்,

“சுத்தியபொக் கணத்தென்பணிகட் டங்கஞ்சூழ் சடைவெண் பொத்திய கோலத்தினீர்...”

என்று கூறியிருத்தல் காண்க.

பார்ப்பனர்க்கும் ஒரு படிமையுண்டென்பது, 'வேதியரை வினவல்' என்னுந் துறைபற்றிய செய்யுளில் (243),

“வெதிரேய் கரத்துமென் றோலேய் சுவல்வெள்ளை
                                        நூலிற்கொண்மூ

வதிரேய் மறையினிவ் வாறுசெல்வீர்....” என்றும்,

பாலைக்கலியில் (8),

“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்”

என்றும் கூறியிருப்பதா லறியப்படும்.

படிமையுடையோன் படிமையோன். நோன்பைப் படிமை யென்றது ஆகுபெயர். படிமை என்னுஞ் சொல் படிமம் என்றும் நிற்கும். மம் என்பது பண்புப் பெயருக்கும் தொழிற்பெயருக்கும் பொதுவான ஓர் ஈறாகும். உருமம், கருமம், பருமம், (பருமன்), மருமம் என்னுஞ் சொற்களை நோக்குக.

படிமத்திற்கு (நோன்பிற்கு) உணவுமுறை வேறுபட்ட தாதலின், அது படிமவுண்டி யெனப்படும்.

“படிம வுண்டிப் பார்ப்பன மகனே” என்று குறுந்தொகையில் வந்திருத்தல் காண்க.

இனி, உயிர்களின் அறுவகைப் பகுப்பைப்பற்றிச் சிறிது கூறுகின்றேன். உயிர்களை அறிவுபற்றி ஆறாகப் பகுப்பது தொன்று தொட்டுத் தமிழ்நாட்டிலுள்ளது. இது ஒரு படிமுறைப் பகுப்பு. கிறித்தவமறையில், ஆதியாகமம் முதலதிகாரத்தில், படைப்பைக் கூறும்போது, நிலைத்திணை, நீர்வாழி, பறவை, விலங்கும் ஊர்வனவும் என்பன முறையே படைக்கப்பட்ட தாகக் கூறியுள்ளது. இதுவும் ஒரு படிமுறைப் பகுப்பே. இதனால், கிறித்தவமறைக்கும் தொல்காப்பியத்திற்கும் ஓர் இயைபு கூறமுடியாது.

சின்கிளேர் ஸ்ற்றீவென்சன் அம்மையார் (Mrs. Sinclair Stevenson) தாம் எழுதிய 'ஜைன நெஞ்சம்' (The heart of Jainism) என்ற நூலில், 7ஆம் அதிகாரத்தில் சமண முறைப் படி உயிர்களை 13 முறையிற் பலவாகப் பகுக்கின்றார். அவற்றுள், 4ஆம் முறையிற் புலன்பற்றி உயிர்களை ஐந்தாகப் பகுத்து, அவ் வைந்தனுள் ஐயறிவுயிரை மீட்டும் பகுத்தறிவுண்மையின்மை பற்றி இரண்டாக வகுக்கின்றார். பின் 10ஆம் அதிகாரத்தில், பிரதிமா என்னும் பெயரால், ஒரு ஜைனன் மேற்கொள்ளவேண்டிய 11 சூளுறவுகளையுங் குறிக்கின்றார். ப்ரதிமா என்பதற்குப் படிமா என்னும் மறுவடிவமும், 221ஆம் பக்கத்தில் அடிக்குறிப்பிற் காட்டப் பட்டுள்ளது. இங்ஙனம் அவர் கூறியதால், வடநாட்டில் வழங்கும் தமிழ்ச் சொற்களையும் தமிழக் கொள்கைகளையும், சமணர் மேற்கொண்டு வழங்கினர் என்பதல்லது, தொல்காப்பியர் சமணர் என்பது எங்ஙனம் பெறப்படும்? தமிழின் தொன்மையைப் பற்றியே திருவாளர் வையாபுரிப்பிள்ளையவர்கட்கு ஒரு கருத்தில்லையென்பது, அவர்களெழுதிய 'ஆராய்ச்சியுரைத் தொகுதி'யால் அறியக்கிடக்கின்றது. அவர்கள் முடிபெல்லாம், மகன் தந்தையை ஒத்திருப்பதால் மகனே தந்தையைப் பெற்றவன் என்பது போன்றவையே. வடமொழியுட்பட, வட நாட்டு மொழிகள் எல்லாவற்றிலும், தனித்தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்காகக் கலந்துள்ளன என்பதை, அவர் அறியார்போலும்! வடநாட்டில் தோன்றிய, பௌத்த மறைக்குச் சிறப்புப் பெயராய் வழங்கும் பிடகம் என்னும் சொல்லுங் கூட, பெட்டகம் என்னும் தமிழ்ச் சொல்லாயிருக்கும்போது, வேறென்ன சொல்ல வேண்டுவது? பிடகம் (பெட்டகம்) = பெட்டி, கூடை, தட்டு. கி.மு. 20ஆம் நூற்றாண்டிலிருந்த தொல்காப்பியருக்கு, கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமண மதத்தோடு எங்ஙனம் தொடர்பிருந்திருக்க முடியும்?

“மகேந்திரமலை முழுகிக்கிடக்கின்றது” என்று சுக்கிரீவன் அங்கதனுக்குக் கூறுவதாக வால்மீகி கூறியிருப்பதால், கபாடபுரம் இராமர்காலத்தது என்பது வலியுறும்.

ஒரு மொழியில் இலக்கியம் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும்.

“இலக்கிய மின்றி யிலக்கண மின்றே
எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே
எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல
இலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம்.”

தொல்காப்பியர் காலத்தில், ஆரியர்க்கு வேதமும் பிராமணமும் ஒருசில மிருதிகளும் இராமாயண பாரத இதிகாசங்களும் தமிழைப் பின்பற்றிய எழுத்து சொல் இலக்கணங்களும் மட்டுமிருந்தன.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”


என்னுங் களவியல் நூற்பாவில், தமிழர் இல்லற வாழ்க்கையின் முற்பகுதியான களவியல் என்னுங் கைகோளை, ஆரிய மணங்கள் எட்டனுள் ஒன்றான கந்தருவத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவதாலறியலாகும். இதனால், ஆரிய தமிழ வழக்கங்களை யும் நூல்களையும், ஒப்பிட்டுப் பார்ப்பதில் தொல்காப்பியர் விருப்பமுடையவர் என்பதும் வெளியாகும்.

'புறத்திணையியலில்' வாகைத்திணைபற்றிய நூற்பாவில், 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்று கூறியிருப்ப தாலும், தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்க்கு வேதமிருந்தமை யறியப்படும். வேறேயொரு நூலாவது கலையாவது, ஆரியர்க் கிருந்ததாகத் தொல்காப்பியத்தில் எங்கேனும் குறிக்கப்படவேயில்லை.

பிறப்பியலில், “எல்லா எழுத்தும் அந்தணர் மறைத்தே” என்று கூறியது, ஆரிய மறையையன்றென்பது பின்னர் விளக்கப்படும். களவியலுரையில், நச்சினார்க்கினியர்,

“பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப” (13)

என்னும் நூற்பாவிற்கு,

“அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிருபகுதியவாம்” என்றவாறு.

“எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான், இருவகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை, அவர் புணர்தற்கு நிமித்தமாதலின். அவை அவன் கண்ணவெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப.... அவ்வாற்றானே பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் எனவும்; முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனவும்; அசுரம், இராக்கதம், பேய் எனவும் பன்னிரண்டாம்” என்றும்,

“முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே” (14)

என்னும் நூற்பாவிற்கு,

“இதற்கு முன்னின்ற அசுரமும் இராக்கதமும் பைசாச முங் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும், கைக்கிளை யெனச் சுட்டப்படும்” என்றும்,

“பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” [7] (15)

என்ற நூற்பாவிற்கு,

“பின்னர் நின்ற பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வத மென்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும்” என்றும்,

“முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே” (16)

என்னும் நூற்பாவிற்கு,

“மேற்கூறிய நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றோடு பொருந்திவரும் கந்தருவ மார்க்கம் ஐந்தும், கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின், அவை ஐந்தெனப்படும்” என்றும் தமிழ்முறைக்கு மாறாக உரை கூறினார்.

இவ்வுரை தவறென்பதற்குக் காரணங்களாவன :

(1) தமிழ்முறைக்கு மாறானமை.

இதை, நச்சினார்க்கினியரே, “இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும்போலா இவை யென்பதூஉம்.... இவ்வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே, இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப் படுமென்பதூஉங் கொள்க,” என்று 13ஆம் நூற்பாவுரையில் கூறியிருப்பதா லறியலாம்.

(2) ஆரிய மணமுறையைத் தமிழ மணமுறையொடு கலத்தல்.

களவியல் முதல் நூற்பாவில் ஆசிரியர் தமிழர் கைகோளாகிய களவொழுக்கத்தை, ஆரிய மணமாகிய கந்தருவத்தொடு (ஒருசார் ஒப்புமைபற்றி) ஒப்பிட்டுக் கூறினரேயன்றி, ஆரிய மணமுறைக்கு இலக்கணங் கூறிற்றிலர்.

தொல்காப்பியத்தில் ஆங்காங்கு ஒருசில வடசொற்கள் அமைந்திருக்கலாம்; சில ஆரிய வழக்கங்களும் குறிக்கப் படலாம். ஆனால், இலக்கணங் கூறுவதுமட்டும் தமிழ் எழுத்துச் சொற்பொருள்கட்கும், தமிழ வழக்கங்கட்குமே என்பதை மறத்தல் கூடாது.

(3) முறைமாற்று.

ஆரிய மணங்கள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், கந்தருவம் என்னும் முறையிலமைந்திருக்கவும், இவற்றுள் முன்னைய நான் கையும் பின்னர் நான்கென்றும் ஈற்றயல் மூன்றையும் முன்னைய மூன்றென்றும் முறைபிறழக் கூறினார் நச்சினார்க்கினியர்.

(4) தமிழ மணத்திற்கும் ஆரிய மணத்திற்கும் இசைவின்மை.

இதை, “இதற்கு முன்நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும்,கைக்கிளையெனச் சுட்டப்படும்” என நச்சினார்க்கினியரே கூறியிருத்தல் காண்க. இது பின்னரும் விளக்கப்படும்.

(5) பார்ப்பனத் தொடர்பு கூறல்.

பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்தில், தமிழரிடத்தில் பாங்கத் தொழிலிருந்ததேயன்றிப் புரோகிதத் தொழிலில் லையென்று, முன்னமே முன்னுரையிற் கூறப்பட்டது. ஆயினும் தெளிவுறுத்தற் பொருட்டு இங்கும் கூறுகின்றேன்.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்பவொழுக் கத்தையும் இல்லறத்தையும் சிறப்பாய்க் கூறும் அகத்திணை யியல் களவியல் கற்பியல்களிலேனும், பொதுப்படக் கூறும் பிறவியல் களிலேனும், பார்ப்பார்க்கு அறுதொழிலும் பாங்கத் தொழிலும், ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும் வாயில் தொழி லுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவே யில்லை.

“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்னும் புறத்திணையியல் அடி, பார்ப்பார் தாமே தமக்குள் செய்துவந்த அறுவகை ஆரிய வைதிகத் தொழில்களைக் குறிக்குமேயன்றித் தமிழரிடம் செய்துவந்த வினைகளைக் குறியா.

பார்ப்பார் தமிழரிடம் செய்த தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூற்பாக்களாவன :

கற்பியல்:-

“காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய” (36)

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
....................................
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” (52)

செய்யுளியல் :-

“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
......................................
களவிற் கிளவிக் குரியர் என்ப.” (181)

“..பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.” (182)

“பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.” (189)

மரபியலிற் கூறிய அந்தணர், நாற்பாலாருள் ஒரு பாலாரான தமிழ முனிவரும், முனிவர்போலியரான ஒருசில ஆரியருமேயன்றிப் பார்ப்பாரல்லர். பால்வேறு, குலம்வேறு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன பால்கள். “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்” என்று புறநானூறு கூறுதல் காண்க. பிள்ளை, முதலியார், மறவர், இடையர் என்பன குலங்கள். பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர் தொல்காப்பியர். அந்தணர், ஐயர், அறிவர், தாபதர் என்னும் பெயர்களெல்லாம் முனிவரைக் குறிக்கும்.

கற்பியலில், திருமண வினையைப்பற்றி நான்கு நூற் பாக்கள் உள்ளன. அவையாவன :

“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுவே.” (1)

“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.” (2)

“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே.” (3)

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.” (4)

இவற்றுள் பார்ப்பனர் பெயரே யில்லை. கரணமென்பது திருமண வினையைமட்டும் குறிக்கும்; இக்காலத்துப் பார்ப்பனராற் செய்யப்படும் ஆரியமந்திரச் சடங்கைக் குறியாது. நச்சினார்க்கினியர் திருமண வினைக்குக் காட்டாகக் கூறிய செய்யுள் வருமாறு :

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்
பெருஞ்சோற் றமலை நிற்ப நிறைகாற்
றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக்
கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த வீரித ழலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றை.....” (அகம். 86)

இச்செய்யுளில் பார்ப்பனர் தொழில் சிறிதுமின்மை காண்க.

'பொய்யும் வழுவும்' என்னும் நூற்பாவில், பொய் என்றது ஒருவன் ஒருத்தியை மணந்தபின், அவளை மணந்திலேன் எனலை. வழுவென்றது ஒருத்தியை மணந்தபின் பிறரறியக் கைவிடலை. ஐயர் தமிழ முனிவர். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பாருக்கு ஐயர் என்னும் பெயர் வழங்க வில்லை. 'என்ப' என்று பிறர்வாய்க் கேள்வியாக, அல்லது நூல்வாயறிவாகத் தொல்காப்பியர் குறித்திருப்பது. தமிழர் கரணத்தோற்றத்தின் தொன்முது பழைமையைக் காட்டும். அப்போது ஆரியக்குலம் இந்தியாவில் இல்லவேயில்லை. பொய்யும் வழுவும் சிறுபான்மைத் தமிழராலேயே நிகழ்ந்தன. ஆயினும், பெண்டிர்க்குப் பொதுப்படக் காப்புச் செய்யும் பொருட்டுக் கரணம் வகுக்கப்பட்டது. மலையாள நாட்டில் வழங்கும் மருமக்கட்டாயமும் பெண்களின் பாதுகாப்பிற் கேற்பட்டதே.

“பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு” என்பதற்கு, இளம்பூரணர் உரைத்த உரையாவது :

“பன்னிரண்டாவன : பிரமம் முதலிய நான்கும், கந்தருவப் பகுதியாகிய களவும் உடன்போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற் பரத்தையும் அசுரம் முதலாகிய மூன்றும்” என்பது.

இங்ஙனம், இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஆரியத்தைக் கலந்துணர்ந்தமையாலேயே தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளைக் காணமுடியாது போயினர். அக்காலத்தில், சரித்திரம், குலநூல், மொழிநூல் முதலிய கலைகளில்லாமை யால், அவர்மீதும் குற்றஞ் சுமத்தற்கிடமில்லை.

இனி, மேற்கூறிய களவியல் நூற்பாக்கட்கு உண்மைப் பொருள் வருமாறு :—

கைக்கிளைக்குறிப்பு மூன்றும், ஐந்திணையும் பெருந்திணைக் குறிப்பு நான்குமாகப் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டாம்.

“காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தலும்;
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும்;
சொல்லெதிர் பெறாஅன் சொல்லிஇன் புறலும்”

(ஆகிய மூன்றும்) புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. (அகத். 53) இவையே, “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே” என்று சுட்டப்பட்டவை. மூன்று நிகழ்வுகள் ஒரு புணர்சொற்றொடரில் (Compound Sentence) இணைத்துக் கூறப்பட்டுள என்க.

“ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (அகத். 54)

இவையே, “பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” என்று சுட்டப்பட்டவை. 'முன்னைய', 'பின்னர்' என்னும் முறையையும், 'மூன்றும்' 'நான்கும்' என்னுந் தொகைகளையும் ஓர்ந்தறிக.

அன்பின் ஐந்திணை வெளிப்படை. யாழோர் என்றது, இசையிற் சிறந்த, இல்லற வொழுங்கற்ற ஓர் ஆரிய வகுப்பாரை. யாழ் இசை. யாழோரைக் கந்தருவர் என்பர் வடநூலார்.

கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என்பவை, முறையே, ஒருதலைக் காமமென்றும், இருதலைக் காமமென்றும், பொருந்தாக் காமமென்றுங் கூறப்படுகின்றன. இவை தெளிவும் நிறைவுமான இலக்கணங்களல்ல.

கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பாலும் (சிறிது) காலமே நிகழ்பவான காமக் குறிப்புகளும் புணர்ச்சிகளுமாகும். “கைக்கிளைக் குறிப்பே”, “பெருந்திணைக் குறிப்பே” என்று கூறுதல் காண்க. அன்பினைந்திணை அங்ஙனமன்றி, களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளுள்ள நீடித்த அன்பொத்த இன்பவாழ்க்கையாகும்.

நெறிதிறம்பிய காமம் ஒரு பெண்ணுக்கு எவ்வகையிலேனும் தீமை செய்யாவிடத்துக் கைக்கிளையாம்; தீமை செய்தவிடத்துப் பெருந்திணையாம். காமஞ்சாலாத ஒரு சிறு பிள்ளையோடு பேசிமட்டும் இன்புறுவது கைக்கிளை; வரம்பு கடப்பின் பெருந்திணை. இன்பநெறிக்கு மாறாக விலங்குத் தன்மையும் பேய்த்தன்மையுமான கூட்டமெல்லாம் பெருந் திணையே. கொடிய குட்டநோய் பெருநோய் எனப்பட்டது போல, கொடியமணக் கூட்டம் பெருந்திணையென்னப்பட்டது. இதையறியாமல், எண்வகை மணங்களில் நால்மணம் பெற்றதால் பெருந்திணை யெனப்பட்டது என்று கூறினர் நச்சினார்க்கினியர். மேலும், பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்மணங்களும் பெருந்திணையாகாமையுமறிக.

பண்டைக்காலத்தில், களவின் தொடர்ச்சியாகவே கற்பு நிகழ்ந்துவந்தது. இதுபோது, பெரும்பாலும் பெற்றோராலேயே புணர்க்கப்படும் மணங்களுள், பெண் மாப்பிள்ளை என்னும் இருவர்க்குள்ளும், ஒருவர்க்கே அன்பிருப்பின், கைக்கிளையின் பாற்படும்; இருவர்க்கும் அன்பிருப்பின் அன்பின் ஐந்திணையாம்; இருவர்க்கும் அன்பில்லாதிருப்பின் பெருந்திணையின் பாற்படும்.

அகத்தியர் காலம்

இனி, “அவரும் (அகத்தியர்) தென்றிசைக்கட் போது கின்றவர்.... துவராபதிப் போந்து, நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடிவேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கண்ணிருந்து” என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய எழுத்ததிகாரவுரையிற் கூறியிருப்பதின் பொருளையுணராது. அகத்தியரைக் கண்ண னுக்குப் பிற்பட்டவரென்று கூறுகின்றனர் சிலர்.

நச்சினார்க்கினியர் கூற்றில், துவரை என்றது மைசூரைச் சார்ந்த துவாரசமுத்திரத்தை. நிலங்கடந்த நெடுமுடியண்ணல் என்றது குறள் (வாமனத்) தோற்றரவு(அவதார)த் திருமாலை. இதுவரை நிகழ்ந்துள்ள திருமாலின் ஒன்பது தோற்றரவுகளுள், குறள் ஐந்தாவதென்பதையும் இரகுராமன் ஏழாவதென்பதையும், கண்ணன் கடையனென்பதையும் அவர் மறந்தனர்போலும்! இரகுராமர் காலத்தவரான அகத்தியர் கண்ணனுக்குப் பிற்பட்டவராதல் எங்ஙனம்?

அரசரைத் திருமாலின் வழியினராகக் கூறுவது தமிழ்நாட்டு வழக்கமென்பதும், திருமாலின் முதல் ஐந்து தோற்றரவுகளும் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்தனவென்பதும் பின்னர்க் கூறப்படும்.

அரசர் பதினெண்மரும் பதினெண் கோடி வேளிரும் என்றது, பதினெட்டுத் தமிழரசரையும் அவர்க் கீழிருந்த பதினெண் வகுப்புத் தமிழக் குடிகளையும். வேளிர் வேளாளர். அருவாளர் அருவா நாட்டார். பதினெண்கோடி வேளிர் என்றது பதினெண் குடி வேளிர் என்பதன் ஏட்டுப்பிழை.

காடு கெடுத்து நாடாக்கியென்றது, அக்காலத்தில் மக்கள் வழக்கின்றியிருந்த பல காடுகளை அழிப்பித்து, அவற்றில் துவரையினின்றும் கொண்டுபோந்த குடிகளைக் குடியேற்றியதை.

அகத்தியர் பொதியின்கண்ணிருந்தது, அலைவாயை (கபாடபுரத்தை)க் கடல் கொண்டபின்.

துவரை என்பது ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் பெயர். தில்லைமிக்க இடத்தைத் தில்லை என்றாற்போல, துவரைமிக்க இடத்தைத் துவரை என்றது இடவனாகுபெயர். துவரை என்பது துவரா(பதி), துவாரா(பதி), துவாரகா என்று ஆரிய வடிவங் கொள்ளும்.

துவரை என்ற தென்னாட்டு நகர்ப்பெயரையே, பிற் காலத்தில் கண்ணன் ஆண்ட இடமாகிய, வடநாட்டு நகர்க்கிட்டனர். மைசூர்த் துவரைநகர் மிகப் பழைமையானதென்பதை. அது அகத்தியர் காலத்திலிருந்ததாக நச்சினார்க்கினியர் கூறுவதாலும்,

“உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே” [8]

என்று இருங்கோவேள் கி.பி. 2ஆம் நூற்றாண்டினரான கபிலராற் பாடப்பெற்றிருப்பதாலும் அறியலாம்.

மேற்கூறிய புறப்பாட்டிற் குறிக்கப்பட்ட துவரைநகர், கண்ணன் ஆண்ட வடநாட்டுத் துவாரகையாகப் பல்கலைக் கழக அகராதியில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.

தலைக்கழக இருக்கையாகிய மதுரையின் பெயரை எங்ஙனம் பிற்காலத்தில் வடநாட்டிற் கம்சன் ஆண்ட நகர் பெற்றதோ, அங்ஙனமே துவரையென்னும் தென்னாட்டு நகர்ப்பெயரையும் கண்ணன் ஆண்ட வடநாட்டு நகர் பெற்ற தென்க. பண்டைத் தமிழகம் குமரிநாடென்பதையறியாமையாலேயே, மேற்கூறிய தவறுகளும் அன்னோரன்ன பிறவும் நிகழ்கின்றன. முதலில் வடநாட்டிற் குடியேறினவர் திராவிட ரேயாதலின், தங்கள் நகர்களுக்குத் தென்னாட்டுப் பெயர்களையிட்டனர் என்க.

மேற்கூறிய புறநானூற்றுச் செய்யுளில், இருங்கோ வேளுக்குப் புலிகடிமால் என்றொரு பெயர் வந்துளது. டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அச்செய்யுளின் அடிக்குறிப்பில்,

“தபங்கரென்னும் முனிவர் ஒரு காட்டில் தவஞ் செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அது கண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி, 'ஹொய்ஸள' என்று கூற, அவன் அப் புலியைத் தன்னம்பால் எய்து கடிந்தமையால், ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப் பட்டானென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தை யடுத்த காட்டி லுள்ள தன் குலதேவதையான வாஸந்திகா தேவியைச் சளனென்னு மரசன் வணங்கச் சென்ற போது, புலியால் தடுக்கப் பட்டு வருந்துகையில், அக் கோயிலி லிருந்த பெரியவர் அவனை நோக்கி 'ஹொய்ஸள' என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதனைக் கொன்றமைபற்றி'ஹொய்ஸளன்' என்றும் 'புலிகடிமால்' என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர்” என்று வரைந்துள் ளார்கள். இவை கல்வெட்டுச் செய்திகள்.

இதனால், இருங்கோவேளின் மரபினர் ஹொய்சளர் என்பதும், அவ் வேள் ஒருமுறை ஒரு புலியைத் தன் குடிகட்குத் துன்பஞ் செய்வதினின்று விலக்கினான் என்பதும், பிற்காலத்தில் ஹொய்சளன் என்னும் பேருக்குப் பழங்காலக் கதை சற்றுப் பொருத்திக் கூறப்பட்ட தென்பதும் அறியப்படு மேயன்றி, புலிகடிமாலே ஹொய்சளக் குடியினன் என்பது பெறப்படாது, காலவிடையீடு பெரிதாயிருத்தலின்.[9]

இனி, புலிகடிமால் என்னும் பெயராலும் ஹொய்சள என்னும் பெயராலும் சுட்டப்பட்ட கதைகள் வெவ்வேறாகவுமிருக்கலாம். மைசூர் நாட்டில் சிறுத்தைப் புலிகள் நிறைந்திருப்பதும், அடிக்கடி அவை சிற்றூர்களுக்கு வந்து குடிகளுக்குத் துன்பம் விளைவிப்பதும், வேட்டைக்காரர் அவ்வப்போது அவற்றைக் கொல்வதும், தாளிகை வாயிலாய் யாவரும் அறிந்தவையே. ஐயரவர்கள் குறிப்பிலேயே இருவேறு வரலாறுள.

'வடபால் முனிவரன் தடவுட்டோன்றி'னதாக இருங்கோவேளைப் பற்றிப் புறநானூற்றிற் கூறியிருக்கும் செய்தி, கற்பனையான பழமைக்கூற்றாதலின், ஆராய்ச்சிக்குரியதன்று.

இதுகாறும் கூறியவற்றால், அகத்தியர் பாரதக் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரல்லர் என்பதும், இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், முதலிரு கழகமும் இம்மியும் ஆரியச் சார்பில்லா முழுத் தூய்மை பெற்றவை என்பதும்; இடைக் கழகக் காலத்தில் ஆரியம் என்னும் பெயரே உலகில் தோன்றவில்லை யென்பதும், அறிந்து கொள்க.

தமிழ் எண்ணிற்கு மெட்டாக் காலத்துக் குமரிமலை நாட்டில் தோன்றிய உலக முதல் ஒருதனிச் செம்மொழி யாதலின், அதன் தொன்மையை உணராத பிற்காலத்தார் அகத்தியரைத் தலைக் கழகத்தினராகவும் தொல்காப்பியரை இடைக்கழகத்தினராகவும் கட்டிக் கூறிவிட்டார். இதற்கு முதலிரு கழக நூல்களும் அழிக்கப் பட்டுப் போனமையும், தமிழிலக்கியத்திற்கு ஆரிய மூலம் காட்டப்பட்டமையும் பிற்காலத் தமிழர்க்கு வரலாற்றுணர்ச்சி அற்று விட்டதுமே, கரணியமாகும்.

ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இக் காலத்திலேயே பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவுபற்றி, தமிழத் தமிழ்ப் புலவர்க்கில்லாத தனியுயர்வு பிராமணத் தமிழ்ப் புலவர்க்கேற்படின்; ஏதிலரை நம்பி எளிதில் ஏமாறும் பழங்குடிப் பேதைமையும், வரலாற்றொடு கூடிய ஒப்பியன் மொழிநூலறிவின்மையும், மிக்க பண்டைக் கால அல்லது இடைக்காலத் தமிழரிடை ஐரோப்பியரை யொத்த வெள்ளை நிறமும் வல்லோசை மிக்க மந்திரமுங் கொண்டிருந்த வேத ஆரியர்க்கு எத்துணைப் பெருங் கண்ணியம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

தொல்காப்பியர் காலத்தில், தமிழிற் பல கலைகளும் நூல்களுமிருந்தனவேனும், அவற்றுள், தொல்காப்பியந் தவிர வேறொன்றும் அகப்படாமையான், பண்டைத் தமிழ்க் கலை களைப்பற்றி விரிவாயெடுத்துரைக்க இயலவில்லை. ஆயினும், ஆனையடிச்சுவடு கண்டு ஆனை சென்றதை யறிதல் போல, தொல்காப்பியத்தில் ஆங்காங்குள்ள சில குறிப்புகளினின்று, தொல்காப்பியர் காலத்தில் எவ்வெக் கலைகள் தமிழிலிருந்தன வென்று இங்கெடுத்துக் கூறுகின்றேன்.

(1) இலக்கணம்

தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இலக்கணமிருந்தமைக்குத் தொல்காப்பியம் ஒன்றே போதிய சான்றாம். தொல்காப்பியரின் உடன் மாணவரான அவிநயனார், காக்கை பாடினியார் முதலிய பிறரும் தமிழிலக்கண மியற்றினதை யாப்பருங்கல விருத்தியுரையா லறியலாம்.

பிறமொழி யிலக்கணங்களெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என நான்கு பிரிவேயுடையன. ஆனால், தமிழோ அவற்றுடன் பொருள் என்னும் சிறந்த பிரிவையுமுடையது. யாப்பு, அணி என்பவற்றைப் பொருளில் அடக்கித் தமிழிலக்கணத்தை மூன்றாகப் பகுப்பதே பண்டை வழக்கம். யாப்பும் அணியும் ஒரு செய்யுளின் பொருளை யுணர்தற்குக் கருவிகளாதலின், அவற்றைப் பொருளிலக்கணத்தினின்றும் பிரிக்கக் கூடாதென்பது முன்னோர் கருத்து. யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை என்பவை, தொல்காப்பியத்திற் கூறப் படாத, செய்யுளிலக்கணங்களைக் கூறுவதற்குத் தனிநூல் களாயெழுந்தனவேயன்றி, மூன்றாயிருந்த தமிழிலக்கணப் பிரிவை நான்காக்குவதற்கன்று.

