கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/தனிப் பரமானந்தம்

தனிப்பரமானந்தம்

1

புராணச் செய்திகள்

ருணகிரியார் இறைவனுடைய திருவருளில் ஈடுபட்டுக் கந்த புராணத்தின் கருத்தை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டவர். அவர் காலத்தில் தமிழில் உள்ள கந்த புராணம் தமிழ்நாட்டில் எங்கும் பரவியதோ இல்லையோ தெரியவில்லை. ஸ்காந்த புராணம் என்று சொல்லும் வடமொழிக் கந்த புராணத்தின் கருத்துகளும் கதைகளும் அவர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய சங்க நூல்களில் முருகனைப் பற்றிய வரலாறுகள் பல உள்ளன. எல்லாப் புராணங்களையும்விடக் கந்த புராணம் தமிழ்நாட்டில்தான் அதிகமாக வழங்கி வந்திருக்கிறது. வடநாட்டில் கந்த புராணத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது.

தமிழ்நாடும் கடவுளன்பும்

தென்னாட்டில் இருப்பதுபோல ஆலயங்களையோ ஆலய வழிபாடுகளையோ வடநாட்டில் பார்க்க முடியாது. அங்கே மக்கள் கூட்டமாகக் கூடிப் பஜனை செய்வார்கள். சரித்திரக் கண்கொண்டு பார்த்தால், பிறநாட்டவர்களின் அடக்குமுறைக்கும் படையெடுப்புக்கும் வடநாடு அப்போதைக்கப்போது உள்ளாகி வந்திருக்கிறது என்பது தெரியவரும். பிற நாட்டவர்கள் அங்கே அடிக்கடி படையெடுத்து வந்து கலகம் விளைவித்ததால் அமைதி இல்லாமல் போயிற்று. அதனால் அவர்கள் சமயத்துறையில் தென்னாட்டைப்போல அவ்வளவு வளர்ச்சி அடையவில்லை. அவர்களுக்குப் பக்தி இல்லை என்பது அல்ல. அவர்கள் பக்தி செய்த முறை வேறு. தமிழ்நாட்டில் அமைதி நிலவியதால் பல பல ஆலயங்கள் எழும்பின. ஆலயங்களில் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார்கள். பூசை நியமங்கள் ஏற்பட்டன. அங்கங்கே உள்ள கோயில்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்குப் பெரிய பெரிய விழாக்கள் நிகழலாயின.

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தலத்துக்கும் புராணம் இருக்கிறது. மதுரைக்கே ஐந்து புராணங்கள் இருக்கின்றன. அவற்றில் பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள திருவிளையாடற் புராணம் காப்பிய வகையில் மிக உயர்ந்ததாக அமைந்திருக்கிறது.

பழங் காலம்

ச்சியப்ப சிவாசாரியார் காலத்திற்கு முன்பே, அதாவது தமிழில் கந்த புராணம் ஏற்படுவதற்கு முன்பே, வட மொழியிலுள்ள கந்தபுராணத்தின் வரலாறுகளும், தத்துவங்களும் இந்த நாட்டில் உலவி வந்திருக்கின்றன என்று சொன்னேன். அவற்றைக் கற்றுணர்ந்த பெரியோர்கள் இந்த நாட்டில் இருந்தார்கள். சங்க கால இலக்கியமான பரிபாடலில் ஒரு பாட்டு இருக்கிறது. முருகனைப் பற்றிக் கடுவன் இள எயினனார் என்னும் புலவர் பாடிய பாடல் அது. "மலைச்சாரலில் வாழும் பூசாரி உனக்குப் பூசை போடுகிறான். தாமரையில் நீ அவதாரம் செய்தாய் என்கிறான். உலகத்தைச் சங்காரம் செய்கின்ற சங்கரனுடைய பிள்ளை நீ என்று சொல்கிறான். நீ யாருக்கும் பிள்ளை அல்ல. நீ எங்கும் பிறந்தவனும் அல்ல. ஆகவே அவன் சொல்வது மெய் அன்று. ஆனால் அவன் சொல்வதைக் கேட்டு நீ மகிழ்ச்சி பெற்று அவனுக்கு அருள் செய்கிறாய். அவன் சொல்கிற வார்த்தைகளைக் கேட்டு நீ எழுந்தருளி அருள் செய்வதனால் அவன் சொல்வன பொய்யும் அல்ல. உன் அவதாரம் பல வகைப்படும். அதைக் கொண்டு நின் இயல்பை அளந்தறிய வொண்ணாது" என்று பல செய்திகளை அவர் சொல்கிறார். அப்படிப் பல காலமாக இந்த நாட்டில் வழங்கி வருகிற கருத்துக்களை அருணகிரியார் நன்கு தெரிந்து கொண்டிருந்தார்.

தொகுத்து அறிதல்

னிதன் ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தால் அதைப் பற்றிய பல செய்திகளையும் தொகுத்து அறிந்து கொள்வான். நமக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமென்று முயலுகிறோம். ஒரு பையனைப் பார்த்தால், அவனுடைய தன்மை எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறோம். அவன் எவ்வளவு படித்திருக்கிறான் என்று விசாரிக்கிறோம். என்ன என்ன உத்தியோகம் பார்த்தான், இப்பொழுது என்ன உத்தியோகம் செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்கிறோம். அவனுடைய தந்தை, தாய், உறவினர்கள் எந்த எந்த ஊர்களில் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பனவற்றையும் தெரிந்து கொள்கிறோம். காரணம், நம்முடைய அன்புக்குரிய பொருளைச் சுற்றிச் சூழ இருக்கும் அத்தனை செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற மனித இயல்புதான். தனக்குப் பிரியமான பொருளைப் பற்றியுள்ள எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் மனிதனுக்கு இயல்பாக உண்டு.

நமக்கு இன்பத்தைத் தரவல்லவன் ஆண்டவன். அவன் உலகத்தில் திரு அவதாரம் செய்தான். அவன் எப்படி எழுந்தருளினான், அவன் என்ன என்ன விளையாடல் செய்தான், அவன் என்ன என்ன தத்துவங்களை உயிர்களுக்கு போதித்தான் என்பன போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு அவனிடம் அன்புள்ளவர்களுக்கு ஏற்படும். அவனைப் பற்றி யார் யாருக்கு என்ன என்ன தெரியுமோ அவை யாவையும் அவர்கள் வாயிலாகக் கேட்க வேண்டுமென்ற ஆசை தோன்றும். அருணகிரிநாதரும் தம் காலத்துக்கு முன்பிருந்தே இந்த நாட்டில் முருகனைப் பற்றி வழங்கி வந்த செய்திகளை எல்லாம் அறிந்திருந்தார்.

2

முன்பாட்டில், "எப்போதும் குழந்தை உருவத்தோடு இருக்கும் முருகனை இந்த உலகம் கிழவன் என்று சொல்கிறதே; என்ன பேதைமை!" என அலங்காரமாகக் கூறியதைப் பார்த்தோம். அலங்காரம் என்றால் அழகுபடச் சொல்வது அல்லவா?. முருகனைக் குழந்தை என்று சொல்லிவிடலாம். அது சிறப்பு அல்ல. அதை அலங்காரமாகச் சொல்ல வேண்டும். சென்ற பாட்டில் அப்படிச் சொல்லி, திரு அவதாரதத்துவத்தையும், இளம்பருவத் திருவிளையாடல்களையும் சொன்னார். குழந்தைப் பருவத்துக்கு அடுத்த பருவம் எது? காளைப் பருவம் அல்லது குமரப் பருவம் அல்லவா? அடுத்தபடி அது நினைப்புக்கு வந்தது. அவனைக் காளையாக, குமரனாக இந்தப் பாட்டிலே பாடுகிறார். காளைக்குக் கன்னி வேண்டும் அல்லவா? இந்தப் பாட்டிலே குமரனாகிய முருகன் ஒரு கன்னிகையைக் காதலித்த திருவிளையாடலைச் சொல்கிறார்.

வள்ளித் திருமணம்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை

என்று தொடங்குகிறது பாட்டு. அவன் எத்தகையவன்? அவன் யாரை விரும்பினான்? அவன் குமரன். பெரும்பைம்புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதையை விரும்பிச் சென்றான். இந்த வரலாற்றை கவனிக்கும்போது கந்த புராணத்தில் கடைசிப் பகுதிக்கு வந்துவிடுகிறோம். கந்த புராணம் முருகனது திரு அவதாரத்தில் தொடங்குகிறது. அதனைச் சென்ற பாட்டிலே அருணகிரியார் சொன்னார். அது முக்கியமான பகுதிதான். ஆனாலும் அது ஒன்று தான் முக்கியமான பகுதி என்று சொல்வதற்கில்லை. சூரபன்மனை ஆண்டவன் சங்காரம் செய்த வரலாறு கந்த புராணத்தில் பெரும்பகுதியில் விரவிக் கிடக்கிறது. சூரனும், அவனுடைய தோழர்களும் ஆண்டவனிடம் பல பல மாயங்களைப் புரிய எம்பெருமான் அவற்றைப் போக்கி அவர்களைச் சங்காரம் செய்த வரலாறு விரிவாக இருக்கிறது. அந்தப் பகுதிகளும் நமக்கு முக்கியமானவையே.

