ஔவையார் தனிப்பாடல்கள்/பாலும்! நெய்யும்!
26. பாலும்! நெய்யும்!
பொன்னைப் பற்றிய கவலை நீங்கியது. பொன்னாலும் பெறமுடியாத சில பொருள்களும் இருந்தன. அவை பால், மோர், தயிர், நெய் ஆகியன. அவற்றை எப்படிப் பெறுவது?
நாடெல்லாம் தேடினாலும் வேண்டும் அளவுக்குக் கொணர முடிவதில்லையே! அதனால், ஔவையார் அதற்கும் தெய்வத் துணையினையே நாடினார்.
பெருகிவரும் பெண்ணையை அழைத்தார். அதனைப் பாலும் நெய்யும் ஆகியவற்றைத் தந்தருள வேண்டினார்.
பெண்ணை நதியும் அப்படியே பாலாகவும் நெய்யாகவும் பெருகி வந்தது. ஔவையாருக்கு அந்தக் கவலையும் நீங்கிற்று.
முத்தெறியும் பெண்ணை முதுநீர் அதுதவிர்ந்து
தத்திய நெய்பால் தலைப்பெய்து - குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவும் கொண்டோடி வா.
“முத்துக்களைக் கொணர்ந்து கரையிடங்களிலே எறிகின்ற பெண்ணையாறே பழைமையாக நீ கொண்டுவரும் நீரினை அல்லாமலும், நெய்யும் பாலும் குதித்தோடி வரப்பெருகி வருவாயாக.
பகைவரைக் குத்திக்கொன்று களத்தே போர் செய்யும் ஆற்றல் உடையவன் தெய்வீகன். அவனுடைய திருக்கோவலூருக்கு வருமளவும் அங்ஙனமே பெருகி வருவாயாக" என்பது பொருள்.