கருத்துக் கண்காட்சி/முதல் கலம்பகம்

வரலாற்று இலக்கியப்பகுதி

14. முதல் கலம்பகம்

கலம்பகம் :

கலம்பக நூல்களுக்குள் முதல்கலம்பகம் நந்திக்கலம்பகமாகும்.

இந்த நந்திக் கலம்பகம் தமிழிலக்கிய வரிசையில் மிகவும் விதந்து சிறப்பித்துக் குறிப்பிடத்தக்க தொரு நூல். நந்தி வர்மன் என்னும் பல்லவ மன்னன்மேல் பாடப் பெற்ற கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த சுவையான நூல் இது.

தமிழில் தொண்ணுற்றாறு வகைச் சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கலம்பகம். கலம்பகம் என்னும் சொல்லுக்குக் கலவை-கலப்பு-கதம்பம் என்று ஒருவிதமான பொருள் கூறப்படுகிறது. பல்வேறு வகைப் பாடல்களின்-பல்வேறு வகைத் தலைப்புகளின் கலவை யாய் இந்நூல் காணப்படுவதால் இப்பொருள் பொருத்த முடையதாகத் தோன்றுகிறது.

கலப்பு+அகம்=கலப்பகம்-அது கலம்பகம் என்றாயிற்று என்பர் ஒரு சிலர்.இலக்கண மரபுப்படி இது பொருந்தாது என்று மறுப்பர் வேறு சிலர். கலம் என்றால் பன்னிரண்டு; பகம் என்றால் ஆறு, கலம்பகம் என்றால் பதினெட்டு; எனவே, பதினெட்டு வகை உறுப்புகள் கொண்ட நூல் கலம்பகம் என்பர் ஒரு சாரார். சில கலம்பக நூல்களில் பதினெட்டுக்குங் குறைவாகவும் வேறு சிலவற்றில் , பதினெட்டிற்கும் மிகுதியாகவும் உறுப்புகள் காணப்படுவதால் இப்பெயர்க் காரணமும் பொருந்தாது - என்று மறுப்பர் வேறொரு சாரார். எது எப்படியிருப்பினும், பல்வேறு உறுப்புகளும் பல்வேறு வகைப் பாடல்களும் கொண்டு தெவிட்டாதபடி மாறி மாறிக் கலவிச் சுவையளிக்கும் ஒரு வகைக் கலவை இலக்கியம் கலம்பகம் என்பது உண்மை யான உறுதியான கருத்து.

நூலின் தனிப்பெருஞ் சிறப்பு:

மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன்மேல் பாடப்பட்ட கலம்பகம் ஆதலின் இது சுருக்கமாக நந்திக் கலம்பகம் என அழைக்கப்படுகிறது. இந்நூலின் சிறப்புகளுள் ஒரு மூன்றினைத் தலையாய தனிப் பெருஞ் சிறப்புகளாகக் கூறலாம். அவையாவன:

ஒன்று: நந்திக் கலம்பகம் இதுவரைகிடைத்திருக்கும் கலம்பகங்கட்குள்ளேயே காலத்தால் முற்பட்டது.

இரண்டு: அரசன்மேல் பாடப்பட்டுள்ள கலம்பகம் தமிழிலேயே இஃது ஒன்று தான். மற்றவை கடவுள் மேலும் கடவுளடியார் மேலும் பாடபட்டவையாம்.

மூன்றாவதாக, மற்ற கலம்பக நூல்கள் எல்லாம் இலக்கியச் சுவையோடு சரி. இந்த நந்திக் கலம்பகமோ இலக்கியச் சுவை நுகர்ச்சியளிப்பதுடன் நாட்டுவரலாறும் அறிவிக்கிறது.

காலம்:

ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த மூன்றாம் நந்தி வர்மப் பல்லவ வேந்தன் மேல் பாடப்பட்டதாதலின், இக்கலம்பகத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது புலனாகும். மூன்றாம்நந்திவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி. 825 முதல் 850 வரையாகும் என்று ஒரு சாராரும் , 339 முதல் 360 வரை என்று மற்றொரு சாராரும், 847 முதல் 872 வரை என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். எது எப்படியிருந்த போதிலும் நந்தி வர்மன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்பது வரைக்கும் முற்ற முடிந்த உண்மையாகும்.