ஒரு மாமரம் அடி பருத்து நன்றாக வளர்ந்திருக்கிறது; கப்பும் கிளையுமாகப் படர்ந்திருக்கிறது. அந்த மரத்தின் பெரும்பகுதி கிளைகளும், இலைகளுமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒருவன் கிளைகளையும், இலைகளையுமா பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கிளைகளோடு மரத்தின் பயன் நின்று விடவில்லை. கப்புக்கும் கிளைகளுக்கும் நடுவிலே உச்சியில் இருக்கும் பழந்தான் அதன் பயன். அந்த மரத்தின் உச்சியிலே எந்த இடத்தில் பழம் இருக்கிறது என்றுதான் நாம் எல்லோரும் பார்ப்போம். அந்தப் பழம் கனிந்திருக்கும்; இன்பச்சுவை உடையதாய் இருக்கும். அவ்வாறே கந்த புராணம் முழுமையும் விரிந்து வளர்ந்து கிடப்பது சூரபன்மன் சங்காரம். சூரனுடனும், அவனுடைய தோழர்களுடனும் நெடுங்காலம் போர் நிகழ்ந்தது. அதன் வருணனை கந்த புராணத்தில் மிக விரிவாக இருக்கிறது. ஆனால் அதுவே முடிவான பகுதி அல்ல; பயன் ஆகிய பகுதியும் அல்ல. கந்த புராணம் என்ற மரத்தின் உச்சியிலே ஒரு பழம் பழுத்திருக்கிறது. அந்தப் பழந்தான் வள்ளி திருமணம்.

கச்சியப்ப சிவாசாரியார் வள்ளி திருமணத்தோடு புராணத்தை முடிக்கிறார். எந்தக் கதையை எடுத்தாலும் கல்யாணத்தோடு முடிக்க வேண்டுமென்று நினைப்பது நம் நாட்டு வழக்கம். மனிதன் வாழ்வு மரணத்திலே முடிகிறதைப் பார்க்கிறோம். எப்பொழுதும் நாற்றமுள்ள இடத்திலே குடியிருக்கும் ஒருவன் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள முயலும்போது நாற்ற முள்ள இடத்திலா கட்டிக் கொள்வான்? நல்ல காற்றுள்ள இடத்தில் கட்டிக் கொள்ள வேண்டுமென்று யோசிக்க மாட்டானா? அதைப்போல லட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்று விரும்புகிறவர்கள், மரணத்திலேயே முடிந்து கொண்டிருக்கிற மனித வாழ்வைச் சொல்ல மாட்டார்கள். மரணத்திற்கும் அப்பாற்பட்ட அமர வாழ்வினை அடைய வேண்டுமென்ற லட்சியத்தோடு கதை புனையும் கலைஞர்களுக்குக் கதையை நன்றாக முடிக்க வேண்டுமென்ற கருத்து இருக்கும். கந்தபுரணம் வள்ளியெம்பெருமாட்டியின் திருமணத்தோடு நன்றாக முடிகிறது.

இரண்டு மணம்

ந்தபுராணத்தில் இரண்டு திருமணங்கள் வருகின்றன. சூரனோடு முருகன் போரிட்டு, அவனைச் சங்காரம் செய்து தேவர்களுக்கு இன்ப வாழ்வை மீண்டும் வழங்கினான். முருகன் செய்த உதவியை எண்ணித் தேவராஜன் தன் மகள் தேவகுஞ்சரியை அவனுக்கு மணம் செய்து வைத்தான். "எம்பெருமானே, நீ எங்களுக்குச் செய்த நன்றியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். போரிலே நீ காட்டிய வீரத்திற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்! பார்வதி பரமேசுவரரைக் காணுவதுபோல உன்னைத் திருமணக்கோலத்தோடு பார்க்க வேண்டுமென்று நினைக்கிறோம். இந்தப் பெண்ணை நீ ஏற்றுக் கொண்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்" என்று கூறி, வெள்ளை யானையாகிய ஐராவதம் சுமந்து வந்த தேவ யானையை முருகனுக்கு அர்ப்பணம் செய்தான். யுத்த காலத்தில் தேவசேனாபதியாக இருந்தான் முருகன்; அமரர் படைத் தலைவனாக நின்று போராற்றினான். போர் முடிந்தவுடனேயே, தேவசேனையின் பதியாக ஆனான். இது முதல் கல்யாணம். ஆனால் அதற்கு அடுத்தபடியாகக் கந்த புராணத்தின் முடிவில் கச்சியப்ப சிவாசாரியார் வள்ளியெம்பெருமாட்டியின் திருமணத்தை வைக்கிறார்.

நம் ஊரில் ஒருவர் இருக்கிறார். வேறு ஊரிலிருந்தும் ஒருவர் வருகிறார். இருவரும் சபையில் பேசுகிறார்கள்; என்றாலும் நம் ஊர்ப் புலவர் பேசியதைப் பற்றியே பெருமையாக நினைப்பது இயல்பு. தேவகுஞ்சரி தேவர்கள் பட்டணத்தில் இருந்தவள்; வள்ளியம்மையோ நம்மைப்போல இந்த உலகத்தில் இருந்தவள். நம்மைப் போலவே இந்த உலகத்தில் ஒன்றும் அறியாத பேதைப் பெண்ணாக இருந்த அவளுக்கு கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது. அவளை எம்பெருமான் இங்கே வந்து மணந்து கொண்டான். அது சிறப்பான விஷயம் அல்லவா? அதோடு நமக்கும் அப்படிப்பட்ட பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அந்த வரலாறு உண்டாக்குகிறது. கிம்பர்லியில் தங்கம் கிடைக்கிறது என்றால் அது நமக்குக் கதையாக இருக்கிறது; அது நமக்கு பள்ளிக்கூடப் பாடம். ஆனால் நெய்வேலியில் நிலக்கரி கிடைக்கிறது என்றால் உடனே மகிழ்வு எய்துகிறோம்; இந்த ராஜ்யத்தின் பொருளாதார வாழ்வு சிறப்படையும் என்று மகிழ்கிறோம். அதுபோலவே தேவயானையை முருகப் பெருமான் மணந்து கொண்டதனால் வாழ்வு பெற்றவர்கள் தேவர்கள். ஆனால் நமது ஊரில் பிறந்த வள்ளியெம்பெருமாட்டியை முருகன் மணந்து கொண்ட செய்தியைக் கேட்டால் நமக்கும் வாழ்வு உண்டென்று நம்பத் தோன்றுகிறது. நமக்கும் அவனுக்குமுள்ள உறவு அதிலிருந்து மிகுதியாகிறது. ஆகவே வள்ளி திருமணமாகிய பயனோடு கந்தபுராணம் முடிகிறது.

சிவபிரான் கண்களிலிருந்து உண்டான பெருமான், திருந்தப் புவனங்கள் ஈன்ற பிராட்டியின் பாலை அருந்திய பிரான், சரவணப் பூந்தொட்டிலில் விளையாடிய பெருமான், சூரன் முதலிய அசுரர்களைச் சங்கரித்த பெருமான், தேவேந்திர லோகத்தை தேவர்களுக்கே திரும்பவும் மீட்டுக் கொடுத்துத் தேவேந்திரனுடைய பெண்ணை மணந்து கொண்டு அவர்களுக்கு வாழ்வு அளித்த பெருமான் நமது ஊருக்கும் வந்து மக்களில் ஒருத்தியாக வாழ்ந்து கொண்டிருந்த பேதைப் பெண் வள்ளியை மணந்து கொண்டு, நமக்கு வாழ்வு அளித்து நம் உறவினர்களில் ஒருவனாக, நம் அன்புக்குரிய நெருங்கிய சுற்றத்தினனாக ஆனான் என்றால், அந்தப் பெருமையான நிகழ்ச்சி நம் நினைவை விட்டு அகலாமல் இருப்பதற்குரியதல்லவா? முருகனை என்றென்றைக்கும் வள்ளி மணாளனாகவே எண்ணி நாம் உறவு கொண்டாடி உய்வு பெறவேண்டுமென்பதற்காகவே வள்ளியெம் பெருமாட்டியின் திருமணத்தோடு கச்சியப்ப சிவாசாரியார் புராணத்தை முடித்திருக்கிறார்.

