கருத்துக் கண்காட்சி/பாரதி இலக்கிய வரலாறு

இலக்கிய வரலாற்றுப் பகுதி

13. பாரதி இலக்கிய வரலாறு

1. முக்கூறுகள் :

பாரதி இலக்கிய வரலாறு என்னும் தொடரில் மூன்று கூறுகள் பொதிந்துள்ளன. அவை:

(1) இலக்கியங்களைப் பற்றி மாகவி சுப்பிரமணிய பாரதியார் கூறியுள்ள வரலாற்றுக் குறிப்புகள்.

(2) பாரதியாரின் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உலக வரலாற்றுக் குறிப்புகள்.

(3) பாரதியின் இலக்கியமே ஒரு வரலாற்று நூலாகும்.

2. அடிப்படை உண்மைகள்:

பன்னெடுங் காலமாக வரலாற்றை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பலர் எண்ணி வந்தனர். வரலாறு ஒரு நீதி இலக்கியம் என்பது அன்னாரது கருத்து. ஏன் இன்றுஞ் சிலர், வரலாற்றை, ஓர் இலக்கியம் போல் கற்பனை கலந்து எழுதுகின்றனர்; இத்தகைய படைப்புகளை வரலாறு அல்லது சரித்திரம் (சரிதம்-சரிதை)என்னும் பெயராலேயே வழங்குகின்றனர். எடுத்துக்காட்டாக, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, புரூரவச் சக்கரவர்த்தி வரலாறு, இராமசரிதம், குமண சரிதம், தமிழ் நாவலர் சரிதை முதலியன காணலாம்.

இன்னுஞ் சிலர், முற்றிலும் கற்பனைக் கதைகளாய் உள்ளனவற்றையும் சரித்திரம் என்னும் பெயரால் வழங்குவர். இதற்கு ஏற்ற காட்டு, வேத நாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் படைப்பாகும்.

உலக மொழிகள் பலவற்றிலும் எழுந்த கற்பனை கலந்த அல்லது முற்றிலும் கற்பனையான புராண இதிகாச-காவியங்களும் வரலாறு போலவே கருதப்பட்டன. இவ்வாறாக, இலக்கியங்கள் வரலாறு போலவும் வரலாறுகள் இலக்கியங்கள் போலவும் தலைதடுமாறிக் காட்சி யளிக்கலாயின.

2-1. வேறுபாடு:

ஒரு சிறிதும் கற்பனை கலவாது நடந்ததை நடந்தபடி அப்படியே அளிப்பது வரலாறு. மக்களினம் இப்படி வாழ வேண்டும்என அறிவுறுத்துவதற்காக, நடவாததை நடந்ததாகவோ,நடந்ததையே கூட இடையிடையே கற்பனை கலந்தோ தருவது இலக்கியம். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு இது எனலாம்.

வரலாற்றாசிரியன் எந்தச் சார்பும் இன்றி விழிப்புடன் நிகழ்ச்சிகளைத் துல்லியமாகத் தரக் கடமைப்பட்டவன். அவன், நிகழ்ச்சிகட்கு ஒரு சார்பு பற்றி ஏதேனும் சாயம் பூசத் தெடங்குவானேயாயின், அவனது படைப்பு வரலாறு ஆகாமல் இலக்கியம் எனப் பெயர் பெற்றுவிடும். முன்னரும் ஒரு கட்டுரையில் கூறியுள்ள இந்த அடிப்படை உண்மை களைக் கருத்திற் கொண்டு, ‘பாரதி இலக்கிய வரலாறு’ என்னும் தலைப்பினை ஆய்வு செய்யவேண்டும்.