மூன்றாம் நந்திவர்மன்:

மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவ குலப் பேரரசர்கள் காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியை ஆண்டு வந்தனர். பல்லவப் பேரரசின் இறுதிநூற்றாண்டாகிய ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த நந்திக் கலம்பக நாயகனாகிய மூன்றாம் நந்திவர்மன் தந்தி வர்மப் பல்லவனின் மகனாவான். இவன் மகன் நிருபதுங்கன்; பேரன் அபராசிதன். அபராசிதனோடு பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.

நூல் தோன்றிய வரலாறு:

நந்திக் கலம்பகம் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது. அதே நேரத்தில், அந்த வரலாறு நம்பத்தக்கதா என்ற ஐயப்பாட்டிற்கும் உரியதாயுள்ளது. அவ்வரலாறு நம்பத்தக்கதுதான் எனின் அது தமிழுக்குப் பெரிய வெற்றியேயாகும். தமிழுக்கு வெற்றி. -தமிழுக்குப் பெருமை என்பதற்காக, நம்பக்கூடாத நம்பமுடியாத ஒரு வரலாற்றை நம்பித்தான் தீரவேண்டும் என்பதில்லை. சரி,அந்த வரலாறு என்னவென்று தான்பார்த்து விடுவோமே! இதோ அவ்வரலாறு :

நந்தி வர்மனின் தம்பியர் அவனோடு பகை கொண்டிருந்தனர். நந்தியைக் கவிழ்த்துத் தாங்கள் நாடாள வேண்டுமெனச் சூழ்ச்சி செய்தனர். அவருள் ஒருவன் தமிழறிந்த புலவனாம். அவள் நந்தியின் மாற்றாந்தாய் மகன் எனச் சிலர் கூறுகின்றனர்; நந்திவர்மனின் தந்தை தந்திவர்மனுக்கு வேசி யொருத்தியின்பாற் பிறந்தவன் அவன் என வேறு சிலர் மொழிகின்றனர். அவன் நந்தியின் மேல் ‘அறம்'வைத்துக் கலம்பகம் பாடினானாம். ‘அறம் வைத்துப் பாடுதல்’ என்றால், ஆளே அழிந்து போகும்படிப் பாடுதலாம். பொருந்தாத எழுத்துக்களும் சொற்களும் பொருட்களும் பெய்து எழுத்துக் குற்றம்-சொற்குற்றம் பொருட் குற்றம் அமையப் பாடினால் ஆளே அழிந்து போவது வழக்கமாம். அவ்வாறு பாடப்பட்டதே நந்திக் கலம்பகம் என்று சொல்லப்படுகிறது.

இனிக் கதைக்கு வருவோம்: நச்செழுத்தும் நச்சுப் பொருளும் அமையப் பாடப்பட்டுள்ளது நந்திக் கலம்பகம் என்பதை எப்படியோ அறிந்து கொண்ட நந்தியின் அமைச்சர்கள், அந்தக் கலம்பகத்தைக் கேட்கலாகாது என நந்திக்கு அறிவுறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் ஒருநாள் நந்தி அரியணையில் அமர்ந்திருந்தகாலை, கலம்பகம் பாடிய பங்காளிப் புலவன், வேறொருவனை விட்டு, அரியணையின் பின்னே சுவரில் இருந்த ஒரு துளையின் வழியாகக் கலம்பகத்திலிருந்து ஒரு சுவையான பாடலைப் பாடச் செய்தான். அதனைக் கேட்டு நந்தி மிகவும் சுவைத்தான். பின்னொரு நாள் இரவு நகர் உலாச் சென்ற நந்தி ஒரு வீட்டில் நந்திக் கலம்பகப் பாடல்கள் சில பாடப்படக்கேட்டு மகிழ்ந்தான். இவன் காதில் விழும்படி அங்கே திட்டமிட்டுப் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நூலின் சுவையின்பத்தில் தன்னைப் பறிகொடுத்த நந்தி, உயிர் போயினும் நூல் முழுவதையும் கேட்டே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தான். தம்பிப் புலவனை அழைத்து, பாடல்களைப் பாடி நூலை அரங்கேற்றச் சொன்னான். ஒன்றன் முன் ஒன்றாகப் பல பந்தல்கள் போடப்படவேண்டு மென்றும் பந்தலுக்கு ஒரு பாடல் வீதம் பாடி அரங்கேற்றப்பட வேண்டுமென்றும் ஏற்பாடு செய்து கொண்டான் தம்பிப் புலவன். பந்தல்கள் அரண்மனையிலிருந்து சுடுகாடு வரையும் தொடர்ந்து போடப்பட்டிருந்தன. முதல் பந்தலில் முதல் பாடல் பாடப்பெற்றது. இருந்து கேட்டு மகிழ்ந்தான் நந்தி, அடுத்த பந்தலுக்குச் சென்றதும் முதல் பந்தல் எரிந்து விட்டது. இப்படியே எல்லாப் பந்தல்களும் எரிந்து கொண்டு சென்றன. இறுதிப் பந்தலில் ஈமச் சிதையே அதாவது எரி பொருளே அடுக்கி விட்டனர். அதில் படுத்தபடியே இறுதிப் பாடலைக் கேட்டு எரிந்தே போய்விட்டானாம் நந்திவர்மன்.