இதற்கு முன் பாட்டிலே முருகன் குழந்தையாக இருந்து பல திருவிளையாடல்களைப் புரிந்ததைக் கண்டோம். இந்தப் பாட்டிலே முருகன் கல்யாணக் கோலத்துடன் வருகிறான்.

கந்த புராணமும் சொந்தப் புராணமும்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி
னால்மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம்
தித்தித் தறிந்தஅன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும்
புளித்தறக் கைத்ததுவே.
இந்தப் பாட்டில் "பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை" என்பது முதல் பகுதி. இது கந்த புராணம். அடுத்து இருப்பது இரண்டாம் பகுதி. அருணகிரிநாதரது சொந்தப் புராணம். இந்தப் புராணத்தில் மூன்று அத்தியாயங்கள் இருக்கின்றன. "மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள” என்பது முதல் அத்தியாயம். “அரும்புந் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்தவன்றே" என்பது இரண்டாவது. "கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத் ததுவே" என்பது மூன்றாவது. முதற்பகுதியிலே அருணகிரியார் கந்தபுராணக் கதையைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியிலே மூன்று பிரிவுகளாக அவன் அருளால் பெறும் இன்பத்தைப் புலப்படுத்துகிறார்.

தினைப்புனம்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்புங் குமரனை

வள்ளி வாழ்ந்த புனம் எப்படி இருக்கிறது? பச்சைப் பசேல் என்று தினைப் பயிர் விளைந்த கொல்லை அது. கண்ணுக்கு எட்டும் வரைக்கும் எங்கே பார்த்தாலும் தினைப் பயிர் விளைந்திருக்கிறது. புனம் என்பது தினைப்பயிர் விளையும் நிலம். அங்கே வள்ளியம்மை சிற்றேனல் காக்கிறாள். ஏனல் என்றால் தினை என்று பொருள். சிறிய தினையைக் காக்கின்றாள்.

தானியங்களுள் சிறியது தினை என்றும், பெரியது நெல் என்றும் சொல்வார்கள். தினை விளைகின்ற பூமி புனம். இதனைப் புன்செய் நிலம் என்பர். நெல் விளைகின்ற பூமி நன்செய் நிலம் என்பர். அதிகப் பாடு இல்லாமல் விளைவது தினை. மிக்க உழைப்பினால் விளைவது நெல். ஏழைகள், பண வசதி அற்றவர்கள் தினையை உண்பார்கள். தஞ்சாவூர் மிராசுதார்கள் நெல் உணவு உண்ணுவார்கள். உழைப்பு அதிகமாகக் கொள்ளும் நெல்லுக்கு நிச்சயமாக அதிக உயர்வு இருக்கும். புன்செய்க்கு அத்தனை உழைப்பில்லை. உழைப்பு இல்லாததால் புன்செய்ப் பயிர்கள் உயர்வு பெறாமல் இருக்கின்றன. உயர்வு பெறாமல் உள்ள சிறிய தினைப் பயிரை வள்ளியம்மை காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் எத்தகையவள்? பேதை; அறியாமையை உடையவள். அந்தப் பெரிய காட்டில் மிகச் சிறியதான தினையைக் காக்கிறாள். சிற்றேனல் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உணவு ஆதலாலே, அதனைக் கிளி, குருவி முதலியவை கொத்திக் கொண்டு போகாமல் இருக்க ஆலோலம் பாடி அவற்றைத் துரத்திக் கொல்லையைக் காவல் செய்து வருகிறாள். அப்படிக் காப்பாற்றுவதையே தன் வாழ்க்கைச் செயல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

திருமணம் புரிந்து கொண்டு நாயகன் வீடு போகிற வரைக்கும் குற மகளிர்களுடைய வேலை தினைப் புனம் காவல் புரிவது. அந்த வகையில் குறமகளாகிய வள்ளியெம்பெருமாட்டி சிற்றேனலைக் காத்துக் கொண்டிருக்கிறாள். இதன் உள்ளுறை என்ன? மனித வாழ்க்கையில் ஆன்மாக்களாகிய உயிர்கள் இன்றைக்கு என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறதோ அதையே வள்ளியம்மை செய்கிறாள். இந்த உலகம் விரிந்திருக்கிறது. உயிர்கள் எல்லாம் உடம்பைப் பெற்று, பொறிகளின் வாயிலாக இன்ப துன்பங்களை நுகர்ந்து திரும்பத் திரும்ப இறந்தும் பிறந்தும் வருவதற்கு நிலைக்களமாக இந்த விரிந்த உலகம் அமைந்திருக்கிறது. உலகத்தில் விளைகின்ற பொருள்களை அநுபவித்துக் காத்து, அவற்றைத் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உரிய பொருளாகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆன்மாக்கள் காவல் புரிகின்ற பெரிய கொல்லையாக ஆண்டவன் இந்தப் பூமியை அமைத்திருக்கிறான்.

தினையும் நெல்லும்

லைச்சாரலில் உள்ள நிலத்தில் அதிக உழைப்பு இல்லாத தினைப் பயிரையும் விளைவிக்கலாம். அருவியிலே வருகின்ற தண்ணீரைத் தேக்கிப் பாய்ச்சி நன்செய்ப் பயிரான நெல்லையும் விளைவிக்கலாம். ஆனால் குறமகளான வள்ளி சின்னத் தினையைக் காத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெரிய வீட்டில் அறியாமை உடையவளான, பேதைப் பெண்ணான, வள்ளி எப்படி மிகவும் சின்னத் தினையைக் காத்துக் கொண்டிருக்கிறாளோ அதைப் போலவே இந்த அகன்ற உலகத்தில் அறியாமையை உடைய உயிர்கள் சிற்றின்பத்தையே அநுபவித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மலைச்சாரலில் உள்ள நிலத்தில் சக்தி உடையவர்கள், உழைப்பு உடையவர்கள், நன்செய்ப் பயிரான நெல்லைப் பாடுபட்டு உற்பத்தி செய்வது போல, இந்த விரிந்த உலகத்தில் அருட்செல்வர்கள் சிற்றின்பம் அல்லாத, எல்லையில்லாத, பேரின்பத்தைத் தம் உழைப்பினால் விளைத்து இன்பத்தை அடைவார்கள். பணக்காரர்கள் புசிப்பது நெல்; ஏழைகள் உண்பது தினை. அருட்செல்வர்கள் நுகர்வது பேரின்பம்; அருள் இல்லாத ஏழைகள் அநுபவிப்பது சிற்றின்பம். சிற்றின்பத்தைக் கிஞ்சித் போகம் என்றும், பேரின்பத்தை மகா போகம் என்றும் சொல்வார்கள். பேரின்பத்தை விளைவிக்கக் காரணமான நெல் இவ்வுலகத்தில்தான் விளைகின்றது, இவ்வுலகத்திலே,

"யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்" என்று வள்ளுவர் சொல்கிறார். செருக்கை அறுப்பதற்கு நிலைக் களமாக இருக்கும் இடம் இவ்வுலகம். உலகத்திற்கு வருகிறவர்கள் செருக்கைப் போக்கிக் கொள்ளலாம்; செருக்கைப் பெருக்கியும் கொள்ளலாம். ஆற்றுக்குப் போகிறவன் தன் உடம்பிலுள்ள அழுக்கை நீரிலே கழுவிக் கொள்ளலாம்; அங்கு இருக்கிற சேற்றை உடலிலே பூசிக் கொள்ளவும் கொள்ளலாம். அதைப்போல இந்த உலகத்திற்கு வருகிறவர்கள் தம் பொறிகளின் வழியே சென்று சிற்றின்பத்தையே தேடி அலைந்து அநுபவித்து அதைப் பிறர் அடையாமல் காவல் காக்கிறார்கள். ஆனால் சிலர் பொறிகளின் பிடிப்பிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை அடைவதற்கான வழி வகைகளைச் செய்து கொள்கிறார்கள். இதே இடத்தில் அவர்களோடு கூடவே வாழ்கின்ற மக்கள் பலர் 'பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைப்' பெண்ணைப் போல இருக்கிறார்கள். தினை சாப்பிடுபவர்கள் சிற்றின்பம் தேடி நிற்பவர்களைப் போன்றவர்கள்; நெல்லஞ்சோறு சாப்பிடுகிறவர்கள் பேரின்பம் நாடி நிற்பவர்களைப் போன்றவர்கள். இந்தக் கருத்தை வள்ளியம்மை வரலாற்றிலேயே காண்கிறோம். அது மட்டுமல்ல. இந்த நாட்டில் புத்தகத்தில் வராமல் இருக்கிற நாடோடிப் பாடலிலும் இந்தக் கருத்தைக் காணலாம்.

