கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/குறிஞ்சிக் கிழவன்

குறிஞ்சிக் கிழவன்

1

ந்தர் அலங்காரத்தில் முருகனுடைய திருவிளையாடல்கள் வரும். தத்துவ நூற் கருத்துக்கள் வரும். தோத்திரமும் இருக்கும். எல்லாவற்றையும் நயமாக அலங்காரமாகச் சொல்வார் அருணகிரிநாதர். காப்பிய நயங்களைப் பல இடங்களில் பார்க்கலாம். "இது முறையா?" என்று கேட்பது போலச் சில இடங்களில் இருக்கும். அது விடையை எண்ணிக் கேட்பது அன்று. அப்படிக் கேட்பதே ஒரு வித்தகம். அத்தகைய பாட்டு ஒன்றை இப்போது கவனிக்கலாம்.

சொல்லும் முறை

ருணகிரியார் கந்தர் அலங்காரத்தின் முதற்பாட்டில் விநாயகரைச் சொன்னார். பின்பு முருகனுடைய பெருமையினால் தாம் அடைந்த பேற்றைச் சொன்னார். அவன் தன்னுடைய வேலினால் கிரெளஞ்ச சங்காரம் செய்த கதையையும், சூரபன்மனை வதம் செய்த கதையையும் பிறகு சொன்னார். இது புராணமாக இருந்தால் கந்தப் பெருமானின் அவதாரம், அவனுடைய திருவிளையாடல்கள் என்று வரிசையாக வரும். தோத்திர நூல்; அன்பினால் முருகனை நினைந்து வியந்து பாடும் நூல்; ஆதலால் அடைவாக நிகழ்ச்சிகளைச் சொல்லாமல் முன்பின்னாக மாற்றிச்சொல்வார்.

கிழவன்

ருணகிரிநாதருக்கு முன்பே பல பெரியார்கள் முருகனது பெருமையைப் பாடியிருக்கிறார்கள். அவ்வாறு பாடிய பெரும் புலவர்களில் நக்கீரர் ஒருவர். அவர் பாடியது திருமுருகாற்றுப் படை. அந்த நூலின் முடிவிலே,

"பழமுதிர் சோலை மலைகிழ வோனே"

என்று அவர் பாடியிருக்கிறார். 'கிழவன்' என்ற சொல்லுக்கு இப்போது வழங்கும் பொருள் முன்பு இல்லை. கிழவன் என்பதற்கு உரியவன் என்றுதான் பொருள். ஒரு பெண்ணின் கணவனை, 'கிழவன்' என்று சொல்வார்கள். அவ்வாறே மனைவியை 'கிழவி' என்பார்கள்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்"

என்று வள்ளுவர் சொல்கிறார்.

"நிலத்திற்கு உடையவன், தானே நிலத்திற்குப் போய்க் கவனிக்காமல் வீட்டில் இருந்தால், தன்னைக் கவனிக்காத கணவனிடம் மனைவி ஊடல் கொள்வது போல நிலம் விளைவு தராமல் போய்விடும்" என்பது இதன் பொருள். இதில் கிழவன் என்ற சொல் உரியவன் என்ற பொருளில்தான் வந்திருக்கிறது. மலைகளுக்கு உரியவன் முருகன். அவன் மலையாண்டி. மலையும் அதைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். குறிஞ்சி நிலத்துக்கு உரியவனாகையால் "குறிஞ்சிக் கிழவன்" என்று முருகனை அழைப்பார்கள்.

ஐந்திணை

லகத்தைக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்து வகைகளாகத் தமிழர்கள் பிரித்தார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெறும். ஒன்றும் வளராமல் இருக்கிற இடம் பாலை நிலம். ஒரே காடாக இருக்கிற பகுதி முல்லை நிலம். வேளாண்மை செய்யும் வயல்களை உடைய இடம் மருத நிலம். கடலைச் சார்ந்த இடம் நெய்தல் நிலம். ஒர் ஆறு மலையிலே உற்பத்தியாகி, ஒன்றும் விளையாத பாலைவனத்தின் வழியே போய், காட்டுக்குள் நுழைந்து, மக்கள் வசிக்கின்ற ஊருக்குள் புகுந்து, கடைசியில் கடலோடு கலக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஐந்து திணைகளையும் முறையாகத் தெரிந்து கொள்ளலாம்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இந்த ஐந்து நிலங்களுக்கும் உரியவர்களாக ஐந்து தெய்வங்களைத் தமிழர்கள் அமைத்து வழிபட்டார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வம் முருகன்; புற்பூண்டு ஒன்றும் வளராமல் இருக்கிற பாலை நிலத்துக்குத் தெய்வம் காளி; ஒரே காடாக இருக்கிற முல்லை நிலத்துக்குத் தெய்வம் திருமால்; மக்கள் வேளாண்மை செய்து வாழும் நிலமாகிய மருத நிலத்துக்குத் தெய்வம் இந்திரன்; கடலும் கடலைச் சார்ந்த இடமும் ஆகிய நெய்தல் நிலத்துக்குத் தெய்வம் வருணன்.

குறிஞ்சி

ந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி"

என்று தன் குடியின் பழமையை ஒரு மறவன் பேசுகிறான். கல் தோன்றிய பிறகே மண், ஆறு, ஊர், கடற்கரை யாவும் தோன்றின. முதலில் தோன்றிய மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தார்கள். அதனால் முருகனை முதல்வனாகவும் மிகப் பழைய தெய்வமாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று தெரியவரும். முருக வழிபாடு பழங்காலந்தொட்டே தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது.

குறிஞ்சிக் கடவுள்

"சேயோன் மேய மைவரை உலகமும்"

என்று தொல்காப்பியம் சொல்கிறது. சேயோன் என்பதற்குச் சிவந்த நிறம் உடையவன் என்று பொருள். சிவந்த நிறம் உடைய முருகன் மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் விரும்பி, அங்கே தங்கி இருக்கிறான்.

இந்த நாட்டினர் உயர்ந்த கடவுளை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றவேண்டுமென்று எண்ணினார்கள். கொஞ்சம் மரியாதை உள்ளவர்கள் நம் வீட்டுக்கு வந்தால் அவர்களை நாம் உயர்ந்த ஆசனம் போட்டு உட்காரச் செய்கிறோம். "உச்ச ஸ்தானேஷ பூஜ்யந்தே" என்று வடமொழியில் சொல்வார்கள்.

எல்லோரையும்விட உயர்ந்தவன் முருகன். அவன் படைத்த இந்த நில உலகத்தில் எல்லாப் பொருள்களையும்விட உயர்ந்தது மலை. அந்த உயர்ந்த இடத்தில் முருகக் கடவுளை வைத்துப் போற்றினார்கள். அழகு கெழுமிய முருகனை உயர்ந்த மலைகளுக்கு எல்லாம் உரியவனாகச் செய்தார்கள்.

"விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ"

என்று திருமுருகாற்றுப்படையில் வருகிறது. 'வானை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியவனே' என்பது பொருள். ஆகவே, நக்கீரர் இரண்டிடங்களில் முருகனைக் கிழவன் என்று சொல்கிறார். இரண்டிடங்களிலும் உரியவன் என்ற பொருளே சொல்ல வேண்டும்.

ஆனால் இன்றைக்கு, கல்யாணமான ஒரு பெண்ணிடம் போய், "உன் கிழவன் வந்துவிட்டானா?" என்று கேட்டால், "கிழவன் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்பாள். "உனக்கு உரியவனாகிய உன் கணவனைத்தான் சொல்கிறேன்" என்றால் அவளுக்குக் கோபம் வந்துவிடும். "என்ன? என் கணவரைக் கிழவன் என்கிறீர்களே! நான் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்படவில்லை. என்னைவிட அவருக்கு இரண்டு வயசு தான் அதிகம். எனக்குப் பதினெட்டுதான் ஆகிறது. அவரைக் கிழவன் என்று சொல்லாதீர்கள்" என்று கோபிப்பாள். 'கிழவன்' என்ற சொல்லுக்கு 'வயசானவன்' என்ற பொருள் பிற்காலத்தில் வந்துவிட்டது. அதுதான் அவள் கோபிப்பதற்குக் காரணம். அந்தப் பொருள் அருணகிரிநாதர் காலத்திலேயே வந்துவிட்டது.

சமத்காரம்

க்கீரர், என்றும் இளையவனாக உள்ள முருகனை,

"விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ"

என்று பாடியிக்கிறாரே என்று வேடிக்கையாக ஓர் எண்ணம் அருண்கிரியர்ருக்குத் தோன்றியது. 'கிழவன் என்று மற்றவர்களைச் சொன்னாலும் பொருத்தமாக இருக்கும். என்றும் அழகியவனாய், என்றும் இளமையோடு இருக்கிற முருகனை இந்தக் குவலயம் குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லலாமா? நித்திய யெளவன சுந்தரமூர்த்தி அல்லவா அவன்?' என்ற நினைவு தோன்றியது.

என்றும் இளையவன்

ன்றும் இளையபிரானாக, சதா பால ரூபத்தை உடையவனாக முருகன் இருக்கிறான். பாலசுப்பிரமணியன் என்ற பெயரிலிருந்தே அவன் எப்போழுதும் பாலனாக இருக்கிறான் என்பது தெரியும். பாலன் என்றாலே முருகனைக் குறிக்கும்.

