கதை சொன்னவர் கதை/எழுபது வயதில் இனிய கதை தந்தவர்

சின்ட்ரல்லா மிகவும் நல்ல பெண். அவளுக்கு அம்மா இல்லை. அப்பா இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டிருந்தார். அந்த மாற்றாந்தாய் மிகவும் பொல்லாதவள். அவளுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அம்மாவைப் போலவே, அவர்களும் பொல்லாதவர்கள்; பொறாமைக்காரிகள் !

சின்ட்ரல்லாவை ஒரு வேலைக்காரியைப் போலவே அவர்கள் நடத்தி வந்தார்கள். அதிகாலையில் எழுந்தால், இரவு வெகு நேரம் வரை, வேலை இருந்து கொண்டேயிருக்கும். பம்பரம் போல் ஓடி, ஆடி வேலை செய்வாள். சகோதரிகள் இருவரும் வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டுச் சுகமாகத் தூங்குவார்கள்.

அன்று ஒருநாள், அரண்மனையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. விருந்து, ஆடல் பாடல் எல்லாம் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த விழாவிற்கு சின்ட்ரல்லாவின் இரண்டு சகோதரிகளும் விலையுயர்ந்த ஆடைகளையும், நகைகளையும் அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். ஆனால், சின்ட்ரல்லாவை அவர்கள் ‘அரண்மனைக்கு வருகிறாயா ?’ என்றுகூடக் கேட்கவில்லை !'

சின்ட்ரல்லாவுக்குத் துக்கம் தாங்கமுடிய வில்லை. விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று ஒரு குரல் கேட்டது. “சின்ட்ரல்லா, கவலைப்படாதே. நீயும் போகலாம்” என்றது அந்தக் குரல். உடனே, சின்ட்ரல்லா நிமிர்ந்து பார்த்தாள். எதிரே ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது !

சின்ட்ரல்லா அழுகையை நிறுத்தினாள்; ஆவலோடு தேவதையைப் பார்த்தாள் !

“சின்ட்ரல்லா, உனக்கு உதவவே நான் வந்திருக்கிறேன். நான் சொல்லுவதுபோல் செய். முதலில் ஒரு பூசணிக்காய் வேண்டும். கொண்டுவா” என்றாள்.

“இதோ கொண்டு வருகிறேன்” என்று கூறி விட்டு, சின்ட்ரல்லா தோட்டத்தை நோக்கி ஓடினாள் ஒரு பெரிய பூசனிக்காயைக் கொண்டு வந்து தேவதையின் முன்னால் வைத்தாள். தேவதை தன் கையிலிருந்த மந்திரக் கோலினால் அந்தப் பூசணிக்காயைத் தொட்டது. மறுவிநாடி பூசணிக்காய் ஓர் அருமையான கோச்சு வண்டியாக மாறிவிட்டது! கோச்சு வண்டிமட்டும் இருந்தால் போதுமா? அதை இழுத்துச் செல்லக் குதிரைகள் வேண்டாமா ? ooட்டுவதற்கு ஆட்கள் வேண்டாமா ?

அங்கே இருந்த எலிப் பொறியில் ஆறு சுண்டெலிகள் இருந்தன. அந்த ஆறு எலிகளையும் அழகிய குதிரைகளாக மாற்றிவிட்டது அத் தேவதை! பிறகு குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்த மூன்று எலிகளை கோச்சு வண்டிக்காரர்களாக மாற்றியது. ஒருவன் வண்டியை ஒட்டுவதற்கு; இருவர் பின்னால் காவலுக்கு!

சின்ட்ரல்லாவுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. உடனேயே அந்த வண்டியில் ஏறி அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனால், நல்ல உடை வேண்டுமே !

“சின்ட்ரல்லா, எங்கே உன் கண்களைச் சிறிது நேரம் மூடிக்கொள்” என்று சொன்னது தேவதை. சின்ட்ரல்லா தன் இரு கண்களையும் மூடிக்கொண்டாள். சில விநாடிகளானதும், “இப்போது கண்களைத் திறக்கலாம்” என்றது தேவதை.

