ஔவையார் தனிப்பாடல்கள்/பொன் பெற்றேன்!

102. பொன் பெற்றேன்!

புகார் வணிகர்களுள் பந்தன் என்னும் பெயரினன் ஒருவன் இருந்தான். இவன் வணிகம் பெருக்கிப் பொன்னினை நிறைத்ததோடு மகிழ்ந்தவன் அல்லன். தமிழ்நலம் துய்த்துத் தமிழறிந்த சான்றோர்களின் ஏழ்மையைப்போக்கி, அவரைப் பொன்னுடையவராகத் செய்து புகழ் பெற்றவனும் ஆவான்.

ஒரு சமயம், ஔவையாருக்குப் பொன் வேண்டியதிருந்தது. பந்தனின் சிறப்பினைப் பலர் சொல்லக் கேட்டிருந்த அவர், அவனைக் கண்டுவருகின்ற நினைவுடன் சென்றார். ஔவையாரின் புகழினைக் கேட்டு, அவரைக் காண்பதற்கு முன்பாகவே அவர்பால் பேரன்பு உடையவனாகத் திகழ்ந்தவன் பந்தன்.

ஔவையாரைக் கண்டதும், 'நீவிர் யாவிரோ? யாது காரியமோ?’ என்றான் பந்தன். 'யான் அவ்வை; பொன்னை நாடி நின்னிடம் இரப்பதற்கு வந்தேன்’ என்றார் ஔவையார். அதைக் கேட்டு வருந்தினான் பந்தன், பொன்னை அவர் வேண்டியபடி கொடுத்து உவக்கச் செய்து இன்புற்றான்.

அதனாற் களிப்புற்ற ஔவையார், பந்தனைத் தலைவனாகக் கொண்டு 'பந்தன் அந்தாதி' என்றோர் இனிய நூலினை இயற்றினார். அது காலத்தால் மறைந்து போயிற்றாயினும், அவர் பாடிய இந்தப் பாடல் பந்தனின் தகுதியை நமக்குக் காட்டுகின்றது.

யானவ்வை யென்றிரந் தேத்தினேன்; மற்றவனும்
ஏனவ்வே யேனென் றிரங்கினான் - நானும்கேள்
மன்னும் புகார்வணிகன் மாநாய்கன் பந்தனெனும்
பொன்னினருள் பெற்றேனிப் போது.

“யான் ஔவை என்று சொல்லி இரத்து நின்றவளாக அவனைப் போற்றிப் பாடினேன். அவனும், 'ஏன் அவ்வே?' எனக் கேட்டவனாக, எனக்கு இரக்கங் கொண்டான் வளம் செறிந்த புகார் வணிகனான மாநாய்கன் பந்தன் என்பவனால் நானும் இப்போது பொன்னின் அருள் பெற்றவளானேன். இதனைக் கேட்பாயாக" என்பது பொருள்.