ஒப்பியன் மொழிநூல்/திராவிடம் வடக்கு நோக்கித் திரிதல்

1. திராவிடம் வடக்கு நோக்கித் திரிதல்

(i) தமிழ் நாட்டில், பாண்டி நாட்டுப் பகுதியாகிய தென்பாகமே இன்றும் தமிழுக்குச் சிறந்ததாக வுளது.

பாண்டியனுக்குத் தமிழ் நாடன் என்ற பெயர் திவாகரத்திற் கூறப்பட்டுள்ளது.ஆகவே, பாண்டி நாடு தமிழ் நாடெனச் சிறப்பிக்கப்பட்டதாம்.

சோழநாட்டைத் தமிழ் நாடென்றும், தொண்டை நாட்டைச் 'சான்றோருடைத்து' என்றும் கூறியது பிற்காலமாகும். தமிழரசர்க்குள், முதலாவது ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டவன் பாண்டின். அதனாலேயே,இன்று தென்பாகத்தில் வடபாகத் திலிருப்பது போன்ற தமிழுணர்ச்சி யில்லை. ஆயினும், நாட்டுப்புறத்திலுள்ள குடியானவர் கனிடைப் பண்டைத் தமிழ்ச் சொற்களும் வழக்குகளும் பல இன்றும் அழியாதிருந்து, பாண்டி நாட்டின் பழம் பெருமையை ஒரு சிறிது காத்துக்கொண்டிருக்கின்றன.

2. தமிழ்நாட்டில் தென்பாகம் சிறந்ததென்பதற்குக் காரணங்கள்

(1) தமிழை வளர்த்த அல்லது காத்த மூன்று கழகங் களும் பாண்டிதாட்டிலிருந்தமை.

(2) வடபாகத்தில் வழங்காத பல சொற்களும் பழமொழிகளும் வழங்கல்,

(3) வடசொற்கள் தற்பவமாக வழங்கல்,

கா : சாக்ஷி-சாக்கி.

சுத்தம், மிராசுதார் முதலிய சொற்களுக்குத் துப்புரவு. பண்ணையார் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன,

(4) சொற்கள் உண்மை வடிவில் வழங்கல்: கா : இராமம்-(நாமம்):

(5) அயல் நாட்டினின்று வந்த பொருள்கட்குத் தமிழ்ப் பெயர் வழங்கல்.

கா : bicycle- மிதிவண்டி .

(6) வடபாகத்திலில்லாத பல பயிர்கள் செய்யப்படல்:

கா:காடைக்கண்ணி, சாமை, குதிரைவாலி.

(7) ஓவிய வுணர்ச்சி சிறந்திருத்தல்,

(8) சல்லிக்கட்டு, சிலம்பம் முதலிய மறவிளையாட் டுக்கள் சிறப்பாய் வழங்கல்,

(ii) திருச்சியெல்லையிற் சொற்கள் குறைதல்: கா: பரசு (sweep) என்ற சொல் வழங்காமை:

(iii) வடார்க்காட்டு அல்லது சென்னைத் தமிழ் கொச்சை மிகல்,

(iv) சென்னைக்கு வடக்கில் மொழி பெயர்தல்.

“வடவேங்கடம்” என்று, வேங்கடம் தமிழ்நாட்டின் வடவெல்லையாகத் தொல்காப்பியப் பாயிரத்திற் கூறப்பட்டுள்ளது. ஆயினும். “தமிழ் கூறும் நல்லுலகத்து“ என்றதனால், அதைச் செந்தமிழ் நாட்டின் வடவெல்லையாகக் கொள்வதே பொருத்தமாகும்.

வேங்கடம் இப்போது தெலுங்க நாட்டிற்கு உட்பட்டு விட்டது.

தெலுங்கு மிகுதியும் ஆரியத்தன்மையடைந்து, ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளது.

தெலுங்கில் எழுத்தொலிகள் வடமொழியிற் போல் வல்லோசை பெறுகின்றன ; வகரம் பகரமாகவும் ழகரம் டகரமாகவும் மாறுகின்றன, வடசொற்கள் மிகத் தாராளமாய் வழங்குகின்றன. ஒரு செய்யுள் பெரும்பாலும் வடசொற்களாயிருந்தால், மிகவுயர்ந்த தெலுங்காக மதிக்கப்படுகின்றது.

