கதை சொன்னவர் கதை/தேசிய கீதம் பாடியவர்



ஓர் ஊரில் ஒரு கிளி இருந்தது. எப்போது பார்த்தாலும், அது பழங்களைத் தின்று கொண்டும், ‘கீச்,கீச்’ என்று கத்திக் கொண்டும் திரியும்.

அந்தக் கிளியைப் பார்த்தார் அங்த ஊர் அரசர். “சேச்சே, இந்தக் கிளியை இப்படியே விட்டு வைத்தால் ஆபத்து! கொஞ்ச நாளில் பழங்களுக்கே பஞ்சம் வந்து விடும்! இதற்கு ஏதாவது படிப்புச் சொல்லிக் கொடுத்து, வேறு வழியில் திருப்ப வேண்டும்” என்று நினைத்தார். உடனே மந்திரிகளை அழைத்தார். ‘இந்தக் கிளி மிகவும் மக்காக இருக்கிறது. இதற்குப் படிப்புக் கற்றுக் கொடுக்க இப்போதே ஏற்பாடு செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

மந்திரிகள் பண்டிதர்களை அழைத்து, அவர்களுடன், “இந்தக் கிளிக்கு எப்படிப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம்” என்று யோசனை செய்தார்கள். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி தங்கக் கூண்டு ஒன்றைச் செய்து, அதற்குள் கிளியைப் போட்டு அடைத்தார்கள். பெரிய மண்டபம் ஒன்றில் அதைக் கொண்டு போய் வைத்தார்கள். சுற்றிலும் பண்டிதர்கள் உட்கார்ந்து கொண்டார்கள்.

கிளிக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக, ஆட்களை வைத்துப் புத்தகங்களை எழுதி எழுதிக் குவித்தார்கள். 'பெரிய பண்டிதராக அந்தக் கிளி விளங்கப் போகிறது' என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டார்கள். எப்போது பார்த்தாலும், கிளிக் கூண்டைச் சுற்றிப் பெரிய கூட்டம் கூடியிருக்கும்.

ஒருநாள், அரசர் கிளியைப் பார்ப்பதற்காக மண்டபத்துக்குச் சென்றார், மண்டப வாசலில் மங்கல வாத்தியங்கள் முழங்கின. பண்டிதர்கள் உற்சாகத்துடன் மந்திரங்களை உரத்த குரலில் ஓதினார்கள்.

என்ன சொல்லிக் கொடுத்தும் பயன் இல்லை கிளிக்குத் தண்ணிரோ அல்லது தானியமோ கொடுக்கவில்லை. படிப்பு ஏறவேண்டுமே, அதற்காக ஏடுகளைத் துண்டு துண்டாக வெட்டி எழுத்தாணியின் முனையால் வாய்க்குள்ளே திணித்தார்கள். இப்படிச் செய்தால், கிளி எவ்வளவு காலம் உயிரோடிருக்கும் ?

தினமும் அரசர் கிளியைப் பற்றி விசாரிப்பார். அன்றும் வழக்கம்போல் விசாரித்தார். "கிளிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதை யெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிக் கொடுத்து விட்டோம்” என்று பண்டிதர்கள் சொன்னார்கள்.

"கிளி நன்றாகப் படிக்கிறதா ? தாவுகிறதா ? கத்துகிறதா ? இரை தின்கிறதா ?" என்றெல்லாம் அரசர் கேள்வி மேல் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும், " இல்லை", "இல்லை” என்ற பதில் தான் வங்தது.

"அப்படியா ? உடனே அந்தக் கிளியைக் கொண்டு வாருங்கள், பார்க்கலாம்" என்றார் அரசர்.

கிளி கொண்டுவரப்பட்டது. அப்போது அது ஆடவில்லை; அசையவில்லை. அதற்கு மூச்சு இருந்தால் அல்லவா ஆடவோ அசையவோ செய்யும் ? பாவம், வயிற்றுக்குள் அவ்வளவு ஏடுகளையும் திணித்த பிறகு அது எப்படி உயிரோடிருக்கும் ?

-இந்தக் கதையை முதல் முதலாகக் கேட்ட வங்காளக் குழந்தைகள் அரசனுடைய முட்டாள் தனத்தை நினைத்து நினைத்துச் சிரித்தார்கள். இது அச்சாகி வெளிவந்தவுடன் குழங்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் படித்துப் படித்துச் சிரித்தார்கள்.