3. முக் கூற்று விளக்கம்:

தொடக்கத்தில் கூறியுள்ள முக்கூறுகளுள்முதலில் முதல் கூறினை எடுத்துக் கொள்வோம்:

3-1 முதல் கூறு: இலக்கியங்களைப் பற்றிப் பாரதியார் கூறியுள்ள வரலாற்றுக் குறிப்பு முதல் கூறு. இலக்கியங்களின் வரலாறு என்பதில் மொழி வரலாறும் தன்னில் தானே அடங்கும். இதனை, 'தமிழ் மொழி இலக்கியவரலாறு' (History of Tamil Language and Literature) என்னும் பெயரால், தமிழ்க் கல்வியாளரும் தமிழ் ஆய்வாளரும் வழங்குவது மரபு. பாரதியாரின் பாடல்களில் தமிழ் மொழி வரலாறு பற்றிய சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவை:

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”.

“தேமதுரத் தமிழ் ஓசை"

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"-(பாப்பா பாட்டு-12)

தமிழ் மொழி வாழ்த்து:

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
        வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
          வண்மொழி வாழிய வே!
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து
         வளர் மொழி வாழிய வே!

3-1-1.

மேலே தந்துள்ள பாடல்களில், தமிழ் இனிமை (மதுரம்) வாய்ந்தது; தமிழ்ச் சொல் உயர்ந்தது ; தமிழ் வானளாவிய உலக மனைத்தும் அளந்தது - அறிந்தது - என்னும் மூன்று செய்திகள் தரப்பட்டுள்ளன. தமிழ் இனிமையான மொழிதான். தமிழ் என்னும் சொல்லுக்குத் 'தமிழ் மொழி' என்னும் பொருள் இருப்பதன்றி, 'இனிமை' என்னும் பொருளும் உண்டு. இதனை,

"தமிழ் தழீஇய சாயலவர் (சீ. சிந்தாமணி-2026)

“இனிமை தழுவிய சாயலை உடையவர்" (நச்சி
                                                  னார்க்கினியரின் உரை
"தமிழினும் இனிய மென்மைய வாகி” (கூர்மபுராணம்
                                                  - வானவர்-13)
“இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" (பிங்கல
                                                 நிகண்டு -3610

இன்ன பிற ஆட்சிகளால் அறியலாம்.

3-1-2,

அடுத்தது, தமிழ்ச் சொல் உயர்ந்தது என்னும் கருத்து. இலங்கை ஞானப் பிரகாச அடிகளார், . (Rev.S. Gnana Prakasar,0.M.I.) தமது சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதி' (An Etymological and Comparative lexicon of the Tamil Language) என்னும் நூலில், தமிழ்ச் சொல்லோடு ஒத்த சொல் உருவங்கள் மற்ற - இந்திய மொழிகளிலும் இருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். அவர் நூல் முன்னுரையில் பின்வருமாறு கருத்துக் கூறியுள்ளார் :

"தமிழ்ச் சொற்கள், முதல் முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப்படையாகும்; எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரி லிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவம் கொண்டன என்பது புலப்படும்".

ஞானப் பிரகாசரைப் போலவே, ஆச்சுபோர்டு பேராசிரியர் டி.பர்ரோ (T.Burrow ) என்பவரும் கலிபோர்னியா பேராசிரியர் எம்.பி. எமினோ (M.B. Emeneau ) என்பவரும் இணைந்து தொகுத்த, 'A Dravidian Etymological Dictionary' என்னும் நூலில், தமிழ்ச் சொற்களோடு ஒத்த உருவம் உடைய பிற திராவிட மொழிச் சொற்கள் இந்தோ - ஐரோப்பியக் குடும்ப மொழிச் சொற்கள் ஆகிய வற்றைத் தந்துள்ளனர். 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' என்று பாரதி கூறியிருப்பது சரிதானே! ஈண்டு அசைவில் செந்தமிழ்வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல" என்னும் பெரிய புராணப் பாடல் (1927) பகுதி ஒப்பு நோக்கற் பாலது.

3-1-3.

