கருத்துக் கண்காட்சி/பழமைப் பைத்தியங்களைப் பார்ப்போமே!

நகைச் சுவைப் பகுதி

11. பழமைப் பைத்தியங்களைப்
பார்ப்போமே!

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த சொரூபியாய்-சச்சிதானந்த ரூபியாய், அண்ட சராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து நிற்கும் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருட் பெருக்கினாலே, இந்தச் சபையிலே சப்த சமுத்திரங்களும் திரண்டு வந்தாற்போல் பெருந்திரளாய்க் கூடியுள்ள பேரன்டர்களே! தாய்மார்களே! தந்தைமார்களே! உங்கள் பாதாரவிந்த கமலங்களுக்குப் பணிவான வணக்கம். இப்போது இந்த சத்சங்கத்திலே சாயிபாபா அவர்களுடைய மகிமையைப் பற்றிப் பேச வந்திருக்கும் நான் இந்த ஊருக்கு வந்திருப்பது இது முதல் தடவையல்ல-ஐந்தாவது தடவையாகும். இதற்கு முன் நான்கு முறை இந்த ஊருக்கு விஜயம் செய்துள்ளேன். எப்பொழுது என்று கேட்கின்றீர்களா ! இதோ விவரமாகச் சொல்லுகிறேன்:

நான் இந்த ஊருக்கு முதல் தடவை வந்தபோது எனக்கு வயதும் முப்பது-வருஷமும் ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பது. அப்போது இந்த ஊரில் பெரிய காற்று மழை அடித்து வெள்ளமும் வந்து விட்டது. நான் ஒன்றும் பிரசங்கம் செய்ய முடியாமல் தெண்டச் சோறு தின்று விட்டுச் சும்மா திரும்பிவிட்டேன்.

நான் இந்த ஊருக்கு இரண்டாவது முறையாக வந்தது, ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தாறு-மே மாதம் என்று நினைக்கிறேன். அப்போது நான் பிரசங்கம் செய்வதற்காக வரவில்லை. என் பெரிய மாமாவின் பேர்த்தி நாத்தனார் ஓரகத்தி மகளுடைய பாணிக்கிரகண விவாக சுப முகூர்த்தத்திற்காக வந்தேன். இந்த ஊராரின் விருந்தோம்பும் பண்பை அப்போது தான் தெரிந்து கொண்டேன். எவ்வளவு பலமான விருந்து தெரியுமா! வாய் சாப்பிட்டது, வயிறு வாழ்த்துகிறது. யேவ்!

இவ்வாறாகச் சொற்பொழிவாளர் திருவாளர் திருப் புளிசாமியவர்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது, ‘ஐயா பழைய கதையே பேசிக் கொண்டிருக்கிறீர்களே! இப்போது வந்த கதையைப் பேசுங்கள்!’ என்று கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு குரல் எழுந்தது.

இப்படியாகச் சொற்பொழிவாளர் சிலர் கூட்டத்தில் பேசத் தொடங்கிவிடின்,தொடக்கத்தில் நெடுநேரம்பழைய

கதையையே பேசிக் காலத்தைக் கழிப்பார்கள். தொடக்கத்தில் மட்டுமா? இடையிடையேயும் வேண்டாதன பேசிக் காலத்தை வீணடிப்பார்கள். உப்புமா கிண்டுவதைப் பற்றி அரைமணி நேரமும்,புளிச்ச கீரை கடைவதைப் பற்றிஅரை மணி நேரமும் பேசுபவர்களும் உளர். பழமை பேசித் திரிவோர், அந்த நேரத்தில் வேறு நல்ல கருத்துகளைச் சொன்னால் எவ்வளவு நன்மையாக இருக்கும்?.

அதோ திருவாளர் உலகளந்த பெருமாள் வருகிறார்; அவரையும் சந்தித்துப் பேசிப் பார்ப்போம்.

“காலையிலே அண்ணன் எங்கே போய் வருகிறீர்கள்?

“எங்கே என்றா கேட்கிறீர்கள்? ஒட்டலுக்குத்தான் போய் வருகிறேன்.”

