ஔவையார் தனிப்பாடல்கள்/என்றும் கிழியாது!

32. என்றும் கிழியாது!

ரு சமயம், ஔவையார் பல நல்ல செய்திகளைப் பற்றி விளங்க உரைத்துக் கொண்டிருந்தார். அவையினர் அனைவரும் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஒரு துணிவணிகன் அந்த அவைக்கு வந்தான். மிக அழகிய நூற்சேலைகளை அவன் கொண்டு வந்திருந்தான். எல்லாம் உயர்ந்த வேலைப்பாடு உடையவை. அவற்றின் கவர்ச்சியில் மன்னனும் மயங்கினான்.

சோழனுக்குத் தன் மனைவியான பாண்டியகுமாரிமீது அளவற்ற பேரன்பு உண்டு. அவளுக்கு எது பொருந்தும் என்ற நினைவிலே ஈடுபட்டு, அவன் ஔவையாரின் சொற்களைக் கவனியாமலும் இருந்தான்.

ஔவையார் அவன் நிலையைக் கண்டார். ஒருபக்கம் தன் பாடலையும் மறந்துவிடும் அளவிற்கு அவன்பால் அமைந்திருந்த மனைவியின் மீதுள்ள அன்பிற்கு உவந்தார். எனினும், அவனுடைய அந்தச் செயலை ஒட்டியதாக ஓர் உண்மையினை உரைக்கவும் விரும்பினார்.

“சோழனே! நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறுகின்ற நூற்சேலையே ஆனாலும், அது நான்கு மாத காலத்திற்குள் நைந்து கிழிந்து போய்விடவே செய்யும். என் பாட்டு அங்ஙனம் நைந்து கிழிந்துபோகின்ற தன்மை உடையதன்று, என்றும் கிழியாத ஏற்றம் உடையது” என்றார்.

சோழன் தன்னுடைய செயலை உணர்ந்து நாணி நின்றான். அவன் நாணத்திலே அவனுடைய அழியாத தமிழார்வம் ஒளி செய்தது.

நூற்றுப்பத் தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் - மாற்றலரைப்
பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென் பாட்டு!

“பகைவர்களை அவர் இறந்து போகும்படியாகப் போர் செய்வதிலே வல்லமை உடைய பரந்த கைகளைக் கொண்ட களங்கமில்லாத மன்னவனே!

நூற்சீலையானது நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறுமானம் உடையதேயானாலும், நான்கு மாத காலத்தில் அதன் அழகுக்கோப்பு நைந்து போய்விடும். ஆனால், என் பாட்டு என்றும் அழியாதது. இதனை அறிவாயாக” என்பது பொருள்.

தமிழ் மணக்கும் அந்தத் திருவாயினின்றும் எழுந்த உறுதி வீண் போகவில்லை. ஔவையார் பாடல் இன்றும் தன் அழகிற் குறையவில்லை. காலம் அதனைக் கட்டழிக்கவில்லை. ஏற்றமுடன் அது இன்றும் நிலவுகிறது; என்றும் நிலவும்.