ஔவையார் தனிப்பாடல்கள்/பொன்மாரி பெய்க!

25. பொன்மாரி பெய்க!

திருமண ஏற்பாடுகளில் ஔவையார் மிகவும் ஈடுபட்டனர். மூவேந்தர்களுக்கும் அழைப்பு விடுத்த பின்னர், தம்முடைய பிற வேலைகளையும் கவனிக்கலாயினர்.

'பாரி மகளிர்' என்ற பெருமை அந்தப் பெண்களுக்கு இருந்தது. ஆனால், பாரி மடிந்துவிட்டான். பாரிக்குப் பின்னர் அவர்களைப் பேணும் கடமையினைக் கபிலர் ஏற்றனர். அவரும் அவர்களைப் பார்ப்பார்கள்பால் ஒப்பித்து, வடக்கிருந்து உயிர் நீத்தனர். அவர்கள் நலனைக் கவனிக்க ஔவையாரையன்றி வேறு யாரும் அப்போதைக்கு இல்லை.

அவர்களைக் காப்பது மட்டுமன்றித் திருமணமும் செய்வித்துக் களிக்க எண்ணினார் ஔவையார். அவருடைய நல்ல உள்ளம் அந்தப் பொறுப்பை மேற்கொண்டதும், தெய்வமும் துணைக்கு வந்தது. விநாயகப்பெருமான் திருமண நாளோலை எழுத, எல்லாம் சிறப்பாக நடந்து வந்தன.

சேர, சோழ, பாண்டியரை அழைத்த ஔவையாருக்கு, அவர்களைத் தக்கபடி வரவேற்று உபசரிக்கும் பொறுப்பும் இருந்தது. அவர்களுடன் வரும் பெரும்படைகளையும் பிற அரசச் சுற்றங்களையும் உண்பித்து வழியனுப்புவது என்பது எளிதன்று. அதனால், அவர் அதற்கும் தெய்வத் துணையினையே நாடினார்.

மழைக்கு இறைவன் வருணன். அவனை அழைத்தார் ஔவையார். 'வருணனே! இந்தப் பெண்கள் திருமணத்தை நடத்துவதற்கு ஏராளமான பொன் வேண்டும். நின் மழையைச் சற்று மாற்றிப் பொன் மழையாகப் பொழிந்து உதவுக' என்றனர்.

கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து
முன்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி.

“உலகத்து உயிர்கள் உண்டு உயிர் வாழ வேண்டும் என்ற கருணையினால் நீர்வளம் பெருக்கிக் கடல் சூழ்ந்த உலகினைக் காத்தருளும் வருணனே! சிறந்த மலையமானின் திருக்கோவலூரில் பாரி மகளிரின் பெருமணம் நிகழப் போகிறது. முன்பெல்லாம் மழை பொழிந்து இவ்வூரை வளப் படுத்துவாய். பழைய நின் பெயலைச் சற்றே மாற்றிக் கொண்டு, பொன்னையே மழையாகப் பொழிவாயாக" என்பது பொருள்.

வள்ளல் பாரியின் மக்கள் அவர். அவர்க்குத் துனணயோ தமிழ்ப் பெருமாட்டியான ஔவையார் வருணனும் உதவுதற்கு உடனே மனமிசைந்தான். பொன்மாரியும் பொழிந்தது. திருமணத்துக்கு வேண்டிய பொன்னுக்கும் கவலையில்லை.

பொன்னைக் கொடுத்து வேண்டிய பற்பல பொருள்களை எல்லாம் வாங்கிக் குவித்தனர். எங்கும் பாரி மகளிரின் திருமணப் பேச்சே எழுந்து முழங்கிற்று.

இப்பாடலின் பிற்பகுதி, 'திருமணத்து, நன்மாரி தாழ்க் கொண்ட நன்னீர் அது தவிர்த்துப் பொன்மாரியாகப் பொழி’ எனவும் வழங்கும்.