சின்ட்ரல்லா கண்களைத் திறந்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்! அவள் உடம்பில் 'பளபள' என்று மின்னும் பட்டாடை இருந்தது! அவ்வளவு அழகான உடையை அவள் அதற்கு முன் பார்த்ததே பார்த்ததே இல்லை. கால்களைப் பார்த்தாள். கண்ணைக் கவரும் இரண்டு கண்ணாடிச் செருப்புகள் இருந்தன!

“நேரமாகிறது. புறப்படு. ஆனால், ஒன்று மட்டும் நினைவில் இருக்கட்டும். இரவு மணி 12 அடிப்பதற்கு முன்பு, நீ வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்” என்று கூறி, சின்ட்ரல்லாவைத் தேவதை வழியனுப்பி வைத்தது.

சின்ட்ரல்லா அரண்மனைக்கு வந்தாள். அவளைப் பார்த்ததும் இளவரசருக்கு அவள் மேல் பிரியம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் வழக்கப்படி அவளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். ஆடல் பாடல்களில் நேரம் போனதே தெரியவில்லை. தற்செயலாக சின்ட்ரல்லா அங்கிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். “ஆ ! மணி பன்னிரண்டு அடிக்கப் போகிறதே!” என்று கூறிக்கொண்டே, திடீரென்று அந்த இடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடினாள். ஓடிய வேகத்தில், அவள் காலில் அணிந்திருந்த ஒரு செருப்பு அங்கே விழுந்துவிட்டது. அவள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. காற்றாய்ப் பறந்து அரண்மனைக்கு வெளியே வந்தாள்.

அவள் வெளியே வருவதற்கும், கடிகாரம் ‘டாண்’, ‘டாண்’ என்று மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. அதே சமயம், அங்கு நின்ற அவள் ஏறிவந்த கோச்சும், இழுத்து வந்த குதிரைகளும், ஓட்டி வந்த ஆட்களும் மறைந்து விட்டனர். பூசணிக்காயும் எலிகளுமே அங்கிருந்தன! அத்துடன் போயிருந்தாலும் பரவாயில்லையே! அவள் அணிந்திருந்த உயர்ந்த ஆடைகளும் மறைந்து விட்டன! வழக்கமாக அவள் உடுத்தும் கிழிந்த துணிதான் உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்தது.

சின்ட்ரல்லா அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். இரவு வெகு நேரம் சென்று வீட்டுக்குத் திரும்பி வந்த சகோதரிகள், சின்ட்ரல்லா அழுவதைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தார்கள். சின்ட்ரல்லா அரண்மனைக்குச் சென்று, திரும்பி வந்தது அவர்களுக்கு எப்படித் தெரியும் ?

மறுநாள் காலையில் அரண்மனைச் சேவகன் ஒருவன் ஒரு குழாயை வாயில் வைத்துக் கத்திக் கொண்டே தெருவில் சென்றான். அவன் கையில் ஒரு கண்ணாடிச் செருப்பு இருந்தது.

“எந்தப் பெண்ணின் காலுக்கு இந்தச் செருப்புச் சேருகிறதோ அந்தப் பெண்னை இளவரசர் மனந்து கொள்ளப் போகிறார். கட்டாயம் மணந்து கொள்ளப் போகிறார்” என்று அவன் அறிவித்தான்.

உடனே ஒவ்வொரு வீட்டுக்குள்ளிருந்தும் கலியாணமாகாத பெண்கள் ஓடிவந்தார்கள். அந்தச் செருப்பை வாங்கி அணிந்து பார்த்தார்கள். ஒருவர் காலுக்கும் அது சேரவில்லை. சின்ட்ரல்லா சகோதரிகள் மட்டும் சும்மா இருப்பார்களா? அவர்களும் ஆசைஆசையாக அந்தச்செருப்பை வாங்கிப் போட்டுப் பார்த்தார்கள்; சேரவில்லை. சிறியதாயிருந்தது. எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்று முயன்று பார்த்தார்கள்; முடியவில்லை.