தமிழிலுள்ள பொருளிலக்கணத்தை இற்றைத் தமிழர் சரியாயுணரவில்லை. பார்ப்பனரோ அவரினும் உணரவில்லை. பண்டைத் தமிழர் மதிநுட்பமெல்லாம் பழுத்துக்கிடப்பது பொருளிலக்கணம் ஒன்றில்தான். ஒரு மக்களின் நாகரிகத்தைக் காட்டச் சிறந்த சின்னம் மொழியென்று முன்னர்க் கூறப்பட்டது. பல கருத்துகளையும் தெரிவிப்பதற்குரிய சொற்களும் சொல் வடிவங்களும், விரிவான இலக்கியமும் ஒரு மொழியின் சிறப்பைக் காட்டும். இலக்கியத்தினும் இலக்கணம் சிறந்தது. இலக்கணத்திற் சிறந்தது தமிழ்மொழி ஒன்றே. ஆகையால் உலகமொழிகள் எல்லாவற்றினும் தமிழே மிகத் திருந்திய தென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை.

எழுத்தாற் சொல்லும் சொல்லாற் பொருளும் உணரப்படும். எழுத்து, சொல் என்பவற்றின் கூறுபாடுகளும் இயல்புகளும், அவற்றைச் செவ்வையா யுணர்தற்கு எங்ஙனம் பயன்படுமோ, அங்ஙனமே பொருளின் கூறுபாடும் அதன் இயல்புகளும் பொருளைச் செவ்வையா யுணர்தற்குப் பயன்படும்.

பொருளிலக்கணம் ஒன்றையே இலக்கணமாகவும், ஏனை எழுத்தும் சொல்லும் அதற்குக் கருவிகளாகவும் கொண்டனர் முன்னோர். இதை,

பாண்டிய “அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின், இவை பெற்றும் பெற்றிலேம்'....”[10] எனக் கூறியதால் அறியலாம்.

பொருளிலக்கணம் வீடும், எழுத்திலக்கணமும் சொல் லிலக்கணமும், முறையே அதற்குட் செல்ல வழியாயிருக்கும் வாயிலும் நடையும் போல்வன.

பொருளிலக்கண முடைமையால் தமிழ் மிக்க இலக்கண வரம்புள்ளது என்று முன்னோர் கொண்டமையை,

“கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”

என்ற பரஞ்சோதி முனிவர் கூற்றாலுணரலாம்.

பொருளிலக்கணத்தில், பொருள்கள் எல்லாம் அகம் புறம் என இரண்டாகவும், அவற்றுள், அகம் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என ஏழாகவும், புறம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் வகுக்கப்படும்.

ஒழுக்கநூற் பாகுபாடான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களுள் இன்பம் இன்னவாறிருந்த தென்று பிறர்க்குப் புலனாகும்படி எடுத்துக்கூற இயலாதவாறு, அகத்தானாயே உணர்ந்து நுகரப்படுதலின் அகமெனப்பட்ட தென்றும், அங்ஙனமன்றிப் பிறர்க்குப் புலப்படக் கூறுவதாய் இன்பத்திற்குப் புறமானதெல்லாம் புறமெனப்பட்டதென்றும் கூறப்படுகின்றது.

சிலர் அகப்பொருளிலக்கணத்தை அன்புநூல் (Science of Love) என்றும், புறப்பொருளிலக்கணத்தைப் போர்நூல் (Science of War) என்றும் கொண்டனர். அன்பு சிறப்பது பெரும்பாலும் கணவன் மனைவி யிருவரிடையே யாதலாலும், அன்பிற்கெதிரான பகையாலேயே போர் நிகழ்வதாலும் இவ்வுரைகோளும் ஒருவாறு பொருந்துவதே.

மாந்தன் உலகில் அடையக்கூடிய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், அறம் தனித்திராது ஏனையிரண்டையும் பற்றியே யிருக்கும். அறவழியால் ஈட்டுவதே பொருள். அறவழியால் நுகர்வதே இன்பம். அறவழியால் ஈட்டாத பொருளாலும், அல்லற வழியால் இன்ப நுகர்ந்து கொண்டும், செய்யப்படும் அறம் அறமாகாது. இன்பத்தை நுகர்வதற்குப் பொருள் கருவி. ஆகவே, பொருளீட்டுவதும் அதனால் இன்பம் நுகர்வதுமாகிய இரண்டே எல்லா மக்களின் தொழில்களும். உலக இன்பத்திற் சிறந்தது பெண்ணின்பம் அல்லது மனைவியின்பம். இதுபெரும்பாலும் வீட்டிலேயே நுகரப்படுவது. பொருள் முயற்சி பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நிகழ்வது, மக்கள் தலைவனான அரசனது பொருள் முயற்சி போர். அகம் வீடு. புறம் வீட்டிற்கு வெளி. புறப்பட்டான் என்னுஞ் சொல், வீட்டிற்கு வெளிப்பட்டான் என்ற கருத்துப்பற்றியே, வழிப்போக்குத் தொடங்கினான் என்று பொருள்படுவதாகும். ஆகவே, அகத்தில் நிகழ்வதை அகம் என்றும், புறத்தில் நிகழ்வதைப் புறமென்றும் முன்னோர் கொண்டனர் எனினும் பொருந்தும். அகம் என்பது செந்தமிழ்ச் சொல்லே. பார்ப்பனர் தம் வீடுகளைப் பிற குலத்தார் வீடுகளினின்றும் பிரித்துக் காட்டுவதற்கு அகம் என்னுஞ் சொல்லைத் தெரிந்து கொண்டனர்.

இனி, மக்கள் ஆண் பெண் என இருபாற்படுதலின், அவ்விருபால்பற்றிய தொழில்களையும் அகம் புறம் என வகுத்துக் கூறினர் என்று கொள்ளினும் பொருந்தும். உயர் திணையில் பெண்பாலே அழகுடையது. பெண் என்னும் சொல் விரும்பத் தக்கது அல்லது விரும்பத்தக்கவள் என்னும் பொருளையுடையது. விரும்பத்தகுவது இன்பமும் அழகும்பற்றி. இன்பத்திற்கு அழகு துணையாவது. இதனால், காமர் என்னும் விருப்பம்பற்றிய சொல் அழகு என்னும் பொருள்படுவதாயிற்று.

பெள் — பெண். பெட்பு = விருப்பம். பெண் — பேண், பேணுதல், விரும்புதல் அல்லது விரும்பிப் பாதுகாத்தல். பெண் — பிணா — பிணவு — பிணவல். பெள் + தை = பெட்டை — பெடை - பேடை — பேடு, பெண் வீட்டிலிருப்பவள். இதனாலேயே, இல், மனை, குடி என்னும் வீட்டுப்பெயர்கள் மனைவியையுங் குறிக்கலாயின. அகத்திலுள்ள மனைவிபற்றியது அகப் பொருள். ஆண்பால் மறத்திற்குச் சிறந்தது. ஆள் — ஆண். ஆண் என்பது ஆள்வினைத் திறமையுடையது அல்லது மறமுடையது என்னும் பொருளது. ஆட்சி, ஆளல், ஆண்மை என்னுஞ் சொற்களை நோக்குக. ஆண் — (ஆடு) — ஆடவன். (ஆடு) — ஆடூஉ. ஆண்மைத் தொழில் போர்த்தொழிலும் பொருளீட்டலும். அகத்துக்கு (வீட்டுக்கு)ப் புறம்பே நிகழும் தொழில் புறப்பொருள்.

பொருளிலக்கணத்தைப்பற்றிச் சுருங்கச் சொன்னால், எல்லாக் கருத்துகளும் தொழிலும் பற்றிய மக்கள் வாழ்க்கையையே. அகம் புறம் என்னும் இருவகையால் நுட்பமாய் ஆராய்ந்தனர் முன்னோர் எனலாம். பண்டைத் தமிழர் கடவுள் வழிபாட்டிலும் வீடுபேற்று முயற்சியிலும் சிறந்திருந்தமையின், அகப்பொருளிலக்கணத்தைக் கடவுட்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் பிறிதுமொழி யுவமையாகவுங் கொண்டனர். இதையறியாது சில பார்ப்பனர் அகப்பொருளிலக் கணத்தைக் காமநூலென்கின்றனர்.

“ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே”

என்ற திருக்கோவைச் சிறப்புப்பாயிரச் செய்யுளே அவர்க்குச் சிறந்த விடையாகும்.

காமநூல் புணர்ச்சியின்பத்திற் கேதுவான பொருள்க ளையே கூறுவதாகும். ஒருவன் போர், கல்வி முதலிய தொழில் பற்றித் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துபோவதும், அவளிடம் சொல்லாமல் ஏகக் கருதியிருக்கும்போது, இரவில் தன்னையறியாமல் கனவிலுளறித் தன் போக்கை அவளுக்குத் தெரிவித்து விடுவதும் எங்ஙனம் காமநூலுக்குரிய பொருள் களாகும்? தமிழரின் இல்லற வாழ்க்கையைக் கருத்துப் புலனாக்கும் ஓவியமே அகப்பொருளிலக்கண மென்க.

இனி, புறப்பொருளையும், போர்த்தொழிலொன்றே கூறுவதென்றும், பிற கலைவளர்ச்சியைத் தடுப்பதென்றும் குறை கூறுகின்றனர் சில பார்ப்பனர். பிறமொழிகளிலில்லாத பொருளிலக்கணத்தை வகுத்த தமிழர், அங்ஙனம் பொருளிலக் கணத்தைக் குன்றக் கூறுவரா என்றும் சற்று நினைத்திலர். புறப்பொருட்குரிய எழுதிணைகளுள், ஐந்து திணைகளில் அரசர்க்கும் மறவர்க்குமுரிய போர்த்தொழிலைச் சிறப்பாய்க் கூறி, வாகைத்திணையில் எல்லாத் தொழில்களையும் கலைகளையும் பாடாண்டிணையில் புகழ்நூல்களின் எல்லா வகைகளையும் அடக்கினர் முன்னையிலக்கணிகள்.

வாகைத்திணையின் இலக்கணமாவது :—

“வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” [11] என்பது.

வாகைத்திணையின் பாகுபாடாவது :—

“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்
பாலறி மரபிற் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோ டாங்கெழு வகையான்
தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்” [12] என்பது.

பண்டை யுலகில் மறம் சிறந்த குணமாகக் கருதப்பட்டதாலும், பகையரசரைப் போராலடக்கினாலன்றிக் குடிகட்குப் பாதுகாப்பும் தொழில் நடைபேறு மின்மையானும், கலைகளை வளர்க்கும் அரசர் நூல்வாயிலாய்ப் புகழப்படற்குரியராதலானும், அரசர் தொழிலைத் தலைமைபற்றிச் சொல்லவே குடிகள் தொழிலும் ஒருவாறு அதனுள் அடங்குதலானும், போர்த் தொழில் பொருளிலக்கணத்திற் சிறப்பாய்க் கூறப்பட்டதென்க.

சான்றோன் என்னும் தமிழ்நாட்டு மறவர் பெயரையும் Knight என்னும் மேனாட்டு மறவர் பெயரையும் ஒப்பு நோக்குக.

இதில் முக்கியமானவற்றைக் கூறி ஏனையவற்றை 'அனை நிலை வகை' யென்பதி லடக்கினார் தொல்காப்பியர். பண்டைத் தமிழாசிரியர் பலர் அறிவ(சித்த)ராயிருந்தமையின், அவரியற்றிய கலைநூல்களெல்லாம் 'அறிவன் தேயமாய்' அடங்கும்.

செய்யுளிலக்கணம்:— செய்யுளுறுப்புகளில் அடிப் படையானது அசை. மேலையாரிய மொழிகளிலெல்லாம், அசை வகுப்பு அசையழுத்தத்தைப்(Accentuation of syllables)ப் பொறுத்தது. அங்கு அசைகள் எடுப்பசை (Arsis - accented syllable) படுப்பசை (Thesis-unaccented syllable) என இரண்டாக வகுக்கப்பெறும். வடமொழியில் லகு குரு என்னும் பாகுபாடும் இம் முறை யொட்டியதே. தமிழிலோ, ஆரிய மொழிகளிற்போல எளிய முறையில் ஒவ்வோ ருயிரெழுத்தாய்ப் பிரியாமல், எழுத்துகள் தனித்தொலிப்பதும் இணைந்தொலிப்பதும்பற்றி, நேரசை நிரையசையென்றும், அவை குற்றியலுகரத்தொடு கூடிவருதல் பற்றி, நேர்பு அசை நிரைபு அசை என்றும் நான்காக வகுத்தனர். இவற்றுள் முன்னவை இயலசை; பின்னவை உரியசை.

செய்யுட்களில் வெண்பா, கலிப்பா என்னும் பாக்களும் அவற்றின் வகைகளும் பிறமொழிகட்கில்லை.

செப்பலோசைக்கு வெண்பாவும், அகவலோசைக்கு ஆசிரியமும் துள்ளலோசைக்குக் கலிப்பாவும், தூங்கலோசைக்கு வஞ்சியும் சிறந்தனவென்று கண்டுபிடித்ததும், அகவலை நூற்பாவிற்கும், கலியையும் அதன் வேறுபாடாகிய பரிபாடலையும் அகப்பொருட்கும், அம்போதாங்கவொத் தாழிசைக்கலி, கொச்சக வொருபோகு முதலிய கலிவகைகளைக் கடவுள் வாழ்த்திற்கும் மருட்பாவைக் கைக்கிளைக்கும் உரிமையாக்கினதும், தமிழரின் சிறந்த மதிநுட்பத்தையும் நுண்ணிய செவிப்புலனையுங் குறிப்பனவாகும். செப்பல் - விடையிறுத்தல். அகவல் - ஒருவரை விளித்துக் கூறல். கலிப்பாவின் சிறப்பைக் கலித்தொகையிற் கண்டறிக.

எப்பொருளுக்கும் ஏற்ற ஓசையிற் செய்யுள் செய்வதும், பலவகை வண்ணங்களிற் பாடுவதும், சொற்செறிவும், தமிழுக்கே சிறப்பாயுரியன. தமிழ் யாப்புமுறை மிகமிக விரிவானது.

தமிழ்ச் செய்யுள்களில் மிகச் சிறந்தது கலிப்பாவாகும். அதன் வகை யிரண்டற்கு இங்குக் காட்டுத் தருகின்றேன்.

(திருமால் வாழ்த்து)

(1) அம்போதரங்க வொத்தாழிசைக்கலி

தரவு

“கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிறும் வாறுளைஇ
யழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத்
தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க
வார்புனலி னிழிகுருதி யகலிட முடனனைப்பக்
கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்;

தாழிசை 1

முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல
ரடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ;

2

கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க
வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு
மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச்
சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ;

3

"படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக்
கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு
வெரினொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாக
வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ;

பேரெண்

இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம்;
விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய் புரையு நின்னுடை;

சிற்றெண்

கண்கவர் கதிர்மணி கனலுஞ் சென்னியை;
தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை;

ஒலியிய லுவண மோங்கிய கொடியினை;
வலிமிகு சகட மாற்றிய வடியினை:

இடையெண்

“போரவுணர்க் கடந்தோய்நீ; புணர்மருதம் பிளந்தோய்நீ; நீரகல மளந்தோய்நீ; நிழறிகழைம் படையோய்நீ;

அளவெண்

ஊழிநீ; உலகுநீ; உருவுநீ; அருவுநீ
ஆழிநீ; அருளுநீ; அறமுநீ; மறமுநீ

தனிச்சொல்

எனவாங்கு;

சுரிதகம்

“அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்.”

(தோழி தலைவனை வரைவுகடாயது.)

(2) வண்ணக வொத்தாழிசைக்கலி

தரவு

“விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று
துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார்
பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றுங்
குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்
மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்கும்
தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்;

தாழிசை 1

“காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி
மாட்சியாற் றிரியாத மரபொத்தாய் கரவினாற்
பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
வணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ;

2

"அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாய்க்
கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ;

3

"பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்
தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட்
குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த்
தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ;

அராகம்

“தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்;
போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி;
தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன துறை;
மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கடிதொடர் புடையது கடல்;


நாற்சீரீரடி யம்போதரங்கம்

கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனா
லிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றிசைத்திலமோ;
கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால்
இருணிறத் தொருகானி லிராவார லென்றிலமோ ;

நாற்சீரோரடி யம்போதரங்கம்

நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே;
துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே;
அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே;
நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே;

முச்சீரோரடி யம்போதரங்கம்

அத்திறத்தா லசைந்தன தோள்;அலர்தற்கு மெலிந்தனகண்;
பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த் தனமுலை;
அழலினா லசைந்தது நகை;அணியினா லொசிந்த திடை;
குழலினா னிமிர்ந்தது முடி;குறையினாற் கோடிற்று நிறை;

இருசீரோரடி யம்போதரங்கம்

“உட்கொண்ட தகைத்தொருபால்;உலகறிந்த வலத்தொருபால்;
கட்கொண்ட றுளித்தொருபால்;கழிவெய்தும் படித்தொருபால்;
பரிவுறூஉந் தகைத்தொருபால்;படிறுறூஉம் பசப்பொருபால்;
இரவுறூஉந் தகைத்தொருபால்;இளிவந்த வெளிற்றொருபால்;
மெலிவுறூஉந் தகைத்தொருபால்;விளர்ப்புவந் தடைந்தொருபால்;
பொலிவுசென் றகன்றொருபால்;பொறைவந்து கூர்ந்தொருபால்;
காதலிற் கதிர்ப்பொருபால்;கட்படாத் துயரொருபால்;
ஏதில்சென் றணைந்தொருபால்;இயனாணிற் செறிவொருபால்;

தனிச்சொல்

"எனவாங்கு :

சுரிதகம்

"இன்னதிவ் வழக்க மித்திர மிவணலம்
என்னவு முன்னாட் டுன்னா யாகிக்
கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக்
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணியம் யாமே
பொற்பொடு பொலிகநின் புணர்ச்சி தானே.”

வடமொழியிலுள்ள உத்தம் முதல் உற்காதம் வரையுள்ள 26 சந்தங்களும்; நிகர்த், புரிக், விராட் முதலிய அளவழிச் சந்தங்களும்; மண்டிலம் (விருத்தம்) என்னும் இனயாப்புள் அடங்கும்.

தமிழ்ச்செய்யுட்கள் பா, பாவினம் என இருவகைப்படும். அவற்றுள், பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு. பரிபாடல் கலியின் திரிபு. மருட்பா முதலிரு பாக்களின் கலவை. பாவினம், துறை, தாழிசை, மண்டிலம் என மூன்று. இவை ஒவ்வொரு பாவிற்கு முரியன. மண்டிலத்தைப் பிற்காலத்தார் விருத்தம் என்னும் வட சொல்லாற் குறித்ததுடன், வடமொழி யாப்பாகவுங் காட்டினர். இதன் விளக்கத்தைத் தமிழ்ப் பொழிலில் யான் வரைந்துள்ள 'பாவினம்' என்னுங் கட்டுரையிற் கண்டுகொள்க.

ஒரு மொழியின் வடிவம் உரைநடை, செய்யுள் என இரண்டு. அவற்றுள் செய்யுள் சிறந்தது. செய்யுளிற் சிறந்தவர் தமிழர். முற்காலத்தில் தமிழ்ப்புலவர் உரையாட்டெல்லாம் செய்யுளாகவே யிருந்தன. கலைகளெல்லாம் பெரும்பாலும் செய்யுளிலேயே எழுதப்பட்டன. அகராதி (நிகண்டு) கூடச் செய்யுளி லெழுதப்பட்டது. பல்வகைத் தொழிலாளரும் செய்யுளியற்றுந் திறமையுடையவராயிருந்தனர். முன்னைய பயிற்சியும் ஊக்கலுமிருப்பின், இக்காலத்தும் கடும்பாவலர் (ஆசுகவிஞர்) தோன்றலாம்.

செய்யுளைப் பிறமொழியாரெல்லாம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என அறுவகையாயே யாராய்ந்தார்; தமிழரோ இருபத்தாறு வகையா யாராய்ந்தார். அவ்வகை யாவன:—

“மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .
ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும்
. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .. . . . .
நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.” (தொ.செ.1)

(1) “மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரைகளைச் செய்யுள் விராய்க்கிடக்கும் அளவை யென்றவாறு....(2) எழுத்தியல்வகை யென்பது, மேற்கூறிய எழுத்துகளை இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு.(3) அசைவகை யென்பது அசைக் கூறுபாடு; அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம்.(4) யாத்தசீர் என்பது, பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு.(5) அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவதோர் உறுப்பு.(6) யாப்பு என்பது, அவ்வடிதொறும் பொருள் பெறச் செய்வதொரு செய்கை.(7) மரபு என்பது காலமு மிடனும்பற்றி வழக்குத் திரிந்தக் காலுந் திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை.(8) தூக்கு என்பது, பாக்களைத் துணித்து நிறுத்தல்.(9) தொடைவகை யென்பது, தொடைப்பகுதி பலவு மென்றவாறு.(10) நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புகளைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்.(11) பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை.(12)அளவியல் என்பது, அப் பா வரையறை.(13) திணை யென்பது, அகம் புறமென்று அறியச் செய்தல்.(14) கைகோள் என்பது, அவ்வத்திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல்.....(15) கூற்றுவகை யென்பது, அச் செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல்...(16) கேட்போர் என்பது, இன்னார்க்குச் சொல்லுகின்றது இதுவெனத் தெரித்தல்.(17) களன் என்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச் செய்தல்....(18) காலவகை யென்பது, சிறுபொழுது பெரும் பொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின.(19) பயன் என்பது, சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல்.(20) மெய்ப்பாடு என்பது, சொற்கேட்டோர்க்குப் பொருள் கண்கூடாதல்.(21) எச்சவகை யென்பது, சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல்...(22) முன்னம் என்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச்சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல். (23) பொருள் என்பது, புலவன் தான் தோற்றிக் கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மை.(24) துறைவகை என்பது, முதலும் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படுமென்று ஒரு துறைப்படுத்தற்கு ஏதுவாகியதோர் கருவி அச் செய்யுட்குளதாகச் செய்தல்.....(25) மாட்டு என்பது, பல்வேறு பொருட் பரப்பிற்றாயினும் அன்றாயினும் நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக் கொள்ளச் செய்தல். (26)வண்ணம் என்பது, ஒரு பாவின் கண்ணே நிகழும் ஓசை விகற்பம்.”[13]

இவற்றுள் கூற்று, கேட்போர், களன் முதலிய சில வுறுப்புகள் எல்லா மொழிகட்கும் பொதுவேனும், அவை செய்யுளுறுப்புகளிற் சேர்க்கப்பட்டதும், நோக்கு, திணை, துறை முதலிய பிறவுறுப்புகளும் தமிழுக்குச் சிறப்பாகும்.

மேற்கூறிய 26 உறுப்புகளையும் தொல்காப்பியத்திற் கண்டு கொள்க. இங்கு நோக்கு என்பதற்கு மட்டும் ஒரு காட்டுத் தருகின்றேன்.

“முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய விரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானங் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெரு கானங்

குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுற லஞ்சி
மணிநா வார்த்த மாண்வினைத் தேர
னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவி ழலரி னாறு
மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே.” (அகம். 4)

“முல்லையென்னாது "வைந்நுனை" என்றதனான், அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனையாகாது மெல்லென்னுமாகலின். இல்லமும் கொன்றையும் மெல்லென்ற பிணியவிழ்ந்தன வென்றான், முல்லைக்கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை, 'இரும்பு திரித்தன்ன மருப்பு' என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பந்தணிந்தில, இரும்பு முறுக்கிவிட்ட வழி வெப்பம் மாறா விட்டவாறுபோல வெம்பா நின்றன வின்னுமென்றவாறு. 'பரலவ லடைய விரலை தெறிப்ப' எனவே, பரல் படுகுழிதோறுந் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாகலாற் பலகாலும் நீர் பருகியும் அப் பரல் அவலினது அடைகரை விடாது துள்ளுகின்றன வென அதுவும் பருவந் தொடங்கினமை கூறியவாறாயிற்று. 'கருவி வானங் கதழுறை சிதறி' என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகந் தனது வீக்கத்திடைக் காற்றெறியப்படுதலின் விரைந்து துளி சிதறின வென்றவற்றையும் புதுமை கூறினாள்; எனவே, இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின் வற்புறுத்துதற்கு இலேசாயிற்று. 'குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' என்பது, கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலுங் கொய்ய வேண்டுதலுமுடைய குதிரை யென்றவாறு; எனவே, தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு. அத்துணை மிகுதி யுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான் அங்ஙனம் மாட்சிமைப்பட்ட மான் றோனாதலா னென்றவாறு. அதற்கென்னை காரணமெனின், 'துணையொடு வதியுந் தாதுண் பறவை' எனவே, பிரிவஞ்சி யென்றவாறு. பறவை நாவொலி கேட்பின் வண்டு வெருவுமாகலின் அது கேளாதிரு மணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண்வினைத் தோறும் வாராநின்றானென இவையெல்லாந் தலை மகள் வன்புறைக் கேதுவாயின. 'கறங்கிசை விழவினுறந் தைக் குணாது, நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள்.' தெய்வமலை ஆகலான் அதனுளமன்ற காந் தளைத் தெய்வப் பூவெனக் கூறி, அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணங் கமழ்ந்த நின்கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மனங்குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மையினென, இதுவும் வன் புறைக்கே உறுப்பாயிற்று”[14]

அணியிலக்கணம் — அணியை முற்காலத் தமிழர் யாப் பினின்றும் பிரிக்கவில்லை. உவமையின் வேறுபாடுகளையும், எழுத்திலக் கணத்திலும் சொல்லிலக்கணத்திலுமுள்ள பல அமைதிகளையுமே பிற்காலத்தார் அணியிலக்கணமாகப் பிரித்துக் காட்டினர்.

“உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.”[15]

“இனி, இவ் வோத்தினிற் (உவமவியல்) கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும், சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளும் சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா; என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வருந்தாங் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியுமென்பது.....

“இனி, இரண்டுபொரு ளெண்ணியவற்றை வினைப்படுக் குங்கால் ஒருங்கென்பதோர் சொற்பெய்தல் செய்யுட்கு அணியென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ் செய்யுட்கணியா மென்பது அவர் கருத்து. ஒருங்கேயென்பதேயன்றி மூன்று தாழிசையுள் மூன்று பொருள்கூறி, 'எனவாங்கு' என்பதொரு சொல்லான் முடிந்தவழியும் 'எனவாங்கு' என்பதோர் மொழி எனவென்பது ஓரலங்காரமெனல் வேண்டுமாகலான், அவ் வாறு வரையறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன:

“இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணி யென்பவாயிற் சாத்தனையுஞ் சாத்தனாலணியப்பட்ட முடியுந் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல. அவ் வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது.

இனி, செய்யுட்கு அணிசெய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாமென்பது.”[16]

உவமை தொல்காப்பியத்திலுள்ள உவமவியலில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் வகைகளில் உள்ளுறை யுவமம் என்பது மிகச் சிறந்ததாகும். அதைத் தமிழர் அகப்பொருட் செய்யுள்களில் கையாண்டு வந்தனர். அது ஒரு நாட்டு வரணனையாய், அல்லது கருப்பொருட்டொழிலைக் கூறுவதாயமைந்து, அந்நாட்டரசனின் இயலையும் செயலையுங் குறிப்பாய்த் தெரிவிப்பதாகும். இது “மன்ன னெப்படி மன்னுயி ரப்படி” என்னும் நெறிமுறை பற்றியது. உள்ளுறுத் தியற்றப்படும் உவமம் உள்ளுறையுவமம்.

கா:

“வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயிற்கொண்ட

ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில்யானைக் கனைகடங் கமழ்நாற்ற
மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர.”
                            (கலித். 66)


“இதனுள், 'வீங்குநீர்' பரத்தையர் சேரியாகவும், அதன் கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர், பரத்தையரைத் தேரேற்றிக்கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம் மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள்வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர் வித்தலாகவும், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து, ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோ னுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.”

இலக்கியம்

தமிழிலக்கியத்தை இயல், இசை, நாடகம் என மூவகையாக வகுத்து, அவற்றை முத்தமிழ் என்றனர் முன்னோர்.

இயல்பாகவுள்ளது இயற்றமிழ்; அதனொடு அராகமும் தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ். இசைத்தமிழொடு ஆட்டஞ் சேர்ந்தது நாடகத்தமிழ்.

முத்தமிழில் ஒவ்வொன்றும் இலக்கணம், இலக்கியம் என இரு பிரிவுடையது. தொல்காப்பியம் போன்றது இயற்றமிழிலக்கணம்; மணிமேகலை போன்றது இயற்றமிழ் இலக்கியம். இசை நுணுக்கம் போன்றது இசைத்தமிழ் இலக்கணம்; தேவாரம் போன்றது இசைத்தமிழிலக்கியம். செயிற்றியம் போன்றது நாடகத்தமிழ் இலக்கணம்; சீகாழி அருணாசலக் கவிராயர் இயற்றிய இராமாயண நாடகம் போன்றது (ஆனால் உரையிடையிட்டது) நாடக இலக்கியம். அகத்தியம் முத்தமிழிலக்கணம்.; சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கியம் என்று சொல்லலாம்.

