கருத்துக் கண்காட்சி/இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள்

வரலாற்றுப் பகுதி

9. இலக்கியத்தில் வரலாற்றுக்
குறிப்புகள்

'இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள்' என்னும் தலைப்பு, 'எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை’ என்னும் கதை மொழிபோல் தோன்றுகிறது. அந்தக் கதை மொழி ‘எங்கள் அப்பா குதிருக்குள் இருக்கிறார்’ என்பதைக் குறிப்பாக அறிவிக்கிறது. அதுபோல, இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் தலைப்பு, ஒரு காலத்தில் இலக்கியம் வரலாறாகக் கருதப்பட்டது-அல்லது-வரலாறு இலக்கியமாகக் கருதப்பட்டது-என்னும் குறிப்பினைத் தருவதுபோல் தோன்றுகிறது.

ஆம்; பன்னெடுங் காலமாக வரலாற்றை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பலர் எண்ணி வந்தனர். வரலாறு ஒரு நீதி இலக்கியம் என்பது அன்னாரது கருத்தாக இருக்கலாம். ஏன்-இன்றும் சிலர், வரலாற்றை ஓர் இலக்கியம் போல் கற்பனை கலந்து எழுதுகின்றனர். இந்தக் கற்பனை கலந்த இலக்கியத்தை, வரலாறு அல்லது சரித்திரம், சரிதம்-சரிதை என்னும் பெயர்களாலே வழங்குகின்றனர். எடுத்துக் காட்டுகள்:- நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, தமிழ் நாவலர் சரிதை, இராம சரிதம், குமண சரிதம், புரூரவச் சக்கரவர்த்தி வரலாறு முதலியனவாகும். மேலும், முற்றிலும் கற்பனைக் கதைகளாய் உள்ளவற்றையும் சரித்திரம் என்னும் பெயரால் வழங்கக் காணலாம். வேத நாயகம் பிள்ளையவர்களின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் படைப்பு இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும். இவ்வாறு இன்னும் பல உள.

பண்டைக் காலத்தில் உலக மொழிகள் பலவற்றிலும் இயற்றப் பெற்ற கற்பனை கலந்த-அல்லது-முற்றிலும் கற்பனையான புராண-இதிகாச-காவியங்கள் எல்லாம் வரலாறாகவே கருதப்பட்டு வந்தமை ஈண்டு நினைவு கொள்ளத் தக்கது. பண்டைக் காலத்தில் என்று என்ன? பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் கூட, தமிழில் ஊருக்கு ஒரு புராணம் எழுதப்பட்டது. இந்தக் கற்பனைப் புராணங்கள் எல்லாம் வரலாறு போலவே தோற்ற மளிக்கின்றன. இவ்வாறாக அன்று தொட்டு இன்றுவரை, இலக்கியங்கள் வரலாறு போலவும், வரலாறுகள் இலக்கியங்கள் போலவும் தலைதடுமாறிக் காட்சி யளிக்கலாயின.

முதலில் இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டியறிந்து, இரண்டிற்கும் உரிய சரியான இலக்கணத்தை வரையறை செய்ய வேண்டும். இஃது ஓரளவு அரிய செயலே!

ஒரு சிறிதும் கற்பனை கலவாது-நடந்ததை நடந்த படி-உள்ளதை உள்ள படி-அப்படியே அளிப்பது வரலாறாகும். நடவாததை நடந்ததாகவோ, நடந்ததையேகூட இடையிடையே கற்பனை கலந்தோ தருவது இலக்கியம்; அதாவது, இது ஒருவகை இலக்கியம். வரலாற்றாசிரியன் எந்தச் சார்பும் இன்றி, விழிப்புடன் நிகழ்ச்சிகளைத் துல்லியமாகத் தரக் கடமைப்பட்டுள்ளான். அவன், நிகழ்ச்சிகட்கு ஒரு சார்பு பற்றி ஏதேனும் ஒரு சாயம் பூசத் தொடங்குவானேயாயின், அவனது எழுத்து, வரலாறு என்னும் தகுதிக்கு உரிய தாகாமல், கற்பனை இலக்கியம் எனப் பெயர் பெற்றுவிடும். இந்த அடிப்படை உண்மைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் தலைப்பினை ஆராய வேண்டும். அடுத்து, இலக்கியம்-வரலாறு என்னும் இரண்டனுள் எது பெரியது என்றும் ஆராய வேண்டும். அதாவது, இலக்கியத்தில் வரலாறு அடங்குமா-அல்லது வரலாற்றில் இலக்கியம் அடங்குமா? என்று காணவேண்டும்.