ஏற்கெனவே இந்தக் கதை நம் நாட்டுக் குழங்தைகளுக்குத் தெரியுமோ, தெரியாதோ! ஆனாலும், இதைச் சொன்னவர் பெயர் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். இதில் ஐயமே இல்லை அவர் இயற்றிய ஒரு பாடலை ஒவ்வொரு நாளும் நம் தேசத்திலுள்ள கோடானு கோடி குழந்தைகள் உணர்ச்சியோடு பாடுகிறார்கள். 'ஜன கண மன அதிகாயக ஜயஹே' என்ற பாடலைப் பாடாத இந்தியக் குழந்தை உண்டா ? அதுதான் நமது தேசீய கீதமாக எங்கும் ஒலிக்கிறதே ! கவியரசர் தாகூர்தான் 'ஜன கண மன' இயற்றியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 'அவர்தாம் பாடம் கேட்ட' கிளி என்ற கதையையும் சொன்னவர் !

தாகூர், அவருடைய அப்பா அம்மாவிற்குப் பதினான்காவது குழங்தையாகப் பிறந்தார். கடைசிக் குழந்தையும் அவர்தான்.

சிறுவயதில் கதை கேட்பதில் அவருக்கு அளவில்லாத ஆசை. அம்மாவை அவர் தொங்தரவு செய்யும் போதெல்லாம், "சித்தி, ரவியின் தொந்தரவு பொறுக்க முடியவில்லை. இவனுக்கு ஏதாவது கதை சொல்லேன்" என்று அவருடைய பாட்டியிடம் அம்மா சொல்லுவாள். உடனே பாட்டி, வெளி வராந்தாவில் உட்கார்ந்து தாகூருக்குக் கதை சொல்லத் தொடங்கிவிடுவாள். பாட்டியிடம் கதை கேட்டுக் கேட்டு, அவருக்கும் கதை சொல்ல வேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது. ஆனால், எப்படிச் சொல்லுவது ?

தாகூர் வீட்டு வராந்தாவில் ஒரு பல்லக்கு இருந்தது. அது பாட்டி காலத்துப் பல்லக்கு வர்ணமெல்லாம் மங்கி, உட்காரும் இடமெல்லாம் கிழிந்து கவனிப்பாரில்லாமல் கிடந்தது. தாகூர் ஓடிப்போய் அந்தப் பல்லக்கில் அடிக்கடி உட்கார்ந்து கொள்வார். நகராத அந்தப் பல்லக்கில் அவர் உட்கார்ந்ததும், அது நகர ஆரம்பித்துவிடும். 'விர்’ ரென்று வானத்தில் பறக்கும். திடீரென்று ஒரு தீவிலே போய் இறங்கும். அங்கிருந்து அழகான ஒர் ஊருக்குள்ளே புகுந்துவிடும். போகும் வழியிலெல்லாம் அவர் பல வீரதீரச் செயல்களைச் செய்து கொண்டே போவார். எல்லாம் கற்பனையில்தான் !

நாள் ஆக ஆக அவருடைய கற்பனை வளர்ந்தது. அருமையான கவிதைகளையும், கதைகளையும் எழுத அந்தக் கற்பனை அவருக்கு உதவியது.

தாகூர் பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்ததும், பாடப் புத்தகத்திலிருந்த ஒரு பாட்டை அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ஜால் படே, பத்தா கடே' என்று தொடங்கும் அந்தப் பாட்டு. 'சொட்டியது நீர்; சிலிர்த்தன இலைகள்' என்பது தான் அதன் பொருள். தாகூருக்கு அதைத் திரும்பத் திரும்பப் பாடுவதிலே ஓர் ஆனந்தம். காரணம், அந்தப் பாடலில் உள்ள இனிய ஓசையே!

தாகூர் வீட்டிலே ஒரு கணக்குப்பிள்ளை இருந்தார். அவர் பெயர் கைலாசம். அவர் ஒரு நாள் வேடிக்கையாக ஒரு பாடல் எழுதினார். அதைத் தாகூரிடம் பாடிக் காட்டினார். அந்தப் பாட்டின் கதாநாயகன் யார் தெரியுமா ? தாகூர்தான்! ஆம் தாகூரைக் கதாநாயகனாக வைத்தே அவர் அப் பாடலை எழுதியிருந்தார். அத்துடன், தாகூருக்கு ஏற்ற ஒரு கதாநாயகியையும் அந்தப் பாட்டிலே வரச் செய்தார். அவளுடைய அழகையும் ஆடை அலங்காரத்தையும் பற்றி மிகவும் நன்றாக அவர் வர்ணித்திருந்தார். தாகூருக்கு அந்தப் பாட்டிலே மிகவும் பிடித்தது அதிலுள்ள எதுகை, மோனை, சந்தம்-இவைகள்தாம். -

தாகூருக்கு அப்போது எட்டு வயது இருக்கும். அவருடைய உறவினர் ஒருவர் தாகூரிடம், "ரவி, நன்றாகப் பாடுகிறாயே, நீயே ஒரு பாட்டுக் கட்டிப் பாரேன்” என்றார்.