ஒரு பரதேசி பாடிக் கொண்டு போகிறான். தெருவிலே பிச்சை கேட்டுப் போகிற அவன், நமக்கு ஞான நூற் கருத்தைப் பிச்சையிட்டுக் கொண்டே போகிறான்.

"நேற்றுக் கொடுத்த பணம் - முருகா
நெல்லுக்குச் செல்லவில்லை-அதை
மாற்றித் தாருங்காணும் - திருத்தணி
மலையில் வேலவனே"

என்பது ஒரு பாட்டு. நாடோடிப் பாடல்களில் அந்த அந்த நாட்டின் வாசனை அடிக்கும். இறைவனோடு ஒட்டியிருக்கிற தத்துவ வாசனை நிரம்பிய நாடு இது; ஆதலால், அந்தப் பரதேசியின் பாடலிலும் தத்துவ வாசனை கமழ்கிறது. அந்தப் பாட்டைச் சற்று ஊடுருவிப் பார்க்கலாம்.

ரேஷன் காலம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவனுக்கு ரேஷன் அதிகாரி பர்மிட்' கொடுத்திருந்தார். அது காசைப் போலவே இருக்கிறது. அதை எடுத்துப் போய்க் கடையில் காட்டினான். அவனுக்குக் கடைக்காரன் தினை அளந்து போட்டான். அதை அவன் வீட்டுக்குக் கொணர்ந்து குத்திப் புடைத்துச் சோறாக்கித் தின்றான். ஒவ்வொரு தடவையும் கடைக்காரன் அவனுக்குத் தினைதான் கொடுத்தான். ஆனால் வேறு ஒருவனுக்கு நல்ல சம்பா அரிசியைக் கொடுத்தான். அதைக் கண்டு இவனுக்கும் சம்பா அரிசி சாப்பிட வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. கடைக்காரனைப் பார்த்து, "எனக்கும் சம்பா நெல்லே போடு" என்றான். அதற்கு அவன், "இந்தக் காசில் தினை கொடுக்கும்படி எழுதியிருக்கிறது. காசை மாற்றி வா. உனக்கு நெல் கொடுக்கிறேன்" என்று சொன்னான். "அப்படியானால் அந்தக் காசை யார் கொடுப்பார்கள்?" என்று இவன் கேட்டான். "இந்தக் காசை உனக்கு யார் கொடுத்தாரோ, அவரே அந்தக் காசையும் கொடுப்பார்" என்று அவன் சொன்னான். இவன் ஒடோடியும் சென்று அந்த அதிகாரியிடம் கேட்கிறான்.

"நேற்றுக் கொடுத்த பணம்-முருகா
நெல்லுக்குச் செல்லவில்லை - அதை
மாற்றித் தாருங்காணும்"

என்கிறான். இதன் கருத்து என்ன? "என்னுடைய மனத்தில் உள்ள தீமை போய்ச்சத்துவ குணம் வர வேண்டும். ராஜஸ்தமோ குண மனத்தினால் இன்பம் பெற முடியாது. இப்பொழுதுள்ள மனத்தைக் கொண்டு நல்ல அநுபவம் பெறுவதற்குரிய முயற்சி செய்ய முடியவில்லை. இதை நீ எடுத்துக் கொண்டு நல்ல மனம் தா என்பதையே அந்தப் பரதேசி பாட்டுச் சொல்கிறது.

இந்தப் பாட்டில் வரும் நெல் என்பது திருவருட் போகம். உலகத்தில் மக்கள் எல்லாம் ஐம்பொறிகளின் வழியே இன்பத்தை நுகர்ந்து நடத்துகின்ற வாழ்க்கை, தினைச் சோற்றைப் போன்றது. அதை உண்ணும்போது அதைப் பறித்துக் கொள்ள யாராவது வந்துவிடப் போகிறார்களே என்று கல்லை எடுத்து அடித்துக் காவல் புரிகிறார்கள். எந்தப் பொருளினிடத்திலும் நமக்குப் பற்று உண்டானால் உடனே பகையும் வரும். எல்லாத் துன்பங்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது அவா. ஒரு பொருளினிடம் ஆசை பிறந்துவிட்டால், அந்தப் பொருளை இச்சிக்கிற பிறரிடம் வெறுப்பு வரும்; அதனால் கோபம் வரும்; கோபத்தினால் பகை உண்டாகும்; பகையினால் ஹிம்ஸை முளைக்கிறது; பல கொலைகள் நிகழ்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பது எது? அவா ஆசை. தனி மனிதன் ஆனாலும் பேரரசு ஆனாலும் தன் வாழ்வுக்கு மற்றொருவன் போட்டியாக வருகிறானே என்ற எண்ணமும் அதனால் பகையும் உண்டாவது இயல்பு.

தினை காத்தல்

னக்கும், தனக்கு உரியவர்களுக்கும் உணவானது தினை என்பதனால் வள்ளிக்கு அதைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. ஆதலால் அவள் ஆலோலம் பாடிக் கொண்டு தினைக் கொல்லையைக் காவல் புரிகிறாள். அவள் பாட்டு நமக்கு இனிமையாக இருக்கிறது என்றாலும், கிளியும், குருவியும் அவள் பாட்டையா கேட்கின்றன? அவள் விடுகின்ற கல்லால் அடிபடுகின்றன; துன்புறுகின்றன. அவளைப் பேதை என்று சொல்ல ஒரு காரணம் உண்டு. உண்மையில் அவள் குறச் சாதியைச் சேர்ந்தவள் அல்ல. அவள் திருமாலினுடைய மகள்; முருகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டிய உரிமை உடையவள். அவள் குற மக்களுக்கு மத்தியிலே வந்து வளர்கிறாள்; தான் யார் என்பதை அறிந்துகொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்; தினைப்புனம் காத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆன்மா இறைவனோடு ஒட்டி வாழ வேண்டியது. ஆனால் அது உலகத்திலே பிறந்து, அறியாமையில் சிக்கி, பாசத்திற் கட்டுப்பட்டு, சிற்றேனல் காக்கின்ற பேதைப் பெண் வள்ளியைப் போல் சிற்றின்பத்துக்காக முயன்று அதை நுகர்ந்து கொண்டிருக்கிறது. சிறையில் அகப்பட்ட கைதி, அதனையே தன் வீடாகக் கருதிச் சிறையில் உள்ள மற்றக் கைதிகளோடு உறவு கொண்டாடி வாழ்ந்து வருவதைப் போல, இந்த உலகமாகிய சிறையில் அடைக்கப்பட்ட உயிர்கள் தம்மைப் போலவே இந்தச் சிறையாகிய உலகத்திற்கு வருகின்ற மற்ற உயிர்களோடு உறவு முறை கொண்டாடி வாழ்கின்றன. தம்முடைய சொந்த வீடு எது என்பதை உணராமல் இருக்கின்றன. தினைப் புனத்தில் வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த வாழ்க்கையைத்தான் ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஒடி வந்தான்

ள்ளிக்கு வாழ்வளிக்க முருகன் எப்போது வந்தான்? அந்தக் குற மாது தங்களுடைய குல தெய்வமாகிய முருகனைக் கொஞ்சம் நினைத்தாள். நினைத்த மாத்திரத்திலே ஓடி வந்து விட்டான், அவளுக்கு வாழ்வு அளிக்க. வள்ளியாகிய ஆன்மா தன்னை நினைக்கவில்லையே என்று அவன் காத்துக் கொண்டிருக்கிறான். தன்னை மெல்ல நினைத்தாலும் உடனே வேகமாக ஓடி வந்து அருள் செய்கிறவன் முருகன். வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்தால் வருவேன், மாலை போட்டுப் போட்டோ எடுப்பதாயிருந்தால்தான் வருவேன் என்று அவன் பிகு பண்ணிக் கொள்ள மாட்டான். பருவம் அறிந்து ஓடி வந்து இன்பம் அளிப்பவன் அவன்.

வள்ளி அவனை அடைவதற்குரிய பருவத்தை அடைந்து விட்டாள். அவள் பருவம் அடைந்துவிட்டாள் என்பதைப் பாட்டில் வருகிற சொல்லே குறிக்கிறது.

பேதை கொங்கை விரும்பும் குமரனை

பருவம் வந்தவுடனே ஆண்டவன் ஒடி வந்தான். அவளிடம் தான் இன்பத்தை அடைய விரும்பி வந்தவனைப் போல ஒடி வந்தான். இதுதான் பெரியவர்களுடைய தன்மை. யாருக்காவது அவர்கள் உபகாரம் செய்ய நினைத்தால் ஏதாவது சிறு வேலையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அந்த வேலைக்கு ஈடு செய்வது போலப் பன்மடங்கு உபகாரம் செய்வார்கள். முருகனும் அப்படியே செய்தான். வள்ளிக்கு வாழ்வு அளிக்க விரும்பினான். ஆனால் அவளிடம் இருந்து தான் இன்பம் அடைய விரும்புகிறவனைப் போல ஒடி வந்தான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியாக அவளிடம் கெஞ்சிக் கூத்தாடினான்.