தமிழ்நாடக விலக்கியத்தைச் சிலர் ஆரிய மொழிகளிலுள்ள நாடகத் தொடர்நிலைச் செய்யுள் போன்றதாகக் கருதுகின்றனர். இசைப்பாட்டும் உரையுமாக அமைந்து நடித்தற்கேற்ற நிலையிலுள்ளதே தமிழ்நாடக விலக்கியமாகும்.

இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே.[17] இவை இலக்கு என்னும் பகுதியடியாய்ப் பிறந்து முறையே, அணம், இயம் என்னும் ஈறு பெற்றவையாகும். இலக்கு இலை. இலக்கித்தல் எழுதுதல் (சீவக. 180). இலக்கணம், இலக்கியம் என்பவற்றின் திரிபே, லக்ஷணம், லக்ஷியம் என்னும் வடசொற்கள், வடமொழியில் இலக்கணத்தைக் குறிக்கும் சொல் வியாகரணம் என்பது. செந்தமிழ்ச் சொற்களைத் திரித்து வடநூல்களில் வரைந்துகொண்டு அவற்றை வடசொல்லென்று வற்புரைப்பது ஆரிய வழக்கம். இலக்கணத்தைக் குறிக்க இலக்கணம் என்ற சொல்லன்றி வேறு சொல் தமிழில் இல்லை. இங்ஙனமே இலக்கியத்திற்கும். சிறந்த இலக்கணமும் இலக்கியமுமுடைய தென்மொழிக்கு அவற்றைக் குறிக்கும் சொல் இல்லையென்றால், அறிஞர் நம்ப முடியுமா?

இசைத்தமிழ் — Musical Literature

இசையாவது ஓசை. அது பாட்டிற்குரிய இன்னிசையைச் சிறப்பாயுணர்த்திற்று. இன்னிசை = சங்கீதம். (இன்னிசையரங்கு = சங்கீதக் கச்சேரி).

தமிழ் தலைக்கழகக் காலத்தில் இயலிசை நாடகமென முப்பிரிவா யிருந்ததென்பது, அகத்தியம் முத்தமிழிலக்கண நூல் என்பதால் அறிகின்றோம். தொல்காப்பியம் இயற்றிமிழ் இலக்கண நூலாயினும், இசைத்தமிழ்க் குறிப்புகள் ஆங்காங்கு சிலவுள. அவையாவன :

“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” (எழு.33)

“.....செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய
அவ்வகை பிறவும் கருவென மொழிப” (அகத்.20)

“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (களவு. 1)

“பாணன் பாடினி.... வாயில்கள் என்ப.” (கற். 52)

“.... பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே” (செ. 173)

என்பன.

இசை எல்லா நாட்டிற்கும் பொதுவேனும், தமிழர் அதில் தலைசிறந்திருந்தமைபற்றி அதை மொழிப்பகுதியாக்கினர். இழவு வீட்டில் அழுவதுகூட அராகத்தோடு அழுவது தமிழர் வழக்கம். அராகத்தோடு அழாவிட்டால், அழத் தெரியாதவராக எண்ணப்படுவர்.

இசைக்கு உறுப்பாவன அராகம், தாளம் என இரண்டு. அராகம் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக்குறிக்கும் சொல். அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா வுறுப்புக்களில் ஒன்றற்குப் பெயராயமைந்ததும் இச் சொல்லே. அரங்கன் என்பது ரங்கன், இரங்கன் என்று வழங்கினாற்போல, அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்றதென்க.

தாளம் என்பது பாடும்போது காலத்தைத் துணிக்கும் துணிப்பு. தாள் = கால். தாள் - தாளம். பாடும்போதும் ஆடும் போதும், காலையாவது கையையாவது, அசைத்தும் தட்டியும் தாளத்தைக் கணிப்பது இன்றும் வழக்கம். தாளத்திற்குப் பாணி கொட்டு என்றும் பெயர். பாணி = கை. பண்ணுவது பாணி. ஒ.நோ. செய்வது செய். செய் (தெ.) = கை. செய்-(சை)-கை (த.) (செய்கை - சைகை.) பாணி கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. கொட்டு அமுக்கு தல்; அதற்கு மாத்திரை 1/2. அசை தாக்கியெழுதல்; அதற்கு மாத்திரை 1. தூக்கு தாக்கித்தூக்குதல்; அதற்கு மாத்திரை 2. அளவு தாக்கினவோசை 3 மாத்திரை பெறுமளவும் வருதல். “அரை மாத்திரையுடைய ஏகதாள முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசன மீறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய” என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள், தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வட மொழிப் பெயர்கள்.

அராகம் இசை (சுரம்), பண், பாட்டு என முப்பிரிவையுடையது.

சுரம் மொத்தம் ஏழு, அவை ஏழிசை யெனப்படும். ஏழிசைகளாவன :—

தென்மொழிப் பெயர் வடமொழிப் பெயர் அடையாள

வெழுத்து

(1) குரல் ஷட்ஜமம்
(2) துத்தம் ரிஷபம் ரி
(3) கைக்கிளை காந்தாரம்
(4) உழை மத்திமம்
(5) இளி பஞ்சமம்
(6) விளரி தைவதம்
(7) தாரம் நிஷாதம் நி

ஏழிசைகளில் குரலும் இளியும் தவிர, ஏனையவைந்தும் இவ்விரண்டாகப் பகுக்கப்படுவன. இவ் விருசார் சுரங்களும், முறையே, பகாவிசை (ப்ரக்ருதிஸ்வரம்), பகுவிசை (விக்ருதி ஸ்வரம்) எனக் கூறப்படும்.

எழுசுரங்களும் நுட்பப் பிரிவால் 12 ஆவதும் 24 ஆவதும் 48 ஆவதும் 96 ஆவதும் ஓர் இசையை நான் காகக் கருணாமிர்த சாகரத்துட் (பக். 860 - 62) கண்டு கொள்க. தமிழர் பகுத்துணர்ந்தது அவரது நுண்ணிய செவிப் புலனைக் காட்டும்.

ஏழிசைகளும் சேர்ந்த கோவை ஒரு நிலை(octare) யெனப்படும். இதை ஸ்தாய் என்று மொழிபெயர்த்தனர் வடநூலார். ஸ்தா= நில். (நிலை என்பதை நிலையி என்று வழங்குவது நலம்.)

மாந்தன் தொண்டையிலும், ஓர் இசைக்கருவியிலும் அமையக் கூடிய 3 நிலையிகள் வலிவு, மெலிவு, சமன் என்று கூறப்பட்டன. இப்போது, அவை, முறையே, தாரம், மந்தரம், மத்திமம் என்று வடசொல்லால் வழங்குகின்றன.

பாட்டுப் பாடும்போதும் ஒரு கருவியை இயக்கும் போதும் அடிமட்டமாக வைத்துக்கொள்ளும் சுரம் கேள்வி யெனப்படும். இதை ச்ருதி (சுதி) என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் வடநூலார். ச்ரு = கேள்,

கேள்விச் சுரங்கள் மொத்தம் 24 என்று தமிழ்நூல் களும், 22 என்று வடநூல்களும் கூறுகின்றன. தமிழ்நூற் கூற்றே சரியானதென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது கருணாமிர்த சாகரத்துள் மிகத் திறமையாய் விளக்கியிருக்கிறார்கள். என் இசையாசிரியர் காலஞ்சென்ற மன்னார்குடி யாழாசிரியர் இராஜகோபாலையரவர்களும், தமிழ்க் கூற்றே சரியானதென்று ஒப்புக்கொண்டார்கள்.

ஏழு சுரங்களின் அடையாளவெழுத்துகளான ச ரி க ம ப த நி என்பவை, தமிழில் ஏற்பட்ட குறிகளே யென்றும், அவை குறிக்குஞ் சொற்கள் இப்போது வழக்கிறந்துவிட்டன வென்றும் சில காரணங் காட்டிக் கூறுகின்றனர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.[18]இது எங்ஙன மிருப்பினும், ஆரியர் வருமுன்னமே தமிழர்க்கு இசைத் தமிழ் இருந்ததென்பதும், ஆரியர் தமிழரிடமிருந்தே இசையைக் கற்றனர் என்பதும் மட்டும் மிகத் தேற்றமாம்.

ச ரி க ம ப த நி என்பவற்றிற்குப் பதிலாக, தமிழ்ச் சுரப்பெயர்களின் முதலெழுத்துக்களையே, கு து க உ இ வி த என்று வைத்துக் கொள்ளினும், அன்றி வேறு இனிய இசைவான எழுத்துகளை (க ச த நி ப ம வ) வைத்துக் கொள்ளினும், ஓர் இழுக்குமில்லை.

பண்ணாவது இனிமையைத் தருவதும், தனியோசையுடையதும் ஆலாபித்தற் கிடந்தருவதுமான, ஒரு சுரக்கூட்டம். அது நால்வகைப்படும். அவை பண் (7 சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என்பன. இவற்றையே, முறையே, சம்பூரணம், ஷாடவம், ஔடவம், சுவராந்தம் என வடசொல்லால் தற்காலத்தில் வழங்குகின்றனர். பண்ணை இக்காலத்தில் ராகம் என்கின்றனர். அது அராகம் என்பதன் முதற்குறை.

பண்களைத் திரிக்கும் முறைகளில் மிக விரிவானது பாலையெனப்படும். அது ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோண (முக்கோண)ப் பாலை, சதுர (நாற்கோண)ப் பாலை என நால்வகை. இந்நூல்வகையும், ஏழிசைகளையும் முறையே 12 ஆகவும் 24 ஆகவும் 48 ஆகவும் 96 ஆகவும் பகுக்கும் என்பர். அவற்றுள், ஆயப்பாலையினின்று, செம்பாலைப்பண் (தீர சங்கராபரணம்), படுமலைப் பாலைப்பண் (கரகரப்பிரியா), செவ்வழிப் பாலைப்பண் (தோடி), அரும்பாலைப்பண் (கல்யாணி), கோடிப் பாலைப்பண் (அரிகாம்போதி), விளரிப் பாலைப்பண் (பைரவி), மேற்செம் பாலைப்பண் (சுத்த தோடி) என்னும் ஏழுபண்கள் பிறக்கும்.

பெரும்பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும். இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ்—யாழ் = ஏழிசையுடையது.

இனி குல(ஜாதி)ப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன. இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாம். இவற்றை யெல்லாம் கருணாமிர்த சாகரத்துட் கண்டுகொள்க.

பிங்கலத்தில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. தேவாரத்தில் 24 பண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. “நரப்படைவாலு ரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண் ணூற்றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை ஒருவாறுணரலாம்.

குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை முதலியவாகப் பண்களுக்குரிய தனித்தமிழ்ப் பெயர்களையெல்லாம் மறைத்து, இடுகுறியான வடமொழிப் பெயர்களை வழங்கி இசைத்தமிழைக் கெடுத்தனர் ஆரியர்.

இசைக்கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி என நால்வகைப்படும். வாய்ப்பாட்டை மிடற்றுக் கருவியென ஒரு கருவியாகக் கூறுவர் சிலர்.

பண்ணைப் பாடும்போது, ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி யெனப்படும். அது இக்காலத்தில். ஆலாபனை, ஆலாபனம் என்னப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் வேர் ஆல் என்னும் தமிழ்ச்சொல்லே. ஆலுதல் சுற்றுதல், ஆடுதல். ஆலத்தி என்னுஞ் சொல்லை நோக்குக.

ஆரோசை, அமரோசை, அலுக்கு என்பவற்றுக்குப் பதிலாக, இப்போது, முறையே ஆரோகணம், அவரோகணம், கமகம் என்ற வடசொற்கள் வழங்குகின்றன.

பாட்டென்பது பண்ணுக்கமைந்த செய்யுள். பண்ணென்பது தனியிசை. இசையொடு சொல்லும் சேர்ந்தது பாட்டு. பாட்டை இன்று கீர்த்தனை என்பர். கடவுளின் கீர்த்திபற்றியது கீர்த்தனை.

சீர்த்தி — கீர்த்தி. “சீர்த்தி மிகுபுகழ்” என்பது தொல்காப்பியம். சீர் + தி = சீர்த்தி. கீர்த்தனை திருப்புகழ் என்றாற் போல்வது. கீர்த்தனைச் செய்யுள் கொச்சகக்கலி, அதன் திரிபான பரிபாடல் என்பவற்றினின்றும் பிறந்ததாகும்.

தோற்கருவிகள் “பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை,கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை” முதலியன.

இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழவு என ஏழு வகைப்படும்; மீண்டும் பாடன்முழா (கீதாங்கம்), நட முழா (நிருத்தாங்கம்), பொதுமுழா (உபயாங்கம்) என மூவகைப்படும். இக் கருவிகளை யெல்லாம் செய்தவரும் இயக்கினவரும் தனித் தமிழரேயன்றி ஆரியரல்லர்.

துளைக்கருவி குழல், நாகசுரம் முதலியன. பாம்பாட்டியின் குழலிலிருந்து தோன்றினமையால் நாகசுரம் எனப் பட்டது.

நரப்புக்கருவி பலவகைப்படும். அவற்றுள் ஐந்து பெருவழக்கானவை. அவை பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு). செங்கோட்டியாழ் (7 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு) என்பன.

நரப்புக் கருவிகளெல்லாம் பண்டைக்காலத்தில் யாழ் என்றே கூறப்பட்டன. இப்போதுள்ள வீணை செங்கோட்டி யாழாக அல்லது அதன் திருத்தமாக இருத்தல் வேண்டும். செங்கோடு நேரான தண்டி. செங்கோல் என்பதை இதனொடு ஒப்புநோக்குக.

“கணைகொடிதி யாழ்கோடு செவ்விது”[19] என்று கூறியது, வளைந்த பிற யாழ்களை நோக்கியேயன்றிச் செங்கோட்டியாழை நோக்கியன்று.

இசைத்தமிழ் வழக்கற்றுப்போன பிற்காலத்தில், கம்பர் முதலியோர் யாழும் வீணையும் வேறாகக் கருதினர். யாழ் என்னும் தென்சொற்குப் பதிலாகவே, வீணையென்னும் வடசொல் வழங்கி வருகின்றதென்க.

இப்போது ப்விடில் (Fiddle) என்று சொல்லப்படும் மேனாட்டிசைக்கருவி, பண்டு கீழ்நாட்டிலிருந்தே சென்றதாகத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் அதற்கு வழங்கும் பெயர் கின்னரி அல்லது கின்னரம் என்பது.

“கின்னரி வாசிக்குங் கிளி” என்றார் காளமேகரும். தென்னாட்டில், யாழ்பயின்ற ஒரு வகுப்பார் யாழோர் எனப்பட்டது போல, கின்னரம் பயின்ற ஒரு வகுப்பார் கின்னரர் எனப்பட்டனர்போலும்! யாழோரும் (கந்தருவர்) கின்னரரும் பதினெண்கணத்தைச் சேர்ந்தவராகப் புராணங் கூறும்.

யாழுறுப்புகள் வாய், கவைக்கடை, கோடு, மாடகம், நரம்பு, திவவு, பத்தர், போர்வை, ஒற்று, தந்திரிகரம், ஆணி முதலியன. இவற்றுள், மாடகம், ஒற்று, தந்திரிகரம், ஆணி என்பவற்றால் வீணை போன்றிருந்த ஒரு யாழ் அனுமானித் தறியப் படும்.

யாழில் இசையமைக்கும் வகை பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும் போக்கு என எட்டு. யாழை இயக்கும் (வாசிக்கும்) வகை வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என எட்டு.

நின்ற நரம்பு(ச), இணை நரம்பு (ப), கிளை நரம்பு (ம), நட்பு நரம்பு (க), பகை நரம்பு என்பன நரம்புகட்கிடையுள்ள தொடர்பைக் காட்டும் குறியீடுகள்.

செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம் என்பன நரம்புகளின் குற்றங்களைக் காட்டும் குறியீடுகள். யாழ்நரம்பின் குற்றங்களைச் சீவக சிந்தாமணியிற் காந்தருவதத்தை யிலம்பகத்திற் கண்டு கொள்க.

இயம் என்பது வாத்தியத்திற்குப் பொதுப்பெயர். இயவர் = வாத்தியக்காரர்.

மேளம் என்பது ஒருவகைப் பறையையும், நிலையித் திட்டத்தை (Scale)யும் குறிக்கும் செந்தமிழ்ச்சொல்.

பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தொழில் நடாத்தி வந்தவர் பாணர் என்னும் பறையர் வகுப்பினர். “பாண்சேரிப் பற்கிளக்கு மாறு” என்பது பழமொழி. 11ஆம் நூற்றாண்டுவரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்து வந்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் அபயகுல சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் அமர்த்தப்பட்டமையால் விளங்கும்.

ஆரியப் பிராமணர் இசை பயிலக்கூடாதென்று பண்டு ஒரு விலக்கிருந்தது. மனுதர்ம சாஸ்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில், பிராமணர் “பாட்டுப்பாடுவது, கூத்தாடுவது ..... இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கருமத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக் கத்தினின்றும் தவறியதால், சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி. அ. 38, 89),

“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதி”

என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது.

சாமவேத (சுருக்கம்) மொழிபெயர்ப் பாசிரியரான ஜம்புநாதன் என்பவர், அவ் வேதத்தைச் சரளி முறைப்படி பாடத் தொடங்கியது பிற்காலமென்று குறித்துள்ளார்.[20]

வேத மந்திரங்கள் மன்றாட்டாதலின், இசைத்தமிழ்ப் பாட்டுப் போல ஆலாபித்துப் பாடப்பட்டிருக்க முடியாது.

பாட்டுத்தொழிலால் மதிப்பு, வருவாய் முதலிய பயன்களைக் கண்ட பார்ப்பனர், பிற்காலத்தில் அத் துறையில் இறங்கிப் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறையமைப்பால், பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்துவிட்டனர். அவர் முதலாவது நரப்புக்கருவியும், பின்பு துளைக்கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் தொடங்கியிருக்கின்றனர்; ஆயினும், புல்லாங்குழல் மிருதங்கம் போன்ற மதிப்பான கருவிகளையே பயில்வர்.

பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனர் இசைபயின்று அதைக் குலத்தொழில்போல ஆக்கிக்கொண்டமையாலேயே, தியாகராஜ ஐயர் என்னும் பார்ப்பனர் தலைசிறந்த இசைப் புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதை அறிதல் வேண்டும்.

நாடகத்தமிழ்—(Dramatic Literature)

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்” [21]

“கூத்தர் விறலியர். . . . . வாயில்கள் என்ப” [22]

என்பவற்றால், தொல்காப்பியர் காலத்து நாடகமுண்மை யறியப்படும்.

நாடகம் என்பது நடி என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற்பெயர். நடி + அகம் = நாடகம். (முதனிலை திரிந்து ஈறுபெற்ற தொழிற்பெயர்). நடி + அம் = நடம் -—நட்டம். நட்டம்—நிருத்தம் (வ). ஒ.நோ : வட்டம் — விருத்தம் (வள் + தம் = வட்டம்). நாடகம் கதை தழுவிவரும் கூத்து. நடம் நட்டம் என்பன தனிக்கூத்தும் பாட்டிற்கேற்ற அபிநயமுள்ளதும். நட்டம் பயிற்று பவன் நட்டுவன். நடம் பயில்பவள் கணிகை. நாடகமாடுபவள் நாடகக் கணிகை. தாளத்தைக் கணித்தாடுவதால் கணிகை யென்று பெயர். கணிகையை இக்காலத்தில் தாசியென்பர். தாசி = அடியாள், தேவடியாள். தனிக்கூத்திற்குத் தாண்டவம் என்னும் பெயர். தாண்டியாடுவது தாண்டவம். தாண்டுதல் — குதித்தல்.

நடி என்பது நட என்னும் சொல்லின் திரிபு. முதன்முதல் நடித்தது ஒருவனைப்போல் நடந்து காட்டியதே. நட என்னும் சொல்லே “அம்” ஈறுபெற்று நடம் என்றானது எனினும் பொருந்தும். நடக்கிற இடம் என்பதை நடமாடுகிற இடம் என்று சொல்லும் வழக்கை நோக்குக.

நடத்தல் என்பது, காலால் நடத்தலை மட்டுமன்றி ஒழுகும் வகையையுங் குறிக்கும். நடக்கை, நன்னடக்கை முதலிய வழக்குகளை நோக்குக.

நாடகத்தைத் தனிக்கூத்து, பாட்டொடு கூடியது, கதை தழுவியது என மூன்றாய் வகுக்கலாம்.

நாடகத்திற்குக் கூத்து என்றும் பெயர். கூத்து என்பது முதலாவது ஆட்டத்தை மட்டும் உணர்த்தி, பின்பு கதை தழுவிய நாடகத்தையும் உணர்த்துகின்றது. குதித்தாடுவது கூத்து. கூத்தாடுகிறான், ஆனந்த (உவகை)க் கூத்தாடினான் என்னும் வழக்குகளை நோக்குக.

நாடகத்தை முன்னோர் (1) வசைக்கூத்து, புகழ்க்கூத்து, (2) வேத்தியற்கூத்து, பொதுவியற்கூத்து, (3) வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து, (4) சாந்திக்கூத்து, வினோத (இன்ப)க் கூத்து, (5) ஆரியக் கூத்து, தமிழக்கூத்து, (6) இயல்புகூத்து, தேசிகக்கூத்து, (7) அகக்கூத்து, புறக்கூத்து எனப் பலவகையில் இவ்விரண்டாக வகுத்தனர்.

இனி, உலகியற்கூத்து, தேவியற்கூத்து என வகுக்கவும் இடமுண்டு. தேவியலாவன அரங்கேற்றுகாதையிற் கூறப்படும் 11 ஆடல்கள் போல்வன. சாந்திக்கூத்தின் வகை :

(1) சொக்கம் - தனிநடம் (சுத்தநிருத்தம்).
(2) மெய் - தேசி, வடுகு, சிங்களம்.
(3) அவிநயம் - கதைதழுவாது பாட்டின் பொருளுக்கேற்ப வல்லபஞ்செய்வது.
(4) நாடகம் - கதை தழுவிவருவது.

அவிநயம் (அபிநயம்) என்னுஞ்சொல் ஓர் இருபிறப்பி.

விநோதக்கூத்தின் வகை :—

(1) குரவை
(2) கலிநடம் - கழாய்க்கூத்து
(3) குடக்கூத்து
(4) கரணம்
(5) நோக்கு - மாயம், கண்கட்டு முதலியன:
(6) தோற்பாவை
(7) நகைத்திறச்சுவை.

சிலர் நகைத்திறச்சுவைக்குப் பதிலாக வெறியாட்டைக் கூறுவர்.

வரிக்கூத்து கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எட்டுவகைப்படும்.

அவிநயம் வெகுண்டோன், ஐயமுற்றோன், சோம்பினோன், களித்தோன், உவந்தோன், அழுக்காறுடையோன், இன்பமுற்றோன்,தெய்வமுற்றோன், ஞஞ்ஞையுற்றோன், உடன்பட்டோன், உறங்கினோன், துயிலுணர்ந்தோன், செத்தோன், மழை பெய்யப்பட்டோன், பனித்தலைப்பட்டோன், வெயிற்றலைப் பட்டோன், நாணமுற்றோன், வருத்தமுற்றோன், கண்ணோவுற்றோன், தலைநோவுற்றோன், அழற்றிறப்பட்டோன், சீதமுற்றோன், வெப்பமுற்றோன், நஞ்சுண்டோன் என 24 வகைகளையுடையது. இவற்றை இன்னும் மலையாள நாட்டுக் கதகளியிற் காணலாம்.

அவிநயத்திற்குரிய கை இணையாவினைக்கை (பிண்டி, ஒற்றைக்கை), இணைக்கை (இரட்டைக்கை, பிணையல்) என இருவகை. இவற்றோடு ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என நான்கைக் கூட்டுவாருமுளர்,

இணையாவினைக்கை பதாகை முதல் வலம்புரியீறாக 33 வகைப்படும். இணைக்கை அஞ்சலி முதல் வருத்தமானம் ஈறாக 15 வகைப்படும்.

இனி, அவிநயக்கை எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என மூன்றாகவும் வகுக்கப்படும்.

நாடகமாடும் சாலை அரங்கு எனப்படும். இச் சொல் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து, அறை என்னும் பொருளையுடையது. அறையை அரங்கு என்பது இன்றும் தென்னாட்டு வழக்கு.

அரங்கிற் கட்டும் திரை எழினி யெனப்படும். மேல் எழுந்து செல்வதால் எழினி யெனப்பட்டது. அது ஒருமுக வெழினி (ஒருபுறத்தினின்று இழுப்பது), பொருமுக வெழினி (இரு புறத்தினின்றும் இழுக்கும்), இரட்டைத்திரை: கரந்துவரல் எழினி (மேனின்று கீழிறங்கி வருவது) என மூவகைப்படும் வடநூல்களில் ஒரேயொருவகைத் திரைமட்டும் கூறப்பட்டுள்ள தாகச் சொல்லப்படுகிறது.

நாடகம்பற்றிய பிறவிலக்கணங்களை யெல்லாம், அடியார்க்குந ல்லார் அரங்கேற்று காதைக் குரைத்த வுரையினின்றும் அறிந்து கொள்க.

இசையிலும் நாடகத்திலும் இதுபோது வழங்கும் வடசொல் மிகுதியைக் கண்டு, இவை ஆரியக்கலைகளோ என்று ஐயுறற்க.இவற்றை ஆரியக்கலைகளாகக் காட்டவேண்டியே, தென் சொற்கட்குப் பதிலாக வடசொற்களைப் புகுத்திவிட்டனர் ஆரியர் என்க. குரல் என்பதைக்கூடச் சாரீரம் என்று சொன்னால் பிறவற்றைப் பற்றி என் சொல்வது?

இசைத்தமிழும் நாடகத்தமிழும் மறைந்துபோனமைக்கு ஆரியமும் சமணமும் பெரிதுங் காரணமாகும்.

தொல்காப்பியத்தினின்று அறியும்பாக்களும் நூல்களும்

அறுவகைப்பாக்கள் — (Poetic Metres)

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாடல் என்பன.

இருபான் வண்ணங்கள்— (Poetic Rhythms)

பா அ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண் ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர (ஓவிய) வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என்பன.

பொருளீடுகளும் நூல்வகைகளும்—(Different Themes and Kinds of Poetry)

காமப் பொருளீடுகள்— (Amatory Themes)

கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை, மடல் முதலியன.

வர்ணனைப் பொருளீடுகள் (Descriptive Themes)

குறிஞ்சி, முல்லை (Pastoral),மருதம், நெய்தல், பாலை என்பன.

போர்ப் பொருளீடுகள் —Martial Themes

வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை முதலியன.

கருதற் பொருளீடுகள் —Reflective Themes

பெருங்காஞ்சி,முதுகஞ்சி,மறக்காஞ்சி,வஞ்சினக் காஞ்சி,மகட்பாற்காஞ்சி,கையறுநிலை (Elegy) முதலியன.

பாடாண் பொருளீடுகள் Euology and Doxology

உலா,கொற்றவள்ளை, இயன்மொழி வாழ்த்து, நால் வகை யாற்றுப்படை, கடவுள் வாழ்த்து முதலியன.

வாயுறை வாழ்த்து
செவியறிவுறூஉ

Didactic

புறநிலை வாழ்த்து — Benedictory.

செய்யுளின் எழுநிலம் —Bases of Poetical Composition

பாட்டு (Poem or Lyric), உரை (Prose), நூல் (Grammar and Science), வாய்மொழி (Scripture), பிசி (Riddle), அங்கதம் (Satire and Imprecation), முதுசொல் (Proverb) என்பன.

இவற்றுள், உரை பாட்டிடை வைத்த குறிப்பு (Prose interposed in poetry), பாவின்றெழுந்த கிளவி (Commentary), பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி (Fable), பொருளொடு புணர்ந்த நகைமொழி (Wits and Humour) என நால் வகைப்படும்.

நூல்வகை— Different Kinds of Poems

பண்ணத்தி -பாட்டும் உரையும் கலந்த ஒருவகை நூல்.

எண் வனப்பு

அம்மை (Sonnet), அழகு (Poem with proper diction), தொன்மை (Legend in mixed prose & verse), தோல் (Epic), விருந்து (Novel Composition), இயைபு (Epic whose sections end in any of the nasals or liquids), புலன் (Dramatic), இழைபு (Lyrical) என்பன.

மறைநூல்—(Scripture)

ஒவ்வொரு நாட்டிலும் முதலாவது தோன்றக்கூடிய சிறந்த நூல் மறைநூலாகும். அதனால் அதன் பெயர் அறிவு அல்லது புத்தகம் என்று பொருள்படுவதாயிருந்து, பிற்காலத்தில் பிற நூல்களுக்கும் கலைகளுக்கும் பொதுப் பெயராவதுண்டு.

ஆங்கிலத்தில் கிறித்தவ மறைநூலுக்கு Bible என்று பெயர். இது புத்தகம் என்று பொருள்படும் biblos என்னும் கிரேக்கச் சொல்லினின்றும் பிறந்தது.

Bible என்னும் சொல் இன்றும் புத்தகம் என்று பொருள் படுவதை, bibliography, bibliomania முதலிய சொற்களா லறியலாம் Scripture என்பதும் முதலாவது எழுத்து (எழுதப்பட்ட நூல்) என்றே பொருள்படும். Script - எழுத்து.