தாகூர் பாட்டு எழுதுவது மிகவும் சிரமம் என்று நினைத்தார். ஆனாலும், 'எழுதித்தான் பார்ப்போமே' என்று நினைத்து, எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு சிறு பாட்டை எழுதி முடித்தார்; தாமரையைப் பற்றியதே அந்தப் பாட்டு.

அதிலிருந்து தாகூருக்குப் பாட்டு எழுத வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவ்வப்போது ஒரு சில பாடல்களை எழுதி வந்தார். ஆனாலும், அவர் பாட்டு எழுதுவார் என்பது அவருடைய பதினேராவது வயதில்தான் பலருக்கும் தெரிந்தது.

தாகூரின் பள்ளித்தலைவர் கோவிந்தபாபு ஒரு நாள் தாகூரை அழைத்து, ரவி, நீ பாட்டு எழுது வாயாமே !’ என்று கேட்டார். தாகூர் தயக்கத்துடன் "ஆமாம்” என்றார்.

"சரி, நீ நாளை ஒரு பாட்டு எழுதிக் கொண்டு வா' என்று சொன்னார்.

தாகூர் மறுநாள் ஒரு பாடலை எழுதிக் கொண்டு போனார். கோவிந்தபாபு அதைப் படித் துப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தாகூரை அழைத்துக் கொண்டுபோய், மாணவர்களுக்கு முன்னால் பாடிக் காட்டச் சொன்னார். ஆனால் பலர், "இந்தப் பாட்டை ரவி இயற்றியிருக்க மாட்டான்; யாரோ எழுதிய பாட்டை இவன் திருடி, தான் எழுதியதாகச் சொல்லுகிறான்!” என்றார்கள், ஆனால், அவர்கள் சந்தேகம் விரைவில் தீர்ந்துவிட்டது. எந்தப் பொருளைக் கொடுத்தாலும், அதை வைத்துக் கவிதை எழுதும் திறமை அவருக்கு இருப்பதை அவர்கள் நேரிலே உணர்ந்தார்கள்.

தாகூர் அப்போது எழுதிய பாடலை ஒருவர் மிகவும் இனிமையான குரலில் தாகூரின் அப்பாவிடம் பாடிக் காட்டினார். அதைக் கேட்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தாகூர் இளம் வயதிலே, ஞானாங்குரம்' என்ற மாதப் பத்திரிகையில் தொடர்ந்து கவிதைகளே எழுதி வந்தார். ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதினார். பிறகு, தமது அண்ணை ஆரம்பித்த பாரதி' என்ற பத்திரிகையிலும் அடிக்கடி எழுதி வந்தார்.

அப்போது ஒரு வேடிக்கை நடந்தது.

தாகூர் வைஷ்ணவப் பாடல்கள் பலவற்றைக் கேட்டார். அவற்றைக் கேட்கக் கேட்க, அவற்றைப் போலவே பல பக்திப் பாடல்களை எழுத வேண்டுமென்ற ஆசை அவருக்குத் தோன்றியது. அவ்வாறே பல பாடல்களை எழுதினர். எழுதிய பிறகு, அவற்றை ஒரு பெரியவரிடம் கொண்டு போய்க் காட்டி, "இந்தப் பாடல்கள் மிக மிகப் பழைய ஒரு புத்தகத்தில் இருந்தன. அப்படியே பார்த்து எழுதிக் கொண்டு வந்தேன். படித்துப் பாருங்கள். எப்படியிருக்கின்றன?" என்று கேட்டார்

அவர், பாடல்களைப் படித்துப் பார்த்தார். "ஆஹா ! எவ்வளவு நன்றாக இருக்கின்றன !" என்றார்,

உடனே தாகூர் சிரித்தார், "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டார் அவர்.

"ஒன்றுமில்லை. விளையாட்டுக்காகச் சொன்னேன். இந்தப் பாடல்களை நானேதான் எழுதினேன்’ என்றார் தாகூர்.

