கடவுள் கைவிடமாட்டார்/காட்டிலே வேட்டை!

4. காட்டிலே வேட்டை


வறுமையிலே வாடிய தன் குடும்பத்தை விஷக் காய்ச்சல் மேலும் கொடுமைப்படுத்தியதைக் கண்டும், கொஞ்சமும் கருணை காட்டாமல் கடுமையாகப் பேசித் தன்னை அவமானப்படுத்திய தருமலிங்கத்தை நினைத்துப் பார்க்கும் பொழுதே, நடேசனுக்கு அவர்மேல் கோபங் கோபமாக வந்தது.

அந்தக் கோபத்தின் விளைவாக, என்ன செய்கிறோம் என்று யோசித்துப் பார்க்காமலேயே அவசரமான காரியம் ஒன்றில் ஈடுபட்டு விட்டார் நடேசன்.

வைரக் கற்களுக்குப் பதிலாக போலிவைரங்களான இமிடேஷன் கற்களை வாங்கி, பொட்டலங் கட்டிக் கொண்டு வந்தார். உண்மையான பொட்டலத்தை மடியிலே வைத்துக்கொண்டு, தான் கொண்டுவந்த போலி வைரப் பொட்டலத்தைத் தந்துவிட்டு, நைசாக வீட்டை விட்டு வெளியே வந்தார் நடேசன்.

“இன்று இரவே, பக்கத்துப் பட்டணமாக விளங்கும் பேருருக்குச் சென்று, வைரக்கற்களை விற்றுவிடவேண்டும். விற்ற பணத்துடன் இரவோடு இரவாகத்தன் குடும்பத்தை வெகுதூரம் உள்ள ஒரு ஊருக்குக் கூட்டிச் சென்று, அங்கே நிம்மதியாக வாழவேண்டும்.”

இதுதான் நடேசனின் திட்டம்.

‘தருமலிங்கத்திற்கு இதுதான் சரியான தண்டனை’ என்று நடேசனின் மனம் மகிழ்ச்சியால் துள்ளி விளையாடியது. ‘தருமலிங்கத்தை நன்கு பழிவாங்கி விட்டேன்’ என்ற பேரானந்தத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்த நடேசன், ‘இதோ சீக்கிரம் வந்து விடுகிறேன்’ என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு, வேகமாக நடக்கத் தொடங்கினார்.

இந்த நம்பிக்கைத் துரோகத்தைக் காண மனம் சகிக்காமல், சூரியனும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தான். ‘என்ன ஆகுமோ, ஏதாகுமோ’ என்று பயப்படுவதுபோல, மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தன.

அந்த வட்டாரத்திலேயே தலைநகரம் போல விளங்கியது பேரூர். சர்க்கரைத் தொழிற்சாலை ஒன்று புதிதாக அந்த ஊரில் தொடங்கியிருந்ததால், அந்த சிறிய ஊர் குட்டி நகரத்தைப் போல விரிவடையலாயிற்று. பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கெல்லாம் நாகரிகம் கற்றுத் தரும் நகரமாகவும் அது மாறியிருந்தது.

அந்த பேரூருக்குப் போனால், எந்தவித சிரமமுமின்றி, வைரக்கற்களை விற்று விடலாம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நடேசன் ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டிருந்தார்.

இருட்டானது உலகத்தை இப்பொழுது நன்றாகப் பிடித்துக்கொண்டு விட்டது. விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக் கொண்டிருந்தன.

வாழவந்தபுரத்திலிருந்து அந்தப் பேரூருக்குப் போகவேண்டும் என்றால், வேறு பெரிய பாதைகளோ, ரோடுகளோ எதுவும் கிடையாது. கரும்பு விளைந்திருக்கும் வயல்களின் வரப்புகள் மீதுதான் நடந்து போக வேண்டும்.

கரும்பு வயல்கள் என்பதைவிட, கரும்புக் காடு என்பதுதான் பொருத்தமாக இருக்கும். புதிதாக வயல்களில் கரும்பு பயிரிடப்பட்டு இருந்ததால், மண் வளம் அதிகமாக இருக்கவே, எதிர்பார்த்த அளவுக்குமேல் கரும்பு உயரமாக வளர்ந்து, அடர்த்தியாக பின்னிக் கொண்டு இருந்தன. ஆகவே, அதனை இனி கரும்புக்காடு என்றே கூறலாம்.