ஏன், வீட்டில் அண்ணி ஒன்றும் பலகாரம் செய்யவில்லையா?”

“அவளா? இரண்டு நாளாய்க் காலையிலே வெறுங் காப்பி சாப்பிடுகிறேனே- இன்றைக்காவது உளுந்தும் அரிசியும் ஊறப் போட்டு மாவு அரைத்து நாளைக்கு இட்டலி செய்து கொடுக்கக் கூடாதா?-என்று நேற்று அவளைக் கேட்டேன். அதற்கு அவள், 'எனக்கு உடம்பு போதவில்லை; நீங்கள் மாவு அரைப்பதாயிருந்தால் உளுந்தும் அரிசியும் ஊறப்போடுகிறேன்!என்று கண்டிப்பாய்ச்சொல்லி விட்டாள். எத்தனை நாளைக்குத்தான் நான் அரிசியும் உளுந்தும் அரைத்துப் போடுவேன்? எனவே இன்றைக்கு ஒட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு வருகிறேன்’

"ஒகோ அப்படியா! அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்! வீட்டிலே என்றால் வெற்று இட்டலிதானே கிடைக்கும் ? ஒட்டலிலே நாலாவிதப் பலகாரங்களும் சாப்பிட்டுப் பார்த்திருப்பீர்களே!”



“நீங்க ஒண்ணு! ஒட்டலிலே நாலாவிதப் பலகாரம் என்ன வேண்டிக் கிடக்கிறது. அந்தக் காலத்து அரையனாத் திட்டு அளவு இட்டலி இப்போது ஐம்பது காசாம். காலனாத்திட்டு அளவு வடை எண்பது காசாம்! விலைவாசி என்ன அநியாயம் போங்கோ! அந்தக் காலத்திலே நான் சின்ன பையனாயிருந்தபோது, இதைவிடப் பெரிய இட்டலி-பெரிய வடை விற்கப்பட்டன. ஒரு ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுாற்றிரண்டு இட்டலி-ஒரு ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுற்றிரண்டு வடை-என்ன அற்புதமாயிருக்கும் தெரியுமா?

“அப்படியா! நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே. ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுற்றிரண்டு என்றால் என்ன ? புரியவில்லையே,’

‘அதுவா? இப்போது ஒரு ரூபாய்க்கு நூறு காசு(பைசா). அப்போது வெள்ளைக்காரன் காலத்தில்ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுாற்றிரண்டு காசு. ஒரு காசுக்கு ஓர் இட்டலி-ஒரு காசுக்கு ஒரு வடை, அதைத்தான் சொன்னேன் - ரூபாய்க்கு நூற்றுத் தொண்ணுாற்றிரண்டு இட்டலி - ரூபாய்க்கு நூற்றுத்தொண்ணுாற்றிரண்டு வடை என்று?”

"சரி புரியுதுங்கோ! ஆபீசுக்கு நேரமாகிறது-நான் போய் வருகிறேன்”

“போகலாம் இருங்கோ! இதை மட்டும் கேட்டுவிட்டுப் போய் விடுங்கோ! அந்தக் காலம் எவ்வளவு நயத்தகாலம் தெரியுமா? பர்மா நொய்யரிசி ஒரு ரூபாய்க்குப் பட்டணம் படியாலே இருபது படி விற்றதுங்கோ!உளுந்து ரூபாய்க்குப் பட்டணம் படியாலே எட்டுப் படி! புளி, ரூபாய்க்குப் பதினாறு தூக்கு! பிண்ணாக்கு ஐந்து தூக்கு! சீயக்காய்ப் (சிகைக்காய்ப்) பொடி விலை ரொம்ப சரசம்! விளக்கெண்ணெய் விலையோ ரொம்ப-ரொம்ப சகாயம்!”

