ஔவையார் தனிப்பாடல்கள்/சிற்றாடைக்கு நேர்!
19. சிற்றாடைக்கு நேர்!
ஔவையார் ஒருவரா? இருவரா? மூவரா? இதுபற்றிய விவாதம் நெடுங்காலமாக ஆன்றோர்களிடையே நிலவி வருவதுதான். ஔவையார் என்ற பலகாலத்துப் புலவர் வரலாறுகளும் காலப்போக்கில் கலந்து போய்விட்டன. இதனை முன்னரே சொல்லியிருக்கிறோம். எவர் பாடியது? காலத்திற்கும் செய்யுளின் அமைதிக்கும் பொருத்தம் உண்டா? இப்படிக் கேட்பதனால் ஏற்படும் முடிவுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் போய்விடுகின்றன.
வள்ளல் பாரியின் மறைவுக்குப்பின், அவன் பெண் மக்களான சங்கவை அங்கவை என்பாரைக் கபிலர் திருக்கோவலூர் மலையமானின் மக்களுக்கு மணமுடித்ததாக ஒரு வரலாறு நிலவுகின்றது. கால ஒற்றுமையும் பிறவும் அதனை அரண் செய்கின்றன. எனினும், கபிலர் அவர்களைப் பார்ப்பார்பால் ஒப்பித்துவிட்டபின், தாம் வடக்கிருந்து உயிர் துறந்தனர் என்றவொரு செய்தியும் அதனுடன் கேட்கப்படுகின்றது.
ஔவையார் பாரி மகளிரை மலையமானின் மக்கட்கு மணமுடித்தனர் என்பது மற்றொரு வழக்கு. அதற்குச் சான்றாக விளங்குவன சில செய்யுட்கள். அவற்றை நாம் காணலாம்.
இந்தச் செய்தியும் பாடலமைதியும் பொருத்தமற்றதெனக் கருதிய அறிஞர்கள் சிலர், பாரி என்பான் ஓர் இடையன் எனவும், அவன் மக்கட்கே ஔவையார் முன்னின்று மணமுடித்து வைத்ததாகவும் உரைப்பார்கள்.
இந்தச் செய்திகளை மனத்தேகொண்டு, இதன் தொடர்பாக வரும் செய்யுட்களை மட்டுமே கற்று இன்புறுவோம்.ஒரு சமயம், ஔவையார் நடந்து சென்று கொண்டிருந்தார். மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம். பெரிய மழையும் பெய்யத் தொடங்கிற்று. மழையில் நனைந்தவராக குளிரால் நடுங்கியபடியே ஔவையார் சென்று கொண்டிருந்தார்.
அவர் எதிரிலே ஒரு சிறு குடிசை தோன்றவே, அவர் கால்கள் தாமே அதனை நோக்கிச் சென்றன. அந்தக் குடிசையில் இருந்தவர்கள், தம் குடிசையை நோக்கி வருகின்ற மூதாட்டியைக் கண்டனர். அவரை ஏற்று அவருக்கு உதவ ஆவலுடன் எதிர்பார்த்து நின்றனர்.
ஔவையார் குடிசைக்குள் நுழைந்ததும், அந்தப் பெண்கள் தம்முடைய நீலச்சிற்றாடை ஒன்றை அவருக்கு அளித்து, அவருடைய நனைந்த உடைகளை மாற்றச் செய்தனர்.
அந்த இரு பெண்களின் அன்பான உபசரிப்பு ஔவையாரின் உள்ளத்திலே பலவித நினைவுகளை எழச் செய்தன.