வடமொழியில் வேதமே முதலாவது நூல். வேதம் என்னும் பெயர், 'வித்' (அறி) என்னும் வேரினின்று பிறந்து, அறிவு என்று பொருள்படுவதொரு சொல். பிற்காலத்தில் ஆயுர்வேதம், காந்தருவ வேதம், தனுர்வேதம் என்று பிற கலைகட்கும் வேதம் என்னும் சொல் பொதுப்பெயராயிற்று.

இங்ஙனமே தமிழிலும் முதலாவதெழுந்த நூல் மறை நூலாகும். மறை என்னும் சொல் மறைவான (Esoteric) பொருளுள்ளது என்று பொருள்படுவது. பின்பு அது பிற கலைகட்கும் பொதுப் பெயரானதை, “நரம்பின் மறை” என்றும், “காமப் புணர்ச்சியும்.... மறையென மொழிதல் மறையோர் ஆறே” [23] என்றும், முறையே, இசைநூலையும் இலக்கண நூலையும் குறிக்க அச் சொல்லைத் தொல்காப்பியர் வழங்கியதினின் றறியலாம்.

தமிழர்க்குத் தனிமறையிருந்த தென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில்,

“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே” (75)

“மறைமொழி கிளந்த மந்திரத் தான (158)

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” (171)

என்று கூறியிருப்பதா லறியப்படும்.

மறைநூ லிலக்கணம் தொல்காப்பியர் கூறியபடியே திருவள்ளுவரும் கூறுகின்றார்.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”

நக்கீரர் பாடிய “முரணில் பொதியில்” என்னும் செய்யுளை மந்திரமன்றென்றும் அங்கதப் பாட்டென்றும் பேராசிரியர் கூறியிருப்பதாலும், 'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்தில் முனிவர் சாவிப்பைத் தனியாய்,

“குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது”

என்று கூறியிருப்பதாலும், “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி” என்பது, முனிவருடைய வாழ்விப்புச் சாவிப்பாற்றலைக் குறியாது, மக்கள் கைக்கொள்ள வேண்டிய விதியாக, அல்லது கடவுளின் கட்டளையாக, முனிவர் கூறிய மறைபொருளுள்ள கூற்றுகளையே குறிப்பதாகும்.

பக்குவான்மாக்களுக்கன்றிப் பிறர்க்கறிவிக்கப் படாமல் மறைக்கப்பட்டதனால் மறைமொழி யெனப்பட்டது.

மறை, மறைநூல் என்பன தமிழர் வேதத்தையும், மறைமொழி என்பது அவ் வேதக் கூற்றையும், வாய்மொழி, மந்திரம் என்பன அவ் வேதச் செய்யுள்களையும் குறிப்பனவாகும்.

நம்மாழ்வார் வாய்மொழியென்ற சொல்லையும், திருமூலர் மந்திரம் என்னும் சொல்லையும் தெரிந்து கொண்டனர்.

வாய்மொழி என்பது வாய்க்கும் அல்லது நிறைவேறும் சொல்லென்றும், மந்திரம் என்பது மனத்தின் திரம்பற்றிய சொல்லென்றும் பொருள்படும்.

மனம், திரம் என்பன தமிழ்ச்சொற்களே. முன்னுதல் - நினைத்தல். முன் + அம் = முன்னம் - முனம்.

A.S.munan, to thinks. Ger. meinen, to think. முனம் — மனம் (முன் - மன்) ஒ.நோ : முடங்கு — மடங்கு.

முறுமுறு — மர்ம௧ர் (Murmur), E.

மனம் — மனஸ் (Sans), mens(Lat),menos(Gr.), menos(Gr.), mind (E).

திரம் = உறுதி. திரம் — திறம். ர — ற. ஒ.நோ : ஒளிர் — ஒளிறு; கரு(ப்பு) — கறு(ப்பு). திரம் என்பதையே ஸகரமெய் முதற் சேர்த்து ஸ்திரம் என்றனர் வடமொழியாரியர். ஒ.நோ. நாகம் - snake (E).

முன் - மன். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ : தேன் + தட்டு = தேந்தட்டு.

வாய்மொழி மந்திரம் என்னுஞ் சொற்கள் ஒருபொருட் சொற்களாகத் தொல்காப்பியத்திற் கூறப்படினும், வழக்குப் பொருளில் அவற்றுக்கு வேறுபாடுண்டு. அது பின்னர்க் கூறப்படும்.

“எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே”

என்று தொல்காப்பியப் பிறப்பியலிற் (20) கூறியது தமிழ மறையையேயன்றி ஆரிய மறையையன்று.

முதலாவது, அந்தணர் என்னும் சொல் முனிவரைக் குறித்த தென்றும், தொல்காப்பியம் இலக்கணங் கூறுவது தமிழ் எழுத்து கட்கேயென்றும் அறிதல் வேண்டும்.

இரண்டாவது, “அஃதிவண் நுவலாது.... அளவுநுவன் றிசினே” என்பதால், நுவலத்தக்க எழுத்தொலியையே நுவலாததாகக் கூறுகின்றார் தொல்காப்பியர் என்றறிதல் வேண்டும். தொல்காப்பியத்தில் நுவலத்தக்க எழுத்துகள் தமிழ் எழுத்துகளே. ஆகையால், ஒப்பீட்டு (Comparative) முறையாலும் ஆரிய வெழுத்துப் பிறப்புக் குறிக்கப்படவில்லை.

தொல்காப்பியர் காலத்தில் ஆரிய மொழியில் இலக்கண மிருந்த தில்லையென்று முன்னமே கூறப்பட்டது.

“அகத்தெழு வளியிசை.... நுவலாது,” “புறத்திசைக்கும் மெய்தெரி வளியிசை....நுவன்றிசினே” என்று கூறுவதால், வாயினின்றும் வெளிப்பட்டொலிக்கின்ற வடிவுதெரியும் எழுத்தொலியைக் கூறுகின்றாரென்றும், அங்ஙனம் வெளிப்படாது உள்ளேயே ஒலிக்கின்ற எழுத்தொலியைக் கூறவில்லையென்றும் தெரிகின்றது.

வடமொழி யெழுத்துகளெல்லாம் புறத்திசைத்து மெய் (வடிவு) தெரிகின்ற வொலிகளாதலின், அவற்றைத் தொல்காப்பியர் குறிக்கவில்லை யென்பது தேற்றம்.

பின் வேறு பொருளென் எனின், கூறுகின்றேன். தமிழ் நாட்டில், முனிவரும் யோகியருமிருந்தமையும் அவர் யோகு பயின்றமையும், “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னாற்றிய அறிவன் தேயமும்,” “நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்,” “அந்தணர்,” “நிறைமொழி மாந்தர்” என்று தொல்காப்பியர் கூறுவதாலறியலாம்.

யோகம் தமிழில் தபம் அல்லது தவம் எனப்படும். தபுத்தல் (பிறப்பைக்) கெடுத்தல். தபு + அம் = தபம் — தவம். ஒ.நோ : தபல்— தவல். திருவள்ளுவர் தவம் என்னுஞ் சொல்லை யோகம் என்னும் பொருளிலேயே வழங்கியிருக்கிறார். தொல்காப்பியரும் அதே பொருளில் அதன் மறுவடிவான தபம் என்பதை வழங்கியிருக்கிறார். தபம் செய்வார் தபத்தோர் அல்லது தாபதர் எனப்படுவர்.

தபத்தில், எண்ணம் இறைவன்மேலேயே யிருப்பதால், வினைக்குக் காரணமாக அவாவும், அதன் காரியமாகிய வினையும், அதன் பயனான பிறப்பும் தபுகின்றன. இதுவே தபம். துறவொழுக்கத்தின் முக்கிய நிலை தவமே. தவமில்லா விடின் துறத்தலரிது. இதனாலேயே, துறவறவியலில், தவத்தை முன்னும் துறவு அவாவறுத்தல்களைப் பின்னும் வைத்துக் கூறினார் திருவள்ளுவர். இல்லறத்தினின்றும் துறவறத்தை வேறுபடுத்திக் காட்டுவதும் தவநிலையே.

தபம் என்னுஞ் சொல் முதலாவது துறவுநிலை முழுவதையுங் குறித்துப் பின்பு அதில் முக்கியப் பகுதியான யோகுநிலையை மட்டுங் குறித்தது. துறவறத்தைப்பற்றிய பகுதி முழுமைக்கும் 'துறவறவியல்' என்று பெயரிட்டு, அதில் 'துறவு' என ஒரு தனியதிகாரமும் அமைத்திருக்கிறார் திருவள்ளுவர். இங்ஙனமே தவம் என்னும் பெயரும் என்க.

தபம் - தபஸ் (வ). ஒ.நோ : மனம்-மனஸ் (வ.).

தவத்திற்குரிய எண்கூறுகள் இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்.

இவற்றுள் முதல் மூன்றும் கடையொன்றும் வடசொற்கள். இவற்றுக்குப் பதிலாகக், கடிவு, நோன்பு, இருக்கை, கலத்தல் என்பவற்றை முறையே வைத்துக்கொள்ளலாம். பிற்காலத்தார் எண்ணுறுப்புக்களையும் வடசொற்களாலேயே கூறுவர். பொருட்டொகைகளை முதலிலிருந்து கவனித்துக் கொண்டே வந்தால், தொல்காப்பியர் காலத்தில் இரண்டொரு வட சொற்களே தோன்றிப் பின்பு வரவர மிக்குத் தற்காலத்தில், பொருட்பாகுபாடுகளெல்லாம் ஆரியமோ என்று மயங்கும்படியாயிருப்பது தோன்றும்.

தவத்திற்குரிய எண்ணுறுப்புக்களில் வளிநிலை மிக முக்கியமானது. இதைப் பிராணாயாமம் என்பர் வடநூலார்.

உண்மூச்சு, வெளிமூச்சு என்னும் இருவகை மூச்சுக்களில் முன்னது ஒரு மடங்கும் பின்னது ஒன்றரை மடங்குமாகும். இவ் விரண்டையும் சமமாக்கிவிட்டால் வாழ்நாள் நீடிக்கும் என்பது முன்னோர் கருத்து. அங்ஙனம் சமமாக்கி இருவகை மூச்சுக்களையும் நிகழ்த்தும்போதே, கடவுள் பெயரான சிவ என்னும் ஈரெழுத்துகளையும் மந்திரமாக வொலித்துக்கொள்ளும்படியான முறையையும் அவர்கள் வகுத்தார்கள். இயல்பாகக் குறுகியும் நீண்டுமிருக்கின்ற உண்மூச்சு வெளிமூச்சுகள், குறிலும் நெடிலுமாகவுள்ள 'சிவா' என்னும் விளிப்பெயர் போல்வ வென்றும். அவற்றைச் 'சிவ' என்னும் விளி வடிவை யொக்குமாறு சமப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அவ் விருவகை மூச்சுக்களையும் 'சிவ' என்னும் ஈரெழுத்தொவிகளாகக்கருதுவதுடன், அவ் வொலிகளாகவே அம் மூச்சுக்களைப் புறத்தார்க்குப் புலனாகாதபடி மெல்லிதாய் உயிர்க்க வேண்டுமென்றும், அதனால் உடலுக்கு இளமையும் ஆன்மாவிற்கு வீடுபேறும் கிட்டும் என்றும் முன்னோர் கொண்டனர். இவற்றை,

“கூட மெடுத்துக் குடிபுக்க மங்கைய
ரோடுவர் மீளுவர் பன்னிரண் டங்குல
நீடுவ ரெண்விரற் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல வஞ்செழுத் தாமே”

“வளியினை வாங்கி வயத்தி லடக்கிற்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்”</poem>}}

“சிவசிவ வென்கிலர் தீவினை யாளர்
சிவசிவ வென்றிடத் தீவினை மாளும்
சிவசிவ வென்றிடத் தேவரு மாவர்
சிவசிவ வென்னச் சிவகதி தானே”

என்னும் திருமந்திரங்களான் உணர்க: இதன் விளக்கத்தைத் திருவாளர் C.S. சுந்தர முதலியார் எழுதிய 'திருமந்திர உபதேசப் பகுதியுரை'யிற் கண்டுகொள்க. (பக். 52—4).

சிவம் அல்லது சேயோன் (முருகன்) என்பது பண்டைத் தமிழ்த்தெய்வம் என்பதும், ஆரிய வேதங்களி லுள்ள ருத்திரன் என்னும் தெய்வமும் தமிழர் தெய்வமாகிய சிவம் என்பதும் வேறு என்பதும் பின்னர்க் காட்டப்படும்.

'சிவாய நம' என்னும் திருவைந்தெழுத்தில் 'சிவ' என்னும் ஈரெழுத்துகளே தமிழர்க்குரியன. 'ஆய' என்னும் நான்காம் வேற்றுமையுருபும், 'நம' என்னும் வணக்கங்குறித்த சொல்லும், வடமொழியாகும். தமிழர்க்குத் திருவைந்தெழுத் திருந்திருப்பின், அது 'சிவபோற்றி' என்பது போன்றிருக்குமே யன்றிச் 'சிவாய நம' வென்றிருக்கவேயிருக்காது. ஆரியர் தமிழ மதத்தலைவரான பிற்காலத்தில், வடமொழி தேவ மொழி யெனப்பட்டு, தமிழிற் புகுந்த ஒவ்வொரு வடசொல்லும் வடவெழுத்தும் தெய்வத்தன்மை யேற்றிக் கூறப்பட்டது. சரித்திரமும் மொழிநூலுமறியாத தமிழர்க்கு இன்றும் நான் சொல்வது விளங்காதென்றே நினைக்கின்றேன். ஆங்கிலவறிஞரும் சூழ்ச்சியப்புலவரு (Engineer)மான மாணிக்க நாயகரே மயங்கின ரென்றால் பிறரை யென்சொல்வது? மூச்சுகள் இரண்டேயாதலும், சிவ என்னும் சொல் ஈரெழுத்துச் சொல்லேயாதலும் அதனால் வளிநிலை அஞ்செழுத்தெண்ண லாகாமையும் அறிந்துகொள்க.

“எல்லா வெழுத்தும்” என்னும் தொல்காப்பிய நூற் பாவில், “உறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல்” என்பதைச் 'சிவ' என்னும் திருவிரண் டெழுத்துப் போன்ற வொலிகளைத் தவத்தோர் ஒலித்தலா கவே கொள்ள வேண்டும் என்க.

தொல்காப்பியப் பாயிரத்தில், “நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு” என்னும் பகுதியில், நான்மறையென்றது தமிழ் மறையையே.

நான்மறையென்பது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் மறையை. ஏலாதியென்னும் கீழ்க்கணக்கு நூற் கடவுள் வாழ்ந்துச் செய்யுளிலுள்ள 'நான்மறை' என்னுந் தொடர்க்கும் இங்ஙனமே பொருள் கூறப்பட்டுள்ளது. மற்றப்படி, சமணர்க்கு நான்கு மறைகளின்மை யறிக. பதினான்கு சுரமுள்ள கோவையைப் பதினாற்கோவை யென்பதுங் காண்க.

ஆரியர்க்குத் தொல்காப்பியர் காலத்தில் ஒரே மறைதானிருந்தது. இப்போதும் உண்மையானபடி ஆரிய மறைகள் ருக்கு, அதர்வணம் என இரண்டேயாகும். யசுர், சாமம் என்பன பெரும்பாலும் ருக்வேத மந்திரங்களைக் கொண்டவையே. ருக் வேதத்திலுள்ள மூலமந்திரங்கள் 1028 [24] என்று சொல்லப்படுகிறது. ருக்வேத மந்திரங்களுள் வேள்விக்குரிய வற்றைப் பிரித்து யஜுர் வேதமென்றும், பாடுவதற்கேற்ற வற்றைப் பிரித்து இசைவகுத்துச் சாமவேத மென்றும் பெயரிட்டனர். அதர்வண வேதம் பெரும்பாலும் மாந்திரீக முறையான மந்திரங்களைக் கொண்டது; அது பிற்காலத்தது. திராவிடர் ஆரியர் வருமுன்னமே மாந்திரீகத்தில் தேர்ந்திருந் ததினாலும், ஆரியர் முதலாவது திராவிட மாந்திரீகத்தைப் பழித்தமை ருக்வேத மந்திரங்களாலறியக் கிடப்பதாலும் அதர்வணம் மற்ற மூன்று வேதங்கட்கும் பிற்பட்டதினாலும், ஆரியர் திராவிடரிடமிருந்து மாந்திரீகத்தைக் கற்றுக்கொண்ட பின்பே அதர்வண வேதம் தோன்றினதாகத் தெரிகின்றது. இதன் மந்திரங்களிலும் ஏறத்தாழ ஆறிலொரு பாகம் ருக்வேதத்திலுள்ளவை என்று சொல்லப்படுகிறது.

ஆரிய வேதங்களை நான்காக வகுத்தது வியாசர் என்றும், அதனால் அவர் வேதவியாசர் எனப்பட்டார் என்றும் சொல்லப் படுவதினால், தொல்காப்பியர் காலத்தில் ஆரிய வேதம் ஒன்றாகவேயிருந்தது என்பது தேற்றம். ஆகையால், தொல் காப்பியப் பாயிரத்திலுள்ள 'நான்மறை' என்பது நான்கான ஆரிய வேதங்களைக் குறிக்கமுடியாது.

தொல்காப்பியத்திற் சுட்டப்பட்ட தமிழ்மறைகள் இதுபோது இறந்துபட்டன.

இப்போது தமிழ்மறையாகவுள்ளன, பன்னிரு திருமுறைகளுள் முதற் பதினொன்றும், நாலாயிர திவ்வியப் பனுவலும், திருக்குறளுமே.

“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமுந் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்”

என்று ஔவை கூறியதுங் காண்க.

சில தமிழ்ப்பகைவர், திருக்குறள் மறையாவதெங்ஙனம் என்கின்றார். திருக்குறள் 'தமிழ்மறை', 'பொதுமறை', 'உத்தர வேதம்', 'தெய்வநூல்', 'பொய்யாமொழி' என்று கடைக்கழகப் புலவராலேயே மறையாகக் கொள்ளப்பட்டிருக்க, இப்போது அதன் மறைத்தன்மையைப்பற்றி ஐயங்கொள்வானேன்?

கடவுள், அவரை ஆன்மாக்கள் அடையும் வழி, அங்ஙனம் அடைவதால் உண்டாகும் பயன், அடையாமையால் நேரும் கேடு என்றிவற்றைக் கூறுவதே மறைநூலிலக்கணமாகும். திருக்குறள் இவ்வனைத்தும் கூறுவதால் மறை நூலாவதற்குத் தடையென்னை யென்க.

சிறுதெய்வ வழுத்துகளும், சிலர் சோமச்சாற்றைக் குடித்து விட்டு வெறியிற் கூறினவைகளும்[25] மறைகளாயிருக்கும் போது, எல்லா மதத்திற்கும் பொதுவான முழுமுதற் கடவுளையடையும் வழியைக் கூறுவதும், கள்ளூணைக் கண்டிப்பதுமான திருக்குறள் மறையாவதற்குத் தடையென்னை யென்க.

கடவுட்பற்றில்லாத சிலர், திருக்குறளில் வீட்டைப் பற்றிச் சொல்லவில்லையே என்கின்றனர். வீட்டைக் கண்டு வந்தவன் இங்கொருவனுமில்லையென்றும், வீட்டையடையும் வழி அறத்துப் பாலில் ஈரியல்களிலும் சொல்லப்பட்டுள்ளதென்றும், அங்ஙனம் காரண வகையானன்றி, வரணனை வகையான் வீட்டைக் கூற முடியாதென்றும் அவர் அறிந்து கொள்க.

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும் — மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்”

என்பது ஒரு பழைய வெண்பா. இதனாலும், தமிழர்க்கு மறையிருந்தமையுணரப்படும். தமிழர்க்கு மறையிருப்பவும், ஆரியரை மறையோர், வேதியர் என்றது, புதுமைபற்றி யென்க. கிறித்தவ மறையை வேதமென்றும் கிறித்தவரை வேதக்காரரென்றும் தமிழர் கூறுதல் காண்க.

'செங்கோன் றரைச்செலவின்' ஒரு பகுதி தவிர, தொல் காப்பியத்தின்படி, பாக்கள் முதல் மறையீறாகச் சொல்லப் பட்டவற்றுள் ஒன்றுக்காயினும் இலக்கியம் இப்போதில்லை.

தவநூல்:

இது முன்னர்க் கூறப்பட்டது.

“வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது”

என்றும்,

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

என்றும் தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், பண்டைக் காலத்தில், தமிழரசர் பட்டாங்கு நூலறிந்து இறுதிக் காலத்தில் துறவு புகுந்தமை யறியப்படும்.

பட்டாங்குநூல்— (Philosophy)

தமிழ் இலக்கணக் குறியீடுகளிலிருந்தே, பண்டைத் தமிழர்க்குப் பட்டாங்குநூல் தெரிந்தமை யுணரப்படும்.

பொருள்களெல்லாம் உயிர், மெய் (body), உயிர்மெய் (பிராணி) என மூவகைப்படும். இவை, முறையே, தனியுயிரும் தனியுடம்பும் உயிரோடுகூடிய உடம்புமாகும். பிராணனை யுடையது பிராணி யெனப்பட்டாற்போல, உயிரையுடைய மெய் உயிர்மெய் எனப்பட்டது. (இது 2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.) பிராணி என்னும் வடசொல் வழங்கவே, உயிர்மெய் என்னும் சொல் வழக்கற்றுத் தன் பொருளையும் இழந்து, இலக்கணநூல் வழக்கிலும், உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து என்று உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகத் தவறாகக் கருதப்படுகின்றது. இச் சொல்லுக்குப் பதிலாக உயிர் என்னும் சொல்லும், உயிர்ப் பிராணி பிராணி என்னுஞ்சொல்லும், முறையே, குன்றக்கூறலாகவும் மிகைபடக் கூறலாகவும் வழங்கி வருகின்றன.

எழுத்துகளில், உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் போல்வன. அவற்றின் பெயர்களாலேயே கூறப்பட்டன. இப்பெயர்கள் எழுத்தைக் குறிக்கும்போது உவமையாகு பெயர். எழுத்திற்கு உயிராவது ஒலி.

பொய்யான உடம்பை மெய்யென்றது மெய்ப்பொருள் நூலுக்கு முரணென்று கூறுவர் சிலர். உடம்பு பொய்யானதென்று முன்னைத் தமிழர் அறிந்திருந்தாலும், உடம்போடு கூடிய நிலையே உயிர் வாழ்க்கையாதலின், உடம்பை மெய்யென்று மங்கல வழக்காய்க் கூறினர் என்க. சாவைப் பெரும்பிறிது என்றும் சுடுகாட்டை நன்காடு என்றும் அவர் கூறியதுங் காண்க.

ஓர் ஆளில், அல்லது உயிர்ப்பொருளில், உயிர் உடம்பு என இருபொருள் கலந்திருப்பினும், காண்பார்க்கு உடம்பே முற்பட்டுத் தோன்றும்; அதன் பின்னரே அதற்குள் உயிரிருப்பது அறியப்படும். அதுபோல, உயிர்மெய்யெழுத்திலும் மெய்யெழுத்தே முன் ஒலிக்கும்; அதன் பின்னரே உயிர் ஒலிக்கும். இதை,

“மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே” என்றனர் இலக்கணிகள்.

எல்லா மொழிகளிலும் மெய்யும் உயிருமாய் வரும் எழுத்துக்கள் இணைந்தே ஒலிக்கும். இதை மேனாட்டார் நோக்காததினால், உயிர்மெய்க்குத் தனிவடிவம் வகுக்காமல், மெய்யையும் உயிரையும் அடுத்தடுத்து வெவ்வேறாயெழுதுவாராயினர். இது மாணவர்க்கு எளிதாயினும், ஆங்கில தமிழ இலக்கணிகளின் மெய்ப்பொருளுணர்ச்சித் தாழ்வேற்றங் களைக் குறிக்கத் தவறாதென்க.

சொற்களுக்கு இலக்கணத்தில் பெயர் வினை என்று மக்கள் தொடர்பான பெயர்களே இடப்பட்டிருக்கின்றன. பெயர் = ஆள். பெயர் = பேர். எத்தனை பேர் என்னும் வழக்கை நோக்குக. வினை = செய்கை.

பொருள்களைப் பகுத்தறிவுண்மை யின்மைபற்றி, உயர் திணை, அஃறிணை என இரண்டாக வகுத்தனர் தமிழர். இப்பாகுபாடு வேறு மொழியில் இல்லை. சொற்களையும் அவை குறிக்கும் பொருள்கள்பற்றி இரு திணையாக வகுத்தனர்.

தமிழில், சொற்கள் அவை குறிக்கும் பொருள்கள் பற்றியே பாலுணர்த்தும், ஆரிய மொழிகளிலோ, அவை ஈறுபற்றியே பொருளுணர்த்தும்.

வடமொழியில் மனைவியைக் குறிக்கும் சொற்களும், தாரம், பாரியை, களத்திரம் என்னும் மூன்றும் முறையே ஆண்பாலும் பெண்பாலும் அலிப்பாலுமாம்.

உயிர்களை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிரீறாக அறுவகையாகப் பகுத்தனர் தமிழர்.

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (மரபு. 27)

என்று முன்னோர் உயிர்களைப் பகுத்தமையைக் கூறி, அதற் கடுத்த நூற்பாக்களில், அவ்வுயிர்கட்குப் “புல்லும் மரனும்”, “நந்தும் முரளும்”, “சிதலும் எறும்பும்” “நண்டும் தும்பியும்” “மாவுமாக்களும்”, “மக்களும் பிறவும்” என முறையே காட்டுத் தந்தனர் தொல்காப்பியர்.

“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”

என்பதனால்,(மரபு. 86) ஐம்பூத வுணர்ச்சியும் தமிழர்க்கிருந்தமை யறியப்படும்.

“மறுவில் செய்தி... அறிவன் தேயமும்” என்று தொல்காப்பியர் கூறுவதினாலும். தமிழர் மெய்ப்பொருளுணர்ச்சியை ஒருவாறுணரலாம்.

ஒழுக்க நூல்— (Ethics)

தொல்காப்பியத்தில், புறத்திணையியலில் 44ஆம் நூற்பாவில் “மூன்றன் பகுதி” என்று கூறியிருப்பதால், ஒழுக்க நூல் அக்காலத்தில் தமிழிலிருந்தமை உணரப்படும். மூன்றன் பகுதியாவது அறத்தினால் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தல் என்றல். அறம்பொருளின்பம் என்பது ஒழுக்கநூற் பாகுபாடு. அறம் எனவே, இல்லறம் துறவறம் இரண்டும் அடங்கும். துறவறம் — வீட்டுநெறி.

அறம்பொருளின்பம் வீடென்னும் பாகுபாடு தமிழரதே. ஆரியரே அவற்றைத் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என வடமொழியில் மொழிபெயர்த்துக்கொண்டனர். அதோடு இப்போது வடசொற்களை மூலமாகவும் தென்சொற்களை மொழி பெயர்ப்பாகவுங் காட்டுகின்றனர். தமிழ்ப் பொருட்பாகுபாடுகளை யெல்லாம் இங்ஙனம் மொழி பெயர்த்துக் கொண்டு, மூலமாகக் காட்டுவது ஆரிய வழக்கம் என்க.

தமிழர் அறத்திற் சிறந்திருந்தமை, தொல்காப்பியத்தில் ஆங்காங்குக் கூறப்படும் அறவொழுக்கங்களா லறியப்படும்.

பொருள்களை அகம் புறம் என்று பகுப்பதே தமிழ முறையென்றும், அறம்பொருளின்பம் வீடென்று பகுப்பது ஆரிய முறையென்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு மொழியிலேயே நூலுக்கும் கலைக்கும் ஏற்றபடி, வெவ்வேறு வகையாய்ப் பொருள்கள் பகுக்கப்படும். இலக்கணநூல் ஒன்றிலேயே, எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்று மூன்று வகையாகவும், சொல்லதிகாரத்தில் பொருள் இடங் காலம் சினை குணம் தொழில் என்று ஆறு வகையாகவும், மற்றோர் முறையில் உயர்திணை அஃறிணை என்று இரு வகையாகவும் பொருள்கள் பகுக்கப்படுகின்றன. தருக்க நூலில் ஏழாகவும் பதினாறாகவும் பகுக்கப்படுகின்றன. ஆகையால், அகம் புறம் என்பது பொருளதிகாரப் பாகுபாடென்றும், அறம் பொருளின்பம் வீடென்பது ஒழுக்கநூற் பாகுபாடென்றும் அறிந்துகொள்க.

சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினையிடையுரி யென்றும், சொல்லியல் முறையில், இயல் திரி திசை வட சொற்களென்றும், ஒழுக்கநூலிற் பொய் குறளை கடுஞ் சொல் பயனில்சொல்லென்றும், கொண்முடிபு (சித்தாந்த) நூலில் வேறுவகையாகவும் பகுக்கப்படுகின்றன. இங்ஙனமே பொருள்களுமென்க.

