கடவுள் கைவிடமாட்டார்/நடையும் விடையும்!

3. நடையும் விடையும்!


வழியெல்லாம் வைரக்கற்களின் மதிப்பைப் பற்றியே நடேசனின் மனம் நினைத்துக் கொண்டிருந்தது, பாரவண்டிகளே இழுத்துப்போகும் கிழட்டு மாடுகளைப்போல அவரது நடை இருந்தது.

‘விலைமதிக்க முடியாத வைரக்கற்கள் பல லட்சம் பெறும். இவற்றை வீணே பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறாரே! தருமலிங்கத்து குடும்பத்தின் சொத்து அப்படி எவ்வளவு இருக்கும்? அவரது செழுமை எங்கே? அன்றாடம் கால்வயிற்றுக் கஞ்சிக்கு ஆளாய் பறக்கும் தன் குடும்பத்தின் வறுமை நிலை எங்கே?’

‘ஏணி வைத்தாலும் எட்டாது. பாடுபட்டாலும் பற்றாது’ என்று நடேசன் மனம், பஞ்சப்பாட்டைப் பாடியவாறு இருந்தது. சில சமயங்களில் பதறியது.

நடேசன் நினைவுகளிலேயே இலயித்துப் போனவராய், தன் வீட்டுக்கு வந்துசேர்ந்தார். அவர் மனம் மிகவும் குழம்பிப்போய் இருந்தது.

‘அப்பா! அப்பா! என்று ஏழெட்டுக் குழந்தைகள் அவரை சுற்றிச் சுற்றி வந்து நின்றன.’

இழுத்துக் கொண்டும். பிடித்துக் கொண்டும். தள்ளிக் கொண்டும் அவரது குழந்தைகள், அவரை பாடாய்படுத்தின. அடம்பிடித்தன.

குழந்தைகளுக்கு அப்பா மேல் அவ்வளவு அன்பு என்று நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது. தங்கள் தந்தையின் மடி, புடைத்துக் கொண்டு இருந்ததால், தின்பதற்கு ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையில்தான். அவர்கள் தந்தையை சிறை பிடித்தது போல, அணைத்துப் பிடித்துக்கொண்டு இழுத்துச் சென்றனர். அடித்து பிடித்தபடி அவர் மடியை இழுத்தார்கள். அவர் அவிழ்த்துத் தருவதற்குள்ளேயே மடி அவிழ்ந்து கொண்டு பொட்டலங்கள் பொதபொதவென்று விழுந்தன. ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டு. மூலைக் கொன்றாய் பறந்தனர் குழந்தைகள். அவர்கள் பசி அவர்களுக்கல்லவா தெரியும்!

நாடகம் முடிந்தபிறகு கொட்டகைக்காலியாகக் கிடப்பதுபோல, தின்பண்டம் வந்ததும், ஓடி ஒளிந்த குழந்தைகளை மறந்தும் மறக்காமலும் அப்படியே நடுவீட்டில், தரையில் அமர்ந்து கொண்டார் நடேசன். ஒரு வாரமாய் சவரம் செய்யாமல் வளர்ந்து போன தன் தாடியை சொறிந்தவாறு அண்ணாந்து பார்த்தார். மாலை நேரத்து சூரிய வெளிச்சம், வேண்டாத விருந்தாளியைப் போல, கூரைக்குள்ளே புகுந்து வட்ட வட்டமாகத் தரையில் வண்ணக் கோலம் போட்டுக் கொண்டிருந்தது. வானமும் கூரை வழியே நன்றாக ஆங்காங்கே தெரிந்தது.

கண் கூசுகிறது என்று குனிந்து தன் வேட்டியைப் பார்த்தார். ஆங்காங்கே குறுக்குத் தையல் போட்ட பாகங்கள், மூலை காட்டிக் கேலி செய்து கொண்டிருந்தன.

என்னங்க அப்படி யோசனை? எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீங்க! என்றவாறு அவரது மனைவி பார்வதி, பக்கத்திலே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

‘இனிமேல் ஒல்லியாகப் போக முடியாது’ என்பது போல இளைத்துப் போன தேகம். அவளை ஏற இறங்க ஒருமுறைப் பார்த்தார் நடேசன், குழிவிழுந்த கன்னங்கள் கலைந்த கேசம். வறுமை தாக்கியதால் வதங்கிப்போன முகம்.

‘வீட்டை விட்டுப் போகும் பொழுது, மகிழ்ச்சியுடன் போனிங்க, வருகிறபொழுது, எதையோ பறிகொடுத்தவர் மாதிரி வந்திருக்கிறீங்க’ என்று கேலியாகக் கேட்ட பார்வதியிடம், தான் பெற்ற முன் பணக் கூலியைக் கொடுத்தார் நடேசன்.