அவனுக்கு மணம் ஆகவில்லையா? தேவர்களுக்கெல்லாம் அரசனான இந்திரனுடைய பெண் தேவயானையை ஐராவதம் சுமந்து வர, தேவர்கள் யாவரும் அந்த அழகான பெண்ணை மணந்து கொள்ள வேண்டுமென்று முருகப் பெருமானைக் கெஞ்சிக் கேட்டு மணம் செய்து கொடுத்தார்கள். அந்தப் பெருமாட்டியின் அழகு வாடவில்லை; அவள் கிழவியாகப் போய்விடவில்லை, இவன் இன்னொரு மனைவியை நாடி ஒட. எந்தச் சமயத்திலும் முருகன் விரும்புகிறபடி குறிப்பறிந்து செய்ய அவள் காத்துக் கொண்டிருக்கிறாள். அவனோ குறச் சாதியில் பிறந்த ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக ஓடி வந்தான்.

அவ்வாறு வந்ததற்குக் காரணம் என்ன?

அழைத்தால் வருவான்

வன் பேரருளாளன். தலையிலே சுமையை உடையவன் எங்கே சுமைதாங்கி, எங்கே சுமைதாங்கி என்று பார்க்க மாட்டானா? அதைப்போலத் தன்பாலுள்ள அருட்சுமையை வாங்கிக் கொள்வார் யார் என்று தேடி ஓடி வருகிறான். தன்னிடம் இருக்கும் அருளை வாங்கிக் கொள்ள ஆயத்தமாய் இருப்பவர்களுக்கு உடனே அருளுகிறான். அவனைக் கூப்பிடும் போதே ஓடிவரச் சித்தமாக இருக்கிறான். நாம்தாம் அவனைக் கூப்பிடுவதில்லை. "உன் கடவுள் எங்கே இருக்கிறான்?" என்று கேட்ட இரணியனுக்குப் பிரதலாதன், 'எங்கும் இருப்பான்' என்று சொன்னவுடனே, "இவன் எந்த இடத்திலும் இருப்பான்" என்று சொல்லி விட்டானே; "இரணியன் தட்டுகின்றது எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து வெளிப்பட வேண்டுமே!" என்று எண்ணி நரசிங்கமூர்த்தி, "இரணியன் எங்கே தட்டுவான்? எங்கே தட்டுவான்?" என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். பிரகலாதன் வார்த்தையைக் காப்பாற்றும் பொருட்டு இரணியன் தட்டும் இடத்திலே எழுந்தருளினான் இறைவன். நாம் அன்பினால் தட்டினால் நம்மைக் காப்பாற்ற அவன் வருவான். நாம் தட்டுவது இல்லை; தட்டுவதாக நினைத்தால் போதாது; நடித்தால் போதாது.

என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தந்தி ஆபீசில் வேலை செய்யும் ஒருவர் இருக்கிறார். அவருடைய பிள்ளை தன் தகப்பனார் தந்தி அடிப்பதைப் பார்த்திருக்கிறான். அவரைப் போலவே அவனுக்கும் தந்தி அடிக்க வேண்டுமென்று ஆசை. அவர் தம் வீட்டில் பழகுவதற்காக ஒரு டம்மிக் கட்டையைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார். அந்தப் பிள்ளை அந்தக் கட்டையில், "கடகடகட்டுக்கட்டு" என்று தட்டுகிறான். "நானும் தந்தி அடிக்கிறேன்" என்று அவன் சொல்கிறான். அவன் அடிப்பதை யாராவது கேட்க முடியுமா? வேறு இடத்தில் இருப்பவர் அதைக் கேட்க முடியுமா? வேறு இடத்தில் அதைக்

க.சொ.1-14 கேட்க வேண்டுமென்றால் இணைப்பு வேண்டும். நாமும் தட்டித் தான் ஆண்டவனைக் கூப்பிடுகிறோம் என்று சொன்னால், அது அவன் காதில் விழ வேண்டுமே. நம்முடைய தட்டுக்கு அவனோடு இணைப்பு தர வேண்டும். "நானும் ஐந்தரைக் கட்டையில் பாடி, ஜாலராத் தட்டி இறைவனைக் கூப்பிடு கிறேனே; அவன் வரக் காணோமே" என்று சொன்னால் பயன் இல்லை. மெள்ளக் கூப்பிட்டாலும் போதும்; இணைப்பை அமைத்துக் கொண்டு கூப்பிட வேண்டும். உண்மையாக உள்ளம் உருகி, இருதயத்தோடு இணைந்து கூப்பிட்டால் அவன் ஏன் வர மாட்டான்? நாம் தட்டுவது நம் நரம்பிலே போய் அடிக்க வில்லை; முருகா என்று போடும் சத்தம் பலமாக இருக்கிறதே தவிர, இருதயம் அதனோடு இணையவில்லையே! செடியில் பூத்திருக்கிற ரோஜா மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொண்டால் செடியில் இருக்கும்போது இருந்த அழகு அப்போது இருக்குமா? இறைவனுடைய நாமத்தை நாக்காலே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? இது செடியில் இயற்கையாக இருக்கும் மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொள்வது போன்றதுதான். நாம் சொல்வது நம் இருதயத்துக்குக் கூடக் கேட்பதில்லையே! அப்படி இருக்கும்போது ஆண்டவனுக்குக் கேட்கவில்லையே என்று சொல்ல நாம் யார்? இருதயத்தோடு இணைந்து, ஒன்றாகி, உள்ளுருகி அழைத்தால் அவன் காதில் விழாமலா போகும்? அப்படிச் சொல்கிற பக்திநிலை உண்டாகிவிட்டால், பக்குவம் வந்துவிட்டால், நமக்கு அருள் செய்வதற்கு அவன் ஓடி வருவான். அதில் சிறிதும் ஐயம் இல்லை.

நாடக மேடையில் ஏறி ஒருவன், "அம்மா" என்று கூப்பிட்டால் அவனுடைய சொந்த அம்மாவா, "ஏன் கூப்பிட்டாய்?" என்று ஓடி வருவாள்? அம்மாவாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறவன்தான் வருவான். நாடகத்தில் நடிப்பதைப் போல நாம் முருகா என்று கூப்பிட்டால் முருகன் ஒடி வருவானா

"நாடகத்தால் உன் அடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விழைகின்றேன்"

என்று மாண்க்கவாசகர் சொல்கிறார். ஆண்டவன் நமக்கு அருள் செய்யவில்லை என்று குற்றம் சொல்வதற்கு முன்னால், இருதயத்தோடு ஒட்டி, உள்ளுருகி இறைவனை அழைக்கக் கூடிய நிலை நமக்கு வர வேண்டும். அப்படிக் கூப்பிடும் வன்மை இருந்தால் ஆண்டவன் நமக்கு அருள் கொடுக்க ஓடி வரக் காத்திருக்கிறான். இதனை நமக்கு நிரூபிக்கிறாள் வள்ளியெம்பெருமாட்டி. அவள் குறத்தி வேஷத்தில் இருந்தாலும் எம்பெருமானுடைய நினைப்போடு இருந்தாள். முருகனையே நினைக்கிற சாதி அவள் பிறந்த சாதி. குறச்சாதியினர் என்ன செய்வார்கள் தெரியுமா? சங்க நூல் சொல்கிறது. நிலத்தில் தினைப் பயிர் விளைந்தால் விளைந்த பயிரின் முதல் கதிரை அறுத்துக்கொண்டு போய் இறைவன் திருக் கோயிலில் கட்டிவிட்டு வருவார்கள்; அல்லது ஆண்டவனுக்குப் படைப்பதற்காக அதனைத் தனியாகச் சேமித்து வைப்பார்கள். எந்தப் புதிய பொருளையும் முருகனுக்கே உரிமையாக்குவது அவர்கள் வழககம்.

"கடியுண் கடவுள்"

என்று குறுந்தொகையில் ஒரு பாட்டு கூறுகிறது. முதல் முதலாக விளைவது ஆண்டவனுக்கு உரியது. புதிதாக விளைந்ததை உண்ணும் கடவுள் முருகன். எல்லா வகையிலும் முருகனையே நினைந்து வாழ்கின்ற குறச்சாதி மக்களுக்கிடையே வாழ்ந்த வள்ளி முருகனை நினைத்தாள். அவளிடம், தான் இன்பம் நுகர வந்தவனைப்போல முருகன் ஓடி வந்தான். அவள் அவனிடம் போகவில்லை.