ஆரிய நூல்களை முற்படியாக வைத்துக்கொண்டு தமிழ் நூல்களுக்குப் பொருளுரைப்பவரெல்லாம், எவ்வகையேனும் தவறவே செய்வர். திருக்குறள் தனித்தமிழ் முறையில் இயற்றப்பட்டிருக்கவும், பரிமேலழகர் அதை ஆரியவழியாகக் கொண்டு, அறத்துப்பால் முகவுரையிலும் காமத்துப்பால் முகவுரையிலும் உண்மைக்கு மாறானவற்றை உரைத்துள்ளார், ஐந்திணையும் தனித்தனி கூறப்படும்போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையென்று பெயர் பெறுமென்றும், கோவையாய்க் கூறப்படும் போது களவு, கற்பு என இரு கைகோள்களாகக் கூறப்படு மென்றும் அவர் அறியாது போயினர். கோவையிலும், “முன்னைய நான்கும் முன்னதற் கென்ப” என்பதால் கைக்கிளை முன்னும், கூட்டத்தினால் ஐந்திணை இடையும், கூட்டம் நீடிக்காது மடலேற்றம் நிகழின் பெருந்திணை பின்னும் அமைந்திருத்தலும், முறையே நிகழ்கின்ற புணர்தல் பிரிதல் இருத்தல் அல்லது இரங்கல், ஊடல் என்பவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணைகளாயமைதலும் அவர் அறிந்திலர் போலும்.

உளநூல்— (Psychology)

தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில்,

“எள்ளல் இளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப” (4)

“இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (5)

“மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ
டியாப்புற வந்த இளிவரல் நான்கே” (6)

“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (7)

“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (8)

“கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (9)

“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே” (10)

“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே” (11)

என்றும் பிறவாறு நுட்பமாய் இவற்றை விரித்தும் கூறியிருப் பதால், தமிழர்க்கு உளநூலுணர்ச்சி யிருந்தமை யறியப்படும். இதன் விரிவை மெய்ப்பாட்டிய லுரையிற் கண்டுகொள்க.

கணிதநூல்— (Arithmetic)

கண் + இதம் + கணிதம். கண் = கருது, மதி, அள. கண் + இயம் = கண்ணியம் (மதிப்பு). கண் — கணி, to calculate. கணி + கை = கணிகை (தாளங்கணித்தாடும் கூத்தி). கணி + அன் = கணியன் (ஜோதிடன்). கண் + அக்கு = கணக்கு. அக்கு என்பது ஓர் ஈறு. கா: இலக்கு இலை, பதக்கு. கணி — குணி -—அளவிடு. கண், கணி என்னும் தென்சொற்களையே gan, gani என உரப்பி யொலித்து வடசொல்லாகக் காட்டுவர். கண்ணுதல் என்னுஞ் சொல், அகக்கண்ணின் தொழிலைக் குறித்தலால் வடமொழி வடிவங்கள் தென்சொற்களின் திரிபே என்பது தெற்றென விளங்கும். “கண்படை கண்ணிய”, “கபிலை கண்ணிய” என்று தொல்காப்பியத்திலேயே வருதல் காண்க.

அரை, குறை, கலம், பனை, கா, பதக்கு, தூணி, உரி, நாழி என்னும் அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும், தொல்காப்பியத்தில், தொகைமரபு, உயிர்மயங்கியல் என்னும் இயல்களிற் கூறப்பட்டுள்ளன.

தொகைமரபில், 28ஆம் நூற்பாவில், அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும் க ச த ப ந ம அ உ என்னும் ஒன்பதெழுத்துகளில் தொடங்குமென்று கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியர் அதற்கு,

“எடுத்துக்காட்டும்: கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு இவை அளவு. கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மாவரை அந்தை இவை நிறை.... இம்மி ஓரடை இடா என வரையறை கூறாதனவுங் கொள்க...... தேயவழக்காய் ஒரு ஞார் ஒரு துவலி என்பனவுங் கொள்க” என்று உரை கூறியுள்ளார்.

புள்ளிமயங்கியல் 98ஆம் நூற்பாவில், 'ஐ', 'அம்', 'பல்' என முடியும் சில பேரெண்ணுப் பெயர்கள் குறிக்கப்பட்டுள.

அவை தாமரை குவளை சங்கம் வெள்ளம் ஆம்பல் முதலியன. பரிபாடல் 2ஆம் பாட்டில் “நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும்” என்று சில மிகப் பேரெண்கள் கூறப்பட்டுள்ளன. சங்கம் இலக்கங் கோடியென்றும், தாமரை கோடாகோடியென்றும் சொல்லப்படுகின்றது.

தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள துண்மையாயின், பண்டைத் தமிழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிற்றிடப் பேரெண்கட்குத் தனிப்பெயரில்லை. இதனால், அதற்குமேல் தமிழர்க்கு எண்ணத் தெரியாதென்று கொள்ளற்க. ஆயிரம், நூறு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களையே உறழ்ந்து, இலக்கத்தை நூறாயிரமென்றும் பத்திலக்கத்தைப் பத்துநூறாயிரமென்றும், கோடியை நூறு நூறாயிரமென்றும் கூறினர் என்றே கொள்ளப்படும். தொல்காப்பியத்தில் பதினூறாயிரம் வரை கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும், hundred thousand, two hundred million என்று இன்றும் கூறுதல் காண்க.

இலக்கம் (லக்ஷம், Sans., lakh, Eng.), கோடி (கோட்டி, Sans., crore, Eng.) என்னும் பெயர்கள் பிற்காலத்தனவாயிருக்கலாம். ஆனால், அவை இந்தியாவினின்றே தோன்றினதாகத் தெரிகின்றது. கோடி என்று தமிழிலும், குடோடு என்று இந்துஸ்தானியிலும், குரோர் (crore) என்று ஆங்கிலத்திலும் வழங்குதல் காண்க.

இலக்கம் கோடியென்பன தமிழ்ப் பெயர்களாயின், முறையே, பெரிய இலக்கம் (எண்) என்றும், கடைசியெண் என்றும் பொருள் படுவனவாகும். இவற்றுள் இலக்கம் முன்னும் கோடி பின்னும் தோன்றினவென்பதை, ஆயிரப்பத்து பத்தாயிரம், பத்தாயிரப்பத்து நூறாயிரம், நூறாயிரப்பத்து பத்து நூறாயிரம், பத்து நூறாயிரப்பத்து பத்திலக்கங்கோடி (பத்திலக்கம் அல்லது கோடி) என்னும் எண்சுவடி வாய்பாட்டால் அறியலாம்.

பண்டைத் தமிழர் கணிதத்தில் மிகச் சிறந்தவர் என்பதற்குச் சான்றாக இரண்டோர் அளவை வாய்பாடுகளை இங்குக் குறிக்கின்றேன்.

கீழ்வாயிலக்க வாய்பாடு[26]

1/2,3238245,3022720,0000000 —தேர்த்துகள் 6½=1 நுண்மணல்
1/3575114,6618880,0000000 —நுண்மணல் 100=1 வெள்ளம்
1/35751,1466188,8000000 —வெள்ளம் 60=1 குரல் வளைப்பிடி
1/595,8524436,4800000 —குரல்வளைப்பிடி 40=1 கதிர்முனை
1/14,8963110,9120000 —கதிர்முனை 20=1 சிந்தை
1/7448155,5456000 —சிந்தை 14=1 நாகவிந்தம்
1/532011,1104000 —நாகவிந்தம் 17=1 விந்தம்
1/31294,7712000 —விந்தம் 7=1 பாகம்
1/4470,6816000 —பாகம் 6=1 பந்தம்
1/745,1136000 —பந்தம் 5=1 குணம்
1/149,0227200 —குணம் 9=1 அணு
1/16,5580800 —அணு 7=1 மும்மி
1/2,3654400 —மும்மி 11=1 இம்மி
1/2150400 —இம்மி 21=1 கீழ்முந்திரி
1/102400 —கீழ்முந்திரி 320=1 மேல்முந்திரி
1/320 —மேல்முந்திரி 320=1 (ஒன்று)

கீழ்வாயிலக்கம்.

“இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர்
வழங்கியன் மாவென் கிளவி தோன்றின்
மகர வளவொடு நிகரலு முரித்தே”

என்று தொல்காப்பியக் குற்றியலுகரப் புணரியல் நூற்பாவில் மா என்னும் அளவு கூறப்பட்டிருப்பதால், கீழ்வாயிலக்கத் தைச் சேர்ந்த ஏனையளவுகளும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கின வென்றே கொள்ளப்படும்.

நீட்டலளவை வாய்பாடு

8 அணு = 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை
8 பஞ்சிழை = 1 மயிர்
8 மயிர் = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 கடுகு
8 கடுகு = 1 நெல்
8 நெல் = 1 பெருவிரல்
12 பெருவிரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 கோல் அல்லது பாகம்
500 கோல் = 1 கூப்பீடு
4 கூப்பீடு = 1 காதம்

சிலப்பதிகாரத்தில், பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றுக்கு மிடையிலிருந்த சேய்மை எழுநூற்றுக் காவதம் என்று அடி யார்க்கு நல்லார் கூறியது, இவ் வளவு பற்றியதாயின், அது ஏறத்தாழ 1600 மைல்களாகும். பஃறுளியாற்றுக்குத் தெற்கும் குமரியாற்றுக்கு வடக்கும் இருந்த நிலத்தையுஞ் சேர்த்துக் கணிப்பின், அழிந்துபோன தமிழ்நாடு எவ்வகையினும் 2000 மைலுக்குக் குறையா தென்னலாம். அங்ஙனமாயின், இற்றை யிந்தியா அளவு ஒரு பெருநிலம் தென்கடலில் மூழ்கியதாகும்.

“சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், முதல் குலோத் துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது. இவை முறையே, கி.பி. 1001, கி.பி. 1086, கி.பி. 1216ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவைகளாகும்.

“நிலம் அளந்த கோலை 'உலகளந்த கோல்' என்று வழங்குவர். இக் கோல் பதினாறு சாண் நீளமுடையது... நிலங்கள் நூறு குழிகொண்டது ஒரு மாவாகவும் இருபது மா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பெற்றன.... அந்நாளில் நிலத்தின் எத்துணைச் சிறு பகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப் பெற்றுள்ளது என்பது 'இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாகாணி அரைக்காணி முந்திரி கைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன்' என்பதனால் விளங்கும்.”[27] இங்குக் குறிக்கப்பட்ட அளவு வெளியாகும்.

வானநூல்— (Astronomy)

'நாள்கோள்' (புறத். 11) எனவே நாண்மீனும், (Lunar asterism), 'ஞாயிறு திங்கள்' (கிளவி. 58) எனவே, எழுகோளும் (Planets), அவற்றாற் பெயர் பெறும் ஏழு கிழமைகளும் (days), 'ஓரையும்'(Signs of the Zodiac) (கள. 45) எனவே இராசியும், 'காரும் மாலையும்' (அகத். 6), 'கூதிர் யாமம்' (அகத். 7), 'பனியெதிர் பருவமும்' (அகத். 8), 'வைகறை விடியல்' (அகத். 9), 'எற்பாடு' (அகத். 10), 'நண்பகல் வேனிலொடு' (அகத். 10), 'பின்பனி' (அகத். 12) எனவே பெரும்பொழுதும் (Seasons) சிறுபொழுதும் (Divisions of the day) தொல்காப்பியர்காலத் தமிழர்க்குத் தெரிந்தும் வழக்கிலு மிருந்தமை யறியப்படும்.[28]

(அசுவினி முதல் ரேவதியீறான) இருபத்தேழு நாள்மீன் (நட்சத்திரம்)கட்கும் பண்டைக்காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள், முறையே புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக் குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்பன. இவற்றுக்கு வேறு பெயர்களுமுண்டு. அவற்றை நிகண்டுகளிற் கண்டுகொள்க. வெள்ளி, உடு, விண்மீன் என்பவை பொதுவான நட்சத்திரப் பெயர்களாகும்.

கோள்கள் ஏழென்றே தமிழர்கொண்டு, அவற்றின் பெயர்களால் ஏழுநாட்கொண்ட வாரமென்னும் அளவை ஏற்படுத்தினர். ஆனால், ஆரியர் கோள்களின் தொகையை மிகுத்துக் காட்டவேண்டுமென்று, கதிரவன் மறைவும் திங்கள் மறைவு மாகியவற்றைத் தம் திரிபுணர்ச்சியால் இருகோள்களாகக் கருதி அவற்றுக்கு ராகு கேது என்று பெயரிட்டு, அவற்றை எழுகோள்களோடு கூட்டி நவக்கிரக மென்றனர்.

புதன் சனி என்னும் இரு பெயர்கட்கும், பண்டைக் காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள் அறிவன் காரி என்பன.

பன்னிரு மாதங்கட்கும் இப்போது வழங்கிவரும் வடமொழிப் பெயர்கட்குப் பதிலாக, பன்னீர் ஓரை(ராசி)யின் பெயர்களே மலையாள நாட்டிற்போலப் பண்டைத் தமிழ்நாட்டிலும் வழங்கிவந்தன. பன்னீர் ஓரைப்பெயர்களில் மேடம், இடபம், கடகம், கன்னி, துலாம், கும்பம், மீனம் என்னும் ஏழும் தமிழ்ச் சொற்களே. இவற்றுள் முதலாறுக்கு முறையே, தகர், குண்டை, அலவன், மடந்தை, தூக்கு, குடம் என்றும் பெயருண்டு. ஏனைய மிதுனம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் என்னும் ஐந்தும் தமிழில், முறையே, இரட்டை, ஆளி, தேள், வில், சுறா எனப்படும்.


பன்னிரு மாதங்களும் ஓரைப்பெயர் பெறுமாறு
1. சித்திரை—மேடம் 7. ஐப்பசி—துலை
2. வைகாசி— இடபம் 8. கார்த்திகை—தேள்
3. ஆனி—இரட்டை 9. மார்கழி—வில்
4. ஆடி—கடகம் 10. தை—மகரம்
5. ஆவணி—ஆளி 11. மாசி—கும்பம்
6. புரட்டாசி—கன்னி 12. பங்குனி—மீனம்

மாதம் என்பது மதி என்பதினின்றும் பிறந்த தமிழ்ச் சொல்லே. மதி - மாதம் (த.) - மாஸம் (வ.) மதி = சந்திரன். காலத்தை மதிப்பதற்குக் கருவியாயிருப்பது மதி. மதித்தல் அளவிடுதல். ஒ.நோ : moon-month. மதி என்பதினின்று மாதம் என்னும் வடிவம் தோன்று மேயன்றி மாஸம் என்னும் வடிவந் தோன்றாது. த-ஸ, போலி. திங்கள் என்னும் சொல் ஒரு கிழமைப் பெயராதலின், மாதம் என்னும் சொல்லே மாதத்தைக் குறிப்பதாகும். ஒருவளர்பிறையும் ஒரு தேய்பிறையும் சேர்ந்தது ஒரு மாதம். மதியாலுண்டாகும் கால அளவு மாதமெனப்பட்டது. மதி என்னும் பெயரும் மாதத்தைக் குறிக்கும். வளர்பிறைக் காலத்தை ஒளிப்பக்க மென்றும், தேய்பிறைக் காலத்தை இருட்பக்கமென்றும்[29] முன்னோர் கூறினர். இவற்றையே, முறையே, சுக்கிலபக்ஷ மென்றும் கிருஷ்ணபக்ஷ மென்றும், நிலைமொழிகளை மொழி பெயர்த்தும் வருமொழிகளை எழுத்துப் பெயர்த்துங் கொண்டனர் ஆரியர்.

சில ஓரைப்பெயர்களின் மூலங்களாவன :

மேழகம் — மேடகம் — மேடம் — மேஷம் (வ,)ஒ.நோ . புழலை — புடலை, நாழுரி — நாடுரி, விடை — விடபம் (வ்ருஷபம், வ.) — இடபம், கும்— கும்பு— கும்பம். கும்பு + அம் = கும்பம். கும்புதல் — குவிதல். மின் — மீன் — மீனம். ஒ.நோ . தின் — தீன்.

கடகம் (நண்டு) என்பது வட்டமானது என்னும் பொரு ளது. தோட்கடகம், கடகப்பெட்டி என்னும் வழக்குகளை நோக்குக. நாழிகை வட்டிலைக் குறிக்கும் கடிகை என்னுஞ் சொல்லும் கடகம் என்பதன் மறுவடிவமே. வட்டமானது வட்டில். கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம். தோட்கடகம் தோள்வளைவி என்றும் கடிகை என்றும் வழங்குதல் காண்க. கடகம் ஒரு பருமைப் பெயருமாகும் [30]

துலை என்னும் சொற்குப் பகுதி, தோல் என்று இந்தியில் வழங்குகின்றது. தமிழ்நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டதினாலும், பண்டைத் தமிழ்நூல்களில் தொல் காப்பியந் தவிர மற்றவையெல்லாம் அழிந்துபோனதினாலும், தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்கு வேர்கள் தமிழில் மறைந்து விட்டன. வடநாட்டில், ஆரியர் வருமுன் திராவிட மொழிகளே வழங்கி வந்தமையால் சிந்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளில் பல திராவிடச் சொற்கள் கலந்துள்ளன. அவை இந் நூலின் மூன்றாம் மடலத்தில் விரிவாய்க் கூறப்படும்.

மேலும், ஒரு மொழியின் தாய்வழக்கில், ஒரு பொருட்குரிய பல சொற்களில், வழக்கற்றவையெல்லாம் கிளைவழக்குகளில் தான் வழங்கும். இதுவே 'வழக்கற்றசொல் வழங்கல்' எனமுன்னர்க் குறிக்கப்பட்டது. இது ஒரு தாய்வீட்டிலுள்ள வழங்காத கலங்களையெல்லாம் மக்கள் கொண்டுபோய் வழங்குதல் போன்றது.

தமிழிலுள்ள நோட்டம் என்னும் தொழிற்பெயரின் வேரான நோடு என்பது, கன்னடத்தில் வழங்குதல் காண்க.

துல்லிபம், துலை, துலைநா, துலா, துலாம், துலான், துலாக்கோல், கைத்துலா, ஆளேறுந்துலா என்று இருவழக்கிலும், துலை என்னும் சொல்லும் அதன் பிற வடிவங்களும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவருகின்றன.

இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்னும் அறுவகைப் பருவங்களையும், முறையே, வசந்தம் கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம் என்று மொழி பெயர்த்துக் கொண்டனர் ஆரியர். வசந்தம் (Spring), கோடை (Summer), வறளை (Autumn), மாரி (Winter) என்னும் நால்வகைப் பருவங்கள்தாம் ஆரியநாடு என்னும் வடநாட்டிற்கேற்கும். இளவேனில் முதலிய அறுவகைப் பருவங்கள் தமிழ்நாட்டிற்கேயுரியன. இதனால், மூலம் எவை யென்றும் மொழிபெயர்ப்பு எவையென்றும் அறிந்து கொள்ளலாம். இங்ஙனமே ஆரிய மொழி பெயர்ப்புகள் சிலவிடங்களில் மறைந்திருப்பினும் சிலவிடங்களில் வெளியாய்விடுமென்க.

“நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும்” என்று தொல் காப்பியத்தில்(புறத். 30) கூறியிருப்பதால், குறிநூலும் (Astrology) தொல்காப்பியர் காலத்திலிருந்தமையறியப்படும்.

வானநூலறிஞனுக்குத் தமிழில் கணியன் என்று பெயர். கணியன் காலத்தைக் கணிப்பவன். பண்டைத் தமிழ்நாட்டில் வள்ளுவரே பெரும்பாலும் கணியராயிருந்தனர். தமிழர் கணிதத்தில் வல்லவராயிருந்ததினால் வானநூலிலும் வல்லவராயிருந்தனர்.

இப்போது வழங்கும் 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால், அல்லது கனிஷ்கனால்[31] கி.பி. 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாயுள்ளன. 60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதினாலும், மிகக் குறுகியதினாலும், சரித்திர நூற்குப்பயன்படாது. ருத்ரோத்காரி என்று கூறினால், எந்த ருத்ரோத் காரி யென்று அறியப்படாமையால், இவ்வளவின்மைபற்றித் தமிழுக்கொரு குறையுமில்லையென்க.

சொல்லியல் நூல்— (Etymology)

தொல்காப்பியத்தில்,

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” (பெயர. 1.)

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்
றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” (எச். 1)

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி” (எச். 4)

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

என்றும், அறுவகைத் திரிபுகளும் (எச். 7), மூவகைக் குறைக ளும் (எச். 57) வினை பயன் மெய் உரு என்ற நால்வகை யுவமங்கட்கு வெவ்வேறுருபுகளும் (உவ. 12—6) கூறியிருப்ப தாலும், பிறவற்றாலும், பண்டைத் தமிழர்க்குச் சொல்லிய லுணர்ச்சியிருந்தமை யறியப்படும். மொழிநூற்குமுற்படியானது சொல்லியலே. ஒரு மொழிபற்றியது சொல்லியலும் பல மொழிபற்றியது மொழிநூலுமாகுமென்றறிக.

தருக்கநூல்— Logic

தருக்குதல் ஒருவன் தன்னை மிகுத்துக்காட்டுதல். “தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து” என்று தொல்காப்பியத்திலேயே (அகத். 53) வந்திருத்தல் காண்க. தருக்கு — செருக்கு. த—ச, அ—எ, போலிகள். (ஒ.நோ : ஓதை — ஓசை, சத்தான் — செத்தான்.)

தருக்கு + அம் = தருக்கம். தருக்கத்திற்கு ஏரணம் என்றும் பெயருண்டு. ஏர் + அணம் = ஏரணம். ஏரணம் எழுச்சி. தருக்கம் என்னும் தென்சொல்லையே, தர்க்கம் என்று எழுதி வடசொல்லாகக் காட்டுவர் ஆரியர்.

தருக்கம் என்பது ஒரு சொற்போர். ஒருவன் தன் கொள்கையை நாட்டி எதிரியை வெல்வதே தருக்கம். வெல்வதெல்லாம் வாகை. வாகைப் பொதுவிலக்கணமாவது.

“தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்.” (தொ. புறத். 15)

அகத்தியத் தருக்க நூற்பாக்கள்

கீழ்வரும் நூற்பாக்கள் தருக்கப் புலவர் வடிவேல் செட்டியார் பதிப்பித்த 'தர்க்க பரிபாஷை' என்னும் நூலிறுதியிற் கண்டவை. இவை உண்மையில் அகத்தியர் இயற்றியவையாயின், தொல்காப்பியர் காலத்தில் தருக்க நூலுந் தமிழிலிருந்தமை யறியப்படும்.

1. பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை
    யின்மை யுடன்பொரு ளேழென மொழிப.

2. மண்புன லனல்கால் வெளிபொழு தாசை
    யான்மா மனதோ டொன்பதும் பொருளே.

3. வடிவஞ் சுவையிரு நாற்ற மூறெண்
    ணளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு
    முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி
    சிக்கென லோசை யுணர்ச்சி யின்பந்
    துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி
    யறமறம் வாதனையொடு குணமறு நான்கே.

4. எழும்பல் விழுதல் வளைத னிமிர்த
    னடத்த லுடனே கருமமை வகைத்தே.

5. பொதுமை மேல்கீ ழெனவிரு வகையே.

6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின்
    வேற்றுமை தெரிப்பன பலவாஞ் சிறப்பே.

7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க.

8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை
    யொன்றினொன் றின்மையென் றின்மை நான்கே

9. மண்ணீ ரனல்கான் முறையே நாற்றந்
    தட்பம் வெப்ப மூற்ற மாகி
    மெய்ப்பொரு ளழிபொருண் மேவு மென்க.

10. அணுக்கண் மெய்ப்பொருள் காரிய மழிபொருள்
    பிருதிவி நித்திய வநித்திய வணம்பெறும்
    நிலையணுப் பொருணிலை யில்லது காரியம்.

11. அதுவே:—
    உடல்பொறி விடய மூவகைப் படுமே
    நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு
    நாற்றங் கவர்வது நாசியி னுனியே
    மண்கல் முதலிய விடய மாகும்.

12. நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்பு
    சுவைதிறங் கவர்வது நாவி னுனியே
    கடல்யா றாதி விடய மாகும்.

13 கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே
யுருவங் கவர்வது கருமணி விழியே
மண்விண் வயிறா கரநால் விடயம்.

14 வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே
யூற்றங் கவர்வது மீந்தோ லென்க
விடய மரமுத லசைதற் கேதுவே
பிராண னுடலகத் தியங்குங் காற்றே.

15 விசும்பே காலந் திசையோ டான்மா
மனமிவை யைந்து நித்தியப் பொருளே.

16 ஓசைப் பண்பிற் றாகா யம்மே.

17 இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம்.

18 கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே.

19 அறிவுப் பண்பிற் றான்மா வென்க
விறையே யீசன்முற் றறிவனோர் முதலே
யுயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்.

20 மனமணு வடிவாய் வருமின் பாதி
யறிதற் கின்றி யமையாக் கருவி
யாகிப் பலவா யழிவின் றுறுமே.

இந்நூற்பாக்களையே, நுண்ணறிவுள்ள ஒருவர் ஒரு நூலாக விரித்துவிடலாம்.

இந்நூற்பாக்கள் சிறப்பிக முறையைச் சேர்ந்தவை. சிறப்பிகம் (வைசேடிகம்), முறையிகம் (நியாயம்) என்னும் இருவகைத் தருக்க முறைகளுள், முன்னதே சிறந்ததென்க.

தொழிற்கலைகள் (Arts)

சிற்பம்— (Architecture)

“முழுமுதல் அரணம்” (புறத். 8), “ஆரெயில்” (புறத். 10), “மதிற்குடுமி” (புறத். 10) முதலிய குறிப்புகளால், தொல்காப்பியர்காலத்தில் சிற்பத்தொழில் தமிழ்நாட்டிற் சிறந்திருந்தமை யுணரப்படும்.

சுவர், மதில், பதணம், இஞ்சி, அகப்பா, புரிசை, எயில், சோ முதலிய மதில்வகைகளும், ஞாயில், சூட்டு, ஏப்புழை முதலிய மதிலுறுப்புகளும், எழுநிலை மாடமும் பண்டைத்தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பை உணர்த்துவனவாகும். இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க.

பண்டைத் தமிழர் நாடகவரங்கு அமைத்த நுட்பம் (சிலப். 113-16) மிக வியக்கத்தக்கது.

வளைவிற்பொறி, கருவிரலூகம், கல்லுமிழ்கவண், பாகடு குழிசி, காய்பொன்னுலை, கல்லிடுகூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலையடுப்பு, கவை, கழு, ஐயவித்துலாம், கைபெயரூசி, சென்றெறிசிரல், பன்றி, பனை, நூற்றுவரைக்கொல்லி, தள்ளி வெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும்பாம்பு, கழுகுபொறி, புலிப் பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி[32] முதலிய மதிற்பொறி வகைகள், பண்டைத் தமிழரின் படிமைக் கலையையும்(Sculpture) சூழ்ச்சியக் கலையையும் (Engineering) தெரிவிப்பனவாகும். படிமை — பதுமை. பாவைவிளக்கு கந்திற்பாவை முதலிய பெயர்களையும் நோக்குக.

சிற்பம் படிமைக்கலை முதலியவற்றாலும், நாடகவரங்கின் எழினியாலும் ஓவியநூலும்(Drawing) பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமை சொல்லாமே யுணரப்படும். சிற்பநூல் ஓவிய நூல் என்று இருநூல்கள் கடைக்கழகக் காலத்திலிருந்தனவாக, அடியார்க்கு நல்லார் அரங்கேற்று காதையுரையிற் குறிப்பிடுகின்றார்.

உழவு— (Agriculture)

உழவு பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமையை ஒருவரும் ஐயுறார். ஆயினும், அதைப்பற்றிய சில குறிப்புகள் அறியத்தக்கன.

“ஏரோர் களவழி” என்பது தொல்காப்பியம்(புறத். 16). Agriculture என்னும் ஆங்கிலப்பெயர் தமிழ் மூலத்ததாகவே தெரிகின்றது.

Agriculture, L, agricultura — ager, a field, cultura, cultivation — colo, to cultivate.

அகரம் மருதநிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருதநிலத்தில் தங்கினதினாலேயே, அவர் குடியிருப்பு அக்கிரகாரம் எனப்பட்டது. அக்கிர + அகரம் = அக்கிரா கரம். அக்கிரம் = நுனி, முதல், தலைமை. “அகர மாயிரம் அந்தணர்க் கீயிலென்” என்றார் திருமூலர்.

E. acre, A.S. aceer, Ger. acker, Gr. agros, L. ager Sans. ajra.

கல் = தோண்டு. கல் + வி = கல்வி. கல்வி என்னும் பெயர் முதலாவது தோண்டுதல் என்னும் பொருளில் உழவைக் குறித்தது. பின்பு, நூற்கல்விக்குச் சிறப்புப் பெயராயிற்று. மாந்தன் முதன்முதற் கற்ற கல்வி உழவே. கல் - colo, to till.

தொழில் என்னும் பெயரும் முதலாவது உழவையே குறித்தது. தொள் + இல் = தொளில் — தொழில்.

ஒ.நோ : பொள் + இல் = பொளில் — பொழில். பொள் — பொளி. பொளித்தல் வெட்டுதல். (பொள் - பொழ்) பொள்ள (வெட்ட)ப்படுவது பொழில். பொழில் = சோலை. பண்டைத் தமிழகம் முழுவதும் பெருஞ்சோலையாய் அல்லது காடாயி ருந்தது. காடுவெட்டி நாடாக்கப்பட்டது. அகத்தியர் காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்தமை நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க.

தமிழகம் முழுதும் ஒரு பெருஞ்சோலையாயிருந்ததினாலேயே பொழில் என்னும் பெயர் உலகம் அல்லது நாடு என்று பொருள் படுவதாயிற்று. 'நாவலந் தண்பொழில்' 'வண்புகழ் மூவர் தண் பொழில்', 'ஏழ்பொழில்' என்னும் வழக்குகளை நோக்குக.