வடக்கே திருவேங்கட மலை இருக்கின்றது. அங்கே வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கே முருகன்தான் எழுந்தருளியிருக்கிறான் என்று சிலர் சொல்வார்கள். இல்லை என்று சிலர் மறுப்பார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அங்கே திருமால் இருக்கிறார். முருகனும் இருந்தான். முருகன் கோயில் அங்கே இருந்ததற்குப் பல அடையாளங்கள் உண்டு. அங்கே எழுந்தருளியிருக்கும் திரு மாலை நாம் எல்லோரும் வேங்கடேசுவரன் என்று சொல்கிறோம். வைணவர்கள் ஸ்ரீ நிவாசன் என்று சொல்வார்கள். ஆனால் வடநாட்டிலிருந்து வருகிறவர்கள் எல்லோரும், "பாலாஜி, பாலாஜி" என்று சொல்லுவார்கள். பாலாஜி என்பது பாலன் என்ற பொருளுடையது. அப்பெயர் முருகனுக்கே உரியது. குழந்தைப் பெருமானாகிய முருகன் திருவேங்கட மலையில் பழங்காலம் முதற்கொண்டே ஆட்சி பெற்று வந்திருக்கிறான் என்பதற்கு இந்தச் சொல்லும் ஒரு சான்று. இவ்வாறு என்றும் இளையவனாக, சதா பால ரூபத்தோடு இருக்கிற முருகனைக் குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லலாமா?

குழந்தையின் செயல்கள்

முருகன், உருவத்தில் மாத்திரம் இளையவன் அல்ல. பல வகைப்பட்ட அவன் செயல்களும் குழந்தைக்கு உரியனவாக உள்ளன. குழந்தைப் பருவத்துக்குரிய இலக்கணங்கள் சில உண்டு. குழந்தை தொட்டிலில் படுத்து விளையாடும். தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் பருவம் குழந்தைப் பருவம். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற பழமொழியில் தொட்டில் என்ற பழமொழியில் தொட்டில் என்றது குழந்தைப் பருவத்தைக் குறிக்கிறது. பச்சிளம் பாலகன்தான் தொட்டிலில் படுத்து விளையாடுவான். "அழுத பிள்ளை பால் குடிக்கும்" என்ற பழமொழி சொல்கிறோம். பிள்ளைகள் எல்லாம் தாயாரிடம் பால் குடிக்கும். தாய் பால் கொடுக்க மறந்துவிட்டாலும், அழுது, தாயைக் கூப்பிட்டுப் பால் கொடுக்கச் செய்கிறது குழந்தை.

தொட்டிலில் படுத்துத் தூங்குவது குழந்தையின் லட்சணம். பால் குடிப்பது குழந்தையின் இயல்பு. அப்படியே அழுவதும் குழந்தையின் லட்சணம். ஒரு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் பழைய காலத்துத் தாய்மார்கள் அந்த வீட்டுக்குப் போய் விசாரிப்பார்கள். இப்பொழுது இருக்கிற நாகரிகப் பெண்களுக்கு தாய்மார்கள் வந்து விசாரிப்பதைக் கேட்டால் இவர்களுக்குக் கோபம் வரும். அவர்கள் குழந்தை பிறந்த வீட்டுக்குப் போய், "குழந்தை அழுது கொண்டிருக்கிறதா?" என்று விசாரிப்பார்கள. 'குழந்தை அழுகிறதா' என்று கேட்கிறார்களே; அமங்கலமான கேள்வி அல்லவா? அப்படிக் கேட்கலாமா? என்று அதன் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும். வயசான நாம் அழுவது துக்கத்துக்கு அறிகுறி. ஆனால் குழந்தை அழுவது சுகத்திற்கு அறிகுறி. அது அழுதால் சுவாசப் பைகள் நன்றாக இயங்கும். உடம்பு வேலை செய்ய வேண்டுமானால் சுவாசப்பை நன்றாக வேலை செய்ய வேண்டும். குழந்தை அழுதால் சுவாசப்பை விரிந்து சுருங்கி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அந்த அழுகை ஆரோக்கியத்தைக் காட்டுகிறது.

குழந்தை என்பதற்குரிய முக்கிய இலக்கணங்கள் மூன்று; தொட்டில் விளையாட்டு, பால் குடித்தல், அழுகை, உலகத்திலுள்ள எல்லாப் பச்சிளம் குழந்தைகளுக்கும் இவை இயல்பு.

முருகப்பெருமான் எப்போதும் குழந்தை உருவத்தில் இருப்பவன் அல்லவா? உருவத்தில் மட்டும் குழந்தை அல்ல. செயலிலும் குழந்தை என்பதற்குரிய இந்த மூன்று இலக்கணங்களும் அவனிடம் இருக்கின்றன. "குருத்தைப் போலுள்ள அந்தப் பச்சிளம் குழந்தையை கிழவன் என்று உலகத்தார் சொல்கிறார்களே; சொல்லலாமா?" என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலே சமத்காரமாகச் சொல்கிறார். பாட்டைக் கவனிக்கலாம்.

2

முருகக் குழந்தையின் செயல்கள்

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை
திருமுலைப் பால் அருந்தி

மாதேவியாரின் தனங்களிலேயே ஊறின பாலை அருந்தியவன் முருகன். அவன் பால் குடிக்கும் குழந்தையாக இருப்பவன்.

சரவணப் பூந்தொட்டில் ஏறி.

அவன் சரவணப் பொய்கையில் மலர்ந்திருக்கிற தாமரையாகிய தொட்டிலில் படுத்து விளையாடினான்; தூங்கினான். ஆகவே அவன் தொட்டிலில் படுக்கும் குழந்தையாக உள்ளவன்.

அறுவர் கொங்கை விரும்பி.... அழும்,

தனக்குப் பால் கொடுப்பதற்காக, கார்த்திகை மாதர்களாகிய ஆறு பேரும் இன்னமும் வரவில்லையே, அவர்களுடைய பாலை உண்ணவேண்டுமே என விரும்பினான்; அழுதான்.

கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும்
குருந்தை

முருகக் குழந்தை அழுகிறது; மற்றக் குழந்தையைப் போலவா அழுகிறது? நம் வீட்டில் பிறந்த குழந்தை அழுதால் அதன் குரல் அடுத்த வீட்டுக்குக்கூடக் கேட்பதில்லை. உடல் வலிமை அல்லாத தாய்க்குப் பிறப்பதனால் அதன் தொண்டை பலமற்று இருக்கும்; நெஞ்சு இறுகி இருக்கும். ஆனால் முருகனென்னும் குழந்தை வலிமையற்ற குழந்தையா? உயர்ந்த இமய மலையில் அழகான சரவணப் பொய்கையில், தாமரை மலராகிய தொட்டிலின் மீது படுத்து அழும்போது, அந்த அழுகை ஒலி மலைகளில் முட்டி மோதி ஒ, ஓ, ஒ என்று எதிரொலிக்கிறது. கடல் அலைகளின் மீது முட்டி மேர்தி எதிரொலிக்கிறது. சூரன் என்னும் அசுரனுடைய காதில் இந்தக் குழந்தையின் அழுகை ஒலி பட்ட மாத்திரத்தில், அவன் தன்னைக் கொல்ல யமன் வந்து விட்டானோ என்று 'ஒ, ஓ, ஒ' என்று அலற ஆரம்பித்து விடுகிறான். அந்தக் குழந்தை ஒரு தடவை மாத்திரம் அழுததா? ஆறு பெண்களை அழைக்க வேண்டாமா? ஆறு முறையாவது அழுதிருக்க வேண்டும். எப்படி அழுதது? விம்மி விம்மி அழுததாம்.

அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச்
சூர்அழ விம்மி அழும்
குருந்தை

ஒரு முறை அழுதவுடனே கடல் அழ ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது சரணம்போல் மறுமுறை அழுதவுடனே, அதன் எதிரொலிபோல் மலை அழ ஆரம்பித்துவிட்டது. மூன்றாவது சரணம்போல் அடுத்த முறை அழுதவுடனே அதன் எதிரொலி போலச் சூரபன்மன் அழ ஆரம்பித்துவிட்டான்.

இப்படிப் பால் குடித்துத் தொட்டிலில் தூங்கி அழும் பச்சிளங் குழந்தையைக் கிழவன் என்று சொல்லலாமா? பொருத்தமற்றதாகக் காட்டி இப்படிச் சொல்வதில் ஓர் அழகு இருக்கிறது. கிழவன் என்ற சொல்லுக்கு இப்போது இரண்டு பொருள்கள் உண்டு. உரியவன் என்பது ஒன்று. முதியவன் என்பது ஒன்று. இளங் குழந்தையைக் கிழவன் என்று சொல்லலாமா என்று கேட்கும் கேள்வி, கிழவன் என்பதற்கு முதியவன் என்ற பொருளை மாத்திரம் எண்ணி, இரு முரணன்றோ என்ற கேட்பது போல இருக்கிறது.

