ஔவையார் தனிப்பாடல்கள்/மூவகைமனிதர்!

31. மூவகை மனிதர்!

ருவருக்கு ஒருவர் நன்மை செய்ய வேண்டும். இதுவே மனிதப் பண்பு. பலர்பால் இது அமைவதில்லை. இப்படிப்பட்ட மனிதர்களையும் மூவகையினராகப் பிரித்து காட்டுகின்றார் ஔவையார்.

ஒரு சாரார் உயர்ந்தவர்கள். அவர்களிடம் வறுமையுற்றோர், ‘எங்கட்கு இப்படி உதவுங்கள்’ என்று வாயைத் திறந்து சொல்லக்கூட வேண்டியதில்லை. அவர்களாகவே, வந்தவர்களின் முகத்தைப் பார்த்ததும், அவர்களின் துயரத்தைப் போக்கி, நல்வாழ்வு அளிப்பார்கள். இவர்கள் பூவாது காய்க்கும் பலாவைப் போன்றவர்கள். காய்க்கப் போவதான முன்னறிவிப்பாகிய பூவினைப் பொறாததால், பலா பயனை மட்டும் முனைப்பின்றி நல்குகிறது; அதனைப்போல் என்று சொல்லலாம்.

இன்னொரு சாரார், ஒருவர் சென்று தங்களுடைய துயரங்களை எடுத்துச் சொல்லி வேண்டினால், அவர்களுக்கு உதவுகிற இயல்பு உடையவர்கள். இவர்கள் மாமரம் போன்றவர்கள். மா, பூத்துக் காய்த்து மாம்பழம் நல்குவதுபோல, இவர்களும் எதனையும் ஆர அமர யோசித்துத் தம்மை அடைந்தவர்கட்கு உதவி செய்து வருவார்கள்.

சிலரிடம் எவ்வளவு கெஞ்சினாலும் கூத்தாடினாலும் அழுதாலும் அரற்றினாலும் எதுவுமே செய்யமாட்டார்கள். அவர்களுடைய பணத்தையே பெரிதாக நினைத்துப் பூட்டிப் பூதத்தைப்போலக் காத்து வருவார்கள்.இவர்கள் கீழ்மக்கள். பாதிரி மரத்தைப் போன்றவர்கள். பாதிரி பூக்கும்; காய்த்துப் பயன் தருவதில்லை.

இந்த மூவகையினரும் மீண்டும் தம்முள் வேறுபடுகிறவர்களாக இருப்பார்கள். உயர்ந்தவர்கள் தாம் செய்தோம் என்று சொல்லிக்கொள்ளவே மாட்டார்கள். ஈகைச் செயலிலே உவக்கும் அவர்கள் அதனைச் சொல்லிப் பெருமைகொள்ள விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.

சிறியோர்கள் சொல்லி, அதனால் வரும் புகழுக்கு ஆசைப்பட்டு, அதன் பின்னரே ஒரு நன்மையைச் செய்பவர்கள். ஒன்றைச் செய்யும்போதே அதற்கான தடபுடலான விளம்பரங்களைச் செய்வித்துத் தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.

கயவர்கள், 'செய்வோம் செய்வோம்’ என்று சொல்லுவார்கள். 'செய்தோம் செய்தோம்’ என்று கூறுவார்கள். செய்திருக்க மாட்டார்கள்; செய்யவும் மாட்டார்கள்.

இந்த உண்மைகளை அமைத்துப் பாடிய பாடல் இது.

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்.

"அசைகின்ற அழகியதான மாலையினைச் சூடிய வேற்படை போன்ற கண்களையுடைய பெண்ணே! சொல்லாமலே செய்பவர்கள் பெரியவர்கள். சொல்லிச் செய்பவர்கள் சிறியவர்கள். சொல்லியுஞ் செய்யாதவர்கள் கயவர்கள். இவர்களுக்குச் சொல்லக் கூடிய உவமையினை ஆராய்ந்தால், பலாவையும் மாவையும் பாதிரியையும் பார்த்து அறிவாயாக" என்பது பொருள். குலாம் - குலவும், அசையும்.

இதனால், உள்ளன்புடன் உதவி செய்கிறவர்கள் பிறரின் துயரங் கண்டவிடத்து, தாமே வலியச் சென்று உதவுகிறவர்களாக விளங்குவார்கள் என்று அறிதல் வேண்டும். தலைவர்கள் தலைமை வகிக்கப் பரிசுதரும் விழாக்களும் நன்கொடை நிகழ்ச்சிகளும் நாடெல்லாம் இந் நாளில் நிகழ்கின்றன. இந்தச் செய்யுளின் பொருளோடு அவற்றையும் சேரக் கருதிப் பார்க்க வேண்டும். அந்த ஆரவாரத்தையும் நினக்க வேண்டும்.