கருணை மலிவு

காய்கறிக் கடைக்குப் போய் நாம் கத்தரிக்காய் வாங்கி வருகிறோம். சில சமயங்களில் சரக்கு மலிந்து போனால் காய் கறிக்காரி வீட்டு வாசலிலேயே காயைக் கொண்டு வந்து விற்கிறாள். அதனை வாங்கிச் சமைத்து உண்கிறோம். சரக்கை விற்று லாபம் பெறக் கருதி வந்தவளைப் போல அவள் வந்தாலும், அதனால் நன்மை அடைகிறவர் யார்? அதனை வாங்கிச் சுவைத்து உண்பவர்களாகிய நாம் அல்லவா? அதனைப் போல, அருள் மலிந்திருக்கிற முருகப்பெருமான், தன்பாலுள்ள அருளைக் கொடுக்க வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த தினைப் புனம் தேடி வருகிறான். "அம்மா உன் கை நல்ல கை. நீ முதலில் கை வைத்தால் என் சரக்கு எல்லாம் நிமிஷத்தில் போணியாகி விடும்" என்று காய் விற்பவள் சொல்வதைப் போல, அவன் வள்ளியெம்பெருமாட்டியிடம் ஒடி வந்து கெஞ்சுகிறான். தனக்குரிய லாபத்தைத் தேடி வருபவனைப்போல வருகிறான். 'பெரும் பைம்புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பி' வருகிறான். அவளை ஆட்கொள்வதற்காகவே அவன் வருகிறான்.

3

மெல்ல மெல்ல உள்ளுதல்

டுத்த இரண்டடிகளில் அருணகிரியார், உயிருக்கு அவன் எப்படி வாழ்வு அளிக்கிறான் என்று சொல்கிறார்.

மெய்யன்பினால் மெல்ல மெல்ல
உள்ள அரும்புந் தனிப்பர மானந்தம்
தித்தித் தறிந்தஅன்றே

'சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை' மெல்ல மெல்ல உள்ள வேண்டும்; மெதுவாக, மெதுவாக நினைக்க வேண்டும்; தியானம் செய்ய வேண்டும். கடுங்கோடைக் காலத்தில் நாக்கு வறள, நெடுந்துாரம் பிரயாணம் செய்து களைப்படைந்து வருகின்ற ஒருவனுக்கு நீர் கொடுத்தால் அவன் அதைச் சிறிதாகவே பருகுவான். மடக்கென்று வேகமாகக் குடித்தால் தொண்டை விக்கிக் கொள்ளும். நீண்ட நாள் நோயிலே அடிப்பட்டவனுக்கு நோய் தெளிந்தவுடன் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள் என்று டாக்டர் சொல்வார். பல பல காலமாக இறப்பு, பிறப்பு ஆகிய பிணிகளிலே வேதனைப்பட்டுக் காய்ந்து கருகிப் போய் இருக்கின்ற ஆன்மாக்களுக்கு இறைவனது அருள் தண்ணிரைப் பாய்ச்ச வேண்டுமென்றால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாய்ச்ச முடியும். ஆறு நிறைய வெள்ளம் போகிறதே என்று அந்த ஆற்றுக்கு அருகில் உள்ள வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஆற்றின் கரையையே உடைத்துவிட முடியுமா? ஆற்றிலே வெள்ளம் போனாலும் மடை வழியேதான் பாய்ச்ச வேண்டும். அது மாத்திரம் அல்ல. இறைவனது தியானம் எளிதில் மனிதனுக்குக் கிட்டாது. பழக்கத்தால் பல படிகளை ஒவ்வொன்றாகக் கடந்தால்தான் முன்னேற முடியும். மாடி ஏறும்போது ஒவ்வொரு படியாகக் காலைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் ஏறுகிறோம். இருநூறு வார்த்தைகளை ஒரு குழந்தை ஒரே நாளில் கற்றுக் கொண்டுவிட முடியுமா? ஒவ்வொரு வார்த்தையாகத்தான் அது கற்றுக் கொள்ளும். வாயிலே போட்ட கவளத்தை நன்றாக மென்று உள்ளே செலுத்திய பிற்பாடுதான் மற்றொரு கவளத்தை எடுத்துப் போட்டுக் கொள்கிறோம்.

அந்த வகையில் இறைவனது தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மெல்ல மெல்ல உள்ள வேண்டும். மெல்ல மெல்ல என்பது தாமச குணத்தைச் சொல்லவில்லை. அமைதியாகத் தியானம் பண்ண வேண்டும். நாம் ஒவ்வொரு தடவையும் அவன் திருநாமத்தை உச்சரிக்கும்போது அது நமது உள்ளத்திலே பதியும்படியாகத் தியானிக்க வேண்டும். அப்படித் தியானித்தால் இன்பம் உண்டாகும். அவனை இருதயம் ஒன்றி மெல்ல மெல்ல உள்ளினால்தான் ஆனந்தம் அரும்பும்; பரமானந்தம் அரும்பும்; தனிப் பரமானந்தம் அரும்பும்; நாம் சுகமென்று சொல்லும் நுகர்ச்சிக்கு அப்பாற்பட்ட மிக உயர்ந்த இன்பம் அந்தத் தனிப் பரமானந்தம். தனி என்பது ஒப்பற்றது என்பதைக் குறிப்பது. தனக்குச் சமானம் இல்லாத, மேல் ஒன்றும் இல்லாத, மிக உயர்ந்த ஆனந்தம் அது. அது இறைவனை மெல்ல மெல்ல உள்ளுவதனால் அரும்பும்.

ஆனந்தம் அரும்புதல்

ன்றாகப் பசி உடைய ஒருவனுக்கு உணவைப் படைத்தால் ஒரு பிடி சாப்பிட்டவுடனேயே அவன் பசி தீர்ந்துவிடாது. ஓர் அளவுக்கு பசி தீரலாம். அதைப் போல இறைவன் நாமத்தை ஒரு முறை சொன்னால் அந்த அளவுக்குப் பயன் உண்டு. மெல்ல மெல்லத் தியானிக்க ஆரம்பித்தால் ஆனந்தம் உண்டாகிறது. மேலும் விடாமல் சொன்னால் பரமானந்தம் உண்டாகிறது. சொல்லிக் கொண்டேயிருந்தால் தனிப் பமானந்தம் அரும்புகிறது. சொல்லிக்கொண்டே இருக்கும் ஒரு நிலையை எய்திய பின்தான் அந்த இன்பம் உண்டாகும் என்பது அல்ல. ஒரு பிடி கவளம் சாப்பிட்டவனுக்கே அதன் இன்பம் உண்டென்றால் ஒரு முறை இறைவனது நாமத்தை மனம் கலந்து தினமும் சொல்கிறவனுக்கு அதனால் பயன் உண்டாகாமலா போகும்? பெரியவர்கள், "நான் ஆனந்தம் அடைந்தேன்" என்று எடுத்துச் சொல்லும்போது, அவர்களுடைய உள்ளத்தில் ஆனந்தத்தின் ஒரு துளி அரும்பியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினால் பேச வராது. பரமானந்தம் அரும்பும் நிலை ஆரம்ப நிலை. ஆனந்த வெள்ளத்தில் மூழ்கும் நிலை வேறு.

இறைவனது நாமத்தை மெல்ல மெல்ல உள்ள உள்ளப் படிப்படியாக இன்பம் உண்டாகும். இந்த உலக இயலில் உழைக்கின்ற உழைப்பின் அளவுக்குப் பயன் கிடைக்கிறது என்றால், அருள் நெறியில் உழைத்த உழைப்புக்குப் பயன் இல்லை என்று சொல்பவர் யார்? தியானம் உண்மையாக இருந்தால் உண்மையாக இன்பம் அரும்புவதைக் காணலாம்.

தொழிலாளி உழைக்கின்ற உழைப்புக்கு அதிகமாகவே ஊதியம் கேட்கிறான். அதனை முதலாளி கொடுக்க மறுக்கிறான். அதனால் குழப்பம் உண்டாகிறது. முதலாளியோ தான் கொடுக்கிற ஊதியத்திற்கு அதிகமாகவே தொழிலாளிகளிடமிருந்து வேலை வாங்க நினைக்கிறான். அதனைத் தொழிலாளி செய்ய மறுக்கிறான். அதனால் குழப்பம் உண்டாகிறது.