இந்தப் பாட்டில் "திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்தி" என்னும் பகுதி முருகனது ஒரு திரு விளையாடலைக் குறிக்கிறது. “சரவணப் பூந்தொட்டிலேறி" என்பது இரண்டாவது திருவிளையாடல். "அறுவர் கொங்கை விரும்பி" என்பது மூன்றாவது திருவிளையாடல். "கடலழக் குன்றழச் சூரழ விம்மி அழும், குருந்தை" என்பது நான்காவது திருவிளையாடல். இப்படி இந்த நான்கு அடிகளிலும் நான்கு திருவிளையாடல்கள் அடங்கி இருக்கின்றன. கந்தபுராணத்தில் இருவேறு பகுதிகளில் இவற்றைக் காணலாம். முருகன் உமா தேவியாரின் பாலைக் குடித்தது, சரவணப் பூந்தொட்டிலில் விளையாடியது. கார்த்திகை மாதர்கள் ஆறு பேர்களின் பாலைக் குடித்து வளர்ந்தது ஆகிய மூன்று திருவிளையாடல்களும் கந்த புராணத்தில் உற்பத்தி காண்டத்தில் உள்ளது. நான்காவது திருவிளையாடல், கந்த புராணத்தின் யுத்த காண்டத்தில் இருப்பது.

புவனங்கள் ஈன்ற பாவை

ந்தர் அலங்காரத்தில் நாம் முருகனைப் பார்ப்பதோடு நிற்பதில்லை. அவனுடைய சுற்றத்தார்கள் எல்லோரையும் பார்க்கிறோம். முதல் பாட்டிலே விநாயகரைக் கண்டோம்; பின்பு, “ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த" பெருமானாகிய அவனுடைய தகப்பனைக் கண்டோம். அன்னை வரவில்லை. இப்பொழுது வருகிறாள்; முருகன் பால் குடிக்கும் கதையைச் சொல்லும்போது வருகிறாள்.

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை

பாவை என்பது பதுமை. பெண்களைப் பதுமைபோல இருக்கிறார்கள் என்று சொல்வது மரபு. அழகும் மெருகும் குறையா வண்ணம் பதுமை இருப்பது போல, அழகிய பெண்கள் இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள். எம் பெருமாட்டி எப்போதும் எழில் பொருந்திய முகத்தோடு வாட்டம் இன்றி மெருகு குறையாமல் செக்கச் செவேல் என்று பொன்னிறம் பெற்றவளாக இருக்கிறாள். அதனால் அவளைப் பொற்பாவை என்கிறார். பொற்பாவை - பொன்னாலான பதுமை.

பராசக்தியை நாம் உமாதேவி என்கிறோம்; பார்வதி தேவி என்கிறோம். ஆனால் சக்தி உபாசகர்கள், ராஜராஜேசுவரி, மகா திரிபுரசுந்தரி என்று சொல்லுவார்கள். மகாதிரிபுர சுந்தரி செம்பொன் மேனி உடையவள்; பொற்பாவை போல இருக்கிறவள்; சிவந்த மேனி உடையவள். அவள் மாத்திரமா சிவப்பு? பரமேசுவரனும் சிவந்த மேனி உடையவன். எல்லோருமே செம்மையாக இருப்பவர்கள். செம்மையான குடும்பம் அது. பரமேசுவரனை, "சிவனெனும் பெயர் தனக்கே உடைய செம்மேனி அம்மான்" என்று அப்பர் பாடுகிறார். மகா திரிபுரசுந்தரியாகிய பராசக்தியை,

"உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே" என்று அபிராமிபட்டர் பாடுகிறார். எம்பெருமாட்டி குங்குமத்தைப் போன்ற சிவந்த திருமேனி உடையவள். இவ்விருவருக்கும் குழந்தையாகிய முருகனை, "செய்யன் சிவந்த ஆடையன்" என்று நக்கீரர் பாடுகிறார். "பவளத்தன்ன மேனி" என்று பெருந்தேவனார் துதிக்கிறார்.

சிவந்த மேனியை உடைய முருகப் பெருமானை ஈன்ற தாய், செம்பொன்னாலான பாவையைப் போல ஒளிர்கிறாள். அந்தப் பொற்பாவைதான் இந்தப் புவனங்கள் எல்லாவற்றையும் ஈன்றாள். புவனம் என்பது உலகம். இந்த உலகத்தை எல்லாம் ஈன்றவள் பொற்பாவையாகிய எம்பெருமாட்டி ராஜராஜேசுவரி. அவள் தனக்கு ஒரு பயனைக் கருதிப் பெறவில்லை. உயிர்கள் திருந்த வேண்டும், ஒழுங்குபட வேண்டுமென்று ஈன்றாள்; படைததாள்.

உயிர்கள் உலகத்தில் வாழ வேண்டுமானால் தனி உயிராக இருந்தால் இயலாது. அவை எப்போதும் ஏதேனும் ஒன்றோடு சேர்ந்தே இருக்கும். ஒன்று, அவை பாசத்தோடு இணைந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பதியோடு இணைந்திருக்க வேண்டும். பாசத்தோடு இணைந்திருக்கிற வாழ்க்கையே நம் வாழ்க்கை. பதியோடு இணைந்து இன்புறும் வாழ்க்கையே முத்தி. பாசத்தோடு இணைந்திருக்கும் உயிர் பதியோடு இணைய வேண்டுமானால் பல பிறவிகள் எடுத்து எடுத்துத் திருந்த வேண்டும். உயிர்கள் யாவும் திருந்த வேண்டுமென்பதற்காகவே பராசக்தி தனு, கரண புவன போகங்களை அவற்றுக்குக் கொடுத்திருக்கிறாள்.

"புவனங்கள் ஈன்ற பொற்பாவை என்றுதானே சொல்கிறார்? தனு கரண புவன போகங்களை எல்லாம் ஈன்றவள் அவளேயானால் மற்றவற்றைச் சொல்லவில்லையே? இப்படித் தோன்றலாம். அந்த ஒன்றைச் சொன்னால் அதனோடு இனமான மற்றவற்றையும் கொள்ள வேண்டும். அதை உபலட்சணம் என்று இலக்கணக்காரர் சொல்வர். "அம்மா சாதம் போட்டாள்" என்று குழந்தை சொன்னால், "அம்மா சாதம் மாத்திரம் போட்டாள்" என்றா கொள்கிறோம்? "சாதம் போட்டாள்; கறி போட்டாள்; பச்சடி பரிமாறினாள்; குழம்பு விட்டாள், ரசம் விட்டாள்" என்று எல்லாப் பொருளையும் அளித்ததாகவே கொள்கிறோம். நாயனம் மிக அழகாக வாசித்தான் என்றால் நாயனம் வாசித்ததோடு

க.சொ.1-12 மேளம் கொட்டினான், தாளம் போட்டான், ஒத்து ஊதினான் என்று தெரிந்து கொள்கிறோம். தலைமையான ஒரு பொருளைச் சொன்னாலே மற்றவற்றையும் கொள்வது மரபு.

"ஒருமொழி ஒழிதன் இனம்கொளற் குரித்தே"

என்பது இலக்கணச் சூத்திரம்.

உயிர்கள் திருந்தல்

ம்பெருமாட்டி உயிர்கள் எல்லாம் திருந்த வேண்டுமென்பதற்காகப் புவனங்களை ஈன்றாள். தனு கரண புவன போகங்கள் ஆகிய நான்கையும் உயிர்களுக்காகப் பெற்றுத் தருகிறாள். பள்ளிக் கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற குழந்தைக்கு அதன் தாய் அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போய் நன்றாகப் படித்து, வாழ்க்கையிலே சிறப்புற்று விளங்க வேண்டுமென்ற அன்போடு விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து, தோழர்களையும் சேர்த்துவிட்டு, அது சந்தோஷமாகப் பள்ளிக் கூடம் போய்த் திருந்த வேண்டுமென்று விரும்புகிறாள். உலகத்திலுள்ள உயிர்களுக்குத் தாயாகிய எம்பெருமாட்டி, இறப்பினாலும் பிறப்பினாலும் துன்பப்படுகின்ற உயிர் பூமிக்கு வந்து இன்ப துன்பங்களைத் துய்த்து, நல்வினைகளைச் செய்து ஞானம் பெற்றுப் பிறப்பை அறுக்க வேண்டுமென்ற கருணையினால் தனு கரண புவன போகங்களைத் தருகிறாள். அகிலம் யாவையும் பெற்றவள் எம்பெருமாட்டி அவளை அகிலாண்டேசுவரி என்று அழைப்பர்.

"ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை

என்று அபிராமிபட்டர் துதிக்கிறார். உலகத்தை எல்லாம் அவள் தந்தவள்.

உலகத்தை உண்டாக்கினவள் பரமேசுவரன் அல்லவா? பரமேசுவரி படைத்ததாகச் சொல்லலாமா? என்றால் பரமேசுவரன் வேறு, பராசக்தி வேறு அல்லர். ஆண்டவனிடம் இருக்கிற அருட்சக்தி எதுவோ அதுவேதான் விரிந்து அம்பிகையாகிறது. பரப்பிரம்மமாகிய பரமசிவன் சிறிதும் ஆடாது, அசையாது இருந்தால் ஒன்றும் நடவாது. அவனது அருட்சக்தி வெளிப்பட்டு இயங்கினால்தான் யாவும் நடைபெறும்.

"சிவமெ னும்பொருளும் ஆதி சக்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
அவள்பி ரிந்திடின் இயங்குதற்கும் அரிதாம்"

என்று செளந்தரியலகரியில் சங்கராசாரிய சுவாமிகள் சொல்கிறார். புவனங்கள் எல்லாம் தந்தவன் பரமேசுவரன் என்றாலும் அவருடைய அருட்சக்தி தந்தது என்றாலும் ஒன்றுதான்.

அம்மை உலகத்தைப் படைத்து அதில் உயிர்களை விடுவதற்கு, அவை எல்லாம் நல்வழிப்பட வேண்டுமென்பதே காரணம். தாய்க்குக் குழந்தை திருந்த வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்புதானே?