தெலுங்கு வடிவாகப் பல தென் சொற்கள் மேலையாரிய மொழிகளிலும் வழங்குகின்றன.

கா : தமிழ் தெலுங்கு ஆரியம்
விளி பிலு(ச்)சு I. pello
அடுகு E. appeal,repeal etc.
அள் (காது) அடுகு L. audio
வரை விராசு E. write, A: S. writan
சால் சாலு L. satis, E: satisfy;
வண்டி, பண்டி பண்டி E. bandu
வெள்ளூ Ger. wenden,
A. S. wendan, E. wend to go:

கேள் என்னும் சொல், வினவு என்னும் பொருளில் தமிழில் வழங்குவதுபோல, அடுகு என்னும் சொல் தெலுங்கில் வழங்குகின்றதென்க, என்னும் Write சொல்லில் (வ்) பண்டு ஒலித்தது.

(v) தெலுங்கிற்கு வடக்கில் ஆரியமொழி வழங்கல்.

பண்டைக்காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்தி என்னும் ஐந்தையும், ஆரியரே பஞ்சத்ராவிடீ என்று அழைத்தனர். கால்டுவெல் ஐயர் இத்தொகுப்பை ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், இத்தொகுப்பு சரியானதேயென்பது, இம்மடலத்தின் 2ஆம் பாகத்தில் விளக்கப்படும்.

(vi) வட இத்தியாவில் திராவிட மறைவு.

கோண்டி (Gondi), பத்ரீ { Bhatri), மால்ற்றோ (Malto). போய் (Bhoi) முதலிய திராவிட மொழிகள், மெள்ள மெள்ள ஆரிய மயமாவதை அல்லது மறைந்து போவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906 ஆம் ஆண்டே தமது 'இந்திய மொழிக் கணக்கீடு' என்னும் நூலிற் குறித்துள்ளார்.

(vii) வட இந்திய மொழிகளில் திராவிட அடையாளம்.

ஆரியர் வருமுன் வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள், அவர் வந்த பின் ஆரியத்தொடு கலந்துபோனமையால், ஆரியத்திற்கு மாறான பலதிராவிட அமைதிகள் இன்றும் வட நாட்டு மொழிகளிலுள்ளன. அவையாவன:—

(1) பிரிக்கப்படும் ஈற்றுருபால் வேற்றுமையுணர்த்தல்.
(2) ஈரெண்ணிற்கும் வேற்றுமையுரு பொன்றாயிருத்தல்.
(3) முன்னிலையை உளப்படுத்துவதும் உளப்படுத்தாததுமான இரு தன்மைப்பன்மைப் பெயர்கள்.
(4) முன்னொட்டுக்குப் பதிலாகப் பின்னொட்டு வழங்கல்.
(5) வினையெச்சத்தாற் காலம் அமைதல்.
(6) தழுவுஞ் சொற்றொடர் தழுவப்படுஞ் சொற்றொடர்க்கு முன்னிற்றல்.
(7) தழுவுஞ்சொல் தழுவப்படுஞ்சொற்கு முன்னிற்றல்.[1]

இந்தியில் பல தமிழ்ச்சொற்களும் இலக்கண அமைதிகளும் வழக்குகளும் வழங்குகின்றன.

சொற்கள் :
தமிழ் இந்தி பொருள்
ஆம் ஹாம் yes
இத்தனை இத்னா இவ்வளவு
உத்தனை உத்னா உவ்வளவு
உம்பர் உப்பர் மேலே
உழுந்து உடத் (ஒரு பயறு)
ஓரம் ஓர் பக்கம்
கடு காடா கடினமான
கிழான் கிஸான் உழவன்
சவை சபா மெல்
செவ்வை சாப்வ் துப்புரவு
தடி சடீ கம்பு
தண் தண்டா குளிர்ந்த
தண்டம் தண்ட தண்டனை
தாடி டாடி தாடி மயிர்
நேரம் தேர் வேளை
படு பட் விழு
படு படா பெரிய
புகல் போல் சொல்
பூ பூல் மலர்
மாமா மாமா மாமன்
மாமி மாமீ அத்தை
முத்து மோத்தீ pearl
மேல் மே (7-ம்வே. உருபு.)
முட்டி முட்டி மொழிப் பொருத்து
மூக்கு நாக்கு நாசி
மோட்டு மோட்டா பருமனான
வெண்டை பிண்டி வெண்டைக்காய்

இலக்கண அமைதி :

(1) 4 ஆம் வேற்றுமையுருபு தமிழில் 'கு' என்றும் இந்தியில் 'கோ' என்றுமிருக்கின்றது.