பேரூரை அடைய வேண்டும் என்றால், குறைந்தது ஒரு மைல் தூரம் கரும்புக் காட்டிற்குள் நுழைந்துதான் செல்ல வேண்டும் என்பது நடேசனுக்கு நன்றாகத் தெரியும். பகலில் பத்துபேராக சென்றால் பயந் தெரியாது என்பதால், பலர் கூடி சேர்ந்து கும்பலாகவே பேரூருக்குப் போவார்கள்.

நடேசனுக்கோ இப்பொழுது அவசரம், யாரையும் துணைக்கு அழைக்கவோ, சேர்க்கவோ முடியாது. ஏனென்றால் இவர் திருட்டு வேலையல்லவா செய்திருக்கிறார் இருட்டிலே போவதாக இருந்தாலும் யாரையும் துணைக்குக் கூப்பிட முடியாதே! பயந்தவராக இருந்தாலும், இப்பொழுது எப்படியும் போய்த் தானே ஆகவேண்டும் நடேசன் துணிந்து, கரும்புக் காட்டின் வழியே நுழைந்து செல்லத் தொடங்கினார்.

நடுக் காட்டிற்குள் சென்றபொழுது, அவர் கரும்புகள் மீது மோதுகிற சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது ஒரு புதிய சத்தமும் கேட்கத் தொடங்கியது.

கரும்புகள் ‘மடமட’ வென்று முறிவதுபோல் சத்தம் தூரத்தில் கேட்கத் தொடங்கி, இப்பொழுது அவருக்கு மிகவும் அருகாமையிலே கேட்கத் தொடங்கியது. அத்துடன், சரசரவென்ற கரும்பு சரகுகளின் ஒலியுடன், யாரோ வேகமாக பின்னால் நடந்துவரும் சத்தமும் கேட்டது.

‘மனிதர்கள்தான் அவசரமாக வருகிறார்கள் போலிருக்கிறது’ என்று எண்ணித் திரும்பினார் நடேசன்!

என்ன பயங்கரம்! தீப்பந்தயம்போல இரண்டு கண்கள் மின்னின. தரை அதிர்வதுபோல கால்களைத் தூக்கி வைத்துக் காலடி போடுகின்ற தன்மையில், புலி ஒன்று அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

'புலி! இங்கே, இந்த ஊருக்கு எப்படி வந்தது? என்று எண்ணக் கூட நேரமில்லை நடேசனுக்கு. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடத்தொடங்கினார்.

புலியிடம் ஓட்டப் பந்தயமா?

பயங்கரமாகப் பாய்ந்தது புலி. நடேசனைத் தாக்கியது. தப்பித்து ஓடமுயன்ற நடேசன் இடுப்பிலே ஓங்கி அறைந்தது. ஒரே அறைதான்.

‘ஐயோ செத்தேன்’ என்று கீழே விழுந்தார் நடேசன். புலியின் ஒரே அறையில் மயக்கமடைந்து விட்டார். சுற்றுப் புறம் எங்கும் இரத்தம் தெளித்ததுபோல் பரவித் திட்டுத் திட்டாகக் கிடந்தது.

மீண்டும் புலி அவரைத் தாக்க முயன்றபொழுது, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்ட புலியானது நடேசனை விட்டுவிட்டு ஓடிவிட்டது.

துப்பாக்கியும் கையுமாக ஒரு ஆள் அங்கே ஓடிவந்தான். அவனைப் பார்த்தால் வேட்டைக்காரன் போல இல்லையே! அந்த இருட்டில் புலி வேட்டையாட வந்தானா என்றால் அதுவும் இல்லை.

சர்க்கஸ் கம்பெனியில் புலியை அடக்கி வேடிக்கை காட்டும் ‘ரிங் மாஸ்டர்’ தான்.