இப்படியாக நந்திக்கலம்பகம் தோன்றிய வரலாறு நாட்டில் நவிலப்படுகிறது. இவ்வரலாறு உண்மையாயின் தமிழுக்குப் பெருமை தான். எங்ஙனம்? ஒருவனை ஆக்கவும் அழிக்கவும் தமிழ்ப் பாடலுக்கு ஆற்றலுண்டு என்றால் அது தமிழுக்குப் பெருமை தானே! மற்றும், ஒரு பேரரசன், தான் ஆட்சியைத் துறப்பதன்றி, தமிழ்ப் பாடலைக்கேட்டு மகிழ்வதற்காகத் தன் உயிரையும் துறக்கத் துணிந்தான் என்பது உண்மையாயின், அது தமிழுக்கு மிக்க பெருமை யல்லவா? ஆனால் இவ்வாறு நடந்திருக்க முடியுமா?

சான்றுகள்:

இந்த வரலாறு உண்மையென்பதற்குப் பலரால் பல சான்றுகள் பகரப்படுகின்றன. படிக்காசுப் புலவர் தொண்டை மண்டல சதகத்தில், 'கள்ளாருஞ் செஞ்சொற் கலம்பகமே கொண்டு காயம்பட்ட தெள்ளாறை நந்தி’ எனத் தெரிவித்திருப்பதும், சிவஞானமுனிவர் சோமேசர் முதுமொழி வெண்பாவில், 'நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' என அறிவித்திருப்பதும் இன்ன பிறவும் சான்றாகக் காட்டப் படுகின்றன. ஆனால் இந்த வரலாறு முழுவதையும் அப்படியே ஒத்துக் கொள்வதற்கில்லை.

கதைக்கு மறுப்பு: -

நந்தியின் தம்பிமார்கள் அவனோடு முரணியது என்னவோ உண்மையாயிருக்கலாம். இதற்கு நந்திக் கலம்பகத்திலேயே கூடச் சான்று உள்ளது. நூலின் எண்பத்தோராம் பாடலில் உள்ள

தம்பியர் எண்ணமெல்லாம் பழுதாக வென்ற
தலைமான வீரதுவசன்

என்னும் பகுதி ஈண்டு எண்ணி ஆராயத்தக்கது. இன்னும் சொல்லப் போனால், நந்திக் கலம்பகத்தை நந்தியின் தம்பியருள் ஒருவன் எழுதவில்லை என்பதற்கு, தம்பியர் எண்ணமெல்லாம் பழுதாக வென்ற தலைமான வீரதுவசன் என்னும் கலம்பகப் பாடற் பகுதியே சான்றாகப் போதும். அதாவது, ‘தம்பிமர்ர்களின் எண்ணங்கள் எல்லாம் பழுதாகும்படி வென்றவன்’ எனப் பகை கொண்ட தம்பியொருவன் பாடியிருக்க முடியவே முடியாது. அங்ஙனமெனில் இதிலுள்ள உண்மை யாதாயிருக்கலாம்?

