ஔவையார் தனிப்பாடல்கள்/பொன் ஆடு!

29. பொன் ஆடு!

ணப்பெண்களுக்கு மூவேந்தரும் மற்றும் பலரும் வாழ்த்துரை கூறிக் கணக்கற்ற பரிசுகளை நல்கினர். ஔவையார் தம்முடைய நினைவாக ஒரு பால் தரும் ஆட்டினைத் தருதற்கு விரும்பினார்.

பொன்னும் பொருளும் அளிப்பதினும், ஒரு பாலாடு அளிப்பதில் ஒரு தத்துவம் அமைந்திருந்தது. 'குட்டியுடன் விளங்கும் ஆட்டினைத் தருவது’ அவர்களும் பெற்றுப் பெருகி வாழ வேண்டும் என வாழ்த்துவதாக இருக்கும்.

அவரிடம் ஆடு ஏது! அவர், அருகே இருந்த சேரமானிடம் “சேரலனே! என் பரிசாக இந்தப் பெண்களுக்கு ஒரு கரப்பாடு தரலாமென்று கருதுகின்றேன். நின்னால் கொடுத்து உதவ முடியுமோ?” என்றார்.

சேரனும் இசைந்தான். தன் ஏவலர்களுக்குக் குறிப்பாக உணர்த்தினான். அவர்களும் விரைந்து சென்றனர்.

சென்றவர்கள் மீண்டு வருவதற்கு நெடுநேரம் பிடித்தது. ஔவையார் சேரனை வினவினார். 'அவனோ, கொண்டு வருவார்கள்' என்று சொல்லிப் புன்னகை பூத்தான். ஏவலர்கள் கொண்டு வந்து வைத்ததும், ஔவையார் வியப்பால் மெய் மறந்தார். பொன்னாற் செய்த ஆடும் குட்டியும் அங்கே இருந்தன. சேரனின் கொடைச்சிறப்பு அவரைப் பெரிதும் களிப்புக் கொள்ளச் செய்தது.

சிரப்பான் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவார் தம்கொடையின் சீர்.

என்று அச் சிறந்த செயலைப் பிறரும் அறியுமாறு பாடினார் ஔவையார்.

“தலைமேலாக மணிகள் இழைத்த கிரீடத்தைச் சூட்டியிருக்கும் சேரமானிடத்தே பால்தரும் ஆடு ஒன்றினை யான் கேட்டேன். அவனோ, பொன்னாற் செய்த ஆடொன்றைத் தந்தான். இரப்பவர்கள் என்ன கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தம் கொடையின் சிறப்பு எங்ஙனமாக இருக்க வேண்டும் என்பதனைக் கொடுப்பவர்கள்தாம் அறிந்து செய்வார்கள்” என்பது பொருள்.

கொடையாளர் தம் தகுதியைத்தான் கருதி வழங்குபவர்களாக இருப்பார்கள். வந்து இரப்பவர்களின் தகுதியை ஆராய்வதும், அதற்கேற்ப வழங்குவதும் அவர்களின் இயல்பாக இருப்பதில்லை. இந்த அரிய உண்மைக்கு இலக்கணமாக விளங்கினான் சேரமான்.

இந் நாளினும் மணவீடுகளிற் சிலர் தம் பெண்ணுக்குப் பாற்பசு ஒன்று வழங்குகின்றனர். இது இவ்வாறு தொன்று தொட்டே வழங்கிவரும் பழக்கத்தால் வந்தது போலும்!