மூன்றாவது கருத்து, தமிழ் அனைத்தும் - அளந்தது - அறிந்தது - பரந்து பட்டது என்பதாகும். இதற்குத் துணை செய்வன, “ஞாலம் அளந்த மேன்மை தெய்வத் தமிழ்' (975), "புவி ஏத்தத் தெருள் பொழி வன் தமிழ்," (3699) என்னும் பெரிய புராண ஆட்சிகளும், 'தமிழ் எனும் அளப்ப ரும் சலதி' (சலதி= கடல் ) என்னும் கம்ப ராமாயண ஆட்சி யும் இன்ன பிறவுமாம், மற்றும், 'தமிழ்த் தாய்' என்னும் தலைப்பில், தமிழ் - மொழியின் தோற்றம் முதற் கொண்டு அதன் வளர்ச்சி வரலாற்றைச் சுருக்கமாகப் பன்னிரண்டு பாடல்களில் பாரதியார் தந்துள்ளார். அவற்றுள் சில :-

“ஆதி சிவன் பெற்று விட்டான்.......
    அகத்தியன் இலக்கணம் செய்து கொடுத்தான். (1)

மூன்று குலத் தமிழ் மன்னர் - என்னை
    மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார். (2)

தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் - பல
      தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். (3)

சாத்திரங்கள் பல தந்தார்-இந்தத்
      தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன். (4)

கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
     காதில் விழுந்த திசை மொழி எல்லாம்
என்னென்ன வோ பெயர் உண்டு-பின்னர்
     யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர் (6)

தந்தை அருள்வலி யாலும்-முன்பு
     சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கண மட்டும் காலன்-என்னை
      ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் (7)

இந்தப் பகுதியால், தமிழின் தோற்றம், வளர்ச்சி அழிவின்மை ஆகியவை சுருங்க அறிவிக்கப்பட்டுள்ளன. பல மொழிகள் அழியவும், தமிழ் அழியவில்லை என்னும் கருத்துக்கு, “என்றும் உள. தென் தமிழ்” என்னும் கம்ப ராமாயண ஆட்சியும், "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே”, என்னும் மனோன்மணிய வாழ்த்துப்குதியும் இன்ன பிறவும் அரண் செய்யும்.

3-2. தமிழ் இலக்கிய வரலாறு:

அடுத்து, தமிழ் இலக்கியங்கள் பற்றிப் பாரதியார் கோடிட்டுக் காட்டியுள்ள சுருக்கமான சில குறிப்புகள் வருமாறு:

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
        வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்த தில்லை
         உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை" (தமிழ்-2)

செந்தமிழ் நாடு:

“கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ் நாடு-நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு’(6)

“வள்ளுவன் தன்னை உலகி னுக்கே-தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை

அள்ளுஞ் சிலப்பதி காரமென்றோர்-மணி

ஆரம் படைத்த தமிழ்நாடு”(7)
தமிழ்ச் சாதி:

”சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
எல்லையொன் றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்பு நான் தமிழ்ச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்த தென்று
உறுதிகொண் டிருந்தேன்" (அடிகள்: 20-27)

மேற்காட்டியுள்ள பாடல் பகுதிகளால், திருக்குறள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பல சாத்திர நூல்கள் ஆகியவற்றின் சிறப்பை அறிவித்துள்ளமை தெளிவு.

4. இரண்டாம் கூறு:

இனி, முக் கூறுகளுள், ’பாரதியின் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உலக வரலாற்றுக் குறிப்புகள்’ என்னும் இரண்டாங் கூறு பற்றிக் காண்பாம்: இதில், தமிழர் வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு, இந்திய அறிஞர் வரலாறு-நாட்டு வரலாறு, உலக நாடுகளின் வரலாறு ஆகியவை இடம் பெறும்.

4-1. தமிழர் வரலாறு:

‘தமிழ்ச் சாதி என்னும் தலைப்பில், இறுதியில் கிடைக்காத பகுதி போக, கிடைத்துள்ள 123 அடிகள் கொண்ட நீளப் பாடலில் தமிழர் நிலை பாரதியாரால் சுருங்கத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. பிற நாடுகளில் அடிமையாய் விலங்குபோல் உழைக்கும் தமிழ் மக்களின் நிலையைப் படிப்போர் இரங்கும் வண்ணம் பாரதியார் எடுத்துரைத்துள்ளார்.

