கருத்துக் கண்காட்சி/மக்கள் மனப் பாங்கில் மேடைத் தமிழ்

மேடைப் பேச்சுப் பகுதி

3. மக்கள் மனப்பாங்கில்
மேடைத் தமிழ்

தமிழை இயல் தமிழ், இசைத் தமிழ், கூத்துத் தமிழ், என மூவகையாக்கி முத்தமிழ்’ எனக் கூறல்மரபு. மேலும். இன் தமிழ், மென் தமிழ், தீந்தமிழ், தேன் தமிழ், செந்தமிழ், பைந்தமிழ், ஒண்டமிழ், வண்டமிழ், நற்றமிழ், கன்னித் தமிழ், தெய்வத் தமிழ், முதலிய பல்வேறு அடைமொழிகளுடன் தமிழை வழங்கி மகிழ்வதும் உண்டு. இம்மட்டுமா, கொடுந்தமிழ், கொச்சைத் தமிழ், கலப்புத் தமிழ் என்பனவும் உண்டு. இவற்றிடையே மேடைத் தமிழ்’ என்பது ஒன்றும் இப்போது இடம் பெற்றுள்ளது.

பேச்சுத் தமிழ், இலக்கியத் தமிழ் என்னும் பெயர்களை இங்கே மறந்து விட்டோமே! பேச்சுத் தமிழில் மேடைத் தமிழ் அடங்கும்; மேடைப் பேச்சு என்றே கூறுவார்களே! எழுத்துத் தமிழை இலக்கியத் தமிழில் அடக்கலாம். பேச்சுத் தமிழிலும் பல மாதிரிகள் உண்டு! எழுத்துத் தமிழிலும் பல விதங்கள் உண்டு. பேசுவது போலவே எழுதி வேண்டும்-அதாவது-கொச்சையாகப் பேசுவது போலவே எழுதவும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களையும் இங்கே மறப்பதற்கில்லை. நன் றாக எழுதுவது போலவே நன்றாகப் பேசவும் வேண்டும் என்பவர்கள் இவர்களைக் கவனித்துக் கொள்வார்கள்.

சிறப்பாகப் பேச்சுத் தமிழை எடுத்துக் கொள்ளின், ஒருவரே இடத்திற்கு ஏற்பப் பலவிதமாகப் பேசுவதைக் கேட்கலாம். வீட்டில் பேசுவது ஒரு நடை, வெளியில் பேசுவது வேறொரு நடை, வகுப்பில் பாடம் கற்பிக்கும் போது பேசுவது மற்றொரு நடை, மேடையில் சொற் பொழிவாற்றும்போது பேசுவது பிறிதொரு நடை, இவ்வாறு ஒருவரே பலவகையாகப் பேசுவது உண்டு; இத்தனை இடங்களிலும் ஒரே நடையில்-அதாவது-ஒரு சிறிது கொச்சை நடையில் பேசுபவரும் உளர்.

பேச்சுத் தமிழில் சிறந்தது மேடைத்தமிழ் ஆகும். பேச்சுத் தமிழ் விளைக்கும் பயன் அளப்பரியது. அது மக்கள் மனப்பாங்கில் ஆழ இடம் பெற்றுப் பயன் விளைக்கிறது.

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்"

என்பது வள்ளுவர் வாய்மொழி, ஞாலமே ( விரைந்து செயலாற்றும்படிப் பேசுவது என்றால், பெருங்கூட்டத்திடையே-பெரிய மேடையில் பேசுவது தானே! சோராமல் சொல்வன்மையுடன் மேடையில் பேசுபவனை எதிர்க்கத் துணியாமையும் மக்கள் மனப்பாங்காகும்.

"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது"

என்பது வள்ளுவம். மேடைத் தமிழ் கவர்ச்சியாய் இருக்க வேண்டும் என்பது மக்கள் மனப்பான்மை; யாவரும் விரும் பிக் கேட்கும்படி மேடைத் தமிழ் அமைய வேண்டும் என்பதும் மக்கள் மனப்பான்மை, இதைத்தான்;

“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்"

என்னும் குறளால் குறித்துப் போந்தார் வள்ளுவனார்.

