கருத்துக் கண்காட்சி/வள்ளுவரும் வள்ளலாரும் கண்ட சமூக ஒருமைப்பாடு
உலகப் பொது அறிஞர் பகுதி
10. வள்ளுவரும் வள்ளலாரும் கண்ட
சமூக ஒருமைப்பாடு
'மனிதன் ஒரு சமூகப் பிராணி'(Man is a Social Animal) என்பது, கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் என்பாரின் கூற்று. மாந்தர்கள் கூட்டமாகக் கூடி வாழும் உயிரிகள்-அதாவது- சமூகமாக வாழும் உயிரினத்தைச் சேர்ந்தவர்கள் -என்பது இதன் கருத்து. சமூகம் என்பதற்கு, மாந்தர் குழு- மாந்தர் குழு வாழ்க்கை என்பதாகப் பொருள் கூறலாம். இதுபற்றிய கருத்துகளையும் கொள்கைகளையும் கூறும் அறிவியல் 'சமூக இயல்', என்னும் பெயரால் குறிக் கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் 'சோசியாலஜி' (Socialogy) என்பர். இந்தச் சமூக இயலில் ஏறக்குறைய எல்லா இயல்களையும் அடக்கலாம்; அவ்வளவு பெரியது இது.
ஒரு காலத்தில் சமூகம் என்பது, ஐவர் அல்லது ஐம்பதின்மரைக் கொண்டது என்பதாகச் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இப்போதோ சமூகம் என்பது, ஐந்நூறுகோடியினரைக் கொண்டது என்று சொல்லக் கூடிய நிலைமை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தனிமாந்தர் கோடிக் கணக்கில் சேர்ந்ததே சமூகம், என்னும் கருத்து இப்போது அறிய வருகிறது.
இந்தக் காலத்தில் தனி மாந்தன் ஒருவன் தன் குடும்பத்தாரின் துணையால் மட்டும்-தன் ஊராரின் துணையால் மட்டும்-தன் நாட்டாரின் துணையால் மட்டும் வாழவே முடியாது. ஒல்வொரு தனி மாந்தனும் ஒழுங்காக வாழ உலகத்தாரின் துணைவேணடும்.அதாவது சமூகத்தின் துணை வேண்டும்.
மக்கள் ஒருவரோ டொருவர் ஒற்றுமை பூண்டு ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்து வாழ்வதே சமூக வாழ்க்கை. இத்தகைய சமூக வாழ்க்கையைப் பின்பற்றியதனால்தான், ஒருகாலத்தில் ஐவரைப் பற்றி மட்டும் அறிந்து கொண்டிருந்த மனிதன், இன்று ஐந்நூறு கோடியினரைத் தெரிந்து கொள்ளும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறான். இதனால் தான், பத்தாயிரம் கல் தொலைவிற்கு அப்பாலுள்ள மக்கள் ஒருவர்க் கொருவர் பண்டங்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இதில் மாந்தர் இன்னும் முழு வெற்றி பெற முடியவில்லைதான். இருக்கட்டும்! இந்த ஒன்றிய சமூக வாழ்க்கையாகிய ஒரே உலகக் கொள்கை, முன்பு திருவள்ளுவராலும் பின்பு வடலூர் இராமலிங்க வள்ளலாராலும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாந்தர் ஒன்றிய, ஒரே உலகச் சமூதாயத்தினராய் வாழ வேண்டுமெனில், அவர்கட்குள் சாதிவேற்றுமை - சமயவேற்றுமை முதலியன போன்ற எத்தகைய வேறுபாடும் இருக்கவே கூடாது. ஒருவர்க்கு ஒருவர் ஒத்து உதவிசெய்து வாழ வேண்டும். சுருங்கக் கூறின், தன்னுயிர் போல் மன்னுயிரைப் போற்றல் வேண்டும். இன்னபிற நெறிகளைப் பின்பற்றின், சமுதாய ஒருமைப்பாடு நின்று நீடித்து நிலைப்பது உறுதி. இந்தக் கருத்துக்களை வள்ளுவரும் வள்ளலாரும் ஒத்துப் பல கோணங்களில் பகர்ந்து சென்றுள்ளனர். அவற்றுள் முதலாவதாக சாதி சமய வேற்றுமை கூடாது என்னும் உயரிய கொள்கையை நோக்குவோமே.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”(972))
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்"
"மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு"(409)
முதலிய குறள்களின் வாயிலாக, வள்ளுவர் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் சாதி வேற்றுமையைச் சாடுகிறார். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பெரிய கருத்து. எல்லாரும் பிறப்பினால் ஒரு தன்மையினரே; செயலினாலேயே வேறுபடுகின்றனர்-என்னும் உயரிய கொள்கையைக் குறள்கள் கூறுகின்றன.