4-2. தமிழ் நாட்டு வரலாறு:

“செந்தமிழ் நாடு” என்னும் தலைப்புள்ள “செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்னும் பாடலில் தமிழ் நாட்டு வரலாறு சுருங்கத் தரப்பெற்றுள்ளது. இதில், தமிழ் நாட்டுக் கல்வி, மெய்யறிவு (தத்துவம்), இயற்கை வளம், வெளி நாட்டுப் படையெடுப்பு வெற்றி, அயல் நாட்டு வாணிகம் முதலியன இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டு வரலாறு என்பதில், தமிழர் வரலாறும் தமிழ் மன்னரின் வரலாறும் அடங்கும் அன்றோ?

4-3. இந்திய அறிஞர் வரலாறு:

காந்தி யண்ணல், சிவாஜி, கோக்கலே சாமியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, குரு கோவிந்தர், தாதாபாய் நவுரோசி, பூபேந்திரர், திலகர், லாச பதி, குள்ளச் சாமி, யாழ்ப்பாணச் சாமி, கோவிந்த சாமி, குவளைக்கண்ணன், தாயுமானவர், நிவேதிதா, அபேதாநந்தா, இரவிவர்மா, சுப்பராம தீட்சதர், மகா மகோ பாத்தியாய சாமி நாதர், வேங்கடேச ரெட்டப் பூபதி முதலியோர் பற்றித் தனித் தனித் தலைப்பு பலவற்றில் பாரதியார் பல செய்திகள் தந்துள்ளார். வெள்ளைக்கார விஞ்சு துரை பற்றிய செய்தியும் வேல்சு இளவரசருக்குக் கூறிய வரவேற்புங்கூட இடம்பெற்றுள்ளன. சுய சரிதை என்னும் தலைப்பில், பாரதியார் தமது சொந்த வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

4-4. இந்திய நாட்டு வரலாறு:

மா பாரத இதிகாசத்தின் கதைத் தலைவி என்று சொல்லலாம் போல் தோன்றுகிற பாஞ்சாலியின் வரலாற்றைப் “பாஞ்சாலி சபதம்" என்னும் சிறு காப்பியமாக வடித்துத் தந்துள்ளார். இஃது இந்திய நாட்டு வரலாற்றிற்கு உட்பட்டதாகும்.

வந்தே மாதரம், பாரத நாடு, பாரத தேசம், நாட்டு வணக்கம், பாரத நாடு, எங்கள் நாடு, பாரத மாதா, எங்கள் தாய், வெறி கொண்ட தாய், பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி, பாரத மாதா நவரத்தின மாலை, பாரத தேவியின் திருத் தசாங்கம், தாயின் மணிக்கொடி, பாரத சமுதாயம், சாதீய கீதம், சுதந்திரம் முதலிய தலைப்புகளில் இந்திய நாட்டு நிலைமை விளக்கப்பட்டுள்ளது.

4-5. சுதந்திரப் பள்ளு:

விடுதலை வேட்கையின் போதை உச்சந் தலைக்கு ஏறி விட்ட பாரதியார், அந்த விடுதலை வேட்கை யுணர்ச்சியை இமயத்தின் உயரிய கொடுமுடி அளவுக்கு உயர்த்தி விட்டார். அதாவது, விடுதலை பெறுவதற்கு முன்பே விடுதலை பெற்று விட்டதாக ஆடுகிறார்-பள்ளு பாடுகிறார்; சங்கு கொண்டு வெற்றி ஊதுகிறார்-இதை உலகத்துக்கு எல்லாம் எடுத்து ஓதுகிறார். பாடல் பகுதி வருமாறு:-

‘ஆடு வோமே-பள்ளுப் பாடு வோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
ஆடு வோமே பள்ளுப் பாடு வோமே!
சங்கு கொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்
தரணிக் கெல்லாம் எடுத்து ஓது வோமே!”

