கடவுள் கைவிடமாட்டார்/கண் முன்னே காரியம்!


2. கண்முன்னே காரியம்!


‘நன்றே செய், அதை இன்றே செய்’ என்பதற்கேற்றவாறு, அம்பிகைக்கு ஆகவேண்டிய காரியத்தை இன்றைக்கே தொடங்கிவிட வேண்டும் என்று மீனாட்சியிடம் விடைபெற்றுக்கொண்டு, வெளியே கிளம்பினார் தருமலிங்கம்.

அம்பிகைக் கோயிலைச் சுற்றித்தான், அந்த ஊரின் தெருக்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. யார் எங்கே புறப்பட்டாலும், அம்பிகையின் கோயிலைக் கடந்துதான் போகவேண்டும். அப்படி ஒரு பக்தி நிறைந்த ஊரின் அமைப்பு அது.

கோயில் முன்னே வந்ததும், காலில் போட்டிருந்த காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, கண்களை மூடியவாறு, கைகளைத் தலைக்குமேலே உயர்த்தி, மிகவும் பயபக்தியுடன் அம்பிகையை வணங்கினார் தருமலிங்கம்.

கண்ணை விழித்துப் பார்த்தபொழுது, அம்பிகையை மறைத்தவாறு ஒருவர் நின்று கொண்டு, மிகவும் பக்தி நிரம்பிய புன்னகையுடன் நோக்கி தன்னை வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் தருமலிங்கம்.

வணங்கி நின்றவர், நகை செய்யும் நடேசன்.

உனக்கு ஆயுசு நூறய்யா! என்று தருமலிங்கம் சிரித்துக்கொண்டே கூறினார்.

‘உங்க தயவு இருந்தா, இன்னும் நூறுவயசு கூட இருப்பேங்க’ என்று மரியாதையுடன் பதில் சொன்னார் நடேசன்.

உன்னைப் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தேன். அம்பிகை முன்னாலேயே உன்னைப் பார்த்து விட்டேன்.

எல்லாம் கடவுளோட கருணைதாங்க! என்று மீண்டும் கைகுவித்து வணங்கினார் நடேசன்.

நடேசன்! உனக்கு ஒன்றும் வேலையில்லையே!

‘இல்லை’ என்பதற்கேற்றவாறு தலையை மெதுவாக அசைத்தார்.

‘வீடுவரை வந்து போங்கள். உங்களால் ஒரு முக்கியமான காரியம் ஆகவேண்டி யிருக்கிறது’ என்றார் தருமலிங்கம்.

நினைத்தது நடக்கிறது என்று தருமலிங்கமும், தனக்கு நல்லது நடக்கப் போகிறது என்று நடேசனும் தனித் தனியே நினைத்தவாறு, இருவரும் நடந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கோயில் மணி டாண் டாண் என்று ஒலித்துக்கொண்டு இருந்தது.

தருமலிங்கம் வீட்டுக்கு முன்புறம் வெளியே முற்றத்தில் அமர்ந்திருந்த நடேசன், ‘ஏன், நம்மை தருமலிங்கம் அழைத்தார்? என்னவாக இருக்கும்?!’ என்று மண்டையைச் சொறிந்தவாறே யோசனையுடன் அமர்ந்திருந்தார். அடிக்கடி அவர் கண்கள் வீட்டின் உட்புறத்தை நோக்கியவாறு இருந்தன.

பெட்டியில் இருந்த வைரக்கற்களைப் பத்திரமாக தன் கைகளில் ஏந்தியவாறு, உள்ளிருந்து வந்தார் தருமலிங்கம். வானத்தில் உள்ள விண்மீன்கள் போல வைரக்கற்கள், அந்த நீலத் துணியில் வண்ண ஒளிகாட்டின.

பளபளப்பைப் பார்த்த நடேசன், தன்னை மறந்து, கிடந்த அக்கற்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

என்ன நடேசன்! அப்படி ஆச்சரியமா பார்க்குறே?

‘இப்படிப்பட்ட வைரக் கற்களை நான் என் வாழ்நாளிலே பார்த்தது கிடையாது! இனிமேலும் பார்க்கப் போறது இல்லிங்க!’