ஆண்டவன் பெருங்கருணையாளன். அவன் நாம் எவ்வளவுக்கு உழைக்கிறோமோ அதனைவிடப் பன்மடங்கு அருளைத் தருவான். மெல்ல மெல்ல ஆண்டவனைத் தியானிப்பதன் மூலம் தம் உள்ளத்தில் அரும்பிய ஆனந்தத்தைச் சுவைத்துக் காந்தியடிகள் பேசினார். இன்னும் பலர் தாம் பெற்ற ஆனந்தத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அவை யாவும் பொய்யா?

உலகியலில் ஈடுபட்டிருந்த நமக்கு, உடம்புக்கும் அப்பாற்பட்ட ஆனந்தத்தைச் சுவைத்து, பொறிகள் எல்லாம் அடங்கிச் சமாதி நிலையை அடைவது முடியாமல் இருக்கலாம். ஆனால் சின்னச் சின்னத் துளியாக அரும்புகின்ற ஆனந்தத்தை அநுபவிக்கலாம். அது அரிது அல்ல. வள்ளிமணாளனை மெய்யன்பினாலே மெல்ல மெல்ல தியானித்தால், அந்த உழைப்புக்கு ஏற்ற ஆனந்தம் அரும்பும். நம் கண் எதிரே வாழ்ந்த ரமண மகிரிஷியைப் பார்த்தோமே. அவர் சின்னப் பிராயத்திலே குறும்புகள் புரிந்த குழந்தையாக இருந்தார். பின்பு இறைவன் திருவருளில் ஈடுபட்டு, அடைந்த இன்ப நிலையையும் கண்டோம். எத்தகைய முரடர்களாக இருந்தாலும் ஆண்டவனை மெல்ல மெல்லத் தியானம் செய்ய ஆரம்பித்தார்களானால், அவர்களுடைய மனத்திலே அமைதி பிறக்கும்; இன்ப நலங்களைப் பெற்று, தனிப் பரமானந்தத்தைச் சுவைக்கத் தொடங்குவார்கள். அதன்பின் அவர்களுடைய போக்கே மாறிவிடும்.

புளிக்கும் மாங்காய் மரத்திலே இருக்கிறது. பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த மாங்காயைப் பறித்தால் கண்ணிர் விடுவது போலப் பால் வடிகிறது. அது பழுத்துவிட்டால் என்ன ஆகிறது? அதன் பச்சை நிறம் பொன்னிறமாகிறது. கடினமாய் இருந்தது போய் நெகிழ்ச்சி பெறுகிறது. அதன் புளிப்பு மாறி இனிப்பாகிறது. நன்றாகப் பழுத்துவிட்டால் யாரும் பறிக்காமல் தானாகவே மரத்திலிருந்து நழுவிவிடுகிறது. அந்த நிலை எப்படி வருகிறது? கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. நாமும் ஆண்டவன் பாதத்தை நினைந்து அவனைத் தியானம் பண்ணப் பண்ண, அந்தத் தியானம் உள்ளத்தில் ஏற ஏற உள்ளத்தில் ஆனந்தம் அரும்பும். இது இவ்வுலக வாழ்வில் உண்மையில் நடக்கக் கூடியதே அன்றிக் கற்பனை அன்று.

இறைவனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள ஆரம்பித்தால், தியானிக்கத் தொடங்கினால், வன்மையாகப் பேசுகிற தன்மை மாறிவிடும். அப்புறம் அவர்களுக்குக் கடுமையாகப் பேச வராது. உலகம் முழுவதிலும் வாழும் மக்களைச் சகோதரர்களாகவே பார்க்கும் நிலை வந்துவிடும். இத்தகைய மனப்பக்குவம் வந்துவிட்டால், வள்ளியெம்பெருமாட்டியை முருகன் தேடி வந்தது போல, நமக்கும் அருள் இன்பம் கொடுக்க அவன் ஓடி வருவான்.

தன்னை நாடி இன்பம் நுகர்வானைப்போல ஒடி வந்த முருகனை வள்ளி அணைக்கவில்லை. முதுகு கூனி குறுகிப் போன கிழவனாக வந்தான். நாடகம் ஆடினான். அவள் அவனை லட்சியம் செய்யவில்லை. யானை வந்து அவளைப் பற்றி இழுக்கப் போனபோது, "ஆவிக்கு மோசம் வரும்" என்று தெரிந்து கொண்டபோது, "என்னைக் காப்பாற்ற உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை; உன் பற்றன்றி எனக்கு வேறு ஒரு பற்றும் இல்லை" என்று அவனைப் போய்த் தழுவிக் கொண்டாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். அவளுக்கு எல்லையில்லா ஆனந்தத்தைக் கொடுத்தான்.

அத்தகைய ஆனந்தம் கனவில் காண்பது அல்ல; புத்தகத்தில் எழுதியிருக்கிறது மாத்திரம் அல்ல; இந்த உலகத்தில் நமக்குப் பயன்படாதது அல்ல; மனிதப் பிறவிக்கு அப்பாற்பட்டதும் அல்ல; அரும்பும் தனிப்பரமானந்தத்தை இந்தப் பிறவியிலேயே நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

கரும்பும் தேனும்

சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்துஅறக் கைத்ததுவே.

நம்மிடம் உள்ள பொறிகள் எல்லாவற்றையும்விட நாக்குத் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. நாக்காகிய பொறிக்கு நாம் அடிமைப்பட்டிருக்கிறோம். நல்ல இனிமையான சங்கீதத்தைக் கேட்டு அநுபவிக்கின்றோம். அதைச் சொல்லும்போது, அவர் பாடிய பாடல் தேன் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம். நமது அன்பிற்குரிய குழந்தையைப் பார்த்துக் கட்டிக் கரும்பே என்று பாராட்டுகிறோம். இப்படி, எந்தப் பொறியினால் இன்பம் அடையக் கூடிய பொருளாயினும் அதற்கு நாக்காகிற பொறியினால் இன்புறும் பொருளை உபமானமாகச் சொல்கிறோம். நம் வாழ்வில் நாக்கு எல்லாப் பொறிகளையும்விட அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறதுதான் அதற்குக் காரணம்.

குழந்தை பிறந்த உடனேயே பாலைச் சுவைத்துக் குடிக்கின்றது. பிறக்கும்பொழுது அது நாக்குக்கு அடிமையாகிவிடுகிறது. கடைசியில் இறக்கும்பொழுது என்ன ஆகிறது? 'காது கேட்கவில்லை; கண்மூடிப் போய்விட்டது. வாயும் கிட்டி விட்டது. பஞ்சால் பாலைத் தோய்த்துத் தோய்த்து விட்டுக் கொண்டிருக் கிறார்கள். இப்பொழுதோ, இன்னும் சற்று நேரத்திலோ போய் விடும்" என்று சொல்கிறார்கள். பாலிலே ஆரம்பித்த வாழ்க்கை, பாலிலேயே முடிகிறது. இறக்கும் அளவும் அவனை அடிமையாக்கி வைத்திருப்பது நாக்காகிய பொறி ஒன்றுதான். நாக்கின் சுவைக்கு நாம் அடிமைப்பட்டிருப்பதாலேயே, மற்றப் பொறிகளால் நுகரும் இன்பத்தைத் தரும் பொருள்களையும் தேன் என்றும், பால் என்றும், கரும்பு என்றும் சொல்கிறோம்.

அருணகிரியார், "சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினாலே மெல்ல மெல்ல உள்ளுவ தனால் அரும்புகின்ற தனிப் பரமானந்தத்தைச் சுவைத்தவர்களுக்குக் கரும்பும் துவர்த்துப் போகும்; செந்தேனும் புளித்துப் போய்ப் பிறகு கசந்தே போகும்" என்கிறார். கரும்பையும், தேனையும் சுவைப்பது நாக்கு. துவர்த்துப் போன கரும்பை நாக்கு விரும்புமா? புளித்துப் போன தேனை விரும்புமா? விரும்பாது, கரும்பும் தேனும் நாக்கினால் அடைகின்ற இன்பத்தைக் குறிப்பதானாலும் பொறிகளினால் அடைகின்ற இன்பம் அனைத்துக்கும் இவை இரண்டும் அடையாளம். முருகனைத் தியானித்து வரும் ஆனந்தத்தைச் சுவைத்த பிறகு உலக இன்பம் அனைத்தும் சுவையற்றனவாகிவிட்டன; வெறுப்பை அளிப்பவை ஆகிவிட்டனவாம்.

