கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/நாட விட்ட படலம்
- சுக்கிரீவனிடம் வானர சேனையின் அளவு பற்றி இராமன் உசாவுதல்
- 'வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும்
- பகையும் இன்றி, நிரைந்து, பரந்து எழும்
- தகைவு இல் சேனைக்கு, அலகு சமைந்தது ஓர்
- தொகையும் உண்டு கொலோ?' எனச் சொல்லினான். 1
சுக்கிரீவனது மறுமொழி
- '"ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற" என்று
- ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர்
- மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றது ஓர்
- தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? 2
- 'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
- ஏறு கொற்றத் தலைவர், இவர்க்கு முன்
- கூறு சேனைப் பதி, கொடுங் கூற்றையும்
- நீறு செய்திடும் நீலன்' என்று ஓதினான். 3
இராமன் 'இனி செய்தற்குரியன குறித்துச் சிந்தனைசெய்க' எனல்
- என்று உரைத்த எரிகதிர் மைந்தனை,
- வென்றி விற் கை இராமன் விருப்பினால்,
- 'நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி
- சென்று இழைப்பன சிந்தனை செய்க' என்றான். 4
சுக்கிரீவன் அனுமனை அங்கதன் முதலியவர்களுடன் தென் திசைக்கு அனுப்புதல்
- அவனும்-அண்ணல் அனுமனை, 'ஐய! நீ,
- புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
- தவன வேகத்தை ஓர்கிலை; தாழ்த்தனை;
- கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ? 5
- 'ஏகி, ஏந்திழைதன்னை, இருந்துழி,
- நாகம் நாடுக; நானிலம் நாடுக;
- போக பூமி புகுந்திட வல்ல நின்
- வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். 6
- 'தென் திசைக்கண், இராவணன் சேண் நகர்
- என்று இசைக்கின்றது, என் அறிவு, இன்னணம்;
- வன் திசைக்கு, இனி, மாருதி நீ அலால்,
- வென்று, இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ? 7
- 'வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய
- கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது,
- தெள்ளியோய்! "அது தென் திசை என்பது ஓர்
- உள்ளமும் எனக்கு உண்டு" என உன்னுவாய். 8
- 'தாரை மைந்தனும், சாம்பனும், தாம் முதல்
- வீரர் யாவரும், மேம்படும் மேன்மையால்
- சேர்க நின்னொடும்; திண் திறல் சேனையும்,
- பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால். 9
பிற திசைக்கு சுடேணன் முதலியோரைப் படைகளுடன் அனுப்புதல்
- 'குட திசைக்கண், சுடேணன்; குபேரன் வாழ்
- வட திசைக்கண், சதவலி; வாசவன்
- மிடல் திசைக்கண், வினதன்; விறல் தரு
- படையொடு உற்றுப் படர்க' எனப் பன்னினான். 10
ஒரு மாதத்திற்குள் தேடித் திரும்புமாறு சுக்கிரீவன் ஆணையிடல்
- 'வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
- சுற்றி ஓடித் துருவி, ஒரு மதி
- முற்றுறாதமுன், முற்றுதிர், இவ் இடை;
- கொற்ற வாகையினீர்!' எனக் கூறினான். 11
தென் திசைச் செல்லும் வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுதல்
- 'ஈண்டுநின்று இறந்து, ஈர்-ஐந்து நூறு எழில்
- தூண்டு சோதிக் கொடு முடி தோன்றலால்,
- நீண்ட நேமி கொலாம் என நேர் தொழ
- வேண்டும் விந்தமலையினை மேவுவீர். 12
- 'தேடி, அவ் வரை தீர்ந்த பின், தேவரும்
- ஆடுகின்றது, அறுபதம் ஐந்திணை
- பாடுகின்றது, பல் மணியால் இருள்
- ஓடுகின்ற நருமதை உன்னுவீர். 13
- 'வாம மேகலை வானவர் மங்கையர்,
- காம ஊசல் கனி இசைக் கள்ளினால்,
- தூம மேனி அசுணம் துயில்வுறும்
- ஏமகூடம் எனும் மலை எய்துவீர் 14
- 'நொய்தின், அம் மலை நீங்கி, நுமரொடும்,
- பொய்கையின் கரை பிற்படப் போதிரால்;
- செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில
- வைகல் தேடி, கடிது வழிக் கொள்வீர். 15
- 'தாங்கும் ஆர் அகில், தண் நறுஞ் சந்தனம்,
- வீங்கு வேலி விதர்ப்பமும், மெல்லென
- நீங்கி, நாடு நெடியன பிற்பட,
- தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால். 16
- 'பண்டு அகத்தியன் வைகியதாப் பகர்
- தண்டகத்தது, தாபதர் தம்மை உள்
- கண்டு, அகத் துயர் தீர்வது காண்டிரால்,
- முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில். 17
- 'ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள்
- போல நின்று பொலிவது, பூம் பொழில்;
- சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி
- காலம் இன்றிக் கனிவது காண்டிரால். 18
- 'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி;
- அயனம் இல்லை அருக்கனுக்கு அவ் வழி;
- சயன மாதர் கலவித்தலைத் தரும்
- பயனும், இன்பமும், நீரும், பயக்குமால். 19
- ஆண்டு இறந்தபின், அந்தரத்து இந்துவைத்