மேடைத் தமிழும் மக்கள் மனப்பாங்கும் பற்றிச் சிறப்பாக ஒன்றும் அறுதியிட்டுக் கூற இயலாது. மேடைப் பேச்சாளர் பலரும் பல விதமான தமிழ் நடையில் பேசுகின்றனர். கேட்கும் மக்களின் மனப் பாங்கோ ஒரு விதமாயில்லை. ஒருவர்க்கு ஒரு வகை நடையும் மற்றொருவர்க்கு மற்றொரு வகை நடையும் வேறொருவர்க்கு வேறொரு வகை நடையுமே பிடித்தமாயிருப்பதைக் காண்கிறோம், அனைவருக்கும் பிடித்தமான முறையில் நடுத்தரமான நடையில் பேசுபவர் விரல் விட்டு எண்ணத்தக்க அளவு மிகச் சிலரே யாவர்.

மற்றும், கால் நூற்றாண்டுக்கு முன் பேசப்பட்ட மேடைத் தமிழ் வேறு; இப்போது பேசப்படும் மேடைத் தமிழ் வேறு. அப்பொழுது கேட்டவரின் மனப் பாங்கு வேறு; இப்போது சேட்பவரின் மனப்பாங்கு வேறு. இப் போது பேசப்படும் இலக்கிய மேடைத்தமிழ் வேறு; கதா காலட்சேப மேடைத் தமிழ் வேறு; அரசியல் மேடைத் தமிழ் வேறு; நாடக மேடைத் தமிழோ இன்னும் வேறாகும்.

ஒருவகை மேடைத் தமிழைக் கேட்டுச் சுவைப்பவர்கள், பிறவன்க மேடைத் தமிழை போர் அடிப்பதாகக் குறை கூறுகின்றனர். எல்லா வகை மேடைத் தமிழையும் கேட்டுச் சுவைக்கும் அப்பாவிகள்-ஐயோபாவங்கள் ஒரு சிலரே.

இந்தக் காலத்தில் அரசியல் மேடைத்தமிழைக் கேட்டுச் சுவைக்கும் மனப்பாங்கே பெரும் பாலான மக்களிடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இப்பெரும்பாலருள்ளும் இளைஞரும் நடுத்தர வயதினருமே பெரும்பாலராவா, கதா காலட்சேபத் தமிழுக்குக் காது கொடுப்பவர்கள் பெரும்பாலும் பெண்களும் ஆண்களுள் முதியோர்களுமாவர். இலக்கிய மேடைத் தமிழைக் கேட்க வருபவரின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவு இன்று மிகவும் சுருங்கிவிட்டது; ஆனால், மேடையில் உரக்கக் கத்திப் பேசி ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்யும் இலக்கியப் பேச்சாளர் சிலருக்குக் கூட்டம் சேர்கிறது. இது வேடிக்கை பார்க்கும் கூட்டமாகும்.

காலம் சென்றவர்களாகிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளார், சோம சுந்தர பாரதியார், மறை மலை அடிகளார், திரு.வி. கலியாண சுந்தரனார், ந.மு வேங்கடசாமி நாட்டார், பண்டித மணி மு.கதிரேசச் செட்டியார் போன்றோர் பேசிய மேடைத் தமிழ் அன்று பலராலும் மிகவும் சுவைக்கப்பட்டது. இவர்களைப் போல இலக்கியத் தமிழ் பேசுபவர்கள் இன்று மிகவும் குறைவு. கூட்டம் சேரவேண்டும் எனின், திரையோவியத் (சினிமா) தொடர்புடையவர்களை அழைக்க வேண்டும்.

ஏறக்குறைய இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பு மேடைத் தமிழ்வானிலே ஒரு புதிய விண்மீன் முளைத்தது. ஐம்பதாண்டு காலம் அது புத்தொளி விசிப்பொலிந்தது. அறிஞர் சி. என். அண்ணாதுரையவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். எதுகை மோனையுடன் கூடிய அடுக்கு மொழித் தமிழில் கவர்ச்சியான கருத்துகளை அமைத்து அணிபெறச் சுவையுடன் சொற்பொழிவாற்றி வந்தார் அவர். அந்தச் சொற்பெருக்கு மழையில் பலதரத்தவரும் அகமகிழ்ந்து குளித்து நனைந்து குளிர்ச்சி எய்தினர். அவர்களுள் இளையோரே பெரும்பாலராவர்.