இதைக் கேட்டதும், அந்த மனிதர், அது தானே பார்த்தேன். பாடல்கள் அப்படி ஒன்றும் பிரமாதமாயில்லையே!" என்றார்.

அதற்குப் பிறகு, தாகூர் அந்தப் பாடல்களை “பாரதி'யில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால், அவர் தம் சொந்தப் பெயரில் அவற்றை வெளியிடவில்லை; 'பானு சிங்கா' என்ற பழங்காலக் கவிஞர் ஒருவரின் பெயரில்தான் வெளியிட்டார். அந்தப் பாடல்களை அறிஞர்களெல்லாம் படித்தனர்; மிகவும் பாராட்டினர். ஆனால், அவற்றை பானு சிங்கா என்பவர் எழுதியதாகவே அனைவரும் நினைத்தார்கள்.

ஜெர்மனியில் படித்துக் கொண்டிருந்த நிஷிகாந்த் சட்டர்ஜி என்பவர் அந்தப் பாடல்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி, டாக்டர் பட்டம் கூடப் பெற்றுவிட்டார் !

தாகூர் சிறுவராயிருக்கும் பொழுது இராமாயணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அழகாகப் பாடுவார். மிகவும் துக்கமான இடங்களைப் பாடும் போது, அவருக்குக் கண்ணீர் வந்துவிடும். எத்தனையோ தடவைகள் அவர் அப்படிக் கண்ணீர் விட்டிருக்கிறார். அவர் கண்ணீர் விடுவதைக் காண அவருடைய பாட்டிக்குப் பொறுக்காது. உடனே அவர் கையிலிருக்கும் புத்தகத்தைப் பறித்து அறைக்குள் கொண்டு போய் வைத்துவிடுவாள்.

தாகூரையும் அவருடைய சகோதரர்களையும் சிறுவயதிலே அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமன்று. சிறுவர்களை யெல்லாம் வேலைக்காரர்கள் மேற்பார்வையில் விட்டுவிட்டுப் பெரியவர்கள் வெளியே சென்று விடுவார்கள். அப்போது, அந்த வேலைக்காரர்கள் வைத்ததுதான் சட்டம் !

சியாமா என்று ஒரு வேலைக்காரன் இருந்தான். அவன் தாகூர் இருக்கும் இடத்தைச் சுற்றி வட்டமாக ஒரு கோடு போடுவான். போட்டு விட்டு, “இதைத் தாண்டி நீ போகக் கூடாது. போனால் ஆபத்து!” என்பான். இராமாயணத்தில், இலக்குமணன் போட்ட கோட்டைத் தாண்டியதால்தானே, சீதை இராவணனிடம் அகப்பட்டுக் கொண்டாள்? அத்தக் கதை தாகூருக்குத் தெரியுமாதலால், பயந்,து போய் அந்தக் கோட்டுக்குள்ளேயே இருப்பார். அங்கிருந்தபடியே, சுற்றிலும் உள்ள மரம் செடி கொடிகளையும், பறவைகளையும் பார்த்துப் பார்த்து ஏதாவது கற்பனை செய்து கொண்டிருப்பார். அதுவும் நன்மைக்குத்தான்!

ஒரு சமயம், ரமேச சந்திர தத்தர் என்பவர் வீட்டில் திருமணம் நடந்தது. அதற்கு ரவீந்திரர் சென்றார். அவர் போன அதே சமயம் புகழ்பெற்ற வங்காள நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜியும் வந்தார். அவருக்கு மாலை போட்டு மரியாதையுடன் வரவேற்பதற்காக ரமேச சந்திரர் ஒரு மாலையை எடுத்துக்கொண்டு அவர் அருகில் வந்தார். பங்கிம் சந்திரர் தமக்குப் போடுவதற்காகக் கொண்டுவந்த மாலையைக் கையிலே வாங்கி, அருகில் நின்று கொண்டிருந்த தாகூர் கழுத்திலே போட்டுவிட்டு, “ரமேஷ், ரவீந்திரனுக்குத்தான் இந்த மாலை சேர வேண்டும். நீங்கள் ரவீந்திரனின் 'மலைப் பாக்கள்’ படித்திருக்கிறீர்களோ ?” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டார். பங்கிம் சந்திரர் போன்ற ஒரு பேரறிஞரின் பாராட்டுக் கிடைத்ததை நினைத்து தாகூர் பூரிப்படைந்தார். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ரவீந்திரரை வியப்புடன் பார்த்தார்கள்.