- தீண்டுகின்றது, செங் கதிர்ச் செல்வனும்
- ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது -
- பாண்டுவின் மலை என்னும் பருப்பதம். 20
- 'முத்து ஈர்த்து, பொன் திரட்டி, மணி உருட்டி, முது நீத்தம் முன்றில் ஆயர்
- மத்து ஈர்த்து, மரன் ஈர்த்து, மலை ஈர்த்து, மான் ஈர்த்து, வருவது; யார்க்கும்
- புத்து ஈர்த்திட்டு அலையாமல், புலவர் நாடு உதவுவது; புனிதம் ஆன
- அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர்; அம் மலையின் அருகிற்று அம்மா!21
- 'அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே எனத் தெளிந்த அருளின் ஆறும்,
- வெவ் ஆறு அம் எனக் குளிர்ந்து, வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூஞ் சோலை,
- எவ் ஆறும் உறத் துவன்றி, இருள் ஓட மணி இமைப்பது, இமையோர் வேண்ட,
- தெவ் ஆறு முகத்து ஒருவன், தனிக் கிடந்த சுவணத்தைச் சேர்திர் மாதோ! 22
- 'சுவணநதி கடந்து, அப்பால், சூரிய காந்தகம் என்னத் தோன்றி, மாதர்
- கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும், சந்திரகாந்தமும், காண்பீர்;
- அவண் அவை நீத்து ஏகிய பின், அகல் நாடு பல கடந்தால், அனந்தன் என்பான்
- உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும், குலிந்தமும், சென்று உறுதிர் மாதோ.23
- '"அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்" என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
- பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல், புகல் அரிய பண்பிற்று ஆமால்;
- சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச் சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
- வரன் அதிகம் தரும் தகைய,அருந்ததி ஆம் நெடுமலையை வணங்கி,அப்பால்.24
- 'அஞ்சு வரும் வெஞ் சுரனும், ஆறும், அகன் பெருஞ் சுனையும், அகில் ஓங்கு ஆரம்
- மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வள நாடும், பிற்படப் போய் வழிமேல் சென்றால்,
- நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு, அமிர்து நனி கொடுத்து, ஆயைக் கலுழன் நல்கும்
- எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி, அதன் புறம் சார ஏகி மாதோ, 25
- 'வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி, நான் மறையும், மற்றை நூலும்,
- இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய், நல் அறிவுக்கு ஈறு ஆய், வேறு
- புடை சுற்றும் துணை இன்றி, புகழ் பொதிந்த மெய்யேபோல் பூத்து நின்ற
- அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ; 26
- 'இருவினையும், இடைவிடா எவ் வினையும், இயற்றாதே, இமையோர் ஏத்தும்
- திருவினையும், இடு பதம் தேர் சிறுமையையும், முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,
- "கரு வினையது இப் பிறவிக்கு" என்று உணர்ந்து, அங்கு அது களையும், கடை இல் ஞானத்து,
- அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்; ஈண்டு இருந்தும் அடி வணங்கற்பாலார்.27
- 'சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும், சுருதித் தொல் நூல்
- மாதவத்தோர் உறை இடமும், மழை உறங்கும் மணித் தடமும், வான மாதர்
- கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடுதொறும் கிளக்கும் ஓதை
- போதகத்தின் மழக்கன்றும் புலிப்பறழும் உறங்கு இடனும்,பொருந்திற்று அம்மா!28
- 'கோடு உறு மால் வரை அதனைக் குறுகுதிரேல், உம் நெடிய கொடுமை நீங்கி,
- வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்; அப் புறத்து, நீர் மேவு தொண்டை -
- நாடு உறுதிர்; உற்று, அதனை நாடுறுதிர்; அதன்பின்னை, நளி நீர்ப் பொன்னிச்
- சேடு உறு நண் புனல் தெய்வத் திரு நதியின் இரு கரையும் தெரிதிர் மாதோ. 29
- 'துறக்கம் உற்றார் மனம் என்ன,துறைகெழு நீர்ச்சோணாடு கடந்தால்,தொல்லை
- மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர்; அவ் வழி நீர் வல்லை ஏகி,
- உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி, மணியால் ஓங்கல்
- பிறக்கம் உற்ற மலை நாடு நாடி, அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ. 30
- 'தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
- என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி,
- பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக்
- கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர். 31
- 'ஆண்டு கடந்து, அப் புறத்தும், இப் புறத்தும், ஒரு திங்கள் அவதி ஆக,
- தேண்டி, இவண் வந்து அடைதிர்; விடை கோடிர், கடிது' என்னச் செப்பும் வேலை,
- நீண்டவனும், மாருதியை நிறை அருளால் உற நோக்கி, 'நீதி வல்லோய்!