உண்மை வரலாறு:

நந்திக் கலம்பகத்தை நோக்குங்கால் நந்தியை அழிக்க வேண்டும் என்னும் தீய நோக்குடன் நூல் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக நந்தியின் பெருமையைப் பரக்கப் பேசுகிறது இந்நூல். நந்தியின் வெற்றியினையும் பல்வேறு புகழினையும் விரிவாக விளம்புகிறது இந்நூல் இந்த நூலில் அந்தக் குற்றம் இருக்கிறது-இந்தக் குற்றம் இருக்கிறது என்றெல்லாம் சிலர் என்னென்னவே குற்றங்கள் கூறக்கூடும். அவர்கள் கூறும் அத்தகைய குற்றங்களைப் பெரும்பாலும் எல்லா நூல்களிலிருந்துமே எடுத்துக்காட்ட முடியும். எனவே, தீய நோக்குடன் நந்தியின் தம்பியருள் ஒருவனால் இந்நூல் பாடப்படவில்லை என்ற புதிய முடிவுக்கு-புரட்சியான முடிவுக்கு-ஏன்-உண்மையான முடிவுக்கு நாம் துணிந்து வரவேண்டும். ஆம்! மற்ற மன்னர்கள் மேல் நூல்கள் பாடியுள்ள புலவர்களைப் போலவே, எவரோ நல்ல புலவர் ஒருவர் நந்தியின்மேல் இக்கலம்பகத்தை இயற்றினார் என்பது தான் உண்மை. ஆனால்அவர் பெயர் அறியப்படவில்லை. இலக்கிய உலகில் இஃதொன்றும் புதுமையில்லை. இதுபோலவே இன்னும் எத்தனையோ நூலாசிரியர்களின் பெயர்கள் இதுவரையும் அறியம் படவேயில்லை. அவர்களின் பட்டியலில் இவரையும் சேர்த்து விடவேண்டும். உண்மை இஃதாயின், நந்திக் கலம்பகத்திற்கும் நந்தியின் சாவுக்குமாக இணைத்துப் போடப்பட்டுள்ள முடிச்சை அவிழ்த்து விடவேண்டுமே? ஆம். இதோ:-

நல்ல புலவர் ஒருவரால் நந்திக்கலம்பகம் இயற்கையாக இயற்றப்பட்டது. அதற்கு அரங்கேற்றம் நடத்த ஆரவாரமாக ஏற்பாடு செய்யப் பெற்றது. நந்திவர்மன் தன்னை மறந்து மகிழ்ச்சி யாரவாரத்தில் ஈடுபட்டிருக்கக் கூடிய இந்த நேரத்தைப் பயன் படுத்திக் கொள்ளப் பங்காளிப் பகைவர்கள் திட்டமிட்டனர். அவர் தம் எண்ணம் ஈடேறியது. தீயிட்டு நந்தியைத் தீர்த்துக்கட்டி விட்டனர். நந்திக் கலம்பக நூலில் ஏதோ குற்றம் இருந்ததால்தான் நந்திக்கு இந்த நிலை ஏற்பட்டது என உலகம் எண்ணியது. நந்திக் கலம்ப்கம் இயற்றப்பட்டதும் அரங்கேற்றம் செய்யப்பட்டதுங் கூடப் பங்காளிப் பகைவர்களின் ஏற்பாடாய்த் தான் இருக்க வேண்டும் என்றும் உலகம் எண்ணியது. ஒரு நிகழ்ச்சி காலப் போக்கில், கண்-மூக்கு வைக்கப் பட்டுப் பெரிய உருவம் பெறுவது இயற்கை தானே! இந்த அடிப்படையில் தான், நந்திக் கலம்பகத்தால் நந்தி மன்னன் மாண்ட கதை நாட்டில் பரவலாயிற்று. கலம்பக அரங்கேற்றத்தின் முடிவில் நந்தி வர்மனும் முடிந்ததால், பின்னர் வேறு எந்தப் புலவரும் எந்த மன்னர் மேலும் கலம்பக நூல் பாடாது விட்டனர் போலும்!

நூல் அமைப்பு:

நந்திக் கலம்பகத்தில் எண்பத்தெட்டுப் பாடல்கள் உள்ளன. கடவுளர் மேல் பாடப்படும் கலம்பகத்தில் நூறு பாடல்களும் மன்னர்மேல் பாடப்படும் கலம்பகத்தில் தொண்ணுறு பாடல்களும் இருக்கவேண்டும் என்பது அந்த நாள் விதி. இந்நூலில் தொண்ணுறுக்கும் இரண்டு பாடல்கள் குறைகின்றன. அவை கிடைக்கவில்லை போலும். நூலின் ஒவ்வொரு பாடலும் ஒன்றோடொன்று அந்தாதித் தொடையாய் அமைந்துள்ளது. நூலுக்குப் பின்னே இருபத்தேழு தனிப்பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடியவர் ஒருவரா அல்லது பலரா என்பதற்குச் சான்றொன்றும் இலது. பலர் பாடிய தனிப் பாடல்களின் தொகுப்பாயிருக்கலாம் இவை.

