ஔவையார் தனிப்பாடல்கள்/தமிழ் உடையது!

87. தமிழ் உடையது!

ரு சமயம் பாண்டியனைக் கண்டார் ஔவையார். 'அம்பர்' என்னுமிடத்திலிருந்து, 'சித்தன் வாழ்வு' என்னும் இடத்தையும் பார்த்தவராக அவர் சென்றிருந்தார். அப்போது அம்பர், சித்தன் வாழ்வு, பாண்டிய நாடு ஆகிய மூன்றையும் சிறப்பித்து ஔவையார் பாடிய பாடல் இதுவாகும்.

நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன்வாழ்வு
இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்.

"நன்மையுடைய அம்பர் என்னுமூர் நலமாக வாழும் குடிகளை உடையதாம்; சித்தன்வாழ்வு என்னும் ஊரோ வீடு தோறும் அந்தணர்களால் காக்கப்படும் முத் தீயினை உடைய தாகும். நன்மை தரும் ஒலியின்பம் என்பது பாட்டிடத் தேயே உளதாகும்; சந்திரன் வழியிலே வந்த பாண்டியனே! நின்னுடைய நாடுதான் நல்ல தமிழ் வளத்தினை உடையதாகும்" என்பது பொருள்.

அம்பர் - அம்பர் மாகாளம் என வழங்கும் தலம். சித்தன் வாழ்வு - தென்பழனி.