விடுதலை கிடைப்பத்ற்கு முன்பே கிடைத்து விட்டதாகப் பாடியிருக்கும் இப்பாடல் பற்றிச் சிலர் வியப்பு அடைகின்றனர்; இவ்வாறு பாடலாமா என்றுகூட எண்ணுகின்றனர். இஃது ஒரு சார் இலக்கிய மரபு.

தொல்காப்பியப் புறத்திணையியலில், "கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்" (12) என ஒரு துறை உள்ளது. “பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றி” என இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். தொடர்ந்து உரையாசிரியர், “கழிந்தது பொழிந்தென”. என்னும் புறப்பாட்டினுள், ‘ஒன்னார் ஆரெயில் அவர்கட்டாகவும் நூமதெனப் பாண்கடன் இறுக்கும் வள்ளி யோய் (203) என்பதும் அது. இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது’ என விளக்கம் தந்துள்ளார்.

இளஞ் சேட் சென்னி என்னும் மன்னன், பகைவரது ஊரை வெல்லும் முன்பே, பாணர்க்குப் பரிசாக அளிப்பான் என்னும் செய்தி மேற்சுட்டிய புறநானூற்றுப் பாடலில் அமைந்துள்ளது. இராமன் இலங்கையை வெல்லும் முன்பே, விபீடணனுக்கு இலங்கையைக் கொடுத்தான் என்னும் செய்தியை, - - -

“தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே

தந்தேன் என்றான்” (6631) என்னும் கம்பராமாயணப் பாடல் பகுதியால் அறியலாம். இத்தகைய மரபை ஒட்டியே விடுதலை கிடைப்பதற்கு முன்பே வென்று பெற்றுவிட்டதாகப் பாரதியார் ஆடியுள்ளார்-பள்ளு பாடியுள்ளார்.

4-6. உலக நாடுகளின் வரலாறு:

மாஃசினியின் சபதம், பெல்சியத்திற்கு வாழ்த்து, புதிய ருழ்சியா, கரும்புத் தோட்டத்திலே-என்னும் தலைப்புகளில் உலக நாடுகள் சிலவற்றின் நிலைமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

4-6-1. மாஃசினியின் சபதம்:

மாஃசினி (Mazzini, Giuseppe கி. பி. 1805-72) என்பவர் இத்தாலி நாட்டு அரசுத் தலைவர்களுள் ஒருவர்; பண்டிட் சவகர்லால் நேருவுக்கு விடுதலை உணர்ச்சி தோன்றக் காரணமாயிருந்தவர்களுள் ஒருவரான கரிபால்டி என்பவைரத் தம் படையாட்சியாகக் கொண்டு செயல்பட்டவர்; சிதைந்து கிடந்த இத்தாலி நாட்டை ஒன்றுபடுத்தவும் அதைக் குடியரசாக்கவும் அரும்பாடு பட்டவர். அதற்காக இவர் எடுத்துக் கொண்ட ஆணையை-சபதத்தைப் பற்றிப்பாரதியார் இந்தத் தலைப்பில் பாடியுள்ளார்.

4-6-2-பெல்சியத்திற்கு வாழ்த்து:

பெல்சியம் மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இது காலந்தொறும் பலருக்கு அடிமைப்பட்டுப் பின்பு விடுதலை பெற்றது; இசுபெயின், ஆசுதிரியா, ஃபிரான்சு, ஃஆலந்து ஆகிய நாடுகளின் பிடியிலிருந்து முறையே விலகி விடுதலை பெற்றது; முதல் உலகப் பெரும்போரில் செர்மனியால் வெல்லப்பட்டுப் பிறகு விடுதலை அடைந்தது. இவ்வாறாக, அயலவர் ஆட்சியினின்றும் விடுதலை பெற்ற பெல்சியத்தை வாழ்த்திப் பாரதியார் பாடியுள்ளார். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியர விடுதலை பெறப் ஆோராடிய பாரதியார், அடிமையாயிருந்த பெல்சிய நாடு விடுதலை பெற்றதை வாழ்த்தியது இயற்கையே!