நந்திக் கலம்பகம், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவகைகளுள் பலவற்றால் பாடப்பட்டுள்ளது. நூலில், தூது, பறை, இரங்கல், கார், புயவகுப்பு, யானைமறம், மடல் குடை மங்கலம், ஊசல், உலா, பூவைநிலை, காலம், சம்பிரதம், மதங்கியார், மறம், தலைவன்-தலைவி-தோழிபாங்கன்-செவிலி ஆகியோர் கூற்றுக்கள் விதலிய பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன.

நூற்பொருள்:

நந்திக் கலம்பகத்தால், நந்தி வர்மனைப் பற்றியும் அவன் காலத்து நாட்டு வரலாற்றைப் பற்றியும் பல செய்திகள் தெரிந்து கொள்ளலாம்:

நந்தியின் குலம் சந்திரர் குலம்; மாலை தொண்டை மாலை; கொடையும் முத்திரையும் விடை, சமயம் சைவம்; யானையின் பெயர் ஐராவதம்; பறை கடுவாய்ப் பறை: தலைநகர் காஞ்சிபுரம்; துறைமுகங்கள் மயிலாப் பூரும் மாமல்லபுரமுமாம்.

நந்தி அறநெறி வழுவாத செங்கோல் மன்னன்-வரையாத வள்ளல். கல்வி கேள்விகளில் மிக்கவன்-செந்தமிழை ஆய்ந்து சுவைப்பவன்-என்னும் செய்திகட்கு நூலில் பலப் பல அகச்சான்றுகள் உள்ளன.

ஆட்சிப் பரப்பு:

நந்திவர்மன், கச்சி நாட்டோன், மல்லை வேந்தன், மயிலையாளி, தொண்டைவேந்தன், தென்னவர் கோன், சோணாடன், காவிரிநாடன், உறந்தையர் கோன், குமரிக் கொண்கன், கங்கை மணாளன், வடவேங்கட நாடுடை மன்னர் பிரான், வடநாடுடை மன்னர் பிரான், அவனி நாரணன், முந்நீருங் கொண்ட வேந்தர்கோன் முதலிய பெயர்களால் நந்திக் கலம்பகத்தில் சிறப்பிக்கப் பெற்றிருப் பதிலிருந்து அவனது ஆட்சிப்பரப்பின் விரிவும் வெற்றியும் புலனாகும்.

வெற்றிகள்:

நந்தி வர்மன் தன் ஆட்சிக் காலத்தில் பல இடங்களில் போர். புரிந்து பகைவர்களை வென்று முறியடித்த செய்தி நந்திக்கலம் பகத்தால் தெரிகிறது. குருக்கோட்டை, தெள்ளாறு, வெறியலூர், வெள்ளாறு,கடம்பூர், பழையாறு, தொண்டி முதலிய இடங்களில் பகைவருடன் பொருது வென்றான் பல்லவன் நந்தி. இப்போர்களுள், ஆந்திராவில் துங்கபத்திரைக் கரையிலுள்ள 'குருகோடு' என்னும் குருக் கோட்டையில் வடபுலத்தாரோடு நடத்திய போரும், காஞ்சிக்குத் தெற்கே ஐம்பது கல் தொலைவிலுள்ள தெள்ளாறு, என்னும் இடத்தில் பாண்டியர், சோழர், கங்கர், இராட்டிர கூடர் முதலிய பலரோடு ஒரே நேரத்தில் நடத்திய போரும் மிகவும் குறிப்பிடத் தக்கவை தெள்ளாற்றுப் போர் வெற்றியைப் பற்றி நந்திக் கலம்பகம் பதினாறு பாடல்களில் கூறியுள்ளது. இதனால் இவன் ‘தெள்ளா றெறிந்த நந்தி’, ‘தெள்ளாற்று நந்தி' என்றெல்லாம் அழைக்கப் படுகின்றான். ‘சேர சோழரும் தென்னரும் வடபுலத்தரசரும் திறை தந்த ஈரமாமதக் கரியிவை பரியிவை' என்னும் கலம்பகப் பாடற்பகுதி ஈண்டு கருதத்தக்கது. நந்திக் கலம்பகச் செய்திகள் கல்வெட்டுக் களிலும் பட்டயங்களிலுங் கூடக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கழற் சிங்க நாயனார்:

படைமறம் மிக்கு விளங்கிய நந்திவர்மன் சிவன்பால் ஈடுபாடு கொண்டிருந்தான்.