அங்தச் சமயம் சின்ட்ரல்லா அங்கே வந்தாள். கண்ணாடிச் செருப்பைப் பார்த்ததும் அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. உடனே அவள், “எங்கே அதைக் கொடுங்கள். நான் போட்டுப் பார்க்கிறேன்” என்றாள்.

இதைக் கேட்டதும், அவளது சகோதரிகள் இருவரும் கேலி செய்தார்கள்; கிண்டல் செய்தார்கள் சின்ட்ரல்லா அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. கண்ணாடிச் செருப்பை வாங்கிக் காலில் அணிந்து பார்த்தாள். கச்சிதமாக இருந்தது !

‘அடே, இவளுக்குச் சரியாக இருக்கிறதே!’ என்று வயிற்றெரிச்சலுடன் முணுமுணுத்தார்கள் சகோதரிகள்.

“ஆஹா ! நான் வந்த காரியம் வெற்றி !” என்றான் அரண்மனைச் சேவகன்.

அப்புறம்......?

அப்புறம் என்ன? சின்ட்ரல்லாவுக்கும், இளவரசருக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

—இந்தக் கதையில் வரும் ‘சின்ட்ரல்லா’ என்ற பெயர் உலகம் முழுவதும் தெரிந்த பெயராகி விட்டது.

இந்தக் கதையைப் பற்றி ஒரு கதை உண்டு. பிரெஞ்சு தேசத்தில் ‘பியரி’ என்று ஒரு சிறுவன் இருந்தானாம். அவன் தன் அப்பாவான சார்லஸ் பெரால்ட் (Charles Perrault) என்பவரிடம் இந்தக் கதையையும், வேறு சில கதைகளையும் சொன்னானாம். அவர் அந்தக் கதைகளையெல்லாம் மகிழ்ச்சியோடு கேட்டாராம். தாம் கேட்ட கதைகளைக் குழந்தைகள் விரும்பும் வகையில் அழகாக எழுதி வெளியிட்டு விட்டாராம்!

‘சின்ட்ரல்லா’ கதையைப் போலவே, இதுவும் ஒரு கட்டுக் கதை என்று பலரும் கருதுகிறார்கள். ‘பெரியவர் ஒருவர் சொன்ன கதை’ என்று சொல் சொல்வதை விட, ‘சிறுவன் ஒருவன் சொன்ன கதை’ என்றால் சிறுவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்களல்லவா? அதற்காகத்தான் இப்படி ஒரு கதை கட்டி விட்டார்களோ என்னவோ!

ஆயினும், இந்தக் கதையை இன்று உலகத்துக் குழந்தைகளெல்லாம் படித்து மகிழும்படி செய்த சார்லஸ் பெரால்ட் என்பவரை நாம் மறந்து விடலாமா?

பதினேழாம் நூற்றாண்டிலே பிரெஞ்சு தேசத்தில் நாடோடிக் கதைகளுக்கும், தேவதைக் கதைகளுக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டது. இந்தியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும்கூடப் பல கதைகளைத் திரட்டிச் சென்றார்கள். அவற்றையெல்லாம் பிரெஞ்சு மக்கள் ஆவலாய்க் கேட்டார்கள். சொல்லச் சொல்ல அந்தக் கதைகளுக்கு மெருகு ஏறியது. கேட்கக் கேட்க மக்களுக்கு இன்பம் பெருகியது. ஒருவரை விட ஒருவர் அந்தக் கதைகளைச் சிறப்பாகச் சொல்லத் தொடங்கினார்கள். இதில் பலத்த போட்டியும் ஏற்பட்டது.

