ஒப்பியன் மொழிநூல்/பண்டைத்தமிழர் மலையாள நாட்டில் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை

4. பண்டைத் தமிழர் மலையாள நாட்டிற் கிழக்கு
வழியாய்ப் புகுந்தமை

மலையாள நாடு பண்டை முத்தமிழ் நாடுகளுள் ஒன்றான சேர நாடாகும். கி. பி. 2ஆம் நூற்றாண்டில், இந்தியா முழுவதையும் தன்னடிப்படுத்திய சேரன் செங்குட்டுவன்கீழ், அது தலை சிறந்த தமிழ் நாடயிருந்தது. ஆனால், இன்றோ முற்றிலும் ஆரியமயமாய்க் கிடக்கின்றது. இதுபோதுள்ள தமிழ்ப் பாவியங்களுள் சிறந்த சிலப்பதிகாரம் மலையாள நாட்டிற் பிறந்த தென்பதை நினைக்கும்போது, சரித்திரம் அறிந்தவர்க்கும் ஒரு மருட்கை தோன்றாமற்போகாது: கி.பி. 9 ஆம் நூற்றாண்டுவரை அது தமிழ் நாடாகவே யிருந்தமை, சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி என்னும் இரு நாயன்மார் சரித்திரத்தாலும் அறியக்கிடக்கின்றது அதற்குப் பின்னும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாடாகவே யிருந்திருக்கவேண்டும். 12ஆம் நாற்றாண்டிற்குப்பின் தான் மலையாளம் என்னும் மொழி முளைக்கத் தொடங்கிற்று. அது தன் முற்பருவத்தில் தமிழையே தழுவியிருந்தது. பிற்பருவத்தில்தான் ஆரியத்தைத் தழுவிற்று. துஞ்சத்து எழுத்தச்சன் (17ஆம் நூற்றாண்டு) ஆரியவெழுத்தையமைத்தும், வடசொற்களைப் புகுத்தியும், சேரநாட்டுக் கொடுந்தமிழாயிருந்ததை முற்றும் ஆரிய மயமாக்கிவிட்டார். மலையாளம் இன்றும் ஐந்தாறாட்டைப பருவத்ததே. ஆயினும் தமிழறியாமையாலும், ஆரியப் பழைமையை நம்பியும் தங்கள் தாட்டைப் பரசுராம க்ஷேத்ரம். என்றும், மிகப் பழைமையானதென்றும், தமிழ்நாடன்றென்றும் சொல்லிக்கொள்கின்றனர் மலையாளத்தார். இது அவர்கட்கு இழிவேயன்றி உயர்வன்று. ஆயினும் இது அவர்கட்குத் தோன்றுவதில்லை.

மலையாள மொழித்தோற்ற வளர்ச்சிகளை S. ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய ஆராய்ச்சி (Studies in Tamil Literature) என்னும் நூலிற் கண்டுகொள்க. அவை இம் மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விளக்கப்படும்.

மலையாளம் என்னும் மொழிபோன்றே, அதன் பெயரும் பிற்காலத்தது.

மலை+ஆளி= மலையாளி: ஆளி = ஆள், ஓ. நோ. கூட்டாளி, வங்காளி, பங்காளி, தொழிலாளி. மலையாளி = மலை நாட்டான்.

மலையாளியின் மொழி மலையாளம். மலையாளி+அம்= மலையாளம் , ஒ. நோ, வங்காளி--வங்காளம்.

மலையாள நாட்டின் வடபாகம் மலபார் (Malabar) என்று அழைக்கப்படுகிறது. முதன்முதல் மலையாள நாட்டில் வந்திறங்கின மேலை விடையூமியர், மலையாள நாட்டு மொழிக்கு மலபார் என்று பெயரிட்டு, தமிழையும் அப்பெயரால் அழைத்தனர். அன்றவ்விரண்டிற்கும் வேறுபாடு சிறிதேயாதலின்,

மலை வாரம்—மலவாரம்—மலவார்—மலபார்.