‘பிறைதவழ் செஞ்சடைப் பிறங்கனாரணன்
அறைகழல் முடித்தவன்'.

‘சிவனை முழுதும் மறவாத சிந்தையான்’

என நந்திக் கலம்பகம் கூறுகிறது. சுந்தரர் தமது திருத் தொண்டத் தொகைத் தேவாரப் பதிகத்தில்,

“கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற் சிங்கன்"

எனச் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராகக் குறிப்பிட்டுள்ள காடவர் கோன் கழற்சிங்கன் இந்த மூன்றாம் நந்தி வர்மனாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஓர் ஆராய்ச்சி.

நூல் நயம்:

நந்திக் கலம்பகத்தில் நயமான பாடல்கள் பல உள்ளன. ‘மறம்’ என்னும் தலைப்பிலுள்ள பாடல் சுவைத்து மகிழத் தக்கது. நந்திவர்மனின் படை மறவன் ஒருவன்-வயதான கிழவன்; அவன் பெண்ணை மணம் பேசி வருமாறு வேற்று வேந்தன் ஒருவன் தூது அனுப்பினான். கிழமறவன் தூதனை நோக்கிக் கூறுகிறான்: “அடே தூதா! நான் கிழவன்; என் வில் ஒடிந்துள்ளது; வில்லின் நாண் அறுந்துள்ளது; கையில் இருப்பது ஒரே அம்பு; நான் தளர்ந்து விட்டேன்-என்றெல்லாம் என்னை எளிமையாக எண்ணி உன் மன்னன் பெண் கேட்டுவர உன்னை அனுப்பினானா? அப்படி யொன்றும் என்னை எளிமையாக எண்ணி விடாதீர்கள்: நந்திவர்மனது தெள்ளாற்றுப் போரிலே எதிரிகளின் மேல் அம்பு எய்து எய்து என் வில் சிதைந்தது; நாண் தளர்ந்தது; ஓர் அம்பே மிஞ்சியது. அந்தப் போரில் எங்களிடம் தோற்றுப்போன எதிரிகளுடைய யானைகளின் கொம்புகளைக் கொண்டுவந்துதான் இதோ இந்தக் குடிசைக்குக் காலாகவும்மேட்டு வளையாகவும் போட்டுக்கட்டியுள்ளேன்; வேண்டுமானால் குனிந்து பார். இன்னும் உங்களிடம் யானைகள் மிஞ்சியுள்ளனவா? என் குடிசைக்கும் இன்னும் சில கொம்புகள் தேவைப்படுகின்றன; இதோ புறப்படுகிறேன்” -என்னும் பொருள்பட மறக்கிழவன் கூறியதாக உள்ள பாடலை இதோ சுவைப்போம்:

மறம்

"அம்பு ஒன்று, வில் ஒடிதல், நாண் அறுதல்,
நான் கிழவன், அசைந்தேன் என்றோ
வம்பொன்று குழலாளை மணம்பேசி
வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணி மாடத் தெள்ளாற்றில்
நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும்
நெடுவளையும் குனிந்து பாரே"

அடுத்து நந்தியின் வெற்றிச் சிறப்பைக் கூறும் பாடல் ஒன்று, வெற்றி முழக்கத்திற்குரிய ஓசை மிடுக்குடன் அமைந்திருப்பதைக் கட்டாயம் பாடிச் சுவைத்தே தீர

வேண்டும். பாடல் இதோ:

“திறை இடுமின் அன்றி மதில்விடுமின் நுங்கள்
செரு ஒழிய வெங்கண் முரசம்
அறை விடுமின் இந்த அவனிதனில் எங்கும்
அவனுடைய தொண்டை அரசு
நிறைவிடுமின் நந்தி கழல் புகுமின் நுங்கள்
நெடுமுடிகள் வந்துநிகளத் (து)
உறைவிடுமின் அன்றி உறைபதிய கன்று
தொழுமினல துய்த லரிதே".

இவ்வாறு பல்வேறு பயன்கள் பொதிந்த நந்திக் கலம் பகம் நன்கு ஆய்ந்து கற்கத்தக்கது. நூலின் நோக்கம் எது வாயினும், ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாறு நாட்டிற்குக் கிடைக்கச் செய்த நந்திக் கலம்பக ஆசிரியர் நன்றிக்கு உரியவரே.