ஔவையார் தனிப்பாடல்கள்/உழவே இனிது!
104. உழவே இனிது!
உழவுத்தொழில் மிகவும் உயர்ந்தது. ஏனெனில் அதுவே உலகின் பசிபோக்கி உயிர்களைக் காத்து நிற்கும் அறத்தொழில் ஆகும். எனினும், அத் தொழிலினிடத்தேயும் பற்பல தொல்லைகள் இருந்தன. அவற்றால் மனம் வெதும்பிய சிலர். இதுவும் ஒரு தொழிலா? என்று அதனை வெறுத்துப் பேசுவதற்கும் முற்பட்டனர்.
ஔவையார் உழவின் சிறப்பை உணர்ந்தவர். எனினும், உழவுத்தொழில் செய்துவந்த மக்கள் பட்டுவந்த தொல்லைகளையும் அவர் கண்டார். அதனால் அத் தொழில் இனிதாயிருக்க வேண்டுமானால், அமைய வேண்டிய நல்ல சூழ்நிலைகளைக் குறித்தும் சொன்னார். அந்தச் செய்யுள் இதுவாகும்.
ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரறுகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குட்
சென்று வரவணித்தாய்ச் செல்வாரும் சொற்கேட்டால்
என்றும் உழவே இனிது.
“இரண்டு ஏர்களாவது உளதாக வேண்டும். வீட்டின் கண்ணேயே வித்து இருக்க வேண்டும்! அருகேயே நீர்வளம் உடைய நிலமாக இருத்தல் வேண்டும். சென்று வருவதற்கு ஊருக்குப் பக்கமான இடத்தேயும் விளங்க வேண்டும். இத்துணையும் அமைந்து, தொழில் செய்யும் பண்ணை யாட்களும் ஏவிய சொற்களின்படியே நடந்து வந்தனரானால், என்றும் உழவே இனிய தொழிலாகும்” என்பது பொருள்.