- காண்டி எனின், குறி கேட்டி!' என, வேறு கொண்டு இருந்து, கழறலுற்றான்: 32
இராமன் அனுமனிடம் தனியே சீதையின் அங்க அடையாளங்களைக் கூறுதல்
- 'பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை, பஞ்சி ஊட்டி,
- மேற்பட மதியம் சூட்டி, விளங்குற நிரைத்த நொய்ய
- கால் தகை விரல்கள் - ஐய! - கமலமும் பிறவும் கண்டால்
- எற்பில என்பது அன்றி, இணை அடிக்கு உவமை என்னோ? 33
- 'நீர்மையால் உணர்தி - ஐய! - நிரை வளை மகளிர்க்கு எல்லாம்
- வாய்மையால் உவமை ஆக, மதி அறி புலவர் வைத்த
- ஆமை ஆம் என்ற போது, அல்லன சொல்லினாலும்,
- யாம யாழ் மழலையாள்தன் புறவடிக்கு இழுக்கம் மன்னோ. 34
- 'வினைவரால் அரிய கோதைப் பேதை மென் கணைக் கால் மெய்யே
- நினைவரால் அரிய நன்னீர் நேர்பட, புலவர் போற்றும்
- சினை வரால், பகழி ஆவம், நெற் சினை, என்னும் செப்பம்
- எனைவரால் பகரும் ஈட்டம்; யான் உரைத்து இன்பம் என்னோ? 35
- 'அரம்பை என்று, அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
- வரம்பையும் கடந்தபோது, மற்று உரை வகுக்கல் ஆமோ?
- நரம்பையும், அமிழ்த நாறும் நறவையும், நல் நீர்ப் பண்ணைக்
- கரும்பையும் கடந்த சொல்லாள், கவாற்கு இது கருது கண்டாய். 36
- 'வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள்தன்
- தார் ஆழிக் கலை சார் அல்குல் தடங் கடற்கு உவமை-தக்கோய்!-
- பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும், பனி வென்று ஓங்கும்
- ஓர் ஆழித் தேரும் ஒவ்வார், உனக்கு நான் உரைப்பது என்னோ? 37
- 'சட்டகம் தன்னை நோக்கி, யாரையும் சமைக்கத் தக்காள்
- இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்திஎன்னின்,
- கட்டுரைத்து உவமை காட்ட, கண்பொறி கதுவா; கையில்
- தொட்ட எற்கு உணரலாம்; மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை. 38
- 'ஆல் இலை, படிவம் தீட்டும் ஐய நுண் பலகை, நொய்ய
- பால் நிறத் தட்டம், வட்டக் கண்ணடி, பலவும் இன்ன,
- போலும் என்று உரைத்த போதும், புனைந்துரை; பொதுமை பார்க்கின்,
- ஏலும் என்று இசைக்கின், ஏலா; இது, வயிற்று இயற்கை; இன்னும், 39
- 'சிங்கல் இல் சிறு கூதாளி, நந்தியின் திரட் பூ, சேர்ந்த
- பொங்கு பொன்-துளை, என்றாலும் புல்லிது; பொறுமைத்து ஆமால்;
- அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி எனக் கணித்தது உண்டால்;
- கங்கையை நோக்கிச் சேறி - கடலினும் நெடிது கற்றாய்! 40
- 'மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால், வல்லி சேர் வயிற்றில்; மற்று என்,
- உயிர் ஒழுங்கு; அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்கவேண்டின்,
- செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர,
- குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு, என்று உணர்ந்து கோடி. 41
- '"அல்லி ஊன்றிடும்" என்று அஞ்சி, அரவிந்தம் துறந்தாட்கு, அம் பொன்
