ஔவையார் தனிப்பாடல்கள்/சேரலன் வருக

22. சேரலன் வருக!

விநாயகர் ஔவையின் வேண்டுகோளை ஏற்று விரைந்து வந்தார். திருமண ஓலையினையும் எழுதித் தந்தார். திருமண நாளும் வகுத்தாயிற்று.

சேர சோழ பாண்டியராகிய மூவரும் பாரியை வஞ்சகமாகப் போரிட்டுக் கொன்ற பகையாளிகள். அதனால், பாரியின் மக்களை மணக்கும் திருக்கோவலூர் அரசர்கள் மீதும் அவர்கள் சினந்து பகை கொள்ளக்கூடும். அவ்வாறு ஒரு துயரம் அந்தப் பெண்களின் கணவர்கட்கு வரக்கூடாது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். இதனை நினைவிற் கொண்டார் ஔவையார். அந்த மூவேந்தர்களையும் திருமணத்திற்கு வருமாறு அழைத்துத் தாமே அழைப்பு விடுக்கின்றார்.

'சேரலர்களின் கோமானே! சேரல் என்னும் பெயரையும் உடையவனே பேரழகினை உடைய திருக்கோவலூர் வரையும் வருவாயாக, உள்ளத்தில் அச்சம் எதுவும் வேண்டாம். பாரியின் மகளிர் அங்கவை, சங்கவை ஆகியோரை மணந்துகொள்ள, இந்தத் திருக்கோவலூர் அரசர்கள் இசைந்துள்ளார்கள்'. என்றபடி அந்த அழைப்போலை அமைந்தது.

சேரலனை 'உட்காதே' என்று கூறி அழைக்கிறார் ஔவையார். பாரியைக் கொன்றதற்குப் பழி வாங்கும் எண்ணமுடன் பிறர் செய்த சூதாகவும், அவன் அந்த அழைப்பைக் கருதலாம் அல்லவா? மேலும் மலையமான்கள் தமக்குப் பேரூதியம் தருபவர்க்குப் படைத்துணை செல்லும் இயல்பினராகவும் இருந்தனர். அதனால் அவன் தன் நாட்டைவிட்டு அவ்வளவு தூரம் வருவது என்பதும் சிந்திக்கக் கூடியதே. அதனால் ஔவையும் அவனுக்கு எவ்வகை இடையூறும் நேராதென உறுதி கூறுகின்றார்.

சேரலர்கோன் சேரல் செழும்பூந் திருக்கோவல்
ஊரளவும் தான்வருக உட்காதே - பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசர் மனமிசைந்தார்
சங்கவையை யுங்கூடத் தான்.

“சேர நாட்டவர்களின் கோமானாகிய சேரவனே! செழுமையும் அழகும் உடைய திருக்கோவலூர் அளவிற்கும் நீ வருவாயாக நடந்ததனை எண்ணி மனம் உளையாதே! பாரி மகளான அங்கவையை மணந்துகொள்ள அரசர் மனம் இசைந்துவிட்டனர். சங்கவையையும்கூட மணந்துகொள்ள இசைவு தந்துவிட்டனர்” என்பது பொருள்.