எம்பெருமாட்டிற்கு அழகழகான ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் அந்த நாமங்களுக்கெல்லாம் முதன்மையாக லலிதா சகசிர நாமத்தில் "ஸ்ரீமாதா” என்ற நாமத்தை வைத்திருக்கிறார்கள். எல்லா உயிர்களுக்கும் மாதாவாக விளங்குபவள் எம் பெருமாட்டி தான். தான் படைத்துக் கொடுத்திருக்கிற இந்தப் புவனத்தில் உயிர்கள் தனுவாகிய உடலைப் பெற்று, அதில் அமைந்துள்ள கரணங்களைப் பெற்று, அதனாலே இன்ப துன்ப போகங்களை எல்லாம் பெற்று, ஞானத்தைப் பெற்றுத் திருந்தி உய்ய வேண்டுமென்பது உலகன்னையின் விருப்பம். உயிர்கள் திருந்த வேண்டுமென்பதற்காகப் புவனங்களைப் பெற்றாள். துன்பமயமான இறப்பு, பிறப்பு என்னும் பிணிகளினால் உயிர்கள் பீடிக்கப்பட்டு ஆனந்தம் என்பதை அடையாமல் உலகத்தோடு ஒட்டிய சுகம், துக்கம் ஆகிய இரண்டு விதமான அநுபவங்களில் உழன்று வாழ்கின்றன. இப்படி வாழ்கின்ற தன் குழந்தைகளைக் கண்டு, 'இவர்களுடைய வாழ்வில் ஆனந்தம் இல்லையே! இவர்கள் எல்லோரும் ஆனந்தம் பெற்று உய்ய வேண்டாமா?' என்று நினைத்து இந்தப் புவனங்களைப் படைக்கிறாள். நல்ல குழந்தைகளை எல்லாம் அனைத்துக் கொள்கிறாள். தாய் சொல் கேளாத துஷ்டக் குழந்தையாக இருந்தாலும் அதன் போக்கிலேவிட்டு வேண்டிய பொருள்களை எல்லாம் கொடுத்துக் காலப்போக்கில் திருத்துகிறாள். இவ்வளவு காரியங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது அவள் நெஞ்சில் உள்ள தாயன்புதான். நாம் எல்லோரும் இந்த உலகத்தில் பிறந்து துன்பப்பட வேண்டுமென்பதற்காக எம்பெருமாட்டி இந்தப் புவனங்களை உண்டாக்கவில்லை. உயிர்கள் திருந்தி உய்ய வேண்டுமென்பதற்காகவே உண்டாக்குகிறாள். ஆனால் உயிர்கள் திருந்தாமல், நல்ல வழியில் போகாமல், மாயையில் சிக்கிவிடுவதனால் இன்ப துன்பங்களைப் பெற்று வருந்துகின்றன; அது அவள் குற்றம் அன்று. அவள் உயிர்கள் திருந்தப் புவனங்களை ஈன்றாள்.

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை
திருமுலைப்பால் அருந்தி.

அந்தப் பெருமாட்டியின் தனங்களிலே சுரந்த பாலை அருந்தினான் முருகன். இங்கே கதையைச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.

அவதாரக் கதை

ண்டவன் தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தின் அடியிலே மோனத்தவம் பண்ணிக் கொண்டிருந்தான். அப்போது தேவர்கள் சூரபன்மன் செய்கின்ற கொடுமைகளுக்கு அஞ்சி, பிழைக்கும் வழி தெரியாமல், "அவனைச் சங்காரம் பண்ண வேண்டுமே; என்ன செய்வது?" என்று கலங்கினார்கள். மோனத்தில் இருந்த சிவபிரானைத் தவம் கலையச் செய்வது எப்படி என்று தெரியாமல் அஞ்சினார்கள். பின்பு அவனைத் தவத்திலிருந்து கலைந்து எழச் செய்ய மன்மதனை ஏவினார்கள். மன்மதன் தன்னுடைய மலர் அம்புகளை இறைவன்மேல் தொடுத்தான். பரமசிவன் தன் நெற்றிக் கண்ணை மெல்லத் திறந்து பார்த்து, அந்தப் பார்வையினால் காமனைச் சங்காரம் பண்ணிவிட்டான். பின்பு இரதி மகாதேவனை வேண்டிக் கொள்ள, "நீ இழந்த உன் கணவன், திரும்ப உன் கண்ணுக்கு மாத்திரம் தெரியும்படி உயிர் பெற்று எழுவான்" எனச் சொல்லி, காமனை உயிர்பெற்று எழச் செய்தான். ஆண்டவனை மணக்க வேண்டுமென்பதற்காக உமாதேவி இமவானுக்கு மகளாகப் பிறந்து, இமயமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்தாள். அவள் தவத்தின் பெருமையை உணர்ந்து, இறைவன் இமயமலை சென்று அவளைத் திருமணம் செய்து கொண்டான். பார்வதி தேவியோடு இறைவன் இருக்கும் போது தேவர்கள் எல்லோரும் சென்று, தங்களுக்கு மிகவும் துன்பம் இழைத்து வரும் சூரபன்பன் முதலிய அசுரர்களைச் சங்காரம் செய்வதற்கு ஒரு குமாரனைத் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். உடனே ஆண்டவன் தன்னுடைய ஐந்து முகத்தோடு கீழ்நோக்கி உள்ள அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களைத் திறந்து பார்த்தான். அக்கண்களிலிருந்து ஆறு கனல் பொறிகள் எழுந்தன.

உலகத்தை எல்லாம் தாக்கி அழிக்கும் வண்ணம் எழுந்த ஆறு பொறிகளையும் பார்த்துத் தேவர்கள் அஞ்சி நடுநடுங்கிப் போய், "எம்பெருமானே, நாங்கள் கேட்ட வரம் என்ன? தாங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஆறு பொறிகளும் உலகத்தை அழித்து விடும்போல் இருக்கின்றனவே!" என்று விண்ணப்பிக்க, இறைவன் அந்த ஆறு பொறிகளையும் தன் பக்கத்தில் வரச் செய்து, வாயுவையும், அக்கினியையும் அழைத்து, "நீங்கள் இருவரும் இந்த ஆறு பொறிகளையும் ஏந்திப் போய்க் கங்கையில் விடுங்கள். கங்கை இந்தப் பொறிகளைச் சரவணப் பொய்கையில் கொண்டுபோய் விடுவாள். உங்கள் துன்பத்தை எல்லாம் நீக்குவதற்கு ஒரு குமாரன் வருவான்" என்று திருவாய் மலர்ந்தான். அந்தக் கட்டளையை ஏற்று வாயுவும், அக்கினியும் ஆறு பொறிகளையும் கொண்டு போய்க் கங்கையில் விட்டார்கள். கங்கை அவற்றை இமயமலைச் சாரலில் இருந்த சரவணப் பொய்கையில் கொண்டு போய்ச் சேர்த்தாள். அங்கே ஒரே தர்ப்பைக் காடாக இருந்தது. அதன் நடுவில் இருந்த அழகான சரவணப் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. சரவணம் என்பதற்கு தர்ப்பை சூழ்ந்த இடம் என்பது பொருள். ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருப்பெற்று விளையாடின. அப்போது அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து, பால் ஊட்டி வளர்த்தார்கள் கார்த்திகைப் பெண்களாகிய ஆறு ரிஷி பத்தினிகள். அந்தச் சமயத்தில் பரமேசுவரன் பார்வதி தேவியிடம், "உன் குழந்தை சரவணப் பொய்கையில் இருக்கிறான். அவனைப் போய்ப் பார்க்கலாம்” என்று சொன்னான். பார்வதி தேவி அன்பு பொங்கச் சரவணப் பொய்கையை அடைந்து, குழந்தைகளை வாரி எடுத்தாள். அவள் அணைத்த மாத்திரத்தில் ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாயின. ஆறு முகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய திருக்கோலத்தில் ஒரு குழந்தையாக, கந்தப் பெருமான் விளங்கினான். அவனுக்குத் தன் தனங்களிலே சுரந்த பாலை ஒரு பொற் கிண்ணத்தில் கறந்து எம் பெருமாட்டி ஊட்டினாள். இது முருகப் பெருமானது அவதாரக் கதை. கந்த புராணக் கதையை வெறும் கட்டுக்கதை போல எண்ணக் கூடாது. அதனூடே இருக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு தத்துவம் உண்டு. சிவபெருமானுடைய நான்கு முகங்கள் நான்கு பக்கம் நோக்கியிருக்கின்றன. மேல் நோக்கிய முகம் ஒன்று, கீழ் நோக்கிய முகம் ஒன்று. ஆக ஆறுமுகங்களையும் கொண்டு ஷண்முகநாதனை அவன் வெளிவரச் செய்தான். ஈசானம், தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாமதேவம் என்பன அவனுடைய ஐந்து முகங்கள். அவற்றால் இருபத்தெட்டு ஆகமங்களை அருளினான். அவற்றோடு அதோமுகமும் சேர்ந்தால் ஆறு முகங்களாகும். அதோமுகம் வெளிப்பட இராது.

"அந்திக்கு நிகர்மெய் யண்ணல்
அருள்புரிந் தறிஞ ராயோர்
சிந்திக்குந் தனது தொல்லைத்
திருமுகம் ஆறுங் கொண்டான்"

என்று கந்தபுராணம் சொல்கிறது.