- வல்லி மூன்று உளவால், கோல வயிற்றில்; மற்று அவையும், மார-
- வில்லி, மூன்று உலகின் வாழும் மாதரும், தோற்ற மெய்ம்மை
- சொல்லி ஊன்றிய ஆம், வெற்றி வரை எனத் தோன்றும் அன்றே! 42
- 'செப்பு என்பென்; கலசம் என்பென்; செவ் இளநீரும் தேர்வென்;
- துப்பு ஒன்று திரள் சூது என்பென்; சொல்லுவென் தும்பிக் கொம்பை;
- தப்பு இன்றிப் பகலின் வந்த சக்கரவாகம் என்பென்;
- ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்; பல நினைந்து உலைவென், இன்னும். 43
- 'கரும்பு கண்டாலும், மாலைக் காம்பு கண்டாலும், ஆலி
- அரும்பு கண், தாரை சோர அழுங்குவேன்; அறிவது உண்டோ?
- சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து, உவமை சொல்ல,
- இரும்பு கண்டனைய நெஞ்சம், எனக்கு இல்லை; இசைப்பது என்னோ? 44
- '"முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு, மூன்று உலகத்துள்ளும்"
- என் கையே இழுக்கம் அன்றே? இயம்பினும், காந்தள் என்றல்,
- வன் கை; யாழ் மணிக் கை என்றல், மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி,
- நன் கையாள் தடக் கைக்கு ஆமோ? நலத்தின் மேல் நலம் உண்டாமோ? 45
- 'ஏலக் கோடு ஈன்ற பிண்டி இளந் தளிர் கிடக்க; யாணர்க்
- கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங் கமல மென் பூ,
- நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோலக்
- காலுக்குத் தொலையும் என்றால், கைக்கு ஒப்பு வைக்கலாமோ? 46
- 'வெள்ளிய - முறுவல், செவ் வாய், விளங்கு இழை, இளம் பொற் கொம்பின்
- வள் உகிர்க்கு, உவமை நம்மால் மயர்வு அற வகுக்கலாமோ?
- "எள்ளுதிர் நீரே மூக்கை" என்று கொண்டு, இவறி, என்றும்,
- கிள்ளைகள் முருக்கின் பூவைக் கிழிக்குமேல், உரைக்கலாமோ? 47
- 'அங்கையும் அடியும் கண்டால், அரவிந்தம் நினையுமாபோல்
- செங் களி சிதறி, நீலம் செருக்கிய தெய்வ வாட் கண்
- மங்கைதன் கழுத்தை நோக்கின், வளர் இளங் கழுகும், வாரிச்
- சங்கமும், நினைதி ஆயின், அவை என்று துணிதி; தக்கோய்! 48
- 'பவளமும், கிடையும், கொவ்வைப் பழனும், பைங் குமுதப் போதும்,
- துவள்வு இல் இலவம், கோபம், முருக்கு, என்று இத் தொடக்கம், "சாலத்
- தவளம்" என்று உரைக்கும் வண்ணம் சிவந்து, தேன் ததும்பும் ஆயின்,
- குவளை உண் கண்ணி வண்ண வாய் அது; குறியும் அஃதே. 49
- 'சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை; தேன் இல்லை; உள என்றாலும்,
- கவர்ந்த போது அன்றி, உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா;
- பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து
- உவந்தபோது, உவந்த வண்ணம் உரைத்தபோது, உரைத்தது ஆமோ? 50
- 'முல்லையும், முருந்தும், முத்தும், முறுவல் என்று உரைத்தபோது,
- சொல்லையும், அமிழ்தும், பாலும், தேனும், என்று உரைக்கத் தோன்றும்;
- அல்லது ஒன்று ஆவது இல்லை; அமிர்திற்கும் உவமை உண்டோ?