4-6-3-புதிய ருழ்சியா:

சார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியினின்றும் விடுதலை பெற்றுப் புதிய பொதுவுடைமைக் குடியரசாக மலர்ந்த குழ்சிய நாடு பற்றி இத் தலைப்பில் பாரதியார் பாடியுள்ளார்.

4-6-4-கரும்புத் தோட்டத்திலே

இந்திய மக்களுள் சிலர் பல நாடுகட்குச் சென்று அடிமைகளாகி, தேயிலைத் தோட்டத்திலும் கரும்புத் தோட்டத்திலும் இன்ன பிறவற்றிலும் விலங்கு போல் வருந்தி உழைத்து வந்தனர். இந்த நாடுகளுள் ஃபிசித் தீவுகள் (Fizi Islands) என்பது ஒன்று. இது பசிபிக் மாகடலின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவுக் கூட்டம். ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாக இருந்த இந்நாட்டில் ஏறத்தாழ இந்தியர்கள் பாதி எனலாம். இந்தத்தீவை. 'தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவு’ என்று பாரதியார் குறிப்பிட்டுள்ளார். இங்கே இந்தியப் பெண்கள் கற்பழிக்கப்படும் கொடுமை வரைக்கும் ஆளாகிக் கண்ணீர் உகுத்த வரலாற்றைப் பாரதியார் மிகவும் உருக்கமாகப் பாடியுள்ளார். இவ்வாறாக, உலக வரலாற்றுச் செய்திகள், பாரதியார் பாடல்களில் இலை மறைகாய்களாக ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

5.மூன்றாம் கூறு:

இனி, முக்கூறுகளுள், பாரதியின் இலக்கியமே ஒரு வரலாற்று நூலாகும் என்னும் மூன்றாம் கூறினை எடுத் துக் கொள்வோம். -

5.1. வேர் மூலங்கள்

வரலாற்றாசிரியன் கண்ணை மூடிக் கொண்டு மனம் போன போக்கில் ஏதாவது எழுதினால், அது அத்தைபாட்டிக் கதையாகி விடும். எழுதுவதற்குச் சான்றாகத் தகுந்த வேர் மூலங்களை (Sources) வைத்துக் கொண்டே வரலாற்றாசிரியன் எழுதுகோல் பிடிக்க வேண்டும். வேர், மூலங்களைக் கொண்டு வரலாற்றை மூவகைப் படுத்தலாம் அவை :-

(1) பட்டப்பகலில் நடந்த வரலாறு. (2) வைகறையில் பணி மூட்டத்தில் நடந்த வரலாறு. (3)அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு-என்பன. பட்டப் பகலில் நடந்த வரலாறு என உருவகிக்கப்படுவது, ஆண்டு-திங்கள் -நாள்-கிழமை-மணி (நேரம்)-இடம்-ஆட்கள்-நிகழ்ச்சிகள் முதலிய அனைத்தும் தந்து இந்தக் காலத்தில் எழுதப்படும் வரலாறாகும். வைகறையில், போபவர்-வருபவர் தெளி வாகத் தெரியாத பனி மூட்ட வரலாறு என்பது, இலக்கியங்களைக் கொண்டு ஒரு தோற்றமாக நுனித்துணர்ந்து அறிந்து கொள்ளும் வரலாறாகும். அமாவாசை நள்ளிரவு வரலாறு என்பது, புதைபொருள்-அகழ்வாராய்ச்சி-இடிபாடுகள் முதலிய தடயங்களைக் கொண்டு அறிந்து கொள்ளும் வரலாறாகும்.