பன்னெடுங் காலமாக வரலாற்றை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பலர், எண்ணி வந்தனர் என்பதாக ஒரு கருத்து முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்தக் கருத்து வெளியீடு முற்றிலும் சரியான தாகாது, ஒருசில வரலாற்று நிகழ்ச்சிகள் ஒருசில இலக்கியங்களில் சுட்டப்பட்டிருக்கலாம்-அல்லது-விரிவாகவும் கூறப்பட்டிருக்கலாம். ஆனால் வரலாறு என்பது, இலக்கியம் என்பதனினும் மிகவும் பெரிய தாகும்-பரந்துபட்ட தாகும்.

உலகம் தோன்றிய நாள்தொட்டு இன்றுவரை-இந் நேரம்வரை நடைபெற்றுள்ள பல்வகை நிகழ்ச்சிகள், தோன்றியுள்ள பல்வேறு உயிர்ப் பொருள்கள், உயிரில்லாப் பொருள்கள், இடங்கள், செயற்கைப் படைப்புகள், கண்டு பிடிப்புகள், அரசியல், சமூகம், தொழில், வாணிகம், வாழ்க்கை முறை-முதலியன பற்றிக் கூறப்படும் அனைத்தும் வரலாறு எனப்படும். இத்தகைய பல்வேறு வரலாறுகளுள் இலக்கியம் பற்றிய வரலாறும் ஒன்றாகும்; இஃது ‘இலக்கிய வரலாறு’ எனப்படும். இந்த அடிப்படையுடன் நோக்குங்கால், இலக்கியத்தினும் வரலாறு பரந்துபட்டது என்னும் உண்மை போதரும். அங்ஙன மெனில், இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள், என்னும் தலைப்பினால் அறியக் கிடக்கும் இலக்கியம் என்பதற்கும் வரலாறு என்பதற்கும் இடையேயுள்ள தொடர்புதான் யாதோ?

வரலாறு எழுதும் ஆசிரியனுக்கு, எழுதும் செய்திகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்க வேண்டுமே! தக்க ஆதாரம் இன்றிக் கண்ணை மூடிக்கொண்டு எதையாவது எழுதினால், அது ‘அத்தை-பாட்டி கதை' என்றல்லவா அழைக்கப்படும்? எழுதுவதற்குச் சான்றாகத் தகுந்த வேர் மூலங்களை (Sources) வைத்துக் கொண்டே வரலாற்றாசிரியன் எழுதுகோல் பிடிக்க முடியும். வரலாற்று நிகழ்ச்சிகளை அறியக் கிடைத்துள்ள வேர் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை மூன்று வகைப்படுத்திக் கூறுவதுண்டு. அம்மூன்றையும் பார்ப்போமே!