- வல்லையேல், அறிந்து கோடி, மாறு இலா ஆறு-சான்றோய்! 51
- 'ஓதியும், எள்ளும், தொள்ளைக் குமிழும், மூக்கு ஒக்கும் என்றால்,
- சோதி செம் பொன்னும், மின்னும், மணியும்போல், துளங்கித் தோன்றா;
- ஏதுவும் இல்லை; வல்லார் எழுதுவார்க்கு எழுத ஒண்ணா
- நீதியை நோக்கி, நீயே நினைதியால், - நெடிது காண்பாய்! 52
- 'வள்ளை, கத்தரிகை, வாம மயிர் வினைக் கருவி, என்ன,
- பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்;
- வெள்ளி வெண் தோடு செய்த விழுத் தவம் விளைந்தது என்றே
- உள்ளுதி; உலகுக்கு எல்லாம் உவமைக்கும், உவமை உண்டோ ? 53
- 'பெரிய ஆய், பரவை ஒவ்வா; பிறிது ஒன்று நினைந்து பேச
- உரிய ஆய், ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல; உண்மை
- தெரிய, ஆயிரக் கால் நோக்கின், தேவர்க்கும் தேவன் என்னக்
- கரிய ஆய், வெளிய ஆகும், வாள் தடங் கண்கள் அம்மா! 54
- 'கேள் ஒக்கும் அன்றி, ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே;
- கோள் ஒக்கும் என்னின் அல்லால், குறி ஒக்கக் கூறலாமே?
- வாள் ஒக்கும் வடிக் கணாள்தன் புருவத்துக்கு உவமை வைக்கின்,
- தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அனங்கன் சாபம். 55
- 'நல் நாளும் நளினம் நாணும் தளிரடி நுதலை நாணி,
- பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பதாகி,
- முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி,
- எந் நாளும் வளராது என்னின், இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே. 56
- 'வனைபவர் இல்லை அன்றே, வனத்துள் நாம் வந்த பின்னர்?
- அனையன எனினும், தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;
- வினை செயக் குழன்ற அல்ல; விதி செய விளைந்த; நீலம்
- புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம்; உவமை பூணா. 57
- 'கொண்டலின் குழவி, ஆம்பல், குனி சிலை, வள்ளை, கொற்றக்
- கெண்டை, ஒண் தரளம், என்று இக் கேண்மையின் கிடந்த திங்கள்-
- மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ, அப்
- புண்டரிகத்தை உற்ற பொழுது, அது பொருந்தித் தேர்வாய். 58
- 'காரினைக் கழித்துக் கட்டி, கள்ளினோடு ஆவி காட்டி,
- பேர் இருட் பிழம்பு தோய்த்து, நெறி உறீஇ, பிறங்கு கற்றைச்
- சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா! -
- நேர்மையைப் பருமை செய்த நிறை நறுங் கூந்தல் நீத்தம்! 59
- 'புல்லிதழ் கமலத் தெய்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின்
- எல்லை சூழ் மதிக்கும் உண்டாம், களங்கம் என்று உரைக்கும் ஏதம்;
- அல்லவும் சிறிது குற்றம் அகன்றில; அன்னம் அன்ன
- நல் இயலாளுக்கு, எல்லாம் நலன் அன்றி, பிறிது உண்டாமோ? 60
- 'மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம், வண்ண வாசப்
- பங்கயத்தவட்கும், - ஐயா! - நிரம்பல; பற்றி நோக்கின்,
- செங் கயல் கருங் கண் செவ் வாய்த் தேவரும் வணங்கும் தெய்வக்
- கொங்கை அக் குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை; குறியும் அஃதே. 61
- 'குழல் படைத்து, யாழைச் செய்து, குயிலொடு கிளியும் கூட்டி,
- மழலையும் பிறவும் தந்து, வடித்ததை, மலரின் மேலான்,
- இழைபொரும் இடையினாள்தன் இன் சொற்கள் இயையச் செய்தான்;
- பிழை இலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறும்கொல் இன்னும்? 62
- 'வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும்,
- நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை;
- மீன் நின்ற கண்ணினாள்தன் மென் மொழிக்கு உவமை வேண்டின்,
- தேன் ஒன்றோ? அமிழ்தம் ஒன்றோ? அவை செவிக்கு இன்பம் செய்யா. 63
- 'பூ வரும் மழலை அன்னம், புனை மடப் பிடி, என்று இன்ன,
- தேவரும் மருளத் தக்க செலவின எனினும் தேறேன்;