நடேசன் உண்மையிலேயே மயங்கித்தான் போனார், அவரது மனம் எதற்காகவோ கனமாகி வருவதுபோல் தோன்றியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.

“நடேசன்! சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்கவேண்டும் இப்பொழுது நான் காட்டினேனே! இது எங்கள் பரம்பரைச் சொத்து, என்பாட்டனாருக்குப் பாட்டனார், பர்மாவில் பெரிய வைரவியாபாரியாக விளங்கினார். அவர் எவ்வளவோ வைரங்களைப் பார்த்திருந்தாலும், இக்கற்களின் மேல் ஆசைப்பட்டு, எவ்வளவோ பணம் கொடுத்து வாங்கி, தனது குடும்பச் சொத்தாக வைத்துக்கொண்டார்.”

எங்கள் குடும்பத்திலே வாரிசு ஒன்றே ஒன்றுதான் வந்தது. என் பாட்டனாருக்கு என் தாத்தா ஒரே மகன், என் தாத்தாவுக்கு என் தந்தை ஒரே மகன், என் தந்தைக்கு நான் ஒரே மகன்.

“எனக்குத்தான் குழந்தையேயில்லை”

தருமலிங்கத்தின் குரல் தணிந்தது. கனிந்துபோய் கம்மியது. கண்களிலே கண்ணீர் கசிந்தது. மிகவும் வேதனையுடன், தன் தோளில் கிடந்த துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார். பெருமூச்சு வெகுவேகமாக வெளிவந்தது.

‘கடவுள் உங்களைக் கைவிடமாட்டார்! கவலையை விடுங்கய்யா’ என்று ஆதரவாகப் பேசினார் நடேசன்.

அந்த நம்பிக்கையுடன் தான் நம்ம ஊர் அம்பிகைக்கு ஒரு வைரத் தோடு செய்யவேண்டுமென்று நான், இப்பொழுது உன்னை அழைத்து வந்தேன்.

அம்பிகை தன்னை நிச்சயம் கைவிட மாட்டாள் என்ற நம்பிக்கையில் தருமலிங்கம் பேசிக்கொண்டிருந்தார். ‘எப்படியும் தன் பெயர் சொல்ல, தன் குலம் தழைக்க அம்பிகை அருள் செய்வாள்’ என்று அவரது உள்மனம் கூறியதால், அவர் கண்கள் கண்ணீரால் பளபளத்தன.

‘வைரத்தோடுதானே? இன்னும் ஒரே மாதத்திற்குள் முடித்து விடுகிறேன். இதைவிட வேறு வேலை எனக் கென்ன இருக்கிறது?’ என்றார் நடேசன்.

வேலைக்குக் கூலியெல்லாம் பேசி முடித்துக் கொண்டார்கள். அதற்காக முன்பணமும் தந்தார் தருமலிங்கம். பெற்றுக்கொண்ட நடேசன் பெருமை பொங்கப் பேசினார். ‘அம்பிகையின் அருளால்தான் இந்த வேலை கிடைத்தது. கூலியும் கிடைத்தது. இனி வயிறார சோறும் கிடைக்கும்’ என்று வணங்கினார்.

‘தினமும் வீட்டுக்கே வந்துவிடு. வேலையை செய்து முடிக்கும்வரை உமது ‘பட்டரை’ இங்கேயே இருக்கட்டும். சாப்பாடு முதல் சகல வசதிகளையும் நானே கவனிக்கிறேன். சரிதானே! என்றார் தருமலிங்கம்.

‘இதைவிட வேறு என்னங்க எனக்கு வேணும்’ நீங்க நல்லாயிருக்கனும்!

நடேசன் நன்றிப்பெருக்குடன் சொல்லிவிட்டு வணங்கிச் சென்றார். தருமலிங்கம் தனது கடமை தொடங்கிவிட்டது. எந்தவித இடையூறின்றி நடக்கும் என்பதைத் தன் மனைவியிடம் சொல்வதற்காக, வீட்டிற்குள்ளே சென்றார், அவரது நடை பந்தயக் குதிரைபோல இருந்தது.