"சரி சரி. அதையெல்லாம் இப்போது பேசிப் பெரு மூச்சு விட்டு என்ன பயன்? ஆளைவிடுங்கள்- ஆபீசுக்குப் போகவேண்டும். உங்கள் புளி-பிண்ணாக்கு விலையையும் விளக்கெண்ணெய்-சீயக்காய்ப் பொடி விலையையும் இப்போது கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. நான் வருகிறேன்".

“இந்தாங்கோ-இந்தாங்கோ! அந்தக் காலத்து மய்யக் (மரவள்ளிக்) கிழங்கு விலையையும் மண்ணெண்ணெய் விலையையும் கேட்காமல் போகிறீர்களே! சரி, சாயந்தரமாவது வந்து கேளுங்கோ”

இப்படியாக, உயர்திருவாளர் உலகளந்த பெருமாள் அவர்கள் எங்கேயும் யாரிடமும் பழைய காலத்து விலைவாசிப் பெருமையையே விடாது பிதற்றிக்கொண்டிருப்பது வழக்கம். அது, ஒரு முடிவுக்கு வராமல் தொடர் கதையாய் நீண்டு கொண்டே போகும். அதை இப்போது பேசிப் பேசி என்ன பயன்?

ஒருவாறு திருவாளர் உலகளந்த பெருமாளிள் தொண தொணப்பைத் தொலைத்துக்கட்டி அப்பால் நழுவுவோமேயானால், உயர் திருவாளர் ஒப்பிலாமணியவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம்-இல்லையில்லை-சங்கடம் ஏற்பட்டு விடுகிறது.

ஒரு பெரிய கும்பிடு போட்ட உயர்பெருந்திரு ஒப்பிலா மணியவர்கள் நம் கையிலுள்ள செய்தித்தாளைப் பார்த்து விடுகிறார். ‘பேப்பரிலே என்ன விசேஷங்க?’ என்று ஒரு போடு போடுகிறார். பேப்பரிலா விசேஷம் நடக்கிறது? எங்கெங்கோ ஏதேதோ நடக்கிறது- அதை அதைப் பேப்பரிலே போடுகிறார்கள்-அவ்வளவு தான், எது எப்படியிருந்த போதிலும் ஒப்பிலா மணிக்கு ஒரு செய்தியாயினும் எடுத்துச் சொல்லாவிட்டால் அவர் விட மாட்டார்.

எதையாவது சொல்லி வைக்க வேண்டுமே என்பதற்காக “அப்போலோ' பதின்மூன்றைக் கிளப்புகிறோம்.

‘பாருங்கள் ஒப்பிலாமணி! அப்போலோ பதின்மூன்றிலே பிராணவாயு டேங்கு வெடித்துங் கூட, விண்வெளி வீரர்கள் மூவரும் திறமையுடன் விண்ணிலே பறந்து மண்ணிலே வந்து சேர்ந்து விட்டார்களே? இது மிகவும் வியப்பாயில்லையா? இதைப் பற்றிய விவரம் இன்றைய செய்தித்தாளில் விரிவாகப் போடப்பட்டுள்ளது. இந்தக் காலத்து விஞ்ஞானத்தின் பெருமையை என்னவென்று பாராட்டுவது'-என்று நாம் சொல்கிறோம். இதைக் கேட்டதும், ஒப்பிலா மணி ‘குதி-குதி’ என்று குதிக்கிறார். இந்தக் காலத்துவிஞ்ஞான அருஞ்செயல்கள் அந்தக் காலத்திலேயே நடந்திருப்பதாக மீசையை முறுக்குகிறார். இதோ, அவர் பேசத் தொடங்கி விட்டார்.

