ஔவையார் தனிப்பாடல்கள்/புகார் மன்னன் வருக!

23. புகார் மன்னன் வருக!

சேரலர் கோனை வருமாறு ஓலை அனுப்பியதுடன் பிற முடி வேந்தர்களுள் ஒருவனான புகார் மன்னனையும் திருமணத்துக்கு அழைத்து ஓலை விடுக்கின்றார், ஔவையார்.

சோழன் வளமான நாட்டிற்கு உரியவன். தான் முடியுடை மூவேந்தரினும் சிறந்தோன் என்ற நினைவும் அவனிடத்தே இருந்தது. அதனால் அவன் பாரி மகளிர் திருமணத்திற்கு வருவது என்பது ஐயமானது என்றனர் சிலர்.

சோழன் வந்து பாரியின் மகளிருடைய திருமணத்தில் கலந்து கொள்வதாவது? குறுநில வேந்தனின் மகளிர் அவர் தன்னால் கொன்றொழிக்கப்பெற்ற பகைவனின் மக்கள் அவர் மணந்து கொள்பவரோ மலையமானின் மக்கள்; மலையனும் சோழ நாட்டிற்கு நட்பினன் அல்லன். எனவே, அந்தத் திருமணத்திற் கலந்துகொள்வது தகுதி உடையதன்று என்று சோழன் நினைப்பான். எனவே, ‘அங்ஙனம் நினைத்து வராமல் இருந்துவிடாதே' எனவும் தம் ஓலையிற் குறிப்பிடுகின்றனர் ஔவையார்.

"புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து - நகாதே
கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு
விடியல் பதினெட்டாம் நாள்"

"புகார் நகரத்தே இருந்து அரசியற்றும் மன்னவனே! பொன்னி நதிவளம் பெருக்கும் வளநாட்டிற்கு உரியவனே சோழ மன்னனே! பாரி மகளிர்க்குத் திருமணம் உறுதியாயிற்று. அதற்கு வருவது தகுதியுடையதன்று என்று கருதி, அங்கிருந்து நகையாடி இருந்துவிடாதே விரைந்து இன்றைக்குப் பதினெட்டாம் நாள் பொழுது விடிவதற்குள்ளாக காவலையுடைய கோவலூர்க்கு வருவாயாக" என்பது பொருள்.

இந்தச் செய்யுள், திருமணம், நாளோலை எழுதியதன் பின்னர் பதினெட்டாவது நாளில் நிகழ்ந்ததென்பதைக் காட்டு கின்றது. சேரனை ‘உட்காதே’ என்றவர், சோழனை 'நகாதே’ என்றனர். இதனால் அந்நாளில் சேரன் வலுக் குறைந்திருந்தான் என்பதும், சோழன் வலுவுடையவனாக இருந்தான் என்பதும் விளங்கும்.