- பா வரும் கிழமைத் தொன்மைப் பருணிதர் தொடுத்த, பத்தி
- நா அருங் கிளவிச் செவ்வி நடை வரும் நடையள் - நல்லோய்! 64
- 'எந் நிறம் உரைக்கேன்? - மாவின் இள நிறம் முதிரும்; மற்றைப்
- பொன் நிறம் கருகும்; என்றால், மணி நிறம் உவமை போதா;
- மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும்; வேண்டின்,
- தன் நிறம் தானே ஒக்கும்; மலர் நிறம் சமழ்க்கும் அன்றே! 65
- '"மங்கையர் இவளை ஒப்பார், மற்று உளார் இல்லை" என்னும்
- சங்கை இல் உள்ளம் தானே சான்று எனக் கொண்டு,-சான்றோய்!-
- அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து, அருகு சார்ந்து,
- திங்கள் வாள் முகத்தினாட்கு, செப்பு' எனப் பின்னும் செப்பும்: 66
இராமன் உரைத்த அடையாளச் செய்திகள்
- 'முன்னை நாள், முனியொடு, முதிய நீர் மிதிலைவாய்,
- சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல,
- அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை, அக்
- கன்னிமாடத்திடைக் கண்டதும், கழறுவாய், 67
- '"வரை செய் தாள் வில் இறுத்தவன், அ(ம்) மா முனியொடும்
- விரசினான் அல்லனேல், விடுவல் யான் உயிர்" எனா,
- கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
- உரைசெய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரைசெய்வாய். 68
- 'சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக்
- கேழ் இலா வன முலைக் கிரி சுமந்து இடைவது ஓர்
- வாழி வான் மின் இளங் கொடியின் வந்தாளை, அன்று,
- ஆழியான் அரசவைக் கண்டதும் அறைகுவாய். 69
- 'முன்பு நான் அறிகிலா முளி நெடுங் கானிலே,
- "என் பினே போதுவான் நினைதியோ, ஏழை நீ?
- இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு இனியை ஆயினை, இனித்
- துன்பம் ஆய் முடிதியோ?" என்றதும், சொல்லுவாய். 70
- '"ஆன பேர் அரசு இழந்து, அடவி சேர்வாய்; உனக்கு
- யான் அலாதன எலாம் இனியவோ? இனி" எனா,
- மீன் உலாம் நெடு மலர்க் கண்கள் நீர் விழ, விழுந்து,
- ஊன் இலா உயிரின் வெந்து, அயர்வதும், உரைசெய்வாய். 71
- மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
- கல்லின் மா மதிள் மணிக் கடை கடந்திடுதல்முன்,
- "எல்லை தீர்வு அரிய வெங் கானம் யாதோ?" எனச்
- சொல்லினாள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய்.' 72
இராமன் கணையாழி அளித்து, விடைகொடுக்க, அனுமன் முதலியோர் செல்லுதல்
- 'இனைய ஆறு உரைசெயா, 'இனிதின் ஏகுதி' எனா,
- வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து, 'அறிஞ! நின்
- வினை எலாம் முடிக!' எனா, விடை கொடுத்து உதவலும்,
- புனையும் வார் கழலினான் அருளொடும், போயினான். 73
- அங்கதக் குரிசிலோடு, அடு சினத்து உழவர் ஆம்
- வெங் கதத் தலைவரும், விரி கடற் படையொடும்,
- பொங்கு வில்-தலைவரைத் தொழுது, முன் போயினார்-
- செங்கதிர்ச் செல்வனைப் பணிவுறும் சென்னியார். 74
மிகைப் பாடல்கள்
- சாரும் வீரர் சதவலிதம்மொடும்
- கூரும் வீரர்கள் யாவரும் கூடியே
- நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப்
- பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால். 9-1
- குட திசைப் படு பூமி, குபேரன் வாழ்
- வட திசைப் படு மா நிலம் ஆறும் ஏற்று,
- இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி
- தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால். 10-1
- குடதிசைக்கண் இடபன், குணதிசைக்
- கடலின் மிக்க பனசன், சதவலி
- வடதிசைக்கண் அன்று ஏவினன் - மான மாப்
- படையின் வெள்ளத்துடன் செலப் பான்மையால். 10-2
- என்று கூறி, ஆங்கு ஏவினன்; யாவரும்
- நின்று வாழ்த்தி விடை கொடு நீங்கினார்
- அன்று மாருதி ஆம் முதல் வீரர்க்குத்
- துன்று செங்கதிரோன் மகன் சொல்லுவான்: 10-3