“என்ன சார் இது! இந்தக் காலத்திலே தானா விண்ணிலே பறக்கிறார்கள்? அந்தக் காலத்திலேயே ஆகாயத்திலேபறக்கவில்லையா என்ன! இராமாயணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இராவணன் விமானத்தின் மூலம் விண்ணிலே சஞ்சரிக்க வில்லையா? அனுமார் விமானம் இல்லாமலேயே வானத்தில் தாவு-தாவு’ என்று தாவவில்லையா? சீவக சிந்தாமணியை எடுத்துக் கொள்வோம். மன்னன் சச்சந்தன் தன் மனைவியை மயில் பொறியில் வைத்து விண் வழியாகப் பறக்கச் செய்து வேற்றிடம் போகச் செய்ய வில்லையா? அப்போலோ சந்திர மண்டலத்திற்குத்தான் போகிறது. அதிலும் அப்போலோ பதின்மூன்று போக முடியாமல் திரும்பி வந்துவிட்டது. ஆனால், கணவனை இழந்த கண்ணகி விமானத்தில் ஏறி மோட்ச லோகத்தையே அடைந்து விடவில்லையா? ஏன், பெரிய புராணத்தையே எடுத்துக் கொள்வேமே! சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளையானையின் மேலும் சேரமான்

பெருமாள் நாயனார் குதிரையின் மேலும் ஏறிச் சவாரி செய்து விண் வழியாகக் கைலாசம் அடைய வில்லையா! சாதாரண சந்திர மண்டலத்திற்குச் சென்று வருவதற்காக, அப்போலோவுக்குக் கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி அழவேண்டியிருக்கிறதே! சுந்தரர் யானையின் மூலமாகவும் சேரமான் பொருமாள் குதிரையின் மூலமாகவும் ஒரு செலவும் இன்றி அதிலும் அந்த மிருகங்களுக்குத் தீனிச்செலவும் இன்றி மிகவும் எளிமையாகக் கைலாசத்திற்கே சென்றுவிட வில்லையா? இந்த இரு வகையில் எது பெரிய சாதனை? நீங்கள் என்னவோ அப்போலோவைக் கட்டி அழுது கொண்டிருக்கிறீர்களே"- என்று கூறி மேலும் தொடர்ந்துகொண்டிருந்தார் ஒப்பிலாமணி.

பழமையே பேசித் திரியும் ஒப்பிலா மணியவர்களிடம் நாம் பேசி ஒன்றும் உருப்படியாக முடியாது, மண்டை மறைகிற வரையிலும் அவரை யாரும் திருத்த முடியாது. அவரைக் கைகழுவி விட்டுவிட வேண்டியது தான்!

அடுத்தபடியாக, இதோ, நமது பெருமதிப்பிற்கு உரிய இலக்கிய சாமியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போமே!:

'வணக்கம் இலக்கிய சாமி'

'வணக்கம் - வணக்கம்'

‘நான் மேல் நாட்டிற்குச் சென்று வந்த பிறகு இலக்கிய சாமியைச் சந்திக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது - உங்களைத்தான் சொல்கிறேன்'.

'என்ன-மேல் நாட்டிற்குச் சென்று வந்தீர்களா? வெள்ளைக்காரன் நாட்டை மேல் நாடு என்றும், நமது நாட்டைக் கீழ்நாடு என்றும் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள முடியாது. நமது நாடு தான் மேல் நாடு'.

'மேல் நாடு என்பது மேற்கில் உள்ள நாடு என்ற பொருளில் அல்லவா வழங்கப்படுகிறது? நீங்கள் நினைக்கிறது போல அல்ல இலக்கியசாமி அது!

'எந்தப் பொருளிலாயினும் சரியே. மேல் நாடு என்று வெள்ளையன் நாட்டைக்குறிப்பிடுவதை நான் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது: நம் நாட்டில் பலருக்கு நாட்டுப் பற்றே கிடையாது. அயலான் நாட்டையே புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தெரியாதது வெள்ளையனுக்குத் தெரிந்து விட்டதா என்ன! அவன் இன்றைக்குத் தெரிந்து கொண்டதை நாம் அந்தக் காலத்திலேயே தெரிந்து கொண்டோமே! அவன் இன்றைக்குக் கண்டுபிடித்ததை நாம் அந்தக் காலத்திலேயே கண்டு பிடித்து விட்டோமே! உதாரணமாகப் பாருங்கள்! அவர்கள் துப்பாக்கி கண்டுபிடித்தது கொஞ்ச காலத்திற்கு முன்புதான். நம் நாட்டிலோ துப்பாக்கி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. ஒரு திருக்குறளில் துப்பாக்கி சொல்லப்பட்டிருக்கிறது. குறளைச் சொல்லுகிறேன் கேளுங்கள் :