தொள் = தோண்டு. தொள் — தொடு = தோண்டு. தொள்- till, to cultivate. தொள்ளுவது தொழில்.

மாந்தன் முதலாவது செய்த பெருந்தொழில் உழவே. உழவின் பெயரான தொழில் என்பது, பிற்காலத்தில் எல்லாத் தொழில்கட்கும் பொதுப்பெயராயிற்று.

செய் = வயல். செய்வது செய். நன்செய், புன்செய் என்னும் பெயர்களை நோக்குக. செய்கை = வயல்வேலை. பண் = செய். பண்ணுவது பண்ணை. பண்ணை = வயல்.

முதலாவது கையினாற் செய்யப்பட்ட தொழில் உழவு என்னுங் கருத்துப்பற்றியே, உழவரைக் “கைசெய்தூண் மாலையவர்” என்றார் திருவள்ளுவர்.

முதலாவது தோன்றிய ஒரு பொருளின் அல்லது தொழிலின் பெயர், பிற்காலத்தில் அதன் இனத்திற்குப் பொதுப்பெயராய் வழங்குதல் இயல்பே. தோடு என்னும் ஓலைப் பெயர், பிற்காலத்தில் அதற்குப் பதிலாயணிப்படும் கம்மல் (கமலம்) வகைக்குப் பொதுப் பெயராய் வழங்கு வதையும்; வில்லேருழவர், சொல்லேருழவர், தேரோர் களவழி யென்னும் வழக்குகளையும் நோக்குக.

பழ நார்வீஜியம் (Old Norse), ஆங்கிலோ-சாக்ஸன் என்ற மொழிகளில், முறையே, erfidhi, earfodh என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு உழைப்பைக் குறித்தன வென்றும். லத்தீனில் ars, artis என்ற சொற்கள் முதலாவது உழவைக் குறித்துப் பின்பு கலைப் பொதுப்பெய ராயிற்றென்றும், அச் சொற்கட்கு மூலம் ar(to plough) என்பது என்றும், முதலாவது கற்பிக்கப்பட்ட கலை உழவேயென்றும் மாக்கசு முல்லர் கூறியிருத்தல் காண்க.[33]

ஏர் = கலப்பை. ஏர்த்தொழில் = உழவு.

E. ear (ஏர்.), to plough. A.S. erian, L. aro, GK. aroo - root ar. to plough. E. arable, adj.

E. Share - கொழு. M.E. schar, A.S. scear, Ger. schar, schaar.

காறு = கொழு.

க-ச, போலி. ஒ.நோ : திகை - திசை (தேவா. 308:1), இகல் - இசல். சேம்பர்ஸ் அகராதியில் shear (to cut) என்பது share என்பதன் மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அங்ஙனமாயினும், shear என்பது சிறை என்னும் தமிழ்ச் சொல்லை ஒத்திருத்தல் காண்க.

இங்ஙனம், மேனாடுகளில் மாந்தன் முதற்றொழில்பற்றிய தமிழ்ச்சொற்கள் வழங்குவதற்குக் காரணம் பின்னர்க் கூறப்படும்.

—கைத்தொழில் —Industries

தாழ், வாள், வேல், கழல், தோல் (கேடகம்), குடை, கணை, தேர், யாழ், இழை, துடி, பொன் முதலிய பெயர்களும், 'ஊழணி தைவரல்' (மெய். 14) என்னுந் தொடரும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருப்பதால், அது இயற்றப்பட்ட காலத்தில், தமிழ் நாட்டிற் கைத்தொழில் சிறந்திருந்தமை யுணரப்படும்.

அக் கைத்தொழில் பல திறத்தன. அவற்றுள் நெசவு மட்டும் இங்குக் கூறப்படும்.

நெசவு—Weaving

“உடைபெயர்த்துடுத்தல்” என்பது தொல்காப்பியம் (மெய். 14). பருத்தி நெசவு முதன்முதல் இந்தியாவில்தான் செய்யப்பட்ட தென்றும், அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவிய தென்றும் வயவர் சாண் மார்சல் கூறுகிறார்.

பண்டைக்காலச் சரித்திராசிரியரெல்லாம். மேனாடுகள் இந்தியாவினின்றும் இறக்குமதி செய்த பொருள்களுள், துணி ஒன்றாகத் தவறாது குறிப்பிடுகின்றனர்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, இந்தியாவினின்றே மேனாடுகட்குத் துணி ஏற்றுமதியானமை, பின்வருங் குறிப்பினாலறியலாம்.

“தற்கால இந்தியாவின் வறுமைக்கு மற்றொரு பெருங் காரணம், ஐரோப்பாவில் பொறிவினைத் தோற்றத்தினாலும், திருந்திய முறைச் செய்பொருள் வினையின் பரவலினாலும் ஏற்பட்ட கைத்தொழில் தேவைக்குறைவே. ஐரோப்பா, இந்தியரின் சொந்தத் துறைகளில், இன்னும், எண்ணுக்கெட்டாத தொன்று தொட்டு எவற்றுக்கு அவர்களைச் சார்ந்திருந்தோமோ அவையும், அவர்களுக்கே விதப்பாயுரியவுமான கைத்தொழில்களிலும் செய்பொருள் வினைகளிலும், அவர்களை வெல்லக் கற்றுக் கொண்டதினால், உண்மையில் இனி யொருபோதும் எதற்கும் இந்தியாவைச் சாந்திருப்பதில்லை. உண்மையில், காரியங்கள் தலைகீழாய் மாறிவிட்டன. இவ் வெளிப்பாடு இந்தியாவை முற்றிலும் கெடுத்துவிடுவதாக அச்சுறுத்துகின்றது.

“ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்குச் சற்று முன்பே, கைத்தொழில் செய்யும் கூற்றங்களிற் சிலவற்றினூடு வழிச் சென்றேன். அங்குப் பரவியிருந்த பாழ்நிலைக்கு ஏதும் ஒப்பாகாது. வேலையறைகளெல்லாம் சாத்தப்பட்டிருந்தன. அங்கே வாழும்இலக்கக்கணக்கான நெசவுத்தொழின் மக்கள் பசியால் மடிந்து கொண்டிருந்தனர். நாட்டிலுள்ள முன்றவற்றெண்ணம் (Prejudice) பற்றி, அவர்கள் அவமானப்பட்டன்றிப் பிற தொழிலையும் மேற்கொள்ள முடியாது. முந்திய காலத்தில் நூல்நூற்றுத் தங்கள் குடும்பத்தைக் காத்துவந்த, கணக்கற்ற கைம்பெண்களும் பிற பெண்டிரும் வேலையிழந்து பிழைப்பற்றிருந்ததைக் கண்டேன். யான் எங்குச் சென்றாலும் ஒரே துன்பத்தோற்றம் எனக்கு எதிரே நின்றது”[34] என்று 18ஆம் நூற்றாண்டில் மைசூர் நாட்டில் விடையூழியம் செய்த அப்பே டூபாய்ஸ் (Abbe Dubois) கூறுகின்றார்.

பண்டைக் காலத்திற் பெண்டிர் நூல் நூற்றமையை நக்கீரர், கபிலர், பவணந்தி முதலியோருங் கூறியுள்ளனர். 'பருத்திப் பெண்டு' என்று புறநானூறு (125, 326) கூறும்.

“நூலினு மயிரினு நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த வறுவை வீதியும்”

(சிலப். 14 : 205-207)

என்று இளங்கோவடிகள் கூறுவதால், பண்டைத் தமிழர் நெசவின் பெருமை விளங்கும்.

“மயிரினும்” என்பதற்கு “எலிமயிரினாலும்” என்று பொருள் கூறியுள்ளார் அடியார்க்குநல்லார்.

மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த தென்பதும், அதன் மயிரால் சிறந்த கம்பளம் நெய்யப்பட்ட தென்பதும்,

“புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன
பவளமே யனையன பன்மயிர்ப் பேரெலி”

“செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி
ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்”

என்று சிந்தாமணி (1898,2686)) கூறுவதா லறியப்படும். பலவகைத் துணிகள் பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்டமை,

“துகில் (ஆடை): கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம்,கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல் யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி”[35] என 36 வகையென்று அடியார்க்கு நல்லார் கூறுவதினின்றறியலாம்.

“ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம்” (பத். 4 : 169) என்பதினாலும், பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் ஆடையென்னும் பொதுப்பெயர் இருத்தலாலும், பாம்பு கழற்றிய மீந்தோல் சட்டையெனப் படுதலாலும், இக்காலத்திற் சூழ்ச்சியப்பொறியால் நெய்யும் நொய்ய ஆடை வகைகள் போன்றே, அக்காலத்திற் கைத்தறியால் தமிழர் நெய்து வந்தனர் என்பதறியப்படும்.

நெசவுபற்றிய சில தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன.

பன்னல் = பருத்தி. L. punnus, cotton, It. panno, cloth.

கொட்டை = பஞ்சு. Ar. qutun, It. cotone, Fr. coton, E. cotton.

கொட்டை நூற்றல் என்னும் வழக்கை நோக்குக. பருத்திக் காயினின்று கொட்டுவது கொட்டை.

வேட்டி = ஆடை. L. vestis, Sans. வஸ்த்ர, E. vesture.

வெட்டுவது வேட்டி. ஒ.நோ : துணிப்பது துணி. அறுப்பது அறுவை. வேட்டியை வேஷ்டி என்று தமிழரே தவறாய் வழங்குகின்றனர். இது இன்னும் வடமொழிக்குட் புகவில்லை.

“தடுக்கப் பழையவொரு வேட்டி யுண்டு” என்று பட்டினத்தார் கூறுதல் காண்க. (திருத்தில்லை, 17)

சேலை = (சீலை) நீண்ட அல்லது அகன்ற துணி.

A.S. segel, E. sail.

தச்சு = L. texo, E. texture, anything woven. தை + சு = தைச்சு — தச்சு. தச்சு = தைப்பு. தச்சு என்னும் பெயர் சரியானபடி நெசவுக்குரியதேனும், மரக்கொல்வேலைக்கு வழங்கிவருகின்றதுஅதிலும் தைப்புத் தொழிலுள்ளமையின். வண்டியைத் தைக்க வேண்டும் என்று தச்சர் கூறும் வழக்கை நோக்குக. தைத்தல் பலவுறுப்புகளை ஒன்றாயிணைத்தல். நெசவில் நூல்கள் ஒன் றாயிணைக்கப்படலும், தச்சில் வண்டியாயின் குறடு ஆரை சூட்டு என்னும் உறுப்புகளும், பெட்டி நாற்காலியாயின் பலகைகளும் கால்களும் ஒன்றாயிணைக்கப்படலும் காண்க.

வாணிகம்— (Commerce)

வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு. வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ.நோ: குறுநொய் - குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய்நீருக்கு மறுபெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும். சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. 'சொள்ளும் பெருத்தால் சொல்லுப் பெருக் கும்' என்பது பழமொழி. சொள்ளு - சொல்லு -சொல். வாய்நீர் - வாணீர் - வாணி = நீர், சொல். வாணி - பாணி.

கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா. கொண்டுவா - (கொண்டா) - கொணா - கொணர், பழம் - பயம்.

வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங் காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க.

வாணி + இகம் = வாணிகம். வாணி = சொல். சொல்லுதல் என்று பொருள்படும் வாணிகம் என்னும் சொல், விலை சொல் லுதல் என்னும் பொருளில் பண்டமாற்றைக் குறிப்பதாகும். ஒ.நோ : பகர்தல் = சொல்லுதல், விற்றல். நொடுத்தல் = சொல்லுதல், விற்றல். நொடி = கதை. நொடை = விற்பனை.

வாணி என்னும் சொல் வழக்கிலில்லாமையினாலேயே வடசொல்லாகக் கருதப்படுகின்றது, பாணி என்னுஞ் சொல் போல. வர்த்தகம், வியாபாரம், வைசியம் என்னும் சொற்களே வட சொற்கள். வானி (வான் + இ) என்னுஞ் சொல் வாணியென்று திரிந்திருக்கலாம். ஒலியை வானத்தின் பண்பாக முன்னோர் கருதினர். வாணிகம் முதலாவது உள்நாட்டு வணிகம் அயல்நாட்டு வணிகம் என இருதிறப்படும். அவற்றுள் அயல்நாட்டு வணி கமே சிறந்தது. அதுவும் நிலவாணிகம் நீர்வாணிகம் என இருதிறப்படும். அவற்றுள் நீர்வாணிகமே சிறந்தது.

தமிழர் பண்டைக்காலத்தில் நீர்வாணிகத்திற் சிறந்திருந் தமைக்கு அகச்சான்றும் புறச்சான்றும் நிரம்பவுள.

கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்ட தான ஊர் என்னும் கல்தேயநகர் அகழ்வில், இந்தியத் தேக்கு மரத்துண்டு கண்டுபிடிக்கப்பட்டதென்றும், தேக்கு மரம் இந்தியாவில் விந்தியமலைக்கு வடக்கே வளர்வதே யில்லையென்றும், மஸ்லினுக்குப் பாபிலோனிய பழம்பெயர் சிந்துவென்றும், அது இந்தியாவினின்றும் ஏற்றுமதியானதி னால் அப் பெயர் பெற்ற தென்றும் ராகொஸின் கூறுகிறார்.[36] “எகிபதியக் கல்லறைகளில் நீலமும் (indigo), மஸ்லினும் கண்டது, இந்திய விளைபொருள்கள் குறைந்தது கிறித்து வுக்கு 1700 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையில் எகிப்திற் குள் புகுந்தமையைத் திட்டமாய்க் காட்டிவிட்டது. சுமேரியர் இந்தியாவிற்கேயுரிய பொருள்களாகிய தேக்கு, மஸ்லின் வணிகம் செய்தார்கள் என்பதற்கும் சான்றுளது” என்று திருவாளர் ஏ. கோஸ் (Ghose) ஒரு கட்டுரையிற் கூறுகின்றார்.[37]

கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முன்னிருந்த சாலோமோனுக்கு முந்திய சான்றுகளிருப்பதால், அவன் இந்தியாவோடு செய்த வாணிகத்தின் வாயிலாய், எபிரேய மறைக்குள் புகுந்த துகி (தோகை = மயில்), கபி (கப்பி = குரங்கு) என்னும் தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாட்டொடு பண்டு செய்துவந்த வணிகத்திற்குச் சிறப்புடைச் சான்றாகா.

“முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” என்று தொல் காப்பியத்திற் (அகத். 37) கூறியிருப்பதால், கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்பே, தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந் தமையறியப்படும்.

தமிழில் பலவகை மரக்கலங்கட்கும் பெயருள்ளன. அவை புணை, பரிசல், கட்டுமரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன.

“கலஞ்செய் கம்மியர்” “கலம்புணர் கம்மியர்” என்று மணிமேகலையிலும்,

“நீரினின்று நிலத்தேற்றவு
நிலத்தினின்று நீர்பரப்பவு
மளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
யருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போர்”  என்றும்,

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்”

என்று பட்டினப்பாலையிலும்,

“இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”[38] என்று சிலப்பதிகாரத்திலும் கூறியிருப்பதால், பண்டைத்தமிழரின் கலஞ்செய்வினையும்(Ship building) நீர்வாணிகமும் நன்றாய் விளங்கும்.

வாரித்துறைபற்றிய பல தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. அவையாவன :—

வாரி = கடல். வார் + இ = வாரி. வார்தல் நீளுதல்.

“வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள”

என்பது தொல்காப்பியம்,(உரி. 21)

நீர் ஓரிடத்தினின்று நீள்வதால் நீர் என்றும் வாரி யென்றும் கூறப்பட்டது.

நீள் — நீர். ஒ.நோ : கள் — கரு (நிறம்). தெள் — தெருள். வார் + இதி = வாரிதி (வ.). வார் + அணம் = வாரணம்.

வாரி, வாரிதி, வாரணம் என்னும் நீர்ப்பெயர்கள், சிறந்த நீர்நிலையும் பிற நீர்நிலைகட்குக் காரணமுமான கடலைக் குறித்தன.

வாரி - L. mare, the sea; Fr. mer, mare, pool; Ger- and Dut. meer; A.S. mere; E. mere, a pool or lake.

வாரணம் - L. marinus, E. marina, n. marine, maritime, adj.

வாரணன் கடலோனான நெய்தல்நிலத் தெய்வம். வாரணன் என்னும் தமிழ்ப்பெயர் வடமொழி வடிவத்தை யொட்டி வருணன் என்று திரிக்கப்பட்டது. இந்திய ஆரியர், மேலையாசியாவினின்றும் நிலவழியாய் இந்தியாவிற்கு வந்தமையால், வாரித் துறையறிந்தவரல்லர். சமுத்திரம் என்று வேதத்திற் சொல்லி யிருப்பது, வானத்திலுள்ள மேகப்படலத்தை.[39]

நாவாய் — L. navis.O. Fr. navis, Gr. naus, Sans. nau, E. navy, n. nautical, adj.

நால்வாய் (யானை) — நாவாய், நால்வாய்போல் அசைவதால் கப்பல் நால்வாயெனப்பட்டது (உவமையாகுபெயர்).

“நாவாய் - களிகள்போற் றூங்குங் கடற்சேர்ப்ப”

என்றார் முன்றுறையரையனார். களி - மதங்கொண்ட யானை. களிகொள்வது களிறு (ஆண்யானை). கள் + இ = களி. கள் = மயக்கம், மதம்.

“வெளி விளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை”

என்ற பட்டினப்பாலை யடிகளையுங் காண்க.

நால்வாய் - நாவாய். பொருள் வேறுபடுத்தற்கு இடைக் குறைந்தது.

படகு - Low. L. bargia, Gr. baris, O. Fr. barge, a boat.

Low. L. barca, Fr. barque, E. bark, barque, a ship of small size.

படகு — barge—bark. ட-ர, போலி.

ஒ.நோ : முகடி — முகரி, குடகு — Coorg.

Galleon (Sp. galeon - Low. L. galea), galley (O. Fr. galee - Low. L. galea) என்னும் பெயர்கள் கலம் என்னும் பெயரையும், Ship (L. scapha, Gr. skaphos, Ger. schiff, ice.skip, Goth.skip, A.S. scip, E. skiff) என்னும் பெயர் கப்பல் என்னும் பெயரையும் பெரும்புடை ஒத்திருக்கின்றன.

கட்டுமரம் என்பது catamaran என்றானது மிக அண்மையிலாகும்.

Sail என்பது சேலை அல்லது சீலை என்னும் பெயரை யொத்திருப்பது முன்னர்க் கூறப்பட்டது.

நங்கூரம் - L. ancora, Gr. angkyra, Fr. ancre, E. anchor.

நங்கூரம் வடிவத்திற் கலப்பைபோன்றிருப்பதால், அப் பெயர் பெற்றது. நாங்கூழ், நாகேல (தெ.), நாஞ்சில் என்பன கலப்பைப் பெயர்கள். நாங்கூழ் - நங்கூரம் - anchor. ஆங்கிலப்பெயரில் நகரமெய் நீங்கிற்று. ஒ.நோ: நாரந்தம் — naranj (Pers.) — arancio (Fr.—It.); E. orange.

கவடி - cowry. கவடி - (பலகறை) ஒரு கடற்பொருள்.

பண்டைத் தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந்ததினால், வையகம் வட்டவடிவமென் றறிந்திருந்ததாகத் தெரிகின்றது.

மண் + தலம் = மண்டலம் (பூமி) - மண்டிலம் = வட்டம்.

மாநிலத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வானநூலறி வாலிட்ட பெயராகத் தெரிகின்றது. வாரித்துறையில் சிறந்தவர்க்கு வான நூலும் தெரிந்திருக்கும். வானச்சுடர்களே மீகாமர்க்கு வழிகாட்டிகளும் கடிகாரமும். இதை மாக்ஸ் முல்லரும் கூறுகின்றார்.

நாலம் — ஞாலம் = உலகம். நால் + அம் = நாலம். நாலுதல் தொங்குதல். வானத்திலுள்ள சுடர்கள் தாங்கலின்றித் தொங்கிக் கொண்டிருப்பதை யறிந்த தமிழர், மாநிலமும் அங்ஙனமே தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும். மற்றப்படி,

“அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்
.......நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன்னணுப் புரைய
சிறிய வாகப் பெரியோன்” [40]

என்ற கருத்து முன்னோர்க்குத் தோன்றியிராது.

ந—ஞ, போலி. கா : நயம் — ஞயம், நண்டு — ஞண்டு.

உலகத்திற்கு அண்டம் (முட்டை) என்னும் பெயரும், வான்சுடர் வடிவுபற்றி வந்ததே. அண்டங்களையெல்லாம் தன்னுளடக்கிய வெளியும் பிற்காலத்தில் அண்டமெனப் பட்டது, எப்புறமும் வளைந்து தோன்றுதலின்.

அம்பு, ஆழி என்னும் கடற்பெயர்கள் வட்டம் என்னும் பொருள் பெற்றதும், பண்டைத்தமிழரின் வாரித் துறைத் தேர்ச்சியைக் காட்டுவதாகும்.

அம், ஆம், அம்பு என்பன நீரைக் குறிக்கும் தனித் தமிழ்ப் பெயர்கள். அம் — அம்பு. ஒ.நோ : கும்—கும்பு, திரும்—திரும்பு. அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு.

ஆழ்ந்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச்சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன.

அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு - வளையல், அம்பி --- ஆம்பி - காளான், L: amb, ambi, Gr. ambhi round.

மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.[41] உலகத்திலேயே முதன் முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது.

“உழவு தொழிலே வரைவு வாணிபம்
வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில்
கற்கும் நடையது கரும பூமி"

என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே.

அழிந்துபோன தமிழ் நூல்கள்

ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கியங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது.

அகத்தியருக்கு முத்திய தமிழ் நூல்களில், செங்கோன் தரைச்செலவு என்னும் சிறிய நூலின் ஒரு பகுதியே இன்று கிடைத்துளது.

தலைக்கழகத்தாராற் பாடப்பட்ட எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையுமென் இத்தொடக்கத்தன வும் இடைக்கழகத்தாராற் பாடப்பட்ட கலியும் குருகும், வெண்டானியும், வியாழமாலையாகவலுமென இத்தொடக்கத்தனவும் கடைக்கழகத்தாராற் பாடபட்ட பரிபாடலுட் பலவும், கூத்தும் வரியும் சிற்றிசையும், பேரிசையும் இப்போதில்லை.

தலைக்கழகக் காலத் திலக்கணமாகிய அகத்தியமும், இடைக் கழகத் திலக்கண மாகிய மாபுராணமும் இசை நூலும் பூதபுராணமும் இப்போதில்லை,

இனி, அடி நூல், அணியியல், அவிநயம், அவிநந்தமாலை, ஆசிரியமாலை, ஆசிரிய முறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திர காளியம், ஐந்திரம். ஓவிய நூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, களவு நால், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத் தண்டு, காலகேசி, காக்கை பாடினியம், குண்டலகேசி, குண நூல், கோள் நூல், சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுட வெண்பா, சாதவாகனம், சிற்பநூல், சிறுகாக்கை பாடினியம், சிறுகுரீ இயுரை, சுத்தானந்தப்பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர் யாத்திரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிக மாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதியம், பரதம், பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனாபதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பாவைப்பாட்டு, பாட்டியன் மரபு, பாட்டுமடை, பாரதம் (பெருந்தேவனார் இயற்றியது). புணரிப்பாவை, புதையல் நூல், புராண சாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், மந்திர நூல், மயேச் சுரர்யாப்பு. மார்க்கண்டேயர் காஞ்சி, முறுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடி. முப்பது, மோதிரப்பாட்டு, யசோதர காவியம், லச்சத் தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணிறந்த நூல்கள் கடைக் கழகக் காலத்திலும் பிற்காலத்திலுமிருந்தவை யிப்போதில்லை.

பாண்டியன் தமிழ்ப்பாரதம், திருச்சிராப்பள்ளியந்தாதி. ஸ்ரீராஜ ராஜ விஜயம், நாடக நூல், வீரணுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, அஷ்டாதச புராணம், அருணிலை விசாகன் தமிழ்ப் பாரதம். பெருவஞ்சி, அத்திகிரித் திருமால் சிந்து, காங்கேயன் பிள்ளைக்கவி, வீரமாலை, திருவதிகைக் கலம்பகம். திருவல்லையந்தாதி முதலியவை, இதுவரையறியப்படாத நூல்களாகச் சாஸனத்தமிழ்க்கவி சரிதத்திற் குறிக்கப்பட்டுள்ளன.

கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட புலவர்களியற்றிய நூல் களிற் பல இப்போது கிடைக்கவில்லை. ஒட்டக்கூத்தரியற்றிய அரும்பகைத் தொள்ளாயிரம், எதிர்நூல் முதலியவை இன்னும் வெளிவரவில்லை.

இடைக்கழக விருக்கையாகிய கபாடபுரத்தில், எண்ணாயிரத் தெச்சம் நூல்களிருந்து பின்பு கடல்கோளுண்டழிந் தனவென்றொரு வழிமுறை வழக்குள்ளது.

பற்பல கலைகள் பண்டைத் தமிழிலிருந்து பின்பழிந்து போயின வென்பதை,

“ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம்
தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”

என்னும் செய்யுளா லறியலாம்.

மேற்கூறிய நூல்களெல்லாம் அழிந்து போனமைக்குக் கடல் கோள்களும், ஆரியத்தினால் தமிழர் உயர் நிலைக்கல்வியிழத்தமையும், இருபெருங் காரணங்களாகும்.

தொல்காப்பியம் ஒன்றில் வல்லவரே ஒரு பெரும் புலவராக மதிக்கப்படுகின்றார். தொல்காப்பியத்திற்குச் சமமும் அதினுஞ் சிறந்தவு மான ஏத்துனையோ நூல்கள் இறந்துபட்டன.

அகத்தியர்

}அகத்தியர் என்று எத்தனையோ பேருளர். அவருள் முதலாவாரே இங்குக் கூறப்படுபவர்.

அகத்தியர் காலம்:

அகத்தியர் இராமர் காலத்தவராதலின், ஏறத்தாழ கி.மு. 1200 ஆண்டுகட்கு முற்பட்டவராவர்.

அகத்தியர் கதைகள்

(1) விந்தத்தின் செருக்கடக்கினது;

ஒருகாலத்தில் பனிமலை (இமயம்) நீர்க்கீழ் இருந்தது. அப்போது விந்தியமலை மிகவுயரமாய்த் தோன்றிற்று. பனிமலை யெழுந்தபின், அதனொடு ஒப்பு நோக்க வித்தம் மிகச் சிறிதாய்த் தோன்றிற்று. இதே விந்தத்தின் செருக்கடக்கம். இதை அகத்தியர் பெயரொடு தொடுத்துக் கூறக் காரணம், அவர் தென்னாடு வந்தபின் குமரி நாட்டைக் கடல் கொண்டமையே. அகஸ்தியர் என்னும் பெயருக்கு, விந்தத்தின் அகத்தை (செருக்கை) அடக்கினவர் என்று, வடமொழியிற் பொருள் கூறப்படுகின்றது.

(2) கடலைக் குடித்தது.

முன்பு கடலாயிருந்த பாகம் பின்பு நிலமாகிப் பனிமலை தோன்றியதையே, அகத்தியர் கடலைக் குடித்ததாகக் கதை கட்டியதாகத் தெரிகின்றது.

(3) குடத்திற் பிறந்தது

மேற்குத் தொடர்ச்சிமலை முற்காலத்தில் குடமலை யெனப்பட்டது. தென் மதுரையைக் கடல் கொண்டபின், அகத்தியரிருந்தது பொதியமலை. அது குடமலையின் ஒரு பகுதி. குடதிசையில் அல்லது குடமலையிலிருந்தமை பற்றி அகத்தியர் குடமுனிவர் என்று கூறப்பட்டிருக்கலாம். பழைமையர் தமது வழக்கம்போல் அதன் உண்மைப் பொருளைக் கவனியாது, குடத்திற் பிறந்தவராகக் கதை கட்டி, அதன் மறுபெயர்களான கும்பம் கலசம் முதலிய சொற்களாலும் அவர்க்குப் பெயரமைத்திருக்கலாம்;

ஆர்க்காட்டுப்புராணத்தில், ஆர்க்காடு என்னும் பெயரை ஆறுகாடு என்று கொண்டு, அதைச் சடாரண்யம் என்று மொழி பெயர்த் திருப்பதாகப் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் கூறுவர்.

(4) அங்குட்ட அளவாயுள்ளது:

அகத்தியர் குள்ளமாயிருந்ததினால் குறு முனிவரென்றும் குட்டமுனிவரென்றும் கூறப்பட்டார்.

குட்டை குட்டம், ஒ. நோ? பட்டை—பட்டம், தட்டை—தட்டம்.

செய்யுளடிகள் குறளுஞ் சித்துமாய்க் குறுகி வருவது குட்டம்படுதல் என்றும், கைகால் விரல்கள் அழுகிக் குட்டையாகும் தொழு நோயும் குரங்குக்குட்டியுங் குட்டமென்றுங் கூறப்படுதல் காண்க.

குட்டத்தைக் குஷ்டமென்பர் வடநூலார். ஒ? நோ, கோட்டம்கோஷ்டம் (வ), முட்டி—முஷ்டி (வ).

சில பெயர்களில், அம் என்னும் முன்னொட்டுச்சேர்தல் இயல்பு:

கா : அங்கயற்கண்ணி, அங்காளம்மை.