ஆவலுடன் வாங்கிய பார்வதி, அவசரம் அவசரமாகத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவளது குழி விழுந்த கண்கள்கூட், சந்தோஷத்தில் மலர்ந்து பிதுங்கின.

‘ஏதுங்க இத்தனை ரூபாய்?’ ஆச்சரியம் அந்தக் கேள்வியில் கொடி கட்டிப் பறந்தது.

கூலி! ஏக்கத்தின் பெருமூச்சில் நடேசன் வாய்பேசியது.

எதற்குக் கூலி? கொஞ்சம் விளக்கமா சொல்லக்கூடாதா? அவள் பேச்சில் கொஞ்சம் வேகம் இருந்தது.

தருமலிங்கம் வீட்டிலேதான் இனிமேல் வேலை, அந்த வைரத்தோடு வேலையை எப்படித்தான் முடிக்கப் போகிறேனோ, எனக்கே தெரியவில்லை!

அதுதான் கவலையா? உங்கள் கைப்பட்டால் வைரம் கூட வேணுங்கற தினுசிலே வளைஞ்சிக்குமே! இந்த வட்டாரத்தில் உங்களை விட்டா யார் இருக்காங்க? என்று கணவனின் கைவண்ணத்தைப் புகழத் தொடங்கிவிட்டாள் பார்வதி.

பணமல்லவா நடேசன் தந்திருக்கிறார்! பார்வதியின் புகழ்ச்சிக்கு என்ன குறைச்சல்? கொண்டுபோன தீனியை தின்று தீர்த்தக் குழந்தைகள் எல்லோரும் ஓடி வந்து இருவர் பக்கத்திலும் உட்கார்ந்து கொள்ளவே, இருவர் பேச்சும் தடைப்பட்டது.

ஒரு வாரம் நடேசன் குடும்பம் நிம்மதியாக உண்டு, பசியில்லாமல் உறங்கி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது. பழுத்தமரத்தில் பறவைகள் கூட்டம் கத்துவது போல, அந்தக் குடும்பத்தில் சதா மகிழ்ச்சி சத்தமே நிறைந்து கிடந்தது.

அந்த ஊரில், ஒருவித விஷக் காய்ச்சல் பரவி வந்த நேரம். நடேசனும் அவரது குடும்பத்தாரும் நன்றாக வாழ்வது பிடிக்கவில்லையோ என்னவோ, அந்த விஷக் காய்ச்சல் நடேசன் வீட்டுக்குத் திடீரென்று விஜயம் செய்தது. முதலாவதாக கடைசிக் குழந்தையைக் காய்ச்சல் பிடித்துக் கொண்டு, தொடர் கதை போல ஒவ்வொருவரையும் பிடித்துக் கொண்டது. அது அந்தக் குடும்பத்தையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் மருந்து வாடையே வீசிக்கொண்டிருந்தது. வயிற்றுப் பிரச்சினைக்காக இருந்த பணமெல்லாம், வைத்திய செலவுக்காகப் போயிற்று.

இவ்வாறு, ஒருவர் மாற்றி ஒருவர் என்றவாறு, எல்லா குழந்தைகளும் விஷக் காய்ச்சலில் படுத்துப் படுத்து எழுந்தன.

பணக் கஷ்டம் ஏற்படும் பொழுதெல்லாம், தருமலிங்கத்தினிடம் பணம் பெற்றுக் கொண்டார். எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காமல், கோபப்படாமல், கேட்ட பணத்தைக் கொடுத்து வந்தார் தருமலிங்கம். அந்த மாதிரி ஒருவர் ஆதரவு இருந்தது. நடேசனுக்கு நல்ல காலம் என்றே சொல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கெல்லாம் வந்த காய்ச்சல் போய்விட்டதென்று நடேசன் நினைத்தபொழுது, ‘அதற்குள் போய் விடுவேனா’ என்று கூறுவது போல, பார்வதியை காய்ச்சல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

ஏற்கெனவே இளைத்துப் போயிருந்த பார்வதி, குழந்தைகள் காய்ச்சலால் கஷ்டப்பட்டபோது இரவு பகல் பாராது கண் விழித்தாள். அதனால் மீண்டும்

மெலிந்து களைத்துப் போனதால், காய்ச்சல் அவளையும் கவ்விக் கொண்டது. பார்வதி படுத்த படுக்கையாகி விட்டாள்.

எலும்பும் தோலுமாக ஆகிவிட்டத் தன் மனைவியைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார் நடேசன். தனக்கு ஒரே துணையாகவும், வாழ்க்கை முழுவதும் அன்பு துணைவியுமாக இருக்க வேண்டும் என்று இருந்தவருக்கு பார்வதியைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த உலகத்தையே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறிகிளம்பும்.