வாரம் = சாய்வு அல்லது சரிவு, ஒ. நோ, அடிவாரம் தாழ்வாரம். வாரம் இடப்பெயராதலை நக்கவாரம் என்பதாற் காண்க. நக்கவாரம்-Nicobar. மலைவாரம்--Malabar.

இப்போதுள்ள மலையாள மக்களின் முன்னோரான தமிழர், மலையாள நாட்டிற் புகுந்தது கிழக்கு வழியாயென்பதற்குச் சான்றுகள் :—

(1) பாண்டியனின் தம்பிமாரான சோழ சேரர் தெற்கினின்றும் வடக்கே வந்து, சோழ சேர நாடுகளை நிறுவினர் என்னும் வழக்கு.

சேரநாடு முதலாவது குடமலைக்குக் கிழக்கில் நிறுவப்பட்டுத் திருச்சிராப்பள்ளிக் கோட்டகையைச் சேர்ந்த கரூர் அதன் தலைநகரானதாகவும், பின்பு சேரன் குட மலைக்கு மேற்கிலுள்ள பகுதியைக் கைப்பற்றி நீர் வாணிகத்திற்கும் சோழ பாண்டியரினின்றும் பாதுகாப்பிற்கும் மேல்கரையில் வஞ்சி நகரையமைத்துக் கரூர் என்றும் அதற்குப் பெயரிட்டதாகவும், பிற்காலத்தில் கீழ்ப்பகுதியைக் காத்துக் கொள்ள முடியாமை யால், அது கொங்கு நாடென்று தனி நாடாய்ப் பிரிந்தபின் பழங் கரூர் கைவிடப்பட்டதாகவுந் தெரிகின்றது.

வினையெச்சமே பண்டைத் தமிழில் வினைமுற்றாக வழங்கிற்று:

மலையாளத்தில் இன்றும் அங்ஙனமே. இது சேரன் மேல்பாகத்தைக் கைப்பற்று முன்னிருந்த பழந்தமிழ் நிலையைக் குறிக்கும். சோர் செந்தமிழை வளர்த்தனர்; ஆயினும் அது எழுத்து வழக்கிலேயே சிறப்பாயிருந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் கற்றோரிடம் வினைமுற்று வடிவும் மற்றோரிடம் வினையெச்ச வடிவுமாக இருவகை வடிவுகளும் வழங்கியிருக்கவேண்டும். பிற்காலத்தில் செந்தமிழ்ச் சேர மரபின்மையாலும், தமிழொடு தொடர்பின்மையாலும், ஆரிய முயற்சியாலும், பண்படுத்தப்பட்ட செந்தமிழ் வழக்கற்று, பழைய வினையெச்ச வடிவமே வழங்கிவருகின்றதென்க: ஆயினும், 'வான்' 'பான்' ஈற்று வினையெச்சங்கள் இன்றும் வழங்குவதால், சேர நாட்டிற் செந்தமிழ் வழங்கியதை யுணரலாம்.

கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள், குமரி நாட்டிலேயே அல்லது சேர ஆட்சியேற்பட்டபின் மலையாள நாட்டார்க்குள் தோன்றியிருக்க வேண்டும்.

(2) குமரி நாட்டில் ஒரு பகுதியின் பெயரான கொல்லம் என்பது, மலையாள நாட்டில் ஓர் இடத்திற்கிடப்பட்டமை.

(3) திரிந, மகிழ்நன், பழுதி முதலிய மெலித்தல் வடிவங்கள் செந்தமிழில் வழங்குதல்.

இவை குமரி நாட்டிலேயே தோன்றின குமரி மலை நாட்டு வழக்காகும்.

(4) உரி (அரைப்படி), துவாத்து (தோர்த்து) முதலிய திருநெல்வேலிச் சொற்கள் மலையாள நாடு நெடுக வழங்கல்.