இங்ஙனமே குட்டமுனி என்னும் பெயரும் அங்குட்டமுனி என்று ஆகியிருக்கலாம்.

அங்குட்டன் என்று ஏற்கனவே பெருவிரலுக்குப் பெயர். குட்டையாயிருப்பதால் கட்டைவிரல் குட்டன் எனப்பட்டது அஃறிணைப் பெயரும் அன் ஈறு பெறும். கா : குட்டன் = ஆட்டுக்குட்டி, குட்டான் = சிறு பெட்டி, சிறு படப்பு. அம் + குட்டன் — அங்குட்டர். இது வடமொழியில் அங்குஷ்டன் எனப்படும்,

அகத்தியர் பெயராள அங்குட்டன் என்பதையும், பெருவிரலின் பெயரான அங்குட்டன் என்பதையும், ஒன்றாய் மயக்கி, அகத்தியர் அங்குட்ட (பெருவிரல்) அளவினர் என்று பழைமையர் கூற நேர்த்திருக்கலாம்,

(5) மாநிலத்தைச் சமனாக்கியது.

பனிமலை ஒரு காலத்தில் நீர்க் கீழிருந்து பின்பு வெளித் தோன்றியது. அகத்தியர் தெற்கே வந்த பின், குமரிநாட்டைக்கடல்கொண்டது. முற்காலத்தில் முறையே தாழ்ந்தும் உயர்ந்து மிருந்த வடதென் நிலப்பாகங்கள், பிற்காலத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் போயின. இவ்விரண்டையும் இணைத்து, அகத்தியர் தாழ்ந்தும் உயர்ந்து மிருந்த வடதென் நிலப்பாகங்களைச் சமப்படுத்தினரென்றும்,வடபாகம் அமிழ்ந்ததற்குக் காரணம் நிலத்திற்குப் பாரமாகுமாறு பதினென் கணத்தவர் வந்து கூடிய சிவபெருமான் கலியாணமென்றும் கதைகட்டினர் பழைமையர்,

(6) தமிழை உண்டாக்கினது.

தமிழ் மிகப் பழைமையானதாதலாலும், பிற்காலத் தமிழர்க்குச் சரித்திரவறிவின்மையாலும், இது போது அறியப் படுகின்ற தமிழ் நூல்களுள் அகத்தியம் முன்னதாதலாலும், அகத்தியர் தலைக்கழகத்திறுதியில் வந்தவராதலாலும் அகத்தியர் தமிழை உண்டாக்கினர் என்று சிலர் கருதலாயினர்.

அகத்தியம் வழி நூலாதல் :

அகத்தியம் தமிழிலக்கண முதனூலென்று, இதுவரையும் கூறப்பட்டுவந்தது. இற்றையாராய்ச்சியால் அது வழிநூலே யென்பது தெள்ளத்தெளியத் தெரிகின்றது:

அகத்தியம் வழி நூல் என்பதற்குக் காரணங்கள்:

(1) தொல்காப்பியத்தில் ஓரிடத்தும் அகத்தியம் கூறவும் சுட்டவும் படாமை.

(2) “என்ப' , “என்மனார் புலவர்“, “என மொழிய“, “என்றிசினோரே” என்று தொல்காப்பியர் முன்னூலாசிரி யரைப் பல்லோராகக் குறித்தல்,

(3) “களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத்
     தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக்
     கையறு துயரமொடு காட்சிக் கவாவி
     எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப்
     பாடப் படுவோன் பதியொடு நாட்டொடு
     முள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப்
     பையு ளென்று பழித்தனர் புலவர்“

என்று அகத்தியர் முன்னோர் மொழிபொருளை எடுத்தோதுதல், சிலர் ஆனந்தக் குற்றம் பிற்காலத்துத் தோன்றிய தென்று கூறுவர். அது தவறாகும்.

“கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்”

(புறத். 19.)

என்று. ஆனந்தப்பெயர் தொல்காப்பியத்திற் கூறப்படுதல் காண்க.

“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பாள் பெயரது விகாரமென்
றோதிய புலவனு முனனொரு வகையா
னிந்திர னெர்ட்டாம் வேற்றுமை யென்றனன்”

என்று அகத்தியர் தமக்கு முந்தின இரு நூலாசிரியரை விதந்துங் கூறினர்.

அகத்தியத்திற்குமுன், இந்திரன் என்றொரு புலவன் இவற்றிய ஐந்திரம் என்னும் இலக்கணம் இருந்தமை,

“மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றி”

என்று தொல்காப்பியம் பாயிரத்திற் கூறியதாலறியலாம்.

“ஏழியன் முறையது” என்னும் அகத்திய நூற்பாவில் குறிக்கப்பட்ட இரு நூல்களையும் முறையே வடமொழி இலக்கண நூல்களாகிய பாணினீயமும் ஐந்திரமுமெனக் கொண்டனர் பல்லோர். இது தமிழின் தொன்மையை அறியாமையால் நேர்ந்த தவறாகும்.

பாணினி கி. மு. 5 ஆம் நூற்றாண்டினராயிருக்க, அவரியற்றிய இலக்கணம் எங்ஙனம் இராமர் காலத்தவரான அகத்தியர் நூலுக்கு முதனூலாதல் செல்லும்?

ஐந்திரம் என்பது இந்திரன் என்றோர் (ஆரியப்) புலவர் இயற்றிய இலக்கணமாகும். அகத்தியர்க்கு முன்னமே ஒரு சில ஆரியர் தென்னாட்டிற்கு வந்திருந்தமை, ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்று தொல்காப்பியர் கூறுவதாலும், கந்தபுராணத்தாலும், திருமாலின் முதலைந்து தோற்றரவுச் செய்திகளாலு மறியப்படும்.

ஐந்திரம் என்பது வடமொழியிலக்கணமா தென்மொழியிலக்கணமா என்று திட்டமாய்க் கூற இயலவில்லை. ஆயினும், இந்திரன்—ஐந்திரம் என்னும் திரிபாகுபெயர் (தத்திதாந்த) முறையினாலும், ஐந்திரத்தினும் வேறாக “முந்துநூல்கண்டு” எனச் சில நூல்களைப் பனம்பாரனார் குறித்தலாலும் அது வடமொழி யிலக்கணமே யெனக் கொள்ள இடமுண்டு. ஆதலால்.

“புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுதூ லெய்துவீர்“

“கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கை விளக்கங் காணாய்“

என்று சிலப்பதிகாரத்தில், நாடுகாண்காதையிற் கூறினதுமென்க.

“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்“ என்று தொல்காப்பியர் சிறப்பிக்கப்படுவதால், ஐந்திரம் மிக விழுமிய நூலென்பது பெறப்படும். இந்திரன் மருதநிலத்துப் பண்டைத் தமிழ்த் தெய்வமாதலின், ஐந்திரம் அதன் சிறப்புப்பற்றியும் நூலாசிரியன் பெயரொப்புமைபற்றியும் அத்தெய்வத்தினதாகக் கூறப்பட்டது. இறையனார் அகப்பொருள் அதன் நூலாசிரியன் பெயரொப்புமை பற்றியும், கோயிற்பீடத்தடியிற் கிடந்தமை பற்றியும், சிவ பெருமானியற்றியதாகக் கருதப்பட்டமை காண்க. இந்திரனுக்குப் பண்டைத் தமிழ்ப் பெயர் வேந்தன் என்பது. இந்திர தெய்வத்திற்குப் பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த பெருமையைச் சிலப்பதிகாரத்தானும் மணிமேகலையானு முணர்க.

தமிழில் 8 வேற்றுமையும் ஒரே காலத்தில் தோன்றினவையல்ல. முதலாவது 5 அல்லது 6 வேற்றுமைகள்தாம் தோன்றியிருக்க முடியும்; இறுதியில் தோன்றினது எட்டாம் வேற்றுமை, அது ஒரு காலத்தில் முதல் வேற்றுமையின் வேறுபாடென்று அதனுள் அடக்கப்பட்டது. இதையே,

“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பரன் பெயரது விகாரமென்
றோதிய புலவனு முளன்“

என்பது குறிக்கும். ஆங்கிலத்திலும் விளிவேற்றுமையை முதல் வேற்றுமையின் வேறுபாடு (Nomintaive of Address) என்றே கூறுவர்.

ஐந்திர இலக்கணத்தில், விளி வேற்றுமை முன்னூல் களிற்போல முதல் வேற்றுமையில் அடக்கப்படாது, தனி வேற்றுமையாகக் கூறப்பட்டது. இறையே.

“இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்”என்று கூறினர் அகத்தியர்.

வேற்றுமைகள் தோன்றின வகையும் முறையும் பீன்னர்க் கூறப்படும்.

(4) அகத்தியம் முத்தமிழிலக்கணமாதல்.

ஒரு மொழியில், முதன்முதலிலக்கணய தோன்றும்போது, கூடிய பக்கம் எழுத்து சொல் யாப்பு என்ற மூன்றுக்கே தோன்றும். அகத்தியத்தில் இம் மூன்றுடன் பொருளிலக் கணமும், அதன்மேலும் இசை நாடக விலக்கணங்களும் கூறப் பட்டிருந்தலின் அது முதனூலாயிருக்க முடியாதென்பது தேற்றம்.

அகத்தியத்திற்கு ஆரியவிலக்கணத் தொடர்பின்மை

அகத்தியம் வடமொழியிலக்கண நூல்கட்கு மிகமிக முந்தியதாதலானும், தமிழிலக்கணத்திலுள்ள குறியீடுகளெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யாதலானும், வடமொழியிலக்கணத்திலில்லாத சில சொல்லமைதிகளும் பொருளிலக்கணமும் இசைநாடகவிலக்கணமும் தமிழிலுண்மையானும், ஆரியர் இந்தியாவிற்குள் புகு முன்பே திராவிடர் தலைசிறந்த நாகரிகம் அடைந்திருந்தமையானும், அகத்தியத்திற்கும் வடமொழியிலக்கணங்கட்கும் எட்டுணையும் இயைபின் றென்க.


“ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன் கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க”

என்று புத்தமித்திரன் கூறியது, தமிழ்நாட்டிற் பௌத்தத்தைச் சிறப்பித்தற்குக் கூறிய புனைந்துரையே யாகும்.

தமிழிலக்கியத்தின் உச்சநிலைக் காலம்
The Augustan Age of Tamil Literature.

தமிழிலக்கியத்தின் உச்சநிலைக்காலம் தலைக்கழகக் காலமே யென்பதற்குக் காரணங்கள் : —

(1) தமிழ்ப் பயிற்சி வரவரக் குறைதல்.

தலைக்கழகக் காலத்தில், தமிழ் முத்தமிழாயிருந்து, பின்பு இடைக்கழகக் காலத்தில் வெவ்வேறாய்ப் பிரிந்தது. கடைக் கழகக்காலத்தில் இசை நாடக நூல்களிருந்தும் புலவராற் பெரும்பாலும், பயிலப்படவில்லை. இதுபோதோ, இசை நாடக நூல்கள் இல்லாமையுடன், இயற்றமிழும் சரியாய்க் கற்கப்படவில்லை, இயற்றமிழ்ப் பகுதிகளில் முக்கியமான பொருளிலக்கணம் தெரிந்த புலவர் இதுபோது மிகச் சிலரேயாவர்.

(2) முக்கழகங்களும் முறையே ஒடுங்கல்.

முக்கழகங்களும் காலத்தினாவன்றித் தன்மையினாலும் தலை யிடை கடையாயினமை, கீழ்க் காணும் குறிப்பால் விளங்கும்;

தலை இடை கடை
உறுப்பினர் தொகை 549 59 49
பாடியார் தொகை 4449 3700 449
கழகமிருந்த ஆண்டுத்தொகை 4440 3790 1850
இரீயினார் தொகை 89 59 49
அரங்கேறிய அரசர் தொகை 7 5 3

(3) கலைகள் வரவர மறைதல்.

தலைக்கழகக் காலத்தில் எத்துணையோ கலைகள் தமிழிலிருந்தன. அவை ஒவ்வொன்றாய் மறைத்து போயின, இன்றும் நூல் வழக்கிலில்லாவிடினும் செயல் வழக்கிற் பல கலைகளுள்ளன. அவற்றுள் ஒன்று சிற்பம், சிற்பக்கலைக்குரிய அக்கிரபட்டியல், பலகை, முனை, இதழ், குடம், தாடி, கால், நாகபந்தம், போதிகை, யாளம், கூடு, நாணுதல், மதளை, பூமுனை, கொடி, சாலை, கும்பம், பீடம், மண்டபம் கோபுரம், கொடுங்கை சுருன்யாளி, தூண், பட்டம், அளவு உத்திரம், முட்டி பந்தம், கொடிவளை, ஆளாங்கு, அணிவெட்டிக்காய், கோமுகம் முதலிய குறியீடுகள் இன்றும் தமிழாயுள்ளன.[42] பிற குறியீடுகளும் தற்போது வடசொல்லாயிருப்பினும், தமிழினின்றும் மொழி பெயர்க்கப்பட்டவையே: இன்றும் தமிழ் நாட்டிற் கட்டடத் தொழில் தமிழராலேயே செய்யப்படுவதும் பார்ப்பனராற் செய்யப்படாமையுங் காண்க: (4) இலக்கணம் வரவரப் பிறழ்தல்.

தொல்காப்பியர் காலத்திலேயே நூலில் இலக்கணப் பிழைகள் தோன்றினமை முன்னர்க் கூறப்பட்டது. அதோடு வழக்கிலும் பல வழுஉ முடிபுகள் பிற்காலத்தில் தோன்றியுள்ளன.

அல்ல என்னும் படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றே, ஏனை எண் ணிடங்கட்கும் வழங்கி வருதல் காண்க;

(5) சொற்கள் வரவரப் பொருளிழத்தல்.

தலைக்கழகத்திற்குப் பின், ஒரு பொருட் பலசொற்களைப் புலவர்கள் பெரும்பாலும் திட்டமில்லாது வழங்க வந்திருக்கின்றனர்.

ஈ, தா, கொடு என்பன, முறையே இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் சொற்களாகும். இவை பிற்காலத்தில் வேறுபாடின்றி வழங்கப்பட்டுள்ளன.

(6) தமிழ் வரவரத் தூய்மைகெடல்.

தொல்காப்பியம் முழுமையிலும், ஐந்தாறே வட சொற்கள் உள்ளன. பிற்காலத்தில் அவை வரவரப் பெருகினமையை, முறையே, கடைக்கழகநூல்கள், திருவாசகம், கம்பராமாயணம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம் முதலியவற்றை நோக்கிக் காண்க . பிற்காலத்திற் செய்யுள் செய்தார் தமிழின் தூய்மையைச் சிறிதுங் கருதாமல், மோனை யெதுகையொன்ற நோக்கி, வடசொற்களை ஏராளமாயும் தாராளமாயும் வழங்கி விட்டனர்.

(7) நூற்செய்யுள் வரவர இழிதல்.

முக்கழகக் காலங்களிலும், பாக்களாலேயே பெரும்பாலும் நூல்களியற்றப்பட்டன. பிற்காலத்தார் பெரும்பாலும் பாவினங்களையே தெரிந்துகொண்டனர், பாவினும் பாவினம் இயற்றுதற்கெளிதாயிருத்தலின்:

(8) பொருளினும் சொல்லே வரவரச் சிறத்தல்,

கழகக் காலங்களில் சொல்லினும் பொருளே சிறந்ததென்று, செந்தொடையாயினும் பொருள் சிறப்புச் செய்யுள் செய்தனர். பிற்காலத்தில், மடக்கு, திரிபு முதலிய சொல்லணிகளையும், பலவகை ஓவிய (சித்திர)ச் செய்யுட் களையும் சிறப்பாகக் கொண்டு, அவற்றிலேயே தம் திறமையைக் காட்டினர். பொருளணியில் இயற்கைக் கருத்தும் சொல்லணியில் செயற்கைக் கருத்தும் அமைதல், செய்யுளி யற்றிப் பயின்றவர் யாவர்க்கும் புலனாம்.

(9) நூற்பொருள் வரவர இழிதல்.

முற்காலப் புலவர் மேனாட்டார் போலப் பல்வகைக் கலை நூல்களை இயற்றினர் : பிற்லாலப் புலவரோ கோவை, உலா, அந்தாதி, கலம்பகம் முதலிய புகழ் நூல் வகைளையே இயற்றுவாராயினர். ஒருவர் கோனவ பாடிவிட்டால், தலை சிறந்த புலவராக மதிக்கப்படுவர். 'யாவையும் பாடிக் கோவயைப் பாடு' என்பது பழமொழி.

பிற்காலத்தில் வகுத்த 96 பனுவல்களும் பெரும்பாலும் புகழ் நூல்வகைகளே, இதனால் பிற்காலத்தாரது கலை வர்ச்சியின்மை வெளியாகும்.

செய்யுள் கட்கும் நூலாவுக்கும் குலமுறை வகுத்ததும், பிற்காலத்தார் புல்லறிவாண்மையைக் காட்டும்.

கடைக்கழகக் காலத்தில் நால்வர் தனித்தனி நாற்பது செய்யுள் கொண்ட நூலொன்றை யியற்றினர். பிற்காலத்துப் பாட்டியல்கள் அவற்றின் தொகையிலிருந்தும், 'நானாற்பது' என்றொரு நூல்வகையை வகுத்து கொண்டது நகைப்பிற் கிடமானதே. கதையுணர்ச்சியிழந்தமையாலும், வடமொழியினின்றும் வந்த பழமைக் கல்வியினாலும், சரித்திரம் திணை நூல் என்னும் ஈர் அறிவியற்கலைகட்கும் மாறாகப் பாவியங் (காவியம்) களில், நாட்டுப்படலம் நகரப் படலம் முதலிய பகுதிகளில், தம் மதிநுட்பத்தைக் காட்டுவதொன்றே குறிக் கோளாகக் கொண்டு, பொய்யும் புலையுமானவற்றை யெல்லாம் புனைவாராயினர் பிற்காலப்புலவர்.

(10) ஆட்பெயர்கள் வரவர வடசொல்லாதல்,

கடைக்கழகத்திற்கு முன் காலத்தில், அரசர் பெயர்கள் கடுங்கோன் காய்சினன் எனச் செந்தமிழ்ப்பெயர்களாயிருந் தமையும், பின் காலத்தில் ஜடிலவர்மன் பராக்கிரமன் என வட மொழிப்பெயர்களானமையும், படைத்தலைவன், மேலோன் என் ம் தனித்தமிழ்ப் பெயர்களிருப்பவும், அவற்றுக்குப் பதிலாய், முறையே ஏனாதி (சேனாபதி), எட்டி (சிரேஷ்டின்) என்னும் வடமொழிப் பெயர்கள் பட்டப்பெயர்களாய் வழங்கி னமையுங் காண்க,

(11) வரவர வட நூல் தமிழ் நூலுக்களவையாதல்,

(12) தமிழர் பல துறைகளிலும் வரவரக் கெட்டுவருதல்.

கடைக்கழக இலக்கியம் ஓர் இலக்கியமாகாமை

பலர் கடைக்கழக இலக்கியமே தமிழிலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கினறனர், அதுவே இலக்கியமாயின், தமிழ் புன்மொழிகளில் ஒன்றாகவே வைத்தெண்ணப்படும்.

பதினெண் மேற்கணக்கான பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்பவற்றுள், பத்துப்பாட்டு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை என்ற, நான்கே நூல் என்னும் பெயர்க்குச் சிறிது உரிமை யுடையவை, இவையும் புகமும் அகப்பொருளும் பற்றியலையே. ஏனைய நான்கும் தனிப் பாடற்றிரட்டுக்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தனி நூல்களாயினும், நன்னெறி அகப்பொருள் என்னும் இரு பொருள் பற்றியனவ.

கடைக்கழக நூல்கள் முப்பத்தாறனுள்ளும் ஒன்றாவது கலைபற்றியதன்று, பாவியமுமன்று. அவற்றுள் ஆசாரக் கோவையோ வட நூல் மொழிபெயர்ப்பாயும் பிறப்பிலுயர்வு தாழ்வு வகுப்பதாயும், எளிய பொருள்களைக் கூறுவதாயு முள்ளது,

கடைக்கழக நூல்கள் என்று கூறப்படும் முப்பத்தாறும், அக்கழகக் காலத்திலேயே தோன்றியவையல்ல. அவற்றுட் சில அதன் பின்னரே இயற்றவும் தொகுக்கவும்பட்டன. தொகை நூல்களெல்லாம் ஒருவரே ஒரே காலத்தில் தொகுத்தவையுமல்ல.

மேலும், நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய பல கீழ்க்கணக்கு நூல்கள், கடைக்கழகப் புலவராலியற்றப் படாமையும், மேற்கணக்கு பதினெட்டிற்கொப்பக் கீழ்க்கணக்கு பதினெட்டு வகுக்கப் பட்டமையும், நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன நந்நாநூறு பாடல்களாய்த் தொகுக்கப்பட்டமையும் நோக்கி உணர்ந்துகொள்க. பதினெண்கீழ்க்கணக்குள் பதினெட்டாவது நூல், கைந்நிலை யென்றும் இன்னிலையென்றும் இருவேறு கொள்கை நிலவு வதையும் நோக்குக.

சிறந்த நூல்களெல்லாம் அகத்தியர்க்கு முன்னமே தமிழில் இயற்றப்பட்டிருந்தன: பிற்காலத்தார் அவற்றை ஆராய்ந்தே வந்தனர் என்பதை,

"தலைச்சங்கமிருந்தார்....... தமிழாராய்ந்தது கடல் கொள் ளப்பட்ட மதுரையென்ப." 'இடைச்சங்கமிருந்தார்....... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப." கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் ........ சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப" என்று முக்கழக வரலாற்றிற் கூறிய தினின்றும் அறிந்து கொள்க.

அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்த்தமை

அகத்தியர்க்கு முன் இந்திரன் என்ற ஓர் ஆரியர், தமிழிலக்கணம் செய்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவ்விந்திரனுக்கு முன் ஆரியர் இலக்கணம் பெரும்பாலும் செய்திருக்க முடியாது.

"தலைச்சங்கமிருந்தார்.... நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்மரென்ப' என்று, தலைக்கழகமிருந்த காலம் 89 அரச தலைமுறையினதாகச் சொல்லப்படுதலால், அகத்தியர் அவ்வளவு காலமிருந்திருக்க முடியாதென்பது முழுத்தேற்றம். ஆகவே, தலைக்கழகத்தின் இறுதிக் காலத்தில், அல்லது அதன் பின் தான், அகத்தியர் தமிழ் நாட்டிற்கு வந்திருக்க முடியும். அவர் தென் மதுரை சென்ற சில ஆண்டுகளுக்குள், குமரி நாட்டின் தென்பகுதியைக் கடல் கொண்டது. பின்பு அவர் ஓய்வு பெற்றுப் பொதியமலையில் தவமிருந்து தம் இறுதிக் காலத்தைக் கழித்தார், பாண்டியன் கபாடபுரத்தைக் கட்டி அங்கு இடைக் கழகத்தை நிறுவினான். அதில் தொல்காப்பியர் தலைமை தாங்கினார். அகத்தியர் அக்காலத்தில் இருத்தனரேனும், அக்கழகத்தில் உறுப்பினராயிருந்ததாக முக்கழக வரலாறு கூறுவது. அவர் அக்காலத்திலிருந்தமை பற்றியேயன்றி வேறன்று, தலைக்கழகத்தை அவர் அமைத்தார் என்ற வரலாறு பொருந்தாதென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஒவ்வொரு கழகமும் பல தலைமுறையாக நடைபெற்றதென்றும், அவற்றுள் இறுதித் தலைமுறையிலிருந்த புலவர் தொகையே வரலாற்றிற் கூறப்படுகின்றதென்றும் அறிந்து கொள்க.

அகத்தியர், தொல்காப்பியர் காலத்திலிருந்து கடைக் கழகக் காலத்தில் கபில பரன நக்கீரரும், அண்மைக் காலத்தில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களும், ராவ்சாஹிப் மு. இராகவையங்கார் அவர்களும், ரா. இராகவையங்கார் அவர்களுமாகப் பெரும்பாலும் பார்ப்பனரே தமிழ் நூலுக் கதிகாரிகளாயிருந்து வருவது எவர்க்கும் தெரிந்ததே.

குமரிநாடு எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது தமிழ் என்பதை அவர் அறிவாராக. தொண்டு நும் என்னுஞ் சொற்களின் இயல்பு அகத்தியர் காலத்தவரான தொல்காப்பியரால் அறியப்படாமையாலும், இக்காலத்தினின்று பழங்காலம் நோக்கிச் செல்லச் செல்லத் தமிழில் வட சொற்கள் குறைந்துகொண்டே போவதினாலும், அகத்தியத்திலும் தொல்காப்பியத்திலும் ஐந்தாறு சொற்களே வட சொற் களாயிருத்தலாலும், அகத்தியர் காலத்திற்கு முன்பே எட்டுணையும் வடசொற்கலவாத தனித்தமிழ் வழங்கியதென்றும் அது தமிழராலேயே வழங்கப்பட்ட தென்றும் அறிந்து கொள்க:

பேரகத்தியம் என்று இதுபோது வழங்கும் நூல் பிற்காலத்தில் வடமொழிப்பற்றுள்ள ஒருவராற் செய்யப்பட்டது. அது பேரில் மட்டும் அகத்தியம் என்க.

அகத்தியர் சிற்றகத்தியம் பேரகத்தியம் என இருவேறு நூல்கள் இயற்றியதாகத் தெரியவில்லை. அகத்தியம் வழக்கற்றபின், அதன் நூற்பாத்திரட்டுக்களால், சிறியதும் பெரியதுமான இரண்டே முறையே அப்பெயர் பெற்று வழங்கியிருத்தல் வேண்டும்.

வடசொல்லைத் தமிழ்ச் செய்யுட்குரிய சொற்களில் ஒன்றாகவும் (எச். 1). மொழிபெயர்ப்பை வழி நூல் வகைகளுள் ஒன்றாகவும் (மரபு. 94) தொல்காப்பியர் கூறியது பொருந்தவில்லை. அவற்றுள், வடசொல் ஒரோவொன்று (வீணாக) வருவது அவர் காலத்தில் உள்ளதேயாயினும், மொழிபெயர்ப்பிற்குத் தமிழில் இடமிருந்ததாகத் தெரியவில்லை, ஆனாலும், தொல்காப்பியத்தில் அங்கனங் கூறியிருப்பதால், அது தமிழின் இன்றும் மொழி பெயர்த்த வட நூல்களையே முதனூல்களாகக் காட்டும் ஆரிய ஏமாற்று. அவர்க்கு முன்னமே தொடங் கினதையே உணர்த்துவதாகும், இது வேண்டாதவட சொற்கள் தொல்காப்பியத்தில் வழங்குவதனாலும் உணரப்படும். அக்காலத்தில் இரண்டொரு சொற்களே ஆரியர் தமிழிற் புகுத்தமுடியும் என்பதையும் உய்த்துணர்க.

அகத்தியர்க்குமுன் தமிழ் சற்றுத் தளர்ந்திருந்தமை

சீகத்தியர் காலத்திற்கு முன், தமிழ் நூல்கள் சிறிது போது கற்கப்பட இருந்தமை, பின்வருங் காரணங்களால் விளங்கும்.

(1) அகத்தியர் முருகனைநோக்கித் தவங்கிடக்க, அத்தெய்வம் தோன்றி, அவர்க்குச் சில ஓலைச்சுவடிகாக் காட்டிற்று என்ற கதை.

(2) அகத்தியர் தமிழை உண்டாக்கினார் என்ற வழக்கு

{3) தொல்காப்பியப் பாயிரத்தில் 'முந்து நூல் கண்டு' என்று கூறியிருத்தல்.

அகத்தியர்க்கு முன்பே, சில ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர்வயப்பட்டே பாண்டியன் தமிழைச் சிறிதுபோது வளர்க்காதிருந்திருக்க வேண்டும். கடைக்கழத்திற்குப் பின், பாண்டியரிருந்தும் கழகம் நிறுவாமையும், வணங்காமுடிமாறன் பொய்யாமொழிப் புலவர் கழகம் நிறுவச் சொன்னமைக்கு இணங்காமையும் நோக்கியுணர்க.

தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில தொன்னூல்களைக் கண்ட மைபற்றியே, தொல்காப்பியர் என்று அவர் பெயர் பெறவும், முந்து நூல் கண்டு என்று பாயிரத்திற் குறிக்கவும் நேர்ந்ததென்க. இதை, பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் காலத்தில் கழக கால்கள் அறியப்படாதிருந்ததும், அவருக்குத் தெரியாத முது நூல்களை அவர் மாணாக்கரான டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் கண்டதுமான நிலைக்கு ஒப்பிடலாம்.

தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத முந்து நூல் கண்டமைபற்றியே, தம் நாலில் அகத்தியத்தைப்பற்றி எங்கேனும் குறிப்பிடவில்லையென்க. தொல்காப்பியம் அகத் தியத்திற்குப் பிந்தினதாதலின், அதிலும் சிறப்பாய் இலக்கண மெழுதப்பட்டது. அகத்தியம் வழக்கற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதை யறியாதார் பிற்காலத்தில், தொல் காப்பியர் அகத்தியத்தைச் சா'த்ததாக ஒரு கதை கட்டினர்.

தொல்காப்பியர் அகத்தியரைத் தம் ஆசிரியராகவேனும் ஓரிடத்தும் குறிக்காமையால், அவ்விருவர்க்குமிருந்த தொடர்பு, வேதநாயகம் பிள்ளைக்கும் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு மிருந்தது போன்றதோ என்று ஐயுறக் கிடக்கின்றது.