(2) இரு மொழிகளிலும் வேற்றுமையடியுடன் உருபு சேர்ந்து மூவிடப்பெயர்கள் வேற்றுமைப்படுகின்றன.

கா : என்மேல், முஜ்மே.

(3) தமிழில் 'இய' என்பதும், இந்தியில் (முன்னிலையில்) 'இயே' என்பதும் வியங்கோள் ஈறாகவுள்ளன.

(4) மாறே[2] (மாறு+ஏ) என்பது இருமொழியிலும் ஏதுப் பொருளிடைச் சொல்லா யுள்ளது.

இந்தியில் ‘கே’ என்னும் உருபோடு சேர்ந்தே வரும்.

{5) இந்தியில், செயப்படுபொருள் குன்றாவினைப் பகுதிகள் ஆவ் (வா ஜாவ் போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி, இறத்தகால வினையெச்சப் பொருள்படும். கா : ஸுன் ஜான் = கேட்டுவிட்டுப்போ.

இங்ஙனம் தமிழிலுமுண்டு, ஆனால், வினைப்பகுதிகள் இறந்தகால வினையெச்சப்பொருள்படாமல் நிகழ்கால வினை யெச்சப்பொருள்படும்.

கா : கேள்வா=கேட்கவா ; கேள்போ = கேட்கப்போ.

(6) இந்தியில் இறந்தகால வினையெச்சங்களும் முற்றுக்களும் ஆண்பாலொருமையில் ஆகார வீறாயுள்ளன.

கா : ஆயா = வந்தான், வந்து.

போலா = சொன்னான், சொல்லி,

இவை ‘செய்யா’ என்னும் வாய்பாடு, வினையெச்சமே பண்டைத் தமிழிலும் வினை முற்றாய் வழங்கிற்று. பாலுணர்த்தும் ஈறு பிற்காலத்திற் சேர்க்கப்பட்டது.

வழக்கு : ‘பல்லைப் பிடுங்கிவிடு’ என்னும் வழக்கு செருக்கடக்கு என்னும் பொருளில், ‘தாந்த் கட்டேகாதோ’ என்றும், ‘உயிரைக் கையிலேந்திக் கொண்டு நடு’ என்பது 'ஜான்லேக்கர் பாக்' என்றும் இந்தியில் வழங்குதல் காண்க.

(viii) இந்தியாவிற்கு மேற்கே பெலுச்சிஸ்தான மலை நாட்டில் பிராஹுயீ என்னும் திராவிடச் சிறுபுன்மொழி வழங்கல்.

(ix) பெலுச்சிஸ்தானத்திற்கப்பால் திராவிடமொழி வழங்காமையும், திராவிடச்சொற்களே வழங்குதலும்.

ஒருமொழி தன்னாட்டிற் செவ்வையாயிருந்து, அயல்நாடு செல்லச்செல்லத் திரிவது இயல்பு. ஆங்கிலம் இங்கிலாந்தில் செவ்வையாகவும், இந்தியாவில் திரிந்தும், அப்பிரிக்கா சீனம் முதலிய இடங்களிற் சிதைந்தும் வழங்குகின்றது. இங்ஙனமே தமிழ் அல்லது திராவிட மொழி தென்னாட்டிற் செவ்வை யாயும் வடக்கே செல்லச்செல்லத் திரித்தும் வழங்குவதினால், திராவிடரின் தொல்லகம் குமரிநாடேயென்பது துணியப்படும்.


  1. *L. S.I. Vol. IV. pp. 446, 472-4.
    Caldweli's Comparative Glammar : introduction p. 59
  2. புறம் 4, 20, 22, 92—3, 271, 380; நற்.231.