ஔவையார் தனிப்பாடல்கள்/பொய்ம் மகள்!

103. பொய்ம் மகள்!

பொய் சொல்லாத ஒரு வாய்மை நிலை உலகத்தில் என்றுமே இருந்ததில்லை. எனினும் பொய்யைக் கலையாகப்பேணி அதற்கு உண்மை வேடத்தையும் நன்றாகப் புனைந்து உலகினை ஏய்க்கின்றவர்களும் பலர் உள்ளனர். இவர்களின் பொய்ம்மைத் திருவிளையாடல்கள் ஔவையாரின் உள்ளத்தை வாட்டவே, அவர் பாடிய செய்யுள் இது.

ஆயத் துறைப்பிறந்து அந்தணர் பால்குடித்து ஐயிருநாள்
மாயக்கண் வேசை யிடத்தே வளர்ந்துவண்
ணானொருநாள்
ஏய புலவரிடத் தெட்டுநாள் செட்டி ஏன் என்றபின்
போயக்க சாலை புகுந்தனள் காண்அந்தப் பொய்ம்மகளே.

“பொய்ம் மகள் ஆயத்துறையிலே பிறந்தாள். அந்தணரின் பால் குடித்து வளர்ந்தாள். பத்துநாள் மாயஞ்செய்யும் கண்களையுடைய வேசையிடத்தே சென்றிருந்து மேலும் வளர்ந்தாள். வண்ணானிடம் ஒருநாள் தங்கினாள். புலவர்களிடத்தே எட்டு நாட்கள் சென்றிருந்தாள். செட்டிகளிடம் அவர்கள் இனி நமக்கு இவள் துணை ஏன் எனக் கேட்கும்வரை இருந்தாள். அதன்பின், அக்கசாலையிற் சென்று புகுந்து கொண்டாள்" என்பது பொருள்.

ஆயத்துறை - வரித்துறை. அக்கசாலை - நாணயச்சாலை. இவர்கள் எல்லாம் பொய்யினை வளர்த்துப் பெருமை கொண்டவர்கள் என்பது கருத்தாகும்.