ஔவையார் தனிப்பாடல்கள்/ஆயர் குலம்!

88. ஆயர் குலம்!

யாரோ சிலர் ஆயர் குலத்தினைக் குறித்துச் சற்று இழிவாகப் பேசியிருக்கிறார்கள் போலும்! அவர்களும் வைணவர்கள்தாம். எனினும், தாம் உயர்வானவர் என்ற செருக்கு அவர்களை அப்படிப் பேசச் செய்திருக்கிறது.

அவர்கள் பேச்சினைக் கேட்டார் ஔவையார். அவர்கட்கு அறிவு தெளிவிக்கக் கருதியவராக இந்தச் செய்யுளைச் சொன்னார்.

மெய்வந்த கோவலர் தங்குலத் தாரை வெறுங்குலத்தோர்
கைவந்த நஞ்சொலின் வாய்வெந் திடுமந்தக் காரணங்கேள்
ஐவந்த வேள்வியில் ஐவர்க்குத் தெய்வமும் ஆகிநின்ற
தெய்வம் பிறந்த குலங்காணும் நந்தன் திருக்குலமே!

"உண்மை நெறியிலே வந்த கோவலர்களுடைய குலத்தினரை, அந்தச் சிறப்பில்லாத சில குலத்தவர்கள் வாய்க்கு வந்தபடி பழிசொன்னால், அப்படிச் சொன்னவர்களின் வாய்கள் வெந்துபோம். காரணத்தைக் கேட்பாயாக, அவர்கள் நந்த கோபனின் குலத்தினர்கள். சிறப்பமைந்த இராஜசூய வேள்வியிலே, பஞ்சபாண்டவர்க்குத் தெய்வமாக விளங்குகின்ற கண்ணபிரான் பிறந்த குலமாகும் அந்தக் குலம்" என்பது பொருள்.