இவ்வாறாகத் திருவள்ளுவர் சாதிவேற்றுமை பாராட்டாதது போலவே. சமய வேற்றுமையும் பாராட்டவில்லை திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பகுதியைப் பார்க்கின் இந்த உண்மை புலனாகுமே. அவர் அந்தப் பகுதியிலே எந்தக் கடவுளரையும் விதந்து-சிறப்பித்துக் கூறவில்லை. பொதுவாகத் தெய்வம்-கடவுள் என்னும் பொருளிலேயே எல்லாக் குறள்களையும் அமைத்துள்ளார். இத்தகு பொதுத் தன்மைகளால்தான் திருக்குறள் 'பொது மறை' எனப்படுகிறது.
இதே கொள்கைகளை வள்ளலாரும் ஆணித்தரமாக அறைந்துள்ளார். குறள்களின் விரிவுரையாக - விளக்க உரையாக, 'ஒன்றே குலம்-ஒருவனே தேவன்’ என்ற உண்மையை வள்ளலார் வலியுறுத்தி யுள்ளார். இதோ அருட்பாப் பகுதிகள் சில:- -
‘'சாதியும் மதமும் பொய் யென
ஆதியுணர்த்திய அருட்பெருஞ் சோதி”
"மதமெனும் பேய்பிடியா திருக்க வேண்டும்"-
"இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு"-
"பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம்
பேய்பிடிப் புற்ற பிச்சுப் பிள்ளை விளையாட்டென
உணர்ந்திடா துயிர்கள் பலபேதமுற் றங்குமிங்கும்
போருற் றிறந்து வீண்போயின"-
‘எவ்வகைசார் மதங்களிலே பொய்வகைச் சாத்
திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வ
மென்று
கைவகையே கத்து கின்றீர் தெய்வம் ஒன்றென்
றறிவீர்”-
“ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்றுறுமோ”
அடுத்து,-பலர்க்கும் பகுத்தளித்து உண்ண வேண்டும்; பிறர் பசி போக்கவேண்டும்; விருந்தோம்ப வேண்டும்; விருந்தோம்புபவர்க்குப் பசி, வறுமை போன்ற எந்தக் கெடுதியும் வராது; அவர் குடும்பம் மேன்மேலும் ஓங்கும்; அவர் நிலத்தில் விதைக்காமலேயே விளைவு பெருகலாம்; விருந்தோம்பியவரைத் தேவரும் யாவரும் போற்றுவர்முதலிய கருத்துகளை ஒப்புரவறிதல், ஈகை, விருந்தோம்பல் முதலிய பகுதிகளில் உள்ளத்தைத் தொடும்படி மிகவும் உருக்கமாகக் கூறியுள்ளார் வள்ளுவனார்.
இத்தகைய கருத்துகளை வள்ளலாரவர்கள் பல பாடல்களிலும் உரைநடைப் பகுதிகளிலும் மிகவும் உள்ளம் நெகிழ்ந்து உரைத்துள்ளார்.
“உள்ள லேன் உடையார் உண்ணவும் வறியார்
உறுபசி உழந்துவெந் துயரால்
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
மற்றிதை நினைத்திடுந் தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்"-
"பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது
அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்"
என்பன வள்ளலாரின் வாய்மொழிகள். ‘சீவகாருண்ய ஒழுக்கம்’ என்னும் உணரநடைப் பகுதியிலே, வள்ளலார் திருக்குறள் கருத்துகட்கு அப்படியே ஒத்த உருவம் தந்துள்ளார். இதோ அது:
'பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதே விரதமாகக் கொண்ட சீவகாருண்யம் உள்ளவருக்குக் கோடையில் வெயில் வருத்தாது; மண்ணும் சூடு செய்யாது; அவர்கள் கள்ளர்களாலும் பகைவர்களாலும் கலக்கப்படார்கள்; அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள். சீவ காருண்யம் உள்ளவரது விளை நிலத்தில் முயற்சி இல்லாமலேயே விளைவு மேன்மேலும் உண்டாகும். எப்படிப்பட்ட துன்பமும் சத்தியமாக வராது. உயிர்களைப் பசி என்ற பிணியினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், தேவர் -முனிவர் முதலிய யாவராலும் வணங்கத் தக்க சிறப்புடையர்'-இது வள்ளலார் அருளிய உரைநடைப் பகுதி.
வள்ளலார் பிறர் பசி நீக்குவதைப் பற்றி எழுதியதோடு-பேசியதோடு நின்றுவிடவில்லை; செய்கையிலும் பின்பற்றி அறச்சாலை அமைத்து 'வள்ளலார்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.