இம் மூன்றனுள், இலக்கியங்களைக் கொண்டு அறிந்து கொள்வது இடைப்பட்டது. பாரதியாரின் இலக்கியத்தைக் கொண்டு அறிந்து கொள்ளும் வரலாறு இப்பிரிவைச் சேர்ந்சேர்ந்தது. வரலாறு என்னும் பெயரால்பாரதியார் கூறியிருப்பனவன்றி, பொதுவாகக் கூறியிருக்கும் மற்ற தலைப்புப் பாடல்களும் ஒரு வகையில் வரலாறாகும். இவற்றால், பாரதியார் காலத்திய மக்கள் நிலையும்நாட்டுநிலையும் உலகநிலையும் தெரியவரும். கல்வி, மொழி நிலை, மெய்யறிவு, சமயம், கடவுட்கொள்கை, சமூகம், பெண்கள் நிலை,நாகரிகம், பண்பாடு,ஆட்சி, ஆண்டான்-அடிமை நிலை, தொழில், மக்கள் வாழ்க்கை நிலை முதலியவற்றை ஓரளவேனும் அறிந்து கொள்ள வியலும். இதனால் இலக்கியமே ஒரு வரலாற்று நூல் எனப்படும்.

5-2. எதிர் காலப் பயன்

கடந்த கால இலக்கியமோ வரலாறோ படிப்பது எதிர்காலப் பயனுக்காகும். நேற்று என்பதே வரலாறாகி விடுகிறது (Yesterday is History). கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் உள்ள தொடர்பு, தந்தை-மைந்தனுடைய தொடர்பு போன்ற தன்று தமையன்-தம்பியின் தொடர்பு போன்றதும் அன்று, ஒரே மாந்தருடைய இளமையும் முதுமையும் போன்ற தொடர்புடையதாகும். அதனால், பாரதி தரும் இலக்கிய வரலாற்றுப் படிப்பினையைக் கொண்டு எதிர் காலத்தைத் திட்டமிட வேண்டும்.

5-2-1. புரட்சிப் பொழிவு:

எதிர்காலத்தினைத் திட்டமிட்டு வாழப் பாரதியின் புரட்சிப் பொழிவுகளைப் பார்க்க வேண்டும். புரட்சிப் புயல் என்பர் சிலர். புயல் கேடு செய்யும்: பொழிவே நலம் பயக்கும். பாரதியாரின் புரட்சிகளுள் தலையாயவை, சாதி மத வேறுபாட்டைச் சாடுதல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கண்டித்தல், பெண்ணுரிமை,

தொழிற்புரட்சி ஆகியனவாம். இக்கொடுமைகள் நீங்கின் மக்களினம் உய்யும்.

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பர். "முதல் பதிவே முதன்மையான பதிவு" (First impression is the best impression). எனவே கிழங் கட்டைகட்குச் சொல்லிப் பயனில்லை: குழந்தைப் பருவத்திலேயே சாதி வேற்றுமை உணர்வைத் தகர்க்க வேண்டும் என்று கருதிப் பாப்பாவை நோக்கி.

“சாதிகள் இல்லையடி பாப்பா-- குலத்
தாழ்ச்சி உயர்வு சொல்லல்- பாவம்’

என்று உணர்த்தியுள்ளார்.

"தெய்வம் பலபல சொல்லிப்-பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்.”

“பாருக் குள்ளே தெய்வம் ஒன்று-- இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்”.

என்று மதவேற்றுமையைச் சாடியுள்ளார்.

"பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்.-- பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்."

"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்-- இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்"

"முப்பது கோடி சனங்களின் சங்கம்,
முழுமைக்கும் பொது உடைமை"

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும்,
வழக்கம் இனி யுண்டோ"

"தனி யொருவனுக் குணவிலை யெனில்
சகத்தினை அழித்திடுவோம்."

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-
-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.”

என்றெல்லாம் பொருளியல் புரட்சியும் தொழிற் புரட்சியும் செய்துள்ளார்.