மேடைத் தமிழ் சார்பான மக்கள் மனப்பாங்கை

உரைத்துப் பார்க்க, அறிஞர் அண்ணா துரையவர்கள் பேசி வந்த மேடைத்தமிழை உரைகல்லாகக் கொள்ளலாம்.

அவரைப் பலவே அரசியல் துறையிலும் இலக்கியத் துறையிலும் பலர் மேடையில் பேசி வந்தனர். ஆனால், அண்ணா துரையவர்களின் பேச்சுக்குப் பெருங்கூட்டம் கூடிற்று. ஐம்பது கல் தொலைவிற்கு அப்பாலிருந்தெல்லாம் மக்கள் திரள் திரளாக வந்து குழுமினர். அண்ணாதுரையவர்கள் பேசும் வரையும் பெருங்கூட்டம் காத்திருக்கும். அவர் பேசி முடித்ததும் ஏறக் குறைய முக்கால் பங்கினர் எழுந்து போய் விடுவது வழக்கம். அதனால், அவரை,மற்றவர் எல்லாரும் பேசிய பின் இறுதியில் பேசச் செய்து வந்தனர். மேடைத் தமிழ் பற்றிய மக்களின் மனப்பாங்குக்கு இதனை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

கொள்கையில் இரு வேறு துருவங்களான் பெரியார் ஈ.வே. இராமசாமியவர்கள், திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்கள் ஆகியோரின் பேச்சுக்கும் பெருங் கூட்டம் கூடும். இருவரது பேச்சுத் தமிழிலும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. இருப்பினும் இருவருக்கும் இரு வேறு வகையான பெருங்கூட்டம் உண்டு. இச்செய்தி மேடைத் தமிழ் பற்றிய மக்களின் மனப்பாங்கு மாறுதல் உடையது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

ஒவ்வொரு வகையான பேச்சு நடையை ஒவ்வொரு வகையினர் விரும்புகின்றனர் என்பது உண்மைதான் எனினும், பொதுவில், தரங் குறைந்த பேச்சு நடையையே பெரும்பாலார் இன்று விரும்புவதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் மக்கள் அல்லர். தரங்குறைந்த நடையில் பேசிப் பேசி அதையே விரும்பிக் கேட்க மக்களைப் பழக்கிவிட்ட பேச்சாளர் சிலரே காரணமாவர்.

தரம் மிக்க தமிழ் நடையில் பேசுவதை விரும்பிக்கேட்க மக்களைத் தூண்டுவதைக் காட்டிலும், தரங்  குறைந்த தமிழ் நடையில் பேசுவதை மக்கள் மிகவும் விரும்பிக் கேட்குமாறு செய்வது மிகவும் எளிது. ஏறுவது கடினம்இறங்குவது ஒரு வகையில் எளிதல்லவா? பேச்சாளர் இலர், எப்படியாவது மக்களைச் சிரிக்கச் செய்து வயப்படுத்தித் தம் பிழைப்பை நடத்திக் கொண்டு போவதற்காக, பாமர மக்களின் அளவுக்குத் தாம் கீழ் இறங்கிச் சென்று தாழ்ந்த நடையில் பேசி வருகின்றனர். தம் செயலே சரி என்பதற்கு அன்னார் கூறும் காரணமாவது:- “இன்னும் மக்கள் நம் அளவுக்கு உயரவில்லை; எனவே, நம் நடையையே நாம் பின்பற்றின் நம்மை மக்கள் பின்பற்றமாட்டார்கள்; ஆதலின் மக்கள் அளவுக்கு இறங்கிச் சென்று நாம் பேசினால்தான், அவர்கட்குப் புரியும்" என்பது அவர்கள் கூறும் காரண் மாகும். சரி, தாழ்ந்து கிடக்கும் மக்கள் உயர்வது தான் எப்போது? அவர்களை யார் எப்போது எப்படி உயர்த்துவது? படிப்படியாகத் த்ரீழ்ந்து கொண்டே போக வேண்டியது தானா? அங்ஙன மெனில் தமிழின் தரம் என்னாவது?-இது எதிர் தரப்பினரின் கேள்வியாகும். இந்தச் சிக்கலுக்குத் திர்வுதான் யாது?