ஒன்று: பட்டப் பகலில் நடந்த வரலாறு; இரண்டு: வைகறையில் பணி மூட்டத்தில் நடந்த வரலாறு; மூன்று: அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு-என்பன அவை. பட்டப் பகலில் நடந்த வரலாறு எனப்படுவது, ஆண்டு - திங்கள் -நாள்- கிழமை- நேரம்-இடம் -ஆட்கள்-நடந்த நிகழ்ச்சி-முதலிய அனைத்தையும் நன்கு தெரிந்து இந்தக் காலத்தில் முறையாக எழுதிப் படிக்கும் வரலாறாகும். பட்டப்பகலில் நடப்பது நன்றாகத்தெரியும் அல்லவா? அது போன்றது இந்த முதல் வகை. அடுத்து,-வைகறையில் மூடு பணியில் நடந்த வரலாறு எனப்படுவது: முறையாகத் தெரிந்து எழுதி வைக்கப்படாமல், இலக்கியங்களில் உள்ள குறிப்புகளைக் கொண்டு ஒரு தோற்றமாக (உத்தேசமாக) நுனித்துணர்ந்து (யூகித்து) எழுதிப்படிக்கும் வரலாறாகும். ‘வைகறையில் பனி மூட்டத்தில் வருபவர் போபவரோ-நடக்கும் நிகழ்ச்சிகளோ தெளிவாகத்தெரிய முடியா தல்லவா? இலக்கியத்தில் உள்ள குறிப்புகளைக் கொண்டு தெரிந்து கொள்ளும் வரலாறு இது போன்றது தான். இறுதியாக, அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு எனப்படுவது: புதை பொருள்கள்-அகழ்வாராய்ச்சிகள்-இடிபாடுகள் முதலிய தடயங்களைக் கொண்டு உறிஞ்சி எடுக்கப்படும் வரலாறாகும். அமாவாசை நள்ளிரவில் விளக்கு இல்லாத இடத்தில் பொருட்களைத் தடவிப் பார்துத்தானே தெரிந்து கொள்ள முடியும்? புதைபொருள்-இடிபாடுகளைக் கொண்டு அறியப்படும் வரலாறு இது போன்றதேயன்றோ?

இத்தகைய ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டே வரலாற்றாசிரியன் வரலாற்றை விழிப்புடன் கணிக்கின்றான். ஆதார வேர் மூலங்களைக் கொண்டு செய்திகள் அறியப்படும் காலம் 'வரலாற்றுக் காலம்’ (Historical Period)எனப்படுகிறது. இத்தகைய ஆதாரங்களுள் யாதொன்றும் கிடைக்கப் பெறாமையால் உலகைப்பற்றி யாதொன்றும் அறியப்படாததான-மிகவும் பழைய இருட்காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்(Pre-Historical Period) எனப்படுகிறது. இவற்றிற்கு இடைப்பட்ட புதிய கற்காலம் -பழைய கற்காலம் எனப்படும் கற்கால மெல்லாம் (Stone Age) கற்பனையால் உருவாக்கப் பட்டனவேயாகும். இவற்றை (“Imaginatory Divisions ) என ஆங்கிலத்தில் கூறுவர்.

இந்த அடிப்படையுடன் நோக்குங்கால், முறையாக எழுதாமல் விட்டுப்போன பழைய வரலாற்றுச் செய்திகளை அறிய உதவும் கருவிகளுள் (சாதனங்களுள்) தலை சிறந்ததாகத் திகழ்வது இலக்கியமேயாகும். எத்தனையோ வரலாற்றுச் செய்திகளை அறிந்துகொள்ள இலக்கியங்கள் பெருந்துணை புரிகின்றன.

இலக்கியங்களில் வரலாறு முறையாக-முழுமையாகச் சொல்லப்படாமல், வரலாறு தொடர்பான சிற்சில குறிப்புகளே காணப்படுவதால், இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் தலைப்பு நமது கட்டுரைத் தலைப்பாக அமைந்திருப்பது பொருத்தமே.

அடுத்த கட்டமாக, பொதுவாக உலக வரலாற்றைப்பற்றிப் பேசுவதை விடுத்து, சிறப்பாகத் தமிழக வரலாற்றிற்கு வருவோ மாயின், நமக்குப் பெரிய ஏமாற்றமே காத்துக் கிடக்கிறது. தமிழ் நாட்டு வரலாறு அன்றுதொட்டு இன்று வரை தமிழர்களால் முறையாக எழுதி வைக்கப்படவில்லை என்னும் குறைபாட்டை நாம் கூசாது ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். ஒருவேளை, ஒரு காலத்தில் எழுதிவைக்கப்பட்டிருந்த பழந்தமிழ் வரலாற்று நூல் மறைந்துபோய் விட்டதோ என்னவோ! தமிழில், இருக்கும் நூல்களை விட, இருந்து மறைந்துபோன நூல்களின் பட்டியல் மிகவும் நீளமான தன்றோ?