பிரெஞ்சு மக்கள் பொதுவாகவே கலை உணர்ச்சி நிறைந்தவர்கள். அதனால், அவர்கள் இதுபோன்ற கதைகளை மிகவும் விரும்பிக் கேட்டார்கள். மக்களின் இந்த விருப்பத்தை நன்கு புரிந்துகொண்டார் பெரால்ட். அப்போது அவருக்கு எழுபது வயதிருக்கும். ‘நாம் கேள்விப்பட்ட தேவதைக் கதைகளைக் குழந்தைகளுக்கு ஏற்றபடி எழுதி, வெளியிட்டால், எத்தனையோ குழந்தைகள் படித்து இன்புறுவார்களே!’ என்று நினைத்தார். சில கதைகளை எழுதினார். அந்தக் கதைகள் எல்லாமே இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டன !

பெரால்ட், பாரிஸ் நகரத்தில் 1628-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தகப்பனார் ஒரு பாரிஸ்டர். அவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். அவர்தான் கடைக்குட்டி, நால்வரும் நன்கு படித்தவர்கள். எல்லாருமே நல்ல உத்தியோகத்தில் இருந்தார்கள். பெரால்ட் சட்ட்ப் படிப்புப் படித்துத் தேறியவர் ஆனால், சில ஆண்டுகள்தான் வக்கீல் தொழில் நடத்தினார். பிறகு, அவருடைய தமையனார் ஒருவருக்கு உதவியாகச் சிலகாலம் வேலை பார்த்தார்.

பெரால்ட் மக்களின் மன உணர்ச்சிகளே நன்கு அறிந்தவர். இது பற்றி அவர் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்தவர்.

பெரால்ட் கடைசி காலத்தில்தான் குழந்தைக் கதைகளை எழுதினார். ஆரம்ப காலத்தில் பெரியவர்களுக்காகப் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதிப் புகழ் பெற்றார்.

ஒரு சமயம் அவர் ஒரு கவிதை எழுதினார். அதனால் ஒரு பெரிய சண்டையே கிளம்பிவிட்டது. பழமையைப் போற்றுகிறவர்களுக்கும் புதுமையைப் பாராட்டுகிறவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தச் சண்டை பிரெஞ்சு தேசத்தில் மட்டும் நடைபெறவில்லை; இங்கிலாந்திற்கும் பரவலானது. இதனால், அவரது பெயர் எங்கும் தெரிய வாய்ப்பு ஏற்பட்டது.

பெரால்ட் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார். பிரெஞ்சு அரசாங்க மாளிகைகளேயெல்லாம் அவர்தாம் நிர்வாகம் செய்துவந்தார். பிரெஞ்சு இலக்கியக் கழகத்திலே அவர் ஒரு முக்கிய அங்கத்தினராக விளங்கினார். அக்கழகத்தில் நடக்கும் தேர்தல்களில் இரகசிய வாக்கு அளிக்கும் முறையை அவர்தாம் முதலில் ஏற்படுத்தினார்.

பெரியவர்களுக்காகவே எழுதி வந்த பெரால்ட் வருங்காலத்தில் பெரியவர்களாகப் போகும் குழந்தைகளை நினைத்துப் பார்த்தார். 'பெரியவர்களான பின் நல்ல இலக்கியங்களைப் படிக்க வேண்டுமானால், இப்போதே அவர்களைத் தயார் செய்ய வேண்டும்' என்று எண்ணினார். பிறகுதான் குழங் தைகளுக்கு எழுதத் தொடங்கினார்.

பெரியவர்களுக்காகவே எழுதிவந்த பெரால்ட் திடீரென்று குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியதும் பலர் கேலி செய்தார்கள். "அர்த்தமில்லாத கதைகளையெல்லாம் எழுதுகிறாரே!" என்று கூறி ஏளனம் செய்தார்கள். ஆயினும், அவர் குழந்தைகளுக்கு எழுதுவதை நிறுத்தவில்லை; தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார்:

அவரது நல்ல எண்ணமும், விடாமுயற்சியும் வீண் போகவில்லை. அவர் படைத்த பாத்திரங்கள் இன்று குழந்தைகளின் உள்ளங்களில் நிலையான இடம் பெற்றுவிட்டன!