மேடைத் தமிழ் என்பது, தனியே அமர்ந்து எழுதும் எழுத்தாளனது எழுத்துத் தமிழ் போன்றதன்று. வீட்டிலோ -வெளியிலோ ஒரு சிலரோடு மட்டும் உரையாடும் சுருங்கிய வட்டப் பேச்சும் அன்று. அல்லது, மக்களையே பார்க்காமல், தனி அறையில் அமர்ந்து பேசும் வானொலிப் பேச்சும் அன்று. மாறாக, மக்கள் பன்னூற்றுவரை அல்லது பல்லாயிரவரை எதிரும் விழியுமாக வைத்துக் கொண்டு பேசும் உயிர்ப்புள்ள-உணர்ச்சி மிக்கபேச்சே மேடைத் தமிழ் எனப்படுவது. எழுத்துத் தமிழினும் பேச்சுத் தமிழே உயிர்ப்பு உடையது என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை. எழுத்துத் தமிழினும் பேச்சுத்தமிழ் விரைந்து மாறக் கூடியது.

-புதிய முறையில் வளரக் கூடியது என்பதை அறிஞர்கள் ஒப்புக் கொள்வர். பேச்சுத் தமிழ் ஒருவரை நேரில் பார்ப்பது போன்றது. எழுத்துத் தமிழோ, அவரை அவரது புகைப்படத்தில் காண்பது போன்றது. எனவே, எழுத்துத் தமிழைப் படிக்கும்போது உள்ள மனப்பாங்கிற்கும், பேச்சுத் தமிழைக் கேட்கும் போது உள்ள மனப்பாங்கிற்கும் வேற்றுமை இருப்பது இயல்பு. ஒரே அறிஞரது எழுத்தைப் படிக்கும்போது இருக்கும் மனப் பாங்கினும், அவரது பேச்சைக் கேட்கும்போது இருக்கும் மனப்பாங்கு வேறுபடலாம்.

எனவே, எழுத்துத் தமிழுக்கு-இலக்கியத்தமிழுக்குக் கடைப்பிடிக்கும் அத்தனையளவு இலக்கண விதிமுறைகளைப் பேச்சுத் தமிழுக்கும்-அதிலும் மேடைப் பேச்சுத் தமிழுக்கும் பின்பற்றுவதை மக்கள் மனப்பாங்கு அவ்வளவாக விரும்புவதில்லை. மாறாக, வெறுக்கும் மனங்களும். கசக்கும் உள்ளங்களும் கூட உண்டு. அதனால், மேடைத் தமிழைக் கண்டபடி கொச்சையாக_தரக் குறைவாகப் பேசலாம் என்பது பொருள் இல்லை. உரையாடும் தமிழின் எளிமைக்கும் இலக்கியத் தமிழின் அருமைக்கும் இடைப்பட்டதான ஒரு வகை நடுத்தர நடையை மேடைத்தமிழில் பின்பற்றுவது வரவேற்கத் தக்கதாகும். இலக்கியத் தமிழ்ச் சுவைஞர்க்கும் இது பிடிக்கலாம்; எளிய தமிழ்நடைச் சுவைஞர்க்கும் இது பிடிக்கலாம். இயற்கையாகப் பிடிக்க வில்லையாயினும், நடுத்தர நடையில் அனைவரது மேடைப் பேச்சும் அமையுமாயின், அனைத்து மக்களும் அந்தத் தமிழ் நடையினைக் கேட்டுச் சுவைக்க நாளடைவில் பழகிவிடுவர்.

எனவே, பலதரப்பட்ட மக்கள் நிறைந்த கூட்டத்திலே பேசும் மேடைத் தமிழ், பல்வேறு வகை மனப்பாங்  கிற்கும் இடைப்பட்டதான ஒரு நடுத்தர நடையில் அமை வதே பொருத்த முடைய தாகும் எனவே, மேடைத் தமிழ்ப் பேச்சாளர்கள், பாமர மக்களின் மனப்பாங்கிற்கு ஏற்ப மிகவும் இறங்கி விடாமலும், படிப்பிற் சிறந்தோரின் உயரிய மனப் பாங்கிற்கு ஏற்ப மிகவும் உயர்ந்து விடாம லும் இடைப்பட்ட ஒரு நிலையை மேற்கொள்வாராயின், அது எல்லாவகை மனப்பாங்குகளையும் இணைக்கக் கூடிய ஒருவகைப் பாலம் ஆகும்.