எது எங்ஙன்ச் மாயினும், தமிழ் நாட்டின் மிக்க பழங்கால வரலாற்றை அறிந்து கொள்ளச் சான்றாக உதவும் வேர் மூலங்கள் (Sources) சங்ககால இலக்கியங்களேயாகும், தமிழர் வரலாறு’, ‘தமிழக வரலாறு' முதலிய பெயர்களில் இப்போதுநம்மிடையே உலவிவரும் வரலாற்று நூல்களெல்லாம் சங்ககால இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டுஎழுதப்பட்டனவேயாகும். சங்ககால இலக்கியங்களிலும் பழந்தமிழர் வரலாறு முறையாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை-ஆங்காங்கே சிற்சில வரலாற்றுக் குறிப்புகளே காணக்கிடக்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்ட இக்காலத் தமிழ் வரலாற்றறிஞர்கள் தமிழக வரலாற்றையும் வேறு சில நாடுகளின் வரலாற்றுத் துணுக்குகளையும் ஒரு தோற்றமாக (உத்தேசமாக) நுனித்துணர்ந்து (யூகித்தறிந்து) எழுதியுள்ளனர். தமிழ் நாட்டுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த பிற நாடுகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சிற்சிலவும் சங்க இலக்கியங்களிலே ஆங்காங்கே பொதிந்து கிடக்கும் உண்மை ஈண்டு உணரத்தக்கது.

வரலாறு என்றதும், அரசர்க்கு அரசர்களின் ஆரவார வாழ்க்கையும் அவர்களின் அடி பிடி மல்லுமே சிலருக்கு நினைவு வரக் கூடும். ஆனால், சங்க இலக்கியங்களில், முடியுடைப் பேரரசர்களின் வரலாறுகளே யல்லாமல் சிற்றரசர்கள், குறு நில மன்னர்கள், வள்ளல்கள், மல்லர்கள், புலவர்கள், கலைஞர்கள், பொது மக்கள் முதலிய பல தரப்பட்டவர்களின் வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே பொதிந்து கிடக்கின்றன.

சங்க இலக்கியங்கள் என்றால் அவை யாவை? அவை எக்காலத்தவை.? என்று காணவேண்டு மல்லவா? தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவாக வரலாறு கூறுகின்றது. மூன்று சங்கங்களிலும் எண்ணற்ற நூல்கள் தோன்றின. இந்த மூன்று சங்கங்களின் காலமும், அவ்வக் காலத்திலிருந்த அரசர்கள்-புலவர்கள்-இயற்றப் பெற்ற நூல்கள் தொடர்பான விவரங்களும் 'இறையனார் அகப்பொருள்’ என்னும் நூலின் உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டப் பெற்றுள்ளன. அந்த உரைப் பகுதி இதோ:

"தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர்.

அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்று எறிந்த முருகவேளும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவர் உள்ளிட்டு நாலாயிரத்து நானுாற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன: எத்துணையோ பரிபாடலும், முது நாரையும், முது குருகும், களரியாவிரையும் என இத்தெடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானுாற்று நாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்பது. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத் தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவருக்கு நூல் அகத்தியம் என்ப.

இனி இடைச்சங்கம் இருந்தவர் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரக்கோமானும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவர் உள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என இத்தெடாக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூதபுராணமும் என இவை. அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கம் இருந்தார் என்ப. அவரைச் சங்கம் இரீஇயினார் வெண்தேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் என்ப. சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது கபாட புரத்து என்ப. அக்காலத்துப் போலும் பாண்டியன் நாட்டைக் கடல் கொண்டது.

இனிக் கடைச் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தார், சிறு மேதாவியாரும், சேந்தம் பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங் குன்றுார்க் கிழாரும், இளந்திரு மாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்மர் என்ப. அவர் உள்ளிட்டு நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன நெடுந்தொகை நானுாறும் குறுந்தொகை நானுாறும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறு நூறும் பதிற்றுப் பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும், கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல் காப்பியமும் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து எண்ணுற்று நாற்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது உத்தர மதுரை என்ப.