(5) பாணர் என்னும் பழந்தமிழ்க்குலம் மலையாள நாட்டிலிருத்தல்.

(6) மலையாள நாட்டில் மாதங்கட்கு ஓரைப் பெயர் வழங்கல்

இதுவே பண்டைத் தமிழ்முறை; தமிழ் நாட்டில் இது மாற்றப்பட்டது. திராவிடத்திற்குச் சிறந்த தமிழ் நாட்டையே முதன் முதல் ஆரிய மயமாக்கினர். இது ஒரு வலக்காரம்: தமிழ் நாடு ஆரிய மயமாயின், பிற திராவிட நாடுகள் தாமேயாகுமென்பது ஆரியர் கருத்து.

(7) பண்டைத் தமிழ் அவிநயங்கள் கதகளி என்னும் பெயரால் மலையாள நாட்டில் வழங்குதல்,

(8) தம்பிராட்டி, சிறுக்கள் (சக்கன்) முதலிய செந்தமிழ்ச் சொற்கள் மலையாள நாட்டில் வழங்கல்.

(9) மருமக்கட்டாயம் போன்ற ஒரு வழக்கு கருநீசியத் தீவுகளில் வழங்கல்.[1]

ஒரு விதப்பான மன்பதைய (Social) வழக்கு தென் கண்டத்திற்கு வடகிழக்கிலுள்ள தீவுகளிலும் மலையாள நாட்டிலும் வழங்குவதாயிருந்தால், இவ்விரு நிலப்பகுதிகளும் ஒரு காலத்தில் ஒன்றா யிணைக்கப்பட்டிருந்திருத்தல் வேண்டுமென்பதைத் தவிர வேறென்ன அறியக் கூடும்? குமரி நாட்டிலும் பெண் வழிச்செல்லமரபு வழங்கியிருக்கவேண்டும், தாய் + அம் = தாயம், தாயினின்றும் பெறும் உரிமை தாயம்.

பட்டம் விடுதல் சேவற்போர் முதலிய பொழுது போக்குக்கள், தென்னாட்டிலும் கீழ்நாடுகளிலும் இன்றும் ஒரேபடியாயிருக்கின்றன;

கீழ் நாடுகளிலுள்ள வீடுகள் கோயில்கள் முதலிய கட்டடங்களின் அமைப்பும், வேலைப்பாடும், பெரும்பாலும் தமிழ்நாட்டில் அல்லது மலையாள நாட்டில் உள்ளவை போன்றே யிருக்கின்றன

கடாரம் ஜப்பான் முதலிய நாடுகளில், எரிமலை நில நடுக்கம் வெள்ளம் முதலியன பற்றி, அடிக்கடி வீடுகளும் ஊர்களும் இடம் பெயர்த்து கொண்டேயிருக்கின்றன. குமரி நாட்டிலும் இவ்வியல்பு இருந்ததாகத் தெரிகின்றது. ஊர் நகர் என்னும் பெயர்கள் முதலாவது வீட்டின் பெயர்களாயிருத்தமையும், பெயர்வுப் பொருளுடையனவாயிருத்தலையும் பிறை வட்டமான எரிமலைத் தொடரிருத்திருத்தல்வேண்டும். அதுவே சக்கரவாள கிரியென்றும், அதற்கப்பாற்பட்ட கடலே பெரும்புறக்கடலென்றுங் கூறப்பட்டிருத்தல் வேண்டும். நெட்டிடையிட்டு நிகழ்ந்த பல எரிமலைக்கொதிப்பும் வெள்ளமும்பற்றியே, ஊவழியித்தியில் நெருப்பால் அழிவு நேருமென்று மலைவாணராகிய சிவனை வணங்குவோரும், நீரால் அழிவு நேருமென்று கடல்வாணராகப் பிற்காலத்திற் கூறப்பட்ட திருமாலை வணங்குவோரும், முறையே கொண்டிருத்தல் வேண்டும்.


  1. Peeps at Many Lands - The South Seas, pp. 64—66.