ஐம்பூத முத்திரை

தியும் அந்தமுமாக இருக்கிற பரமேசுவரன் உலகத்திற்கு அருள் செய்வதற்காகக் கந்தப் பெருமானை அருளினான். ஐந்து முகக் கடவுள் ஆறுமுகக் கடவுளின் மூலம் தன் கருணையை மிகுதியாகப் பரவச் செய்தான்.

வாக்கு, மனம் ஆகிய சரணங்களுக்கு அப்பால் இருக்கிற கடவுள் இந்த உலகத்தில் அவதாரம் செய்யும்போது இதற்கு ஏற்ப வர வேண்டும். உலகம் என்பது ஐந்து பெரும் பூதங்களின் சேர்க்கை. ஆதலால் இங்கே வரும்போது அப்பூதங்களின் சம்பந்தத்துடனே வர வேண்டும். இறைவனது சரீரம் பூதத்தினால் அமைந்த சரீரம் அல்ல. அது ஞானத்தினால் ஆன உடம்பு. அது உலகத்திற்கு வர வேண்டுமென்றால் உலகத்தின் முத்திரையை அதற்குக் குத்த வேண்டும். கவர்னர் அனுப்புகின்ற கடிதமாக இருந்தாலும், நாம் அனுப்புகிற கடிதமானாலும் தபாலாபீஸ் முத்திரை குத்தியே யாக வேண்டும்.

பரமேசுவரன் சிதாகாச ஸ்வரூபி. அவன் கண்களிலிருந்து ஆறு பொறிகள் எழுந்தமையால் ஆகாசத்தின் சம்பந்தம் உடையவன் ஆனான், முருகன்; ஆகாசத்திற்கு மூலகாரணமாக உள்ள சிதாகாசத்தின் சம்பந்தம் உடையவன் ஆனான். அந்த ஆறு பொறிகளையும் வாயுதேவனும், அக்கினி தேவனும் தாங்கிச் சென்றார்களாதலால் வாயு, அக்கினி ஆகிய இரண்டின் சம்பந்தம் உடையவனும் ஆனான். அக்கினி பொறிகளைக் கங்கையில் விட்டான், கங்கை நீராதலால் அப்புவின் தொடர்பும் முருகனுக்கு அமைந்தது. கங்கை அந்தப் பொறிகளைச் சுமந்து போய்ச் சரவணப் பொய்கையிலுள்ள திட்டில் விட்டான். ஆதலால் பிருதிவியின் சம்பந்தமும் உண்டாயிற்று.

இவ்வாறு சரவணபவன் உலகத்துக்கு வரும்போது உலகத்துக்கு மூலகாரணமாக இருக்கின்ற ஐம்பூதங்களின் முத்திரையைப் பெற்றே வந்தான். ஏன், அப்படி வர வேண்டும்? அந்த முத்திரையைப் பெறாமல் வந்தால் என்ன என்று கேட்கலாம்.

ஓர் ஏழை, சிறு குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறவன். அவன் குடிசையின் வாயிற்படி மூன்று அடி உயரந்தான் இருக்கிறது. அவனுக்கு நோய் வந்துவிட்டது. அந்தச் சிறு குச்சுக்குள் படுத்து மிகவும் வேதனைப்படுகிறான். அந்த ஊரிலேயே ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்வதைத் தம் லட்சியமாகக் கொண்டவர். ஏழை நோயினால் வேதனைப்படுகிறான் என்று அறிந்தவுடன், அவன் குடிசையை நோக்கி ஓடி வருகிறார். அவர் உயரமானவர்; ஆறு அடி உயரம் இருப்பார். குடிசையிலுள்ள ஏழையின் நோயைக் குணப்படுத்த வேண்டுமென்று ஓடி வந்தவர், மூன்றடி உயரமேயுள்ள நிலை வாயிலுக்குள் தம் ஆறு அடி உடம்பை வளைத்துக் குனிந்து கொண்டு செல்கிறார். அவர் ஏன் தம் உடம்பை வளைத்துக் கொண்டு போக வேண்டும்? அது மூன்றடி உயர முள்ள கதவுடைய குடிசை. நோயாளியோ உள்ளே இருக்கிறான். அந்த ஏழைக்கு வைத்தியம் செய்ய வேண்டு மென்ற கருணையோடு ஓடி வந்தவராகையால் குடிசையின் வாயிற்படிக்கு ஏற்பத் தம் உடலைக் குறுக்கிக் கொண்டு உள்ளே போகிறார். அதைப் போல, பிறப்பு, இறப்பு ஆகிய துன்பங்களினால் உயிர்கள் பதியை அடைந்து ஆனந்தம் அடைய மாட்டாமல், ஐம்பூதங்களாலான பிரபஞ்சத்திற்குள் சிக்கி வேதனைப்படுவதைப் பார்த்து, அதனைத் துடைக்க வந்த பவரோக வைத்தியநாதப் பெருமான் ஆதலால், உலகுக்கு ஏற்ப ஐம்பூதங்களின் முத்திரையைப் போட்டுக் கொண்டு அவதாரம் செய்தான். அதனால் அவனுக்கு அழுக்கு ஏற்படாதா என்பது ஒரு கேள்வி.

நம் வீட்டுக் குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அது அடித்த பந்து விறகு அடுக்கியிருக்கும் அறைக்குள் விழுந்து விட்டது. பந்து எடுக்க அறைக்குள் குழந்தை ஒடியது. குழந்தையின் தாய் நீராடிவிட்டு, நெற்றிக்குத் திலகம் இட்டு, பட்டுப் புடைவை உடுத்துக் கொண்டு, ஆலயத்துக்குப் போக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள். அந்தச் சமயம் குழந்தை வீரிட்டு அழுதான். தாய் பதறிப் போய் விறகு அறைக்கு ஒடினாள். கரி மூட்டையின் மேல் விழுந்த பந்தை எடுக்கக் குழந்தை மூட்டையின்மேல் ஏறியிருக்கிறான். மூட்டை சரிந்து அவன்மேல் விழுந்து விட்டது. கரி மூட்டைக்கு அடியில் அகப்பட்டு அழுகின்ற குழந்தையைத் தாய் அலறிப் போய் எடுக்கிறாள். நீராடியாகி விட்டதே: கரி மூட்டையைத் தூக்கினால் கரி நம் உடம்பெல்லாம் படுமே என்று அவள் அப்போது நினைப்பாளா? நாம் பட்டுப் புடவை உடுத்துக் கொண்டிருக்கிறோமே! கரி மூட்டையைத் தூக்கினால் நம் புடைவை கரியாகிவிடுமே என்று நினைப்பாளா? தன் உடம்பு கரி ஆனாலும், தன் சேலை அழுக்கானாலும், கரி மூட்டையை அப்பாலே தள்ளிவிட்டு, தன் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொள்வாள். அப்படியே பஞ்ச பூதங்களினாலான பிரபஞ்சத்திற்குள் அகப்பட்டுத் தவிக்கின்ற தன் குழந்தைகளாகிய உயிர்களைக் காப்பாற்ற ஐந்து பூதங்களின் சம்பந்தம் பெற்று உலகத்திலே அவதாரம் செய்கிறான் ஆண்டவன்.

இறைவியின் அருள்

ந்து பூதங்களின் சம்பந்தம் உண்டாகிவிட்டது; போதுமா? பராசக்தியிலிருந்து சிவபெருமான் தனித்து நின்றபோது அவன் கண்களிலிருந்து முருகன் வெளிப்பட்டதனால் முருகனுக்கு பூரணத்துவம் ஏற்படவில்லை. இறைவியின் அருள் சேராவிட்டால் ஒன்றும் நடவாது. உலகத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து இருப்பதுவே இன்பம். பரமேசுவரனே படைத்தாலும் அது வெறும் ஞானமயமாகத்தான் இருக்கும். அது செயல் புரிய வேண்டுமென்றால், பராசக்தியின் அருள் வேண்டும். வெறும் பொன்னாக இருப்பதனால் பயன் இல்லை. அது பயன்பட வேண்டுமென்றால் ஆபரணமாக வேண்டும் அல்லது நாணயமாக அடிக்க வேண்டும். வெறும் ஈயத்தைப் பாத்திரத்தில் பூச முடியாது. ஈயம் பூச வேண்டுமென்றால் சிறிது நவாசாரம் சேர்க்க வேண்டும். அதைப் போலப் பரமேசுவரனுடைய கண்களினின்று வெளிப்பட்ட ஆறு பொறிகளிலிருந்து உண்டான குழந்தைகளால் உலகத்திற்குப் பயன் ஏற்பட வேண்டுமென்றால் எம்பெருமாட்டியின் அருள் தொடர்பு வேண்டும். அன்னை வரவில்லையே என்று முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் காத்துக் கொண்டிருந்தான். ஆறு குழந்தையாக இருந்து விளையாடினான். பிரிந்த பொருள் எதுவும் உலகத்தைக் காக்காது. ஒன்றுபடுவது, கூடுவது, இன்பத்தைத் தரும். எந்த இன்பமானாலும் பிரிந்திருந்தால் இன்பம் இல்லை. முருகன் ஆறு குழந்தையாகப் பிரிந்திருக்கிற வரைக்கும் உலகத்துக்குப் பயன்படவில்லை. எம்பெருமாட்டி வந்து அணைத்தபோதுதான் ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு குழந்தை ஆனான். அப்பொழுது உலகத்திற்குப் பயன்படுகிற நிலை வந்தது. எம்பெருமாட்டி ஷண்முகநாதனுக்குப் பால் கொடுத்தாள். திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற் பாவை திருமுலைப் பால் அருந்தினான் கந்தன். எம்பெருமாட்டியின் தனங்களிலே வாய் வைத்துப் பால் அருந்தவில்லை. ஞானசம்பந்தப் பெருமானுக்கு உமாதேவி தன் திருமுலைப் பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து அதில் சிவஞானத்தைக் குழைத்து அருந்தினாள். எம்பெருமாட்டி உலகிலுள்ள மற்ற தாய்மார்களைப் போலக் கருவிருந்து குழந்தையைப் பெறுபவள் அல்ல. தன்னுடைய கருணாகடாட்சத்தால் உலக முழுவதையும் ஈன்றும், அவள் இன்னும் கன்னியாகவே இருக்கிறாள். இது உலக இயலுக்கு விரோதமாகத் தோன்றும். எம்பெருமாட்டியின் தனம் குழந்தை வாய் வைத்துப் பால் குடிப்பதற்கோ, போகத்திற்கோ உரியது அன்று.

"ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம
போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால்
ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக்
காதல் மாமகற் கன்பினால் அருத்தினள் கவுரி"

என்று கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். கவுரி ஆகிய எம்பெருமாட்டியின் தனங்கள் ஆதிநாயகனுடைய கருணையே உருவமாக இருப்பவை; அமலமாய் இருப்பவை; பரிசுத்தம் சிறிதும் குறைவு இல்லாதனவாய், மலம் இல்லாதனவாய் உள்ளவை: பரம போதமாய் உள்ளவை; போதம் என்பது ஞானம்; உயர்ந்த ஞானம் எதுவோ, அதுவே மயமானவை அவை. ஆதலால்தான் எம்பெருமாட்டி தந்த பால் ஞானப்பாலாயிற்று. அதையே ஞானசம்பந்தர் உண்டார். ஞானப் பசியை ஆற்றுகின்ற பாலை, பிறப்பு இறப்புப் பிணியைப் போக்குகின்ற பாலைக் குற்றமில்லாத ரத்தினக் கிண்ணத்தில் ஏற்று, கந்தப் பெருமானாகிய தன் மகனுக்கு கவுரி ஊட்டினாள் என்று கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார்.

பரமேசுவரனிடம் தோன்றிய முருகன் உலகத்தில் அவதாரம் செய்தமையால் ஐம்பூதங்களின் முத்திரையைப் பெற்று, ஞான மயமாக வந்தான். அவன் ஞானப் பிழம்பு.

"நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்"

என்று அருணகிரியார் பின்னாலே சொல்லப் போகிறார். ஞானம் வேறு; அவன் வேறு அல்ல. உலகம் பயன்பெற வேண்டித் தன்னுடைய அணைப்பினால் ஆறு குழந்தைகளும் ஒன்று ஆகும் படியாக்கி, ஞான சொரூபமான தன் தனங்களில் பொழிகின்ற பாலைக் கறந்து உமாதேவி ஊட்டினாள்.

3

தாமரைத் தொட்டில்

ந்தக் குழந்தை எங்கே விளையாடினான்? அந்தக் குழந்தைக்கு யார் தொட்டில் பண்ணிக் கொடுக்க முடியும்? பனி மூடிக் கொண்டிருக்கிற இமயமலைச் சாரலிலே, தர்ப்பைக் காட்டின் நடுவில் அமைந்திருந்த சரவணப் பொய்கையில் அழகாக மலர்ந்திருந்த தாமரைகளையே தொட்டிலாகக் கொண்டு அவன் விளையாடினான். தாமரை இதழ்களின் மீது படுத்துக் கொண்டு தூங்கினான். தண்மை மலிந்த மலர்ப் படுக்கையில் கண் வளர்ந்தான். மெத்தென்ற படுக்கையாக, மென்மை மிக்க மணமுள்ள தாமரை மலர்கள் அமைந்தன. அதில் அவன் விளையாடினான்; படுத்து உறங்கினான்.

"வளஞ்செரி இணைய பாலால்
வான்சர வணமாப் பொய்கைத்
தளஞ்செறி பதுமம் ஒன்றில்
சராசரம் யாவும் காப்பான்
உளஞ்செறி கருணை எய்தி
ஒப்பிலாக் குமர மூர்த்தி
இளஞ்சிறு மதலை போல
இனிதுவீற் றிருந்தான் மன்னோ"

என்பது கந்த புராணம்.

"சரவணப் பூந்தொட்டில் ஏறி" என்று அருணகிரிநாதர் சொல்வது புதிதன்று. இந்தக் கருத்துப் பழங்காலம் முதற் கொண்டே வழங்கி வருகிறது என்பதைப் பழம் பாடல்களால் உணரலாம். இளங்கோவடிகள் சைனர். அவர் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இந்தச் செய்தியைச் சொல்கிறார். சேர நாட்டு மலைவாழ் மக்கள் முருகனுக்குப் பூசை போடுகிறார்களாம். குரவைக் கூத்து ஆடுகிறார்கள். அப்போது குரவைக்குரிய பாடலைப் பாடுகிறார்கள். குன்றக் குரவை என்ற பகுதியில் அந்தப் பாடல் இருக்கிறது.

“சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திருமுலைப்பால் உண்டான்"

என்பது பாட்டின் ஒரு பகுதி. சரவணப் பொய்கையில் பூம்பள்ளியில் முருகன் அறுவர் பாலை உண்டு தங்கினானென்று கூறுகிறது இது.

"பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்"

என்று சங்ககாலத்துப் பரிபாடலில் முருகன் புகழ் வருகிறது. பதுமத்துப் பாயல் - தாமரைப் பூவாகிய படுக்கை. அருணகிரி நாதர் தொட்டில் என்கிறார். அந்தப் புலவர் பாயல் என்றார். பழங்காலம் முதற்கொண்டே இத்தகைய புராண வரலாறுகள் வழங்கி வந்திருக்கின்றன என்பதற்கு இவை அடையாளம். அருணகிரிநாதர் எதையும் கற்பனையாகச் சொன்னதாகக் கருத வேண்டாம். அவர் காலத்திற்கு முன்பே தொன்றுதொட்டு இந்த நாட்டில் முருகனைப் பற்றி வழங்கி வந்த செய்திகளையே அவர் அலங்காரமாகச் சொல்கிறார்.

சரவணப் பூந்தொட்டிலேறி அறுவர் கொங்கை விரும்பி முருகன் அழுதான். பசி எடுத்தவனைப் போல அழுதான். நமக்கு உண்டாகும் பசிபோன்றது அல்ல அது. பிறருக்கு அருள் செய்ய வேண்டும், தனக்குத் தொண்டு செய்து பிறர் நன்மை அடைய வேண்டும் என்ற கருணையாகிய பசி அது. கருணைப் பசி எடுத்த குழந்தை உலகியலை ஒட்டிப் பாலுக்காக அழும் குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதான்.

கார்த்திகை மாதர்

கார்த்திகை மாதர்கள் ஆறு பேர். சப்த ரிஷிகள் என்று சொல்லும் ஏழு முனிவர்களுடைய மனைவிமார்களும் வானில் ஏழு நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அவர்களில் மிகவும் சிறப்பானவள் அருந்ததி. அவள் தன் கணவராகிய வசிஷ்டருக்கு அருகிலேயே வானில் ஒளிர்கிறாள். மற்ற ஆறு முனிவர்களுடைய மனைவிமாரும் கிருத்திகா நட்சத்திரங்களாக வானிலே இருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆறு மாதர்களும் சரவணப் பொய்கையில் இருந்த முருகனுக்கு வளர்ப்புத் தாய்களாக அமைந்தார்கள். இந்தக் குழந்தைக்கு அவர்கள் பால் கொடுத்து வளர்த்தார்கள். திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவையாகிய உமா தேவியின் திருமுலைப் பாலை முருகன் அருந்தினான் என்று முதலில் சொன்ன பிறகு, கார்த்திகை மாதர் அறுவருடைய பாலைக் குடிக்க விரும்பி அழுதான் என்று சொல்கிறார். சரவணப் பொய்கையில் தாமரையாகிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த முருகனுக்கு முதலில் கார்த்திகை மாதர்களே பால் கொடுத்து வளர்த்தார்கள். பிறகு உமாதேவி வந்து வாரி அணைத்து, ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஷண்முக நாதனாக உருவம் ஏற்ற முருகப் பெருமானுக்குப் பரம போத நீரதாய் இருந்த தன் கொங்கையில் ஊறிய பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து அருத்தினாள் என்பது வரலாறு. இது தோத்திர நூல் ஆனதால் முன் பின்னாகச் சொல்கிறார். கதையைச் சொல்வதானால் முறை பிறழாமல் சொல்வார். அலங்காரமாக அமைக்கும் கவியில் இந்த முறை முன்பின்னாக மாறுவதில் தவறு இல்லை.