மேலே தந்துள்ள இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புலவர் எண்ணிக்கையையும் ஆண்டு எண்ணிக்கையையும் அறியும் போது தலை சுற்றுகிறது. என்றாலும், நமக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்ற சில உண்மைகள் இப்பகுதியில் இல்லாமற் போகவில்லை. இந்த உரைக் கணக்கின்படி நோக்கின், இற்றைக்கு 3650 ஆண்டுக்கு முன் கடைச் சங்கமும், இற்றைக்கு 7350 ஆண்டுக்குமுன் இடைச் சங்கமும், இற்றைக்கு 11790 ஆண்டுக்கு முன் தலைச் சங்கமும் தோன்றியிருக்க வேண்டும். அதாவது. ஏறக்குறைய இற்றைக்குப் பன்னிராயிரம் (12,000) ஆண்டுகட்கு முன்பே சங்கம் அமைத்துத் தமிழ் ஆராயப்பட்டது என்பது புலனாகும். அங்ஙனமெனில், பன்னீராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் சிறந்த நூல்கள் தோன்றியிருந்த உண்மை, தானே விளங்கும். ஆனால், தலைச் சங்க இலக்கியங்களும் இடைச்சங்க இலக்கியங்களும் கிடைக்காமையால், தமிழ் நாட்டின் மிகப் பெரிய வரலாற்றை அறியும் வாய்ப்பை அந்தோ நாம் இழந்து விட்டோம். ஓரளவு நமது நற் பேறாக, கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த அல்லது சார்ந்த இலக்கியங்கள் சில மட்டுமே கிடைத்துள்ளன. அவை எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் முதலியனவாம். வேறு சில இலக்கியங்களின் பெயர்கள் மட்டும் தெரிகின்றன-நூல்கள் கிடைக்கவில்லை.

இவற்றுள், எட்டுத் தொகைகளுள் ஒன்றாகிய புறநானூறு முழுவதும் சேர- பாண்டிய- சோழர் என்னும் முடியுடை மூவேந்தர்கள், சிற்றரசர்கள், குறுநிலமன்னர்கள், வள்ளல்கள், மறவர்கள், கலைஞர்கள் , புலவர்கள், பொது மக்கள் முதலியோரின் வரலாற்றுக் குறிப்புகள் பொதிந்து கிடக்கின்றன. மற்றொரு தொகை நூலாகிய பதிற்றுப்பத்து முழுவதிலும் பத்துச் சேரமன்னர்களின் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்துப் பாட்டில் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை,மலைபடு கடாம் ஆகிய நூல்களிலிருந்து பேரரசரும் சிற்றரசரும் ஆகிய குறிப்பிட்ட சிலருடைய வரலாற்றுக் குறிப்புகளை ஓரளவு அறிகிறோம்.

அடுத்து, கீழ்க் கணக்கு நூல்கள் பதினெட்டனுள் களவழி நாற்பது என்னும் நூலில், சேரமான் கணைக்கால் இரும் பொறையைச் சோழன் செங்கணான் பொருது வென்ற வரலாற்றுக் குறிப்பு புலவர் பொய்கையாரால் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும், கோவலன்-கண்ணகி-மாதவி-மணிமேகலை-சோழன் கிள்ளி வளவன், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் முதலியோருடைய வரலாற்றுக் குறிப்புகளை அளிப்பது அனைவரும் அறிந்த செய்தி. முத்தொள்ளாயிரத்தில், பொதுவாக முடியுடை மூவேந்தர்களின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

மேற் குறிப்பிட்டவை யல்லாத சங்க இலக்கியங்களில், ஆங்கொரு பாடலிலும் ஈங்கொரு பாடலிலுமாகச் சிற்சில வரலாற்றுக் குறிப்புகள் இறைந்து கிடக்கின்றன.

நாம் முன்பு கூறியபடி, பெரும்பாலும் இந்த இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே தமிழர் வரலாறும் தமிழ் நாட்டு வரலாறும் வரலாற்றாசிரியர்களால் கணித்து எழுதப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் பழைய வரலாற்றை ஓரளவாயினும் அறிந்து கொள்வதற்கு உறுதுணையான குறிப்புகள் சிலவற்றைத் தந்துகொண்டிருக்கும் சங்க கால இலக்கியங்கள் வாழ்க. அவற்றை இயற்றியருளிய புலவர் பெருமக்கட்கு நமது நன்றி உரித்தாகுக.

குறிப்பு:-இந்தக் கட்டுரை சங்க கால இலக்கியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ளது. சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களை எடுத்துக் கொள்ளின் மிகவும் விரியு மாதலின் இம்மட்டோடு அமையலாம்.