தாகூருக்குப் பள்ளிப் படிப்பு என்றாலே பாகற்காயாகக் கசந்தது! இதற்குத் தகுந்த காரணம் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைதான் அவருக்குச் சிறிது ஓய்வு கிடைக்கும். மற்ற நாட்களிலெல்லாம் விடிந்தது முதல் விளக்கு வைத்த பிறகுகூடப் படிப்பு அவரை விடுவதில்லை. எந்நேரமும் படிப்பு, படிப்பு, படிப்புத்தான் !

“எத்தனை பேரோ காய்ச்சல், குளிர் என்று பள்ளிக்கூடம் வராமல் இருக்கிறார்களே ! நமக்கும் அப்படி ஒரு காய்ச்சல் வரக்கூடாதா?’ என்று தாகூர் அக்காலத்தில் நினைப்பாராம். குளிர் காலத்தில் திறந்த வெளியில் படுத்துத் தூங்குவாராம். தண்ணீரில் இறங்கி வெகு கேரம் ஆட்டம் போடு வாராம். என்ன செய்தும் அவரை எவ்வித நோயும் அணுகவில்லை !

பள்ளிக்கூடம் ஒரு சிறைச் சாலையாகவே அப்போது அவருக்குத் தோன்றியது. 'குழந்தைகளுக்கு நல்ல முறையில் அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் எப்படிக் கல்வி அளிக்கலாம்’ என்று பிற்காலத்தில் அவரைச் சிந்தனை செய்யத் தூண்டியதே இந்த அனுபவம்தான். அந்தச் சிந்தனையில் தோன்றியதுதான் 'சாந்தி நிகேதனம்’ என்ற கல்விக் கூடம்.

ஐந்து பிள்ளைகளுடன் ஆரம்பமான அந்தக் கல்வி நிலையம் இன்று 'விஸ்வ பாரதி' என்னும் பெயரில் உலகம் புகழும் பல்கலைக் கழகமாக விளங்குகிறது.

ஆரம்ப காலத்தில் தாகூரும் அவர் மனைவி மிருணாளினி தேவியாரும் அந்தக் கல்வி நிலையத்தை கடத்துவதற்கு எவ்வளவோ பாடுபட்டார்கள். அப்போது பண நெருக்கடி அதிகம். மிருணாளினி தேவியார் தம்முடைய நகைகளை யெல்லாம் விற்றுப் பண உதவி செய்தார்.

தாகூர் எழுதிய பல பாடல்களை அவரே ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து வைத்திருந்தார். 1912-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்ற போது, அங்கிருந்த சில நண்பர்களிடம் அவற்றைப் படித்துக் காட்டினார். அவர்கள் அப்பாடல்களை மிகவும் பாராட்டினார்கள். ‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் அப்பாடல்களை உடனே அவர் வெளியிட்டார். அதற்கு 1913-ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. அதற்கு முன் ஆண்டுதோறும் ஐரோப்பியர்களுக்கே அப்பரிசு கிடைத்து வந்தது. ஆசியாக்காரருக்கு நோபல் பரிசு கிடைத்தது அதுவே முதல் தடவை. பரிசாகக் கிடைத்த 18000 பவுனேயும் அவர் சாந்தி நிகேதனத்துக்கே கொடுத்துவிட்டார் !

தாகூர் எதை எழுதினாலும், அதை அவரே பலரிடமும் படித்துக் காட்டுவார். மாலை நேரங்களில் சாந்தி நிகேதன மாணவர்களையும் நண்பர்களையும் கூட்டி வைத்துக்கொண்டு தமது இனிய குரலில் படிப்பது வழக்கம். தாம் எழுதியிருப்பதை மற்றவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே அவர் இப்படிச் செய்வார்.

தாகூர் குழந்தைகளுக்காக பிறைமதி என்ற தலைப்பில் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். எல்லாமே உள்ளத்தைக் கவரக்கூடியவை. குழந்தைகளுக்காக அவர் கதைகளும் பாடல்களும் எழுதியதோடல்ல; பெரியவர்களுக்காக எழுதிய கதைகளிலும், கவிதைகளிலும்கூடக் குழந்தை உள்ளத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

தாகூர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.

அவரது நூறாவது பிறந்த நாளை, இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதுமே கோலாகலமாகக் கொண்டாடியது.

இத்தகைய ஒரு சிறந்த கவிஞர் பிறந்த நாட்டிலே, நாமும் பிறந்திருக்கிறோம். இது நமது அதிர்ஷ்டமல்லவா?