கங்கை தன்னிடம் விட்ட ஆறு பொறிகளையும் எடுத்துப் போய்ச் சரவணப் பொய்கையில் விட்டாள். அவை ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அவை அழுதன. 'அழுத பிள்ளை பால் குடிக்கும்' என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருத்த மல்லவா? தனக்குப் பால் கொடுக்கக் கார்த்திகை மாதர்கள் இன்னும் வரவில்லையே என்பது போல அழுதான். எம்பெருமானுடைய கண்களிலிருந்து அவதாரம் செய்த குழந்தை முருகன். அவனுக்குக் கார்த்திகை மாதர்கள் பால் கொடுக்காவிட்டால் அவன் வளர மாட்டானா? பால் குடிக்கும் வியாஜமாக அந்தக் கார்த்திகை மாதர்களுக்கு பெருமையை அளிக்க வேண்டுமென்ற கருத்தோடு அழுதான். அவர்கள் ஓடி வந்தார்கள. பச்சிளம் பாலகனாகப் படுத்து அழுது கொண்டிருந்த பெருமானுக்குப் பால் கொடுத்தார்கள். அதனால் அவர்கள் மிகப் பெரிய பாக்கியத்தை அடைந்தார்கள். வானிலே எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் கிருத்திகை என்றவுடன் நமக்கு முருகன் நினைவு வருகிறது. அவனுக்குப் பால் கொடுத்த மாதர்களை நினைந்து நாம் உபவாசம் இருக்கிறோம். முருகப் பெருமான் விசாக நட்சத்திரத்தில் அவதாரம் செய்த போதிலும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிகப் பெருமை ஏற்பட்டுவிட்டது. முருகன் கார்த்திகேயன் என்ற திருநாமத்தை ஏற்று அதன் மூலமாக அவர்களுக்குச் சிறப்பு உண்டாகச் செய்தான். "கார்த்திகேயன் என்னும் நாமம் முருகனுக்கு அமையும்; கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபடுவோர் பெரும் பேற்றைப் பெறுவர்” என்று சிவபெருமான் வரம் தந்ததாகக் கந்தப்புராணம் கூறுகிறது.

“கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன் எனும் பெயர்ஆகுக மகிழ்வால்எவ ரேனும்
நூந்தம்பக லிடை இன்னவன் நோன்றாள்வழி படுவோர்
தந்தம்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான்."
ஓர் அரசன் பிறந்தபொழுதே தாயை இழந்தான். தாயற்ற அவனை எடுத்துப் பால் கொடுத்து வளர்த்த ஒரு பெண்ணுக்கு அவன் சிங்காதனம் ஏறியவுடனேயே ஒரு கிராமம் முழுவதையும் சாசனம் பண்ணிக் கொடுத்தான் என்று கதை சொல்வதுண்டு. சாமானிய அரசனே இப்படிச் செய்தான் என்றால் இந்த உலகம் முழுவதற்கும் எந்தக் காலத்திலும் அரசனாக விளங்கும் எம் பெருமான் தான் அவதாரம் செய்த காலத்தில் தனக்குப் பால் ஊட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சாசுவத பெருமைப் பட்டயம் வழங்கியதில் என்ன ஆச்சரியம்? அந்தப் பெருமை அவர்களுக்குச் சார வேண்டுமென்ற கருணையோடுதான் அவன் பசி என்ற காரணத்தைக் கொண்டு அழுதான்.

4

அழுகையின் எதிரொலி

எப்படி அழுதான்?

கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும் குருந்தை

என்கிறார் அருணகிரியார்.

சூரபன்மன் என்ற அரசன் தேவர்களுடைய அரசைக் கைப்பற்றிக் கொண்டான்; அவர்களைச் சிறையில் இட்டான்; உலகிலுள்ள உயிர்கள் துன்பம் உறும் வண்ணம் கொடுமை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். அவனை அடக்குவார் யாரும் இல்லாததால் அவன் பலம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் பணம் வந்தவர்கள், 'அடுத்து அடுத்துப் பணம் வந்து கொண்டே இருக்குமா?' என்று தங்கள் ஜாதகத்தை ஜோசியனிடம் காட்டுவார்கள். அதைப்போல அவன் தன்னுடைய ஜாதகத்தை ஒருவனிடம் காட்டியிருக்கிறான். அவர் நல்ல ஜோசியர் யாருக்கும் பயந்துகொண்டு உண்மையை மறைப்பவர் அல்ல. அவர் அவனுக்கு உண்மையைச் சொல்லிவிட்டார் போலிருக்கிறது. "உன்னுடைய செல்வாக்குக்கு இப்பொழுது ஒன்றும் குறைவு வராது. ஆனால் இந்த உலகத்தில் ஒரு குழந்தையின் அழுகைக் குரல் கேட்கும். உடனே நீ தெரிந்து கொண்டுவிடலாம், உன் வாழ்நாள் அப்பொழுதே முடிந்துவிட்டது என்று" என அவர் சொல்லிவிட்டார். அன்றிலிருந்து அவன் உலகத்தில் பிறக்கின்ற குழந்தைகளின் அழுகையை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான். அழுகைக் குரல் கேட்டால் அது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்வான். "இது சாமானியக் குழந்தையின் அழுகுரல் தான்" என்று தெரிந்துவிடும். ஆனால் இன்றைக்குச் சரவணப் பொய்கையில் தாமரைத் தொட்டிலில் படுத்து அழுகிற குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது. 'நம் வாழ்நாளையே குலைக்கவந்த குழந்தையின் அழுகுரல் போலல்லவா இருக்கிறது?' என எண்ணியவன் 'ஒ'வென்று அழ ஆரம்பித்துவிட்டான். இப்படி ஒரு காட்சி தோன்றும்படி அருணகிரி நாதர் அலங்காரமாகச் சொல்கிறார். சூரனுக்கு ஜாதகம் பார்த்துக் சொன்னவரே கிரெளஞ்சாசுரனுக்கும் பார்த்துச் சொல்லியிருக்கிறார். "உலகில் ஒரு குழந்தையின் அழுகை ஒலி கேட்கப் போகிறது. தன் கை வேலினால் உன்னை அணு அணுவாக்கி நீ உருக்குலைந்து போகும்படி செய்பவன் இந்த உலகத்தில் அவதாரம் செய்துவிட்டான் என்று அப்பொழுதே தெரிந்துகொண்டுவிடலாம்" என்று அவர் சொன்னதைக் கிரெளஞ்சாசுரன் கேட்டிருக்கிறான். ஆகவே இன்று, சரவணப் பூந்தொட்டிலில் ஏறி அறுவர் கொங்கை விரும்பி அழுகின்ற குழந்தையின் அழுகுரல் கேட்டவுடனே, அவன் தன் தலையில் கை வைத்துக் கொண்டு ஐயோ என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

ஒரு நாள் இந்த ஜோசியர் சமுத்திரத்தின் பக்கம் போயிருக்கிறார். சமுத்திர ராஜனைப் பார்த்தவுடனே அவனுக்கு என்ன ஏற்படப் போகிறது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. "நீ மிகப் பாவியாக இருக்கிற சூரன் ஒளிந்து கொள்வதற்கு இடம் அளிக்கப் போகிறாய். அப்போது ஒருவன் தன் கை வேலினாலே நீ வறண்டு போகும்படி செய்யப் போகிறான். அந்தக் குழந்தையின் அழுகைக் குரல் கேட்கும்போதே நீ உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார். வேலினாலே தன்னைச் சுவறச் செய்யப் போகிற குழந்தையின் அழுகைக் குரல் எப்போது கேட்கப் போகிறது என்று அவன் கலங்கி யோசனை பண்ணிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் இந்தச் சத்தம் கேட்டது. மற்றக் குழந்தைகளின் அழுகைக் குரலுக்கும், இந்தக் குழந்தையின் அழுகைக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாதா? 'தன்னைக் கொல்ல வந்த காலன் பிறந்துவிட்டான்' என்று அவன் 'ஒ'வென்று அலற ஆரம்பித்துவிட்டான்.

குழந்தை விம்மி அழ அழ இவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். குழந்தை ஒரு முறை அழுதான். அதைக் கேட்ட மாத்திரத்தில், 'பெரும்பாவியாகிய சூரபன்மனுக்கு ஒளிய இடம் கொடுக்கப் போய் நாம் அழிந்து போகப் போகிறோமே!’ என்று கடல் அழ ஆரம்பித்தது; அந்தக் குழந்தையின் கை வேலினால் சூரனுடைய கவசம் போல் இருக்கிற நாம் தவிடு பொடியாவோமே என்று கிரெளஞ்சாசுரன் அழ ஆரம்பித்தான்; 'நம்மை யாரும் அடக்குவதற்கு இல்லை என்று எண்ணி இதுவரையிலும் இறுமாந்து போய்ப் பற்பல தீமைகளைப் புரிந்து கொடுமை ஆட்சி நடத்தி வந்தோமே; இனி நம்முடைய சுதந்திரம் பறி போய் விடுமே' என்று சூரன் அழ ஆரம்பித்தான். உலகின் உச்சியாகிய இமாசலத்திலுள்ள சரவணப் பொய்கையில் படுத்து முருகன் அழ, அந்த அழுகையின் எதிரொலி போல முதலில் கடலிலிருந்து அழுகை ஒலி கிளம்பியது; பின்பு குன்றிலிருந்து அழுகை ஒலி கிளம்பியது; அப்பால் சூரனிடத்திலிருந்தும் அழுகை ஒலி கிளம்பியது. இப்படி அழகுபட அருணகிரியார் சொல்கிறார்.