முதள் நாள் இரவு பேரூரில் நடந்த சர்க்கஸ் காட்சியில், யாருக்கும் அடங்காமல், அந்தப் புலி கூண்டுக்குள் இருந்த வேலைக்காரனைத் தாக்கிவிட்டு வெளியேறி வந்ததும், வேடிக்கை பார்த்த மக்கள் பதுங்கிக் கொண்டதும், மக்கள் எச்சரிக்கையுடன் நடமாட வேண்டும் என்று தண்டோரா மூலம் ஊரெல்லாம் அறிவித்திருந்ததும் நடேசனுக்குத் தெரியாது. தெரியவும் நியாயமில்லையே! அவர்தான், வைரக்கற்களை கடத்திக் கொண்டு போவதில் ஒரே குறியாக இருந்தாரே!

நடேசன் தான் நாள் முழுவதும் நகை வேலையில் ஈடுபட்டிருந்துவிட்டு, வீட்டுக்குப் போய் மனைவியின் பக்கத்தில் இருந்து மருந்து தந்தவராயிற்றே!

தப்பி வந்த புலியானது, தவறுசெய்து திருடிவந்த நடேசனைத் தாக்கிவிட்டுத் தப்பிவிட்டது.

துப்பாக்கியும் கையுமாக நின்ற ‘ரிங் மாஸ்டர்’ துரைசாமி, குனிந்து நடேசன் மூக்கருகில் கை வைத்து, மூச்சு வருகிறதா என்று பார்த்தார். மூச்சு மெதுவாக வந்து கொண்டிருந்தது.

அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று துரைசாமி நினைத்தார். என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, நடேசன் மடியில் வைத்திருந்த வைரக்கற்கள் அடங்கிய பொட்டலம் வெளியில் வந்து அவிழ்ந்து கிடந்ததைப் பார்த்துவிட்டார்.

மின்னிய வைரக் கற்கள், துரைசாமியின் எண்ணத்தையே மாற்றிவிட்டன. ஒரு மனித உயிரை விட, வைரமே மேலாகத் தோன்றியது. துரைசாமிக்கு, யாரும் அங்கு இல்லையே! வைர ஆசை, அவரது மனிதப் பண்பை மடக்கிவிட்டு, கொடூரப்படுத்திவிட்டது.

நடேசனை அப்படியே குற்றுயிராகப் போட்டுவிட்டு, பொட்டலத்தைத் தன் பைக்குள் போட்டுக்கொண்ட, துரைசாமி, புலியையும் மறந்து வேகமாகப் பிறப்பட்டார்.

துணையாக இருந்த துப்பாக்கியையும் கீழே போட்டுவிட்டார் துரைசாமி. காணக் கிடைக்காத வைரக் கற்களின் மீதே நினைவு இருந்ததால், சீக்கிரம் பேரூருக்குப்போக வேண்டும் என்ற அவசரமே அவருக்கு மேலோங்கியிருந்தது.

பாவம் நடேசன்! பேராசைக்கு அடிமையாகி, அனாதையாக, அந்த கரும்புக் காட்டிற்குள் குற்றுயிராகக் கிடந்தார். உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக, மார்பு மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது.

நடேசன் அடிபட்டுக் கிடந்த இடத்திற்குப் பக்கத்திலே ஒரு பெரிய மரமும், அதன் கீழே ஒரு சிறிய பரப்பளவு உள்ள ஒரு திடலும் இருந்தது.

அந்த இடத்தை அடைந்ததும், ஆசை உந்தித் தள்ள பையில் உள்ள பொட்டலத்தை எடுத்து, விரித்து, எத்தனைக் கற்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார் துரைசாமி.

எண்ணி முடித்து, பொட்டலத்தை மடித்து வைத்த பிறகு, தனது எதிர்காலம் எவ்வளவு ஒளிமயமாக விளங்கப் போகிறது என்று நினைக்கும் பொழுதே, துரைசாமிக்கு தலைகால் புரியவில்லை. சினிமா வில்லன் போல சத்தம் போட்டுச் சிரித்து மகிழ்ந்தார்.

‘சர்க்கஸ் கூடாரத்தில், வெறி பிடித்த மிருகங்களுடன் போராடும் வேலையை விட்டுவிட்டு, இனி காரும் பேருமாக, சீரும் சிறப்புமாக சிங்கார வாழ்வு வாழப்போகிறேன்’ என்று சத்தம் போட்டுப் பேசினார். இன்று நல்ல வேட்டை என்று வெடிச் சிரிப்பு சிரித்தார்.