ஒரு விருந்து சாப்பிடப் போகிறோம். ஜிலேபி போடுகிறார்கள். அதை உண்ணுகிறோம். அதற்குப் பிறகு சேமியா பாயசம் கொண்டு வருகிறார்கள். அதனை வேண்டாம் வேண்டாம் எனச் சொல்கிறோம். சேமியா பாயசம் இனிப்புடையது அல்ல என்பதாலா? இல்லை, இல்லை. மிக இனிப்பான ஒன்றை முதலிலே சாப்பிட்ட பிறகு, சாதாரண இனிப்புடைய மற்றொன்றைக் கொடுத்தால் அது சுவைப்பது இல்லை. எல்லோரும் காபியை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆனால் பாதாம் ஹல்வா சாப்பிட்ட பிறகு காபியைச் சாப்பிட்டால் அது கசக்கிறது. தினமும் சாப்பிடுகிற சாப்பாட்டிலேயே ஒன்று மிக இனிப்பதானால், மற்றொன்று சுவை இழந்து விடும்போது, பேரின்பத்தைத் தித்தித்து அறிந்த பிறகு, சிற்றின்பத்திலே சுவை எப்படி இருக்கும்? "கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே" என்பது உண்மை அநுபவம். கரும்பும் தேனும் ஐந்து பொறிகளினாலும் அடைகின்ற இன்பங்களுக்கு அடையாளமாக இருக்கின்றன. கரும்பு ஒருவனுடைய முயற்சியினாலே விளைந்து, அவனுக்கு இன்பத்தைக் கொடுக்கின்ற பொருள். தேன் ஒருவனுடைய முயற்சி இல்லாமலேயே விளைந்து அவனுக்கு இன்பத்தைத் தருகின்ற பொருள். மனிதனுடைய இன்பங்கள் இரண்டு வகை. தன்னுடைய முயற்சியினாலே பெறுகின்ற இன்பம் ஒருவகை; முயற்சி இல்லாமலேயே பண்டைத் தவத்தின் பயனாக அடையும் இன்பம் ஒரு வகை. கரும்பும் தேனும் அந்த இரண்டையும் குறிக்கின்றன. அரும்பும் தனிப்பரமானந்தத்தின் ஒரு துளியைச் சுவைத்தாலும் போதும்; பிறகு கரும்பும் துவர்த்துப் போய்விடும்; செந்தேனும் புளித்து, அறவே கைத்துப் போய்விடும். ஐந்து இந்திரியங்களினாலே அநுபவிக்கின்ற இன்பம் யாவும் நமக்குத் துவர்த்துப் போய்விடும்; புளித்துப் போய்விடும்; கைத்துப் போய்விடும் என்பது இதன் குறிப்பு.

தினைப்புனம் காத்துக் கொண்டிருந்த பேதைப் பெண்ணாகிய வள்ளியைப் போல, ஆன்மாக்கள் இந்த அகன்ற உலகமாகிற வனத்தில், சிற்றேனல் போன்ற சிற்றின்பத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றன. தினைப் புனத்தில் சிற்றேனல் காப்பதையே தன் தொழிலாக எண்ணியிருந்தாள் வள்ளியம்மை. ஆனால் இறைவனை அடைந்த மாத்திரத்தில் அவள் இந்த நிலைக்கு மீட்டும் வராத பேரின்ப நிலையை எய்திவிட்டாள். நாமும் அவன் அருட்பேற்றை அடைந்தால், இந்த உலகத்தில் மீட்டும் வந்து பிறவா நிலையை அடைந்து விட முடியும்.

முன்னும் பின்னும்

மய நெறியிலே சாதனம் புரிகின்றவர்களைப் பார்த்தால் பலருக்கு அவர்கள் செயல் பைத்தியக்காரத்தனம் என்று தோன்றும். ஏழு வயசுப் பெண் குழந்தை இருக்கிறாள். அவளை மணப்பதற்குரிய உரிமை பெற்ற அத்தான் அவள் வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வயசு பதினாறு. ஒரு நாள் அவன் தன் மாமன் மகளை அணைத்துக் கொள்கிறான். அவளோ அவன் பிடியில் இருந்து ஓடிவிடுகிறாள். அவளுக்கு அவனுடைய முகத்திலுள்ள மீசை குத்துவது அருவருப்பை அளிக்கிறது. இந்தப் பெண் பருவம் அடைந்தவுடனே, அவனே அவளை மணந்து கொள்கிறான். அவளுக்கு இன்பம் கொடுக்கிறான். அப்போது அந்தப் பெண் நினைக்கிறாள். "அடடா நமக்கு இந்த இன்பம் தெரியாமல் போய்விட்டதே! அவர் கைகளைப் பிடித்து உதறி எறிந்தோமே; அது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்" என்று நினைக்கிறாள்.

"கன்னிகை ஒருத்திசிற் றின்பம்வேம் பென்னினும்
கைக்கொள்வள் பக்குவத்தில்;
கணவனருள் பெறின்முனே சொன்னவாறென்னெனக்
கருதிநகை யாவள்;அதுபோல்
சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை
தோன்றிற் சுகாரம்பமாம்"

என்று பாடுகிறார் தாயுமானவர்.

நம் உள்ளங்களில் இன்றைக்குக் கன்னியாகிய பேதைப் பெண்ணைப் போல ஆண்டவனைத் தியானிப்பதனால் இன்பம் உண்டாகவில்லை. நாம் மெய்யன்பினால் உள்ளுவதில்லை. நாம் இன்னும் பக்குவம் அடையவில்லை. பக்குவம் நமக்கு வந்து விட்டால் அவனைத் தியானம் செய்யும்போது ஆனந்தம் நமது உள்ளத்தில் அரும்பும். அதைச் சுவைத்த பிறகு, "அடடா, இந்த இன்பம் தெரியாமல் இத்தனை நாளாக இருந்தோமே உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் பொறிகளின் வாயிலாகச் சுவைப்பதுதான் இன்பம் என்று எண்ணி ஏமாந்து போய்விட்டோமே! இது என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று தோன்றும். மற்ற இன்பங்கள் சுவையின்றிப் போய்விடும்.

உலகியலின்பங்களை விட்டுவிட நமக்கு மனம் வராது. நம்முடைய அநுபவத்தில் பொறிகளால் நுகரும் இன்பமே இன்பமாக இருக்கிறது. வேறு இன்பம் இருப்பதாகச் சொன்னாலும் அதை நம்ப முடிவதில்லை. அதனால் இந்த இன்பங்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த இன்ப நுகர்ச்சியை அடியோடு விட்ட பிறகே இறைவனுடைய இன்ப அநுபவம் சித்திக்கும் என்று சொல்வது முறை அன்று. இந்த இன்பத்தில் இருக்கும்போது மெல்ல மெல்லத் தியானிக்கத் தொடங்கினால் அருளின்பம் அரும்பத் தொடங்கும். இந்த இன்பம் புளிக்கத் தொடங்கும். நிரம்ப விலை கொடுத்து ஒருவன் கண்ணாடிப் படம் ஒன்றை வாங்கி வருகிறான். அதைக் கீழே வைக்காமல் பற்றிக் கொண்டிருக்கிறான். அவனிடமுள்ள அதை அப்போது பறிப்பதென்பது முடியாத காரியம். ஆனால் அவனுக்குத் தூக்க மருந்தைக் கொடுத்துவிட்டால், அதன் வேகம் ஏற, ஏற அவன் கையிலுள்ள பொருள் தானே நழுவி விழுந்துவிடும். அப்படி நழுவுவதற்குக் காரணம் தூக்கம். அது அவனிடம் மெல்ல மெல்லச் சென்று பற்றிக் கொண்டது.

இறைவனை மெய்யன்பினால் மெல்ல மெல்லத் தியானிப்பதனால் பரமானந்தம் என்னும் தூக்கம் படர்கிறது. அப்போது அது காறும் இனிமையாக இருந்தன யாவும் தாமே நழுவி விடுகின்றன.

வள்ளியெம்பெருமாட்டியின் வாழ்வை நமக்கு வழிகாட்டியாக வைத்து, இந்தத் தத்துவத்தை அருணகிரியார் இந்தப் பாட்டிலே சொல்கிறார்.

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி
னால்மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம்
தித்தித் தறிந்தஅன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும்
புளித்தறக் கைத்ததுவே;

(பெரிய பச்சையான கொல்லையில் சிறிய தினைப் பயிரைக் காக்கின்ற பேதைப் பெண்ணாகிய வள்ளியின் கொங்கையை விரும்பும் குமரக் கடவுளை, மெய்யான அன்பினால் மெல்ல மெல்லத் தியானிக்க, அதனால் அரும்பும் ஒப்பற்ற மேலான இன்பம் இனிமை தரச் சுவைத்து அறிந்த அன்றைக்கே, அதுகாறும் சுவையுடையதாக இருந்த கரும்பும் துவர்ப் புடையதாகி, செந்தேனும் புளித்து முற்றும் கசந்துவிட்டது.

புனம் - தினைக்கொல்லை. ஏனல் - தினைப்பயிர் உள்ள - நினைக்க. அற - முழுவதும்; அடியோடு. கைத்தது - கசந்தது.)