கடலழக் குன்றழச் சூரழ விம்மிஅழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என் றோதும் குவலயமே

'கடல் அழுதது; குன்று அழுதது சூரன் அழுதான்' என்று சூரன் அழுததைக் கடைசியாக வைக்கிறார். அவன் அழுதால் மற்றவர்கள் அழுகை நின்று போய்விடும். அவனை அழப்பண்ணினால் தான் தேவர்கள் சிரிப்பார்கள். அவன் அழிந்தால்தான் தேவேந்திரலோகம் பிழைக்கும். குழந்தை அவதாரம் செய்தவுடனே சூரனை அழச் செய்துவிட்டான். கடல் சூரனுடைய சார்பினாலே கெட்டது; இயல்பில் தீங்குடையது அன்று. ஆதலின் முருகன் அழுகையை அது முதலில் உணர்ந்து அழுதது. ஒலியை எளிதில் வாங்கிச் செல்வது நீர் என்று விஞ்ஞானிகள் சொல்வார்கள். அதற்கும் பொருத்தமாக இருக்கிறது இது.

அந்தக் குழந்தை ஒருமுறை அழுததோடு நிற்கவில்லை. அது விம்மி அழுதது; விட்டுவிட்டு அழுததாம். அதன் அழுகை ஒலி கேட்கும்போதெல்லாம் கடல் அழுதது, குன்று அழுதது, சூரன் அழுதான்.

விம்மி அழும் குருந்தை
என்கிறார் அருணகிரியார். குருந்து என்பதற்குக் குருத்து என்று பொருள். அவன் பச்சிளங் குழந்தை என்பதைக் குருந்து என்ற சொல்லினால் விளக்குகிறார். "இந்தப் பச்சிளம் பாலகனை, பால் குடிக்கும் குழந்தையை, தொட்டிலில் படுத்து விளையாடும் குழந்தையை, கிழவன் என்று சொல்கிறார்களே; இப்படிச் சொல்லலாமா? இது என்ன பைத்தியக்காரத்தனம்!" என்று சொல்கிறார்.

புதிய கதை

ந்தப் பாட்டை ஒருவர் பார்த்தார். திருப்பரங்குன்றப் புராணம் எழுதிய புலவர் அவர். நக்கீரர் எழுதியுள்ள திருமுருகாற்றுப் படையையும் படித்தார். அவருக்கு அருணகிரிநாதர் பாட்டு சமத்காரமாகப் படவில்லை. இந்தக் கேள்விக்கு உள்ள படியே பொருள் செய்து கொண்டார் அவர் ஒரு கதையையே தம் புராணத்தில் சொல்லிவிட்டார்.

திருப்பரங்குன்றத்தில் கற்கிமுகி என்ற பூதம், தன்னுடைய குகைக்குள் 999 பேர்களைப் பிடித்து வைத்திருந்தது. இன்னும் ஒரே ஒருவர் வந்தால் போதும்; அந்த ஆயிரம் பேரையும் விழுங்கிவிட எண்ணியிருந்தது. 999 பேர் கிடைத்தும் இன்னும் ஒருவர் கிடைக்கவில்லை. அந்த ஒரே ஒரு பேர்வழியாக நக்கீரர் போய் அகப்பட்டுக் கொண்டார். அவர் உள்ளே போனவுடனே, அங்கே இருந்தவர்கள், "இதுவரையிலும் நாங்கள் குகைக்குள் சுகமாகவாவது சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நீ வந்து விட்டாயா? உன்னைச் சேர்த்தால் ஆயிரம் பேர்கள் ஆகிவிடுவார்கள். இனி நம்மை அந்தப் பூதம் சாப்பிட்டுவிடும்" என்று அழுதார்கள். நக்கீரர் பார்த்தார். அவர் இருக்கிற இடம் குகை அல்லவா? முருகனுக்குக் குகன் என்ற திருநாமம் உண்டு. இருதயமாகிய குகையில் இருப்பவன் அவன், தகராகாச குகையில் இருப்பதனால்தான் அவனுக்குக் 'குகன்' என்ற பெயர் வந்தது. இருதயமாகிய குகையில் இருக்கிற குகனை, கற்கிமுகி என்னும் பூதம் தம்மை அடைத்து வைத்திருக்கிற குகையிலிருந்து வெளி வருவதற்காக நினைத்தார். திருமுருகாற்றுப் படையை பாடி வேண்டினார். அவருடைய பிரார்த்தனைக்கு இணங்கி முருகப் பெருமான் பூதத்தைச் சங்காரம் செய்து அந்தக் குகையிலிருந்து அவர்களை வெளிப்படுத்தினான்.

அப்போது முருகப்பெருமானுக்கு நக்கீரரிடம் சிறிது கோபம் வந்ததாகச் சொல்கிறார் புராணக்காரர். ஏன் தெரியுமா? என்றும் இளமை உடையவனாய், பல ரூபத்தோடு இருக்கின்ற நம்மை இந்த நக்கீரன் திருமுருகாற்றுப்படையில் "விண்பொரு நெடு வரைக் குறிஞ்சிக்கிழவ" என்று சொல்லியிருக்கிறானே! அதுவும் ஒருமுறை சொன்னானா, மறந்து சொல்லியிருக்கலாம் என்று நினைக்க? இரண்டாம் முறையாகவும், "பழமுதிர்சோலை மலை,

க.சொ.1-13 கிழவோனே" என்றல்லவா பாடிவிட்டான்? நான் கிழவனா? என்று அவனுக்குக் கோபம் வந்ததாம். உடனே, "என்னை நீ கிழவன் என்று பாடலாமா? என்று நக்கீரனைக் கேட்டானாம். "இல்லை சுவாமி. நான் அப்படிப் பாடியது தப்பு, தப்பு” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு,

“என்றும்
இளையாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத்து உறை"

என்று பின்பு வெண்பாப் பாடினார் என்று அந்தப் புலவர் சொல்கிறார்.

திருமுருகாற்றுப் படைக்குப் பின்பு பத்து வெண்பாக்கள் இருக்கின்றன. அந்த வெண்பாக்கள் பக்திச் சுவை நனி சொட்டுவனவாய் உள்ளன. முதல் வெண்பா,

"குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத்து உறை"

என்பது. இந்த வெண்பாவை நக்கீரரே பாடியிருக்கிறார் என்ற கருத்தின்மேல் எழுந்த கதை அது.

எந்த நூலை எடுத்துக் கொண்டாலும், அந்த நூலின் முடிவில் அந்த நூலைப் படிப்பவருக்கு என்ன பயன் உண்டாகும் என்று சொல்வது வழக்கம். பாராயண நூல்களுக்குப் பயன் இருக்கும். வடமொழியில் பலசுருதி என்று சொல்வார்கள். ஞானசம்பந்தப் பெருமான் தம் பதிகங்கள் எல்லாவற்றுக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறார். திருமுருகாற்றுப் படைக்கு எந்தவிதமான பயனும் சொல்லப்படாததைக் கண்டு பிற்காலத்தில் வந்த புலவர்களில் யாரோ ஒருவர் அந்தப் பத்துப் பாடல்களையும் பாடி அவற்றோடு சேர்த்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

"நக்கீரர் தாம்உரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தாம்நினைத்த எல்லாம் தரும்" என்று நக்கீரரை மரியாதையாகச் சொல்வதால் அவற்றைப் பாடியவர் வேறு ஒருவரே என்று தெரிகிறது. தம்மைச் சொல்லிக் கொள்ளும்போது நக்கீரர் என்று மரியாதையாக அவரே சொல்லிக் கொள்வாரா?

நக்கீரர் பாடாவிட்டால் என்ன? அந்தப் பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன; உள்ளம் கலந்து கரைந்து பாடிய பாடல்களாக உள்ளன.

'என்றும் இளையவனாய், சதாபால ரூபத்தோடு இருக்கின்ற குழந்தையை, இளங்குருத்தை, பச்சிளம் பாலகனை, கிழவன் என்று குவலயம் சொல்கிறதே! இது என்ன பேதைமை என்று பாடும் இப்பாட்டில் அருணகிரியார் ஆண்டவனது அவதாரத்தையும், அவனது திருவிளையாடல்களையும் மிக அலங்காரமாகப் புலப்படுத்தியுள்ளார்.

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற்
பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில்
ஏறி அறுவர்கொங்கை
விரும்பிக் கடல்அழக் குன்றழச்
சூர்அழ விம்மிஅழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என்று
ஒதும் குவலயமே!

(உலகத்து உயிர்கள் யாவும் மலம் நீங்கித் திருத்தம் பெறும் பொருட்டுப் புவனங்களை ஈன்றவளும், செம்பொன்னாலான பதுமையைப் போன்றவளுமாகிய அம்பிகையின் அழகிய முலைப் பாலை உண்டு, சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய தொட்டிலில் ஏறி, சூரன் ஒளிய இருக்கும் கடல் அழவும், கிரெளஞ்சமாகிய மலை அழவும், சூரன் அழவும் விம்மி அழுத குருத்துப் போன்ற இளங்குழந்தையாகிய முருகனை, உலகத்தார் குறிஞ்சிக் கிழவன் என்று கூறுகிறார்கள்.

புவனங்கள்: உபலட்சணத்தால் தனு கரண போகங்களையும் கொள்ள வேண்டும். பொற்பாவை: அன்மொழித்தொகை. சரவணத்தில் உள்ள பூவாகிய தொட்டில். அறுவர்: தொகையால் புலனாகும் குறிப்புச் சொல். கொங்கை: ஆகுபெயர்; பாலுக்காயிற்று. சூர்: உயர்திணையை அஃறிணை வாய்பாட்டில் சொன்னது; அரசு, அமைச்சு என்பன போல. குருந்து - குருத்து; மிக்க இளமையைப் புலப்படுத்தியபடி. குவலயம்: ஆகுபெயர்; உலகத்தோருக்கு ஆயிற்று.)