‘பக்கத்து நகரத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால்தான் பார்வதியின் உடல் தேறும்’ என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் நடேசனிடம் புத்திமதி கூறினார்கள். அவ்வாறு மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்றால், குறைந்தது நூறு ரூபாயாவது தேவைப்படும்.

எங்கே போவது? யாரைப் போய் கேட்பது?

எப்பொழுதும் உதவி செய்யும் தருமலிங்கம் இருக்கிறாரே? அவரிடம் போனால்தான் முடியும் என்று முடிவு வந்தார் நடேசன்.

அன்றைக்குப் பார்த்துத்தானா தருமலிங்கம் ஏதோ கவலையில் ஆழ்ந்து இருக்க வேண்டும்?!

பணம் வேண்டும் என்று நடேசன் கேட்டதுதான் தாமதம். உட்கார்ந்திருந்த தருமலிங்கம் எழுந்தார்! நடேசனை நோக்கி வந்தார்.

‘உனக்கு வேறு வேலையே கிடையாதா? பணம் பணம் என்று ஏன் என் உயிரை எடுக்கிறாய்! வேலையை முடித்துவிட்டு போய் தொலைப்பதுதானே? ஏற்கனவே பேசிய சுலிக்கு மேல் ஐம்பது ரூபாய் அதிகம் வாங்கியிருக்கிறாய்? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இளிச்சவாயன் என்று என்னை நினைத்துவிட்டாயா?

நடேசனுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. குனிந்த தலை நிமிராமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

நடேசன் போன பிறகுதான் தருமலிங்கத்தின் கோபம் குறைந்தது. இப்படி ஏன் நடேசன் மேல் கோபப்பட்டோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டார். காலையில் நடந்த வயல் வரப்புத் தகராறை நடேசன் மீதா காட்டி விட்டேன்? ஐயோபாவம் என்று வருத்தப்பட்டார்.

நடந்துபோன வழியெல்லாம், நடேசனின் மனம் தீராத சிந்தனையிலேயே லயித்துப் போயிருந்தது, அந்த நடை ஒரு விடையைத் தராமல், நடேசனைக் குழப்பியது.

அன்று இரவு முழுதும் துங்காமலே விழித்திருந்தார் நடேசன். காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், எப்பொழுதும் போல வேலைக்கும் போனார்.

வைரத்தோடு முடியும் வரை தருமலிங்கம் வீட்டில்தான் வேலை செய்யவேண்டும் என்பதாக இருவருமே சேர்ந்து எடுத்துக்கொண்ட முடிவுதானே!

நடேசன் வேலை செய்கிற நேரம் வரை செய்துவிட்டு, அந்த அரைகுறையானவற்றை, ஒரு பேப்பரில் மடித்து மீனாட்சியிடம் கொடுப்பார். அது வழக்கமாக நடந்து வரும் செயலாகும்.

மீனாட்சியும் அப்படியே பொட்டலத்தைக் கொண்டு போய் பெட்டியில் வைத்துவிட்டு, மறுநாள் நடேசன் வந்ததும் திரும்ப எடுத்துக்கொண்டு வந்து தருவது வழக்கம்.

வழக்கம் போலவே, பொட்டலத்தைக் கொண்டுவந்து நடேசனிடம் கொடுத்துவிட்டு, மீனாட்சி தனது வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். மமாலை வரை வேலை செய்து விட்டு, நடேசன் அரைகுறையாக முடிந்த தோட்டினை எடுத்து மடித்து, காகிதப்பொட்டலத்தை மரியாதையாகக் கொடுத்தார்.

பழக்கத்தின் காரணமாக, பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே மீனாட்சியும் வாங்கிக் கொண்டாள்.

நடேசன் மீனாட்சியிடம் மகிவும் பணிவுடனும் அடக்கத்துடனும் வணங்கி, விடைபெற்றுக் கொண்டார். மீனாட்சியும் நடேசனின் பணிவையும் அன்பையும் கண்டு மகிழ்ந்து, ‘தோடு முடிந்ததும் நல்ல சன்மானம் தந்து கெளரவிக்க வேண்டும்’ என்று நினைத்தவாறு புன்சிரிப்புடன் விடை தந்தாள்.

வீட்டைவிட்டு வெளியே வந்த நடேசன், திரும்பி மீண்டும் ஒருமுறை, ஒரு மாதிரியாக அந்த வீட்டைப் பார்த்தார். பிறகு தன் வேட்டியில் சுருட்டி மடக்கிக் கட்டியிருந்த மடிப் பகுதியை ஒரு தரம் தடவிப் பார்த்துக் கொண்டார்.

இப்பொழுது, நடேசன் நடையில் வேகம் இருந்தது.