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை" (12)

இந்தக் குறளில் துப்பாக்கி சொல்லப்பட்டிருக்கிறது, பாருங்கள்! மேலும் சிலர், இந்தக் காலத்தில் தான் 'காப்பி' கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். அந்தக் காலத்திலேயே காப்பி இருந்தது - அந்தக் காலத்திலேயே நம் நாட்டார் காப்பியை ஆற்றிச் சாப்பிட்டார்கள் - என்பனவற்றையெல்லாம் இவர்கள் அறியார்கள் போலும்! தொன்மைக் காலத்திலேயே காப்பி இருந்தது என்பதைத் தொல்காப்பியர் என்னும் பெயர் அறிவிக்கவில்லையா? அந்தக் காலத்திலேயே காப்பியை ஆற்றிச்சாப்பிட்டனர் என்பதற்கு, 'காப்பியாற்றுக் காப்பியனார்' என்னும் சங்கப் புலவரே சான்றாக மாட்டாரா? நம்மவர்கள் அந்தக் காலத்திலேயே அகில உலகமும் சுற்றி வாணிகம் புரிந்து வந்தார்கள். பர்மாவின் தலைநகராகிய 'ரெங்கோன்' திருவாசகத்தின் பாயிரப் பாடலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இதோ பாடலைத் தருகிறேன் :-

“தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே-எல்லை
மருவா நெறியளிக்கும் வர்தவூ ரெங்கோன்
திருவா சகமென்னும் தேன்"

இந்தப் பாடலிலே ரெங்கோன் சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள். இப்படியாக, நம்முடைய பழைய இலக்கியங்களிலே இல்லாத செய்திகள் இல்லை- சொல்லாத பொருள்கள் இல்லை. மேலும், நமக்குத் தெரியாததை வெள்ளையன் ஒன்றும் கண்டுபிடித்து விடவில்லை. எல்லாம் அவன் வருவதற்கு முன்பே நம் நாட்டில் உண்டு. எனவே, நம் நாடுதான் மேல் நாடு'

இவ்வாறாக இலக்கிய சாமியவர்கள் பெரும் போடு போடுகிறார். நாம் மணிக் கணக்கிலே பேசினாலும் அவரை மாற்ற முடியாது. குளிர்ச்சியாக அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நழுவிவிட வேண்டியது தான்.

இதோ இந்தப் பக்கம் திரும்பினால், இரண்டு சாமியார்கள் கையில் திருவோடு வைத்துக் கொண்டு உரையாடுவது கேட்கிறது, இவருள் சின்ன சாமியாரின் பெயர் 'காடு சுற்றிக் கழுவெளி ஆனந்தர்; பெரிய சாமியாரின் பெயரோ 'சர்வ ஜீரணானந்த சுவாமிகள்'. சின்ன சாமி பேச்சைத் தொடங்குகிறார்:-

'சர்வ ஜீரணானந்த சுவாமிகளே! இந்தக் காடு சுற்றிக் கழுவெளி யானந்தர், ஏதோ திருவோடு ஏந்திக் கொண்டு தெருவோடு வந்துவிட்டார் என்று மட்டமாக மதிக்கிறீர்களா? எங்கள் அப்பன் - பாட்டன் வாழ்ந்த பெருவாழ்வு தெரியுமா உங்களுக்கு? அந்தக்காலத்தில், சைகோனிலே ஒரு தெரு முழுவதும் எங்கள் தாத்தாவுக்குச் சொந்தமாக இருந்ததாம்.'

'ஓகோ! அப்படி யென்றால், அந்தத் தெரு முழுவதும் உங்கள் தாத்தா மட்டுந்தான் பிச்சை எடுக்கலாமா?'

'நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை சர்வ ஜீரணானந்த சுவாமிகளே! உங்களுக்குப் பிச்சை எடுக்கும் புத்தியே எப்போதும் முனைப்பாயிருக்கிறது! சைகோனிலே ஒரு தெரு முழுவதும் எங்கள் தாத்தாவுக்குச் சொந்தம் என்றால், அந்தத் தெருவில் உள்ள வீடுகள் எல்லாம் எங்கள் தாத்தாவின் சொந்த உடைமையாம். தாத்தா இருக்கட்டும்! எங்கள் அப்பாவுக்குப் பர்மாவிலே ஒரு பெரிய எஸ்டேட்டே இருந்ததாம். நான் சின்ன வயதிலே தண்ணீரே குடித்ததில்லையாம். தண்ணீருக்குப் பதில் பசும்பால் தான் எனக்குத் தருவார்களாம். சோறே எனக்குத் தெரியாதாம், பாதாம் அல்வா -பாதாம் பர்பி- பாதாம் பூரி - எல்லாம் 'பாதாம் பாதம்' தானாம் எனக்கு! என்னவோ என் தலைவிதி- இப்போது மக்கிப் போன பழையதுகூட போடமாட்டேன் - என்கிறார்கள்'-

காடு சுற்றிக் கழுவெளி யானந்தரின் இந்தப் புலம்பலை யடுத்து, சர்வ ஜீரணானந்த சுவாமிகள் தொடங்குகிறார்.

'இதைச் சொல்கிறீர்களே கழுவெளி யானந்தரே! இந்தச் சர்வ ஜீரணானந்த சுவாமிகளின் பெருமையைச் சொன்னால், அப்படியே அசந்து போய் விடுவீர்கள்மூச்சைக் கீழே போட்டு விடுவீர்கள், அந்தக் காலத்தில் எங்கள் பாட்டனார் எண்பது ஊர்களுக்கு ஜமீன்தாராம். எங்கள் தகப்பனார் முதல் முதலாக முதல் மந்திரி பதவி வகித்தாராம். இளமையிலே என் கால்கள் தரையிலேயே பட்ட தில்லையாம்’.

‘ஏன், கால் அடியிலே ஏதாவது புண் இருந்ததா சர்வ ஜீரணானந்த சுவாமிகளே! கால்களைத் தரையிலே வைக்கமுடியா தென்றால், உங்கள் தலை மேலேயே வைத்துக் கொண்டு இருந்திருப் பீர்களோ?'

‘இல்லை சுவாமி! அவ்வளவு செல்லம் எனக்கு. என்னை யாரும் நடக்கவிட மாட்டார்களாம். ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கிவைத்துக் கொண்டேயிருப்பார்களாம். எங்கே செல்வதா யிருந்தாலும் நான்கு குதிரைகள் பூட்டிய வண்டிதானாம்! என் உடம்பு முழுதும் வைர நகைகளாம். நான் நகைகளைக் கழற்றி எறிந்து காகத்தை ஓட்டுவேனாம். இப்போது என்னடா என்றால், ஒவ்வொரு வீட்டு வாசற்படியிலும் பையன்கள் கல்லைப் போட்டு என்னை ஓட்டுகிறார்கள்-எல்லாம் என் தலைவிதி!’

இவ்வாறாக, தம் முன்னோர்களின் செல்வ வாழ்க்கையை ஒன்றுக்கு ஒன்பதாகப் பெருக்கிச் சொல்லிப் பழம் பெருமை பேசித் திரிவோர் பலர். அடுத்து, மறுபக்கம் திரும்பினால், மாடசாமியவர்கள் தம் இளமைக்காலத்து மறச் செயல்களைப் படிமரக்கால் போட்டு அளக்கிறார்:

‘என்ன-இந்தக் காலத்துப் பையன்கள் புல் தடுக்கினால் விழுந்து விடுகிறார்கள். கிழவர்கள் போல் கூன் வளைந்து-கன்னம் குழி விழுந்து பார்க்கப் பரிதாபமாக இருக்கிறார்கள். ஒரு பர்லாங்கு தூரம் கூட இவர்களால் நடக்க முடியவில்லை. அந்தக் காலத்திலே நான் சிறுவனாயிருந்தபோது எப்படி யிருந்தேன் தெரியுமா? எங்கள் ஊரில் ஒரு தென்னைமரம் பாக்கி விடாமல் ஏறி இறங்குவேன்; ஒரு கிணறு பாக்கிவிடாமல் இறங்கி ஏறுவேன். எவ்வளவு உயரமான மதிலாயிருந்தாலும் எகிறிக் குதிப்பேன். ஏற்றக்கட்டையின் - மேலே ஏறி மடுவிலே குதித்து மண் எடுத்து வருவேன். கையை ஊன்றாமல் கரணம் போட்டுக் கொண்டே போவேன். கீழே நின்றபடியே தென்னை மரத்தைப் பிடித்து உலுக்கினேனேயானால், தேங்காய்கள் 'தொப்-தொப்' என்று கீழே விழும். நல்ல பாம்பு புற்றிலே கையை விட்டுப் பாம்பை வெளியே இழுத்துக் 'கர-கர' என்று சுற்றிக் கீழே அடிப்பேன். ஒரு குத்து விட்டேனேயானால், எப்பேர்ப்பட்ட கிங்காங் தாராசிங்கும் குட்டிக் கரணம் போட்டுக் குப்புறக் கீழே விழுவார்கள். மாடு பிடி சண்டை யாகிய சல்லிக் கட்டில், எப்பேர்ப்பட்ட முரட்டுக் காளை களையும் கொம்புகளைப் பிடித்து முறுக்கிக் கீழே அடித்து விடுவேன். இட்டலி சாப்பிடும்போது, மிளகாய்ப் பொடிக்கு மற்றவர்கள் போல் செக்கில் ஆடிய எண்ணெயை விட்டுக் கொள்ளமாட்டேன் - பச்சை எள்ளைக் கையால் பிழிந்து எண்ணெய் வழியச் செய்து விட்டுக் கொள்வேன். அந்தக் காலத்திலே அப்படியெல்லாம் செய்தவன் நான்!

இப்படியாகத் தங்கள் இளமைக் காலத்து வீரச் செயல்களைப் பற்றியே பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள் சிலர். பழம் பெருமை பேசித் திரிவாருள் இன்னும் பல வகையினர் உண்டு. இப்போது ஒன்றும் தாங்கள் ஆக்க வேலை புரியாமல், வெட்டியாக முன்னோரின் -முற்காலத்தின் பழம் பெருமையை மட்டும் பேசிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனமாகும்.

ஆனால், பழம் பெருமையை அறவே'பேசக்கூடாது என்றும் சொல்வதற்கில்லை. வரலாறு படிப்பது எதற்காக? வரலாறு படித்ததின் பயனாகப் பழைய நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு வந்து, அவற்றை அடிப்படை அனுபவ மூலதனமாகக் கொண்டு வைத்துக் கொண்டு, அவற்றால் கிடைக்கும் படிப்பினைகட்கு ஏற்ப, எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட்டு ஆக்கச் செயல்கள் புரிந்து நல்வாழ்க்கை நடத்துவதே வரலாறு படிப்பதின் நோக்க மல்லவா? எனவே, எந்தத் துறையில் நாம் பழம் பெருமை பேசுவதாயினும் அதற்கு ஓர் அளவு இருக்கவேண்டும். அவ்வாறு பேசுவதும், எதிர்கால வாழ்க்கைக்குப் பயனளிக் கத்தக்க படிப்பினையை உணர்த்துவதாக இருக்கவேண்டும். சுருங்கச் சொல்லின், பழம் பெருமை பேசுவது, உணவுக்கு உப்பு அமைவது போல் உரையாடலில் அளவாக இருக்கவேண்டும். அதோடு, ஆக்கத்திற்கு அடிகோலுவதாகவும் அமையவேண்டும்.

குறிப்பு:- இந்தக் கட்டுரை நகைச் சுவைப் பகுதியாதலின், உரையாடும் பேச்சு நடையில் எழுதப்பட்டுள்ளது.