உழைக்காதவனுக்கு உயிர் வாழ உரிமையில்லை யல்லவா?

புதுமைப் பெண், பெண்கள் வாழ்க, பெண்கள் விடு தலைக் கும்மி, பெண் விடுதலை-என்னும் தலைப்புகளில் பெண் விடுதலையை-பெண் உரிமையை வற்புறுத்தியுள்ளார்.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.”
“வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ
மென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்’’.

“வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.”

என்றெல்லாம் கனல் கக்கும் பாடல்களால் பெண்ணுரிமையைப் பேணியுள்ளார்.

5-3. காலக் கண்ணாடி:

பாரதியின் இலக்கியம் ஒரு காலக் கண்ணாடியாகும். ஓர் எடுத்துக் காட்டு வருமாறு:

ஔவையார் ஆத்தி சூடியில் கூறியுள்ள 'முனை முகத்து நில்லேல்’ என்னும் கருத்துக்கு மாறாக, பாரதியார் 'முனையிலே முகத்து நில்’ என்று தமது ஆத்திசூடியில் கூறியுள்ளார். இதைக் கொண்டு, சிலர், ஔவையைத்-தாழ்த்தியும் பாரதியை உயர்த்தியும் கூறுகின்றனர். இது சரியன்று. இருவர் கூற்றிலும் இருவேறு வரலாற்றுப் பின்னணிகள் தொக்கி நிற்கின்றன. ஔவையார் காலத்தில் ஊருக்கு ஊர் அரசர்; எப்போதும் போர், கொலை, தீவட்டிக் கொள்ளை, கற்பழிப்பு, பெண்களைச் சிறையெடுத்துச் செல்லல், அமைதியின்மை, பிணி, வறுமை முதலியவை தலைதூக்கியிருந்தன. அதனால் ஔவையார், ‘முனை முகத்து நில்லேல்; ‘போர்த் தொழில் புரியேல்' என்று அறிவுறுத்தினார். ஆனால், பாரதியார் காலத்தில் நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. வெள்ளையரை வெளியேற்றக் கொடியேந்திக் கொக்கரித்துக் கொண்டு விடுதலைப் போர் முனைக்குச் செல்லுங்கள் என்று பாரதியார் மக்களைத் தட்டி எழுப்பினார். எனவே, ஔவையாருக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் உண்டு; பாரதியாருக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் உண்டு. இத்தகையன காலக் கண்ணாடிகளாகும். எனவே, இலக்கியமும் வரலாறும் காலக் கண்ணாடிகளே.

5-4. கற்பனை மனம்:

பாரதியார், வரலாறு என்னும் அடிப்படையில் பாடியுள்ள பகுதிகள் கற்பனை கலவாதவைகளாகும். இவற்றுள்ளும், இலக்கிய நயச் சுவை என்னும் பெயரால் கற்பனை மனம் ஆங்காங்கே ஒரு சிறிது கமழலாம். இதை ஒரு பெரிதாகப் பொருட்படுத்தலாகாது. ஆனால் குயில் பாட்டு போன்றவை கற்பனை கலந்தன; கண்ணன் பாட்டு போன்றவை கற்பனையே.

5-5 உரை நடை இலக்கியம்:

பாரதியார் கற்பனையாகவும் கற்பனை கலந்தும் உரைநடையில் பல கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். உரைநடைப் படைப்புகளும் இலக்கியங்களே. இவற்றாலும் பல படிப்பினைகள் கிடைக்கின்றன.

இதுகாறும், பாரதி இலக்கிய வரலாறு என்னும் கடலின் கரையிலுள்ள சில்வகைக் கற்களே அறிமுகம் செய்யப் பெற்றன. ஆணி முத்து எடுத்து வர ஆழத்துள் குளிப்போமாயின், கரையேறக் காலம் மிகுதியும் தேவைப்படும். வாழ்க பாரதி இலக்கிய வரலாற்றுப் படைப்பு!