அகத்தியர் தமிழ்நூற்பயிற்சியைப் புதுப்பித்தமை

டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், எங்கனம் மடங் களிலும் தமிழ்ப்புலவர் வீடுகளினும் பயிலப்படாது குவிந்து கிடந்த பல தமிழ் நூல்களைத் திரட்டி அசட்டுத் தமிழுலகுக்குத் தந்தார்களோ, அங்ஙனமே அகத்தியரும் சிறிதுபோழ்து பயிலப்படாது கிடந்த தமிழ் நூல்களைத் திரட்டி யாராய்ந்து, தமிழ்நூற் கல்வியைப் புதுப்பித்தாரென்க.

இதனால், தலைக்கழகம் முடிந்த பின்னரே அசுத்தியர் தென்னாட்டுக்கு வந்தாரென்பதும், அக்கழகம் நின்றுபோன மைக்குச் சில ஆரியரே காரணமாயிருந்திருக்கலாமென்பதும், இங்ஙனம் தமிழைத் தளர்த்தோரும் தமிழை வளர்த்தோருமாக இருசாரார் தமிழ் நாட்டிற்கு வந்த ஆரியர் என்பதும் நுனித் தறியப்படும்.

மேனாட்டில் முதல் முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ (Plato, B.C 421) என்றும். அவர் பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லுமே கண்டுபிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிஸ்ற்றாட்டில் (Aristotle, B.C,384) இடைச் சொல்லும் எச்சமுங் கண்டுபிடித் தாரென்றும், மேனாட்டிலக்கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத் தக்கதும், டையோனிசியஸ் நிராக்ஸ் (Dionysius Thrax, B.C; 100) எழுதிய இலக்கணமேயென்றும் மாக்ஸ் முல்லர் கூறுகிறார்:

வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 7ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியிலிருந்தன. ஆயினும், அவை யாவும் வடமொழி முதற் பாவியமான வான்மீகியிராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் முதன் முதல் ஆரிய மறைக்கே எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. அவை ஆரியர் தமிழிலக்கணத்தை யறிந்தபின்னரே இயற்றப் பட்டவையென்பது பின்னர் விளக்கப்படும்.

இங்ஙனம், உலகத்திலேயே முதன் முதல் திருந்தியதும் இலக்கணமெழுதப்பெற்றதுமான தமிழ், இது போது ஒரு புன் மொழியினும் இழிவாயெண்ணப்படுவதற்குக் காரணம், இற்றைத் தமிழரின் அறியாமையும் மடிமையுமேயன்றி வேறன்று.

ஆரியர் தம் மறை நூல்களைத் தமிழர்க்கு நெடுங்காலம் மறைத்துவைத்தது. அவற்றின் தாழ்வு வெளியாகாமைப் பொருட்டேயன்றி, அவற்றின் தூய்மையைக் காத்தற்பொருட் டன்று. தமிழிலுள்ள கலை நூல்களை மொழி பெயர்த்தும், அவற்றை விரிவாக்கியும், வடமொழியிலக்கியத்தை மிக வளர்த்துக் கொண்ட பின்புங்கூட, அவர் தம் மறை நூல்களைத் தமிழர்க்கு நேரேயறிவிக்கவேயில்லை. மேனாட்டாரே முதன் முதல் அவற்றைக் கற்றுத் தம் மொழிகளிற் பெயர்த்துத் தமிழர்க்கறிவித்தனர். இப்போது உண்மை வெளியாகிவிட்டதே யென்று, ஆரியர் தம் முன்னோர் கி. மு. 2500 ஆண்டுகட்கு முன் இயற்றிய எளிய மறைமொழிகட்கு, இவ்விருபதாம் நூற்றாண் டிற்குரிய விழுமிய கருத்துக்களையெல்லாம் பொருத்தியுரைக் கின்றனர். இதன் பொருந்தாமை ஆராய்ச்சியில்லார்க்குப் புலனாகாதுபோயினும், அஃதுள்ளார்க்குப் போகாதென்க;

வடதிசை உயர்ந்ததும் தென்திசை தாழ்ந்ததும்

அகத்தியர் தெற்கே வந்த பின், நிலம் வடதிசையில் உயர்த்ததும் தென் திசையில் தாழ்த்ததும் முன்னர்க் கூறப்பட்டது. இங்கனமே, கல்வி, கைத் தொழில், வாணிகம், செல்வம், அலுவல், அதிகாரம் முதலிய பிறவற்றிலும் அவ்விரு திசைகளும் (ஆரியமும் திராவிடமும்) முறையே உயர்த்தும் தாழ்ந்தும் போயின வென்றறிந்துகொள்க.

மேற்கு கிழக்கு என்னும் திசைப் பெயர்கள் போன்றே, உத்தரம் (வடக்கு) தக்கணம் (தெற்கு) என்னும் திசைப் பெயர்களும் ஏற்ற விறக்கங்களையுணர்த்துவது பின்னர்க் கூறப்படும். கன்னடத்தில் இலக்கியம் தோன்றியது கி. பி. 8ஆம் நூற்றாண்டென்றும், தெலுங்கில் தோன்றியது கி. பி. 10-ஆம நூற்றாண்டென்றும், மலையாளத்தில் தோன்றியது கி. பி. 13ஆம் நூற்றொண்டென்றும் சொல்லப்படுகின்றது. தமிழிலக்கியம் தோன்றிய காலம் இன்ன நூற்றாண்டென்று வரையறுத்துக் கூற இயலாதலாறு, அத்துணைப் பழைமையாயிருத்தலின், திராவிட மொழிகளில் தமிழே — மொழியாயினும் நூலாயினும்—மிகத்தொன்மை வாய்ந்ததென்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை.

தமிழின் திருத்தம் :

திராவிட மொழிகட்குள் தமிழ் மிகத் திருந்தியதென்பது, அதன் சொல் வடிவங்களாலும் இலக்கணச் சிறப்பாலும் அறியப்படும்.

தமிழ்ச் சொல் வளம்

(1) தமிழின் வளம் :

தமிழின் சொல்வளத்தைத் தமிழரே இன்னும் சரியாய் உணர்ந்திலர்.

உண்மையுடைமை யென்னுங் குணம். நினைவு சொல் செயல் என்ற முக்கரணங்களையுத் தழுவியது என்பதை உணர்த்தற்கு, உண்மை (உள் +மை) வாய்மை (வாய்+மை), மெய்ம்மை (மெய்+மை) என மூன்று சொற்கள் தமிழிலுள்ளன.

மனத்தின் வெவ்வேறு வினையையுங் குறித்தற்கு வெவ்வேறு சொல் உளது.

கா : உள்(ளு). to will (உள்ளம் - will): உணர், to feel' to comprehend (உணர்வு - sentiment, உணர்ச்சி —feeling); நினை , to think. to remember (நினைவு--thought, நினைப்பு-memory); நினைவு கூர், to remember, to commemorate ; முன்(னு , to propose, to 'think, to intend (முன்னம்:—intention. indication) ; முன்னிடு, to propose, to set before, முன்னிட்டு having proposed, having set before, for the purpose of. ஒரு காரியத்தை முன்னிட்டு என்னும் வழக்கை நோக்குக. முன்னீடு = Proposal : உன்(னு), to imagine(உன்னம்— imagination); உன்னி , toguess (கன்னிப்பு— guessing); எண(னு). to deliberate. to coasider (எண்ணம்— consideration), கருது, to conceive, to think (கருத்து— concept, idea) அறி, to kaow (அறிவு— kaowledge); கொள், to opine (கோள்— opinion, கொள்கை— doctrine); மதி, to estinate, to regard (மதிப்பு— estination, approximation, respect, மதி—sense); தீர்மானி, to determine, to resolve; நய, to appreciate (நயப்பு—appreciation); தெருள், to perceive clearly : மருள், to be deluded ; ஆய், to test, to examinc, (ஆய்வு— test); ஆராய், to make a critical study, to investigate (ஆராய்ச்சி—research, critical study); சூழ், to Calmisel, to deliberate குழவை—council.

உளத்தொழில் பற்றி இன்னும் பல சொற்களுள, இவற் தொடு துணைவினை சேர்த்துக்கொள்ளின், இக்காலத்திய மனத்தொழில் நுட்ப வேறுபாடு பற்றிய கருத்துக்களை யெல்லாம் குறிக்கச் சொற்களை யமைத்துக் கொள்ளலாம்

மனைவிக்குக் கணவனோடுள்ள புலவியின் மூன்று நிலைகளையுங் குறித்தற்கு,முறையே கடல், புலவி, துனி என மூன்று சொற்கள் உள்ளன.

ஒரு வினைக்குத் தகுந்த சமையும், நல்ல கருத்தில் செவ்வி என்றும் தீய கருத்தில் அற்றம் என்றும் கூறப்படுகின்றது.

தமிழின் சொல்வளத்தை நன்றாயுணர்தற்கு நிலைத் தினைச் சொற்களை நோக்கவேண்டும்.

முதலாவது உள்ளீடுள்ள நிலைத்திணை யுயிரிகளை மர மென்றும், அஃதில்லா தவற்றைப் புல்லென்றும் இருவகையாக வத்தனர் முன்னோர்.

"புறக்கா ழனவே புல்லென மொழிப்" (மரபு 81.)
"அகக்கா முனவே மரமென மொழிப்"(மரபு. 21)

என்பன தொல்காப்பியம்.

நிலைத்திணை புறுப்புக்களில் ஒவ்வொன்றிற்கும் அதனதன் நுட்ப வேறுபாட்டிற்கேற்ப வெவ்வேறு பெயருளது.

இலையென்னும் ஒரேயுறுப்பிற்கு நால்வேறு சொற்களுன. மா வாழை முதலியவற்றினது இலை யென்றும், நெல் கேழ்வரகு முதலியவற்றினது தான் என்றும், கரும்பு, பெருஞ் சோளம் முதலியவற்றினது தோகையென்றும், தென்னை பனை முதலியவற்றினது ஓலையென்றுங் கூறப்படும்.

பூ முதலாவது தோன்றும்போது அரும்பு என்றும், போரும் பானபோது போது என்றும், மலர்ந்தபின் மலர் என்றும், விழுந்த பின் வீ என்றும், வாடிய பின் செம்மல் என்றும் கூறப்படும். பூ என்பது பொதுப்பெயர்.

அரும்பு என்னும் ஒரு நிலைக்கே, அதனதன் அளவுக்குத் தக்கபடி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என வெவ்வேறு சொற்களுள,

பூக்கள் கோட்டுப்பூ, கொடிப்பூ. நீர்ப்பூ. நிலப்பூ என நால்வகையாக வகுக்கப்படும் இவற்றுடன், செடிப்பூ என்ப தொன்றும் சேர்த்துக்கொள்ளலாம்.

காயின் வெவ்வேறு நிலைகள், பூம்பிஞ்சு, திருகு பிஞ்சு, இளம் பிஞ்சு, பிஞ்சு, அரைக்காய், காய். முக்காற்காய், கன்னற் காய் அல்லது பழக்காய், கடுக்காய் அல்லது கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப்படுகின்றன.

மாம்பிஞ்சு வடு என்றும், பலாப்பிஞ்சு மூசு என்றும் விதப்பித்துக் கூறப்படுகின்றன.

பருவத்திற் காய்ப்பது பருவக்காய் என்றும், பருவமல்லாத காலத்திற் காய்ப்பது வம்பக்காய் என்றும் கூறப்படுகின்றது.

முதிர்ந்தபின் கனிவில்லாதது காய் என்றும், கடினமானது நெற்று என்றும் கூறப்படுகின்றன:

செவ்வையாய்ப் பழுக்காத பழங்கள், வெவ்வேறு சாரணம் பற்றிச் சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை எனப் பலவகையாகக் கூறப்படுகின்றன. இவற்றுள், சொத்தை வகைசொண்டு, சொத்தை, சொட்டை எனப் பல பெயராற் கூறப்படுகின்றது. சொத்தையான மிளகு பழம் அல்லது வற்றல் சொண்டு என்னுஞ் சொல்லால் மட்டும் குறிக்கப் படுதல் காண்க.

பழத்தின் தோல் வகைகட்கு, அதனதன் வன்மை மென்மைக்குத் தக்கபடி, தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை எனப் பல பெயர்களுள.

விதை வகைக்கு, வித்து, விதை. மணி, முத்து, கொட்டை என வெவ்வேறு சொற்களுள,

இங்ஙனம், ஒவ்வோருறுப்பிற்கும் பற்பல சொற்களுள்ளன. அவற்றையெல்லாம் எனது செந்தமிழ்ச் சொல்லியலகராதியிற் கண்டு கொள்க.

நெல் வகை மட்டும் நூற்றுக்கணக்கா யுள்ளன. அவற்றுள் சம்பா என்னும் ஒருவகையே 70 திறமாயுள்ளது.

ஆங்கிலம் இக்காலத்தில் பல்வேறு மொழிகளினின்றும் ஏராளமான சொற்களைக் கடன்கொண்டிருப்பதால், எக்கருத் தையும் தெரிவிக்கவல்ல மொழியாகப் புகழப்படுகின்றது. ஆனால், இவ்விருபதாம் நூற்றாண்டிலும், ஆங்கிலத்திலும் அதுபோன்ற பிற பெருமொழிகளிலும் இல்லாத பல சொற்கள் கி. மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலிருந்தது மிக மிக வியக்கத்தக்கதே.

தமிழில் ஒரு பொருட்சொற்கள் பல பொருள்கட்குள்ளன. பிற திராவிட மொழிகள், பல பொருள்கட்குத் தமிழ்ச் சொற்களையே ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டிருக்கின்றன;

கா: இல் — இல்லு (தெலுங்கு). மனை — மன (கன்னடம்).

(2) தமிழ்த்தாய்மை :

திராவிடச் சொற்கட்கு மூலம் பெரும்பாலும் தமிழிலேயே உள்ளது.

கா : வென்ன (தொ) <வெண்ணெய் = வெள்+நெய். லேது (தெ.) < இலது.

செய் (கை) என்பது போன்ற இரண்டொரு சொற்கள், மூல வடிவில் தெலுங்கிலிருப்பது, பொதுவிதிக்குத் தவிர்ச்சியேயன்றி மாறாகாதென்க,

(3) தமிழ்த்தூய்மை :

தமிழைப் போலப் பிற திராவிட மொழிகளைப் பிற மொழிக்கலப்பின்றி யெழுத முடியாது.

தெலுங்கில் உடலுக்கு வழங்கும் ஒள்ளு, தேகம் என்னும் இருசொற்களில், ஒள்ளு என்பது உடல் என்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவு தேகம் என்பது வடசொல்,

(4) தமிழின் முன்மை :

பிற திராவிட மொழிச்சொற்கள் மூலத்திற்குத் தமிழைச் சார்ந்திருப்பதுபோல, தமிழ்ச் சொற்கள் மறித்தும் தம் மூலத் திற்குப் பிறமோழியைச் சார்த்திருப்பவையல்ல.

(5) தமிழல் திராவிட மொழிகளின் திசைவழக்குத்தன்மை.

தமிழல்லாத திராவிட மொழிகளெல்லாம், ஆரியர் இந்தியாவிற்கு வருமுன், தமிழின் கிளைவழக்குகளாகவேயிருந்தன.

தமிழிலுள்ள சொற்கள், இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வட சொல் என்று நால்வகையாகத் தொல்காப்பியத்தில் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், முதல் மூன்றும் தன் சொல் ; இறுதி யொன்றும் அயற்சொல்.

முதல் மூன்றனுள், முன்னிரண்டும் செந்தமிழ்ச்சொல் ; பின்னொன்றும் கொடுந்தமிழ்ச்சொல்.

செந்தமிழ்நாடு

செந்தமிழ் நிலத்தை “வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்” என்று இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலியோர் உரைத்தனர்.

செந்தமிழ் நாட்டின் சிறந்த பகுதி இன்றும் பாண்டி நாடேயாயிருத்தலின், இவ்வரை பொருந்தாது.

“செந்தமிழ் நாடாவது:—வையையாற்றின் வடக்கும், மருத யாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரி நிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:—

"வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி“

என்றனமயாலும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறிய வதனாற் குமரியின் தெற்காசிய நாடுகளை யொழித்து, வேங்கட மலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப என்றுரைத்தார் தெய்வச் சிலையார்,

இவ்வுரையே சிறந்ததாகும்; செத்தமிழ் நிலம்,

“சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப“

என்பது பிற்காலத்திற் கேற்றதாகும்:

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி“ (தொ. எச்: 4.)

என்பதால், செந்தமிழ் நாட்டெல்லை தாண்டிய பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ் நாடு என்பதும், அவற்றுள் விதப்பாய் வழங்கிய சொற்கள் திசைச்சொற்கள் என்பதும் பெறப்படும்.

கொடுந்தமிழ்நாடு

கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டையும்,

“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி யருவா வதன் வடக்கு — நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்“

என்னும் வெண்பாவிற் குறிக்கப்பட்டனவாகக் கூறுவர் பல உரையாசிரியர். இவையெல்லாம் முதற்காலத்தில் செந்தமிழ் நாட்டின் பகுதிகளாகக் கொள்ளப்பட்டமையின், இவ்வுரை பொருந்தாது. இந்த கேளுள் வேணாடு புனனாடு என்ற இரண்டிற்குப் பதிலாக, பொங்கர் நாடு ஒன் நாடு என்பவற்றைக் குறிப்பர் இளம் பூரணர், சேனாவரையர் முதலியார்: பொங்கர் நாட்டைப் பொதுங்கர் நாடென்பர் இளம்பூரனார். “தாயைத் தள்ளை என்ப குடநாட்டார், நாயை ஞமலி என்ப பூழி நாட்டார்” என்று திசைச்சொற்குக்காட்டுக்கூறினர் இளம்பூரணர். இங்குக் குறிக்கப்பட்ட இரு நாடுகளும் இப்போது மலையாள நாட்டின் பகுதிகளாக வுள்ளன.

நச்சினார்க்கினியர் பின் வருமாறு திசைச்சொற்குச் காட்டுக் கூறினர்.

“தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பனவற்றைப் பெற்றம் என்றும் , குடநாட்டார் தாயைத் தள்ளை என்றும், நாயை ஞெள்ளை என்றும்: குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்காநாட்டார் வஞ்சரைக்கையர் என்றும்; சீதநாட்டார் ஏடாவென்பதனை எலுவன் என்றும், தோழியை இருளை என்றும், தம்மாமியென்பதனைத் தந்துவை என்றும்; பூழி நாட்டார் நாயை ஞமலி என்றும், சிறு குளத்தைப் பாழி என்றும்; அருவாநாட்டார் செய்பைச் செறு என்றும், சிறு குளத்தைக் கேணி என்றும்; அருவாவட தலையார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப.

“இனிச் சிங்களம் அந்தோவென்பது, கருநடங் கரைய சிக்க குனிர என்பன; வடுகு செப்பென்பது : தெலுங்கு எருத்தைப் பாண்டிலென்பது : துளு மாமரத்தைக் கொக்கென்பது. ஒழித்தவற்றிற்கும் வந்துழிக் காண்க.“

இதனால் தெலுங்கு, கன்னடம் முதலியவை ஒருகாலத்தில் தமிழின் திசைவழக்குகளாகவே இருந்தனவென்றும், பின்பு கிளை வழக்குகளாகி இறுதியில் வடசொறகலப்பால் வேறு மொழிகளாய்ப் பிரிந்து விட்டனவென்றும் அறியட்படும்.

தெய்வச்சிலையாரும் இக்கருத்தை யொட்டியே,

“செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளோர் தத்தம் குறிப்பினையுடைய திசைச் சொல்லாகிய சொல் என்றவாறு.

“பன்னிரு நிலமாவன :—வையையாற்றின் ... நாடு, ஒளி நாடு, தென்பாண்டிநாடு. கருங்குட்ட நாடு. குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழிநாடு, மலாடு, அருவா தாடு, அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் (சேர்ந்த) நாடென்றமையால், பிறநாடாகல் வேண்டுமென்பார் எடுத்துக்காட்டுமாற:—“கன்னித் தென் கரைக் கடற் பழத் தீபம் கொல்லம் கூபகம் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபாலிரு புறச்சையத்துட னுறைபுகூறுந் தமிழ்திரி நிலங்களும், முடி யுடையவரிடு நிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறு நிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப்பிருவருவாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன என்றமையானும், "தமிழ் கூறும் நல்லுலகத்து................ பொருளும் நாடி" என நிறுத்துப் பின்னுஞ் "செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு" என ஓதியல தனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன :—

“குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சைலத்தின் மேற்குப்பட்ட கொங் கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கரு நடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.

“இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும், பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவையைந்தும் வேங்கடத்தின் தெற் காதலுங் கூடாமையுணர்க

“அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா என்றவாறு.

“குடாவடியுளியம் என்றவழி, குடாவடி என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்டபெயர், யான் தற்கரையவருது என்ற வழி கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்த வழிக் கண்டுகொள்க" என்று கூறியிருத்தல் காண்க.[43]

தெலுங்கு கன்னட முதலியவை பிற்காலத்தில் பிறமொழிகளாய்ப் பிரித்து போன பின்பு, அவற்றின் முன்னை நிலையை . யுணராது அவை வழங்கும் நாடுகளையும் அயன்மொழி நாடுகளையுஞ் சேர்த்துக் கொடுந்தமிழ் நாடாகக் கூறினர் பவணந்தியார்,

“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி“

என்று, தமிழொழிந்த பதினெண் நிலங்களை,

“சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங்
கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம் வங்கங்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே“

என்னுஞ் செய்யுளானறிக.

தெலுங்கு கன்னடம் முதலியவை தமிழினின்றும் பிரித்து போனபின்பே, பொங்கர் நாடு ஒளிநாடு முதலிய பழஞ்செந் தமிழ் நாட்டுப்பகுதிகள் கொடுந்தமிழ்நாடாகக் கூறப்பட்டன. இதனால், முன்பு கொடுந்தமிழ் நாடாயிருந்தனவ பல பின்பு பிறமொழி நாடாய் மாறிவிட்டன என்பதும், செந்தமிழ் நாடு வரவரத் தெற்கு நோக்கி ஒடுங்கிக்கொண்டே வருகின்ற தென்பதும், இதற்குக் காரணம் ஆரியக் கலப்பும் செந்தமிழ்த் தொடர்பின்மையும் என்பதும் அறியப்படும்.

செப்பு என்பது, சொல்லுதல் என்னும் பொருளில் மட்டும் திசைச் சொல்லாகும். மற்றப்படி அது செந்தமிழ்ச் சொல்லே என்பது,

"செப்பும் வினாவும் வழா அல் ஓம்பல்" (கிளவி. 13.)


"அஃதன் றென்ப வெண்பா யாப்பே"(செய், 78.)


என்பவற்றால் அறியப்படும்.

செப்பு என்பது, தெலுங்கில் சொல்லுதலையும், தமிழில் விடை சொல்லுதலையுங் குறித்தல் காண்க. அதோடு தமிழிலக்கணந் தோன்றிய தொன்முது காலத்திலேயே, செப்பு என்பது ஓர் இலக்கணக் குறியீடாயமைந்ததையும் நோக்குக, (செப்பல் வெண்பாவோசை.)

ஈ தா கொடு என்னும் மூன்று செந்தமிழ்ச் சொற்களில், ஈ என்பது எங்ஙனம் தன் நுண்பொருளை யிழந்து தெலுங்கில் வழங்குகின்றதோ, அங்ஙனமே செப்பு என்பதும் என்க.

தொல்காப்பியர் காலத்தில், தமிழில் வழங்கிய அயன் மொழிச்சொல் வடசொல் ஒன்றே. அதனாலேயே அது தன் பெயரால் வடசொல் எனப்பட்டது. அதன்படி இப்போது தமிழில் வழங்கும் அயன் மொழிச் சொற்களையெல்லாம். ஆங்கிலச் சொல், இந்துஸ்தானிச் சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே கூறல் வேண்டும். திராவிடமொழிச் சொற்கள் மட்டும் திசைச்சொல்லாகவே கூறப்படும்:

தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கின வடசொற்களும், அருகிய வழக்கேயன்றிப் பெருகிய வழக்கன்று. அவ்வருசிய வழக்கும் வேண்டாமையாய்த் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டதாகும்.

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே“

என்று தொல்காப்பியர் கூறியது, வடசொல் மேன்மேலுங் கலந்து தமிழ்த் தூய்மையைக் கெடுக்காதவாறு ஒருவாறு தடை செய்ததே யன்றி, இக்காலத்துச் சிலர் எண்ணுவது போல வடசொல்லையும் பிற சொல்லையும் தாராளமாய்ச் சேர்த்துக்கொள்ளுமாத விடை தந்ததன்று.

(8) திராவிடம் என்னுஞ் சொன் மூலம்

பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் ' அம்' ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின.

கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள (ம்) —த்ரமிட (ம்) — த்ரவிட (ம்) — த்ராவிட(ம்) என்றும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் எனறு திரிந்ததாகும்.

தமிழம் என்பது தமிள—தனிள—தவிட என்று பிராகிருதத்தில் திரித்த பின்பு, தமிள தவிட என்னு!' வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரித்ததாக, பண்டிதர் நிரையர்சன் (Dr. Crierson) கூறுவர்.[44]எங்கனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை.

கால் வெல் ஐயர் இதுபற்றித் தலைகீழாகக் கூறினர்: அவர் தவற்றைக் கிரையர்சனுங் குறித்துள்ளார்.

திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும், தமிழம் என்னும் பெயரே பொதுப்பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவும், தமிழம் என்னும் பொருளிலேயே, முதன் முதல் வழங்கிய தாகும்.தெலுங்கு தமிழினின்னும் பிரிந்துபோன பின்பு,முன்பு ஒன்றாயெண்ணப்பட்ட திராவிட மொழி இரண்டாய்க் கருதப்பட்டு,ஆந்திர திராவிட பாஷா என்னும் இணைப்பெயராற் குறிக்கப்பட்டது. அதன்பின்,கன்னடம்,மலையாளம் முதலிய மொழிகள் பிரித்து திராவிடம் பல்கிய பின், தமிழம் என்னும் பெயரின் மறுவடிவமான தமிழ் திராவிடம் என்னும் சொற்களுள்,முன்னது தமிழ்மொழிக்கும் பின்னது திராவிட மொழிகள் எல்லா வற்றுக்குமாக வரையறுக்கப்பட்டன.

இதுகாறும் கூறியவற்றால், தமிழே திராவிட மொழி கட்குள் மிகத் தொன்மையானதும் மிகத் திருத்தியதும், மிக வளமுள்ளதும், அதனால் மிகச் சிறந்த திராவிட எச்சமானதும் என்றறிந்து கொள்க[45]


  1. 2.புறம் 2
  2. 1. Pandyan Kingdom, p.121,122.
  3. 1..இறை பக்.7.
  4. 1.செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 15,பரல் 2,பக்.67,69.
  5. மலைபடுகடாம், 21
  6. 1.P.S.s>சாத்திரியார் தொல் எழுத்ததிகாரம்,முகவுரை பக்.1,2.
  7. இதுவும் முந்தின நூற்பாவும் நமச்சிவாய முதலியார் பதிப்பில் இரண்டாகவும்,கனகசபாபதி பிள்ளை பதிப்பில் ஒன்றாகவும் காட்டப்பட்டுள்ளன.
  8. 1.புறம். 201
  9. 1.Ancient India,pp.228,229.
  10. இறை (ப) பக்.8,9.
  11. தொல். புறத்.18
  12. தொல்.புறத். 20
  13. தொல் செ.1.பேராசிரியர் உரை.
  14. 1.தொ.செ.103.பேராசிரியர் உரை.
  15. மாறனலங்காரம்;வரலாறு,பக்.10.
  16. தொ.உவ.37.பேரா.உரை.
  17. 1."இலக்கணம்','இலக்கியம்'என்னும் சொற்களைப் பற்றித் தமிழ்ப் பொழிலில் யான் வரைந்துள்ள கட்டுரையைக் காண்க.
  18. 1 கருணாமிர்த சாகரம்.பக்.112-5.
  19. குறள். 279
  20. சாம வேதம்: முகவுரை,பக்.19
  21. தொல். அகத். 56
  22. தொ. கற்பு. 52
  23. தொ.செ.178.
  24. Vedic India,p.114.
  25. Vedic India,p.174.
  26. கருணாமிர்தசாகரம், பக்.644
  27. முதல் குலோத்துங்கச் சோழன்.பக்.84,85.
  28. சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக்.58
  29. சிலப். 28:133
  30. பருமைப்பெயர்— Augmentative
  31. The Hindu, March 10,1940,p.7
  32. சிலப்.பக்.413-415
  33. L S. L. p. 294.
  34. Hindu Manners Customs and Ceremonies.Ch.VI.
  35. சிலப்.பக்.379
  36. Vadic india, pp. 305, 306
  37. The Madras mail dated 2nd Dec. 1915
  38. கலங்கரை விளக்கம்-LightHouse.
  39. Vedic India,p.107.
  40. திருவாசகம்.திருவண்டப்பகுதி
  41. The Malay Archipelago, pp. 321-2.
  42. Dravidian Architecture. pp, 10-23.
  43. தொல். எச். நூ. 1, 4 உரை
  44. Linguistic Survey of India, Vol. IV. p. 298.
  45. Caldwell's Comparative Grammar, pp, 1, 4, 9, 80, 370.