சமூகம் என்பது=ஆறறிவு படைத்த மக்கட் கூட்டம் என்பது இக்காலத்து அறிஞர்களின் பொருள். ஆனால், ‘ஓரறிவு பெற்ற மரம் செடி கொடி முதல், ஆறறிவு பெற்ற மக்களினம் வரையுமுள்ள உயிர்களின் கூட்டம் முழுவதும் சமூகம்’ என்பது வள்ளலாரும் வள்ளுவனாரும் கண்ட பொருள் ஆகும். அதாவது, 'ஆன்ம நேய ஒருமைப்பாடு’ ஆகும். அது, இனி, சமூகம் என்பது நில உலகோடு நிலா உலகம், செவ்வாய் உலகம் போன்றனவும் சேர்ந்தது என்று சொல்லக் கூடிய காலம் வருமோ என்னவோ!
அடுத்து,-உயிர்க் கொலையையும் புலால் உண்ணலையும் வள்ளுவரைப் போலவே வள்ளலாரும் வன்மையாகக் கண்டித்துள்ளார். கடவுளின் பெயராலும் வேள்வியின் பெயராலும் கூடக் கொலை கூடாது; தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருத வேண்டும். பிற உயிர்கட்கு வந்த நோயைத் தனக்கு வந்த நோயாகவே எண்ணி ஆவன புரிய வேண்டும். இன்றேல் பகுத்தறிவால் பயனில்லை -என்பது அவர்களது சமூகக் கோட்பாடு.
“கொலை வினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து’’ (329)
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று’ (259)
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய்
தன்னோய்போல் போற்றாக் கடை'-(315)
என்னும் திருக்குறள் பாடல்களும்,
‘கோடாது கொல்லா விரதமது கொள்ளாரைக்
காணில் ஒரு புல்லாக எண்ணிப் புறம்பொழிக’
‘உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் உடையார்
கள் எல்லாம்
உறவினத்தா ரல்லர் அவர் புறவினத்தார்’
"வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோரென்
நேருறக் கண்டுளம் துடித்தேன்
ஈடில் மாணிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
சுருங்கக் கூறின், வள்ளலாரும் வள்ளுவரும் கண்ட சமூகக் கோட்பாடு ‘ஒரே உலக ஒருமைக் கோட்பாடே’யாகும். இப்போதுள்ள ஐ.நா. நிறுவனத்தின் ஒரே உலகக் கொள்கைப் பணியை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் தொடங்கிவிட்டார். சான்றாக, வள்ளுவரின் பொது மறையிலுள்ள ‘ஒப்புரவு அறிதல்’ என்னும் தலைப்பு ஒன்றே போதுமே! ஒப்புரவு அறிதல் என்றால்- “தம்மால் இயன்ற எல்லையளவு உலகிற்கு உதவி செய்து உலகத்தோடு ஒத்து வாழ்தலை அறிந்து நடத்தல்” என்பது பொருளாம். உலகத்தோடு 'ஒட்ட ஒழுகல்’ என்னும் குறள் பகுதியும் ஈண்டு நினைவுகூரத் தக்கது
வள்ளுவனாரின் இந்த உயரிய சமூகக் கோட்பாட்டினை வள்ளலாரின் பாடல்களில் பரக்கக் காணலாம். இதோ சில:
"ஒருமையிற்கலந்தே உள்ளவாறு இந்த
உலகெலாம் களிப்புற்று ஓங்குதல்
என்று வந் துறுமோ-"
"உலகத் திரளெலாம் மறுவறக் கலந்து
வாழ்வதற்கு வாய்ந்த தருணம் இது என்றே
வாயே பறையாய் அறைகின்றேன்.”
"இவ்வுல கெலாம் நன்றே ஒருமையுற்று வாழி"
"ஒருமையின் உலகெலாம் ஓங்குக என்றே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்"-
இவ்வாறாக ஒரே உலகக் கோட்பாடு கண்ட வள்ளலார், 'சமரச சன்மார்க்க சங்கம்’ என்னும் ‘ஒருமை நன்னெறி இயக்கம் தொடங்கிப் பணி புரிந்தமை உலகறிந்த செய்தி.
பட்டி தொட்டிகளிலெல்லாம் நிறுவனங்கள் அமைத்து மக்கள் தெய்வமாகப் போற்றி வருகிற வள்ளுவரும் வள்ளலாரும் ஒன்றிய உள்ளத்துடன் கண்ட சமூகக் கோட்பாடாகிய ஒரே உலக ஒருமை நன்னெறி இயக்கம் ஓங்கி வளர்க!