பாரியைக் காணச் சென்றிருந்தார் ஔவையார். பாரியின் அளவற்ற தமிழன்பு அவரை ஆட்கொள்ள, அங்கே பல நாட்கள் தங்கிவிட்டார். ஒருநாள், அவனிடம் விடைபெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். பாரிக்கு அவரைப் பிரிவதற்கு மனமே இல்லை. மேலும் சில நாட்களாவது அவரை இருக்கச் செய்ய வேண்டுமென நினைத்தான். தானே குதிரை மேற்சென்று ஔவையாரின் கையிலிருந்த மூட்டையைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். 'பாரியின் நாட்டிலும் திருடனோ!' என்று வெதும்பிய ஔவையார், அவனிடம் அதனை உரைத்துக் கண்டிக்க நினைத்து, அவனிடத்திற்கே மீண்டும் வந்தார். அவன் அவரிடம் தன் செயலைக் கூறிப் பொறுத்தருள வேண்டினான். அவனுடைய அன்பின் செயல் அவரை ஆட்கொண்டது.
அந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டார். அந்த அன்பின் சாயலை இந்தப் பெண்களின் செயலிலும் கண்டு உவந்தார்.
அடுத்து மற்றொரு நிகழ்ச்சி அவர் உள்ளத்தே எழுந்தது.
பழையனூரில் காரி என்றொரு வள்ளல் இருந்தான். அவன் தமிழார்வத்தில் தலைசிறந்தவன். அவனைக் காணச் சென்றிருந்தார் ஔவையார். அவன் ஔவையாரைத் தன் குடும்பத்தாருள் ஒருவராகவே நினைத்து அன்பு காட்டி வந்தான். ஒருநாள் அவன் குடும்பத்தார் நிலத்திற்குக் களை வெட்டுவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். காரி ஔவையார் கையிலும் ஒரு களைக்கொட்டைத் தந்தான். விருந்தாக நினையாது தன்னையும் அவருள் ஒருவராகவே மதித்த காரியின் அன்புச் செயல் ஔவையாரின் மனத்தில் ஆழப் பதிந்து இருந்தது.உரிமையுடன் தம் ஈர உடையை மாற்றி, அந்தச் சிறு பெண்கள், அவர்களுடைய நீலச் சிற்றாடையைத் தமக்கு அணிவித்த செயலை எண்ணினார். காரியைக் காட்டினும், இவர்களின் உரிமைப் பாசம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது.
சேரமான் ஔவையாரின்மீது அளவற்ற அன்புடையவன். ஒரு சமயம் அவரை அழைக்க நினைத்த அவன், அவரை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பதைக்கூட மறந்துவிட்டான். 'ஔவையே! வாராய்?' என்று உரிமையுடன் அழைத்தான். அந்த அன்புக் கலப்பும் அவரிடம் நிலைபெற்றிருந்தது.
அதனினும் உரிமையுடன் தம்மைப் "பாட்டி!உடையை மாற்று! நனைந்து விட்டாயே?’ என்றெல்லாம் ஏகவசனத்தில் அழைத்து, வலிந்து தமக்கு நலம் செய்த அந்தப் பெண்களின் செயல் அவரைப் பெரிதும் கவர்ந்தது. அவர் பாடினார் :
பறித்த பறியும் பழையனுர்க்
காரிஅன் றீந்த களைக்கொட்டும் - சேரமான்
வாராயோ என்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.
"அந்நாளிலே பாரியானவன் வழிப்பறி செய்துபோன அந்தக் கொள்ளைச் செயலும், பழையனூர்க் காரி என்பவன் கையிலே களைக்கொட்டினைக் கொடுத்த அந்தச் செயலும், சேரமான் வாராய் என்று அழைத்த உண்மையான உரிமையும் ஆகிய இவை மூன்றும், இந்தப் பெண்கள் அளித்த நீலச் சிற்றாடைக்குச் சமமான அன்புச் செயலாகும்” என்பது பொருள்.
ஔவையார் மிகவும் முதியவர்; நீலச் சிற்றாடை உடுத்தற்குரிய பருவத்தை எப்போதோ கடந்தவர்; எனினும் அப்பெண்கள் தம்மிடம் உள்ளதை அன்புடன் வழங்கினர். அன்பின் மிகுதியால் செய்வதன் தன்மையினையும் மறந்து மடம்பட்ட அவர்களின் தன்மையினைக்கூறி வியந்தது இது.